துவக்குப்பிடியால் வாங்கிய அடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2024
பார்வையிட்டோர்: 315 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இராமேஸ்வரம் கோவிலின் கோபுரம் அதிகாலை மங்கல் ஒளியில் கருஞ்சிறு மலைபோல் எழுந்துநின்றது. 

சுதந்திரா, அந்த மணல்வெளியில் அமர்ந்தவாறு, எதிரே கிடந்த கடலை வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள். 

அவளோடு வந்த பிள்ளைகள், உறவினர்கள், இன்னும் உதவ வந்த பணியாட்கள் என்று ஒவ்வொரு தரப்பினரும், தாம் வந்த வேலை முடிந்த நிலையில், அன்னதானம் முடிந்ததும் அங்கிருந்து போவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதில் மும்முரமாயிருந்தனர். 

சுதந்திராவின் கணவன் பாரத் இறந்து பதினைந்தாவது ஆண்டு நிறைவு தினம். இம்முறை இராமேஸ்வரத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. 

காலைக்கதிர் கடலுக்குமேலால் தலைகாட்டும் நேரம்.

அதற்கு முன்னரே எல்லாச் சடங்குகளையும் முடித்துவிட்டு, அங்கு குழுமும் சனங்களுக்கு அன்னதானத்திற்கான ஒழுங்குகளை ஒப்படைத்துவிட்டு, அவள் மணல்வெளியில் துறவிபோல் விடுபட்ட வளாய் ஒருக்கழித்து அமர்ந்திருந்தாள். 

சிறிது தூரத்திற்கப்பால், கடலோரத்தில் சிறு கூட்டம் ஒன்று கூடுவது, அவள் கண்களில் பட்டது. 

அவளுக்கு அதன் காரணம் தெரியும். 

அன்று அதிகாலையில் அவளும், அவளது கூட்டத்தினரும் கடலுக்குள் இறங்கி முழுக்காடச் சென்றபோது, அந்த இடத்தில்தான் அவள் கால்கள் இடறுப்பட்டன. அவள் தன்னைச் சுதாரித்துக் கொண்டு, தன் கால்கள் இடறுப்பட்டதன் காரணத்தைக் காண முற்பட்டபோது, அவள் நெஞ்சு அதிர்ந்தது. 

அங்கே, அவள் கால்களை இடறியவாறு இரண்டு பிணங்கள் கிடந்தன; தாயும் பிள்ளையுமாய் இரண்டு பிணங்கள். கடலில் மிதந்து சிதம்பி, ஊதிப் பருத்தவைபோல் அவளுக்குத் தெரிந்தன. 

எப்படி அவை இங்கே? 

இவற்றில் ‘முழி’த்துவிட்டுத்தான், அவள் கணவனின் சடங்கு ஆரம்பமாக வேண்டுமா? 

“என்ன பொருத்தம்!” – அவள் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள். 

எதுவும் சும்மா நடப்பதில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு தொடர்பு. அந்தத் தொடர்பைத் தொட்டுக்கொண்டுபோனால் உலகின் அத்தனை நிகழ்வுகளும் – முன்னர் நடந்தது, இப்போ நடப்பது, இனி நடக்கப்போவது – ஒரே நாரில் தொடுக்கப்பட்ட பூமாலையாய் எழுந்து ஒவ்வொருவரது கழுத்தையும் சுற்றுவதைக் காணலாம். 

‘இதுவும் அப்படித்தான்’ – அவள் விரக்தியோடு தனக்குள் சொல்லிக்கொண்டாள். 

அன்று காலையில் காரணத்தோடுதான் அந்தப் பிணங்கள் அவள் கால்களை இடறின என்பதுபோலவே அவள் எடுத்துக் கொண்டாள். 

அவள் பார்ப்பதற்கு அழகாய் இருந்தாள். இந்தக் காலத்துக் குரிய நாகரிகத் தோரணைகள் அவளில் தெரிந்தன. ஆனால், அவளிடம் ஊறியுள்ள சுதந்திர வேட்கை, புதுக்கோலம் கொள்வது போல் கண்களில் பிரகாசித்தன. 

அந்தப் பிணங்கள்? 

‘இலங்கை அகதிகள்’ — அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள்.  

இலங்கை ராணுவத்திற்குப் பயந்து, காசைக் கொடுத்து, ஏதோ கிடைத்த மீன்பிடி வள்ளத்தின் தயவில் வந்து, இடைநடுவில் இறக்கப்பட்டு, கரைக்கு வரமுன்னரே அலைகளின் மோதலில் அகப்பட்டு அமிழ்ந்துபோன அபலைப் பெண்ணும் அவள் பிள்ளை யுமாய் இருக்கலாம். 

அவள் நினைவுகள் கொந்தளிக்கத் தொடங்கின. 

கரையொதுங்கும் இந்த அனாதைகளால் இந்த மண்தான் பாவமூட்டைகள் கொட்டப்படும் கழிவிடமாக மாறிக்கொண்டி ருக்கிறது? 

தென்னிலங்கையில் இராவணர்கள்தான் இன்னும் ஆ நடத்திக்கொண்டிருக்கிறார்களா? 

குவேனி போட்ட சாபத்திலிருந்து இன்னும் தென்னிலங்கை விமோசனம் பெறவில்லையா? 

சுதந்திராவின் கண்முன் விஜயனால் ஏமாற்றப்பட்ட குவேனி, கண்ணீர் பெருக்கெடுக்க நிற்கிறாள். தம்மினத்தைக் காட்டிக் கொடுத்தவளை, அவளது இனத்தவர் சங்கிலியால் பிணித்து, இழுத்துச் செல்கின்றனர். அப்போது, அவள் போட்ட கூக்குரலும் சாபமும் பேரிடிபோல் உள்முழங்கி, தென்னிலங்கை எங்கும் பரவிக்கவிவதை அவள் காண்கிறாள். 

அச்சாபத்தில் தம்மையும் பங்காளியாக்கிவிட்ட, அவளது கணவன் பாரத்மேல் அவளுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டுவருகிறது. 

“அப்பாவை நினைக்க எனக்கு துக்கமாக இருக்கம்மா.” முணுமுணுத்தவளாய் சுதந்திராவின் அருகே வந்த அவள் மகள், அவளை, பழைய நினைவுகளில் இருந்து கீழ் இறக்கினாள். 

“அப்பாவைக் கொன்றவர்களுக்கு நல்ல பாடம் நாங்கள் படிப்பிக்கவில்லையே” என்று அவள் அருகே நின்று, அவள் மூத்த மகன் கோயில் கோபுரத்தைப் பார்த்தவாறு கூறினான். 

அவர்களுக்குத் தெரியும், அப்பாவைக் கொன்ற எதிரிகளைப் பழிவாங்க வேண்டும் என்று தமக்குள் குமுறியழும் ஆத்திரம், அம்மாவைப் பாதிப்பதில்லையென்று. மாறாக, அவரை நினைவு கூரும் ஒவ்வொருசமயமும் அவளுக்குச் சினமேறி, முகத்தில் செம்மை படர்வதையே அவர்கள் கண்டிருக்கிறார்கள். அப்பொழு தெல்லாம் அதன் காரணத்தை அறிய அவர்கள் அவளைப் போட் டுக் குடைந்தபோதும், அவளிடமிருந்து எந்தப் பிடியும் கிடைத்த தில்லை. 

ஆனால், ஒருநாள் வீட்டுக்கு வந்திருந்த உறவினரான ஒரு பெரியவரோடு – அவரைப் பார்க்கும்போது காந்தியின் சாயல் தெரிந்தது – சுதந்திரா கதைத்துக்கொண்டிருந்தபோது, இடையில் புகுந்த அவர்களுக்கு, சில வார்த்தைகள் காதில் புகுந்தன. 

“அது பெரிய அவமானம் இல்லையா?” 

சுதந்திரா அந்தப் பெரியவரைப் பார்த்து கேட்டாள். பெரியவர் லேசான புன்னகையோடு அதை ஆமோதிப்பது போல் கேட்டுக்கொண்டிருந்தார். 

“எத்தனையோ மகான்களை உலகுக்குகளித்த என் கோத்திரத் திற்கே தாங்கமுடியாத அவமானத்தை அவர் நடத்தை ஏற்படுத்தி விட்டது. அவர், அந்த இடத்திலேயே தன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு செத்திருக்க வேண்டும் அல்லது தனக்கு அந்த அவமா னத்தை ஏற்படுத்தியவர்களைச் சாகடித்திருக்க வேண்டும்.” 

பிள்ளைகளின் குறுக்கீட்டால் அவள் பேச்சு நின்றுவிட்டது. இடையில் நின்ற பேச்சுக்கு அர்த்தம் கொடுக்கமுடியாது அவர்கள் அந்தரப்பட்டனர். 

எது பெரிய அவமானம்? 

அவர்கள் தாயாரின் வாயில் இருந்து வந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன? 

அப்பாவுக்கு அப்படி என்ன அவமானம் ஏற்பட்டது? 

அவர்களுக்கு ஒன்றும் புரிவதாய் இல்லை. 

இவற்றுக்கு விடைகாண்பதாய் அம்மாவை நோக்கிய அவர் களது கேள்விகள், வெற்றுச் சுவரில் எறிந்த பந்தாகவே அவர்களை நோக்கித் திரும்பிவந்தன. 


சுதந்திரா இன்னும் காலைக்கதிரையும், அது கடலில் பட்டுத் தெறிப்பதையும் சிறுகுழந்தைபோல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் பார்வையில் எண்ணிறந்த யுகயுகாந்தங்கள் எழுந்தெழுந்து படிவதுபோல்பட்டது. 

காலம் மெளனித்து அவளை தொழுவதுபோல்… 

திடீரென, அவளுக்கு அந்தப் பெரியவரோடு அன்று விடுபட் டுப்போன பேச்சு, வேறொருநாள் தொடர்ந்தது மீண்டும் நினைவில் எழுந்தது. 

“.. அப்படியானால் உன் கணவனைக் கொன்றவர்கள் சரியான தையே செய்தார்கள் என்பதா, உன் வாதம்?” பெரியவர் கேட்டார். 

“சரியானதைச் செய்தார்களா, இல்லையா என்பதல்ல என் வாதம். தன்னை அவமானப்படுத்தியவர்கள்மேல் தீர்க்க வேண்டிய வெஞ்சினத்தை, அவரது அன்பைக் கோரியவர்கள் மேலல்லவா என் கணவர் காட்டினார்! அந்த அப்பாவி மக்களையல்லவா கொன்றொழித்தார்! இந்த நிலையில் எந்த அற்ப உயிரும் தன்னைத் தாக்கியவர்களை எதிர்த்துத்தாக்கத்தான் செய்யும்.” 

“அப்போ, அவர்கள் செய்தது சரியா?” மீண்டும் பெரியவர் கேட்டார். 

“சரியானது என்பதைவிட, அதைத்தான் எவரும் செய்வார்கள். அப்படியான ஒரு நிலையில்தானே, என் மாமியும் கொல்லப் பட்டார், இல்லையா? ஆனால், ஒரு வேடிக்கை.” 

“வேடிக்கையா, என்ன அது ?” அவர் கேட்டார். 

“என் மாமியாரைக் கொன்றவர்களின் இனத்தைச் சேர்ந்தவ ரைத்தான், இன்று தலைமை அமைச்சராய்வைத்து இப்போ அழகு பார்க்கிறோம். இது வேடிக்கை இல்லையா?” அவள் சொன்னாள்.

“இது உள்ளூர் விவகாரம். அவர்களைத் தள்ளிவைக்கமுடியாது.” 

“ஓ! பயங்கரவாதத்தில் உள்ளூர்ப் பயங்கரவாதம், வெளியூர்ப் பயங்கரவாதம் என்று இரண்டு இருக்கிறதோ?” என்று கேட்டுவிட்டு மெல்லச் சிரித்தாள். 

“இதுதான் அரசியல்” என்று கூறிவிட்டு அவர் பதிலுக்குச் சிரித்தார். 

“இது அரசியல் அல்ல. இதுதான் இன்றைய உலக வியாதி. இது, இன்று சுதந்திரத்துக்காக உலகமெங்கும் போராடிக்கொண்டி ருக்கும் மக்களைக் கொன்றொழித்துக்கொண்டிருக்கிறது இதனால் தான். வெளியூர்க்காரன் எங்களைக் கூப்பிட்டுவைத்துக் கௌர விப்பதாகக் கூறி அவமானப்படுத்தியதை நாங்கள் சௌகரியமாக மறந்ததுதான். அன்றைக்கே பாரத் செத்திருந்தால் நான் என்றைக்கும் அடிதொழும் மகாபுருஷராக இருந்திருப்பார்…” 

“என்றைக்குச் செத்திருந்தால்?” 

“அந்த அற்ப மூஞ்சூறு அரக்கனால் திட்டமிடப்பட்டு அவ மானப்படுத்தப்பட்டபோது!” 


காலைக்கதிர் இப்போ சுதந்திராவின் முகத்திலும் பட்டுத் தெறித்தது. அவள் முகத்தில் அரும்பிய வியர்வையை சேலைத் தலைப்பால் துடைத்துக்கொண்டே கோபுரத்தின் பக்கம் பார்வையை எறிந்தாள். 

தெய்வக்களை அதில் கசிவதுபோல் தெரிந்தது. 

அன்னதானத்துக்கு அடிபட்டுக்கொண்டுநிற்கும் மக்களும் அந்தத் தெய்வக்களையால் குளிப்பாட்டப்படுவதுபோல் அவளுக் குப்பட்டது. 

இராமேஸ்வரம். 

எண்ணங்கள் கிளர்ந்தன. அவள்முன் தொன்மை சிலிர்த்தது. 

சீதையைப் பறிகொடுத்த இராமன் இங்கு வந்துதானே சிவ லிங்கம்வைத்துப் பூஜித்தான்? அதன்பின்னர்தானே இந்த இந்துமா கடலைத் தாண்டி அவனும், அவனது வானரப் படைகளும் சீதையை மீட்கச் சென்றன? 

ஆனால், அரக்கரோடு பொருத, வானரப் படைகளை அனுப் புவதற்கு முன்னர், சீதைக்குத் தூதனுப்புகிற சாட்டில், அழிவுவராமல் பேசித்தீர்ப்பதற்காக இராமன் முதலில் அனுமனைத் தூதனுப்பினான். 

சீதையைச் சந்தித்த அனுமனை, அரக்கர்கள் சுற்றிவளைத்து இராவணன்முன் கொண்டுபோய் இருக்கை தராது நிறுத்தியபோது – 

அனுமன் அவர்கள் முகத்தில் அறைவதுபோல் –

தன் வாலைக்கொண்டே அரச சபையில், தான் இருந்து வந்த தேசத்தின் இமயம்போல் இராவணனுக்கும் மேலாக எழுந்து நின்றான். 

அரக்கர்களை அவமானமும் ஆத்திரமும் மாறி, மாறி ஆட்டுவித்தது. 

அவனை அவமானப்படுத்த, அவன் வாலில் அவர்கள் பற்ற வைத்த தீ, தென்னிலங்கையையே தீயால் குளிப்பாட்டிற்று. ஏராள மான அரக்கர்கள் வாயுமைந்தனின் வாலின் சுழற்சியில் அறைபட்டழிந்தனர். 

அவமானப்படுத்த முனைந்தவரை அவமானத்தில் வீழ்த்தி வீரனாய் மீண்டுவந்தான் வானரத் தலைவன். 

ஆனால், இவள் கணவன்? 

அவள் முகம் சிவந்தது. 

அவள் கணவனும் இந்துமா கடலைக் கடந்துதான் லங்கா புரிக்கு படைநடத்திச் சென்றான். 

யாரை அழிக்க? 

காலத்துக்குக்காலம் லங்காபுரியில் அரக்கர்கள் தோன்றிக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் கையில் சிக்கிய சிற்றினம் சித்திரவதைக்குள்ளாகிச் சிறைப்பட்டனர், கொல்லப்பட்டனர். 

அவர்களைக் காப்பாற்றவா அவள் கணவன் பாரத் சென்றான்? 

அப்படித்தான் இறந்துபோன அவன் அம்மா திட்டமிட்டிருந்தாள்.  

ஆனால், அவளின் அகால மரணம், இவனுக்கு அவளின் திட்டத்தை எட்டச்செய்யவில்லையா? 

இடையில் நின்றவர்களால் இவன் பிழையாக வழிநடத்தப் பட்டானா? 

அரக்கரால் கொடுமைப்படுத்தப்பட்ட ஓர் இனத்தைக் காப்பாற்றத்தான் அவன் லங்காபுரி சென்றான் என்று இதிகாசம் கூறுகிறது. ஆனால், நடந்தது என்ன? 

லங்காபுரியில் ஜெயவர்த்தனபுரக் கோட்டை அரக்கன், படையுடன் சென்ற சுதந்திராவின் கணவன் பாரத்தை வரவேற் றான். தன் சிறிய நாட்டின் மேல் ஆக்கிரமிப்புப் படை நடத்திவந்த பாரத்தின் மேல் அரக்கர் தலைவனுக்கு உள்ளூரக் கோபம் பொங்கியது. ஆனால், காட்ட முடியுமா? பேரரசனான பாரத்தின் ஒற்றை விமானத்தின் இரைச்சல்கேட்டே லங்காபுரி நடுங்கியது. ஆகவே, நேருக்குநேர் பொருதமுடியாத அரக்கர் தலைவன் அவனை மானபங்கப்படுத்த மறைமுகமாகச் சூழ்ச்சி செய்தான். 

தன் இராஜ்ஜியத்தின் வட கிழக்கில் வாழும் தன் உள்ளூர்ப் பகைவர்களுக்கு இவன் உதவுவதா? 

மாயப்போர் புரியும் வல்லரக்கர்களின் சூழ்ச்சி தெரியாதவன் பாரத். தன் பாட்டனின் சமகாலத்தவன் தான் என்றும் அவனோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவன் என்றும், ‘உங்கள் பாட்ட னோடு சுதந்திரப் போராட்டத்திலும் பங்குபற்றினேன்’ என்றும் லங்காபுரி ஜெயவர்த்தனபுரக் கோட்டை அரக்கன் அவிழ்த்துவிட்ட சுயபுராணத்தைப் பெரிதாக எடுத்துக்கொண்டான் அனுபவம் ஏதுமில்லாத பாரத். 

லங்காபுரி சென்ற அவனுக்கு ராணுவ மரியாதை வழங்க ஜெயவர்த்தனபுரக் கோட்டை அரக்கன் ஒழுங்கு செய்தான். 

கௌரவ வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. 

அதன்பின் ராணுவ மரியாதை ஏற்றல். 

பாரத் ராணுவ மரியாதையை ஏற்க, விறைத்துநின்ற ராணுவச் சிப்பாய்களான அரக்கர்கள் அருகே நடந்துகொண்டிருந்தான். 

ராணுவ மரியாதை முடியுந்தறுவாய் –

ஒரு மின்வெட்டு நேரத்தில் அது நடந்துமுடிந்தது 

பாரத், கடைசி ராணுவச் சிப்பாயான அரக்கன் அருகே சென்றபோது, அந்த ராணுவ அரக்கன், தான் பிடித்திருந்த துவக்கைத் திடீரென மறுவளமாகத் தூக்கிப்பிடித்து, பாரத்தின் தலையை நோக்கி ஒரே அடி! அவ்வேளை, ஏதோ அரவம் கேட்டு உந்தப்பட்டு அவன் சற்றுச் சரிந்தபோது அந்த அடி, அவன் பின்தோளிலும் கன்னத்திலும் விழுந்தது. 

அடியை வாங்கிய அவன் அசடுவழிய சிரித்துக்கொண்டிருந்த போது –

அந்த அடி சுதந்திராவின் தலையில் விழுந்தது. 

“ஐயோ” என்றவளாய், சுதந்திரா தன் தலையில் அடித்தவளாய் பற்களை ‘நறநற’வென்று நறும்பினாள். 

எத்தனையோ பேரரசர்களையும் மன்னர்களையும் என்முன் மண்டியிடச்செய்த எனக்கு, ஓர் அற்பன் முதுகில் அடிப்பதா? அடிவாங்கிய அந்த இடத்திலேயே என் கணவன் செத்திருக்க வேண்டும்; அந்த அரக்கர் அனைவரையும் கொன்றுவிட்டு! 

“சீ வெட்கக்கேடு” என்று காறியுமிழ்ந்தவளாய் சுதந்திரா சோர்ந்துபோனபோது, அவளது பிள்ளைகள், அவளைத் தாங்கிக் கொண்டனர். 

கேலியாகப் பார்த்துச் சிரித்த அவள் –

“இன்னுந்தான் இவர்களுக்கு எந்தத் தெளிவும் ஏற்படவில் லையே” என்று முணுமுணுத்தவளாய், தன் பிள்ளைகளைப் பார்த்து மீண்டும் சிரித்தாள், விரக்திச் சிரிப்பு.

– 2005

– முடிந்து போன தசையாடல் பற்றிய கதை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, தமிழியல், லண்டன்.

மு.பொன்னம்பலம் (1939, புங்குடுதீவு, யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் இவர் பங்களித்திருத்து வருகிறார். 1950களில் கவிதை எழுதத் தொடங்கிய பொன்னம்பலத்தின் முதற்கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது. மு. தளையசிங்கம் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. மு. பொன்னம்பலம் எழுதிய "திறனாய்வின் புதிய திசைகள்" என்ற நூலுக்கு மலேசியாவில் தான்சிறீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் 2010/2011ஆம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *