கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.)
கதைப்பதிவு: August 11, 2012
பார்வையிட்டோர்: 15,495 
 
 

“தி கிரேட் கோஸ்ட்” கப்பல் மூலம் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்துகொண்டிருந்த ராபர்ட்ஸன், உடன் வந்த எந்த ஒரு கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியுடனும் உரையாடுவதையோ, மது அருந்துவதையோ தவிர்த்து தன் அறைக்குள் நாள் எல்லாம் நிலவியல் வரை படத்தை ஆராய்ந்தவாறே, பதினோரு நாள்கள் பயணம் செய்த போது இந்திய மலைச் சரிவுகளிலும், குறிப்பிட்ட குடும்பங்களாலும் வளர்க்கப்பட்டு வரும் விசித்திரத் s தாவரங்கள் பற்றியும் சங்கேதச் சித்திரங்களால் உருவான தாவர வளர்முறை பற்றிய குறிப்புகளையும், கிரகண தினத்தன்று தாவரங்கள் தங்களுக்குள் நடத்தும் உரையாடலை அறியும் சூட்சும சமிக்ஞைகள் குறித்தும் வியப்பும் பயமுமாக அறிந்தபோது, மீட்பரின் பண்டிகையான கிறிஸ்துமஸ் பிறந்து கம்பெனி அதிகாரிகள் உல்லாசிகளாகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

அதிகாரிகள் பலரும் இந்தியாவுக்குப் பல முறை வந்து போனவர்களாக இருந்தததால், போதையின் சுழற்சியில் ஸ்தனங்கள் பருத்த கருத்த பெண்களையும், வேட்டையாடும் வனங்களைப் பற்றியும், துப்பாக்கி அறியாத மக்களின் முட்டாள்தனம் பற்றியும் உளறிக் கொண்டிருந்தனர்.

திரிகூட மலை தாண்டவராய சுவாமிகளின் “தாவரங்களின் ரகசிய வாழ்க்கை” என்ற நூலைப் பற்றி அறிந்திருந்த ராபர்ட்ஸன், அதன் மூலப்பிரதி எங்கும் கிடைக்காததைப் பற்றி யோசித்த படியே உல்லாசிகளின் குரல் கேட்காத தன் அறையில் திர்கூடமலை குறித்த மனப்பதிவுகளை எழுதிக் கொண்டிருந்தான். இதுவரை மேற்கு உலகம் அறிந்திருந்த தாவரவியல் அறிவு எல்லாவற்றையும் துகளாக்கச் செய்யும் தாண்டவராய சுவாமிகளின் மூலப் பிரதியைத் தேடுவதற்கான வழிமுறைகளைத் தயாரித்திருந்தான். அத்தோடு கிரகணத்தன்று நடக்கும் தாவரங்களின் உரையாடலைப் பதிவு செய்வது இந்தப் பயணத்தின் சாராம்சம் எனக் கொண்டிருந்தான். தாவரவியல் பற்றிய இந்திய நூல்கள் யாவும் கற்பனையின் உதிர்ந்த சிறகுகளான கதை போல இருந்தது ஆச்சரியமாகவே இருந்தது.

கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாள் இரவு கப்பலின் மேல் தளத்தில் வந்து நின்ற போது அவன் முகம் வெளிறியும், கடற்பறவைகளின் விடாத அலையைப் போல அதிர்வு கொண்டதாகவுமிருந்தது. தன்னுடைய சாம்பல் நிறத் தொப்பியை ஒரு கையில் பிடித்தபடி கடலின் அலைகளை அவன் பார்த்துக்கொண்டிருந்த போதும்கூட தாண்டவராய சுவாமிகளின் நினைவிலிருந்து மீள முடியாமலே இருந்தது. இந்திய வாழ்வின் புதிர்ப்பாதைகளில் எல்லாக் குடும்பத்தின் உள்ளும் ஒளிந்திருக்கும் ரகசியக் குறியீடுகள், அவர்களின் மாய வினோதக் கற்பனைகள் குறித்தும் அவன் நினைத்துக் கொண்டிருந்தான். கப்பலில் பயணம் செய்த ஒரேயொரு ராபர்ஸன் அறையில் விளக்கு எரிவதைப் பார்த்துப் போனாள். உறக்கமற்றுப் போன அவன் பிதற்றல் சத்தம் அவள் அறையில் தினமும் கேட்டபடியே இருந்தது. யாருடனோ பேசுவது போல தனக்குள்ளாகவே அவன் பேசிக் கொண்டிருந்தான். இரவு உணவு கொண்டு வரும் ஸ்பானியச் சிறுவன் பார்த்தபோது கண்கள் வீங்க காகிதங்களுக்கிடையில் வீழ்ந்து கிடந்தான் ராபர்ட்ஸன். அவனது பூனை துப்பாக்கியின் மீது உறங்கிக் கொண்டிருந்தது. மருத்துவர் வந்து அவனுக்குச் சிகிச்சை தந்த நான்காம் நாளில் பகலில் அவன் ஒரு கையில் பூனையும் மறு கையில் கறுப்புத் தொப்பியுமாக மேல் தளத்துக்கு வந்தான். அவனது பூனை கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. மீன் குஞ்சுகள் பூனையில் நிழலைத் தண்ணீரில் கண்டு விலகி உள் பாய்ந்தன. அன்றிரவு அவன் கனவில், சிறு வயதில் அவன் கேட்ட இந்தியக் கதைகளில் இருந்த சாப்பாடு பூதங்கள் வயிறு பருத்து வீங்க, கப்பலை விழுங்கி ஏப்பமிட்டன.

கப்பல் கரையை அடையவிருந்த மாலையில் அவன் பூனையுடன் தன் பெட்டிகளைத் தயாரித்துக் கொண்டு நிலப்பகுதிகளைப் பார்த்தபடி வந்தான். கப்பலை விட்டு இறங்குமுன்பு ஒரு பாட்டில் மது அருந்திவிட்டு புட்டியைக் கடலில் தூக்கி எறிந்தான். கடலில் சூரியன் வீழ்ந்தது. மீன் படகுகள் தெரியும் துறைமுகம் புலப்படலானது. இதுவரை அறிந்திராத நிலப்பகுதியின் காற்று பூனையில் முதுகினை வருடிச் சென்றது. அது கண்கள் கிறங்க, கவிந்த மாலைப் பொழுதைப் பார்த்தபடியே ராபர்ட்ஸனுடன் குதிரை வண்டியில் பயணம் செய்தது.

ஏழு நாட்களுக்குப் பிறகு அவன் மதராஸ் வந்து சேர்ந்தான். அன்று விடுமுறை நாளாக இருந்ததால் நகரில் மக்கள் கூட்டம் அதிகமில்லை. கடற்கரையெங்கும் பறவைகளே அமர்ந்திருந்தன. ஒன்றிரண்டு குழந்தைகள் மீன் வலைகளை இழுத்தபடியே தூரத்தில் அலைந்தனர். கடற்கரை வேதக் கோவிலுக்கு ஜெபம் செய்ய நடந்துகொண்டிருக்கும் வழியில் ஆறு விரல் கொண்ட பெண்ணொருத்தி கையில் நார்க்கூடையுடன் வெற்றிலை ஏறிச் சிவந்த பல்லுடன் ராபர்ட்ஸனைப் பார்த்துச் சிரித்தாள். சிவப்புக் கட்டடங்களும், நாணல் வளர்ந்த பாதையோர மரங்களும், தென்னை சரிந்த குடில்களும் கொண்ட அந்தப் பிராந்தியம் கனவிலிருந்து உயிர் பெற்றது போல இருந்தது. பிரார்த்தனையை முடித்துவிட்டு வரும் போது வெல்சி மாளிகையிலிருந்து வந்து தனக்காகக் காத்துக்கொண்டிருந்த கோமதிநாயகம் பிள்ளையைச் சந்தித்தான் ராபர்ட்ஸன். அப்போது பிள்ளைக்கு ஐம்பத்தியிரண்டு வயதாகிக் கொண்டிருந்தது. அவரது மனைவி எட்டாவது குழந்தையைக் கர்ப்பம் கொண்டிருந்தாள்.

ஆறு விரல் கொண்டவளைத் திரும்பும் வழியில் சந்தித்தபோது அவளிடம் விலக்க முடியாத கவர்ச்சியும் வசீகரமும் இருப்பதை அறிந்து நின்றான் ராபர்ட்ஸன். அவன் முகத்துக்கு எதிராகவே அவள் சொன்னாள், “அருவி, பெண்கள், விருட்சங்கள், இவற்றின் மூல ரகசியங்களைத் தேடாதே. போய்விடு” அவள் சட்டென விலகிப் போகும்போது அவன் கையில் ஒரு மரப்பொம்மையைக் கொடுத்துவிட்டுப் போனாள். அந்த மரப் பொம்மைக்கு ஆண், பெண் இரண்டு பால்குறிகளுமேயிருந்தன. அதன் உடலில் ஏராளமான சங்கேத மொழிகள் செதுக்கப்பட்டிருந்தன. கையளவில் இருந்த அந்தப் பொம்மையை மறத்தபடியே அவளைப் பற்றி கோமதிநாயகம் பிள்ளையிடம் கேட்டுக் கொண்டு வந்தான் ராபர்ட்ஸன். அவள் குறி சொல்லும் கம்பளத்துக்காரி எனவும், அவர்கள் வாக்கு பலிக்கக் கூடியது எனவும் சொல்லியது, அவள் கறை படிந்த பல்லில் வசீகரத்தில் சாவு ஒளிந்திருந்ததை அவனால் உணர முடிந்தது.

பிள்ளையுடன் அடுத்த நாள் திரிகூட மலையைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தான். எல்லா துரைகளையும் பிடித்து ஆட்டும் வேட்டையின் தீராத ஆசை ராபர்ட்ஸனையும் பிடித்திருக்கும் என நினைத்துக் கொண்டார். என்றாலும் அவன் ஏதோ சுவாமிகள் சுவாமிகள் என அடிக்கடி புலம்புவதையும் விசித்திரத் தாவரங்களைப் பற்றிக் கேட்பதையும் கண்டபோது ‘எதுக்கு இப்பிடி கோட்டி பிடிச்சு அலையுதான்’ என அவராகவே சொல்லிக் கொண்டார். ராபர்ட்ஸன், மதராஸில் தனியே சுற்றி பழைய மொகலாயக் காலகட்டத்தில் ஒளிந்திருந்த புத்தகக் கடைகளில் தேடி தாவர சாஸ்திர நூல்களையும், அரண்ய கதாசரித பிரதியையும் வாங்கிவந்தான். குடும்பங்களில் பரம்பரையாக இருந்து வரும் சில தாவரங்கள் காலத்தின் நீள் கிளைகளாக உயிர் வாழ்ந்து சில அதீத சக்திகள் பெற்றுவிடுவதையும், ஆண் பெண் உறவின் எல்லா ரகசியங்களையும் அவர்களுக்குக் கற்றுத் தருவது அந்தத் தாவரங்களே எனவும், அத்தாவரங்கள் குடும்பத்தின் பூர்வீக ஞாபகங்களைச் சுமந்தபடியே இருப்பதால் அவை ஒளிரும் தன்மை அடைகின்றன என்பதையும் அறிந்தான். இன்னமும் போதை வஸ்துகளாகும் செடிகளைப் பற்றியும், ரகசியங்களைத் தூண்டும் கொடிகள், கன்னிப் பெண்களின் நிர்வாணம் கண்டு கனவில் பூக்கும் குளியலறைப் பூச்செடிகளையும், குரோதத்தின் வாசனையை வீசி நிற்கும் ஒற்றை மரம், ஆவிகள் ஒளிந்திருக்கும் மரக்கிளைகளின் கதைகளை அறிந்த போது அவன் வேட்கை அதிகமாகிக் கொண்டே போனது. ராபர்ட்ஸனின் பூனை சுற்றுப்புறங்களில் அலைந்து பழகிக் கொண்டிருந்தது. பச்சை நிறக் கண்களும், கறுப்பு உருவும் கொண்ட இந்தப் பூனை நடக்கும் வெளியைக் கடந்துவிடாமல் விலகி சிறு பாதைகளில் பதுங்கிச் சென்றனர் பெண்கள்.

கோமதிநாயகம் பிள்ளை திரிகூட மலைக்குப் போவதற்கான பயண ஏற்பாடுகளைச் செய்திருந்தார். ராபர்ட்ஸன் மனைவிக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். கடிதத்தின் கடைசி வரியை முடிக்கும் முன்பு யாரோ கதவைத் தட்டும் சப்தம் கேட்டு வெளியே வந்த போது, ஆறு விரல் கொண்ட பெண் தொலைவில் போய்க் கொண்டிருந்தாள். அவன் வாசல் படியில் சேவலின் அறுபட்ட தலை ரத்தம் கசிய வெறித்துக் கிடந்தது.

திரிகூட மலையில் எண்ணற்ற அருவிகள் வீழ்ந்துகொண்டிருந்தன. கல் யாளிகளும், சிங்கமும், நீர்வாய் கொண்ட கல் மண்டபங்களும், பெயர் தெரியா மரங்களும், குரங்குகளும் நிறைந்த திரிகூட மலையில் குகைகளுக்குள் துறவிகளும்,சித்தர்களின் படுகைகளும், ஏன் நீர்ச்சுனைகளும் வால் நீண்ட தட்டான்களும், இதய வடிவ இலை நிரம்பிய புதர்ச்செடியும், பாறைகளும், கருத்த பாறைகளும், உறங்கும் மரங்களும், நீலியின் ஒற்றை வீடும், மர அட்டைகளும், காட்டு அணில்களும், இறந்துபோன வேட்டையாள்களின் கபாலங்களும், யானைகளின் சாணக்குவியலும், படை ஈக்களும், சொறியன் பூக்களும், நீர்ச்சுனையில் தவறி விழுந்து இறந்து தேன் வட்டுகளும் போன்றவர்களின் வெளிறிய ஆடைகளும், புணர்ச்சி வேட்கையில் அலையும் குடியர்களும், கள்ளச் சூதாடிகளும், முலை அறுந்த அம்மன் சிலையும், பன்றி ரத்தம் உறைந்த பலிக்கல்லும், ஸ்தனங்களை நினைவு படுத்தும் கூழாங்கற்களும், சாம்பல் வாத்துகளும் இருந்தன. ராபர்ட்ஸன் வந்து சேர்ந்தபோது மழைக்காலம் மிதமிருந்தது. பின்பனிக்காலமென்றாலும் மழை பெய்தது. மலையின் ஒரு புறத்தில் வெயிலும், மறுபக்கம் மழையுமாகப் பெய்த காலை ஒன்றில் திரிகூட மலை முகப்பில் வந்து சேர்ந்திருந்தான். மரங்களை வெறித்தபடி வந்த அவனுடைய பூனை, மாமிச வாடையைக் காற்றில் முகர்ந்தபடியே தலையை வெளியே தூக்கியது.

திரிகூட மலையின் பச்சை, உடலெங்கும் பரவி ஆளையே பச்சை மனிதனாக்கியது. நெடுங்காலமாகத் தான் வரைபடங்களிலும் கற்பனையிலும் கண்டிருந்த திரிகூட மலையின் முன்னே நேரிடையாக நின்று தனக்குள்ளே புலம்பிக்கொண்டு ஒடுங்கி நின்றது. மனிதப் பேச்சுக்குரல் அடங்கிய பெருவெளியொன்று மலையின் கீழே வீழ்ந்திருந்தது. வெயில் நகர்வதும், மழை மறைவதுமான ஓட்டம் தொடர்ந்துகொண்டிருந்தது. எல்லாப் பாறைகளும் அரவம் கண்டு திமிறி நின்றன. கையிலிருந்த பூனையைக் கீழே இறக்கிவிட்டபடி இரட்டை அருவியின் வழியில் நடந்தான் ராபர்ட்ஸன். பாதை எங்கும் சிவப்புப் பூக்கள் வீழ்ந்திருந்தன. எண்ணற்ற பாசி படர உறைந்து கிடந்தனர். பகல் நீண்டுகொண்டிருந்தது. வேட்டையாள்களின் தடங்கள் மிஞ்சியிருந்தன. அருவியின் இரைச்சலைக் காற்று மலைமீது வாரி இறைத்துக் கொண்டிருந்தது. வழிகளை அடைத்துவிட்ட பாறைகளில் கால் தடங்கள் அழிந்து இருந்தன. வழியெங்கும் சிறு குகைகள் தென்படலாயின. அவன் சிறு குகைகளாயிருந்ததால் துர்வாடையும், மண் கலயங்கள் உடைந்து கிடப்பதையும் எல்லாக்குகையும் பெண்ணின் வாடையையே கொண்டிருந்தது எனவும் அறிந்தான். குகையின் உள்புறத்தின் வெக்கையில் வௌவால்கள் உறங்கிக்கொண்டிருந்தன. ஒன்றிரண்டு குகைகளில் நீர்ச்சுனைகள் இருப்பதையும் அவற்றின் மீது கண் வடிவப் பாறைகள் அடைக்கப்பட்டிருந்ததையும் கண்டான். இரட்டையருவியின் பின் வழியெங்கும் மரங்கள் அடர்ந்திருந்தன. இலைகள் உதிர்ந்த ஒன்றிரண்டு மரங்கள் மட்டும் வனத்தையே வெறித்தபடியிருந்தன. ஆள் நடமாட்டம் குறைந்த வனப்பகுதி போலிருந்தது. பூனை எங்கோ சுற்றி உடலெங்கும் காட்டு ஈக்கள் அப்பிக்கொள்ள தலையைச் சிலுப்பி வந்தது. ராபர்ட்ஸன் ஈக்களை விரட்டுவதற்காக நெருப்பைப் பற்ற வைத்தான். பூனை நெருப்பின் சுடர்களை நோக்கி தன் நாக்கைச் சுழற்றியது. முதல் நாளின் மாலை வரை இரட்டை அருவியின் பின் வழியெங்கும் அலைந்து திரும்பினான் ராபர்ட்ஸன். அவனது எல்லா வரைபடங்களும் விளையாட்டுப் பலகை போலாகிவிட்டன. எல்லா வழிகளும் அடைபட்டு இருந்தன. அல்லது பாதி வழிகள் அறுந்து போயிருந்தன.

கோமதிநாயகம் பிள்ளை இரவு ராபர்ட்ஸனைச் சந்தித்தபோது அவன் மிகுந்த ஏமாற்றம் கொண்டவனாகவும், கசப்பின் சுனைகள் ஊறிப்பீறிடுபவனாகவும் இருந்தான். அவனால் எந்த ஒரு வழியையும் காண இயலவில்லை. அடுத்த நாள் கோமதிநாயம் பிள்ளை ராபர்ட்ஸனை கூட்டிக்கொண்டு கூடங்காவு கிராமத்துக்குப் போனார். ஓட்டு வீடுகள் நிறைந்த ஊரின் மீது வெயில் இறங்கிக் கொண்டிருந்தது. பசுக்களும் குழந்தைகளும் நிறைந்த அந்த ஊரில் தான் தோன்றியா பிள்ளையின் வீட்டுக்குள் இருவரும் சென்றனர். நீர் உடம்பும், கருத்த பாதங்களும் கொண்ட தான் தோன்றியா பிள்ளை ராபர்ட்ஸனைக் கண்டதும் வரவேற்று இருக்கச் சொன்னார். அன்றெல்லாம் தொடர்ந்த பேச்சின் பின்பு பிள்ளைவாள் உள் அடுக்கில் வைத்திருந்த சாஸ்திரப்புத்தகங்களையும் ஏடுகளையும் கொண்டுவந்து காட்டியபின் ராபர்ட்ஸன் அவரிடம் கேட்டான்.

“தாவரங்கள் பேசக்கூடியதா, விசித்திர தாவரங்கள் இங்கேயும் இருக்கிறதா?”

உள்கட்டு வரை நடந்து போய்த் திரும்பிய தான் தோன்றியா பிள்ளை பெண்கள் எவரும் இல்லையென்பதை ஊர்ஜிதம் செய்து கொண்ட பின்பு மெதுவாகச் சொன்னார்.

“பேசக் கூடியதுதான், வீட்டுப் பெண்கள் இதைக் கேட்டிரக் கூடாதுன்னுதான் ரகசியமா சொல்றேன். தாவரங்கள் பேசக்கூடியது, ரகசியம் தெரிஞ்சது, மனுசாளைப் போல தசைகளும் கூட உண்டுன்னு தாண்டவராய சுவாமிகள் சொல்லியிருக்காரு”

தாண்டவராய சுவாமிகள் பேரைக் கேட்டதும் ராபர்ட்ஸன் விழிப்புற்று, அவரைப் பற்றிய தகவல்களைக் கேட்கத் தொடங்கினான். தனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாதென்றும், வனத்தில் அவர் நிர்வாணியாக இருந்தவர் என்றும், அவர் ஊருக்குள் வரும் நாட்களில் வீடுகளை அனைவரும் அடைத்துக் கொள்வர், பெண்கள் எவரும் குறுக்கே வர மாட்டார்கள் என்றும் அவருக்குத் தானியங்கள் தரப்பட்டன என்றும் சொல்லிய பின்பு கடைசியாக சுவாமி பால்வினை நோய் வந்து மரித்துப் போனார் என்பதையும் சொன்னபோது ராபர்ட்ஸனால் இவை புனைவு என்பதாகவே புரிந்து கொள்ள முடிந்தது.

மழைக்காலம் முழுவதும் ராபர்ட்ஸன் பலரையும் சந்தித்துத் திரும்பினான். தாண்டவராய சுவாமிகளைப் பற்றி அறிந்திருந்த பலரும் கூட அவரைப்பற்றிய கதைகளையே எடுத்துக்கூறினர். கதைகளில் அவர் மலை விட்டு கீழ் வரும்போது மரங்களை உடன் கூட்டிவரச் செய்யக் கூடியவர் என்றும், மரங்களின் விசித்திர ஆசைகளைப் பூர்த்திசெய்ய இளம்பெண்களின் உடலை அறியச் செய்தவர் என்றும், அவர் ஒரு தந்திரவாதி என்றும், பாலியல் போக முறைகளைக் கண்டறிந்தவர் என்றும் கதை வழி பிரிந்துகொண்டே போனது. எவரிடமும் ‘தாவரங்களின் ரகசிய வாழ்க்கை’ நூலின் மூலப்பிரதி கிடைக்கவே இல்லை. பதிலாக ஆறுவிரல் கொண்டவராக, நீண்ட ஜடை முடியும் மெலிந்த உடலுமான தாண்டவராய சுவாமிகளின் உருவப்படத்தையே அவர்கள் காட்டினர்.

மழைக்காலம் நின்ற பின்பு திரிகூட மலையின் வழிகள் திறந்து கொண்டன. பின்னிரவு முடியும் முன்பு மலையின் உள்புறத்தில் புகுந்து நடக்கத் தொடங்கிய ராபர்ட்ஸன், ஒரு வார காலத்துக்குத் தேவையான உணவைத் தன்னுடனே எடுத்துச் சென்றான். வனத்தின் இருண்ட பாதைகள் வெயில் வரவால் விலகத் தொடங்கின. பாறைகளில் இருந்த மஞ்சள் பூச்சிகள் உதிரத் தொடங்கியிருந்தன. தூர் பெருத்த மரங்கள் பெருமூச்சிட்டவாறே இருந்தன. பாறை வழிகளில் உள்ளே இறங்கிப் போன பின்பு வனத்தின் உள் அடுக்குகளுக்கு வந்து சேர்ந்தான் ராபர்ட்ஸன். வனம் ஒரு பசுமையான கோப்பை போலிருந்தது. எல்லாப் பொருள்களும் வடிவம் சிதறிப் போயிருந்தன. பாறைகளும், விருட்சங்களும் இன்றி வேறு எவற்றையும் காணவில்லை அவன். பகலை விட இரவில் அவன் மிகுந்த குளிர்ச்சியையும் பசுமையையும் உணர்ந்தான். எங்கோ கிசுகிசுக்கும் சப்தங்களும், சிறகு ஒலிகளும் கேட்பதும் அடங்குவதுமாக இருந்தன. பிணைந்து கிடந்த இரட்டை மரங்களின் உடல்கள் தெளிவுற்றன. சர்ப்பங்கள் ஒளிந்த உயர் மரங்களின் மீது இருள் இறங்கியிருந்தது. பாதி ஒடிந்த அம்புகள் பாய்ந்த மரங்களைக் கண்டபடியே அடுத்த நாளில் அவன் இன்னமும் அடி ஆழத்தில் நடந்து சென்றான். இப்போது மரங்கள் தனித்தனியாகவும் மூர்க்கம் கொண்டுமிருந்தன. கல் உருப்பெற்ற மரங்கள் ஈரம் உறிஞ்சிக்கொண்டிருந்தன.

மூன்றாம் நாள் காலை அவன் பூனை மிகுந்த கலக்கமுற்று எல்லாச்செடிகளுக்கும் பயந்து அலைந்தது. பூனை விரல்கள் பட்டதும் சில இலைகள் மூடிக்கொண்டன. தனியே பறக்கும் வண்ணத்துப் பூச்சிகள் பூனையின் மேலே பறந்து பார்த்துச் சென்றன. பாறையிலிருந்து தாவ முயன்று வீழ்ந்த பூனையின் சப்தம் கேட்டு, அதன்பின் இறங்கிய ராபர்ட்ஸன் எவருமே கண்டறியாத அருவியைப் பார்த்தான்.

மிகுந்த உயரத்திலிருந்து வீழ்ந்துகொண்டிருந்த அருவியது. பாறையின் விளிம்பிலிருந்து எழுந்து வீழ்ந்து கொண்டிருக்கும் அருவியின் பிரம்மாண்டம் இதுவரை அறியாததாக இருந்தது. அதைவிடப் பெரிய விநோதமாக இருந்தது அந்த அருவி சப்தமிடாதது. இத்தனை உயரத்திலிருந்து வீழ்ந்த போதும் அருவியில் துளி சப்தம் கூட இல்லை. பிரம்மாண்டமாக மவுனம் வீழ்ந்து கொண்டிருப்பது போல இருந்தது. சப்தமில்லாத அருவியை அவன் முதல் முறையாக இப்போதுதான் பார்க்கீறான். நீரின் அசைவு கூடக் கேட்கவில்லை. நீர் வீழ்ந்து ஓடும் ஈரப்பாறைகளுக்குள் ஒரு விலங்கைப் போல வீழ்ந்தபடி அருவியின் தோற்றத்தைப் பார்த்தபடியே இரண்டு நாட்கள் கிடந்தான். எங்கும் சப்தமில்லை. அருவியின் சப்தம் எங்கு சென்று பதுங்கிக் கொண்டது எனப் புரியவில்லை. பூக்கள் படர்ந்த பாறையில் படுத்திக் கிடந்த பூனையும் இந்த விசித்திரக் காட்சியின் வியப்பில் தன்னை விடுவிக்க முடியாமல் கிடந்தது. அவன் மூன்றாம் நாள் எழுந்து அருவியின் ஊடே சென்று நின்றான். வேகமும் குளிர்ச்சியும் நறுமணமும் கொண்ட அருவி, அவனைப் புரட்டித் தள்ளியது. அருவியின் வலப்புறம் எங்கும் பூத்துக்கிடந்த வெள்ளைப் பூச்செடிகளைப் பார்த்தபடியே கிடந்தான். அந்தப் பூக்கள் எட்டு இதழ் அமைப்பு கொண்டதாகவும் குழல் போன்றும் இருந்தன. ஒரேயொரு வெள்ளைப் பூச்செடியை மண்ணோடு பேர்த்துக் கொண்டான். அருவியின் வரைபடத்தைப் பகல் முழுவதும் வரைந்து முடித்துவிட்டான். சப்தமில்லாத அருவியின் சிரிப்புத் தாங்காது, அவன் தப்பி பாறைகளின் மீது ஊர்ந்து, ஆறு நாட்களுக்குப் பின்பு ஊர் வந்து சேர்ந்த போது அவனுக்கு நீர் ஜுரமும் பிதற்றலும் கண்டிருந்தன. கோமதிநாயகம் பிள்ளை வைத்தியம் செய்த பின்பு, அவன் குணமாகினான். என்றாலும் சப்தமில்லாத அருவியைப் பற்றிய சிந்தனை அவனை மிகுந்த மனவேதனைக்கு உட்படுத்தியது. வனத்தில் இருந்து திரும்பிய பின்னாட்களில் அவன் நடவடிக்கையிலும் மாற்றம் கண்டது. ஒரு இரவில் அவன் கண்ட கனவில் உடலே பெரிய மலையாகி உடல் உறுப்புகள் விருட்சங்காளாகியிருந்தன. இதயத்திலிருந்து, உடல் எங்கும் ரத்தம் சப்தமில்லாத அருவியைப் போலப் பொங்கி தலை முதல் கால் வரை ஓடிக்கொண்டிருந்தது. சப்தமில்லாத அருவி ஓடும் வனம் உடல்தான் என்றும், தாவரங்களில் ரகசிய வாழ்க்கையில் குறிப்பிடப்படும் தாவரம் மனிதன் தான் எனவும், மனித உடலில் புதைந்திருக்கும் விருட்சங்கள் தான் பேசக்கூடியவை, ரகசிய இச்சைகள் கொண்டவை என்றும் புரிந்து கொண்ட பிறகு அவன் ஆடைகளை எல்லாம் துறந்து விட்டு, தனது கறுப்புப் பூனையுடன் திரிகூட மலையில் அலைந்து திரியத் தொடங்கினான்.

பளியப் பெண்கள் பலமுறை சருகுகளுக்குள் வீழ்ந்துகிடந்தபடி கிடக்கும் பூனைச் சாமியாரைப் பார்த்துப் போயிருக்கிறார்கள். அவன் உடலில் அட்டைகள் கடித்த வடுக்களும், தோல் வெடிப்புகளும் கண்டிருக்கிறார்கள். அவனது பூனை குணம் மாறி எப்போதும் கத்தி அலைந்தது. மரங்களைப் பிராண்டியபடி அலைந்ததையும் காற்றில் தெரியும் எதோ உருவத்தை அது துரத்திக் கொண்டு போவதையும் பார்த்திருக்கிறார்கள். பூனைச் சாமியாரின் முகம் முழுவது கோரை மயிர்கள் பெருத்துவிட்டன. அவர் பளிய கிராமங்களுக்கு வந்து சில நாள்கள் இருப்பதும் உண்டு என்றாலும் யாருடனும் பேசுவதைத் தவிர்த்துப் போன அவரை உடலில் ஒளிந்திருந்த விருட்சங்கள் தூண்டிக்கொண்டேயிருந்தன. கிரகணத்தன்று எல்லோரும் வீட்டினுள் சென்று பதுங்கிக் கொண்டனர். அன்று பூனைச் சாமியார் மலை கிராமத்துக்குப் போனபோது ஊரே வெறித்துக் கிடந்தது. பளியர்கள் தாவரங்கள் பேசிக்கொள்ளும் நாள் இது என அவருக்குச் சொன்னார்கள். அவர் மலையின் இடப்புறமிருந்து கீழே இறங்கினார். கிரகணம் படரத்தொடங்கியது. பகல் கறுத்து வனத்தின் மீது இரவு வீழ்ந்தது. ஈக்களும் நுழைந்து விடாத இருள். மரங்கள் தலையத் தாழ்த்திக் கொண்டன. கிளைகள் நீண்டு ஒன்றின் மீது ஒன்று புரண்டன. சிறு செடிகள் துடிக்கத் தொடங்கின. இலைகளின் ஸ்பரிசமும், மெல்லிய வாசமும் ஏதோ ஒரு வித மயக்க நிலையை உருவாக்கின. ஒன்றிரண்டு பூக்களின் இதழ்கள் விரிந்து எதிர்ச்செடியின் இலைகளைக் கவ்விக் கொண்டன. பூமியெங்கும் நீரோட்டம் போல வேர்கள் அதிரத்தொடங்கின. மரங்களின் மூச்சுக் காற்று சப்தமிட்டது. உடலை நெகிழ்த்தி மரங்கள் வேட்கை கொண்டன. கல்மரங்கள் மெல்ல ஒளிரத்தொடங்கி, பின் தங்கள் கிளைகளை நீட்டின. உறங்கிக்கொண்டிருந்த ஓரிரு மரங்கள் கூட விழிப்புற்று இச்சையைப் பகிர்ந்து கொண்டன. வனமெங்கும் மெல்லிய தாவரங்களின் உரையாடல் அதுதான் எனப்பட்டது பூனைச் சாமியாருக்கு.

ஒன்றையொன்று கவ்விக் கொண்ட இலைகளின் நரம்புகளில் இருந்து ஒளி கசிந்துகொண்டிருந்தது. சர்ப்பங்களைப் போல மூர்க்கமற்று மரங்கள் பிணைந்துகொண்டன. மலைப்பாறைகளில் இருந்த தனி மரங்கள் இடம்பெயர்ந்து இறங்கி வருவது போல உடலை விரித்துப் பாறை விளிம்பில் நின்ற பூமரங்களின் கனிகளைச் சுவைக்கத் தொடங்கியது. எண்ணற்ற விதைகள் உதிரத் தொடங்கின. கிரகணம் விலகத் தொடங்கி மெல்ல வெயில் கீறி வெளிப்படத் தொடங்கியதும் இலைகள் சுருள் பிரிந்து மீண்டன. மரங்கள் உடலை நேர் செய்து கொண்டன. பாதி தின்ற பழங்கள் துடித்தன. பூக்களின் மீது விடுபட முடியாத இலைகள் அறுபட்டன. வெயில் ததும்பியதும் மரங்கள் ஆசுவாசமும், இச்சையின் துடிப்பும் வனமெங்கும் நிரம்பின. காற்று லாஹரி போன்ற வாடையைப் பரப்பியது. வனம் தன் இயல்பு கொண்டு ஒடுங்கிற்று. இதுவரை தான் கண்டவை எல்லாம் நடந்ததா, அல்லது ஏதும் உருவெளித்தோற்றமா எனத் தெரியாமல் விழித்தான் ராபர்ட்ஸன். இது உண்மை எனில் தாவரங்களின் ரகசிய வாழ்க்கை மனித வாழ்வை ஒத்ததுதானா, இதன் ஞாபக அடுக்கில் எண்ணற்ற செய்திகள் ஒளிந்துகொண்டிருக்குமா, பூனைச்சாமியாரின் உள்ளே ஒடுங்கியிருந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர் ராபர்ட்ஸன் உயிர்பெற்று வெளிவந்தான். தான் கண் முன்னே கண்டதெல்லாம் நிஜம், தான் கண்டது இதுவரை எந்த ஒரு தாவரவியலாளனும் கண்டறியாத மாபெரும் விந்தை. இனிமேல்தான் மனிதர்களைப் பற்றி அறியும் எல்லா சோதனை முறைகள் வழியே தான் தாவரங்களையும் அறிய வேண்டியதிருக்கும். மனித நுட்பங்கள், கனவுகள் எல்லாமும் கொண்டதாக இருப்பதால்தான் விருட்சங்கள் மனிதனோடு எளிதாக உறவு கொண்டு விடுகின்றன. இனி தான் கண்டவற்றைப் பதிவு செய்யவேண்டி கீழே போகலாம் என்று முடிவு கொண்ட பின்பு பளிய கிராமத்துக்குப் போனான் ராபர்ட்ஸன்.

கிராமத்தின் பின்பு பளியப் பெண்கள் குளித்து ஈர உடலுடன் எதிரில் நடந்து எதிரில் நடந்து சென்றனர். அப்போதுதான் கவனித்தான். எல்லாப் பெண்களின் வயிற்றிலும், இலைகளும் பூக்களும் விரிந்த கொடியொன்று பச்சை குத்தப்பட்டிருந்தது. அந்தப் பச்சை குத்தப்பட்ட செடி போன்றே ஸ்தனங்களின் மேலும் பச்சை இலைகள் போர்த்தப்பட்டிருப்பது போல சித்திரம் இருந்தது. இந்திய வாழ்வில் தாவரங்கள் எதையோ உணர்த்தும் அபூர்வக் குறியீடாக இருப்பதை உணர்ந்து கொண்டு அவன் தன் பூனையை விடுத்து அவசரமாக மலையை விட்டு கீழே இறங்கிவந்தான். ஏற்கனவே தன்னால் மூடப்பட்ட அறைக்கதவு அப்படியே சாத்தப்பட்டிருந்தது. ராபர்ட்ஸன் இறந்து போனதாக கோமதிநாயகம் பிள்ளை கொடுத்த தகவலும் இங்கிலாந்து போயிருந்தது. அறையின் பின் வழியே நுழைந்து, தன் மேஜையைத் திறந்த போது பல்லிகள் உறங்கிக்கொண்டிருந்தன. தாண்டவராய சுவாமிகளின் மூலப்பிரதி என்ற ஒன்றே கிடையாது எனவும், வனமே அந்தப் பெரும் மூலப்பிரதி எனவும் அவன் குறிப்பதற்காகத் தனது டைரியைத் தேடி எடுத்தான். அறை எங்கும் தூசிகளும் சிலந்தி வலைகளும் இறைந்திருந்தன. அவசரமாகத் தன்னுடைய ஆடைகளை அணிந்துகொண்டு அறைக் கண்ணாடியில் தன்னைக் கண்டபோது அவனுக்கு வெற்றியின் மிதப்பும், சிரிப்பும் பெருகியது. முன் கதவைத் தள்ளித் திறந்து வெளியே யாரும் வருகிறார்களா எனப் பார்த்தான். நடமாட்டமேயில்லை. அறை அலமாரியில் இருந்த மதுப்புட்டியை வெளியே எடுத்தான். மதுப்புட்டியின் அருகிலிருந்த கண்ணாடிக் குவளைகள் சரிந்து வீழ்ந்தன. அலமாரியின் உயரத்தில் இருந்து உடைந்து சிதறிய கண்ணாடிகளைக் குனிந்து பெருக்கும்போது சட்டென உறைத்தது. ‘கண்ணாடி உடையும் சப்தம் எங்கே போனது?’ சப்தம் ஏன் வரவில்லை? ஒரு நிமிட நேரத்தில் பின் அறையின் மூலையில் அவன் கொண்டுவந்த வெள்ளைப் பூச்செடியைக் கண்டான். அது உயரமாக வளர்ந்து கிளை எங்கும் பூக்களாக மலர்ந்திருந்தது. அப்படியானால் சப்தம் எங்கே போகிறது? கையிலிருந்த மதுப்புட்டியைத் தூக்கி உயரே எறிந்தான். அது சுழன்று வீழ்ந்தது சப்தமின்று. அவன் உடனடியாக அந்தப் பூச்செடியைத் தூக்கி வெளியே வைத்துவிட்டு வந்து இன்னொரு மதுப்புட்டியைத் தூக்கி எறிந்தான். அது சப்தமாக உடைந்து வீழ்ந்தது. எனில் அந்தப் பூச்செடிதான் சப்தத்தை உறிஞ்சி விடுகிறதா? சப்தத்தை உறிஞ்சும் பூச்செடி ஒன்று இருக்க முடியுமா? அவனால் நம்பவே முடியவில்லை. பூச்செடியைத் தன் அறைக்குத் தூக்கி வந்து நாள் முழுவதும் அதைச் சோதித்துக் கொண்டிருந்தான்.

அந்தச் செடிதான் சப்தத்தை உறிஞ்சி விடுகிறது எனத் தெரிந்தது. எனில் சப்தமில்லாமல் அருவி விழுவதற்குக் காரணம் அந்தப் பூச்செடிகள் தான் என அறிந்து கொண்டான். அந்தச் செடியைப் பதனப் படுத்திக் கொண்டான். மூன்று நாட்கள் உட்கார்ந்து குறிப்புகள் எழுதிக் கொண்டு கோமதிநாயகம்பிள்ளையைப் பார்க்கப் புறப்பட்டான்.

அவர் வீட்டில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. கோமதிநாயகம் பிள்ளையின் மனைவி அவனைக் கண்டு பயந்து போனாள். அவன் வீட்டின் உள்ளறைக்கு வந்த போது கோமதிநாயகம் எதிர்ப்பட்டு அவனை எதிர்பாராது கால்ங்கி வரச் சொன்னார். அவன் இங்கிலாந்து புறப்படுவதாகவும், திரிகூட மலைக்குத் திரும்ப வருவதாகவும் சொல்லிப் போனான். ராபர்ட்ஸனைக் கண்ட பயத்தால் கர்ப்பத்தில் உள்ள குழந்தை முகம் புரண்டுகொண்டது. அவன் கப்பலில் இங்கிலாந்து புறப்படும்போது குறி சொல்பவள் தந்த மரச்செதுக்கு பொம்மையும், சப்தம் உறிஞ்சும் தாவரமும், குறிப்புகளும் கொண்டு சென்றான். கப்பல் மிக மெதுவாகவே சென்றது. அவன் கப்பலில் உடன் வரும் எல்லோருடனும் எதையாவது பேசினான். தினமும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியும் ஆடிக் கூச்சலிட்டும் பொழுதைப் போக்கினான்.

அவன் புறப்பட்ட ஒன்பதாம் நாளில் கடலில் உள் ஒளிந்திருந்த புயல் வெளியேறி கப்பலை அலைக்கழிக்கத் தொடங்கியது. காற்று நீரை வாரி இறைத்தது. கடலின் நிறம் மாறியது. எல்லாரையும் பிடித்துக் கொண்ட மரண சகுனங்கள் பேச்சைத் துண்டித்தன. நிலம் தெரியாத கடல் வெளியில் நின்றது கப்பல். எப்போது கப்பல் நொறுங்கியது என எவரும் அறியவில்லை. ஒரு அலையின் உயரத்தில் அவன் கடைசியாகக் கண் விழித்த போது எங்கும் பசுமை பொங்கி வழிந்தது. பின் அவன் உடல் பல நாள்கள் கடல் அலைகளின் மீது மிதந்தது. கரையில் அவன் உடல் ஒதுங்கியபோது நீண்ட முதுகில் சூரியன் ஊர்ந்து சென்றது.

நுரை ததும்பும் நீரின் ஆழத்தில் புதைந்து போன அவனது தோல் பையில் இருந்து குறிப்புகளைப் பின்னாட்களில் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக மீன்கள் தின்று போயின. அவனது ரகசியங்கள் மீனின் உடலில் மிகப் பாதுகாப்பாகச் சேகரமாயின. மரப்பொம்மையை மட்டும் வெடித்துத் துண்டுகளாக்கியது.

தன்னோடு ஒரே அறையைப் பகிர்ந்து கொண்ட ராபர்ட்ஸனின் புதிய கண்டுபிடிப்பான தாவரங்களின் ரகசிய வாழ்க்கை பற்றிய கருத்துகளை, சப்தமில்லாத அருவி பற்றி உலகுக்குத் தெரியப்படுத்திய ரிச்சர் பர்டன் என்ற புலிவேட்டைக்கார ராணுவ அதிகாரி பின்னாட்களில் ஒரு முறை கூட திரிகூட மலை வந்த போது அந்த இடம் எதையும் பார்க்க முடியவில்லை. அதற்குப்பதிலாக அவருக்குக் கிடைத்ததெல்லாம் ராபர்ட்ஸனின் குறிப்புகளே. அவர் அதைத் தொகுத்து 1864ல் வெளியிட்டார். அது பலருடைய கவனத்தையும் பெறாமலே போனதற்குப் பெரிய காரணமாக இருந்தது இது புலி வேட்டைக்காரனின் கற்பனை என்பதாகத் தாவரவியல் அறிஞர்கள் கருதியதே.

1946ல் இந்தியா வந்த தாவரவியல் ஆராய்ச்சி மாணவரான ஜான் பார்க்கர், திரிகூட மலை முழுவதையும் அறிந்து கொண்டு, ராபர்ட்ஸன் குறித்த இடத்துக்குச் சென்றபோது அங்கே அருவி சப்தத்தோடு வீழ்ந்துகொண்டிருந்தது. வெள்ளைப்பூச்செடிகள் ஏதுமில்லை. தாவரங்களின் நுட்ப உணர்வுகளுக்குக் காரணம் எலக்ட்ரோமேக்னட் அலைகள் உள்வாங்குவதால்தான் என்று விளக்கியதோடு, தாவரங்கள் பற்றிய பல இந்தியக் கதைகள் சுவாரசியமானவை. அவற்றில் ஒன்றுதான் ராபர்ட்ஸனின் குறிப்பும் என்று எழுதி முடித்தான். அங்கிருந்த ஒரு நாளின் இரவில் அவனோடு உறங்க அழைத்து வரப்பட்ட பளியப் பெண்ணின் உடலில் இருந்த பச்சை குத்தப்பட்ட இலைகள், உறவின் போது தன் உடம்பில் ஊர்வதாகத் தோன்றியது போதை என சுய சமாதானம் செய்துகொண்ட போது, உடலின் பச்சையான திட்டுகள் படர்ந்திருந்ததையும், அதைப் பற்றி ஆராய முடியாத போதெல்லாம் ராபர்ட்ஸனின் நினைவிலிருந்து தப்ப முடியாமல் போனதையும் ஜான் பார்க்கர் உணர்ந்து கொண்டுதானிருந்தான். கோமதிநாயகம் பிள்ளைக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்த பெண்ணுக்கு ஆறு விரல்கள் இருந்ததற்கும்ம் அது கர்ப்பத்தில் ராபர்ட்ஸனைப் பார்த்ததற்கும் தொடர்பிருக்கிறதா என எவருக்கும் தெரியாமலே போனது தனி விஷயம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *