தீண்டாமைக்குள் ஒரு தீட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 2, 2024
பார்வையிட்டோர்: 549 
 
 

மழை பொய்த்து போனாலும் வருடம் இரண்டு போகம் விளைந்துவிடும் விவசாய கிராமம். ஏழு மணிக்கே வீடுகளின் விளக்குகள் அணைக்கப்பட்டுவிடுவதால் தெருக்கள் இருள் மூடிக்கிடக்கும். 

சின்னக்கவுண்டனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை.படப்பிலிருந்து உருவிப் போட்ட சோளதட்டையை அசை போட்டுக் கொண்டிருந்த காளைகளின் கழுத்து பட்டையிலிருந்து மணிகளின் ஓசை இடைவெளிவிட்டு சங்கீதமாய் கேட்டது.ஈசான மூலையில் மின்னல் ஒளிர்ந்து மறைந்ததும்,மாட்டுத் தொழுவத்தில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கிடந்தவன் எழுந்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்து இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு ஊதி அணைத்து கூரை முகட்டில் சொருகினான். தன் கைபேசியில் நேரத்தை பார்த்தான். பதினொன்றரை தாண்டிவிட்டது. காலில் செருப்பை அணியாமல் இறங்கி நடந்தான்.தெருவில் சிள் வண்டுகளின் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. நிலவு மேகத்துக்குள் தன்னை மறைத்துக் கொண்டதால் வெளியெங்கும் இருள் பரவிக்கிடந்தது. கூலி வாங்காமல் சென்றுவிட்ட சென்பகத்தின் வீடு நோக்கி நடக்கலானான். ஒரு வீட்டின் திண்ணையில் படுத்துக்கிடந்த நாய் நிமிர்ந்து பார்த்து குறைத்தது. அதன் வாயை அடைக்க ஒரு வரிக்கி ரொட்டியை வீசினான். கூலி வாங்காமல் சென்றுவிட்ட அவள் மனதில் ஏதோ தவறான புரிதல் இருக்க வேண்டும் என யூகித்தான். காலனியின் முதல் தெருவில் இருக்கும் அவள் வீட்டின் வேலிப்படலை திறந்து உள்ளே நுழைந்த போது பட்டியில் இருந்த ஆடுகள் தும்பும் ஓசை கேட்டது. மெதுவாக கதவை தட்டி ஓசையை எழுப்பினான். கதவை திறந்துவிட்டு பின் அடுப்படியில் போய் நின்று கொண்டாள் சென்பகம்.

“ஏன் கூலி வாங்காம வந்துட்டே?”-மௌனமாக நின்றாள் சென்பகம்.

“கோவமா? கோவபடுறமாதிரி நான் என்ன செஞ்சுட்டேன்”

“நீங்க பெரிய வீட்டுக்காரங்க.நாங்க கேவலப்பட்ட சனங்க”

“வேற என்ன புதுசா சொல்லப் போற சென்பா”-அவள் கையை பற்றினான்.வீட்டுக்கு விலக்காகி இருப்பதாக சொன்னாள். சிறிது நேரம் அவளை பார்த்துவிட்டு மாடக்குழியில் கூலியை வைத்துவிட்டு வெளியேறினான்.

காலனியை தாண்டி முருக்கஞ் சேரியில்தான் சின்னப்பொன்னு வீடு இருக்கிறது. அவனை அறியாமலே கால்கள் அவள் வீட்டை நோக்கி சென்றது.கைவிடப்பட்ட ஓலை கொட்டாயின் உச்சத்தில் மினுமினுக்கும் பூஜ்ய விளக்கில் இரக்கத்தை கனிந்து கொண்டிருந்தது சிலுவை.வயிற்றுப் பாடுகள் நிறையாத பன்றிகளின் ‘டுர்! டுர்!’ ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஒரு ஒற்றை சந்துக்குள் புகுந்து சின்னப்பொன்னுவின் குடிசை முன் நின்று குரல் கொடுத்தான்.’ கிரீச்’ சென்று சப்தம் தந்து கதவு திறந்து கொண்டதும், ஒரு கருப்பு கம்பளியை போர்த்திக் கொண்டு எடுத்து முடியாத முடிக்கோலத்துடன் பேயாக நின்று கொண்டிருந்தாள் சின்னப்பொன்னு.

“வாங்க எசமான்!”-அன்பாக வந்தது அழைப்பு. அடுப்பை மூட்டி கடுங்காப்பி போட்டுக் கொடுத்தாள்.

“என்ன ஆச்சு உனக்கு”-கேட்டான்.

“மூணு நாளா காய்சல்”-என்றாள். தன் கையில் இருந்த பணத்தை அவளிடம் தந்துவிட்டு விடியும் வரை பேசிக் கொண்டிருந்தான். மெதுவாக சென்பகத்தைப் பற்றி பேச்சும் வந்தது. ஊரில் பல பெண்களுடன் தொடுப்பு இருப்பது தெரிந்தும் பழகியவள் இப்போது ஏன் விலகிப் போகிறாள் என அவளிடம் கேட்டான்.

“எசமான், நான் சக்கிலிச்சி.என் கூட நீங்க பழகிறது அவளுக்கு பிடிக்கல”-என்றாள். புரியாதது போல் அவள் முகத்தை பார்த்தான் சின்னான்.

“எசமான், பறச்சிங்க சக்கிலிச்சுங்க வீட்ல பச்சத் தண்ணி கூட வாங்கி குடிக்க மாட்டாங்க. இது கூட தெரியாத மனுசனா இருக்கீக”-என்று சொல்லிவிட்டு அவன் குடித்து முடித்த காப்பி தம்பளரை வாங்கினாள். முருங்கை மரத்தில் அடைந்திருந்த சேவல் கூவியது. கீழ்வானில் விடிவெள்ளி கண் சிமிட்டிக் கொண்டிருந்தது.விடிவதற்கு இன்னும் சில மணித் துளிகளே இருந்தது. பின்பு எழுந்து கொண்டவனை கைகூப்பி வணங்கினாள் சின்னப்பொன்னு. மனிதர்களுக்குள்ளேயே வேற்றுமை பார்க்கும் மனிதர்கள். தன் வீட்டை நோக்கி நடக்கலானான் சின்னான்.

சிவந்து வரும் கீழ்வானத்தை பார்த்து நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *