“புத்தங் சரணங் கச்சாமி; தம்மங் சரணங் கச்சாமி; சங்ஙங் சரணங் கச்சாமி” பிரதம பிக்கு தர்மபாத தேரோவின் குரல் தூபத் தட்டிலிருந்து நிர்மலமான ஆகாயத்தை நோக்கி விரியும் அகிற் புகைபோற் சுருண்டு சுருண்டு எழுந்து அப் பாஞ் சாலை எங்கணும் பரவியது; அங்கு கூடியிருந்த மற்ற பிக்குகளின் உள்ளங் களிலும் அங்கே, “பண” பாராயணம் கேட்க வந்திருந்த பக்தர்களின் உள்ளங்களிலும் மோதி மோதி எதிரொலித்தது.
தேரோவின் கண்டத்திலிருந்து, துறவு வாழ்க்கையின் பூரண சக்தியோடு வெளி வரும் அம்மந்திர வார்த்தைகளின் ஓசை இன்பத்திற் சிக்குண்டு வாழ்வின் அல்லை தொல்லைகளுக்குள் கிடந்து உழலும் மனிதனது இருதயத்தைப் புறக்கணித்து விட்டு, எங்கோ உலகின் எல்லையில் உள்ள ஒரு தெய்வமணிப் பீடத்தில் கரந் துறையும் சாந்தி என்னும் மோகினிப் பெண், அவ்விரவில் வெளிவந்து நடமாடு வதுபோல் விளங்கியது அப்பிரதேசம். எங்கும் ஒரே சாந்தி மயம். பௌர்ணமிச் சந்திரன் தன்னலமற்ற ஒரு கொடை வள்ளல் போலத் தன் நிலா அமுதை வாரி வழங்கிக் கொண்டிருந்தான். நட்சத்திரங்கள் கண் சிமிட்டி மையல் செய்தன. நீண்டு வளர்ந்த தென்னை மரங்க ளிடையே இளந்தென்றலும் குயில்களும்’ “சாந்தி”ப் பண் மிழற்றின.
ஆனால் அப்பண” ஓதுவார்களில் ஒருவனாய் வீற்றிருந்த பாலபிக்குவாகிய விமலதாசனுடைய இருதயத்தில் மட்டும் சாந்தியின் சாயை சிறிதும் விழவில்லை; அச்சாந்திக் கீதத்தின் அட்சரங்களில் ஒன்றாவது அவன் செவிகளிற் புகவுமில்லை . சாந்தி! அது எங்கே? சாந்தியை நாடி எத்தனை மனிதர்கள் அவ்வறப் பள்ளிக்கு வருகின்றார்கள்! அவர்களுக்கு அது கிட்டுகின்றதா? அது அவனுக்குத் தெரியாது. ஆனால் இரவு பகல் அவ்வறப் பள்ளியில் வாழ்ந்தும், அறவாசகங்களைக் கேட்டும், அறச்செயல்களைப் புரிந்தும் வருகின்ற அவனுக்கு மட்டும் சாந்தி கிட்டவில்லை. தாகமுற்றவன் கண்களை ஏமாற்றி மறையும் கானல் ஜலம் போல நழுவிக் கொண்டிருந்தது சாந்தி அவனுக்கு!
அவனுடைய கவனம் “பண” பாராயணத்தில் செல்லவில்லை, தினமும் கேட்டுக் கேட்டுக் காதுகளும் அலுத்துப் போய்விட்டன. அந்தச் சுவை நைந்த வெறும் வார்த்தைகள்! தன் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டான். கண்களை லேசாக மூடி, ஒரு கையைத் தலையின்கீழ் வைத்துப் படுத்திருக்கும் பிரமாண்டமான புத்தரின் சிலை அவன் கண்களிற்பட்டது. அச்சிலையின் நெற்றியில் ஒரு சுருக்கும் இல்லை; கண்களின் கீழ் கறுப்பு ரேகை இல்லை! சாந்தி என்னும் தெய்வமோகினி வீற்றிருக்கும் மாளிகையின் திறவு கோலை ஆக்கிய பொற்கொல்லன் நீதானா? ஆனால் என்ன பிரயோசனம்? அப்பாலபிக்குவிற்கு அத்திறவுகோலைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லையே! இப்பிறவியில் சாந்தியின் நிறம் அறியாதவனுக்கு, மரணத்தின் மறுபுறத்தில் இருக்கும் நிர்வாண நிலை வெறும் கோடைக் கனவுதானே.
அச்சிலையின் பாதங்களிலும் அருகிலும் மலர்கள் மலை மலையாகக் குவிந்துகிடந்தன. வெள்ளை , சிவப்பு, மஞ்சள், நீலம் என்ற நிற வேறுபாடும், பெரியது, சிறியது என்ற உருவ வேறுபாடும் இன்றி எல்லாம் ‘ஒண்டடி மண்டடி”யாகப் பிணைந்து கிடந்தன. அம்மலர்களுக்கு வாய்த்த யோகம் அவர்கள் தம் இனத்தவர் களுடன் கூடிப் பிணைந்து இன்புற்றுக் கிடக்கின்றன. ஆனால் அவன் மட்டும் தன் இனத்தவர்களைப் பிரிந்து, உலக வாழ்வைத் துறந்து போகங்களைப் புறக்கணித்து…. பிக்கு தன் கண்களை மூடிக் கொண்டான்.
தென்றற் காற்று மலர்களின் மணத்தைச் சுமந்துகொண்டு சாளரத்தின் வழியாகக் ‘குபீர்’ என்று உள்ளே பாய்ந்தது. விருப்பற்ற வரண்ட துறவு வாழ்க்கையில் ஏது மணம்? ஏது மலர்? ஏது நிறம்?
பிக்கு விமலதாஸன் கூரையில் உள்ள துவாரத்தின் வழியாக ஆகாயத்தை நோக்கினான். தண்மதியின் ஒளி தேங்கிய முகம் அவனுடைய கண்களை ஆகர்ஷித்தது. ‘தண்மதி, உன் அழகிற்கு இணையான வஸ்து உலகத்தில் என்ன இருக்கிறது? அழகு! தண்மதி! மதிமுகம்!…’ பிக்குவின் மனம் சுழன்றது. ஆயிரம் அழகு வழியும் ‘மதி’ முகங்கள் அவனுடைய மனத்திரையில் வரிசையாக ஓடி மறைந்தன. மதி முகங்கள் மட்டும் அல்ல; மின் இடைகள், தளிர்க்கரங்கள், மலர்ப்பாதங்கள்…! அத்தீவிரமான கற்பனையின் வேகத்தைத் தாங்கமாட்டாது, அவன் தன் முகத்தைக் கரங்களால் மூடிக்கொண்டான். புறக் கண்களை மூடிக்கொள்ளலாம். ஆனால் சதா விழிப்புடன் இருக்கும் அகக்கண்களை இப்படி நினைத்த மாத்திரத்தில் மூடிக் கொள்ள முடியுமா?
“நாமோ தஸ பகவதோ தஸ சமாஸம்பு தஸ.” “பண” பாராயணம் முடிந்துவிட்டது. பிரதம பிக்கு தம் ஆசனத்தைவிட்டு எழுந்திருக்கிறார். சபையோர்களும் ஒவ்வொருவராக எழுந்திருக் கின்றனர். கொட்டாவி விடும் சப்தங்களும், கால் ‘சீய்க்கும்’ சப்தங் களும், “குசுகுசு” என்ற சம்பாஷணைகளும் இதுகாறும் நிலவி யிருந்த அமைதியைக் கலைக்கின்றன.
பிக்கு விமலதாஸனும், மனத்தொடை அறுந்து திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு எழுந்திருக்கின்றான். பாராயணம் முடிந்துவிட்டது! அவன் இதுகாறும் எங்கே போயிருந்தான்?”
பிரதம பிக்கு அவன் நின்றிருந்த பக்கமாக வருகின்றார். “விமலதாஸ, ஏது எங்கே போயிருந்தாய்? நான் உன் முகத்தைக் காணவே இல்லையே!”
“இல்லை ஹாமதுறுவே, இங்கேதான் உட்கார்ந்து கொண்டிருந்தேன், பின் வரிசையில்-”
“ஆனால் உன் முகத்தில் கவலைக் குறிகள்….. ஏன்?”
“கவலைகள்? ஒன்றுமில்லை.”
“உன் முகம்தான் சொல்லுகிறதே. இன்பம் துன்பம் என்ற உணர்ச்சிகள் அற்றவன் பிக்கு. அவனுக்கு ஏது கவலைகள்? சரி நேரமாகிறது, போய்ப் படுத்துக்கொள். நானும் போகிறேன்.”
பிரதம பிக்கு போய்விட்டார். அறுபது வருஷம் தூய துறவு வாழ்க்கையில் பயின்ற அவருக்கு எங்கே தெரியப் போகிறது, ஒரு இளம் இருதயத்தின் துடிதுடிப்பு!
விமலதாஸன் தன் அறைக்குட் சென்றான். அறையின் ஒரு பக்கத்தில் ஒரு கயிற்றுக் கட்டில் போடப்பட்டிருந்தது. ஒரு மூலையில் அவனுடைய பிக்ஷா பாத்திரம் கிடந்தது. விமலதாஸன் தன் காவி மேற்போர்வையைக் கழற்றிக் கொடியிற் போட்டுவிட்டு, தன் அரையில் அணிந்திருந்த காவித்துண்டை நோக்கினான். சே! என்ன அசிங்கம்! தீவாந்தரக் கைதியின் உடை இதனிலும் மேலானது!
கட்டிலில் சாய்ந்தபடியே, சாரளத்தைத் தன் காலால் தள்ளித் திறந்தான். வெண்ணிலவு உள்ளே பாய்ந்தது. “அம்மே!” துறவுக்கு ஏன் பெருமூச்சு? அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது.
அம்மே! இந்த மனக் கொதிப்பிற்கும், இருதய எரிவிற்கும் அம்மேதான் காரணம். உணர்ச்சி உள்ள தாயா அவள்? சுயநலப் புலி! இல்லாவிட்டால், பத்து வயது கூடப் பூர்த்தியாகாத ஒரு சிறுவனை, நல்லது இது தீயது இது என்று பகுத்தறியும் பருவம் வராத ஒரு சிறுவனை, தலையை மொட்டையடித்துக் காவி உடை அணிவித்து ஒரு பாலபிக்கு ஆக்கத் துணிவாளா? அவன் ஒருவன் பிக்கு ஆகிவிட்டால் அவர்களுடைய குடும்பத்தில் நாலு தலை முறைகளுக்கு நிர்வாண சித்தி கிடைத்துவிடுமாம்! என்ன மூட நம்பிக்கை? அப்படியே அது உண்மையாக இருந்தாலும், அவன் மட்டும் ஏன் தன் இளமையை, தன் வாழ்வைத் தியாகம் செய்ய வேண்டும்? ஏன் அவன் பெரிய பெரிய உத்தியோகங்கள் வகித்துக் கொண்டு மனைவியருடன் சுகமாகக் காலம் கழிக்கும் தமையன் மார்களில் ஒருவனைப் போல வாழ்தல் ஆகாதோ? என்ன வஞ்சக நெஞ்சம் அவன் தாய்க்கு! கடைசிப் பிள்ளைமேல்தான் தாய்க்கு அன்பு அதிகம் என்று சொல்லுவார்கள். ஆனால் அவனுடைய தாய்-? தாயா அவள்? அரக்கி!
ஆனால் இந்த அரை மரணம் ஏன்? உலக இன்பங்களை ஏன் துறக்கவேண்டும், இந்த இளம் வயதில்? நல்ல உணவு ஏன் அருந்தக்கூடாது? காதலின்பம்-? சரி சரி, அவனுடைய தாய்க்குத் தான் மதியில்லாமல் போய்விட்டது, அவனுக்குமா-?
***
சீதுலோயா கடற்கரையை அடுத்துள்ள ஒரு அழகிய சிறு கிராமம். மெல்லென்ற கடற்காற்றும், மெத்தென்ற வெண் மணலும், உயர்ந்து சடைத்த தென்னைகளும் அவ்வூருக்கு ஒரு தனிச் சிறப்பைக் கொடுத்தன.
மேற்கூறிய சம்பவம் நடந்த மறுநாட் காலை, ஒன்பது மணி இருக்கும். அவ்வூரின் மத்தியிலுள்ள ஒரு பெரிய மாடி வீட்டில் ஒரு கிழவி நடு ஹாலில் உள்ள ஒரு கருங்காலி நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு வெற்றிலை பாக்கு இடித்துக் கொண்டி ருந்தாள். சோமவதி ஆமினே அறுபத்தைந்து வயதாகியும் இன்னும் உடல் ரசம் கெடாத பேரிளம் பெண் போலவே இருந்தாள். அப்படி இல்லாவிடில் அப்பெரிய வீட்டில் தனியே இருந்து கொண்டு காலந்தள்ளமுடியுமா?
மூத்த பிள்ளைகள் அவளைக் கவனிக்காமல் விட்டால் என்ன? புருஷன் வைத்துவிட்டுப் போன தென்னந்தோட்டம் இருக்கும் வரையும் அவளுக்கு என்ன குறை? யாரையும் அண்டிப் பிழைக்கத் தேவையில்லை.
ஆனால், கடைசி மகன்மேல்தான் அவளுடைய அன்பு எல்லாம். குலம் உய்யவந்த கொழுந்து என்று நினைத்தாள். அவன் பிக்குவாக இருக்கிறபடியால் தனக்கு நிர்வாண பதவி நிச்சயம் என்று நம்பியிருந்தாள்.
ஏதோ ஞாபகம் வந்தவுடன் மேலே நிமிர்ந்து பார்த்தாள். விமலதாஸனைப் பிக்கு உடையில் எடுத்த படம் சுவரில் மாட்டப் பட்டிருந்தது. “மகே, புத்தோ” என்று மனத்தில் தாய்மை பொங்கியது அவளுக்கு.
வெளியே கமுக மரத்தில் இருந்துகொண்டு ஒரு காக்கை கரணம் போட்டுக் கத்தியது. மூன்று நாட்களாக இப்பிடித்தான். ஆனால் சோமவதி ஆமினே அதைக் கவனிக்கவில்லை. ஏன் கவனிக்கப் போகிறாள்? “இது என்ன ‘கரதர…’ ‘காக்கோ …” என்று உரத்துக் கூறினாள். காக்காய் கத்தினால் அவளுக்கு என்ன வரப் போகிறது? மரணமா? சரி வரட்டுமே. கிழவிதானே! மகன் இருக்கிறான் ஈமக்கிரியைகள் செய்வதற்கு. அதற்கு அப்புறம் நிர்வாணப் பதவி காத்திருக்கிறது! இதற்காக-? “டக் டக்… டக்.”
“யாரங்கே கதவைத் தட்டுகிறது?” எழுந்து கதவண்டை போய் அதைத் திறந்தாள். “யாரங்-?”
மகன்! பிக்கு விமலதாஸன்! தாய்க்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. பிக்கு வீட்டிற்கு வந்துவிட்டார். வீடு என்ன தவம் செய்ததோ? பிக்குவை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தாள். விரிந்த கண்களுடன் நிமிர்ந்த தோற்றம். அகன்ற நெற்றி, வளைந்த மூக்கு எல்லாம் அவளுடைய பார்வையில் ஆயிரம் மடங்கு அழகுபெற்றுத் தோன்றின. தாய் ஒருத்தியால்தான் அப்படியான பார்வை பார்க்கமுடியும். பிக்குவினுடைய நெற்றியை வருடுவதற்குக் கையைக் கொண்டு போனாள். ஆனால் சட்டென்று கையை இழுத்துக்கொண்டாள். அவன் பிக்குவல்லவா? அவளுடைய மாசு படிந்த கையால் தொடலாமா?
மறந்துவிட்டாளே! பிக்குவின் பாதங்களைத் தண்ணீராற் கழுவி, பட்டு வஸ்திரத்தினால் துடைத்து, பூக்கொண்டு அர்ச்சிக்க வேண்டுமல்லவா? உடனே வீட்டின் பின்கட்டிற்கு ஓடினாள் தண்ணீர் கொண்டுவர.
“அம்மே வேண்டாம்.”
திரும்பிப் பார்த்தாள். அப்படியே கல்லாய்ச் சமைந்து நின்று விட்டாள். என்ன கோலமிது! பிக்குவினுடைய காவிப் போர்வை அவருடைய கையில் கிடந்தது. கழியும் துறவின் கடைசிக் கந்தல்! அவன் சாதாரண சிங்கள வாலிபன் அணியும் உடையே – வெள்ளை வேஷ்டி, சட்டை, சால்வை முதலியனவே இப்பொழுது அணிந்திருந்தான்.
“அனே தெய்யனே! மே!” சோமவதி ஆமினேவின் தொண்டை கட்டிக்கொண்டது. தான் கட்டி வைத்திருந்த மானசீகக் கோட்டைகள் எல்லாம் கணத்தில் தகர்ந்து தவிடு பொடியானதை அவள் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. அதோடு ஊரார் பழி, அவமானம் – ஐயோ, இனி மற்றவர்களின் முகத்தில் விழிப்ப தெப்படி?
“அம்மே, நான் என் துறவைத் துறந்துவிட்டேன்! என்னைக் கேள்விகள் கேட்கவேண்டாம் அம்மே. உன் தள்ளாத வயதில் உனக்கும் ஒரு துணை வேண்டும் அல்லவா?” பிக்கு கீழே குனிந்து நிலத்தைப் பார்த்தார்.
வெளியே, ஆகாயம் இருண்டது. காற்று “ஹோ” என்று ஓல மிட்டது. தென்னை மரங்கள் சேயை இழந்து விரிந்த தலையோடு புலம்பும் தாய்போலப் பேரிரைச்சலுடன் அங்கும் இங்கும் அசைந்தன.
– வெள்ளிப் பாதசரம், முதற் பதிப்பு: ஜனவரி 2008, மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன்ஸ், சென்னை.