திருமதி. கிரேஸி எனும் நான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 26, 2021
பார்வையிட்டோர்: 2,045 
 

தன் அப்பா, அம்மாவினால் கைவிடப்பட்ட ஒரு மாதக் குழந்தையாய் இருந்த அவளுக்கு அந்த இடத்தில் கிடைத்த ஒரே நிம்மதி, “ஒரு தாய் பூனையும் அதன் ஆறு குட்டிகளுமே”. அந்த தாய் பூனை வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே மஞ்சள் தெளிக்கப்பட்டாற் போல வனப்பான தேகமுடையது. அதன் குட்டிகளில் மூன்று அதைப் போலவும், மற்றவை கருப்பு மற்றும் வெள்ளை கலந்தாற் போல கண்கவர் வண்ணத்திலும் காணப்பட்டது. ஒருவேளை இந்த மூன்று குட்டிகள் அப்பாவின் சாயலாக கூட இருக்கலாம், ஆனால் உண்மையில் அவற்றின் அப்பாவை அங்கு யாரும் கண்டதில்லை. இவையாவும் நடந்தேறும் இடம் ஒரு சிறிய தொழிற்சாலையாக இருந்தது.

அவளுக்கு இருந்த அந்த ஒரே நிம்மதியும் நெடுநாள் நீடிக்கவில்லை. அந்த தொழிற்சாலையில் இருந்த சில விதிகளால் அங்கிருந்த தாய் பூனையையும் , அவற்றின் குட்டிகளையும் அப்புறப்படுத்தவதற்கான வேலைகள் முடுக்கிவிடப்பட்டன. அதில் நான்கு குட்டிகள் எளிதாக அங்கு பணிபுரியும் வேலையாட்களால் பிடிக்கப்பட்டு சாக்கில் இடப்பட்டன. வெகுநேரம் நடந்தேறிய சடுகுடு ஆட்டத்திற்கு பின்னர் கம்பில் இடப்பட்ட சுறுக்கில் அகப்பட்டது தாய் பூனை. தன்னையையும் தன் செல்லங்களையும் பிடித்த அந்த கைகளை தாய் பூனை முடிந்தவரை கீறி இரத்தக்களரி ஆக்கியது. ஒரு ஆண் இல்லாத குடும்பத்துக்கு நேரும் இன்னல்களை அந்த தாய் பூனை அன்றே உணர்ந்தது. அவற்றை அப்புறப்படுத்தி அவற்றை நகரப் பகுதியில் விட்டனர் வேலையாட்கள். நல்லவேளை அந்த வேலையாட்களில் யாரும் சீனாவைச் சேர்ந்தவர் இல்லை போலும், அதனால் அவை ஐந்தும் முறையாய் உயிர் தப்பியது‌.

நம் ஒட்டுமொத்த நிம்மதியும் இந்த மனிதர்களால் பாழாய் போனதே என்று புலம்பியவாறு நடந்து வந்துகொண்டிருந்த அவளோ, “யார் கண்ணிலும் சிக்காமல் தப்பிவந்து, அங்கிருந்த பெட்டிகள் அடுக்கிவைக்கப்பட்ட கிடங்கில் தஞ்சமடைந்த இரண்டு பூனைக் குட்டிகளைக் கண்டதும்” உள்ளம் தாவிக் குதித்தது. உள்ளம் மட்டுமல்ல அவளுடைய நான்கு கால்களும் தான். அவள் பெயர் கிரேஸி. அவளின் செயல்பாடுகளும் துள்ளல்களும் பார்ப்பதற்கு கிரேஸியாய் இருப்பதால் என்னவோ அவளுக்கு அங்கிருந்த என் செக்யூரிட்டி நண்பர் “கிங் காங்” வைத்த பெயர் “கிரேஸி”. என் செக்யூரிட்டி நண்பரின் நடை கிங் காங்கை ஒத்திருந்ததால் அவருக்கு நான் வைத்த பெயர் “கிங் காங்”.

கிரேஸி மிகவும் சுறுசுறுப்பானவள். தனக்கு பிடித்தவர்களை கண்டதும் வாலாட்ட மறப்பதில்லை, மேலும் நன்றியுடன் துள்ளலும் அபாரமாகப் போடுவாள். அங்கிருந்த பூனைகளைப் போல இவளை அப்புறப்படுத்துவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. சமகாலத்தில் இவளைப் பிடிக்கவும் “மாமிசம் வைக்கப்பட்ட ஒருதட்டை இ்வள் உள்ளே நுழைந்தால் மூடிக்கொள்ளும் மாதிரியான ஒருபெட்டியை ஏற்பாடு செய்து” இவளுக்காக வைத்தனர். உடலெல்லாம் அறிவு கொண்ட இவளோ, அதை துச்சமாக மறுத்து இந்த ஏற்பாட்டை செய்தவனுக்கு தன் செய்கையால் காறித் துப்பினாள்.

தொழிற்சாலையில் வேலை செய்துவந்த “உண்மையான மனிதனுக்கான” மன அடையாளங்களைக் கொண்ட மூன்று நண்பர்கள், அந்த இரண்டு பச்சிளம் பூனைகளுக்கு உணவு வழங்கி அவற்றைக் காப்பாற்ற முயன்றனர். தாயைப் பிரிந்த துயரில் கடைசிவரை உணவை மறுத்து அதில் ஒன்றன் உயிர் பிரிந்தது. தாயின் உருவான மற்றொன்று தன் தாயின் போர் குணத்தைப் பெற்று, முட்டிமோதி சில மாதங்களில் மீண்டும் தன் தாயின் உருவிலே அச்சு அசலாய் அதே வனப்புடன் வளர்ந்திருந்தது. அது ஒன்று தான் கிரேஸியின் துணையும், அவளின் மன நிம்மதியும் கூட. நடுவில் அந்த ஒரு பூனையும் வேலையாட்களின் கையில் பிடிபட்டு இதற்கு முன்பு அவள் குடும்பம் விடப்பட்ட அதே இடத்தில் விடப்பட்டது. அது தன் குடும்பத்தை சந்தித்திருக்குமா? அப்படியே அவர்கள் உயிர் பிழைத்திருந்தாலும் இதையும் குடும்பத்தில் இணைத்திருப்பார்களா? என தெரியவில்லை. மனிதனைப் போலெல்லாம் அவர்கள் அத்தனை அரக்ககுணம் பெற்றிருக்க வாய்ப்பில்லை என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.

இப்பொழுது தனி மரமானாள் கிரேஸி. எனக்குப் பிராணிகள் என்றாலே ஒரு பயம். வெறும் பயம் மட்டுமல்ல, அவற்றைத் தொட்டாலும், பிடித்தாலும் என் கைகள் அவற்றை அடக்குவதாய் எண்ணி சிலிர்க்கும். அதனாலேயே சிறுவயதில் இருந்து அத்தனை பிராணிகளுக்கும் உணவிடுவேன், ரசிப்பேனே தவிர அவற்றைத் தொடமாட்டேன். அப்படியே தொட்டிருந்தாலும் சிறுவயதில் ஒருசிலமுறை ராமு என்னும் அமைதியான ஒருவனின் தலையை வருடிவிட்டு அவன் கண்கள் சொக்குவதை ரசித்திருப்பேன். அவனும் நன்றி சொல்வதைப் போல “ஹூம் ஹூம்” என்று சினுங்குவான்.

முன்பு அந்த தொழிற்சாலையில் மிகக் குறைவான சில நாட்களே பூனைக்குப் பால் வைத்த என் அற்ப மனதிற்கு, அன்று ஏனோ திடீர் ஞானமாய் கிரேஸியின் மனநிலை புரிய வந்தது. “அவளும் என்னைப் போலவே யாரும் இல்லாமல் இந்த பாலைவனத்தில் தனிமையில் வாடுபவள் அல்லவா”. இவ்வளவு நாளாக எப்படி என் மனமொத்த இவள் மனநிலையை நான் அறியாமல் போனேன் என்ற எண்ணம் என்னை முழுமையாக ஆட்கொண்டது. எனக்கும் அவளுக்கும் தொடக்கம் முதலே ஆகாது. அவள் என்னைப் பார்த்தாலே திட்டுவதும், நான் அவளை விரட்ட முற்படுவதும் பிறகு அவள் தொலைவில் சென்று நின்றுகொண்டு அங்கிருந்து என்னைத் திட்டுவதுமே வாடிக்கையாக இருந்தது.

இவளிடம் சமாதானம் பேசியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்த நான், தினம் உண்பதற்காக நான் வாங்கிய ரொட்டி பாக்கெட்டில் அவளுக்கும் ஒன்று சேர்த்து வாங்கினேன். அவளை நோக்கி சென்றபோது முதல் இரண்டு நாட்கள் திட்டினாள். பிறகு இருவரும் நண்பர்கள் ஆனோம். எங்கள் இருவருக்கும் இணைப்பு மொழி “விசில்” மொழி தான். நாட்கள் செல்ல செல்ல என் விசில் கேட்டதும் அந்த இடத்திற்கு விரைந்து வந்து ரொட்டியை உண்பாள். என் விசிலுக்கு மறுமொழி அவள் வாலாட்டல் தான். பாசத்தில் சிலமுறை இவளும் ராமுவின் மொழியில் “ஹூம் ஹூம்” சொல்வதுமுண்டு.

சில நேரங்களில் அவள் வெளியே சென்று, அங்கு என்றாவது வரும் அவளுடைய நண்பனுடன் சேர்ந்து விளையாடுவதைக் கண்டு மகிழ்ந்தேன். ஒருநாள் வெள்ளியன்று காலையில் என் நண்பன் “கிங் காங்” அவள் கருவுற்றிருக்கிறாள் என்று மகிழ்ச்சியாக கூறினார். என் நண்பன் “கிங்காங்”கின் உறவும் “கிரேஸி”யின் உறவும் எனக்கு ஒன்று தான். எங்கள் இருவரின் மொழியும் வேறு, புரிதலில் மட்டுமே எங்கள் உறவு விரிந்திருந்தது. இப்போது கிரேஸிக்கு நான் ரொட்டியை கொடுப்பதை வாடிக்கையாக்கிவிட்டேன். மூன்று நாட்களுக்கு முன்பு மாலையில் நான் அவளுக்கு ரொட்டி கொடுக்கும் போது அவள் அதை வேண்டாம் என்று கூறிவிட்டாள். அவள் வயிறும் இப்போது மிகப் பெரிதாக ஒரு நிறைமாத கர்ப்பிணி போல் உள்ளது. ஏன் அவள் எடுக்கவில்லை? ஒருவேளை அவளுக்கு வயிறு வலியோ? அல்லது கர்ப்பிணி என்பதால் சுவையான உணவு எதிர்பார்க்கிறாளோ? என்றெல்லாம் அன்றிரவு மனம் குழம்பிப் போனேன். அடுத்தநாள் காலையில் சென்று பார்த்தேன் அதில் ஒரு ரொட்டித் துண்டு கூட குறையவில்லை, மாறாக அவள் ஒரு புறாவை விரட்டுவதைப் பார்த்தேன். ஒரு வேளை பசிக்காகவா என்று நினைத்துக் கொண்டேன்.

மீண்டும் அன்று மாலை நான் கடைசியாக வைத்திருந்த என் ரொட்டி பாக்கெட்டை பிரித்து விசில் மொழியில் அவளை அழைத்து “அதே உப்பு ரொட்டிகளை வழங்கினேன்”. இந்தமுறை என் மனம் நோகக்கூடாது என்பதற்காக அவள் அதை ஏற்றுக் கொண்டாள். அப்போதும் கூட திருந்தாத என் மனித மனம் முந்தைய நாள் வைக்கப்பட்ட சிறிது மண்ணில் புதையுண்ட பழைய ரொட்டிகளையும் அந்த புதிய ரொட்டிகளின் அருகில் வைத்துவிட்டு வந்தது. அவள் நானும் உயிரே என்று மதியாதவளாய் புதிய ரொட்டிகளை மட்டும் உண்டுவிட்டு, அவள் செயலால் என்னைக் காறி உமிழ்ந்து சென்றுவிட்டாள். இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின் மாமிசத்தோடு சென்று அவளிடம் மன்னிப்பு கேட்க திட்டமிட்டுள்ளேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *