துரும்பின் ஆவேசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 3, 2023
பார்வையிட்டோர்: 1,369 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘காலிங்- பெல்’ கண கண வென்று ஒரு முறை அடித்தது; இரு முறையும் அடித்தது. அதிலே எஜமானின் அவசரம் தொனித்தது.ஆனால், ஆதம் கானுக்கு அந்த மணி யோசை காதில் விழவில்லை; அதை அவன் லட்சியம் செய்ததாகவே தெரியவில்லை.

அவனுக்கு வயது ஐம்பத்தெட்டு இருக்கும். ஆறடி, நாலங்குல உயரம், தூய வெண்மையான அங்கியும் தலைப்பாவும் அணிந்திருந்தான். தங்கச்சரிகை யிட்டு, கறுப்புக்குஞ்சலம் தொங்கும் ஒரு கமர்ப்பந்தை அவன் இடையிலே வரிந்துகட்டியிருந் தான்; அது இடையைக் குறுக்கி எடுப்பாய்க் காட்டியது. அதே போல் தங்கச்சரிகை போட்ட பட்டை யொன்று, தலைப்பாவையும் சுற்றியிருந்தது. அவனுடைய மீசையும் தாடியும் கச்சிதமாய் ஈறுக்கிவிடப் பட்டு, வீட்டிலேயே தயாரித்த ஏதோ மை பூசிக் கன்னங் கறேலென்றிருந்தன. ஆனால், அவைகளின் மயிர்க் காம்புகள் மட்டில், மைபடாமல் சாம்பல் நிறத்தோடே காட்சி யளித்தன.

திறந்து கிடக்கும் கதவுக்கு வெளியே போட்டிருந்த ஒரு ‘ஸ்டூல் ‘ மீது, அவன் அமர்ந்திருந்தான். மார்பின்மேல் கைகளைக் கட்டிக்கொண்டு, சுவரிலே சாய்ந்திருந்தான். கண்கள் மூடியிருந்தன. நிச்சிந்தையாக, அவன் உட்கார்ந்திருந்தான்.

பியூன்கள், கட்டுக் கட்டாய்க் கச்சேரிக் காகிதங்களைத் தூக்கிக் கொண்டு, அறைகளுக்குள்ளேயும் வெளியேயும், பரபரப்பாய் நடந்து கொண்டிருந்தார்கள். அது சர்க்கார் காரியாலயத்தின் ஓர் இலாக்காவாகும். வெளியே கொடி மரத்தில் ‘யூனியன் ஜாக்’ பறந்து கொண்டிருந்தது.


ஆயிரத்தித் தொளாயிரத்துப் பதினாலாம் வருஷம் நடந்த மகா யுத்தத்தில், ஆதம் கான், ஒரு போர் வீரனாய்ச் சேவை செய்தான். நேசக் கட்சியார் அற்புதமாய் யுத்தம் புரிந்த போர்க் களங்களில், தன் பங்கு கைங்கர்யத்தை அவனும் புரிந்திருக்கிறான்; ஏன், தன் பங்குக்கு அதிகமாகவே அவன் புரிந்திருக்கிறான். சாமான்ய சிப்பாயாக இருந்த அவன், தன்னுடைய தீரச் செயல்களால், வெகு விரைவிலே, ஹவில்தார் பதவிக்கு உயர்ந்து விட்டான். எங்கேயோ ஒரு புதரில் ஒளிந்து கொண்டு கள்ளத்தனமாய் ஓர் எதிரி வீரன் சுட்ட குண்டு மட்டில், அவன் மீது பாய்ந்திராவிட்டால், அவனுடைய பதவி இன்னும் எவ்வளவோ உயர்ந்திருக்கும். அவனது வாழ்க்கையிலேயே மிக உச்சமான வெற்றி நேரத்தில், அவனுக்கு இந்தத் துரதிர்ஷ்டம் நேர்ந்தது. அந்த எதிரியின் குண்டு, வனுடைய இருதயத்துக்கு வெகு சமீபத்தில் புகுந்து, அங்கேயே சௌக்கியமாய்க் குடிகொண்டு விட்டது. அந்தப்பொல்லாத குண்டை, பட்டாள டாக்டர் வந்து, வெளியே எடுத்து, காயத்தை தைத்துவிட்டார். அவரை ‘அசகாய சூரன்’ என்றே, ஆதம் கான் எப்போதும் புகழ்வான். அவன் பூர்ணசுகமடைந்து, மீண்டும் துப்பாக்கி தாங்கியபொழுது, அந்தக் காயத்தினால் ஏற்பட்ட வடுவை, புதிய ராணுவச் சட்டையொன்று மூடி மறைத்தது; அந்தச் சட்டையின் மேலே, வெள்ளியால் செய்த வீரப் பதக்கமொன்றும் அலங்காரமாகத் தொங்கத் தொடங்கியது. அவனது உள்ளத்திலே புதைந்து கிடந்த வீரத்தனம், இந்த வீரப் பதக்கம் அவன் மார்பிலே ஏறியதும், பொங்கிப் பூரித்துப் பிரமாதமாய் வளர்ந்தோங்கியது. ஆனால், அவன் எதிர்பாராதபடி சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகி, அவனுடைய பட்டாளத்தையும் கலைத்து விட்டார் களாதலால், அவனுக்கு அளவு கடந்த ஏமாற்றம் ஏற்பட்டது. இன்னும் பெரிய புகழெல்லாம் அடையலாம் என்று அவன் கட்டிருந்த மனக் கோட்டைகளனைத்தும், அதோடு இடிந்து போயின.

யுத்தம் நின்று, அவனது சிப்பாய் உத்தியோகமும் முடிவடைந்துவிட்டதால், அவனுக்குச் சொற்ப உபகாரச் சம்பளம் கிடைத்தது. அவன் குடும்பத்தார் அரை வயிறு அலம்பக்கூட, அது போதவில்லை. இப்படிச் செலவுக்கே கட்டாமல் தடுமாறிக் கொண்டிருந்த அவன், வேறு ஒரு வழியும் புரியாமல், இன்னொரு சம்சாரத்தையும் கலியாணம் செய்துகொண்டான். ஏற்கனவே ஒரு மனைவி, மூன்று குழந்தைகள், முடமான ஓர் அக்காள், கிழத்தாய், தகப்பன் இவர்களெல்லாம் இடமிடைஞ்சலால் தவித்துக் கொண்டிருந்த குடிசையிலே, அவளும் வந்து புகுந்தது தான் மிச்சம். போர்க்களத்தில் ஒரு துப்பாக்கியை குதூகலத்தோடு அவன் கைப் பிடிப்பானோ அவ்வளவு குதுகலத்தோடேதான், மாப்பிள்ளைக் கோலத்தைத் தாங்கினான். ஆனால், அந்தக் குதூகலமெல்லாம் வெகு சீக்கிரத்திலே தணிந்து விட்டது. இளைய மனைவி, ஒரு குழந்தையையும் பெற்றுவிட்டாள். அவள் இன்னும் பல வருஷங்கள் யௌவனமாய் இருக்கப் போகிறாள். ஆதம் கானுக்கோ, மனக்குழப்பத்தால் அவன் உள்ளத்தில் கவிந்திருக்கும் இருளை நடுநடுவே நீக்கும் ஒளியும் நிம்மதியும் இல்லற சுகமே. ஆதலால், அவனது குடும்பம் மேன்மேலும் வளர்வதில் என்ன சந்தேகம்?

இதனால், அவன் மனது பின்னும் அதிகக் குழப்பத்தை அடை யவே, அதை நீக்க அதிக ஒளியும் தேவையாயிற்று. மூன்றாவது விவாகம் ஒன்றையும் அவன் உள்ளம் நாடியது. ஆனால் கடவுள் கிருபையால் ஓர் அதிர்ஷ்டம் பிறர்தது. அண்டை வீட்டிலிருந்த ஒரு கிழவன் இவனிடம் அனுதாபப்பட்டு, ஒருயோசனை சொன்னான்; இவனுக்கு ஒரு மனு எழுதிக் கொடுத்து, அரசாங்கக் காரியாலயத்திலுள்ள பெரிய துரையை இவன் போய்ப் பார்க்கும்படியும் ஏற்பாடு செய்தான்.


ஆதம் கான் தன்னுடைய ராணுவ நிஜாரையும் சட்டையையும் அணிந்து கொண்டான்; பூட்சுக்குப் பளபள வென்று கறுப்புப் பாலிஷ் கொடுத்துக் கொண்டான்; (அந்தக் காலத்தில் அவனுடைய மீசை தாடிகளுக்குக் கறுப்புச் சாயம் தேவைப்படவில்லை;) வீரப்பதக்கத்தைக் கம்பீரமாக மார்பிலே தொங்க விட்டான். இந்தக் கோலத்தில் பெரிய துரையைப் போய்ப் பார்த்தபோது, துரையே பிரமித்துவிட்டார். பாயும் துப்பாக்கிக் குண்டைப்போல, அதி சீக்கிரத்தில் பலனும் கிடைத்தது. துரையை இவன் பேட்டி கண்ட மறுநாளே, இவனது பெயர், சர்க்கார் சம்பளப் பட்டியலில் ஏறிவிட்டது. அதன்மேல் ராணுவ உடையை, ஆதம் கான் மூட்டை கட்டி வைத்தான். தூயவெண்மையான அங்கி, தலைப்பா, சரிகை போட்ட சிவப்புக் கமர்ப்பந்து ஆகியவைகளை அணிந்து கொண்டான். வீரப்பதக்கம் தொங்கிய மார்பில், பெரிய வில்லை ஒன்று தொங்கியது. அதிலே, ‘டபேதார்’ என்ற எழுத்துக்கள் பளிச் சென்று செதுக்கப்பட்டிருந்தன . ராணுவத் தோள்பட்டைக்குப் பதிலாக, மற்றொரு ரகமான தோள் பட்டை, அவனை அலங்கரித்தது.

வெகு சந்தோஷமாகவே, ஆதம் கான் தன்னுடைய புதிய ‘உத்யோக’த்தை மேற்கொண்டான். அப்படி ஒன்றும் கடுமையான வேலை கிடையாதென்று, சில நாளைக்குள்ளேயே அவன் கண்டு கொண்டான். தனக்குக் கிடைக்கும் இருபது ரூபாய் சம்பளமும், தன் ராணுவப் ‘பென் ஷ’னப் போலவே, மற்றொரு ‘பென்ஷன்’ என்று அவன் கருத்தினான். ஒரு வருஷ சேவைக்குப் பின், அவனுடைய சம்பளம் ஒரு ரூபாய் ஏறியது. ஐந்து வருஷத்தில், அதிவேகமாய் இருபத்தைந்து ரூபாயை அவன் எட்டி விட்டான். அதுவே அவன் சம்பளத்தின் சிகரம்; அதிலேயே அவன் ஆயுட்காலம் பூராவும் தள்ளவேண்டும்.

புதிய உத்தியோகத்திலே, வருஷங்கள் ஆக ஆக, ஆதம்கானுக்கு அருமையான அனுபவம் உண்டாகிவிட்டது. அரசாங்க ரகஸ் யங்களையும், அதிகார தோரணைகளையும் அவன் அறிந்து கொண்டான். தன் எஜமானின் மனதை உள்ளும் புறமும் தெரிந்து கொண்டான். அவர் எப்போது சந்தோஷமாயிருப்பார், எப்போது எரிந்து விழுவார், அவருக்கு என்னென்ன சபலங்கள் உண்டு, எதெதில் அவரை அசைக்க முடியாது என்பவை யெல்லாம் ‘உள்ளங்கை நெல்னிக் கனி’ போல் அவனுக்கு விளங்கின. ஆகையால், தன் சம்பளக் குறைவை ஈடுகட்ட, ஆதம் கான் ஓர் எளிய வழியைக் கண்டு பிடித்தான். எஜமானைப் பேட்டி காண வருவோர் அனைவரும், அவனுக்கு முதலில் காணிக்கை விட்டுத்தான் முடியும்; வருபவர், அங்கியரோ, ஆபீஸிலேயே உள்ள கீழுத்தி யோகஸ்தரோ, யாராயிருந்தாலும் சரிதான், அதைச் செலுத்தியாக வேண்டும். ஆனால், உத்தியோகஸ்தர்களின் மனது புண்படாமல் எப்படித் தளுக்காய் செலுத்தி உள்ளே போக நடந்து கொள்ளுவது என்பதும் அவனுக்குத் தெரியும்.


திடீரென்று யாரோ பேசினார்கள்; நல்ல வாலிபமும் விஷய ஞானமுமுள்ள யாரோ, அவன் காதிலே முணுமுணுத்த குரலில் சொன்னார்கள். அவன் உடுத்தியிருந்த உடை, முகலாய சக்ரவர்த்திகள் பெருமையோடு ஆடம்பரமாய், சுமார் இரண்டு நூற்றாண்டுகள் அணிந்திருந்த உடையாகும் என்று, அந்தக் குரல் கூறியது. அந்த ராஜ உடையை, பரங்கியர், இப்படிக் கேவலப்படுத்தி விட்டார்கள்; தாழ்ந்த வேலைக்காரனின் உடுப்பாகச் செய்து விட்டார்கள்! என்ன அநியாயம்!


அரபிக் கதையின் மாயாஜாலக் கம்பளம் ஒன்று, அவன் முன்னே வந்து நின்றது. அதன்மீது ஆதம் கான் ஏறி உட்கார்ந்தான். அவன் கண்ணைத் திறந்தபோது, முகலாய சக்ரவர்த்திகள் ஆண்ட சாம்ராஜ்யத் தலைநகரமான டில்லிக்கு, தான் வந்து சேர்த்திருக்கக் கண்டான்! என்ன அதிரஷ்டம்! தர்பார் மண்டபத்தின் அற்புத சோபைகள், அவனுக்குத் தென்பட்டன. தங்கள் சக்ரவர்த்திக்குச் சிற்றாசர்கள் காணிக்கை செலுத்திய தங்கமும் நவரத்தினங்களும் குவியல் குவியலாய்க் கொட்டிக் கிடந்த பளிங்கு மஹால்கள் என்ன! ஆடம்பரமாய் உடையணிந்து அணிவகுத்துச் செல்லும் வாஜிர்கள், அமீர்களின் அழகென்ன! நேர்த்தியா யாய் ஜேணமிட்ட குதிரைகள் என்ன! அம்பாரி வைத்த யானைகள் என்ன! பல்லக்குகள் பவனி வர, ஜே ஜே என்று கும்பல் கும்பலாய் ஜனங்கள் நடக்கும் வீதிகள் என்ன! தேனீக் கூடுகளைப்போல் ரீங்காரம் செய்யும் பஜார்கள் என்ன! இத்தனையையும் அவன் கண்டான். ராஜாங்க விருதுகளுடன் சுல்தான்கள் ஊர்வலம் செய்கிறார்கள். அவர்களுக்கு முன்னே, மெய்காப்பாளர்கள், வெள்ளித் ஈட்டியும் வாளும் தடிகளும் தாங்கி முரசொலி முழங்க நடக்கிறார்கள். ரோஜா வர்ணக் கற்களால் கட்டிய பிரம்மாண்டமான கோட்டைகளையும் சிற்பங்கள் கொழிக்கும் அற்புத மசூதிகளையும் அவன் கண்டான். மெக்கா இருக்கும் திசையை பக்த கோடிகளைப் பிரார்த்தனைக் நோக்கிய முகத்துடன், கழைக்கும் முஜீனின் குரலைக் கேட்டபோது, அவன் பரவசமடைந்து, மெய்சிலிர்த்து ஆனந்த பாஷ்பம் சொரியலானான்.

அல்லாஹோ – அக்பர்!

உறக்கத்தைவிடப் பிரார்த்தனையே மேல்!


மீண்டும் காலிங் – பெல் கணகண வென்று ஒரு முறை அடித்தது; இருமுறையும் அடித்தது. அதிலே எஜமானின் ஆத்திரம் தொனித்தது.

ஆதம்கான் இருந்தபடியே உட்கார்ந்திருந்தான். கண்கள் மூடிய படியே இருந்தன. பிரார்த்தனை செய்வதுபோல், அவன் உதடுகள் அசைந்தன.

துரை பரபரவென்று வெளியே வந்தார்.

“ஹேய், என்னா செய்றேம் தூக்கமா தூங்கறே?”

“ஸூவெர்க்காபச்சா!” என்று வெறுப்போடு முணுமுணுத்தான் ஆதம்கான். ஆனால், அவன் கண்கள் மட்டில் திறக்கவில்லை.

”என்னா? என்னா சொல்றே? ஒன்னே யார்னு நெனச்சுக்கிட்டே நி?”

ஆதம்கான் மிக்க செருக்கோடு, “நான் முகலாயச் சக்ரவர்த்தி” என்றான்.

துரை மிகவும் சாமர்த்திய சாலி, சட்டென்று, விஷயம் இன்னதென்று அவர் புரிந்து கொண்டார். குறும்புச் சிரிப்புடன் கண்ணைச் சிமிட்டினார். இரண்டொரு நிமிஷம் மௌனமாய் நின்று, டபேதாரை உற்று நோக்கினார். முகலாய சக்வர்த்தியா! ஆமாம்; இவன் அப்படித்தான் தோன்றுகிறான் – வாட்ட சாட்டமான சரீரம்; கச்சிதமாய் நறுக்கி வண்ணம் தீட்டிய தாடி, மீசை; வெண்மையான தலைப்பா; தூய வெள்ளை யாய் அலைபோல் கம்பீரமாக விசிறிக்கொண்டிருக்கும் அங்கி – ஆம் இவன் முகலாய சக்ரவர்த்திதான். மகாசூரனான பாபரா? அல்லது, கருணை வள்ளல் ஹுமாயூன் தானோ? இல்லை, இல்லை; பிரதிவாதி பயங்கரனான் அவுரங்கசீப் அல்லவா இவன் – இதுவே பொருத்தம் என்று துரை நினைத்தார். அவரது குறும்புச் சிரிப்பு, இன்னும் பலமாயிற்று.

துரை தமது அறைக்குத் திரும்பிச் சென்று விட்டார்.


பதினைந்து நிமிஷம் கழிந்தது. உள்ளுக்குள்ளேயே கலகம் புரிந்தவர்களின் வான் வீச்சுக்களாலும், பற்பல போர்கள் மூண்டு இடிபோல் முரசுகள் முழங்கித் தீ கக்கிய பீரங்கிக் குண்டுகளாலும், அழகான இந்த பூமி குரூபமாகி, தன் மக்களின் ரத்த விளாறால் மாசு பட்டுப் போனதால், அந்த சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்றது. இந்த நாச லீலைகளால் கோரமடைந்த பிரதேச மெல்லாம், சமாதிகள்தான் வரிசை வரிசையாய் எழுந்து நிற்கின்றன. இந்த நாசங்களுக்கிடையே, ஏழு டில்லிகள் அழிந்த சாம்பலின் மேலே, அந்தச் சமாதிக் காட்டின் நடுவே, புதிய டில்லி ஒன்று, அங்கியரால் நிர்மாணமாகி, அந்திய ஆட்சிக்கு நிலைக்களனாய், எங்கோ கடல்களுக்கப்பாலிருக்கும் கண் காணத் தீவாந்தரம் ஒன்றின் செய்து எதிரொலி கொண்டு எழுந்து, நிற்கிறது.

அந்த ஒலி, ஆதம்கானின் கனவுகளின் இனிமையைக் குலைத்தது. அவன் கண்களைத் திறந்தான். தன் உடுப்பைப் பார்த்தான். அவன் முகத்திலே சந்தேக இருள் சூழ்ந்தது.

“பியூன் !” என்றது ஒரு குரல். அதிகார மிடுக்கு அதிலே நிறைக் திருந்தது.

“சாஸேப்!” என்று கத்திக் கொண்டே, உள்ளே ஓடினான் ஆதம்கான்.

“இந்தா; இதை எடுத்துப் போ” என்று சொல்லிய துரை, மேஜைமேல் கிடந்த ஒரு காகிதக் கட்டைச் சுட்டிக் காட்டினார்.

கூனிக்குறுகி, காகிதக் கட்டும் கையுமாய், ஆதம்கான் தலை குனிந்து அறையை விட்டு வெளியே நடந்தான்.

துரும்பு ஆவேசம் கொண்டது; ஆல விருட்சம் போல் ஓங்கி நிமிர்ந்தது. ஆவேசம் தணிந்தது ; பழைய துரும்பாயிற்று.

– சக்தி இதழில் 1944-இல் வெளிவந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *