உரையாடல் வடிவில் ஒரு சிறுகதை
புதுதில்லி . சுறுசுறுப்பான திங்கட் கிழமை காலை 10.00 மணி. நட்பு வட்டத்திலும் அலுவலகத்திலும் ரங்கு என்றழைக்கப்படுகிற ரங்க நாதன் என்னும் 60 வயது, தலை முடிக்கு கருப்பு சாயம் பூசாமல் வெள்ளையாய் விட்டிருக்கும் உயரமான வாட்டம் சாட்டமான நபர், புதுதில்லி காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஓர் அறையில் நாற்காலியில் வட்ட மேசை முன்னால் அமர்ந்து இருந்தார்.
அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு உயரமான கனத்த உடல் வாகு கொண்ட சர்தார்ஜி உள்ளே வந்தார்.
ரங்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். ரங்கு தமிழர் என்பதை அறிந்த அவர், தமிழில் உரையாடத் தொடங்கினார். இருவரின் உரையாடல் –
‘வணக்கம்.. நீங்க தானே ரங்கு என்கிற ரங்கநாதன் ? ‘ கேட்டார் சர்தார்ஜி .
ரங்கு புன்னகை பூத்தார்.
‘என்ன சார் சிரிக்கறீங்க’
‘வணக்கம் … இல்ல எங்க தமிழ் சினிமால எந்த மொழிக் காரனும் தமிழ்ல பேசுவான் . நீங்களும் பேசறீங்களேன்னு பார்த்தேன்.. ‘
‘என் பேரு வீரேந்தர் சிங்.. நான் பிறந்து வளர்ந்தது கோயம்புத்தூர்ல தான்..‘
‘என்னோட தாய்மொழில விசாரிச்சா நல்லா இருக்கும் வேலைக்கு ஆகும்னு ஒங்க மேலதிகாரிங்க ஒங்கள அனுப்பி வெச்சிருக்காங்க இல்ல.. ‘
‘அது வந்து… ‘
‘இருக்கட்டும் ஆபீசர் அதை விடுங்க.. என்னை ஏன் அரெஸ்ட் பண்ணி இருக்கீங்க..‘
‘கைது பண்ணல.. விசாரிக்கதான்.. ‘
‘விசாரிக்கவா.. நான் சென்னையில் ஒரு காலேஜ்ல ரோபோட்டிக்கஸ் பத்தி லெக்சர் கொடுத்துட்டு என் நண்பர் ஒருத்தரோட அறுபது விழாவை சிறப்பிச்சுட்டு விமான பயணத்தில் இன்னிக்கு காலைல எட்டு மணிக்கு வந்தேன். லுக் அவுட் நோட்டிஸ் ல உள்ள ஆள் மாதிரி ஒங்க ஆளுங்க என்னை பாஞ்சு பிடிச்சுட்டாங்க… வீட்டுக்குப் போய்ட்டு, காலைல முடிக்க வேண்டிய வேலையை முடிச்சுட்டு குளிச்சுட்டு சாமி கும்பிட்டுட்டு வரேன்னு சொன்னேன் கேட்கவே இல்லை.. வர்ற வழியில எனக்கு தெரிஞ்ச தமிழ் காரங்க லாட்ஜ் கிட்ட வண்டியை வம்படியா நிறுத்த சொல்லி லாட்ஜ்க்குள்ள நுழைஞ்சு ஒரு ரூம்ல போய் குளிச்சு முடிச்சு ட்ரெஸ் மாத்தி மனசுக்குள்ளே சாமியை கும்பிட்டு பக்கத்துல இருந்த ஓட்டல்ல நாலு இட்லி சாப்பிட்டுதான் ஒங்க ஆளுங்களோட வந்தேன். என்ன விசயம்? அவங்க கிட்ட இந்தி இங்கிலீஷ் ரெண்டு மொழியலயும் கேட்டுட்டேன். கமுக்கமா இருந்துட்டாங்க…’.
அழகான இளம்பெண் ஒருவர் காவல் சீருடையில் அறைக்குள் தண்ணீர் புட்டிகளுடன் வந்தார். மேசையில் வைத்தார். சர்தார்ஜி , வீடியோ பதிவு குறித்து கண்களால் அந்தப் பெண்ணுக்கு கட்டளையிட்டார். அந்தப் பெண் தலையசைத்து அறையை விட்டு வெளியேறினார்.
கண்மணி என்று அவர் சீருடையில் பார்த்த பெயரை ரங்கு உச்சரித்தார்.
‘ஆமாம் இவங்களும் நம்ம ஸ்டேட் தான்’ என்றார் சர்தார்ஜி .
ரங்கு பேசினார் –
‘ஆபீசர் சார் சொல்லுங்க என்னை எதுக்கு ரெஸ்ட் ரூம் கூட போக விடாமல் தூக்கிட்டு வந்தீங்க..’.
‘அது.. ஒங்க அபார்ட்மென்ட்ல ஒங்க வீட்டுக்கு பக்த்துல இருக்கிற இளம்பெண்…‘
‘தாராவா..‘
‘தாரா..?‘
‘அவ பேர் என்னங்கறது எனக்கு மனசுல பதியல … ஆனா நான் தாரான்னு கூப்பிடுவேன் அது ஏன்னு கேட்டீங்கன்னா… ‘
ரங்கு , அது காவல் துறையின் இடம் என்பதையும் காமிரா கண்கள் தன்னை கண்காணிக்கின்றன என்பதையும் மறந்து வாழ்க்கையின் நினைவலைகளை அதிகாரியிடம் சொல்லத் தொடங்கினார்.
‘எங்க அம்மா அப்பா ரெண்டு பேரும் வேலைக்கு போய்க்கிட்டு இருந்தாங்க .. ஊர்ல எல்லாம் என்ன பெரிசா வேலை … ரெண்டு பேருக்கும் பள்ளி படிப்பு மட்டும் தான் அப்பா வக்கீல் கிட்ட கிளார்க் ஆக இருந்தாரு அப்ப எல்லாம் வக்கீல் குமாஸ்தா ன்னு சொல்லுவாங்க … அப்ப எல்லாம் நர்சரி பள்ளிகள் வந்துகிட்டு இருந்த நேரம் … அம்மா அப்படி ஒரு நர்சரி ஸ்கூல்ல பில் போடறது பேமென்ட் வாங்கி வைக்கிற வேலை எல்லாம் பார்த்துகிட்டு இருந்தாங்க. நான் அம்மா அப்பா ரெண்டு பேரோட கஷ்டத்தை புரிஞ்சுகிட்டு அது வேணும் இது வேணும்னு அடம் பண்ண மாட்டேன் . எனக்கு பத்து வயசு இருக்கும் பையன் கூட இருக்கான்ங்கறத பெரிசா எடுத்துக்காம எங்க அம்மா , அப்பா கிட்ட குழந்தைய கலைச்சுடலாமன்னு பேசிகிட்டு இருந்தாங்க எனக்கு ஒண்ணும் புரியாதுன்னு அவங்களுக்கு நெனப்பு … எனக்கு ஒண்ணும் புரியற வயசு இல்ல தான் ஆனா .. கலைக்க எல்லாம் கூடாது ன்னு ஊரடங்கின ராத்திரில ஒண்டு குடித்தன வீட்ல கத்திப் பேசிட்டேன். ரெண்டு பேருக்கும் அதிர்ச்சி . அப்பா சரி கத்தாதே ரங்கா கண்ணு .. பாப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது ன்னாரு…
இந்த சம்பவத்துக்கப்புறம், அப்பா அம்மா மனசுல நான் ஒசந்துட்டேன் அவங்க என்னை கேட்காம எதையும் செய்யறதில்லைன்னு ஆயிடுச்சு. அப்பா வேலை செஞ்சுகிட்டு இருந்த வக்கீல் அரசியல் புள்ளி ஆயிட்டாரு .. அவர் பெரிய புள்ளியா ஆயிட்டதால , பாட்சா படத்துல ரஜினி கூடவே இருக்கற ஜனகராஜ் மாதிரி எல்லா நேரத்துலயும் அப்பா வக்கீல் கூடவே இருக்க ஆரம்பிச்சாரு.. அம்மாவுக்கு வலி வர ஆரம்பிச்சப்ப அப்பா கூட இல்லை நான்தான் அம்மாவ அழைச்சுட்டு போய் தர்ம ஆஸ்பத்திரில சேர்த்தேன் … எங்க அம்மாவோட பொறந்தவங்க நிறைய பேரு அப்பாவுக்கு அப்புறம் பொறந்தவங்களும் நிறைய பேரு … ஆனா மாமாக்கள நான் பார்த்த து இல்ல .. சித்தப்பாக்களும் வீட்டுக்கு வந்த நாள் கிடையாது இவங்களும் அவங்க வீட்டுக்கு என்னை அழைச்சிட்டு போனது கிடையாது.. என்ன காரணம் ன்னு நான் கேட்டப்ப எல்லாம் அம்மாவும் அப்பாவும் மழுப்பிடுவாங்க …
அம்மா ஆஸ்பத்திரிலேந்து என்னோட தங்கை பாப்பாவோட வீட்டுக்கு வந்தப்ப , நான்தான் ஆரத்தி எடுத்து கூப்பிட்டுகிட்டு போனேன்.. பெயர் சூட்ற நிகழ்ச்சில பெரிய மனுசன் மாதிரி நான்தான் தாரா ன்னு பேர் வெச்சேன்..
நான் காலேஜ்ல பியுசி மட்டும் தான் படிச்சேன் .. டிகிரி பிஜி எல்லாம் டிஸ்டன்ஸ் ல படிச்சேன் … வக்கீல் , அரசாங்க வேலை கிடைக்கற வரைக்கும் என்கிட்ட இரு ன்னு எனக்கும் அவர்கிட்ட வேலை கொடுத்தாரு.. என்ன வேலைன்னா .. கேர் டேக்கர் மாதிரி அவங்க வீட்டு ஆளுங்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்யறது .. அவரும் அவங்க வீட்டு பெண்மணிகளும் என்னை மரியாதையா நடத்தினதாலே நான் அங்கேயே தொடர்ந்தேன்… அவர் வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற வீட்ல எனக்கு தனியா ஆபீஸ் எல்லா நியுஸ் பேப்பர் மேகசைன் வரும்.. அதுல வக்கீல் கலந்துகிட்ட நிகழ்ச்சி பத்திய நியுஸ் கிளிப்பிங் சேர்த்து ஆல்பம் ஆக்கற வேலையும் கொடுத்தாரு. அதுதான் எனக்கு பிடிச்ச வேலை.. அப்ப தான் நான் பேப்பர் ல வர்ற சயன்ஸ் டெக்னாலஜி பத்தி படிச்சு படிச்சு செல்ப் எஜுகேசன்ல தான் ரோபோட்டிக்கஸ் நோக்கி போக ஆரம்பிச்சேன்… இப்படி என்னோட கல்வியோடயே நடுவுல மத்த வேலைய பாத்துகிட்டு இருந்தப்ப , திரும்பி பார்க்கறதுக்குள்ளே என் சிஸ்டர் தாரா , பருவ மங்கையா ஆயிட்டா… அவ ப்ளஸ் டூ படிச்சுகிட்டு இருந்தப்ப .. ஒரு நாள் மாலை நேரத்துல நான் வீட்டுக்கு வந்தப்ப.. எங்க மதர் கிச்சன்ல இருந்தாங்க தாரா ஸ்கூல் பேக் இருக்கு கழட்டி வெச்ச
யூனிபார்ம் இருக்கு ஆனா அவளை காணோம்… அவ எங்கேன்னு அம்மா கிட்ட கேட்டேன் .அம்மா இங்க தானே இருந்தா ன்னு சொன்னாங்க…
அன்னிக்கு காணாமல் போனாமல் என் தங்கை என்ன ஆனான்னு தெரியல கிளாஸ்ல படிக்கிற பையன் கூட போனாளா , இளைஞனோட போனாளா கிழவனோட போனாளான்னு தெரியலை எனக்கு நண்பர்கள் ன்னு எண்ணி நாலு பேருதான் அவங்களோட அங்க இங்கன்னு அலைஞ்சு தேடினோம்.. மெட்ராஸ்க்கு வந்தும் தேடிப் பார்த்தோம் . வக்கீல் அவரோட ஆளு படையை எல்லாம் அனுப்பி தேடி பார்த்தாரு… தாரா பத்தி தகவல் இல்லை…
என்னிக்கு இருந்தாலும் இன்னொரு வீட்டுக்கு போக வேண்டியவங்க பெண் பிறவி … ஆனா என் தங்கை நம்பக் கூடாதவங்கள நம்பி சீரழிஞ்சு இருப்பாளோ ங்கற கவலை அம்மா அப்பாவை வாட்டினதுல ரெண்டு பேருக்கும் உடம்பு வீணா போச்சு .. ரெண்டு பேரும் மனம் ஒத்த தம்பதிங்கறதை நிரூபிக்கற மாதிரி ரெண்டு பேரும் ஒரே நாள்ல என் கிட்ட பேசிகிட்டு இருக்கும் போதே போய்ட்டாங்க ஒரே நேரத்துல அவங்கள சிரிக்க வைக்க என்னென்னவோ ஜோக் சொல்லி பார்த்தேன் .. ஆனா அவங்க போதும் இந்த வாழ்க்கைன்னு ஒரே தருணத்துல போய்ட்டாங்க ..
சினிமா ல எல்லாம வரா மாதிரி மாறு வேஷத்துலயாவது தாரா வந்திருக்காளா ன்னு அஞ்சலி செலுத்த வந்த ஒவ்வொரு பெண்மணியையும் பார்த்தேன்.. ஆனா.. வரவே இல்ல
தனி ஆளா இருந்து நண்பர்கள் ஒத்தாசையுடன் அப்பா அம்மா சடங்குகளை முடிச்சேன்… ஒரு பெரிய கம்பெனியிலிருந்து இன்டர்வியூ கார்டு வந்தது. அட்மின் மேனேஜர் ஒர்க்.. சென்னையில இல்ல தில்லிக்கு போகணும்னாங்க சரின்னு வந்துட்டேன்.. இப்படித்தான்.. நான் தில்லிவாசியானேன்… என்னவோ திருமண வாழ்க்கையில் ஆசை வரலை.. ஒத்தை ஆளா ஓட்டிட்டேன்..
ஆபீஸ் வேலை நிர்வாக வேலை ஆனா பேஷன்னு பார்த்தா ரோபோட்டிக்கஸ் தான் நிறைய படிச்சேன்… ஆராய்ச்சி பண்ணேன்.. எங்க பக்கத்து வீட்ல இருந்த பொண்ணு நான் ரோபோட்டிக்கஸ் என்துசியாஸ்ட்ன்னு தெரிஞ்சு கொஞ்ச நாள்லயே என் கிட்ட ஒட்டிகிடுச்சு… அந்த பொண்ணுக்கு அம்மா அப்பா இல்ல.. பாட்டி வளர்க்கிற பொண்ணு … அசப்புல என் சிஸ்டர் மாதிரி இருந்தா அதனால தாரான்னு அழைச்சேன்…‘
பேச்சை நிறுத்தினார் .
சர்தார்ஜி பேசினார்
‘சார் அந்த பொண்ணு பேரு சுஜாதா.. அவங்க பாட்டி பேரு சரஸ்வதி.. சுஜாதா நீங்க ஊருக்கு போயிருந்தப்ப ஒங்க வீட்ல ஒங்க ஆராய்ச்சி பேப்பர்ஸ் எல்லாம் ஒங்க சிஸ்டத்துல பார்த்துகிட்டு இருந்தப்ப அவங்க காதலன் தீபக் அவங்கள பார்க்க போயிருக்காரு… அப்ப சுஜாதா, தீபக்கை தலையில தாக்கி இருக்காங்க.. அதுல தீபக் சீரியசா இருக்காரு இந்த விஷயத்தை சொல்லிட்டு அன்கான்சியஸ் ஆயிட்டாரு… அவர் ஒரு பிக் ஷாட்டோட சன்.. சுஜாதா தலைமறைவாக இருக்காங்க அவங்க பாட்டியும் அங்க இல்ல அந்த வீடு பூட்டி இருக்கு . ஒங்க வீட்ல ஒரு கான்ஸ்டபிள் இருக்காரு… ‘
ரங்கு சிரித்தார்.
‘எல்லாம் சரி ஆபீசர்.. என் வீட்டுக்கு காவல் போட்டுட்டீங்க சுஜாதா பூட்டாம போயிருந்தாலும் கவலை இல்லை… என்னை அரெஸ்ட் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எங்க வீட்ல நடந்த இன்சிடென்ட் ங்கறதாலயா?‘
‘ஆமாம்..‘
‘ஒழுங்கா படிச்சிட்டுக்கற பொண்ணு கிட்ட இப்பவே எல்லாம் முடிக்கணும் ன்னு கட்டாயப் படுத்தி இருப்பான்.. அவ கல்யாணத்துக்கு அப்புறம்னு சொல்லி இருப்பா…வேணாம்னு தள்ளி விட்டதுல விழுந்திருப்பான் இதுக்கு கேசா? அந்த பொண்ண அவ பாட்டிய எல்லாரையும் ஓடி ஒளிய வெச்சுட்டீங்க‘
‘…‘
ரங்கு தண்ணீரைப் பருகிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த அறைக்குள் ஓர் இளம் காவல் துறை அதிகாரி, சுஜாதாவுடனும் கம்பீர தோற்றம் கொண்ட மற்றொரு நபருடனும் வந்தார்.
சர்தார்ஜி இளம் காவல்துறை அதிகாரியுடன் இந்தியில் பேசினார் ..
‘இந்த பொண்ணு அழைச்சிட்டு வந்தீங்க சரி இவரை ஏன் கைது பண்ணீங்க… இவர் முரளிதரன் மத்திய அரசு உளவுத் துறை அதிகாரி..‘
அந்த இளம் அதிகாரி பேசினார் .
‘இவர்தான் இந்த பொண்ணுக்கு அடைக்கலம் கொடுத்து இருக்காரு இவர் வீட்ல தான் அந்த பொண்ண பார்த்தோம் இவரையும் கைது செய்யணும்னு உத்தரவு… ‘
சர்தார்ஜி எழுந்து நின்றார்.
புதுதில்லி உயர்நீதிமன்றம் ..
நீதிபதி பிரகலாத் வர்மா தமது தீர்ப்பைக் கூறினார்
தீபக் என்ற இளைஞரைத் தாக்கியதாக தொடரப்பட்ட இந்த வழக்கு பற்றிய தீர்ப்பு
‘சுஜாதா, உறவினர் போல் பழகி வந்த ரங்கு என்பவரின் வீட்டில் இருந்த போது தீபக் இச்சைக்கு இணங்க வற்புறுத்தியதாகவும் அதற்கு என்று காலம் வரும் போது பார்த்துக் கொள்ளாலாம் என்று சொன்னதாகவும் அதை கேட்காமல் அவர் பலவந்தப் படுத்தியதால் தாக்க நேரிட்டது என்று கூறி இருக்கிறார்.
தீபக் சார்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர், அதீத கற்பனையாக, ரங்கு வைத்திருந்த ரோபோவை விட்டு பலமாக இந்த பெண் தாக்கி இருக்கிறார் என்று சொன்னார். ரங்கு , வீட்டில் ரோபோ இல்லை என்றும் இனிமேல்தான் சுஜாதா தான் அதை உருவாக்க போகிறார் என்றும் கூறியுள்ளார். பெண்மணிகளுக்குப் பாதுகாப்பாக ரோபோக்கள் இருக்கும் நிலை வந்தால் மகிழ்ச்சியே.
சுஜாதா, காதலனாக இருந்தாலும் கற்பைப் காப்பாற்றிக் கொள்ள முற்பட்ட போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. தீபக் முழுமையாக குணம் அடைந்து விட்டார் என்ற மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் – இளம்பெண் சுஜாதா , ரங்கு என்கிற ரங்க நாதன், முரளிதரன் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள இந்த வழக்கை இந்த நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கிறது.‘
நீதிமன்றத்திற்கு வெளியே.
சுஜாதா, ரங்க நாதன், முரளிதரன் மூன்று பேரும் நடந்து வரும் போது ஒல்லியான நடுத்தர வயது பெண்மணி எதிரில் வருகிறார்.
அவள் – ரங்க நாதனின் தங்கை தாரா. பருவ வயதில் பார்த்த அதே அழகும் முகப் பொலிவும் மாறாமல் அவள் இருப்பதைப் பார்த்து ஒரு கணம் வியப்படைந்த ரங்கநாதன், அவளை மீண்டும் பார்ப்பதைத் தவிர்க்கிறார்.
முரளிதரன், ‘சார் இவங்க என்னோட மதர்’ என்கிறார்.
பேசாமல் அங்கிருந்து நகரப் பார்த்த ரங்கநாதனை சுஜாதா கையைப் பிடித்து இழுக்கிறாள் –
‘ஆறுவது சினம் அறியாத சிறுவனான நீ’ என்கிறாள்.
அனைவரும் சிரிக்கின்றனர்.