கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 6, 2024
பார்வையிட்டோர்: 648 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவு ஒன்பதரை மணி ஆகிவிட்டது விடுதி அறையில் இருந்து வெளியே வர, பேச்சு மிகுந்த சுவாரசியமும் தகவல்களும் நிறைந்ததாக இருந்தது, தாளங்கள் பற்றியும் தோல் வாத்தியங்கள் பற்றியும். சிறுவனாக இருந்தபோது பூதப்பாண்டியில் பக்க வாத்தியம் வாசித்த கச்சேரியைப் பற்றிக் கேட்டபோது அவருக்கு சிலிர்ப்பாக இருந்ததை உணர முடிந்தது.

உண்மையிலேயே இந்த நாற்பதாண்டு காலத்தில் தேர்ந்த வித்வானாக வளர்ந்து விட்டிருந்தார். விரல்கள் பத்திலும் இறைவன் உறை கிறானோ எனும் பரவசம் ஏற்படுத்தும் இசைப் பயிற்சியும் நுணுக்கமும் திறனும் கொண்ட வாசிப்புகள். ஆதியும் திஸ்ரமும் மிஸ்ரமும் திஸ்ர சாப்பும் கண்டசாதி திரிபுடையும் வெறும் தாளங்களின் பெயர்கள் எனில் அவர்விரல்களில் அவை உயிரின் அசைவுகள்.

கூட இருந்தவர்கள் அனைவரும் அவர் வாசிப்பு போல வாய்ப் பேச்சிலும் கிறங்கிப்போய் உட்கார்ந்திருந்தனர். அரைமணிக்கூரில் பார்த்துவிட்டுப் போய்விடலாம் என்று வந்தவர்கள் எழுந்திருக்கும் மார்க்கமின்றி அமர்ந்திருந்தனர்.

இரண்டு பேர்கள் தங்கும் அறை. ஓரமாய் பயணப் பெட்டிகள். பெரிய அளவு உணவு தூக்குப் பாத்திரங்கள். பிளாஸ்டிக் கயிற்றுக் கூடை. வெல்வெட்துணி உறையால் போர்த்தப்பட்டிருந்த இரண்டு வாத்தியங் கள். கிடந்த இரண்டு தாற்காலிகளிலும் மேலும் கொண்டு வரச்சொன்ன நாற்காலிகளிலும் போக மீதிப்பேர் கட்டிலில் கால்மாட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தோம். உட்கார்ந்திருந்தவர்கள் இசை நுணுக்கங்கள் அறிந்த வர்கள் இல்லை. என்றாலும் தாளம் யாவர் கால்களிலும் இன்னும் சீவனுடன்தானே இருந்தது!

அவருடன் நிற்பது கௌரவம். கலைத்தேவியின் கருணை பெற்ற வருடன் அமர்ந்து பேசுவது பெரிய கெளரவம். அழகும் கம்பீரமும் கொண்ட அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

குறுக்கும் நெடுக்குமாய் ஒரு சிறுவன் நடந்துகொண்டிருந்தான், உரையாடல்களின் இடையே. பத்துப் பன்னிரண்டு வயதிருக்கும்.

துவைக்க, உலர்த்த, உணவு வாங்கி வர, பாத்திரங்கள்கழுவ எடுபிடி வேலைகள் செய்ய, வாத்தியம் சுமக்க, கச்சேரியின் இடையே சூடான பானம் ஊற்றிக் கொடுக்க, கால் கை அமுக்க, கடைக்குப் போக… ஒழிந்த வேளைகளில் எதுவும் சொல்லித் தருவாரோ என்னவோ? சொல்லித் தருவதை வாங்கிக் கொள்ளும் அலைவரிசையில் அவன் இருந்தானோ என்னவோ?

பேச்சின் இடையே புகைப்பட ஆல்பம் எடுத்துக் கொடுத்தான். அவரைப் பாராட்டாத பெரிய மனிதப் பிரமுகர்கள் இல்லை, அவர் இணைந்து வாசிக்காத பிரபல வித்வான்கள் இல்லை, அவர் சென்று திரும்பாத நாடுகள் குறைவு.

வாசித்துக்காட்ட வாத்தியம் எடுத்துக் கொடுத்தான். காப்பி வாங்கி வந்தான். “எங்கேடா பால்சாமி தொலைந்து போனாய்?” என்று குரல் எழுப்பியபோது எதிரே வந்து நின்றான் பவ்யமாக.

இடையிடையே எங்கு போவான் என்று தெரியாது.

முதலைமைச்சர் முன்னால் வாசித்த கச்சேரியும் அவர் கழற்றி அணிவித்த ஐந்து பவுன் சங்கிலியும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அறையினுள் ‘திடுதிடு’ வென வந்தான் விடுதி மேலாளன். கையில் பால்சாமியின் கையைப் பற்றிப் பிடித்திருந்தான். ‘அப்பளத்தில் கல்’, ‘சொர்க்கத்தில் கட்டெறும்பு’, ‘கபாபில் எலும்பு நொறுங்கல்’ என எதுவேனும் சொல்லிக் கொள்ளலாம்.

”சார். பையனைக் கொஞ்சம் கண்டிச்சு வையுங்க.. ரிசப்ஷன்லே இவன் லூட்டி தாங்க முடியலே… பலதரம் சொல்லிப் பாத்தாச்சு. கேக்க மாட்டங்கான்….”

வித்வான் முகம் சிவந்து போய்விட்டது. உலகத்தரத்தில் வாசிக்கும் ஆற்றல் குன்னிப் போய்விட்டது சில நொடிகள்.

‘விசுக்’ கென எழுந்து, பால்சாமியைப் பற்றி இழுத்துக் கவிழ்த்து, முதுகில் பளார், பளார், பளார்… என்ன தாளம் விழுந்தது எனக் கணிக்க இயலவில்லை.

பிட்டுக்கு மண் சுமந்தவன் வாங்கிய பிரம்படி போல், எல்லோர் முதுகிலும் விழுந்தது அறை. விடுதி மேலாளன் ஓடிப்போய் வித்வான் கையைப்பிடித்தான்.

“விடுங்க சார். பொடியன்…”

எங்களோடிருந்த ஒருவர் கூறினார் “அறிவிருக்காய்யா? பையன் ஏதும் செய்தான்னா, இப்படியா வந்து சொல்றது? ஆள் தராதரம் தெரியாது…”

விடுதி மேலாளன் போனபிறகு ஒருவர் சொன்னார் “மொதல்ல இவனுக்கு ரெண்டு போடணும் மலையாளத்தாதானுகளுக்கே ரொம்பத் திமிராகிப் போச்சு…”

ஆயிரக்கணக்கான கச்சேரிகளில், எல்லா நடைகளிலும் வாசித்துப் பழகிய விரல்கள். பால்சாமியின் சட்டையைக் கழற்றிப் பார்த்தால் தாளங் களின் தடயங்கள் தெரியலாம்.

பால்சாமி உரத்துக் கத்தவில்லை. வாய்விட்டு அழவும் இல்லை. கண்கள் மட்டும் சோகராகமாய் சொரிந்துகொண்டிருந்தன.

“பால்சாமி, போட்டுண்டே…. ஐயாதானே அடிச்சாரு…போ… போயி மொகத்தைக் கழுவு.”

சுக்கானை எந்தத் திசையில் திருப்பினாலும் பேச்சு உயிரற்று நடந்தது. வித்துவான் கலகலப்பாகக் காட்டிக்கொண்டிருந்தார்.

மழையில் நனைந்து கொவர்ந்த தோல்வாத்தியம் வாசிப்பதுபோல, சொத்துச் சொத்தென்று கேட்டது தாளம்.

மனதிலும் மழையின் ஈரம் பாறையாய்ப் பதிந்து கிடந்தது. பெயர்த்து உருட்டித் தள்ளிவிட முடியாத வேர் கொண்ட பாறை.

– சதங்கை, ஜனவரி – பிப்ரவரி -2002.

நன்றி: https://nanjilnadan.com/2011/03/10/தாளம்/

நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *