திருமங்கையின் கனவில் சில யுவன்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 7,092 
 
 

திருமங்கையின் கனவில் பெயர் தெரியாத யுவன்கள் சிலர் விசித்திர இசைக் கருவிகளோடு அழகான பாடல்களை பாடியபடி பூக்கள் உதிர நடந்து போனார்கள். அவர்களின் இசையும் முகமும் அவளுக்கு தித்தித்தது. அந்த தித்திப்போடு பகலை அவள் அலங்கரித்துக் கொண்டாள். அவளுக்கு கல்யாணப் பேச்செடுத்த கணத்தில் விசித்திர கருவிகள் பலவாகி கனவு விரிந்துகொண்டே இருந்தது. நெட்டுருவத்துடன் ஒருத்தன் சிறுமுத்தம் தந்து மறையும் போது எழுந்த விபரீத இசைக்கோர்வையில் வெட்கமுற்று இருந்தாள் திருமங்கை.

திருமங்கையின் அப்பா திக்கெட்டும் தரகர்களை விட்டு மாப்பிள்ளை தேடினார். அவளின் அம்மா ஒரே பெண்ணின் கல்யாணத்தை நோன்பின் நுட்பத்துடன் செய்ய திட்டமிட்டிருந்தாள். அழகானவர்களையும், அழகற்றவர்களையும், கிழவர்களையும் வாலிபர்களையும் இன்றைய பொழுதுகளில் கிரங்கடித்துக்கொண்டிருக்கும் பெண் திருமங்கை. சில வெட்கங்களும் சில ஊடுருவல்களும் சில ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும் அவளை தினம் பின்தொடர்ந்தபடி இருந்தது. சில கோர முகங்களும் கூட தன் விகாரச் சிரிப்புகளை அவள் மேல் வாரி இறைக்கத் தவறியதில்லை. அந்த விகாரச் சிரிப்பிற்காகத்தான் பயந்தாள் திருமங்கை. ஒரு கோரத்தழகன் தனக்கு வாழ்க்கையில் வாய்த்துவிடக் கூடாதே என்று.

ஆசிரியப் பயிற்சியில் சேர்ந்து படித்து பின் தான் படித்த அதே மரங்கள் அடர்ந்த பள்ளிக்கே துருதுருப்பான ஆசிரியையாக வந்தவள் திருமங்கை. அவளோடு சேர்ந்து படித்து அவளை வட்டமிட்ட அவள் வயதுப் பையன்கள் இன்னும் விடா முயற்சியாய் அப்பள்ளியிலேயே மாணவர்களாய் இருந்து, புங்க மரத்துக்குக் கீழ் பாடம் நடத்திய தன் வயதொத்த ஆசிரியத் தோழி மேல் மன்மத பானம் விடும் சாபத்திற்கும் அளானார்கள். அவள் பத்தொன்பதாம் வயதில் பல ஆயிரங்கள் சம்பாதிப்பவளானாள்.

திருமங்கைக்கு மாப்பிள்ளை பார்த்த தரகர்களில் புருசோத்தமன் என்பவனும் ஒருத்தன். திருமங்கையின் அப்பா புருசோத்தமனை மிக நம்பினார். காரணம் அவன் சேர்த்து வைத்த ஜோடிகள் அறுந்து போகாத ஊலோகத் தாலியை கட்டியவர்களாய் இருந்தார்கள். கல்யாணமாகாத அவனுக்கு வயது முப்பதுதான் என்றாலும் பல கல்யாணங்களை தன் தரகு நுட்பத்தால் சாதித்துக் காட்டிய அவன் கிட்டத்தட்ட ஒட்டவைத்தால் மங்கைக்கு கட்டிக்கொள்ளும் உறவுக்காரனுமாவான்.

புருசோத்தமனுக்கு திருமங்கை மேல் ஆசை உண்டு ஆயினும் தொழில் தர்மத்தின் பொருட்டு தன் ஆசையை மறைத்து மங்கையிடம் கேட்டான், “மாப்பிள்ளை எப்படி வேணும்?;”

வெட்கப்பட்ட திருமங்கை கால்களில் தரை கிறுக்கினாள். அது வெறும் கோழிக் கிறுக்கு. அதில் மணமகனின் இலட்சணங்கள் இல்லை. வேண்டும் புருசனின் லட்சணத்தை பெண்கள் வாய்விட்டு சொல்வதில்லை. செம்மை முகத்தாலும் சிணுங்கள் கோபத்தாலும் சொல்வார்கள். மங்கைக்கு வந்த வெட்கத்தில் அந்த ஊரில் இருந்த மொத்தம் ஏழு அழகியருள் அவளே கூந்தல், முகம், மார்பு, வயிறு, தொடை, இடை, கால், விரல் என்று சர்வ லட்சனத்திலும் அழகாயுள்ள முதல் அழகியானாள்.

திக்கெட்டும் சல்லடைபோட்ட தரகர்களுல் முதல் தரகன் ஒரு புகைப்படத்தோடு வந்தான். வந்தவன் மாப்பிள்ளை குறித்து ‘ஓ… ஆ…’ என்றான். மாப்பிள்ளை காவேரிப்பட்டிணத்தில் பெரிய ஓட்டல்வைத்திருக்கும் லெட்சாதிபதி திருமாலின் ஒரே பையன் என்றும் ஒரே மாதத்தில் கல்யாணத்தை முடித்து விடலாம் என்றும் மாப்பிள்ளை வட இந்தியாவில் எங்கோ பெரிய போலீஸ் உத்யோகத்தில் மொடமொடப்பாய் இருப்பதாகவும் சொன்னான்.

புகைப்படத்தில் இரு மரத்திற்கு இடையில் கட்டப்பட்ட ஊஞ்சலில் தொங்கிய அரை டவுசர் போட்ட போலீஸ் மாப்பிள்ளையை பார்த்த திருமங்கையின் பாட்டி வேண்டா வெறுப்பாக ஒரே வரியில் சொன்னாள், “இந்த மாப்பிள்ளை வேணாம். எம் பேத்தி பூ மாதிரி… அதை இந்த போலீசுகாரன் கையில கொடுக்கவா…! அவ அடி தாங்குவாளா?”

வந்த தரகன் ஒரு வாய் காபியை ஊதிக் குடித்துவிட்டு தோல்வியோடு திரும்ப வேண்டியதாயிற்று.

காஞ்சிபுரத்து வாத்தியாரை மாப்பிள்ளையாய் பிடித்து வந்தான் இன்னொரு தரகன். வாத்தியார் பொண்ணுக்கு வாத்தியார் மாப்பிள்ளை கணப்பொருத்தம் என்றான். இந்த முறை பாட்டி வாய் திறப்பதற்கு முன்பாகவே அப்பன் எகிறினான். அரை மண்டை மயிரும் பெரிய கண்ணடியும் போட்டு கல்யாணத்திற்கு முன்பே கிழவன் போலக் கிடந்தான் புகைப் படத்தில் அந்த மாப்பிள்ளை.

அந்த தரகனுக்கோ காபி கூட கிடைக்கவில்லை.

அம்பத்தெட்டு ஆட்டோக்காரன், நூறு ஏக்கர் மாந்தோப்புக்காரன், மைசூரில் போண்டா சுட்டு விற்று எட்டுக் கார் வாங்கிய கோடீஸ்வரன் என்று ஏகத்திற்கும் மாப்பிள்ளை வந்தும் தலையாட்ட மட்டும் மறுத்துவிட்டது மங்கையின் குடும்பம்.

இருபது கோயில், முப்பது குளங்கள் முழுகி, பார்க்காத பண்டிதர்களைப் பார்த்து, அழுது புரண்டு விம்மிக்கிடந்து பிறகு வயதான காலத்தில் ஒரே வாரிசாய் பிறந்தவள் மங்கை. அவள் பிறந்த பிறகு கழுத்தின் ஒற்றைவட செயின் ரெட்டைச் செயினாகவும் தண்டவாளப் பெட்டியின் சிலநூறு காசு லெட்சத்துப் பதினாயிரம் காசாகவும் காய்த்து நிரம்பியதால் தங்களுக்குப் பிறந்தது ‘மகாலெட்சுமி’ என்று நினைத்திருக்கிறார்கள் திருமங்கையை. அவளுக்குப் போய் சொத்தை சொள்ளையாக மாப்பிள்ளை பார்க்க முடியுமா? மேலும் மங்கைக்கு எவன் மாப்பிள்ளையாக வருவான் என்பதும் அவர்களுக்கு தெரிந்ததுதானே…!

சின்ன வயதில் உடையில்லாமல் சிவப்பாய் வீதியில் திருமங்கை திரிந்தபொழுது அவளை தெருவில் பார்த்த குறி சொல்லும் ஒருத்தி அவளின் மார்பிலிருக்கும் மச்சத்தை பார்த்துவிட்டு வீடேறி வந்து, “இந்த பிள்ளைக்கு பத்துக் கையிலும் மோதிரம் போட்ட ராஜா புருசனாக வருவான்…” என்று சொல்லி முறம் முறமாய் அரிசியை அள்ளிக் கொண்டு போனாள்.

அதைக் கேட்டு பெரிதான மங்கை மஞ்சள் தேய்த்து குளிக்கும்போது ‘ச்சீ கையை எடு!’ என்று வாசனை சோப்பினால் மச்சத்தை தன் புருசனின் கரமென நினைத்து சிறு கோபத்தோடு விரட்டிக்கொண்டிருந்தாள்.

அரைப் பருவத்தில் இருந்த திருமங்கையும் அவள் அப்பாவும் குத்தகை வசூலிக்கப் போன இடத்தில், இளநீர் குடித்துக்கொண்டிருந்த பூசாரிக்கு திடீரென்று அம்மன் அருளாக வந்து அதிராட்டம் ஆடி, “இவ புருசன் ஒரு இளவரசன்டா… இளவரசன்!” என்று சொல்லி எழுமிச்சை கடித்து, இன்னொரு இளநீர் குடித்து மலை இறங்கிற்று.

அன்றிலிருந்து திருமங்கைக்கு இவளவரசன்தான் புருசன் என்று நம்பினார்கள் பெற்றவர்கள். திருமங்கை வெட்கத்தோடு மிக அதிகமாக நம்பினாள். பாட்டி அந்த இளவரசனுக்காக வெள்ளி அரைஞான் கயிறு வாங்கி வைத்திருக்கிறாள். குடும்பப் பழக்கமாம். அப்படியிருக்கு இந்த கூமுட்டைத் தரகர்கள் ஊளை முட்டையாக கொண்டு வந்து ‘இதான் மாப்பிள்ளை… இதேதான் மாப்பிள்ளை…’ என்று படங்களைக் காட்டினால் மனசொடையாதா மங்கை குடும்பத்திற்கு.

ஒருவழியாக கார்த்திகை மாசத்து கடைசி வெள்ளிக் கிழமையில் புருசோத்தமன் கொண்டு வந்த மாப்பிள்ளைதான் எல்லோருக்கும் பிடித்துப்போனது. அவன் தந்த புகைப்படத்தை பார்த்ததுமே பாட்டிக்கு கண்ணில் நீர் வந்துவிட்டது. ‘உன் தாத்தாவும் இப்படித்தான் சிவப்பு…’ என்று பாட்டி சொன்னதும் பேத்தி வெட்கத்தோடு சிரித்தாள். கருப்பு வெள்ளைப் படத்தில் இந்த அரைகுறை கண்ணுள்ள பாட்டி எப்படி சிவப்பைப் பார்த்தாள் என புலம்பினான் புருசோத்தமன்.

தன் தாத்தாவே தனக்கு புருசனாய் வருவதில் திருமங்கைக்கு வருத்தம்தான் என்றாலும் பாட்டி அடித்துச் சொல்லிவிட்டாள் ‘இவன்தான் மாப்பிள்ளை’ என்று.

வட்ட முகமாய், நறுக்கிய மீசையோடு, பளீரென்று சிரித்தபடி திருமங்கையை பெண்பார்க்க வந்தான் அந்த மாப்பிள்ளை. பையனின் சிரிப்பில் திக்குமுக்காடிப்போன திருமங்கை வெட்கத்தோடு பின்கட்டில் கிணற்றுச் சுவற்றில் அமர்ந்து படபடக்கும் இதயத்தோடு உள்ளே நடக்கும் பேச்சுக்கு காது கொடுத்தாள். ஒரே வார்த்தையில் பையனின் மொத்த சரித்திரமும் சொல்ல முடியாமல் தவித்தான் புருசோத்தமன். தான் ஆசைப்பட்ட பெண்ணுக்கு தனே ஒரு புருசன் தேடிக்கொடுப்பதில் வருத்தம் வேறு அவனுக்கு. ஆனாலும் தரகுக் காசாவது மிஞ்சமாகட்டும் என்றும் இவள் இல்லையென்றால் என்ன பக்கத்து வீட்டு பார்வதி இருக்கிறாளே… அவளுக்கும்தான் ராஜகுமாரர்களை கொண்டு வரும் மச்சமிருக்கிறது என்று மனசைத் தேற்றிக்கொண்டு மாப்பிள்ளை சரித்திரம் சொன்னான்.

‘மாப்பிள்ளை ஒரு டாக்டர்… தருமபுரி ஆஸ்பத்திரியில் உத்யோகம்’

மாப்பிள்ளை ஒரு டாக்டர் என்று புருசோத்தமன் சொன்னதை கேட்ட சந்தோஷத்தில் பாட்டியும் அப்பனும் இங்கே குதிக்க அங்கே கேட்ட திருமங்கை கிணற்றில் குதித்தாள்.

தொபீர் என்று சத்தம் கேட்டதும் பதறியபடி வந்து கிணற்றைச் சுற்றி பெற்றவர்கள் ஓலமிட, பாட்டி புருசோத்தமன் முதுகில் அடித்து காப்பாற்று என்று சொன்னாள். கயிறு கட்டி கிணற்றில் இறங்கிய புருசோத்தமன் குறுகளான வட்டமுள்ள வெயில் தண்ணீர்க் கிணற்றிலிருந்து, மார்பு மச்சத்தைத் தொட்டு திருமங்கையைக் காப்பாற்றினான். அதன்பிறகு அவனுக்குள் வினோத அதிர்வலைகள் எழும்ப அவனுக்கு மங்கை மேல் காதல் அதிகமாகிவிட்டது. டாக்டருக்கு தொண்டையில் நாள்பட்ட சொறி என்று ஒரு பொய் சொல்லி திருமங்கையை தானே கட்டிக்கொள்ளலாமா என்ற யோசனையும் வந்தது அவனுக்கு.

கல்யாணப் பேச்செடுத்ததும் பெண் இப்படி கிணற்றில் தவறி விழுந்தாளே… இது அபசகுனமாயிற்றே! என்று அப்பா யோசித்துக்கொண்டிருக்கும்போதே வாசலில் ஒரு டிரேக்டர் நிறைய தேங்காய்களை ஏற்றி வந்து இறக்கிய திருமல்வாடி குத்தகைக்காரன், வாரத்துக்கு விட்ட பசு ரெட்டைக் கன்று போட்டிருப்பதாகவும் அது ஒரு பித்தளை அண்டா நிறைய பால் கறப்பதாகவும் சொல்லிவிட்டுப் போனான்.

பசு இரட்டைக் கன்று போட்டு பித்தளை அண்டா நிறைய பால்கறப்பது பெரிய சுப செய்தியாயிற்றே என்று தலைகால் தெரியாமல் ஆடிய மங்கையின் அப்பா ‘நீ கொண்டு வந்தவன்தான் மாப்பிள்ளை’ என்று தரகனிடம் சொல்வதற்குப் பதிலாக “நீதான் மாப்பிள்ளை…” என்று சொல்லி சொதசொதப்பாய் நனைந்து நின்ற புருசோத்தமன் தலைமேல் சத்தியமடித்தார்.

சத்தியம் என்பதற்கும் ஈரமான மனிதன் மேல் சத்தியம் என்பதற்கும் என்ன வித்தியாசமென்றால் ஈரமான தலையில் அடித்தால் வலி அதிகமாகும் என்பதைத் தவிர வித்தியாசமில்லாமல் போயிற்று அங்கு. கடைசியல் டாக்டர் பையன்தான் மாப்பிள்ளையானான் பரிதாப புருசோத்தமனோ வெறும் தரகன்தான்.

வீட்டிற்கு கல்யாணக்களை வந்துவிட திருமங்கையோ தான் விழுந்த கிணற்றுச் சுவற்றின் மீதே கவலையோடு உட்கார்ந்திருந்தாள். அவள் கொஞ்சம் கிழவியைப் போல தொளதொளத்துத் தெரிவதாக வீட்டுக்கு ரவிக்கை அளவெடுக்க வந்த தையல்காரனின் மனைவி சொன்னதும், பேத்தியை நன்றாக பார்த்துவிட்டு பாட்டி சொன்னாள், “அவள் இளைத்திருப்பது உண்மைதான். ஆனாலும் முகத்தில் கல்யாண ஜொலிப்பு தெரிகிறது…” என்று தன் முழு அனுபவத்தை சாறுபிழிந்து எல்லோரையும் நம்படித்தாள்.

அன்று இரவே பாட்டி சொன்னது பொய் எனும்படி தூங்கிய எல்லோரையும் துள்ளி எழுப்பி, தானும் அலறி எழுந்தாள் திருமங்கை. பாவாடை விலகிய தொடை நடுங்க, தனக்கு கனவெல்லாம் பாம்பாய் வருவதாகச் சொல்லி அழுதாள் அவள். பாட்டி சிரித்துக் கொண்டே “கல்யாணத்தப்போ எனக்கும் அப்படித்தான் கனவுல பாம்பு ஒண்ணு வந்துச்சி… உன் தாத்தேவாட ஒரு ராவு தூங்கினதும் ரெண்டு பாம்பு வந்துச்சி. உன் அப்பனை பெத்ததும் மூணு பாம்பு வந்துச்சி. நீ அவனுக்கு பொறந்ததும் பாக்கறதெல்லாம் பாம்பாவே இருந்திச்சி. பாம்புக்கு பயந்தா ஆகுமா? கல்யாணமாகட்டும் பெறகு நீயும் அந்த டாக்டர் பையனும் சேர்ந்து பாம்பு கனவு கண்டு, பாம்பு குட்டிங்களை பெத்து…” கெக் கெக் என்று பாட்டி சிரிக்க திருமங்கைக்கு பாட்டியே ஒரு பாம்பாய் நெளிந்தாள்.

எப்படியோ திருமங்கைக்கு திருமணம் திக்காமல் முடிந்திருந்தது. திருமங்கையின் உருவம் சந்தோஷத்தில் புதுசாய் மினுமினுத்தது உண்மைதான். தன் கனவில் இதுவரை சிறு முத்தம் தந்தவன் இந்த டாக்டராகத்தான் இருக்குமென்று நம்பினாள் அவள். நம்புவது என்ன அது அவனேதான். ஆனாலும் உயரம்தான் உதைக்கிறது. கனவில் வந்தது உயரப் பையன்; டாக்டர் குள்ளப் பையன். அதுநாள் வரையில் தன் கனவில் வந்ததாய் நம்பிய அந்த உயரமான பரமேசுவரன்; என்பவன் மூன்றாவது பந்தியில் உட்கார்ந்து பாயாசத்தை வழித்துக் குடிப்பதை சிரிப்போடு பார்த்தாள் திருமங்கை.

கல்யாணப் பரிசு தருவதற்காக வந்த தரகன் புருசோத்தமனின் அருகாமை முகத்தில் கண்கள் கலங்கியிருப்பது போல தோன்றியது திருமங்கைக்கு. அவன் அழுதிருப்பான் என்று அவள் சந்தேகப்பட்டபோது அவன் சிரித்த சிரிப்பு காண்பது பொய்யோ எனும்படியும் இருந்தது. பரிசு தந்து விலகிப்போன அவன் வாழை மரத்தின் அடியில் நின்று வேட்டியால் தன் கண் துடைப்பதை அவள் காணத்தான் செய்தாள். அவன் அழத்தான் செய்தான். கிணற்றிலிருந்து அவன் தொட்டுக் காப்பாற்றிய அந்த மச்சமிருந்த இடம் அவளுக்கு மெல்ல நெகிழ்ந்து துடித்தது அப்பொழுது.

முகூர்த்த ராத்திரிக்காக சிறுசுகுள் இரண்டையும் அறைக்குள் தள்ளிய மணமக்கள் குடும்பத்தார் மன நிறைவோடும் தூக்கத்தில் கண் செருகளோடும் குசுகுசுவென ஏதேதோ பேசி தூ}ங்கப்போகிற அவஸ்தையில் இருந்தார்கள். அந்த நேரமாகப் பார்த்து மாப்பிள்ளைப் பையன் வேட்டியை சுருட்டி பிடித்தபடியும் உயிர் போகிற அளவுக்கு கத்தியபடியும் அறையை விட்டு வெளியே ஓடி வந்தான்.

அங்கிருந்த எல்லோரும் பதறிப்போனார்கள். தனியறைக்குள் இருந்து யாரும் எப்பொழுதுமே வெளியே கத்திக்கொண்டு வந்தததாக கேள்விப் படாததே அவர்கள் பதட்டத்திற்கு காரணம் என்றாலும் அதிகம் பதறியது பக்கத்து வீட்டு ஆண்டாளம்மாள்தான். அவள் இத்தனைக்கும் பக்கத்து வீட்டிலேயேதான் தூங்கிக்கொண்டிருந்தாள். கயிற்றுக் கட்டில் அறுந்து போகும்படி படுத்திருந்த அந்த பெரும் உடம்புக்காரி சத்தம் கேட்டு அலறியடித்து ஓடிவந்து கதவைத் தட்டினாள். கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த அந்த ஆண்டாளம்மாளின் தூக்க நேரத்து தலைவிரி கோலத்தைப் பார்த்து திரும்பவும் பயந்து கத்தியபடி டாக்டர் பையன் திறந்த கதவு வழியே வீதீக்கு ஓடப் பார்த்தான். மகனைப் பெற்றவர்கள் அவனை தடுத்து நிறுத்தினார்கள்.

பாட்டி தன் வாழ்நாளில் இப்படி ஒரு சாந்தி முகூர்த்த சத்தத்தை கேட்டறியாததால் திகைத்துப் போனாள். எதற்காக இப்படி மாப்பிள்ளை கத்தினான் என்று கேட்கவும் அவளுக்கு கூச்சமாய் இருந்தது. மாப்பிள்ளையை உற்றுப் பார்க்க ஆரம்பித்து பிறகு விபரீதமாகப் பார்த்த பாட்டிக்கு கொஞ்சமாக சாவு வருவது போல இருந்தது. ஏனென்றால் அவள்தான் டாக்டரின் பின்புறத்தில் வேட்டி பெரிதாய் கிழிந்திருப்பதை முதன் முதலில் பார்த்தவள். டாக்டர் பையன் சுவற்றில் பின்புறத்தை தேய்த்து நடப்பதை வினோதமாய் பார்த்த ஆண்டாளம்மாள் ‘என்ன ஆச்சி?’ என்று கேட்க நினைப்பதற்குள்ளாக, எதிர் வீடு, பக்கத்து வீடு என்று மொத்தம் ஆறேழு வீட்டு ஆசாமிகள் வந்து ‘என்ன ஆச்சி?’ என்று அவளுக்கும் முந்திக் கேட்டார்கள்.

டாக்டர் மாப்பிள்ளை சுவற்றில் சாய்ந்து குத்திட்டு உட்கார்ந்து இரு முழங்காலுக்கும் நடுவில் தன் தலையை சொருகிக்கொண்டவன் நிமிர்ந்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

பாட்டி வெட்கத்ததை விட்டு “மாப்பிள்ளையோட வேட்டி பின்னால கிழிஞ்சிருக்கு…” என்றாள்.

“அதுமட்டுமில்ல… ரத்தமும் வருது” என்றாள் ஆண்டாளம்மாள்.

மாப்பிள்ளைக்கு ரத்தம் வர வேட்டி எப்படி கிழிந்திருக்கும் என்று கூடியிருந்த அத்தனைபேரும் எத்தனையோ விதமாய் குழம்பிப்போயும் ஒருத்தருக்கும் அது விளங்கவேயில்லை. கடைசியில் ஆண்டாளம்மாள்தான் பொருந்துகிறார்ப்போல ஒரு அனுமானத்தை சொன்னாள். அதாவது ‘காணாததை கண்ட மாப்பிள்ளை கம்பங்கொல்லை காளைமாடாய் பாய்திருப்பார்… அங்கே இருந்த இரண்டடி குத்துவிளக்கின்மேல் உட்கார்ந்திருப்பார்… வேட்டி கிழிந்திருக்கும்’ என்று.

எல்லோரும் வாய் விட்டு மனசுக்குள் இதற்காக சிரித்தார்கள். ஆனால் இரண்டு பேரால் மனசுக்குள்ளும் சிரிக்க முடியவில்லை. முதல் ஆள் திருமங்கையின் அம்மா: எரிந்துகொண்டிருக்கும் குத்துவிளக்கு பின்னால் குத்தினால் குழந்தை பிறக்குமா, பிறக்காதா? என்ற சந்தேகம் அவளுக்கிருந்தது. இரண்டாவது ஆள் டாக்டர் மாப்பிள்ளை: ரத்தம் வர பின்னால் குத்திக்கொண்டாலும் முகத்தின் முன்னால் சிரிக்கும் பக்குவம் அவனுக்கு இன்னும் வந்திருக்கவில்லை.

இத்தனை நடந்தும் திருமங்கை வெளியே வரவில்லை.

புருசனுக்கு இப்படி ஆயிற்றே என்று அழுதுகொண்டிருப்பாள் என்று அங்கிருந்தவர்கள் நினைத்தார்கள். மாப்பிள்ளைக்கு எதனால் ரத்தம் வருகிறதென்று கண்டிப்பாக திருமங்கை அறிவாள் என்று எல்லோரும் நம்பினார்கள். சிலரைப் போய் உள்ளே பார்க்கும்படி சிலர் கேட்டுக்கொண்டார்களேயன்றி யாரும் உள்ளே போய் பார்க்கவில்லை. சாந்திமுகூர்த்த அறைக்கு போவதென்றாலே மனிதர்களுக்கு அலாதியான வெட்கம்தான்.

பிறகு ஆண்டாளம்மாவே வெட்கத்தை விட்டு சாந்தி முகூர்த்த அறைக்குள் போனாள். போன வேகத்திலேயே இரண்டு கன்னத்தையும் பிடித்துக்கொண்டு வெளியே வந்தாள். வந்தவள் யாரிடமும் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் வீட்டுக்குப் போய் கட்டிலில் படுத்துக்கொண்டாள். பிறகுதான் ஆண்டாளம்மாள் உள்ளே போனதுமே ‘லப் லப்’பென்ற இருபெரும் சத்தம் வந்தது எப்படி என்பதை அங்குள்ளவர்கள் புரிந்துகொண்டார்கள். திருமங்கையிடம் அறை பட்ட வலி போக ஒரு வாரம் ஆகும் ஆண்டாளம்மாவிற்கு.

மாப்பிள்ளையின் வேட்டி கிழிந்த சந்தேகமே கூட்டத்தில் மிச்சமிருக்க இப்பொழுது ஆண்டளம்;மாவை திருமங்கை ஏன் அடித்தாள் என்ற சந்தேகமும் சேர்ந்து கொண்டது. சாந்தி முகூர்த்த அறைக்குப் போக முன்பு வெட்கப்பட்டவர்கள் இப்பொழுது வெட்கத்தை விட்டு பயப்பட ஆரம்பித்தார்கள். இதையெல்லாம் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்த புருசோத்தமன் “நான் பாத்துட்டு வரேன்.” என்றான். பலவீடு தள்ளி தூங்கிக்கொண்டிருந்த புருசோத்தமனையும் தட்டி எழுப்புமளவுக்கு குரல்பலம் கொண்டவன் கிடையாது டாக்டர் மாப்பிள்ளை. அவன் சூழ்நிலை அப்படி கத்திவிட்டான்.

தான் விரும்பிய பெண்ணோடு ஒரு வேலையும் டாக்டருக்கு ஆகவில்லை என்பதில் புருசோத்தமனுக்கு சந்தோசம்தான். டாக்டர் பையன் ‘போகாதே… போகாதே…!’ என்று அவனிடம் கத்தினான்.

“என்ன ஆச்சி சொல்லு…!” என்று புருசோத்தமன் கேட்கவும் டாக்டர் பழையபடி தன் இரண்டு முழங்காலுக்கு நடுவே தலையை செருகிக்கொண்டு அமைதியாக இருந்தான். வேறு வழியற்று புருசோத்தமன் உள்ளே போனான்.

உள்ளே போனவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

குத்தியிருக்கும் என்று சந்தேகப்பட்ட அந்த இரண்டடி குத்துவிளக்கு நின்று நிதானமாக எரிந்துகொண்டிருந்தது. திருமங்கையைக் காணவில்லை.

கட்டிலின் மெத்தைவிரிப்பு காலியாக இருந்தது. பழங்களும் பட்சணங்களும் இறைந்துகிடந்தது. திருமங்கை எங்கே போனாள் என்று அவன் புதிரோடு மேலே பார்க்க அங்கே ஒரு பல்லி மட்டுமே பூஜ்யம் விளக்கு பக்கத்தில் ஒட்டிக்கிடந்தது. கட்டிலுக்கு கீழிருந்து அடிபட்ட விலங்கு ஒன்றின் ஊறுமும் ஓசை அழுத்தமாகக் கேட்கவும் பயத்தோடு பின்வாங்கினான். கட்டிலுக்கு கீழே குணிந்து பார்த்தான். அங்கே திருமங்கை தொடை நடுவே கையிரண்டையும் வைத்து சுருண்டு ஒருக்களித்தபடி தலைமட்டும் தூக்கி இவனைப் பார்த்து பல்கடித்து ஆக்ரோசமாய்; ஊங்காரமிட்டாள்… ஓசை கேட்டு வெளியே இருப்பவர்கள் பதறிக்கொண்டு உள்ளே வருவதற்குள்ளாக புருசோத்தமன் கத்திக்கொண்டே தப்பித்து வெளியே ஓடிப்போனான். திருமங்கையின் அந்த தோற்றம் கண்ட அன்றைக்கே அவனுக்கு மங்கை மேல் இருந்த காதல் செத்துப் போனது.

டாக்டர் பையனும் அவனுடைய பெற்றவர்களும் புருசோத்தமன் கத்திய சத்தம் கேட்டு மறைவதற்குள்ளாகவே தன் காரை எடுத்துக்கொண்டு அவர்கள் ஊருக்கு நடு இரவில் ஓடிப்போனார்கள்.

அதன்பிறகு திருமங்கையை அறைக்குள் வைத்து வெளியே தாழிட்டார்கள். எப்படியும் அவளுக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும் இல்லை பேய் பிடித்திருக்க வேண்டுமென்று ஆளாளுக்கு அடித்துச் சொன்னார்கள். பிறகு வெள்ளைக் கிணற்றில் விழுந்து செத்துப்போன மிலிட்டரிக்காரனின் பொண்டாட்டி பேயாக வந்து பிடித்திருக்க வேண்டுமென்று ஒருமனதாக எல்லோருமே ஒத்துக்கொண்டார்கள்.

அதன் பிறகு இரண்டு மாதங்கள் தினுசு தினுசாக மாயம், மந்திரம், தந்திரம், பேயோட்டுதல் என்று ஊருக்கு ஒரு பூசாரி, வேளைக்கு ஒரு பச்சிலை மருந்து என்று பண்ணாததை எல்லாம் பண்ணிப் பார்த்தும் திருமங்கைக்கு பெரிதாக எதுவும் முன்னேற்றமில்லை. காரணம், திருமங்கை அன்றைக்கு ஒரு இரவு மட்டுமே வேட்டை மிருகத்தைப் போல கத்தினாளேயன்றி அதன் பிறகு எந்த வினோத சத்தமும் அவளிடமிருந்து வரவேயில்லை; சாதாரணமாகவே இருந்தாள்; நன்றாக இருப்பதாக சொல்லவும் செய்தாள். வேட்டி கிழிந்த டாக்டர் மாப்பிள்ளைதான் பாவம் ஆஸ்பத்திரிக்கு போகாமல் பின் புண்ணுக்கு மருந்து போட்டபடி வீட்டில் குப்புறக் கிடந்தான்.

‘பொண்ணு பயத்தில அப்படி செஞ்சிருக்கும். இனி அப்படி ஆகாது…’ என்று நாலு பெரியவர்கள் திருமங்கை தரப்பிலிரந்து போய் டாக்டர் தரப்பு ஆட்கள் காலில் விழுந்து (பேச்சுக்குத்தான்) கேட்டுப் பார்த்தார்கள். டாக்டர் குடும்பம் வீர விளையாட்டுக்கு வரமாட்டோம் என்று புறமுதுகு காட்டினார்கள். “பொண்ண சரி பண்ணுய்யா மொத… வந்துட்டாரு…” என்று மாமனாரை எகிறினான் மாப்பிள்ளை.

பிறகு மங்கையின் அப்பா காட்டு வைத்தியம் சரிப்படாது என்று கேரளா, கர்னாடகா, ஆந்திரா என்று தேசம் விட்டு தேசம் போய் படித்த நல்ல டாக்டர்களை எல்லாம் பார்த்து என்னென்னவோ பரிசோதனை எல்லாம் செய்தார். அத்தனை டாக்டர்களும் சொன்னது திருமங்கை நல்ல ஆரோக்கியமாக இருப்பதாகத்தான். பாட்;டி அதை நம்பவில்லை… காரணம், டாக்டர் பையன் பெயரைச் சொன்னாலே மங்கையின் கண்ணில் ஒரு வேட்டை நாயின் ஜொலிப்பும் குருரமும் தெரிவதைக் கண்டிருக்கிறாள்.

திருமங்கையின் குடும்பம் செய்வது அறியாது நின்ற பொழுது உதவிக்கு வந்தது கன்னத்தில் அடிபட்ட அதே ஆண்டாளம்மாதான். திருமங்கையின் பிணி தீர்க்கும் வீரமுள்ள ஒரு மருத்துவனை கொண்டுவந்து வாசலில் நெட்டையாக நிறுத்தினாள் அவள்.

அகல நெற்றியும், சுருள் தாடியும் வைத்து, பை நிறைய துணிகளும் அது நிறைய அழுக்குமாய் வந்த அந்த மருத்துவனைப் பார்த்த பாட்டி உதட்டை பிதுக்கிவிட்டாள் ‘இவனாவது சரிபண்றதாவது!’

ஆனால் ஆண்டாளம்மாள் நம்பிக்கை தந்தாள். அகோரங்களும் கோரங்களும் தலைவிரித்து ஆடிப் பாடிய கொள்ளிப் பேய்களையும், பேய்விரி கோலமான பிசாசங்களையும் பல பத்து வருடங்களாய் ஓட்டும் வித்தைக்காரன் இவன் என்றும், அந்த வித்தைகளை கொல்லிமலையில் எட்டுவருடம் சுற்றி ஒரு அம்மணச் சாமியாரிடமிருந்து சுவாசத்தின் வழி அவன் கற்று வந்தான் என்றும், பில்லி, சூன்யம் ஏவல், பிசாசு உட்படி எந்த விதமான பேயையும், அரக்கர்களையும், சாத்தான்களையும் ஓட்டும் வலிமை பெற்றவன் என்றும் காய்ச்சல் கன்னி, ஜன்னி முதல் பெரியம்மை, சின்னம்மை, குஸ்டம், ரோகம் உட்பட எத்தனைவிதமான நோயையும் சரியாக்கும் பெரும் மருத்துவன் அவன் என்றும் அவனின் பிரதாபங்களை அள்ளிவிட்டாள் ஆண்டாளம்மாள். அதே சமயம் தன் சுய பத்திரம் கருதி இரண்டு கன்னங்களிலும் பேசி முடிக்கும் வரை கை வைத்து மறைத்திருந்தாள். பிறகு தன் வீட்டுக்குப் பொய் கட்டிலில் பாதுகாப்பான நிம்மதியோடு படுத்துக்கொண்டாள்.

எந்த அழுக்குப் பிடித்தவனாயிருந்தால் என்ன? மகளுக்கு சரியானால் சரிதான் என்று கிழவனிடம்; மங்கையைக் காட்டியது குடும்பம். பலரையும் இத்தனைக் காலம் பயத்தில் ஆட்டிப் படைத்த திருமங்கையை நடுக்கூடத்தில் தனக்கு முன்பாக உட்கார வைத்தான் அம்மணச் சாமியின் ஆசிபெற்ற அழுக்குக் கிழவன். மங்கையின் முன்பாக அவன் சப்பணமிட்டு உட்கார்ந்த பொழுது நம்பிக்கையோடு இருந்த திருமங்கையின் அப்பா, அவன் முதல் வார்த்தையிலேயே பரிதாபமாக, ‘குடிக்க தண்ணி குடுங்க!’ என்று வாய் காய்ந்து கேட்டதும் பொசுக்கென்று ஆயிற்று.

கொல்லிமலையில் வித்தை கற்ற இந்த அழுக்கு வைத்தியன் பேய் ஓட்டவோ, அல்லது மருத்துவம் பார்க்கவோ, ஒச்சமற்ற கருப்புக் கோழியும், எருக்கஞ்சிமிறும், சாராயமும், சுருட்டும், புது வேட்டியும், முறத்தளவு அரிசியும் கேட்பான் அல்லது நொச்சி இலை, நுணாப் பூ, கருந்துளசி, கற்றாழைச் சோறு என்று எதையாவது கேட்பான் என்று எதிர்பார்தார் அவர். இப்படி பச்சைத் தண்ணீர் கேட்டால் இவன் மகளை சரிபண்ணுவானா?

தண்ணியை அன்னாந்து சொட்டு சிதறாமல் குடித்தவன் அழுக்கு வேட்டியில் வாய் துடைத்து மங்கையின் கண்களை உற்றுப் பார்த்தான். மங்கைக்கு தன் மார்பு மச்சம் குறுகுறுப்பது போல இருந்தது. அந்த குறுகுறுப்பு மெல்ல இடுப்பு, வயிறு, பிருஷ்டம் என்று எங்கும் ஊர்வதாயப் பட்டது அவளுக்கு. அவள் அதிர்ந்து கிழவனைப் பார்த்தாள் அவனோ கண்களை மூடிக் கிடந்தான்.

கிழவன் அவளுக்குள் சென்று நாட்களின் பின் நகர்வில் பல இரவுகளை பகல்களை மாதங்களை வருடங்களைக் கடந்து கடகடவென பால்யத்திற்கும் சிசுப்பிராயத்திற்கும் கருப்பருவத்திற்கும் பாய்ந்தான். அங்கே பிணிக்கான ஆணிவேர் கிட்டவில்லை. பிறகு குருத்துப் பருவத்தில் அதன் வேர் இருப்பதை கண்டு சிரித்தபடி கண் விழித்து பெற்றவர்கள் பக்கம் திரும்பி “இந்த பொண்ணுக்கு வலது மார்பிலும், மலரிலும் ஒவ்வொரு மச்சம் இருக்குதானே…” என்று கேட்டான்.

மார்பின் மச்சத்திற்கு ஆமென்றார்கள். மலர் மச்சம் புரியாது விழித்தார்கள்.

“அந்த மச்சம் அவ பெரிய மனுசி ஆனபிறகு வந்தது. உங்களுக்கு தெரியாது” என்றான் கிழவன். திருமங்கை ஆமோதிப்பதாய் தலையாட்டினாள்; தன்னைத் தவிற யாருக்கும் தெரியாதது இவனுக்கு எப்படித் தெரிந்தது என்று அதிர்ந்தாள். பெற்றவர்கள் முன்னால் தன்னை இந்தக் கிழவன் நிர்வாணப்படுத்தி பார்திருக்கிறான் என்று அருவருப்படைந்தாள். தனக்கு உறக்கம் வருவதாகச் சொல்லி எழுந்து போகப் பார்த்தவளை கிழவன் அதட்டி உட்காரவைத்து அவள் கண்களையே பார்த்து பேச ஆரம்பித்தான்.

“இந்த பொண்ணு பெறக்கறதுக்கு முன்னாடியும் பெறந்த பின்னாடியும் ஒரு ஒரு கார்பம் கலெஞ்சி போனது உண்மையா?” என்று கேட்டான். பெற்றவர்கள் உண்மை என்றார்கள். கிழவன் தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்பது போல தலையை ஆட்டிக்கொண்டான்.

“இவள் ருதுவான அன்னைக்கி ஊர்ல ஒரு ரத்தப் பிணம் விழுந்தது உண்மையா?” என்று கேட்டான். திருமங்கையின் அப்பா நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அதிர்ந்தார். பிணம் விழுந்தது உண்மைதான். திருமங்கை ருதுவான அன்று இரவு ஆரோக்கியமான அறுபத்தி மூன்று வயது சாமிநாத டாக்டர் கட்டாந் தரையில் கால் தடுக்கி விழுந்து இறந்துப்போனார். அவர் விழுந்து இறந்தது ஊருக்கே தெரியும்… ரத்தம் சொட்ட இறந்த செய்தி செத்துப்போன அந்த சாமிநாத டாக்டருக்கும், அவர் பையனுக்கும், மங்கையின் அப்பாவுக்கும் மட்டுமே தெரிந்த விசயம். பலபேரை தன் ஊசியால் பின் சதையில் குத்திக் குத்தி குணப்படுத்திய புண்ணியவான் சாமிநாத டாக்டர் இப்படி தனக்குப் பின்னாலே ஆயிரம் முள் குத்தி ரணப் பட்டு செத்தால் புகழ் என்னாவது என்று பயந்த மகன் அதை யாரிடமும் சொல்லாமல் இருக்க மங்கையின் அப்பாவை கெஞ்சிக் கொண்டான். அதை யாரிடமும் மங்கை அப்பா சொன்னதில்லை. மனைவியைத் தவிற. அதெப்படி கிழவனுக்கு தெரியும்?

“உண்மைதானே…?””

மங்கை அப்பா வாய்பேசாமல் ஆமென்றார்.

“இவ ருதுவான முதல் ரத்தத்தால அவனைக் கொன்னு காவு வாங்கியிருக்கா..” கிழவன் கண் உருட்டி சொன்னபோது கிழவி வாயை பொத்திக்கொண்டு ‘கடவுளே!’ என்றாள்.

மங்கையின் அப்பாவிற்கு சந்தேகம். பெண் ருதுவானது வீட்டின் புழக்கடையில்… சாமிநாத டாக்டர் விழுந்து செத்தது எங்கோ வயல் வெளியில். இங்கிருந்து ஒரு பெண் தன் ரத்தத்தால் இன்னொருத்தனை கொல்வதாவது! காசுக்காக கதைவிடுகிறான் என்று நினைத்து “இந்தக் காலத்தில இதை யாராவது நம்புவாங்களா பெரியவரே..?” என்று கேட்டார்.

“நம்பலேன்னா போ… உருப்படியா ஒரு மயித்தையும் செய்ய மாட்ட நீ. கிணத்தில விழுந்து சாகப்போன உம் பொண்ண காப்பாத்தி புடிக்காத மாப்பிள்ளைக்கு கட்டி வெச்ச இல்ல… நீ பின்ன எத நம்பப் போற. உம் பொண்ணுக்கு நல்லது செய்ய மாட்ட, தெரிஞ்சிக்கோ! இவள பேய் புடிக்கல… அவளுக்குள்ள ரணம் இருக்கு; வேதனை இருக்கு. அதனாலதான் இப்படி தாண்டவமாடிகிட்டு இருக்கா. நம்ப மாட்டியா? போ இவ அப்படியே இருக்கட்டும் போ,” கிழவன் கோபமாக பேசவும் மங்கையின் அப்பா தன் இடக்குப் பேச்சை குறைத்துக்கொண்டார்.

“அவ கிணத்தில தவறித்தானே விழுந்தா… சாகணும்னு விழலையே!”

“இல்ல, நான் சாகத்தான் விழுந்தேன்…” என்று திருமங்கை இடையில் கத்தினாள். அவள் குரல் கிரீச்சிடும் வெளவாலின் சத்தமாயும் சிறு குழந்தை குரல் போல குழறியும் வந்தது. அது மட்டுமல்லாமல் அவள் அழவும் ஆரம்பித்தாள்; வாயில் கட்டை விரல் வைத்து சூப்பினாள்; உட்கார்ந்த இடத்தில் சிறுநீர் கழித்தாள். பெற்றவர்கள் வெடவெடத்துப் போனார்கள். பெண்ணுக்கு என்னதான் ஆயிற்று?

அழுத மங்கையை சமாதானப் படுத்தி உட்காரவைத்த கிழவன் அவள் கண் பார்த்தபடி சில விசயங்கள் சொன்னான். சிறு வயதில் ஒற்றைப் பிள்ளை என்பதால் மங்கை எத்தனை துடுக்காக வளர்ந்தாள் என்பதை, அவளை அடக்க ஊரில் யாருமே இல்ல என்பதை, அவள் அழுது அடம்பிடித்தால் வீடு எத்தனை ரணகலப்படும் என்பதை எல்லாம் சொன்னான் அவன்.

மங்கையை அடக்க ஒரே ஒருத்தன்தான் ஊரில் இருந்தான். அவன் சாமிநாத டாக்டர். வயது அறுபதுக்கு மேல். அவன் பெயரைக் கேட்டால் மங்கை வாய் பொத்தி ஒளிந்துகொள்வாள். மங்கைக்கு டாக்டர் பயம் வாட்டி எடுத்தது. அவள் சாப்பிட மறுத்தால், அழுது அடம்பிடித்தால், சொன்ன சொல் கேளாவிட்டால் அடுத்த நிமிடம் சாமிநாத டாக்டரிடம் போய் ஊசி போடுவதாய் மிரட்டுவார்கள் வீட்டில். அவள் சப்த நாடியும் ஒடுங்கி அடங்குவாள். டாக்டரின் ஊசியை நினைத்தால் அவளுக்கு காய்ச்சல் வருவது போல இருந்தது. ஒரு நாள் ஊசி பயத்தில் நிஜமாகவே காய்ச்சலும் வந்தது. வேடிக்கை என்னவென்றால் ஊசி பயத்தல் அந்த காய்ச்சலை சரி செய்யவும் அதே சாமிநாத டாக்டரிடம் போய் அதே ஊசி குத்தினார்கள். அவள் காலை உதைத்துக் கொண்டு அழுததில் ஊசி சதைக்குள் உடைந்து போனது…

விரல் சூப்பிக்கொண்டு சிறுநீர் கழித்த ஈர உடையோடு உட்கார்ந்திருந்த திருமங்கை “எனக்கு ஊசி வேணாம்பா… ஊசி வேணாம்… பயமா இருக்குப்பா! நான் சொன்ன பேச்சி கேப்பேன், அழமாட்டேன். ஊசி வேணாம்ப்பா…” என்று பிள்ளைபோல அழ ஆரம்பித்தாள். குமரிப் பெண் சிறு பிள்ளையாய் அழுவதைப் பார்க்க விசித்திரமாகத்தான் இருந்தது. ‘ஏய்…’ என்று கிழவன் அதட்டினான்… “நீ சிறு பிள்ளையா… வயசுக்கு வந்த பொம்மணாட்டி இல்ல நீ. இன்னும் ஊசிக்கு பயப்படுவியா? ஏருமைமாடு மாதிரி வளந்திருக்க… நினைவிருக்கா உனக்கு?”

திருமங்கை தடிமனான பிசிறு தட்டிய குரலில், கிழவனை முறைத்தபடி, பல் கடித்தபடி ஏசினாள். “எனக்கு கல்யாணமாயிட்டா… அதனால என்னடா? நான் எருமை மாடா வளந்திட்டா நான் மறந்து போவேனாடா அந்த வலிய…? டாக்டருக்கு பயந்து ராத்திரியான படுக்கையில மூத்திரம் போனது நீயா, நானாடா? படுக்கையில மூத்திரம் போன என்ன அதே டாக்டர்கிட்ட ஊசிபோட்டுடுவோம்னு சொல்லி மிரட்டினது உன்னையா, என்னையா… தெரியாதாடா உனக்கு? ராத்திரி கனவெல்லாம் ஊசி வந்து ஈட்டி ஈட்டியா பயமுறுத்தியிருக்காடா உன்ன? இன்னும் வலி இருக்குடா எனக்கு. இன்னும் புண் இருக்குடா பாரு பாரு…” மங்கை அழுதபடி சொல்லி தன் பிருஷ்டத்தை தொட்டுத் தொட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தாள்.

“ஏய், வாய மூடு! இல்லாட்டி சாமிநாத டாக்டரை கூப்பிட்டு ஊசி போட்டுடுவோம், ஆமா!” என்று கிழவன் சொன்னதும் திடுக்கிட்டு நிமிர்ந்த மங்கை வாய் பொத்தி, மூச்சடக்கி, கண் மிரள அமைதியானாள். பிறகு தளர்ந்து கண் மூடி சரிந்தாள். அவளை கொண்டு போய் படுக்கவைக்கச் சொன்ன கிழவன் சிரித்தபடி திருமங்கையின் அப்பாவை பார்த்தான். கிழவன் உண்மையிலேயே வித்தைக்காரனாகத்தான் இருக்கும் என்று நம்பினார் அப்பா. அவன் எது கேட்டாலும், சொத்தில் பாதி கேட்டாலும் தருவது என்று அவர் நினைக்க கிழவனோ திரும்பவும் குடிக்க தண்ணீர் மட்டும் கேட்டான்.

“என்ன பெரியவரே ஆச்சி அவளுக்கு ? என்னென்னவோ பேசறா… அவளுக்கு ஊசி போடும்போது ஊசி எதும் உடைஞ்சதா நினைவில்லையே எனக்கு”

“உண்iமாதான். அப்படி உடையாமகூட இருக்கட்டும். சின்ன வயசு புள்ளைக்கிட்;ட அதெதுக்கு ஊசி பயம் காட்டணும். சின்ன புள்ளைங்க பயத்தை என்னவிதமா பெருசு பண்ணிக்கும்னு உனக்கோ எனக்கோ தெரியுமா? நாம புள்ளைங்க தொந்தரவு பண்ணா, அடங்கலைன்னா, ‘மூணு கண்ணன் வந்துடுவான்’னு மிரட்டறோம். நமக்கு நல்லாத் தெரியும் சாமி! மூணு கண்ணன்னு ஒருத்தன் உலகத்தில இல்லேன்னு. ஆனா பிள்ளைங்க உலகத்தில மூணு கண்ணன் உண்டு; பேய் உண்டு; பூதம் உண்டு; அதுங்க மூணு கண்ணனை நெஜமாவே பாக்கும்; பேசும்; பயப்படும். நீ ஊசி, ஊசின்னு சொல்லி உம் புள்ளை உடம்பை எல்லாம் பொத்தலாக்கியிருக்க. அந்த ரணம் இன்னும் இருக்கு அது ஒடம்புல.”

“ஊர் உலகத்தில யாரும் புள்ளைங்கள அப்படி மெரட்டறதே இல்லையா?”

“எல்லா புள்ளைங்களும் ஒரே மாதிரியா? சில புள்ளைங்க மனசளவில பயப்படும.; சிலதுங்க உயிரளவுல பயப்படும். உம் புள்ளைக்கு உயிரளவுக்கு பயமிருக்கு. அது உள் மனசில டாக்டர்னா மூணு கண்ணன்னு ஒரு நெனைப்பிருக்கு. அதுக்கு வெளிப்படையா இதெல்லாம் தெரியாது.”

“சரி பண்ணிடலாந்தானே…?”

“சரி பண்ணிபுடலாம். அதுக்கு முன்னாடி எனக்கு பசியா இருக்கு… சாப்பாடு போடுங்க” என்றான் கிழவன். ஆற அமர நடு ராத்திரியில் வயிறு முட்டச் சாப்பிட்டான். பிறகு வெளியே சென்று ஒரு முழு சுருட்டை பற்றவைத்து புகைத்தான்.

“நாம்போயி தூங்கற அவ காதுல சில சங்கதிய சொல்ல வேண்டியிருக்கு. சொன்னா அவ மனசில இருக்கிற பயத்தோட வேருங்க அழிஞ்சி போவும். எழும்போது புது மனுசியா எழுவா… அப்ப அவளுக்கு குடுக்க வெல்லமும் பாலும் வேணும். நீ எடுத்துட்டு வா…” என்று பாட்டியிடம் சொன்ன கிழவன் தூங்கிக்கொண்டிருந்த மங்கையின் அறைக்குப் போனான்.

பாட்டி ஒரு உருண்டை வெல்லத்தையும் ஒரு செம்பு நிறைய பாலையும் எடுத்துக்கொண்டு அறைக்குள் போனவள் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தாள். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருப்பவர்களும் வந்தார்கள். அங்கே திருமங்கையின் அறைக்குள் கிழவன் இரண்டு அடி குத்துவிளக்கு பின்புறத்தில் குத்தி ரத்தம் ஒழுக சத்தமற்று செத்துக்கிடந்தான்.

கட்டிலுக்கு கீழ் பிருஷ்டத்தில் ரணமிருக்கும் ஒரு பெண் விலங்கின் ஊறுமும் மெல்லிய ஓசை அப்பொழுது யாருக்கும் கேட்கவில்லை. குத்துவிளக்கின் மேல் தவறி விழுந்து செத்ததாய் நம்பப்பட்ட அந்தக் கிழவனை, அவன் கொண்டுவந்த அழுக்கு மூட்டையோடு சேர்த்து அடக்கம் செய்தார்கள். அவன் ஆண்டாளம்மாவிடம் திருமங்கையின் மொத்தக் கதையையும் முதல் நாளே கேட்டுத் தெரிந்துகொண்டுதான் படி ஏறினான் என்று தெரிந்தபிறகு அவனை பெரும் வித்தைக்கார மருத்துவன் என்று நம்ப மறுத்தார் மங்கையின் அப்பா.

இன்று பெயர் தெரியாத ஊரில் உறவினர் வீட்டில் வாழும் திருமங்கை என்பவள் கல்யாணமானதில் இருந்து கணவனோடு சேர்ந்து வாழவில்லை என்பதை மட்டும்தான் சிலராவது பேசி மெல்ல மறந்து வருகிறார்கள். பச்சிலை மருந்து கொடுத்து, பேயோட்டி வயிறு வளர்த்து வந்த கிழவன், மருத்துவன் என்ற வெறும் பெயருக்காகவே குத்துபட்டு செத்த கதையை யாருமே பேசிக்கொண்டதில்லை. காரணம் தான் செத்து வீழ்ந்த விதத்தை அந்த ஊரில் யாருக்குமே சொல்லாமல் செத்துவிட்டிருந்தான் அந்த பேயோட்டும் அழுக்குக் கிழவன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *