திருவிளக்கும் தெருவிளக்கும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 16, 2022
பார்வையிட்டோர்: 4,983 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விடியலில் எழுந்துவிடும் வழக்கமுடைய டாக்டர் நல்லசிவம் தனது வீட்டின் மொட்டை மாடியில் நின்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அதிகாலை ஆறுமணி ஆகியிருக்கக் கூடும். பொழுது “பொல்”லெனப் புலர்ந்து கொண்டிருந்தது. மக்கள் நடமாட்டம் சன்னம் சன்னமாகப் பெருகிக் கொண்டிருந்தது. டாக்டர் நல்லசிவம் தான் ஏறக்குறைய முப்பது நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்திருக்கக்கூடும் என்பதை மனக் கணக்கால் ஊகித்து உணர்ந்து கொண்டார். உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு இருக்கையில் அமர்ந்து களைப்பு நீங்க ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

எதிர் வீட்டில் இருந்து “சுப்ரபாதம்” உச்சஸ்தாயில் ஒலித்துக் கொண்டிருந்தது. திருமதி கனகாம்பிகை ஆவி பறக்கும் காப்பியைக் கொண்டு வந்து டாக்டர் நல்லசிவத்துக்குக் கொடுத்து விட்டுப் படியிறங்கிக் கொண்டிருந்தார். கனகாம்பிகை குளித்து முழுகிக் கூந்தலை உலர்வதற்காக நெகிழ விட்டிருந்தார். நேர் வகிடு குங்கும மங்களம் பெற்றுப் பிரகாசித்தது. நூற் புடவை வாகான உடலை வரிந்து தழுவிக் கொண்டிருந்தது. “இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க…..! என்பதுபோல் இயங்கும் தன் அன்பு மனையாளின் பேசும் பின்னழகைக் கடைக்கண் பார்வையால் இரசித்துக் கொண்டிருந்தார். தாம்பத்திய வாழ்க்கையில் அன்புமனம் மணம் கமழ்ந்து கொண்டேதான் இருக்குமோ….! சூடான காப்பியைச் சுவைத்துப் பருகிக் கொண்டே சுற்றுப்புறக் காட்சிகளைக் கருத்தோடு கண்ணோட்டமிடலானார்.

இன்னும் சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது. எதிர்வீட்டு அம்மையார் – அருளப்பரின் துணைவியார் மங்கள கௌரி துளசி மாடத்தைப் பக்தி சிரத்தையுடன் வலம் வந்து கொண்டிருந்தார். அந்தப் பெரிய மாடி வீட்டின் இரும்புக் கிராதிகள் பொருத்தப்பட்ட விசாலமான தலைவாயிற் கதவு பூட்டப்பட்டிருந்தது. அந்தத் தெருவழியே நடந்து போய்க் கொண்டிருந்த பெண்கள் அந்தத் துளசி மாடத்தின் மீது ஓரக்கண் பார்வையைச் செலுத்திக் கைகூப்பி வணங்கிய வண்ணம் நடந்து கொண்டிருந்தார்கள். மாடி வீட்டு அம்மையார் மங்கள கௌரி வேண்டுதலை முடித்துக் கொண்டார். துளசி மாடத்தினுள் பிரகாசித்துக் கொண்டிருந்த திருவிளக்கை மூன்று முறை தொட்டுக் கும்பிட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டார்.

காலையிளங் காற்றைச் சுவாசிப்பதிலும் கண்ணுக் கினிய காட்சிகளைக் காண்பதிலும் டாக்டர் நல்லசிவத்துக்கு ஓர் அலாதி பிரியம். ஒரு சில சமயங்களில் அப்படியே கற்பனை இன்பத்திலும் ஆழ்ந்து விடுவார். மின்னலெனத் தோன்றி மறையும் காலந் தவறாமைப் பண்பு “நறுக்” என ஒரு கிள்ளு கிள்ளி விட்டுச் சென்றுவிடும். திடுக்கிட்டு எழுந்து செயல்படத் தொடங்கி விடுவார். பின்னர் இயந்திர வேகந்தான்..!!

சிந்தனை ஓட்டத்தில் எங்கோ சென்றுவிட்ட நல்ல சிவம் திடுமெனத் தோன்றிய உணர்வினால் நனவுலகுக்கு மீண்டு கொண்டிருந்தார். அதே சமயத்தில் சொல்லி வைத்தாற்போலத் திருமதி கனகாம்பிகை அவர்களின் “என்னங்க..!” என்ற குரலும் நல்லசிவம் அவர்களின் கவனத்தை ஈர்த்தது.

விரைந்து சென்ற அவர் துரித கதியில் இயங்கிக் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு தன்னுடைய தனியறைக்குத் திரும்பி வந்தார். திருமதி கனகாம்பிகை அம்மையார் காப்பி கொண்டு வந்தார். நல்லசிவம் காலையில் காப்பி மட்டும்தான் அருந்துவார்; பசியாறும் பழக்கமில்லை..!

“இன்றைக்குத் திருக்குறள் விழா..! மறந்து விடாதே…! மாலை ஆறு மணிக்கெல்லாம் மண்டபத்துக்கு வந்து விடு..” என்று கூறினார்.

“இன்று சனிக்கிழமை..வேலை அரை நேரம்தானே..! அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்து ஓய்வெடுத்துக் கொண்டு மாலையில் இருவரும் புறப்பட்டுச் செல்லலாமே..!” – நல்ல சிவத்தின் துணைவியார் கனகாம்பிகை தனது கருத்தைத் தயங்கித் தயங்கி வெளியிட்டார்..!

கையிலிருந்த காப்பிக் கோப்பையை மேசைமேல் வைத்துவிட்டு டாக்டர் நல்லசிவம் தன் துணைவியாருக்குப் பார்வையால் பதில் சொன்னார்; கனகாம்பிகையும் அவர்தம் கருத்தைப் புரிந்து கொண்டார்.

திருக்குறள் விழா ஏற்பாட்டுக் குழுவில் நல்லசிவமும் ஓர் அங்கம். யாருக்கோ வந்த விருந்தாக இருந்துவிட முடியுமா? பொறுப்பில் உள்ளவர்களுக்குப் பொறுப்பான பணிகள் இருக்கத்தானே செய்யும்…!

கனகாம்பிகை அம்மையாரிடம் விடை பெற்றுக் கொண்ட நல்லசிவம் அலுவலகத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். தலைவாசல் வரையில் வந்து கணவரை வழிகூட்டி அனுப்பி வைத்து விட்டுக் கனகாம்பிகை வீட்டுக்குத் திரும்பும்போது துளசி மாடமும், அதனுள் மிகச் சன்னமாகச் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் திருவிளக்கும் அம்மையாரின் பனிப் பார்வையில் ஒளிர்ந்து மறைந்தது…!

பேருந்து நிறுத்தத்துக்கு விரைந்து கொண்டிருந்த நல்லசிவம் அவர்களின் கண்களுக்கும் துளசி மாடமும் திருவிளக்கும் துல்லியமாகத் தெரிந்தது. திருவிளக்கு பற்றிய சிந்தனையில் மூழ்கிய வண்ணம் நல்லசிவம் நடைபயின்றார்.

இறைவழிபாட்டு அறையில் பவ்வியமாக வைத்துப் போற்றப்படும் திருவிளக்கு பக்தி சிரத்தையானது. பவித்திரமானது. இதனில் எந்தவிதக் கருத்து வேறுபாடும் டாக்டர் நல்லசிவத்துக்கு எப்போதும் இருந்ததில்லை. பயன்பாடு என்ற அளவில் கருதிப் பார்க்கும்போதுதான் டாக்டர்தம் சிந்தனையில் சிறு அளவிலான முரண்பாடு தோன்றும்…..! திருவிளக்கு சிறு விளக்கு……! – ஆயின் தெருவிளக்கு…..? டாக்டர் நல்லசிவம் அவர்களின் சிந்தனை சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது. பழக்கத்தின் காரணமாகக் கால்கள் தாமாகவே இயங்கப் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தார்.

அன்று சனிக்கிழமை…. பிற்பகல் ஒரு மணிக்கெல்லாம் அலுவலகம் முடிந்து எல்லோரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். பேருந்து நிறுத்தத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த காட்சி தேர்த் திருவிழாக் கூட்டத்தின் மாட்சிமைபோல் இருந்தது. அந்தக் கூட்டத்தில் நல்லசிவமும் திக்குமுக்காடிக் கொண்டிருந்தார். பேருந்து நெரிசலில் சிக்கித் தவிப்பதை எப்போதும் தவிர்த்துக் கொள்ளும் பண்புடைய நல்லசிவம் கூட்டத்தின் குறைவை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தார்.

எதற்கும் ஓர் எல்லையும் ஓர் இறுதி முடிவும் ஏற்பட்டுத்தான் தீர வேண்டும்…..! டாக்டர் நல்லசிவம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அந்த நல்ல நேரமும் வந்து விட்டது. அமைதியாகப் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டார். ஏறத்தாழ முக்கால் மணி நேரம் பயணம் செய்துதான் அவர் “எஸ் எல் எஃப்” மண்டபத்திற்குப் போய்ச் சேர வேண்டும். “சிங்கப்பூர் லேபர் பவுண்டேசன்” என்பதன் சுருக்கமே “எஸ் எல் எஃப்” என்பதாகும். தாம்சன் சாலையிருக்கும் அந்தக் கோபுர மாளிகையிலுள்ள மணிமண்டபத்தில் “திருக்குறள் விழா 1990!” நடைபெற விருக்கின்றது. குறைந்த பட்சம் முப்பது நிமிடங்கள் வரையிலாவது “அறிதுயில்” கொள்ளலாமே என்று நல்லசிவம் தனக்குத்தானே சொல்லிக் கொண்டார்.

வழக்கமாகப் பேருந்துப் பயணத்தின்போது கண்ணுறக்கம் கொள்ளும் வழக்கமுடைய நல்லசிவத்துக்கு அன்று கண்ணிமைகள் மூடுவதற்கு மறுத்துக் கொண்டிருந்தன. உள்ளத்தில் உறுத்தல் இருக்கும்போது உறக்கம் எப்படி வரும்…! அன்று இரவு ஏழு மணியளவில் தொடங்கி நடைபெறவிருக்கும் திருக்குறள் விழாவில் தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் பொறுப்புகள் தொடர்பான சிந்தனைகள் இடைவிடாது மனத்தின் அடித்தளத்தில் நெகிழ்ந்து கொண்டே இருந்தன. அதனால் அவருக்கு அயர்வு தோன்றவில்லை.

கற்றறிந்த பெருமக்கள் பலர் பொறுப்பேற்று நடத்துவதால் திட்டமிட்ட பணிகள் எல்லாம் திட்டவட்டமாகச் செயல்படுத்தப்பட்டு விழாவிற்கு வருகை தரும் சிறப்பு விருந்தினரை வரவேற்கச் செயற்குழுவினர் அனைவரும் திரண்டு வந்து தலைவாசற்புறத்தில் நின்று கொண்டிருந்தனர். அதோ…. அமைச்சர் பேராசிரியர் ஜெயகுமார் அவர்கள் வந்துவிட்டார்கள், நாதஸ்வர இசை முழக்கத்துடன் அன்னார் மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சாங்கோபசாங்கியமாகத் திருக்குறள் விழா தொடங்கப்பட்டு விட்டது.

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் துணைத் தலைவர்களில் ஒருவரான-விழாக்குழு தலைவரான கொள்கைக் குன்றம் சி குமாரசாமி அவர்கள், ஆண்டுதோறும் திருக்குறள் விழா நடத்தப் பெறுவதன் முக்கியத்துவத்தையும் நோக்கங்களையும் பற்றி விளக்கமாக விரிவுரை செய்து வரவேற்புரையாற்றினார்.

அடுத்தபடியாகக் கழகத்தின் தலைவர் செந்தமிழ்ச் செல்வர் வை திருநாவுக்கரசு அவர்கள் திருக்குறளின் சிறப்புகளையும், தத்துவார்த்தக் கூறுகளையும் பற்றித் தமிழ்மொழி – ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் விளக்கிக் கூறித் தலைமையுரை ஆற்றினார்.

விழாவிற்கு வருகையளித்த தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தின் மேலாண்மைக் குழுத் தலைவரும், சிங்கப்பூர் சட்ட, உள் துறை அமைச்சருமான மாண்புமிகு பேராசிரியர் ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.

“தமிழ்மொழி வாழும் மொழியாக – வளரும் மொழியாகச் சிங்கப்பூரில் செழிக்க வேண்டுமென்றால் தமிழர்கள் அனைவரும் வாழ்வியலில் வழங்கும் மொழியாகவும் அன்றாடம் புழங்கும் மொழியாகவும் விளங்கச் செய்ய வேண்டும்….!” –

அமைச்சரின் சிறப்புரையைச் செவிமடுத்துக் கொண்டிருக்கும் நல்லசிவத்தின் சிந்தனை விரிந்தது. “தமிழனைக் கண்டால் தமிழில் பேசு” என்று இயக்கம் நடத்தப் பெற்ற காலக் கட்டத்திற்கு அவர்தம் சிந்தனை விரைந்தது. அப்போது தோன்றி வளர்ந்த எழுச்சிகளும் துடிப்புகளும் காற்றுப்பட்டால் கரைந்து விடும் கற்பூரம் போலக் காலப்போக்கில் காணாமற் போய்விட்து. முதியவர்களாயினும் இளையோர்களாயினும் ஆங்கிலம் பேசுவதையே ஒரு பெரிய நாகரிகமாகவும், கௌரமாகவும் கருதிக் கொள்ளும் ஒரு காலக் கட்டத்தில் சமுதாயம் இழையோடிக் கொண்டிருக்கின்ற இழிந்த நிலையை எண்ணிப் பார்த்துக் கொண்டபோது டாக்டர் நல்லசிவத்தின் நல்ல நெஞ்சத்தில் எங்கோ ஒரு மூலையில் மின்னலின் தாக்கம்போல் வலியொன்றும் பளிச்சிட்டு மறைந்தது. அந்தக் கால சமுதாய ஆர்வலர்களை நினைவு கூர்ந்தார் நல்லசிவம். பேராசிரியர் தம் பேச்சு தொடர்ந்தது.

“தனக்குத் தனக்கென்று வாழும் சுயநலமிகளாய்தன்னல வாதிகளாய் வாழ்வதைத் தவிர்த்து, நாடு – சமுதாயம் மொழி ஆகியவற்றின் முன்னேற்றத்துக்காக தம் பங்கைச் செலுத்த ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்….”

அரங்கில் குழிமியிருந்த மக்களின் கையொலி வானைப் பிளந்தது. இந்த உணர்ச்சியும் உத்வேகமும் விழா முடிந்து மண்டபத்தை விட்டு வெளியேறும் வரைதானே….! ஒவ்வொரு நிமிடமும் “தலைநிமிர் தமிழா” என்ற பாடல்வரிகளை ஒலியேற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதானே….! என்று சமுதாயத்தினரின் பின்னடைவை எண்ணியெண்ணித் தலையில் குட்டிக் கொண்டார், வேதனைப் பட்டார்.

தமிழகத்திலிருந்து வருகையளித்திருக்கும் சிறப்புப் பேருரையாளர் சிலம்பொலி செல்லப்பனார் அரங்கில் இருந்தோரின் பெருத்த கைதட்டல் ஆரவாரத்துக்கிடையே எழுந்து வந்து பேச முற்பட்டார். அவையடக்கம் என்னும் ஆலாபரணங்களை முடித்துக் கொண்டு திருக்குறளின் சிறப்புகளைப் பற்றி பேருரையைத் தொடங்கினார். அரங்கம் அமைதியில் ஆழ்ந்தது.

“திருவள்ளுவர் தமது ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங் குறட்பாக்களில் நான்கே இடங்களில்தாம் அதாவது நான்கு பாடல்களில் மட்டும்தாம் வைக்கப்படும் வைக்கப்படும்’ என்று சொற்றொடரை முடித்திருக்கின்றார். முதலாவதாக, வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்பது பற்றிப் பார்ப்போம். இல்லற வாழ்க்கையின் அறநெறி போற்றிப் புகழ்மிக்க நிலையில் வாழ்க்கை நடத்தும் ஒருவன் தெய்வத்துக்குச் சமமாக மதிக்கப்படுவான்…”

டாக்டர் நல்லசிவத்தின் கண்கள் கூட்டத்தில் துழாவின. சற்று நேரத்திற்கு முன்னம் குடும்ப சகிதம் திருக்குறள் விழாவிற்கு வருகை புரிந்து மண்டபத்தில் எங்கோ அமர்ந்திருக்கும் அருமை நண்பர் அருளானந்தரைத்தான் அவர்தம் விழிகள் அலசிக் கொண்டிருந்தன. மனைமாட்சி போற்றி மாசுபடா வாழ்க்கை …! ஆடம்பரமற்ற அருள்நெறி வாழ்க்கை …! தன்னலத்துடன் தகைமை மிகும் பொது நலமும் போற்றும் தாபம்….! அள்ளிக் கொடுக்க இயலாத நிலையிலும் இல்லையெனாது கிள்ளிக் கொடுக்கும் அருட்கொடைப் பண்பு….! மற்றவர்தம் மனம் கோணாமல் பேசுகின்ற மாண்பு… ஆகியவற்றுக்குச் சொந்தக்காரர்தாம் அருளானந்தர். டாக்டர் நல்லசிவத்தின் கரங்கள் மானசீகமாகக் குவிந்தன புகழ் சுமக்கும் புண்ணியனார்க்குப் பொழிகின்ற நல்வாழ்த்து ….!

அழகுமணி மண்டபத்தில் பொதுமக்கள் திரள் மிகுந்த ஆர்வத்தோடு நகைசச்சுவை மிளிரும் சிலம்பொலியாரின் பேச்சில் இலயித்துக் கொண்டிருந்தது. “சிலம்பு” கணீர் கணீர் என ஒலித்துக் கொண்டிருந்தது.

“ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்” – என்பது திருக்குறள். எங்கள் ஊரில் என் நண்பன் ஒருவன் இருக்கின்றான். “சார்…… நான் யாருடைய வம்பு தும்புக்கும் போகமாட்டேன். நான் உண்டு என் வீடு உண்டு, என் வேலை உண்டு; என் மனைவி மக்கள் உண்டு என்று இருந்து விடுவேன். எனக்கு இந்தச் சமுதாயம் – பொது நலம் என்பதெல்லாம் அறவே பிடிக்காது – என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வான்.”

ஆலயத்தில் அருட்பிரவாகம் பூரிக்கும் உபந்நியாசத்தைப் பக்திப் பரவசத்துடன் கேட்கும் பக்தகோடிகளைப் போல் கூட்டம் சிலம்பொலியாரின் சிரிப்பலைகளில் மிதந்து கொண்டிருந்தது. டாக்டர் நல்லசிவத்தின் சிந்தனை காலையில் கட்புலனாகியிருந்த காட்சிக்கு விரைந்து கொண்டிருந்தது.

ஏறத்தாழப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னம் தமது வீட்டுக்கு எதிரில் உள்ள அந்தத் தனியார் மாடி வீட்டை வாங்கிக் கொண்டு அங்குவந்து குடியேறினர் அருளப்பன் தம்பதியினர். அருளப்பன் சிங்கப்பூரில் இருக்கின்ற கப்பல் பட்டறை ஒன்றில் பணிபுரியும் ஒரு சாதாரணத் தொழிலாளர். தமிழ்மொழி நன்குகற்றவர். அந்தப் புலமை அளவில் ஒரு பாதித்திறன் ஆங்கிலத்தில் இருந்திருக்குமானால் குறைந்த பட்சம் ஒரு குமாஸ்தாவாகவாவது வேலை கிடைத்திருக்கக்கூடும். அருளப்பன் அதை ஒரு குறையாகக் கொள்ளவில்லை. தனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எல்லாம் கதை, கட்டுரை, நாடகம் எழுதிப் புகழ் சேர்த்துக் கொண்டார்.

அறுபதுகளில் எல்லாம் “ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை” என்பது போல, அருளப்பன் “ஆல்ரவுண்ட்” எழுத்தாளராகக் கருதப்பட்டார். வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நிறையவே எழுதிப் பணம் சேர்த்தார். அப்போதெல்லாம் ஆண்டுதோறும் தமிழர் திருநாள், திருக்குறள் விழா, முத்தமிழ் விழா போன்ற இலக்கிய விழாக்கள் ஆண்டு முழுமையும் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும். அந்த விழாக்களின் தொடர்பாகக் கதை, கவிதை, கட்டுரை, பேச்சு, பட்டிமன்றம் போன்ற இலக்கியப் போட்டிகள் நடைபெறும். அந்த இலக்கியப் போட்டிகளுக்கெல்லாம் எழுதிப் பரிசும் புகழும் பெறுவார். இவ்வாறு நாடறிந்த ஓர் எழுத்தாளராகத் திகழ்ந்தார். ஆயின், தமிழர் அமைப்புகள் – ஆலயங்கள் – பொது நிறுவனங்கள் நன்கொடை கேட்டு வந்தால், “கழுவிய மீனில் நழுவிய மீன்” என்றொரு பழமொழி சொல்வார்களே அது போல எப்படியோ… எப்படியோதான் நகர்ந்து விடுவார்…..! |

காலப்போக்கில் சிங்கப்பூரில் தமிழ் எழுத்தாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு உயர்ந்தது. அவர்களிலே மிகப்பலர் ஆதாயம் கருதாமல் நூல்களைப் பதிப்பித்து நூல் வெளியீட்டு விழாவினை நடத்துவார்கள், அம்மாதிரியான இலக்கிய விழாக்களில் எல்லாம் அருளப்பன் கலந்து கொள்ளவே மாட்டார். அதுபோலவே ஆலயங்களில் நடைபெறும் தேர் திருவிழாக்களிலும் கலந்து கொள்வதில்லை. அன்பளிப்பு – நன்கொடை என்ற பேரால் ஏதாவது வந்து “விடிந்து விடும்” என்பதற்காகவே கூடுமான அளவுக்கு ஒதுங்கிக் கொள்வார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் தமிழ்ப் பேரவை என்ற ஓர் அமைப்பை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள். இதன் வழி இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தமிழ்மொழி-தமிழ் இலக்கியம் வளர்ச்சி பற்றிய மாநாடு நடத்துவார்கள். இதுபோன்ற எத்தகைய இலக்கிய விழாவாக இருந்தாலும் பரிசு பெறுவதாகவோ, பங்கேற்றுப் பேசுவதாகவோ இருந்தால் மட்டுமே அவரைப் பார்க்க முடியும். இல்லையென்றால் அவர் தம் வருகையும் இல்லை என்பதாகவே இருக்கும்.

“என்னங்க சார்…. விழாவில் உங்களைப் பார்க்க முடியவில்லையே…..! என்று யாராவது கேட்டு வைத்தால், “நான் என்னங்க சார் செய்வது….! என் வேலை வாய்ப்பு அத்தகையது….” என்று, “ஷிப்ட்” வேலையைக் காரணங் காட்டித் தப்பித்துக் கொள்வார்.

ஒருசிலரை ஒரு சில நாட்களுக்கு ஏமாற்றலாம். “ஊர் உலகத்தைக் காலங் காலத்துக்கும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியுமா என்ன…?” அருளப்பரின் “சுபாவம்” பற்றி அணுக்கமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கும் சமுதாயப் பார்வையாளர்கள் மிகச் சரியாகவே “ஜீரணித்து” வைத்துக் கொண்டுள்ளார்கள். அருளப்பருக்கு இதுபற்றியெல்லாம் கவலையில்லை .

தேசிய ஒருமைப்பாடு, நாட்டுப்பற்று, பணிவன்பு, பரோபகாரம், குமுகாய சேவை இன்னும் இத்தியாதி இத்தியாதி கருப்பொருட்களை எல்லாம் மையமாக வைத்துக் கதைகள் எழுதிப் பரிசுகளைத் தட்டிக் கொண்டு சென்று விடுவார். பாராட்டுகளைக் குவித்துக் கொள்வார். எழுத்துக்கும் அவரது இயல்புக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இருக்காது. எவரோடும் ஒட்டோ உறவோ வைத்துக் கொள்வது அவருக்குப் பிடிக்காது.

தனி மனித வாழ்க்கையில் இனிமையும் மகிழ்ச்சியும் காணக் கூடியவர். பல இன சமுதாய மக்கள் வாழும் நாட்டில் கூட்டுறவு வாழ்க்கை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியெல்லாம் கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் எழுதிப் பரிசுகள் பெற்றிருக்கின்றார் அருளப்பர். ஆனால், ஒரு சிறந்த அண்டை வீட்டுக்காரராகத் திகழ முடியவில்லை . ஒட்டு மொத்தமாகச் சொல்வதென்றால் அருளப்பர் “கட்டுச் செட்டாக” வாழ்ந்து அன்பார்ந்த கண்ணியவனாகிக் கொண்டிருக்கின்றார்.

அருளப்பன் போன்ற தன்னைப் பேணிக் கொள்கையாளர்களை – சுய நலமிகளைத் “திருவிளக்குகளாக” உருவகித்துப்பார்த்துக் கொண்டார் நல்லசிவம்…. திருவிளக்கு பிரகாசிக்கின்ற ஒளிச்சுடர் நான்கு சுவர்களின் இடையே இருக்கும் இருளை அகற்ற உதவுகின்றது. அது திருவிளக்கின் பயன்…! தனக்குத் தனக்கென்று வாழ்பவர்களின் வாழ்க்கையும் பயன்பாடுகளும் கூட அத்தகையதுதானே….! ஆயின் தெருவிளக்கு…?

நாடு – இனம் – மொழி – சமுதாயம் – சமூகம் தழைக்கப் பாடுபடும் நல்ல பொது நலவாதிகள் காலம் காலமாக இருப்பதனால்தான் உலகம் இன்றுவரை செழித்து விளங்குகின்றது. வானோங்கி உயர்ந்து நின்று ஒளிவெள்ளம் வழங்குகின்ற தெருவிளக்கின் பிரகாசம் ஊர்மக்களுக்குப் பாதை காட்டப் பயன்படுகிறது. தெருவிளக்கின் பயன்பாடு அறிந்து அதனைக் கைகூப்பி வணங்கிச் செல்வார் உண்டா? என்று சிந்தித்துக் கொண்டபோது நல்லசிவம் தன்னையுமறியாமல் தலையை மட்டும் அசைத்துக் கொண்டார்.

இடைவிடாத கைதட்டலோசை கேட்டு டாக்டர் நல்லசிவம் சுய சிந்தனைக்குத் திரும்பலானார். சான்றோர் பெருமக்களின் உள்ளம்போல் அகன்று விரிந்து நீண்டு அமைந்திருக்கின்ற நெடுஞ்சாலை ஒன்றில் இரண்டு உந்துவண்டிகள் ஏக காலத்தில் ஒரே சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருப்பதைப் போல எண்ணங்கள் இரண்டாகப் பிரிந்து எழிலாக ஓடிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் நிகழ்வுகள்..! மற்றொரு பக்கம் நினைவுகள்….! சிந்தனை ஒரு புறம் சிறகடித்துக் கொண்டிருக்க, திருக்குறள் விழாப் பேருரைகளும் மற்றொரு பக்க மாண்பினில் செவிப் புலனாகிக் கொண்டிருந்தது. டாக்டர் நல்லசிவமும் எல்லோருடன் சேர்ந்து கைதட்டித் தன் ஆர்வத்தைப் புலப்படுத்தினார்.

புல்லறிவாண்மை அதிகாரத்தில் வரும் “அலகையா வைக்கப்படும்” குறட்பொருளை விளக்கி முடித்தபோது எழுந்த கையொலி ஒருவகையாக ஓய்ந்தது. சிலம்பொலியாரின் பேச்சு “இறையென்று வைக்கப்படும்” என்னும் இறைமாட்சி அதிகாரத்தின் திருக்குறளுக்கு விளக்கம் கூறும் அமைப்பில் தாவிக் கொண்டிருந்தது.

சிறப்புப் பேருரைக்குப் பின் அடுத்த நிகழ்ச்சியாகப் பரிசளிப்பு நடைபெறவிருந்தது. அதற்கான ஆயத்தங்களைச் செய்யும் சிந்தனை ஓட்டத்துடன் செயல்படத் தொடங்கினார். கடந்த ஆண்டு திருக்குறள் விழாவில் கதைப் போட்டியில் பரிசு பெற்ற அருளப்பர் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்….! இந்த ஆண்டு…..? ஒருவேளை “ஷிப்ட்” டூட்டியாக இருக்குமோ….? அருளப்பரின் அரவத்தையே காணோம்….!

ஏறத்தாழ இரவு ஒன்பதரை மணியளவில் டாக்டர் நல்லசிவம் தன் மனைவியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். எதிர்வீட்டுத் துளசி மாடமும் அதனுள் மிகச் சன்னமாகச் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் திருவிளக்கும் டாக்டர் நல்லசிவம் தம்பதிகளின் கண்களில் படத்தான் செய்தது. அகலத் திறந்திருந்த வீட்டின் முற்றத்தில் அருளப்பன் தன் அன்பு மனையாளுடன் அளவளாவிக் கொண்டிருந்த காட்சியும் தென்பட்டது.

அணிவகுத்து நிற்கும் பட்டாளத்து வீரர்களைப் போல் சாலையோரத்தில் வானோங்கி உயர்ந்து நின்று ஒளியுமிழ்ந்து கொண்டிருக்கும் தெரு விளக்குகளை டாக்டர் நல்லசிவம் சிந்தனை நுகர்ச்சியோடு ஒருமுறை பார்த்துக் கொண்டார்.

– கற்பனை மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 1995, தமிழவேள் நாடக மன்றம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *