கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 14, 2024
பார்வையிட்டோர்: 3,273 
 
 

(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்ன மாஸ்டர் யோசனை’ என்று கேட்டுக் கொண்டே பாடசாலை பிரதான மண்டபத்தினுள் பிரவேசித்தான் அஹமது.

‘ஒன்றுமில்லை… சும்மா…’

வெறும் சம்பிரதாயத்திற் காக சில வார்த்தைகளை மென்று விழுங்கிக் கொண்டேன்.

வந்தவர் வழக்கம்போல் மாணவர் கதிரைகளையும், பெஞ்சுகளையும் இரைச்சலுடன் இழுத்து ஒழுங்குபடுத்துகிறார்.

அவருடைய வருகையும், அந்தச் செய்கையும் எனக்குப் பிடிக்கவில்லை.

ஏற்கனவே அரைகுறையாய் இருக்கும் தளபாடங்களை இப்படிக் கொஞ்சமும் பொறுப்புணர்ச்சி இல்லாமல் நாலுதரம் இழுத்தால்…

ஓர் ஆசிரியன் என்ற முறை யில் இதை எல்லாம் அநுமதிப்பதா?…

நானோ இந்தக் கிராமத்திற்குப் புதியவன்.

நான்கு பேர் இருந்து சீட்டு விளையாடத் தக்கதாக மேசை நாற்காலிகளை ஒழுங்கு செய்து விட்டு, ‘சேர்ட்’ பொக்கட்டில் வைத்திருந்த சீட்டுக் கட்டை இழுத்து எடுத்தான் அஹமது.

சீட்டாட்டத்தில் காட்டும் இந்த ஒற்றுமை கிராம முன்னேற்றத்தில் காட்டினால்? என் மனம் ஏங்கியது.

‘மாஸ்டர் உங்களுக்கு ‘முன்நூற்று நாலு’ விளையாடத் தெரியுமா?’

இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு பார்வையை பள்ளிக்கூட வாயில் பக்கம் செலுத்துகிறான், அவனது முகத்தில் ஒரு முறுவல் இழையோடுகிறது.

பள்ளிக்கூடக் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறார்கள் ஆதம்பாவாவும், றஹீமும்.

இப்போது விளையாட்டை ஆரம்பிக்க மூன்று பேர் சேர்ந்து விட்டார்கள்.

‘சே இன்னும் ஒரு ஆள் தானே’ அஹமது பரிதாபமாக வாயில் பக்கம் பார்க்கிறான், தவிக்கிறான்.

என் மன ஆத்திரத்தைக் கொட்ட முடியாமல் இரைகிறேன்.

‘ஆதம்பாவா தயவு செய்து வாற ஆட்கள் அந்தப் பாடசாலை கேட்டை மூடிவிட்டு வாங்களேன். மாடுகள் உள்ளே புகுந்து பயிரை நாசம் செய்கிறதல்லவா?’

என் குரலில், ஆத்திரமும் கோபமும், சற்றுக் கண்டிப்பும் இருந்திருக்குமோ? அவர்கள் பூட்டிவிட்டு வருகிறார்கள்.

‘புதிதாக வந்து ஏதேதோ சட்டங்கள் போடுகிறார் போலிருக்கு’ ஆதம்பாவா தனது எண்ணத்தை றஹீமிடம் கூறுகிறான்.

என்ன மாஸ்டர் சொன்னீங்க……? என்றான் அவன்.

ஆதம்பாவா என்னைக் கூர்ந்து கவனிக்கிறான்.

‘…இல்லை மாடுகள் உள்ளே புகுந்து பயிரை நாசம் செய்கின்றன என்றேன்’

‘மாஸ்டர் பைபோஸ் போடாதீங்க சொல்லிட்டேன்…ஆ…’

வம்பு வளரப் பார்க்கிறது; அஹமது வெளியே வருகிறான்.

‘என்னப்பா இது, அந்த ஆள் புதுசு, அந்த ஆளோட போய்….’

‘வாங்கடப்பா விளையாடுவோம்’

அஹமது எனக்கு உபதேசம் செய்ய வருகிறான்.

‘மாஸ்டர், இந்த ஊர்ப் பொடியன்கள் அப்படித்தான்; அவர்களுக்குப் பேசத்தெரியாது; நீங்க அவங்களோடே எல்லாம் கவனமாக இருக்கனும்’

நான் அவனுடைய பேச்சை துரும்பாக மதித்து, நாற்காலியில் உட்கார்ந்தேன். புத்தகம் வெறுமனே ஒன்றை விரித்து தாள்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.

மீண்டும் அஹமதுதான் அழைக்கிறான்.

‘வாங்க சேர் விளையாடுவோம், நான் சொல்லித்தாரன்’

‘எனக்கு விருப்பம் இல்லை’.

ரோட்டில் போய்க்கொண்டிருந்த அல்லாப் பிச்சையைக் கூப்பிட மூவரும் ஏககாலத்தில் குரல் எழுப்பினர்.

அவன் வருகிறான்;

‘என்ன இங்கிலீஸ் மாஸ்டரைக் கூப்பிட்டு விளையாடுறது தானே?’

‘சே… அவருக்கு…’ மூவரும் என்னைத் துரும்பாக எடை போட்டுக் கொண்டு அல்லாப் பிச்சையுடன் சீட்டு ஆடத் தொடங்குகின்றனர். அல்லாப் பிச்சையின் காதில் ஏதோ ‘கசமுச’ வென்று கூறுகிறான் ஆதம்பாவா. பென்னாம் பெரிய சிரிப்புகள் வெடிக்கின்றது. சுவாரஸ்யமாக ஆடிக்கொண்டிருக்கின்றனர். முதலாவது ஆட்டத்தில் அஹமதுவும் ஆதம்பாவாவும் ‘குவீனை’ துரும்பாக வைத்து வென்றுவிட்டனராம். வெற்றிக் கோசங்கள் பாடசாலை மண்டபத்தையே அதிரச்செய்கின்றன.

அதற்கு அப்புறம் அது ஒரு சிறு இடைவேளை போலும்.

‘மாஸ்டர் சிகரட் பற்று வீங்களா?’

‘இல்லை’

‘வெற்றிலையாவது?’

‘அதுவும் இல்லை’

‘அப்ப ஹபீபுல்லா கடையில் ஒரு ‘பிளேன்டீ’ யாவது குடித்துவிட்டு வருவோமோ?’

‘சரி போவோம். நன்றாக இருட்டிவிட்டது. விளக்கை ஏற்றிவிட்டுப் போகலாம்’

நானும் அஹமதுவும் கடைக்குப் புறப்படுகிறோம்,

‘மாஸ்டர் உங்கடை ஊர் எது என்று சொன்னீங்க?’.

‘கண்டி’

‘அப்படியா! நான் இரண்டு வருடத்திற்கு முன் கண்டிக்கு பெரஹரா பார்க்க வந்திருக்கிறேன், ஆமா, கண்டியில் எந்த இடம்?’

‘எங்கட வீடு கட்டுகஸ் தொட்டையில்’

‘நீங்க அங்கேதான் படிச்சீங்களா?’

‘இல்லை… கீம்பளை சஹிராவிலும், நாவலப்பிட்டியிலும் படித்தேன்’

பிளேன்டீக்கும், அஹமதுவுக்கு ஒரு சிகரட்டுக்கும் சில்லறையைக் கொடுத்தேன். நாங்கள் திரும்பியபோது வெளியே சென்றிருந்த தலைமையாசிரியரும் மற்றைய ஆசிரியர்களும் முன்வாசலில் நின்று கொண்டிரூந்தனர். அவர்களுடன் ஆதம்பாவா கதைத்துக்கொண்டிருந்தான்.

‘என்ன அன்சாரி மாஸ்டர் என்ன அது?’ வந்ததும் வராததுமாக தலைமையாசிரியர் கேட்டார்.

‘எதைப்பற்றிக் கேட்கிறீர்கள்?’

‘என்னமோ ஆதம்பாவா…’

‘அப்படி ஒன்றும் அதில் விஷேசமில்லை. வார நாட்கள் வாயில் கே’ட்டை மூடிவிட்டு வரச்சொன்னேன், நேற்று பிள்ளைகள் நாட்டிய மிளகாய்க் கன்றுகளைப் பாருங்கள்’.

தலைமையாசிரியர் என்னைக் கூர்ந்து கவனிக்கிறார்.

ஆதம்பாவா மீண்டும் என்னைப் பார்த்துச் சொன்னான்.

‘மாஸ்டர் வேலியிலுள்ள கம்பிகளை இழுத்துக் கட்டவேண்டும். கேற் வாயிலாக மட்டுந்தான் மாடுகள் உள்ளே வருகின்றனவா?’

‘ஆதம்யாவ நீங்க்ள் கோவிக்கக் கூடாது. நீங்கள் சொல்வதும் சரிதான், வேலியை நன்றாகப் போட்டிருந்தால்…?’

நான் தலைமையாசிரியுரைப் பார்க்கிறேன். அவரது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கின்றன.

நானும், தலைமையாசிரியரும் மற்றைய ஆசிரியர்களும் அறைகளை நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம்.

‘ஆங்கில மாஸ்டர்… நீங்கள் ஊருக்குப் புதுசு, ஆட்களோடுப் பார்த்துப் பழகிக் கொள்ள வேண்டும். படிப்பிக்க வந்த ‘நாம்’ எமது தொழிலை நன்றாகச் செய்ய வேண்டுமானால் நாம் ஊரவரோடும் ஒத்துப்போக வேண்டும். ஒதுங்கி வாழக் கூடாது.

தலைமையாசிரியரின் அறிவுரைக்கு நான் மறுப்புரை கூற வில்லை.

அவருடைய பொன்மொழி எனக்குப் பிடித்தமானதுதான்.

மண்டபத்தில் சீட்டு ஆட்டம் உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருந்தது. ஆசிரியர்களும் தீவிரமாகப் பங்கு பற்றினார்கள் சீட்டில், சிகரட்டில், எல்லாவற்றிலும் நேரம் போவதே தெரியாமல் ஊரவரோடு ஒத்துழைத்து கொண்டிருந்தார்கள். இம்முறை அஹமதுவுக்கு அல்லாப் பிச்சைக்கும் படு தோல்வி.

‘ஓ.. இப்ப ஆசிரியர்களுக்கும் தோல்வி’ அல்லாப்பிச்சை இரைந்தான்.

ஆசிரியர்கள் ‘ஜெக்’ ஐ துரும்பாக வைத்து ஆடினார்கள்.

அவர்கள் தங்கள் ‘துரும்பை’ மறந்து எதை எதையோ துரும்பாக வைத்து ஆடுகிறார்கள் – ஆடிக்கொண்டே இருக்கிறார்கள்.

நானும் ஆசிரியர் பண்டாவும் இராப்போசனத்தை முடித்துக்கொண்டு படுக்கைக்கு செல்லும்போது பத்துமணியாகி விட்டது.

மண்டபத்தில் மது பரிமாறப்பட்டதால் ஆட்டம் இன்னும் சூடு பிடித்துக் கொண்டிருந்தது. ஆதம்பாவா வெறித்து இரைந்து கொண்டிருந்தான்.

வாரங்கள் ஓடி ஒரு மாதமும் பிந்தி, இரண்டாம் மாதத்தின் மூன்றாம் வாரம் ஓடிக் கொண்டிருக்கிறது.

நான் மாணவர்களினதும், பெற்றார்களினதும் நன்மதிப்பையும் அபிமானத்தையும் பெற்றுக் கொண்டிருந்தேன்.

பாடசாலையில் ஆறுவரை வகுப்புக்கள் இருந்தன. இதற்கு முன் ஆங்கில மொழி படிப்பிக்கப் படவில்லை. எனவே மாணவர்களுக்கு ஆங்கிலம் படிக்க வேண்டும் எனும் ஆர்வம் நிறையக் இருந்தது. நல்ல ஊக்கம் காட்டினார்கள்.

ஆதம்பாவா, றஹீம் போன் றவர்களின் பொய்ப் பிரசாரத்தினால் என்னைத் தவறாக எடை போட்ட பெற்றார்களும் என்னிடம் மன்னிப்புக் கோரினார்கள்.

‘மாஸ்டர் என் மகன் அசின் ஆறுமணிக்கு விளக்குப் போட்டதும் ஆங்கில பாடத்தை மட் டும்தான் படிப்பான்…’ என்றார் அப்துல் மஹிதி என்பவர்.

‘மாஸ்டர் அவன் மட்டும் அல்ல. இந்த கிராமத்தில் உள்ள, எல்லா மாணவர்களும் அப்படித்தான்; ஆறுமணிக்குப் பிறகு ஒரே ஆங்கிலப் பாடமும், ஆங்கிலப் பாட்டும்தான் எல்லா வீடுகளிலும் கேட்கலாம்’ என்றார் அபூதாலிப்.

இப்படிக் குறுகிய காலத்தில் பெற்றார் என்னைப் பாராட்டும் போதும் என் உள்ளம் புள காங்கிதம் அடைகிறது. இன்னும் இன்னும் ஆர்வம் காட்டுகிறேன்.

சீட்டு ஆடும் நண்பர்களை முற்றாகத் தவிர்த்து விட்டேன். ஆசிரியர்களும் தீவிரமாக பங்கு பற்றினார்கள். சிங்கள மொழி படிப்பிக்கும் ஆசிரியர் திரு புஞ்சி பண்டர மட்டும் “காட்ஸ்’ விளையாடப் போவதில்லை. அவர் என்னோடு ஆழ்ந்த நட்பு. நான் அவருக்கு தமிழ் படிப்பிக்கிறேன். அவர் எனக்கு சிங்களமொழி படிப்பிக்கிறார், ஒவ்வொரு நாள் மாலையிலும் ஒன்றாக குளத்துக்கு குளிக்கப் போவோம், நாங்கள் இருவரும் ஊருக்குப் பெரியவரான மரைக்கார் வீட்டில்தான் எங்கள் உணவுக்கு ஒழுங்கு செய்திருக்கிறேம். மற்ற ஆசிரியர்கள் சமைத்துச் சாப்பிடுகிறார்கள்.

அன்று காலைக் கூட்டம் முடிந்ததும் முதலாம் பாடம் நடந்துகொண்டிருந்தது;

தலைமையாசிரியருக்கு வழக்கம்போல் கோபம் வந்துவிடுகிறது.

‘இந்தக் காட்டுப் பயல்களுக்கு ஒன்று சொன்னாக்கா விளங்காது’ அவரது கோபம் மாணவர்களின் கைகளில் சிவப்பு ஏறச் செய்வதில் அந்தக் ‘கெவட்டியும்’ துண்டாகி விட்டது. அந்த இலட்சணத்தில் முதலாம் பாடம் முடிந்துவிட்டது. அதற்குப் பின் அவர் பாடம் படிப்பிக்கவில்லை.

‘சோர்ட்லீவு’ எடுத்துக் கொண்டு ஆசிரியர்களின் சம்பளம் மாற்றப் போய்விட்டார். பாடசாலைப்பொறுப்பை வாஹித் மாஸ்டர் ‘லொக்’ புத்தகத்தில் கையொப்பமிட்டு பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

தலைமையாசிரியர் மறுநாள் காலை 8 மணிக்கு வந்துதான் திரும்பவும் பொறுப்பை வாஹித் மாஸ்டரிடமிருந்து ஏற்றுக் கொண்டார்.

சம்பளத்தை ஆசிரியர்களுக்குப் பங்கிட்டுவிட்டு என்னை அழைத்தார்.

‘அன்சாரி மாஸ்டர், உங்களுக்கு கடிதங்கள் ஏதாவது வந்ததா?’

‘இல்லை’

‘இந்தாங்க, உங்களுக்கு மாற்றம் வந்திருக்கு’

‘அப்படியா?’

‘எங்கே?’

‘அது இதைப்போல டவுனிலிருந்து இரண்டு மைல் நடந்து பாடசாலையை அடையும் விசயம் அல்ல. ‘பஸ் ரூட்டி’லிருந்து எட்டுமைல் காட்டு வழியில் நடந்து செல்ல வேண்டும்’ என்றார் புன்முறுவலோடு.

நான் அவருக்கு பட்டென்று பதில் கூறினேன்:

‘சேர் முதன் முதலில் எனக்கு கொழும்பில் நேர்முகப் பரீட்சை நடந்தபோது, இலங்கையில் எந்த இடத்துக்குப் போட்டாலும் எனக்கு விருப்பம் தான் என்று அதிகாரிகளிடம் கூறியிருக்கிறேன்’

இதற்கிடையில் எனது ‘டிரான்ஸ்பரை’க் கேள்விப் பட்ட பெற்றார்கள், என்னை மாற்றக்கூடாது என்று நிரூபம் எழுதி ஊரில் ஒவ்வொருவரிடம் இருந்தும் கையொப்பம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், குறிப்பிட்ட தினத்தில் நான் வெளியேறுகிறேன்.

என் ‘துரும்பு’ வெளிச்சம், எனக்காக, என் சேவையை விரும்பும் ஆசிரியர் கூட்டம் எங்காவது ஒரு பாடசாலையில் காத்திருப்பார்கள். எனக்கு அந்த நம்பிக்கையுண்டு.

– மல்லிகை 1974.12.

ப. ஆப்டீன் (11 நவம்பர் 1937 - 9 அக்டோபர் 2015) என்ற பஹார்டீன் ஆப்டீன், ஈழத்து தமிழ்க் கலை இலக்கிய துறையில் பங்காற்றி வரும் மலையக முஸ்லிம் படைப்பாளிகள் வரிசையில் கவனத்துக்குரிய ஒரு படைப்பாளி ஆவார். இவர் இலங்கையின் மலையகத்திலுள்ள நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர். மலாய் இனத்தில் பிறந்தவர். 1962 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த தமிழின்பம் எனும் சிற்றிதழில் வந்த உரிமையா? உனக்கா? எனும் முதல் சிறுகதை மூலம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *