திருமலைக் கண்ட திவ்ய ஜோதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 14, 2024
பார்வையிட்டோர்: 241 
 
 

(மதுரை மன்னன் திருமலையின் மாய மரணம் பற்றிய குறிப்புகளைக் கொண்டு சித்திரிக்கப்படும் ஓவியம் இது. இட்டுக் கட்டியதோ என்று ஐயப்படுவோருக்கு, எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர் தீட்டிய ‘கன்னியர் வீரம்’ என்ற சிறு நூலில், பட்டர் புதல்வி சிறுகதையைப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.)

சுந்தரவல்லி:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரதம பட்டாச்சாரியாரின் திருமகள் நான். பெயர் சுந்தரவல்லி. இளமங்கை எழில்மிக்கவள் – பூங்கொடி – ஊர் புகழ்கிறது என்னை. இதோ, என் எதிரே இருப்பது விஷக்கோப்பை! தங்கக் கோப்பை! மன்னன் முன்பு தந்த பரிசு இது அப்பாவுக்கு! எனக்கும் பரிசு தந்திருக்கிறான், விஷம்!

“குழந்தை சொர்ண விக்ரஹம் போலிருக்கிறது! பாப்பா! வாம்மா, வா! ஏன் பயம்? ஓடிவா, ஓடிவா! இதோ பார், உனக்குத்தான் மல்லிகை – வா!” நான் சிறுமி, பட்டாச்சாரி மகள் – அவர்! நாடாளும் மன்னன். அவருடைய அன்புமொழி எனக்குத் தேனாக இனித்தது. அப்பா பூரித்துப் போவார். என்னைப் பிடித்திழுத்துக் கொண்டுபோய் மன்னர்முன் நிறுத்துவார். அவர் என் முகவாய்க்கட்டையைப் பிடித்து தூக்குவார்; கன்னத்தைக் கிள்ளுவார்; துவள்வேன். தூக்கி உட்கார வைத்துக் கொள்வார் மடியிலே! ஊரார், ‘சுந்தரவல்லி மஹா அதிர்ஷ்டக்காரி! மகாராஜாவுக்கு அவள் மீது உயிர்’ என்பார்கள். பலநாள் எனக்குப் பழமும், பட்சணமும், மல்லியும் முல்லையும் கொண்டு வந்து தருவார். ராஜகாரியங்கள் ஏராளம் என்றாலும், என்னைப் பார்க்கவும், விளையாடவும், எப்படியோ அவருக்கு நேரம் கிடைத்தது. சிறுமிதானே நான் – எனக்கு ஒரே பெருமை! என்னைப் போன்ற சிறுமிகளைப் பார்க்கும்போது, பெருமையாகச் சொல்வேன். ‘உங்க ஆத்துக்கு ராஜா வர்றாரா? எங்காத்துக்கு வரார் – என்னோடு வேடிக்காயாகப் பேசிண்டிருப்பார். என் மேலே பிராணன் மகாராஜாவுக்கு’ – என்றெல்லாம். சிறுமிகளிலே குறும்புக்காரிகள் கேலி பேசும் – “சந்தரியோட கண் இருக்கே, அது ராஜாவை மயக்கிவிட்டிருக்கும்” என்று ஒருத்தி சொல்வாள். கோடி ஆத்துக் கோமளம், “சுந்தரி சிரிக்கிறப்போ கன்னத்திலே குழி விழறது பாரடி, அதிலேதான் ராஜா சொக்கிப் போறார்” என்பாள். “சுந்தரியோட – கல்யாணத்துக்கு, ராஜா நிறைய சன்மானம் செய்வார்” என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.

இந்தத் தென்றலால் நான் வளர்க்கப்பட்டேன் – பருவ மங்கையுமானேன்! மன்னன் எப்போதும் போலவே வந்து கொண்டிருந்தார். ‘சுந்தர், சுந்தரி!’ என்று கனிவுடன் கூப்பிடுவார். நான் ‘நமஸ்காரம்’ செய்துவிட்டு, உள்ளே போய்விடுவேன் – அப்பாவும், அவரும் பேசுவார்கள் – நான் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டே இருப்பேன். சிறுமியாக இருந்தபோது இருந்தபடி இப்போது முடியுமா – அடே அப்பா! அப்போது ஒரே வேடிக்கைதானே! அதை எண்ணிக் கொள்வேன். புன்சிரிப்புடன் போகும்போது ஒருமுறை நமஸ்காரம் செய்வேன். அவர் மட்டும் அடிக்கடி, ‘சுந்தரி, சுந்தரி’ என்று கூப்பிட்டபடி இருப்பார்.

அப்பாவிடம் எனக்குப் பிரமாதமான கோபம் பிறந்தது. அரசர் மீது குற்றம் கண்டுபிடிக்கத் தொடங்கினார். யாராரோ அப்பாவின் மனத்தைக் கெடுத்தனர். – இவரும் பிறகு, பலருடைய மனத்தைக் கெடுக்கலானார். மன்னர் எங்கள் நாட்டுக்கு வந்த கிருஸ்தவப் பாதிரிகளுடன் கூடிக் குலவுகிறார். என்பதுதான் புகார்! இதிலே என்ன தவறோ தெரியவில்லை! கிருஸ்தவப் பாதிரிகள் என்றால் என்ன, மனிதர்கள்தானே! ஏன், அப்பாவுக்கு மற்றும் சிலருக்கும் அருவருப்பு – நான் கேட்டேவிட்டேன் அப்பாவை – அவர், ‘பைத்யம்! உனக்கென்னடி தெரியும்! நம்ம புராதன மதத்துக்கு வைரிகள் இந்தத் கிருஸ்தவா. நம்ம மதத்திலே உள்ளவாளை, ஏழை எளியவர்களையும் விவரம் அறியாதவர்களையும் பிடித்து, கிருஸ்தவ மதத்திலே சேர்த்துக் கொள்கிறா. இந்த அக்ரமத்தை ராஜன் அனுமதிக்கிறான். இவனே, கிருஸ்தவனாகி விடுவானோன்னு நேக்கு பயமாயிருக்கு – ஊர் முழுதும் இதைப் போலத்தான் பேசிக் கொள்கிறா” என்று சொன்னார். ‘இவ்வளவுதானா! தங்கக் குன்றப்பா மகாராஜா! அவரைச் சந்தேகிப்பது மகாதோஷம்” என்று நான் வாதாடி வந்தேன்.

ஒருநாள் அப்பா வெளியே போயிருந்தார் – அவர் வந்தார். நமஸ்காரம் செய்ய வேண்டுமே – ஊராரும் ராஜா வந்திருக்கிறார், உட்காருங்கள் என்று சொல்லா விட்டால் எப்படி… கூச்சத்தோடு நின்றேன் கும்பிட்டேன் – ஏதோ குளறினேன் – உட்காருங்கள் என்றுதான் சொல்லியிருப்பேன், ஊஞ்சலில் உட்கார்ந்தார். நான் அவர் கண்களில் பட்டும் படாததுமாக நின்று கொண்டிருந்தேன்.

“அப்பா, இல்லையோ… சரி, வருவார், சீக்கிரம்” என்று சொல்லியபடி, மன்னர், நான் இருந்த பக்கம் கவனித்தார் – என்னையும் அறியாமல் கூச்சம். தலை குனிந்தபடி நின்றேன். “ஏன் கூச்சமோ? சிறு பெண்ணாக இருக்கும்போது எவ்வளவு விளையாடுவாய், மான்குட்டி போல! நான் என்ன புது மனிதனா? என்னைக் கண்டு, ஏன் இவ்வளவு வெட்கம்?” என்று கேட்டார் நியாயந்தான் – ஆனால் இந்தப் பாழாய்ப் போன வெட்கம், என்னைப் பிடித்து உலுக்கிவிட்டது. கொஞ்சம் ஜலம் கேட்டார்; ஓடினேன் உள்ளே – வெள்ளிச் செம்பிலே வெட்டிவேர் தண்ணீர் நிரப்பி, ஊஞ்சலருகே கொண்டு சென்றேன் அதை வாங்கும்போது, அவர் கரம், என் கரத்தின் மீது படுவது போலிருந்தது – ஊஞ்சலின் மீது செம்பை வைத்துவிட்டு விலகி நின்றேன். புன்னகையுடன் அவர், “அடே அப்பா! எவ்வளவு ஜாக்ரதை! நான் என்ன, பூதமா, பிசாசா?’ என்றார். நான் என்ன பதில் சொல்வது – புன்னகை புரிந்தேன். அப்பா வந்தார், எனக்கு அப்போது தான் மன அதிர்ச்சி மறைந்தது. பிறகு அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்பா இல்லாத வேளையில் இதுபோல அவர் வருகிற போதெல்லாம் எனக்குப் பெரிய மனநெருக்கடியாகவே இருந்து வந்தது. ‘வேண்டுமென்றே, அப்பா இல்லாத நேரமாகப் பார்த்து வருகிறாரோ, தெரியவில்லையே!” என்று சந்தேகம் கிளம்பிற்று லேசாகத் திகிலும் பிறந்தது. ஏனென்றால், மகா உத்தமர், தர்மிஷ்டர் என்றாலும், மன்னருக்கு மாதர்களிடம் மையல் அதிகம் என்று அப்பாவும் மற்றவர்களும் பேசிக் கொண்டது எனக்குத் தெரியும். முந்நூறு அழகிகள் இருக்கிறார்கள் அந்தப்புரத்தில் என்று சொன்னார்கள். நானோ பருவமங்கை! அவரோ அடிக்கடி நான் தனியாக இருக்கும்போது வருகிறார். அன்னியராக இருந்தால் அப்பா இல்லை என்று ஒரே வார்த்தையில் அனுப்பிவிடுவேன். அரசர்! குழந்தைப் பருவ முதல் விளையாடிய பழக்கம்! எப்படி அலட்சியப்படுத்த முடியும்? ஆனால்…!

என் அடிவயிற்றிலே அடிக்கடி இந்த ‘ஆனால்’ கிளம்பும். ஆனால் மறுகணம், செச்சே! என் அப்பாவுக்குச் சமானம் என்ற எண்ணம் தோன்றி, சாந்தி உண்டாக்கும்.

என்ன அவசரமாகத்தான் இருக்கட்டும்; இப்படி, வெள்ளிச் செம்பை நானாகத் தருவதற்குள் அவர், என் கரத்தைத் தொடுவதா – நான் கொஞ்சம் முகத்தைச் சுளித்துக் கொண்டேன். அவர், ‘செச்சே! இதென்ன இவ்வளவு பயம்! பைத்யமே! உன் அப்பா, ஜெபதபாதிகளை முடித்துக் கொண்டு வீடு வர நெடுநேரமாகும்’ என்றார் – என்மனம் பதறிவிட்டது. விலகினேன் விடவில்லை – கரத்தை உதறித் தள்ளினேன்; கருத்து புரிந்துவிட்டது. அவரோ… என்ன சொல்வேன் – அணைத்துக் கொண்டார் பிறகு – கூவுவேன் – என்று மிரட்டினேன். ‘கோமளமே’ என்று கெஞ்சலானார். ‘என் மீது கோபித்து என்ன பயன் கண்ணே! தேவரும் மூவரும் கூட மதிமயங்கக்கூடிய அழகை உனக்குத் தந்த அயன்மீது கோபித்துக் கொள் அல்லது உன் அழகைக் காண எனக்குக் கண்ணளித்த கடவுளின் மீது கோபித்துக் கொள். நான் மன்னன். ஆனால், மனிதன்! முனிவனுமல்ல! மோகனாங்கி!” என்றார். அரசர் பேசும் பாஷையா இது – என் உடல் துடித்தது – நான் துணிந்து, அவரைக் கண்டித்தாக வேண்டும் – விலகினேன் – விழியிலே நீர் தளும்பிற்று –

“இந்த அக்ரமம் ஆகாது – அரசரின் புத்தி இப்படி அழியக் கூடாது” என்று சொன்னேன் – கோபமாகத்தான். ஆனால் உரத்த குரலிலே அல்ல – வெளியே தெரியக்கூடாதே. பதில் பேச வாயில்லை – ஆனால்… என்னை விடவில்லை… “உன்னிடம் பிச்சை” என்று கெஞ்சினார். இந்தத் துர்ப்பாக்கியனைச் சாகடிக்காதே” என்றார், சாகசமாக. எனக்கும் வார்த்தைகள் மளமளவெனக் கிளம்பின. ஏசினேன். “என் மீது என்ன சுந்தரி, தவறு கரும்பு வில்லோன் என்னைக் கொல்கிறான்” என்று கூறினார். ஆத்திரம், எனக்கு. கரும்பு வில்லோன் இப்படித் தான் கதியற்ற கன்னியைக் கற்பழிக்கச் சொல்கிறானா?” கபடத்துக்குக் கவசமிடாதீர், காவலரே! விநாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்; அழிந்து போவீர் – நிச்சயமாக – சத்தியமாக” என்று கூறினேன், அழுதபடி, பயம் போய் விட்டது. கோபம் அதிகரித்தது. ஓடிவந்து என்னைப் பிடித்திழுத்தபடி, ‘அழிவேனா! நானா! உன்னைப் பெறாவிட்டால்தான் பேரழகி நான் அழிவேன். பெற்றால் பெருவாழ்வு, புதுவாழ்வு இருவருக்கும்’ என்றார். வெறுப்பு எனக்கு – அவர் பிடியிலிருந்து விடுபடக் கூட முயற்சிக்க வில்லை – ‘வாழ்வு எதுக்குக் கற்பிழந்த பிறகு?’ என்று சொன்னேன். என் கூந்தலைக் கோதியபடி அவர், ‘கற்பு! யார் வேண்டாமென்பார் அந்தப் பூஷணத்தை – என்னைக் கணவனாகக் கொள் -பதிசொல் தவறாத உத்தமியாக வாழ உன்னை அழைக்கிறேன்; வெறும் உல்லாசத்துக்கு அல்ல” என்றார். ஒரு கணம் திகைத்துப் போனேன், என்ன சொல்வது என்று தெரியாமல்! கற்பு கெடாதாமே! திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறாரே! என்று யோசித்தேன். வார்த்தைகள் வெளிவரத் தாமதமாயின – அவருடைய சேட்டைகளோ துரிதமாயின. “அரசே! குலம் அறியாது பேசுகிறீர்” என்றேன், அணைப்பிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டபடி, ‘அழகு அறிந்து நாடுகிறேன். சுந்தரி! அவ்வளவுதான் எனக்குத் தெரியும் பேச’ என்றார். அவருடைய மயக்கத்தைப் போக்க மேலும் பேச எண்ணி, ‘அழகு கண்டு அகலிகையிடம் மோகம் கொண்ட இந்திரன் என்ன கதியானான்? தெரியுமே உமக்கு’ என்றேன். அவர், என் வாயை அடைக்கும் விதமாக, ‘உனக்கு ஒரு கௌதமன் இல்லையே சுந்தரி! அதை மறந்து பேசுகிறாயே’ என்றார். ஆமாம்! நான் கன்னி! அவரோ கலியாணம் செய்து கொள்ள அழைக்கிறார். கற்பை, பூஷணமென்று புகழ்கிறார். ஒருவேளை, என்னை மனைவியாகக் கொள்ளத்தான் விரும்புகிறாரோ, என்றெல்லாம் எண்ணம் பிறந்தது, ஆனால் இதை அவர் அப்பாவிடமல்லாவா கூறவேண்டும்; இப்படி என்னைத் தனியாகச் சந்தித்தா… முறை வேண்டாமா எதற்கும். கோபம் குறைந்தது; பரிதாபமாக இருந்தது – எனவே, நான் என் தந்தை, ஆதீனம் என்று கூறி என் நிலைமையை விளக்கினேன். அவர் கொஞ்சும் மொழியில், ‘நீ உன் தந்தை ஆதீனம். அவரோ சாஸ்திர ஆதீனம். சாஸ்திரமோ பிரம்ம குலமங்கையை க்ஷத்ரியன் மணம் செய்துகொள்ள இடம் தராது – என்ன செய்வது?” என்று கேட்டார். எனக்கு அவருடைய வாதம்கூட, சிறிது மகிழ்ச்சி தந்தது. ஆனால் அவருடைய செய்கை எனக்குக் கோபமூட்டியது. கடுமையாகவே “என்ன செய்வது – மனத்தை அடக்குவது – தர்மத்துக்குக் கட்டுப்படுவது – பாபதோஷத்துக்குப் பயந்து நடந்து கொள்வது” என்று சொன்னேன். நான் சொல்லச் சொல்ல அவர் என்னை நெருங்கி, “ஏட்டுச் சுரை! எல்லாம் ஏட்டுச் சுரையடி எழிலரசி” என்று கூறிவிட்டு, கட்டிப் பிடித்தார் – “காட்டு முறை இது; வேண்டாம்” என்று கூறியபடி விலகினேன் – சுவரிலே கூட மோதிக் கொண்டேன் மேலே போக இடமுமில்லை; அவர் விடவுமில்லை. ‘ஐயோ’ என்று அலறினேன். ஆஹ! என்று புகழ்ந்தார். இதழை இதழ் தொட்டது; துடித்தேன் – ‘அட பாவி!’ என்று சபித்தேன்; ‘என் அன்பே’ என்ற சரசமொழி பேசி விட்டு…! அக்ரம்ம – என்று கூறியபடி என் பலம் கொண்ட மட்டும் தள்ளினேன். ஆனால் நான்தான் கால் இடறிக் கீழே வீழ்ந்தேன் – அழிந்தேன். நான் அழுத கண்களைத் துடைத்தபடி ‘பாவீ! பாதகா!’ என்று ஏசினேன். ‘அமிர்தம்! தேவாமிர்தம்!’ என்று அந்தப் பாவி பஜனை பாடிக் கொண்டிருந்தான். உள்ளே சென்று, படுக்கையில் புரண்டு புரண்டு அழுதேன். ‘சுந்தரி – சுந்தரி – சுந்தரி’ என்று விதவிதமாகக் கூறினார் – காலால் எட்டி உதைத்தேன் கதவை – உரத்த குரலில் சிரித்து விட்டு, வெளியே போய்விட்டார், இரத்தம் குடித்த புலி போல. நான்! நானா! நரகப் படுகுழியிலே தள்ளப்பட்ட நான் என்ன செய்வது? நான், யார் இனி! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிரதம பட்டாச்சாரியாரின் மகள் சுந்தரவல்லி, மன்னின் காமப்பசிக்குப் பலியாக்கப் பட்டுவிட்ட பாபியானாள்! என்ன செய்வது! ராஜ சர்ப்பம் தீண்டிவிட்டது – துடைக்க முடியாத கறை படிந்துவிட்டது.

அரசன், சாமான்யன் – சகல கலாவல்லவன், சாமான்யன், நல்லவன், கெட்டவன் என்று ஆட்வர்களை எப்படி வேண்டுமானாலும் நிலைமையையும் குணத்தையும் பிரித்துக் காட்டலாம். ஆனால் பெண்கள் விஷயத்திலே ஆடவர்கள் கொள்ளும் போக்கைக் கவனித்தாலோ, செச்சே! எல்லா ஆடவரும் ஒரே தரமாகத் தான் இருக்கிறார்கள். இந்த அரசன், நான் பந்து ஆடுவதைக் கண்டு மகிழ்ந்தவன் தான்! ‘பாப்பா, பாப்பா’ என்று கூப்பிட்டவன்தான்! இப்போது, காமப்பசி பிடித்து என்னை நாசம் செய்துவிட்டான், நிலைமையை மறந்து, இனி என் கதி?

மறுமுறை அந்த மாபாவியின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கலாகாது என்று தீர்மானித்தேன். அப்பா வருவதற்குள் என் அலங்கோலமான நிலைமையைத் திருத்திக் கொண்டேன் – தலைவலி – அதனால்தான் முகத்திலே மாறுதல் என்று தந்திரம் பேசினேன். அப்பா, மீனாட்சி கோயிலிலே வந்திருந்த பக்தர்களின் பெருமையைப் பற்றிப் பேசிக் கொண்டே, பிரசாத வகைகளை வைத்தார். ‘அம்பிகே! என்னை ஏங்கினேன். அப்பா, வேதாந்த விகாரத்தில் ஈடுபட்டார் – வேதனையில் நான் மூழ்கிக் கிடந்தேன். வேட்டைக்காரன் அரண்மனையில் ‘தர்பார்’ நடத்தியிருப்பான்! ஊரார்? அவர்களுக்கு என்ன…

மறுபடியும் மறுபடியும் புலி வந்தது! நான் என் கோபத்தையும், வெறுப்பையும் வெளிப்படையாகக் காட்டினால், அப்பா என்னவென்று கேட்பாரே – அதனால், நடிக்க வேண்டி நேரிட்டது. அப்பா இல்லாத சமயங்களிலேயோ, அப்பப்பா! அரசனாகவா இருந்தான்; சித்ரவதை செய்தான். செந்தேனே என்று அவன் கொஞ்சுவது கருந்தேள் கொட்டுவது போலிருந்தது. சரி, இனி, நிலைமையை வேறுவிதமாகவாகிலும் சரிப்படுத்திக் கொண்டாக வேண்டும் என்று எண்ணி, திருமணப் பேச்சைத் துவக்கினேன் – அதற்குத் தடை ஏது என்றான் – அந்த ஏற்பாட்டைத் துரிதப்படுத்தச் சொன்னேன். அவன் அதற்காக ‘அச்சாரம்’ பெற்ற வண்ணம் இருந்தான்; உரிமையோடு பெறலானான்; நான் என்ன செய்வேன். இனிப்பு பண்டம் கசக்கலாயிற்று; பால் புளித்தது; பசி குறைந்தது! பாதகன், எனக்குப் ‘பரிசு’ தந்துவிட்டான். நான் கருவுற்றேன் – அவன் சொல்லத்தான் அதையும் அறிந்து கொண்டேன். பயத்தால் முகம் வெளுத்தது. அப்பா, இதைக்கண்டு கொண்டார். ‘ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை’ என்ற பதில் எத்தனை நாளைக்குப் பலனளிக்கும்? உண்மையைக் கூற வேண்டியதாகிவிட்டது.

“சுந்தரி! ஏன் உன் முகம் சோபிதமிழந்து கிடக்கிறது. கசங்கிய தாமரை போலாகி இருக்க என்னம்மா காரணம்?”

“ஒன்றுமில்லையப்பா?”

“என்னம்மா ஒன்றுமில்லை தேகாந்தி மங்கிக் காட்டுகிறது. விழி சதா, மிரட்சி கொண்டபடி இருக்கிறது. இரவு தூங்குவதில்லை சரியா மனதிலே, உனக்கென்னம்மா விசாரம்?”

“அப்பா! என்னை, வேதனைக்காளாக்காதீர்…”

“பைத்தியமே! காரணம் கூறாமல் கலங்கி நிற்கிறாயே. கண்களிலே நீர்… என்னம்மா…”

“அப்பா! நான் ஓர் பாபி!”

“பாபியா! பைத்தியமே! பித்தமா உனக்கு?”

“பித்தனின் காமப்பசிக்கு இரையான பேதையப்பா. நான்… படுகுழியில் தள்ளப்பட்டேன்… பாவியால்…”

“காமப்பசி! பலி! படுகுழி! என்னம்மா பிதற்றுகிறாய்?”

“ஐயோ! அப்பா! நான் எப்படிக் கூறுவேன்… என்னை… மன்னன்… எவ்வளவோ தடுத்தும்… பலாத்காரமாக”,

“சிவ, சிவ! என்ன பாபம் – என்ன கர்மம் இது! திருமலையா இத்தீய செயலைச் செய்தான்… அழியாத அபகீர்த்தியை உண்டாக்கி விட்டான் – என் குலக் கொழுந்தைக் கெடுத்தானா மகளைக் கெடுத்தானா மாபாவி – அடே, பாதகா! வஞ்சகா! பஞ்சமா பாதகம் செய்யும் வஞ்சகா! என் குடும்பத்தைக் கெடுத்தாய் – உன் கையிலே ஒரு கத்தி கிடைக்கவில்லையா – அவனைக் கொல்ல? உன்னால் முடியாவிட்டாலும், நீ செத்திருக்கலாமே! என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்… என் குலப்பெருமை, குடும்பப் பெருமை, எல்லாம் போயிற்று! தேவி! எப்படி இந்தத் தீயகாரியம் நடைபெற அனுமதித்தாய்! உன்னைத் தொழுது வரும் எனக்கா, இந்த அபகீர்த்தி! என் மகள், விபசாரி… கற்பழிந்தவள்…”

“அப்பா! அந்தக் கபடன், என்னைக் கலியாணம் செய்து கொள்ளவும் சம்மதம் என்று பேசுகிறான்.”

“உரக்கப் பேசாதடி! புத்தி யுக்தியற்ற பேதையே! கலியாணமாம் – ஜாதி; ஆசாரம் – சாஸ்திரம் – எல்லாம் என்ன ஆவது?…”

“இப்போது எல்லாம் நாசமாகித்தான் போயிற்று…”

“திருமலை! உன்னைப் பழிவாங்காதிருக்கப் போவதில்லை – நாடாளும் உன்னை, நான் நாசமாக்காவிட்டால், என் பெயர் சந்திரசேகர பட்டர் அல்ல. மமதை கொண்டு, வேதிச்ய குலம் என்றும் பாராமல், உன் நண்பனென்றும் யோசிக்காமல், தேவி மீனாட்சி கோவில் திருப்பணி செய்யும் பட்டர் என்பதையும் பார்க்காமல், என் மகளைக் கெடுத்தாய்! உன்னை நான் பழி வாங்காமுன்னம், ஊண் உறக்கம் கொள்ளேன் – இது சத்தியம் தேவி மீதானை – உன்னைத் தொலைத்துவிட்டு மறுகாரியம் பார்க்கிறேன்.

தேவி கோவிலுக்கு வா, தெளிவற்ற பெண்ணே! ஆலயம் வா! பக்தர்களை அழைக்கிறேன்! உன்னை மன்னன் கெடுத்த பாபக் கிருத்யத்தை எடுத்துக்கூறி, பாபிக்கு என்ன தண்டனை என்று கேட்கிறேன். கற்பழிக்கும் காதகனையா, காவலனாகக் கொள்கிறீர் என்று கேட்கிறேன் – கல்மனம் கொண்டவனும் கண்ணீர் விடாமலிருக்க முடியாதே! கல்லால் அடித்துக் கொல்வர், காவலனாக உள்ள காதகனை!

“சொல்லடியை நாம் தாங்க வேண்டுமே! ஊர் மக்கள், இழித்தும் பழித்தும் பேசுவரே…”

“ஆமாம்… அதைக் கேட்டுக் சகிக்க முடியாதே… ஆத்திரப் பட்டுப் பயன் இல்லை… ஆனால் என் அடிவயிற்றில் நெருப்பைக் கொட்டிய அக்கிரமக்காரனைச் சும்மா விடுவது இல்லை – ஆமாம். என்னம்மா? ஏன் ஐயோ, அப்பா – என்ன?”

“அடி வயிற்றிலே ஒருவிதமான வலி அப்பா!”

“வலியா?”

“பாப மூட்டையைச் சுமக்கிறேன்.”

“பரமேஸ்வரா! ஏனேப்பா இந்தச் சோதனை? நான் செய்த பாபம் என்னவோ? தேவி! தேவி!…”
இதற்குமேல், தந்தையும் மகளும் என்ன பேச முடியும்?

அவர் தலைதலையென்ற அடித்துக் கொண்டு அழுதார் – நான் என்ன கூறிச் சமாதானப்படுத்துவேன்.

நான் துணிந்துவிட்டேன் இனி நான் வாழமுடியாதவள் என் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய்விட்டது ஆனால், என் உயிரைப் போக்கிக் கொள்ளவா முடியாது!

மானம் போயிற்று. பறித்தவனோ மன்னன்! ‘மணம் செய்து கொள்’ என்று வலியுறுத்தலாம்; மக்களிடம் முறையிடலாம். அந்தப்புரத்தில் போய்ச் சேரலாம். ஆனால் அப்பாவோ, சாஸ்திர விரோதம் என்கிறார். ஆகவே, நான் இனி பிழைத்திருக்க முடியாது. செத்தாக வேண்டும். குடும்பத்துக்கு இழிவைத் தராதிருக்க வேண்டுமானால், சாகத்தான் வேண்டும்.

அப்பாவிடம் வாதாடினேன் – திருமணத்துக்கு. மன்னன் எப்படியும் ஒப்புக் கொள்வாரப்பா என்று கெஞ்சினேன் – அவர், வெந்த புண்ணிலே வேலைச் சொருகாதேடி என்று கொக்கரித்தார். பெண்ணின் வாழ்வு பெரிதா, சாஸ்திர சம்பிரதாயம் பெரிதா என்று கேட்கத் துடித்தேன். நான், அழுகிய பழம், அப்பாவுக்கு அந்த நாற்றம் குடையும்போது, நான் வாதாடுவது வேதனையாகத் தானே இருக்கும். அகவே சாவு தவிர வேறு மார்க்கம் இல்லை ஆமாம், நான் சாகத்தான் வேண்டும். விஷம்! சாவு!! வேறு வழியில்லை.

என் மகள் மாண்டு போனாள் – அந்த இரகசியமும் அவளோடு, மண்ணோடு மண்ணாகப் புதைந்து போய்விட்டது. ஆனால் என் மனம்! நான் கோயில் அர்ச்சகன் என் மூலம்தான் எண்ணற்றவர்கள், தேவியின் அருளைப் பெறுகிறார்கள். ஆனால் தேவி எனக்கு அளித்தது? ஊரெல்லாம்தான் புகழ்ந்தது சுந்தரியின் அழகை! மன்னன் காட்டிய பரிவு, பலருக்குப் பொறாமைத் தீயைக்கூட மூட்டிவிட்டது. அந்தப் பாவி, என் மகளைக் கொன்றான். மாரடைப்பு என்று ஊராருக்குக் கூறினேன். ஆனால் என் உள்ளம் அறியுமே! விஷமருந்திச் செத்தாள் என் மகள்! பாதகன், என்ன காரியம் செய்துவிட்டான்! “சபலம்? ஆமாம், நடந்தது நடந்துவிட்டது. என்னையும் அறியாமல் நேரிட்டுவிட்டது. அவள் அழகு என் அறிவை அழித்து விட்டது. அந்தணரே! இனி அதுபற்றி பேசிப் பயனில்லை. நிலைமையை, நெஞ்சிலே கபடமின்றிக் கூறிவிட்டேன். நீர் மதியூகி! வேறென்ன சொல்ல – அவ்வளவுதான்” – இப்படிப் பேசினான். என் மகளை இரை கொண்ட காமாந்தகாரன். அவளைத் திருமணம் செய்து கொள்வானாம் கைவிடமாட்டானாம்! வேறு ஏதாகிலும் ஏற்பாடு செய்ய வேண்டுமென்றாலும் தயாராம்! இந்த மண்டலத்திலேயும், எந்த மண்டலத்திலேயும் உள்ள மறையவர்குலத்திலேயும் எனக்குப் பெரும்பழியைத் தேடிக்கொள்வதா? எப்படிச் சம்மதிக்க முடியும் திருமணத்துக்கு.

சுந்தரியும், திருமணம், திருமணம் என்று வாதாடினாள். அவளுக்கு என்ன தெரியும், சாஸ்திர சம்பிரதாய மகிமையும் மேன்மையும்? வேதிய குலம் முழுவதும் என்னை வெறுக்கும், கண்டிக்கும், சபிக்கும். இதை எண்ணித் தானே திருமணம் கூடாது என்றேன். ஒரு வேளை, சுந்தரியைத் திருமணம் செய்து கொண்டு சுகமான வாழ்வளித்து இருக்கக் கூடும் மன்னன்! தங்கப் பல்லக்கிலே செல்லும் அந்தஸ்து கிடைத்திருக்கும் மகளுக்கு, ஆனால் நான்? சண்டாளன் என்றல்லவா தள்ளப்பட்டிருப்பேன். கேவலமாகத்தானே கதிருயிருப்பர்! இதற்காகத்தான், மன்னனை சாதாசர்வகாலம் வீட்டிற்கு வரவழைத்தபடி இருந்தான் போலும் என்று இழிமொழி பேசுவர். ஏற்கெனவே ஏதோ ஓர்விதமான வதந்தி பரவித்தான், வம்பளந்தார்கள் விஷமக்காரர்கள். அன்று கைலாசநாத பட்டரும், கனகசபேசபட்டரும் பேசியது ஒரு தினுசாக இருந்தது. ஏன் அவ்விதம் பேசினார்கள் என்பது பிறகல்லவா புரிந்தது. பித்துக்குளிகள் ஏதோ பிதற்றுகிறார்கள் என்று, நானோ ஏமாளி, எண்ணிக் கொண்டிருந்தேன். அப்போ.

“சௌக்கியந்தானே, ஸ்வாமிகளே!”

“இருக்கேன்… ஏன்…”

“கேட்டேன் ஸ்வாமி! லோகாசார முறைப்படி…”

“சந்தோஷம்… வரட்டுமோ”

“ஆஹா! நான் தடை செய்ததை க்ஷமிக்கணும் – ராஜா இந்நேரம் தங்க தரிசனத்துக்காகத் தவித்துக் கொண்டிருப்பார் – போய் வாரும்…”

“ஒய்! நீர் பேசுகிறதைக் கவனிச்சா, ஏதோ என்னைக் கேலி செய்கிற மாதிரியாகத் தோன்றதே, என்ன விஷயம்…”

“உம்!”

“ஓய்! ஏன் பெருமூச்சு விட்றேள்…”

“பட்டாச்சாரியாருக்கு என்னங்காணும் குறை! ராஜன் அவர் வீட்டு வாசல்லே, காத்திண்டிருக்கான், சதாகாலமும்.”

“வேத வேதாந்தத்தின் இரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கம்.”

“ஆமாம் – தேவரும் மூவரும் கூடத்தானே அந்த இரகசியத்துக்காக…”

“படாதபாடு பட்டிருந்தாளேன்னோ…”

“அட, ஏன் ஒய்! சும்மா, சுத்தி வளைச்சி பேசிண்டிருக்கேள் – வேதமாம் – வேதாந்தமாம் – இரகசியமாம்.”

“ஓய்! நீர் ஏன் இவ்வளவு கோபிக்கிறீர்?”

“ஒண்ணுமில்லே, ஸ்வாமிகளே! புறப்படும், புறப்படும்… ராஜா, கோபிக்கப் போறார்…”

“கோபிக்கமாட்டார் ஒய்! பட்டாச்சாரியார், ஆத்துக்குப் போகிறபோது, வழியிலே பேசிண்டிருந்தாலே, தாமதமாச்சின்னு தெரிஞ்சா உமக்கு, ராஜா சன்மானம் செய்வார் ஒய்! பிரதி தினமும், இந்தக் கைங்கரியத்தைச் செய்திண்டிருக்கணும்னுகூடச் சொல்வார்…”

“ஒய்! என்ன இது – குறும்பு – போக்கிரித்தனம் – என்ன பேசறேள்? ஏதோ பூடகமா இருக்கு.”

“ஒண்ணுமில்லை ஸ்வாமி! இவன் ஒரு வயத்தெரிச்சல் பிடித்த ஆசாமியோன்னோ? உமக்கு ‘ராஜக்ருபை’ கிடைத்திருப் பதாலே பொறாமை கொண்டு பேசறான்.”

“ராஜக்ருபை, பட்டாச்சாரி ஸ்வாமிகளோட ஜாதகப் பலன் அல்ல. குமாரி சுந்தரியின் ஜாதகப்பலன் தந்ததாக்கும் இந்தக் க்ருபை.”

இப்படி எல்லாம் பேசினாளே பட்டர் கூட்டம்; அதை எல்லாம் எண்ணிக் கொண்டா, என் மனம் படுகிறபாடு, அடா அடா! சர்வேஸ்ரா! மகளை இழந்தேன் – செல்வத்தை இழந்தேன். மானம் போகாதிருப்பதற்குக் காரணம், விஷயத்தை வெளியே பேசாமல், ‘நம்மவா’ இருப்பதாலேதான் – அவள் மாண்டு போனதும் ஒருவிதத்திலே நல்லதுதான்… இருந்தால் என் நிலை என்ன ஆகும்? மீனாட்சிகோயில் பட்டருக்கு, மகள் மாரடைப்பால் இறந்து விட்டதாலே மனக்கவலை என்று பலரும் பேசுகிறார்கள். அவனோ! நடந்தது நடந்துவிட்டது! நாடாள்ப வனல்லவா… தைரியமாக… அலட்சியமாக… ஆணவகமாகக் கூறுகிறான்… “நடந்தது நடந்துவிட்டது” என்று. இனி நடக்க வேண்டியது ஒன்றுமே இல்லை என்பது அவன் நினைப்பு… யார் என்ன செய்ய முடியும் என்ற அகம்பாவம்… ஆமாம்… நம்மால் என்ன செய்ய முடிந்தது… இதுவரையில்… அவனைக் காணும் போதும் கடுங்கோபம் பிறக்கிறது… பிறந்தது? பழி பாவத்துக்கு அஞ்சாத பாவி, கெம்பீரமாக உலவுகிறான் ஊரிலே, கோலகலமாகக்கொலு நடத்துகிறான்… அந்தப்புரத்திலே, மாதர்களின் கூட்டம் இருப்பதுகேட்டு மக்கள் ஒருவிதமாகப் பேசுகிறார்கள், என்று சொன்னால் அவன் வாய்க்கொழுப்பு ‘ஏன் பட்டரே மக்களுக்கு ராமாயணம் தெரியாதோ!அவருடைய அந்தஸ்துக்கு அவர் அறுபதினாயிரம் கொண்டார் – ஏதோ சக்தியானு சாரம் நமக்கு, என்று கூறக் கூடாதோ?’ என்று கேலி பேசுகிறான் – கெடுமதியாளன்.

சுந்தரி, ஒரு ராஜகுமாரியா, அவள் சார்பாக ரதகஜதுரக பதாதிகள் கிளம்ப அல்லது நான் படிக்கும் புண்யகதைகளிலே கூறப்படுவது போல, சபிக்கக் கூடிய காலமா இது கல்லாய்ப் போக – புல்லாய்ப் போக, – புழுவாய்ப்போக என்று சாபம் கொடுக்க… என்ன செய்வது… எரியும் கொப்பரை போலுள்ள என் மனதுக்கு, எப்போதுதான் சாந்தி கிடைக்கும்… மன்னனை மாபாவி என்று கூற மனம் துடிக்கிறது. உண்மையைக் கூறவோ முடியவில்லை மானம் தடுக்கிறது பழி வாங்கியாக வேண்டும் ஆனால், எப்படி! எப்படி! ஆமாம். லிங்கண்ணாவைத்தான் கருவியாக்க வேண்டும்.

“லிங்கண்ணா! என் மகள், மாரடைப்பால் சாகவில்லை; மாபாவிசெய்த அக்ரமத்தால் இறந்தாள் என்று சொன்னால் செச்சே! சொல்லக்கூடாது கேவலமாகக் கருதுவான். லிங்கண்ணாவுக்கு மன்னன் மீது கோபம் இருக்கிறது, நிரம்ப. அவனை ஏவி விட்டால், மன்னனை ஒழிக்கலாம். மன்னனை ஒழிக்கா முன்பு என் மனமோ சாந்தி அடையாது. கோயில் பட்டாச்சாரிக்கு மன்னன் மீது கோபம் பிறக்கக் காரணம் என்ன என்று யோசிப் பானோ இந்த லிங்கண்ணா? யோசிக்க விடக் கூடாது. என்ன செய்யலாம்? எதையாவது செய்தாக வேண்டும்! பாம்பாகி அவனைப் பிடுங்கிட வேண்டும், எப்படி? திருமலையைத் தீர்த்துக் கட்டியாக வேண்டும், காரணம் வெளியே தெரியக் கூடாது. லிங்கண்ணாவும் அறிந்து கொள்ளக் கூடாது. லிங்கண்ணாவின் மனத்தை அறிந்து, தூபமிட வேண்டும். மன்னன், மதியிலி! என் மகளின் மரணத்துக்குப் பிறகு நான் பழைய சம்பவத்தை மறந்தே போனேன் என்று எண்ணி விட்டான். என் மனத்திலே மூண்ட தீ, அணையக் கூடியதா! நானோ பக்குவமாகத்தான் நடந்து கொள்கிறேன். அவனை நேரிடையாக எதிர்த்து ஒழிக்க முடியாது; மாமரத்தின் பின்புறமிருந்து தான் இந்த வாலியைக் கொன்றாக வேண்டும் சமயம் வாய்க்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யோசனை உதயமாகிறது. ஆனால் மறுநாள், அத பைத்தியக்கார யோசனை என்று புரிகிறது தெளிவு பிறக்கவில்லை. சுந்தரியின் உருவம், நித்த நித்தம் என்முன் தெரிகிறது! அப்பா! ஆகமம் சாஸ்திரம் என்றீர். இல்லையானால் நான் அந்தப்புரம் சென்று சுகப்பட்டு இருக்கக் கூடும் என்று அழுகுரலில் கூறுகிறது அந்த உருவம். எப்படிச் சம்மதிக்க முடியும், அவள் சொன்ன நீச ஏற்பாட்டுக்கு? மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டாச்சாரியே வர்ணாஸ்வரம விதியை, சனாதன தர்மத்தை, சாஸ்திர சம்பிரதாயத்தை மீறி நடந்தால், பிறகு, நமது குலப்பெருமை, மதமகிமை நிர்மூலமாகிப் போகுமே! ஏற்கெனவே கிருஸ்தவப் பாதிரிகள், மக்கள் மனத்தை மயக்க வருகிறார்கள்! என் மகளை நான் ‘ஜாதிகெட’ விட்டிருந்தால், போதுமே! மதமே மாண்டு போகும்! தேவி கோவிலிலிருந்து நான் துரத்தப்பட்டுமிருப்பேன். ஆமாம் அவள் செத்தாள் – வேறு வழி கிடையாது ஆனால் இவன் – இவனைத் தொலைத்தாக வேண்டுமே! எப்படி? அதுதானே இன்னம் புரியவில்øல். மன்னன் நாஸ்திகனாகி வருகிறான்; தேவியை மறந்துவிட்டான்; புராதன மார்க்கத்தைப் பழிக்கிறான் என்பதை மெள்ள மெள்ளப் பலரிடம் கூறிவருகிறேன்.

பரவுகிறது இந்தச் சேதி. மக்கள் மனம் பதறுகிறது. இது நல்ல, சுபசகுனம்! ஏன்! அந்தப்புர மாதர்கள்கூட, என் தூபத்தால் மன்னனுக்கு விரோதமாகக் கிளம்பத் தயாராகிவிட்டனர். அதனால்தானே, அந்தப்புரத்திலேயே அரசனைக் குத்திக் கொல்ல ஏற்பாடு செய்தேன் – அரசனின் அபிமான ஸ்திரிகளும் சம்மதித்தனர் – அந்த மடையர்களால் முடியவில்லை, மன்னனைக் கொல்ல, வேறு ஏற்பாடு செய்தாக வேண்டும் – அதுவும் லிங்கண்ணா மூலமாகத் தான்! பார்ப்போம், பழி வாங்காது விடக்கூடாது – முடியாது போனால் முப்புரியா இது?… எப்புரியிலும் நம்மவர் போட்ட திட்டம் தோற்றது கிடையாது. மதுரை மண்டலத்திலே மட்டும், நமது முறை தோற்றா போகும். இல்லை, இல்லை, வெற்றிகிட்டும்! லிங்கண்ணா வெறி கொண்ட
வனாகவே காணப்படுகிறான். ஒரு நல்ல திட்டம் தயாரித்துக் கொண்டு, அவன் உதவியைத் தேடினால் வெற்றிதான். திட்டம் வேண்டும் – திட்டம் வேண்டும்.

லிங்கண்ணா

மோசமாகிவிட்டது, மன்னன் போக்கு. இந்தக் கிருஸ்தவப் பாதிரிகளுக்கு இப்படியா இடம் தருவது! மதுரை கொந்தளிக் கிறது; மன்னன் ஏதும் நேரிடாது என்று இருக்கிறான், மமதையுடன். என்னிடம் துளியாவது மதிப்பு இருக்கிறதா! என்ன செய்துவிட முடியும் என்ற தைரியம்.

ராஜ சபையிலேயே நம்மையெல்லாம் அலட்சியப் படுத்துகிறான். எவ்வளவு தைரியமாக மத விஷயத்தைக் கண்டிக்கிறான்! இந்த மண்டலத்திலும், வேறு மண்டலங்களிலும், மறையவர்களிடம் மன்னர்கள் பயபக்தி விசுவாசத்துடன் நடந்து கொள்கிறார்கள். திருமலை மட்டும் தானே தர்க்கிக்கிறான். தர்க்கிப்பது மட்டுமா-அன்று ஒருநாள், சந்திரசேகர பட்டரிடம் சில புதிய கேள்விகள். பாதிரி தயாரித்தார் – படிக்கிறேன், கேளுங்கள் – பட்டரே! பதில் கூறிட முடியுமானால் நல்லது. கவனமாகக் கேட்க வேண்டும் என்று கூறி என் எதிரிலேயே அந்தப் பிராமணனை எவ்வளவு கேவலப்படுத்தி விட்டான் – மதத்தையும் பழித்தான்.

“ஓய்! பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்தவர் கடவுள் தானே!”

“ஆமாம் – சந்தேகமென்ன – வேதப் பிராமணாதிகள் அதைத்தான் வலியுறுத்துகின்றன – உபநிஷத்தும்…”

“போதுமய்ய… நான்தான் ஒப்புக் கொள்கிறேனே. ஒப்புக் கொள்ளும் விஷயத்துக்கு ஓராயிரம் ஆதாரம் ஏன்?”

“பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்தான் கடவுள் – உம்மையும் என்னையும் – ஊராள்வோனையும் உழவனையும் – ஈ எறும்பு முதலாய எண்பத்தி நான்கு கோடி ஜீவராசிகளையும் சிருஷ்டித்தான்…”

“சிருஷ்டித்தானல்லவா? இதிலே மக்கள், ஆண்டவனின் குழந்தைகள்தானே…”

“ஆமாம்”

“அப்படி இருக்க, இதிலே, உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்று பேதம் ஏன்?”

“அது சாஸ்திரம்”

“சாஸ்திரம்! சர்வேஸ்வரனுடைய வேலையைக் கெடுப்பதா சாஸ்திரத்தின் இலட்சணம்?”

“இல்லை.”

“என்ன, இல்லை… இல்லை. நாலு ஜாதிக்கு, என்ன காரணம் கூறுகிறார்கள்…?”

“பிரம்மனின் முகத்தில்…”

“முகத்திலே, தோளிலே, துடையிலே, பாதத்திலே, இப்படிக் கூறுகிறார்களே, அது, இந்த நாட்டுக்கு மட்டும் இருக்கிறதே தவிர, உலகிலே மற்ற நாடுகளிலே இல்லையே, ஏன்?”
“தெரியவில்லை…”

“விசாரிக்கப்படாதோ…”

“யாரை…”

“விஷயம் தெரிந்தவர்களை…” என்று பேசிவிட்டு ஒரு பேய்ச் சிரிப்பு சிரித்தபோது, எனக்கு வந்த கோபம், கட்டாரி மீதே கை சென்றது. ஊர் மக்கள், இவனை ஒழித்துக் கட்டுபவர்களை வாழ்த்துவார்கள். அவ்வளவு வெறுப்பு வேந்தனிடம். யாரும் தன்னை ஏதும் செய்ய முடியாது என்ற அகம்பாவம். யாரும் ஒன்றும் செய்ய முடியாதா? நான் என்ன, மரமா! வாள் ஏந்தி அறியாதவனா! இந்த மண்டலத்தையே ஆளும் வல்லமை உண்டு! எனக்கு! ஆள நினைத்தால்தான் என்ன தவறு! அன்னியருக்கு இடமளிக்கும் இந்த மன்னனை ஒழித்துவிட்டு, நானே மன்னனானால், ஒரு தவறும் இல்லை, பதவி ஆசை என்பார்கள் – ராஜத் துரோகம் என்று சிலர் தூற்றுவார்கள். ஆனால், மக்களுடைய மனம், எனக்குத் தெரியும் நன்றாக, மாபாவியை ஒழித்தேன் என்று கூடத் தைரியமாகக் கூறிவிடலாம். ஆனால் அவ்வளவு வெளிப்படையாகச் செய்வது, ஒரு வேளை ஆபத்திலே கொண்டு போய்ச் சேர்க்கக் கூடும். வேறுவிதமாகத்தான் ஏற்பாடு செய்ய வேண்டும். நல்ல வேளையாக, இந்த பட்டர் கிடைத்திருக்கிறார். பாவம், வெளியே சொல்ல முடியாத வேதனை அந்த ஆசாமிக்கு. இந்த நிலையில் உள்ளவரைத் தான் தக்க கருவியாக்க வேண்டும். அவருக்கு உள்ள வேதனையின் காரணத்தை அறிந்ததாகக் காட்டிக் கொள்ளக் கூடாது. அன்று, மெள்ள ‘ஒத்திகை’ பார்த்தேன் நேர்த்தியாகவே இருந்தது; பட்டரின் ஒத்தாசை நிச்சயம் கிடைக்கும் என்பதிலே சந்தேகமில்லை; மக்கள் ஏதாகிலும் சந்தேகப் பட்டாலும், பட்டர் அவர்களைச் சரிப்படுத்திவிடுவார்! அவர் என்ன சாமான்யமானவரா? தேவி சன்னதியில் பட்டாச்சாரியார் அவர் வாக்கு சத்தியவாக்கு என்றுதான் யாரும் எண்ணுவார்கள்.

“மன்னனுக்கு மதி கூறுவதைவிட, மணலைக் கயிறாகத் திரித்து விடலாம் போலிருக்கிறது; மறையவரே! விதண்டாவதம், பேசுவதெல்லாம்; செய்வது, மகா மோசமான, மட்டரமான காரியம்…”

“மன்னன்! – ராஜா -!”

“மரப் பொம்மைகளா மக்கள்?”

“மன்னன் என்றால், எதுவும் செய்யலாம் என்றா எண்ணுவார்கள்? அந்தக் காலம் மலையேறிவிட்டது.”

“மதுரையிலா?”

“ஏன்? இங்கு மாவீரர் இல்லை என்று எண்ணுகிறீரா?”

“லிங்கண்ணா! வீரருக்கு இங்கு என்ன முறை? உமது வீரதீரப் பராக்கிரமத்தை நான் அறியமாட்டேனா?”

“ஆனால்…”

“ஆனால் என்று இழுக்கக் காரணம் அந்தணரே! என்ன கூறும்? ராஜ விஸ்வாசம் பலமான பாசமல்லவா?”

“ஆமாம் – ஆனால் ராஜபதவி மிகவும் பொறுப்பானது அல்லவது?”

“ஆமாம் – தடை என்ன? – தர்மசாஸ்திரம் தவறாமல் நடப்பதுதான் ராஜ தர்மம்…”

“தவறினால்…”

“ஆண்டவன் தண்டிப்பார்… ஆண்டவன் அதற்காகத் தான் மக்களுக்கு அறிவையும் ஆற்றலையும் தந்திருக்கிறார். கடிக்க வரும் பாம்பை எல்லாம் ஆண்டவன் துரத்திக் கொண்டு வந்து அடிக்க – வேண்டுமா நாம் என்ன மண்ணாங்கட்டிகளா?”

“ஏது லிங்கண்ணா! புரட்சிப் பொறி வீசுகிறது. உன் பேச்சில்.”

“பட்டரே! மன்னரிடம் கூறிவிடும் – லிங்கண்ணா உமது நடத்தையைப் பலமாகக் கண்டிக்கிறான் – மக்கள் ஆத்திரம் கொண்டுள்ளனர் – அக்கிரமத்தைச் சகிக்க மாட்டார்கள் என்று கூறிவிடும்.”
“ஏன்? வேறு யார் கூறுவது? உமக்குத் தெரியவில்லையா? மன்னன் நமது புராதன மார்க்கத்தையே நாசமாக்கத் துணிகிறான், பரங்கிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு என்பது…”
“தெரிகிறது – மனம் வேகிறது அந்த மாபாவி செய்யும் காரியத்தை நினைத்தால்” என்றல்லவா அன்று பேசினார். பட்டாச்சாரிக்கு மனம் எரிமலையாகிக் கிடக்கிறது. அந்த நெருப்புக் குழம்பிலே தள்ளிப் பொசுக்கிவிடலாம் மன்னனை. சரியான சமயம் வாய்க்க வேண்டும். திட்டம் தீட்டியபடிதான் இருப்பார் பட்டாசாரி! பழி வாங்கித் தீர வேண்டும் என்ற எண்ணம் அணையாத தீயாக இருக்கிறது அவர் மனத்தில்.

திருமலை

பணம் இல்லாமல், எவ்வளவு திட்டங்கள் பாழாகிவிடுகின்றன. நானும் கொஞ்சம் வீண் செலவு செய்துவிட்டிருக்கிறேன். அந்தப்புரத்தில் மட்டும், தேவிமார் முன்னூறு – பரிவாரம் பல நூறு – பொன் பாழாகிறது. இவ்வளவு அழகிகளும், என் சுந்தரவல்லியின் கால் தூசுக்கு இணையாக மாட்டார்கள்! அந்தப் பொற்கொடியைப் பெற அரும்பாடுபட்டேன் – பெற்றேன் – ஆனால் நிரந்தர விருந்தாகவில்லை. பழைய போதை இந்தப் பட்டாச்சாரிக்கு. பாதிரிமார்கள்தான் பட்டவர்த்தனமாகக் கூறினார்களே, ‘வைதீக வெறி, லேசில் போகாது’ என்று, எவ்வளவு வாதாடினேன், சுந்தரியைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று. பிரளயம் வந்துவிடும் என்று பீதி கொண்டாள், அவள் அழுதபோதெல்லாம், அஞ்சிய போதெல்லாம், தைரியம் சொன்னேன், உன்னை என் தேவியாக்கிக் கொள்கிறேன் என்று. சில நாட்களில் இந்தப் பட்டாச்சாரியின் பித்தம் தெளிந்து விடும். திரு மணத்துக்குச் சம்மத்திப்பான் என்று எண்ணினேன். அதற்காகவே, பழைய சாஸ்திர சம்பிரதாயங்களிலே உள்ள அர்த்தமற்ற, பொருத்தமற்ற விஷயங்களை எல்லாம், பட்டாச்சாரியிடமே கூறினேன் – வேடிக்கையாகப் பேசுவது போல. எதற்கும் அசையவில்லை. பாபம்! சுந்தரி திடீரென்று மாண்டுபோனாள். மாரடைப்பு என்று புளுகினான். இருக்காது. தற்கொலையாகத்தான் இருக்க வேண்டும். பேதைப் பெண் பீதி கொண்டுவிட்டாள். பட்டாச்சாரி, அவள் செத்ததோடு சம்பவத்தையே மறந்துவிட்டான். மகள் செத்தது கூட அவனுக்கு வருத்தமளிக்க வில்லை; ஜாதி கெடவில்லை என்று மகிழ்கிறான். ‘எல்லாம் விதி’ என்ற ஆறுதல்! என்மீது கோபம்கூட இல்லை. மகாராஜவைக் கருவியாக்கி பிரமன் தன் வேலையை முடித்துக் கொண்டான் என்று கூறி மனச்சாந்தி தேடிக் கொண்டான் மடையன். ஆனால் ‘ராஜபக்தி’ அபாரம் அவனுக்கு. இல்லாமலா, நான் பணமின்றி திண்டாடுவது தெரிந்து தேவி சன்னிதியில் உள்ள இரகசியச் சுரங்கத்திலே பெரும் பொற்குவியல் பேழைகளில் உள்ள இரகசியத்தைக் கூறினான்! பரம்பரை பரம்பரையாகச் சேர்க்கப் பட்ட பொன்! நல்ல சமயத்திலே உதவுகிறது. இன்றிரவு நடுநிசிப் பூஜையின்போது சென்று, எடுத்துவர வேண்டும். பட்டாச்சாரி நமக்காகக் காத்துக் கொண்டிருப்பான். எத்தனை பேழைகளோ! எவ்வளவு பொற்குவியலோ!

சந்திரசேகரப்பட்டர்

நடுநிசி! பக்தகோடிகளெல்லாம் போய்விட்டார்கள். பேராசைக்காரன், காமாந்தகாரன், என் மகளைக் கெடுத்துச் சாகடித்த காதகன் வரப்போகிறான். பேழைகள் எத்தனை! பொற்குவியல் எந்த அளவு இருக்கும் என்றல்லவா கேட்டான். வா, வா! சந்திரசேகரன் கட்டிய சமாதி தயாராக இருக்கிறது. இதோ லிங்கண்ணாவும், வீரர்களும், எனக்குத் துணையாக வந்துள்ளனர். புல்லேந்தும் கரம்தான். ஆனால் இன்று உன் உயிரைப் போக்கும் வலிமை இதற்கு!! வேதனை கோபம் வெட்கம், எது கிளம்பினால் தான் என்ன? மணியடிக்கும் இவன், நம்மை என்ன செய்ய முடியும் என்று இறுமாந்து கிடந்தான்! இதோ சவக்குழி தேவி கோயில் பட்டாச்சாரி வெட்டியிருக்கும் சவக்குழி! உள்ளே சென்று, பேழைகளைப் பார்த்து, வாய் பிளந்து நிற்கும்போது, இந்த விளக்குகள் அணைக்கப்படும்! இருள் சூழ்ந்து கொள்ளும், பிறகு, இந்தப் பெரும்பாறை – லிங்கண்ணா பலசாலி – இருவரும் சேர்ந்து சுரங்க வழியை இதனால் அடைத்து விட வேண்டும் உயிரோடு சமாதி – காற்று கிடையாது. பாறைக் கதவு தட்டிப் பயனில்லை, – உயிர் ஊசலாடும் – சித்திரவதை – அணு அணுவாக உயிர் கத்தறிக்கப் படும். பிணமாவான் பேயன்! லிங்கண்ணா, இதைத் தர்ம கைங்கரியம் என்றே எண்ணுகிறான். மதத்தைக் காப்பாற்ற மன்னனானாலும், அருமை மைந்தனானாலும், தாய் தகப்பனானாலும், சாஸ்திரம் அறிந்தவனாயிற்றே! நான் எதற்காகப் பழிதீர்த்துக் கொள்கிறேன் என்பது, நல்லவேளை, லிங்கண்ணாவுக்குத் தெரியாது. என் திட்டத்தை மெச்சினான். ஆமாம், அதோ மன்னன் – தேவி! உனக்குப் பலி! நரபலி! நரபலி! சுந்தரி, உன் தந்தை சாமான்யனல்ல – இதோ பார், வருகிறான், சாக…!

மதுரை பக்தர்கள்காலம் கலியானாலென்ன, அற்புதம் நடவாமலா போகும். நேற்று நடுஜாமப் பூஜையின்போது, நமது மன்னன் திருமலை, தேவியோடு ஐக்கியமாகிவிட்டாராம். தேவியின் மகிமையே மகிமை! திருமலைக்குக் கிடைத்த முக்தியே முக்தி. தேவியைத் தரிசித்தபடி நின்றாரம் மன்னர் நெடுநேரம். பட்டாச்சாரியார்கூட ஆச்சரியப்பட்டாராம். பாதிரிகளின் சகவாசத்தால், மன்னனுக்கு மத நம்பிக்கைக் குறைந்துவிட்டதாக எண்ணிக் கொண்டோமே, இவர் பக்திப் பரவசராகியல்லவா நிற்கிறார் என்று எண்ணி, இப்படிப் பட்ட ‘பக்திமானை’ பழித்தோமே என்று வருந்தினாராம். மன்னன் கண்மூடி கரம் கூப்பி, மனனம் செய்தவண்ணம் இருக்கும்போது பட்டாச்சாரியின் கண்களைப் பறித்துவிடும் படியான ஓர் ஜோதி தோன்றிற்றாம், அம்பாளிடமிருந்து, முகத்திலிருந்தா, காலிலிருந்தா என்று மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லையாம். ஜோதி தோன்றியதும் ‘பக்தா’ என்று தேவியின் குரல் கேட்டதாம்.‘வந்தேன்’ என்றாராம் திருமலை; அவ்வளவுதான்! மன்னன் ஜோதியில் கலந்து விட்டாராம்! என்னே, தேவியின் திருவருள்! என்னே, பக்தியின் பெருமை! திருமலை நாமம் வாழ்க! திவ்ய ஜோதி வாழ்க! தேவியின் நாமம் வாழ்க! திவ்ய ஜோதியில் கலந்த திருமலையான் திருநாமம் என்றென்றும் வாழ்க!

– திராவிட நாடு, 1952.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *