தியாகத் திருநாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 18, 2022
பார்வையிட்டோர்: 3,606 
 
 

(1969 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சித்தீக் மரிக்கார் – சித்தீக் முதலாளி – என எல்லாரும் பட்டம் சூட்டி அவரை அழைக்க, அவர் சாதாரண சில்லறைக்கடை சிக்கந்தர் நாநாவின் மகனாக இருந்தார். சிக்கந்தர் நேர்மை மிகுந்த வியாபாரி. – ஏதோ உள்ளதைக் கொண்டு திருப்தியாக வாழ்ந்தார். சொந்த வியாபாரத்தில்தான் உண்மையான மேன்மை இருப்பதைக் கண்ட அவர், சித்தீக்கின் படிப்பை எஸ்.எஸ்.ஸியோடு நிறுத்தி, வியாபாரத்தில் ஈடுபடுத்தினார். சித்தீக், வியாபாரத்தில் நல்ல அனுபவம் பெற்றான். குறுக்கு வழியில் வியாபாரத்தில் பணம் சேர்த்தால் பெரிய செல்வந்தனாகலாம் என அவன் அடிமனம் கூறியது. ஆனால் வாப்பா இடையில் குறுக்கிடுவது அவனுக்கு தொல்லையாக இருந்தது.

சித்தீக்கின் இருபத்திரண்டு வயது பூர்த்தியாகும் பொழுது சிக்கந்தர் வபாத்தானார். வாப்பாவின் வபாத்துக்குப் பின் அவன் அடிமனம் போட்ட திட்டங்கள் செயல்படத் தொடங்கின. சாமான்களை பதுக்கி கூடுதலான விலைக்கு விற்கலானான். எதையும் கள்ள நோக்கத்துடன் செய்யத் தொடங்கிய அவனுக்கு பணம் பெருகத் தொடங்கியது. சிறு காணிகள், பரம்பரை சொத்துக்கள் உள்ள ஏழைகளிடம் அவர்கள் கஷ்டப்படும் நேரம் பார்த்து உதவி செய்வான். தனது உதவிக்கு ஈடாக காணியை குறிப்பிட்ட காலத்திற்கு தன் பெயருக்கு எழுதிக் கொள்வான். அதில் வரும் வட்டிகளை ஆதாயம் என்ற பெயரில் சுருட்டினான். காணியை அடகு வைத்தவர்கள் காலவரையறைக்குள் பாகம் திருப்பி எடுக்காவிடில் சட்டப்படி அவனுக்கு உரிமையாகிவிடும். இப்படியாக சித்திக்குக்கு நாளுக்கு நாள் காணி, பூமி. பணம் பெருகிக் கொண்டிருந்தது.

மளிகைக்கடை வியாபாரத்தைக் கைவிட்டான். வெளிநாடு களிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யத்தொடங்கினான். பிறநாட்டு வங்கிகளில் அவன் மூலதனம் பெருகியது. இந்நிலையில் அவன் உள்ளம், பெரிய திட்டமொன்றைத் தீட்டியது. அதுதான் பைசிகல்களை இறக்கமதி செய்தவற்குப் பதிலாக உள்நாட்டில் உற்பத்தி செய்வது; பெரிய லாபம் தரக்கூடிய தொழில். சுதேச கைத்தொழில்களுக்கு அரசாங்கம் உதவியளித்துக் கொண்டிருந்த காலம். இருந்தும் கூடுதலாக முதல் தேவைப்பட்டது. இதற்காக சுபைர் மரிக்காரின் உதவியை நாடினான். சுபைர் மரிக்கார் பெரிய பணமுதலை. சித்தீக்கின் திட்டம் அவருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. இருவரும் செயலில் ஈடுபட்டனர்.

பெரிய பண முதலைகள் ஒன்று சேர்ந்தால் பணத் திமிங்கிலங்கள் ஆகிவிடுவர். அதன் தன்மைக்கேற்ப….. பணம்… அது, மழையாகப் பொழியத் தொடங்கியது. ஆயிரம் பேர்கள் அவர்களுக்குக் கீழ் வேலை செய்தனர். இரத்தம்! அதை வியர்வையாகச் சிந்தினர் தொழிலாளர். சம்பளம் – நாள் கூலி. அதுவும் ஒரு நாள் உணவை பூர்த்திசெய்ய முடியாத சம்பளம். ஒரு நாளைக்கு மூன்று ரூபா. “ஏன்?” என்று கேட்க வழியில்லை . யூனியன் அமைப்பது தடைசெய்யப்பட்டிருந்தது. நான்கு தொழிலாளர் ஓரிடத்தில் கூடினாலும் விசாரணைக்குள்ளாக்கப்பட்டனர்.

இந்த நிலைமையில்தான் முற்போக்கு நோக்கங்கொண்ட தொழிலாளர் சிலர் ஒன்றுகூடி யூனியன் அமைத்தனர். இது முதலாளிமார்களுக்கு வயிற்றுக் கலக்கத்தை கொடுத்தது. அவர்கள் உடனடிச் செயலில் ஈடுபட்டனர். யூனியனில் சேர்ந்தோரை தந்திரமாக அழைத்து பொலிஸ்காரரின் குண்டாந்தடி உதவியுடன் பலாத்காரமாக கையொப்பம் வாங்கி உடனடி வேலைநீக்கஞ் செய்தனர்.

இடையில், தொழிலாளரை வாட்டி வதைக்க முன்னணியில் இருந்த சித்தீக்கை அதிர்ஷ்டம் சம்பூர்ணமாக தழுவிக் கொண்டது. அவன் திறமையில் முழு நம்பிக்கை கொண்ட சுபைர் மரிக்கார் தன் ஏகபுத்திரி ரஹீலாவை சித்தீக்கிற்கு மணமுடித்து கொடுத்தார். அத்துடன் வியாபாரத்தின் முழு உரிமையையும் அவனுக்கு எழுதிக் கொடுத்து விட்டார். பணம் அபரிமிதமாக அதிகரிக்க, வியாதியும் கூடியது. அவர் பணத்துக்குக் காவல் காக்கத் தொடங்கினார். எத்தனை டொக்டர்மார்; எவ்வளவு வைத்தியஞ் செய்தும் சித்திக்கின் நோய்கள் சுகப்படவில்லை. மாறாக இரத்த அமுக்கம், மூத்திர வியாதிதான் ஏற்பட்டது. வைத்தியர்கள் உணவை குறைக்கச் சொன்னார்கள். ஆனால் அவருக்குப் பசி எடுக்கவில்லை. பணக்காரர்களுக்கு எங்கே பசி எடுக்கும்? பசியென்றால் என்ன என்று திருப்பிக் கேட்டார். மாறாக… “பயம்…. பயம்…” என சொல்லிக் கொண்டு இருந்தார். மனப் பிராந்தி! மெய்க் காப்பாளர்கள் அவரை காவல் காத்தனர். நிம்மதி அவருக்கு ஏற்படவில்லை. கடந்துபோன சம்பவங்கள் விஷ்வ ரூபமெடுத்து கனவிலே அவரை வாட்டி வதைத்தன. இந்த நிலைமையில் சில மௌலவிகள் யோசனைகள் பல கூறினர். அவர்களின் யோசனைப்படி அழகிய பள்ளியொன்றை பெரிதாக நிர்மாணித்தார். விசாலமாக நாடே திரண்டு வர கந்தூரிகளைக் கொடுத்தார். இவ்வளவும் கொடுத்தும்….. நிம்மதி? அதுதான் அவருக்குக் கிடைக்கவில்லை . கடைசியில்….. ஹஜ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானது. ஹஜ் கடமைதனை நிறைவேற்றினால் அன்று பிறந்த பிள்ளைகளைப் போல் பாவங்கள் கழியும். நிம்மதியாக வாழலாம் என ஒரு நாள் ஹதீஸ் பிரசங்கத்தின் போது பள்ளிவாசலில் வைத்து பிரபல போதகர் ஒருவர் உரை நிகழ்த்தினார். இந்த ஒரு வார்த்தையும் பெரிய நிம்மதியை கொடுப்பது போல் இருந்தது. வெகுகாலமாக அவர் எண்ணிக் கொண்டிருந்ததும் இதுதான். வருடா வருடம் இன்கம்டக்ஸ் என அரசாங்கத்துக்கு எவ்வளவு பணம் கட்டுகிறார்! அதைக் கொண்டு ஒரு வருடம் ஜாலியாக குடும்பத்தாருடன் ஹஜ் என்ற பெயரில் உலகைச் சுற்றி ஒரு புறாஜல் செய்யலாம். அத்துடன் ‘அல்ஹாஜ்’ என்ற கௌரவப் பட்டமும் பெயருடன் ஒட்டிக் கொள்ளும். எனவே ஹஜ் செய்ய குடும்பத்தாருடன் கிளம்பினார்.

ஹஜ்…..! – இஸ்லாத்தின் ஐந்தாவது கடமை. எந்த நோக்கத் திற்காக உலக நாட்டு முஸ்லிம்கள் உலக இருதயத்தில் கூடுவார்களோ அந்த நோக்கங்களின் ஒரு நிகழ்ச்சி சித்தீக்கின் அலையுமனதிற்கு அமைதியைக் கொடுத்தது. போகும் பாதையிலே அதன் அடிப்படையை அல்லாஹ் அவனுக்கு உணர்த்தினான். ப

பெரிய விமானம். விமானம் மேலெழும்பி பறக்கும் பொழுது ஹாபிஸ் ஒருவர் ஹதீஸ் பிரசங்கமொன்றை நிகழ்த்தினார். “என் சொத்து, என் செல்வம் எனக் கூறும் மு. மீன்களே! இந்த விமானப் பயணமும் ஈமானின் உறுதியை மக்களுக்குப் போதிக்கிறது. கீழே சற்று நோக்குங்கள். பச்சைப் பசேலென்று உலகம் காட்சியளிக்கிறது. இதில் என் பங்களா, என் காணி, என் சொத்து என்று யாராலும் கூறமுடியுமா? அத்துடன் நிலங்களைப் பிரித்து கம்பியடிக்கிறீர்கள். சுவர் எழுப்புகிறீர்கள். அப்படியான காட்சியாவது உங்களுக்கு தெரிகிறதா? இதுதான் சமதர்மம் சமத்துவம். மக்கள் மத்தியில் நான் பெரியவன், நீ சிறியவன், நான் முதலாளி, நீ தொழிலாளி என்ற பேதம் இல்லை”

இப்பிரசங்கம் சித்தீக்கின் எண்ணத்தில் புயலாக வீசியது. விமானம் அரேபியாவை அடைந்தது. ஹாபிஸ் கூறிய வார்த்தைகள் அவர் எண்ணத்தில் சுழன்றன. கண்களிலே கண்ணீர் மல்க புனித க. பாவை நோக்கினார். கண்ணீர் ஆறாக ஓட க. பாவை வலம் வந்தார். இறைவன் சன்னிதானம் அவரைப் புனிதப்படுத்திக் கொண்டிருந்தது. உலக மக்களுடன் சேர்ந்து அவரும் ஹஜ் கடமைகளை சிறப்பாக நிறைவேற்றினார். – அவர் உள்ளத்தில் தெளிவும் அமைதியும் ஏற்பட்டது.

அன்று அல்ஹாஜ் சித்தீக் அவர்களுக்கு வரவேற்புக் கூட்டம். அழகான மேடை. அதில் பல பெரிய பிரமுகர்கள் உட்பட சித்திக்கும் வீற்றிருக்கிறார். மேடையில் பேசிய பிரமுகர்கள் யாவரும் சித்தீக்கின் புகழ் பாடினர். கடைசியில் அமோக ஆரவாரத்துக்கிடையில் சித்தீக் பேச எழுந்தார். கூட்டத்தில் அமைதி.

“அன்பார்ந்த சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

“இந்த கௌரவம் எனக்குத் தேவைதானா? கொடிய பாவக்குழியில் கழன்று வந்த எனக்கு துப்புரவான இதயம் படைத்த நீங்கள் தரும் வரவேற்பு தேவைதான். மனிதன் பிறக்கும் பொழுது இறப்பையும் சேர்த்துக் கொண்டேதான் பிறக்கிறான். பிறக்கும் யாவரும் இறப்பது நிச்சயம். இறந்த பின் எதைக் கட்டி கமந்து செல்வார்கள்? இதனால் இவ்வுலகில் வாழும் காலம் இறுமாப்பில் வாழ்வதில் என்ன பயன்? இதை நான் உணர்ந்து விட்டேன். புனித ஹஜ்ஜின் சிறப்பை நான் உணர்ந்து விட்டேன். இதுவரை பணத்தைக் கட்டிக் கொண்டு எங்கே நிம்மதியென அலைந்தேன். நிம்மதியற்ற வாழ்வும் வாழ்வா? இனியும் நான் அப்படி வாழப் போவதில்லை. பணத்தை பெட்டியில் பூட்டி அதற்கு காவல் காத்துக் கொண்டு நிம்மதியின்றி வாழும் செல்வந்தர்கள் நான் இப்பொழுது செய்யும் முடிவை ஏற்றுக் கொண்டால் உலகில் சாந்தியும் சகோதரத்துவமும் சமத்துவமும் தழைக்கும்.

“நான் செய்ததை நீங்கள் தியாகம் என்று எண்ணிவிட வேண்டாம். தியாகம் செய்ய நான் சக்தி வாய்ந்தவனல்ல. எனினும் ஒரு உண்மை இன்ஸான் செய்யும் கடமையைத்தான் நான் செய்யப் போகிறேன். வியர்வை நிலத்தில் சிந்த முன், வேதனத்தைக் கொடு என்றார் உலகத் தலைவர் – உத்தம நபி – முஹம்மது (நபி) – அவர்கள். இதை மறந்து நான் செயல்பட்டேன். நான் இதுவரை தருமம் கொடுத்தேன். அப்படிச் சொல்லவே எனக்கு வெட்கம். பிச்சைக்காரர் கூட்டத்தை நான் சமூகத்தில் வளர்த்து விட்டேன். தி ஏழைகள் மட்டுமல்ல சுரண்டும் கூட்டமும் இருக்கும் வரை உலகமே வாழாது. வாழவும் முடியாது.

“என்னுடைய தொழிலகத்தை தொழிலாளர்களிடம் ஒப்படைத்து யாவரும் பகிர்ந்து வாழ நிச்சயித்து விட்டேன்.”

கூட்டத்தில் பெரிய ஆரவாரம். விண்ணை முட்டுகிறது. மேடையில் பெரியோர் எனும் பிரமுகர்கள் பிரமித்து நிற்கின்றனர். எங்கும் “சித்தீக் ஹாஜியார் வாழ்க!” என்ற கோஷம் அவர்கள் காதைப் பிளக்கிறது.

– இன்ஸான் – 21.03.1969, மூன்றாம் தலாக் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மே 2007, முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கம், பாணந்துறை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *