கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 29, 2024
பார்வையிட்டோர்: 3,419 
 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3

விதியே விதியே என்தாயை என்செய்தாய்? என்றது போல, அன்றொரு நாள் என் தாயைப் பழிவாங்கவே பொல்லாத விதி காத்திருந்தது. எனது தங்கையைப் பிரசவித்தபோது, அன்று எதிர்பாராமல் ஏற்பட்ட அம்மாவின் திடீர் மரணத்தை எங்களால் தாங்க முடியாததாக இருந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே நீண்ட நாள் எடுத்தது.  அம்மா என்றொரு தெய்வம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏன் தேவை என்பதை அதன்பிறகான எங்கள் ஒவ்வொரு அசைவின் போதும்தான் எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. அப்பாதான் எங்களுக்கு எல்லாமாகியிருந்தார். என்னை மட்டுமல்ல கைக்குழந்தையான தங்கையையும் அவர்தான் பாசத்தோடு வளர்த்தெடுத்தார். தாயாய், தந்தையாய், நல்லாசிரியனாய், நண்பனாய், மந்திரியாய் எங்கள் ஒவ்வொரு அசைவிலும் அவர் கலந்திருந்தார். ‘தாயுமானவர்’ என்றுதான் பக்கத்து வீட்டுப் பார்வதிப்பாட்டி எங்க அப்பாவை அழைப்பாள். சிறுவயதில் அதன் அர்த்தம் எனக்குப் புரிவதில்லை. வளர்ந்து, புலம் பெயர்ந்து சென்ற பின்புதான் அந்தச் சொல்லின் அர்த்தத்தை என்னால் முழுமையகப் புரிந்து கொள்ள முடிந்தது. சுருங்கச் சொன்னால் தாயிடம் எதிர்பார்க்கும் தாய்பாலைத் தவிர மற்றைய எல்லாவற்றையுமே அவர் எங்களுக்கு ஊட்டியிருந்தார். எங்களுக்காகவே அவர் வாழ்ந்திருந்தார். அவரைப் பிரிந்து இருக்கும் போதுதான் அப்பாவின் அருமை புரியலாயிற்று. என் தங்கை மாலதி சிரித்தால் அவள் கன்னத்தில் குழி விழும். சிறு வயதில் எடுத்த அம்மாவின் புகைப்படத்தில் அம்மா இருந்தது போலவே மாலதியும் தோற்றத்தில் இருந்தாள். மிகவும் சுறுசுறுப்பாகவும், இரக்கசுபாவம் மிக்கவளாகவும், கலகலப்பாகவும் இருந்தாள். அம்மாவின் பிரிவுத்துயரை எங்கள் வீட்டில் அவள்தான் தீர்த்து வைத்தாள்.

எங்க வீட்டு சுவர் எல்லாம் இந்திய சுதந்திர தியாகிகளின் கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் பெரிய அளவில் மாட்டப்பட்டிருந்தன. காந்தி, நேரு, அரவிந்தர், வாவேசு ஐயர், திலகர், கப்பலோட்டிய சிதம்பரனார், பாரதியார், நேதாஜி சுபாஸ்சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர், இராமகிருஸ்ணர், விவேகானந்தர் என்று அவர்களின் புகைப்படங்களே எங்கும் மாட்டப்பட்டிருந்தன. எங்கள் வீட்டில் மட்டுமல்ல, ஒரு காலத்தில் குடும்மப்படம் இல்லாவிட்டாலும், தமிழர்களின் வீட்டுச் சுவர்களில் இப்படியான படங்கள்தான் இருந்தன. இந்தப் புகைப்படங்களைக் காட்டியே அப்பா எங்களுக்குச் சுதந்திரப் போராட்டக் கதைகள் சொல்வார். அப்பாவின் புத்தக அலுமாரி முழுவதும் சத்தியசோதனை, ரவீந்திரநாத்தின் கவிதைகள், அரவிந்தபோஸ்சின் வாழ்க்கை வரலாறு, பாரதி பாடல்கள், இராமகிருஸ்ணர், விவேகானந்தர், கஸ்தூரிபாய் என்று அவர்களைப் பற்றிய புத்தகங்கள் எல்லாம் ஆத்மீகத்தையும், அகிம்சையையும் போதிப்பதாக இருந்தன.

எங்க வீட்டில் மட்டுமல்ல, அனேகமான தமிழர்களின் வீடுகளில் இப்படியான படங்களே மாட்டப்பட்டிருந்தன. குடும்பப் படங்களைவிட இப்படங்களே பெரிய அளவில் சுவர்களை ஆக்கிரமித்தன. தங்கையின் கவனமெல்லாம் இவற்றின் மீது திரும்பியதாகத் தெரியவில்லை, பதிலாக அவளது கவனம் நேதாஜி மீதே அதிகம் இருந்ததை நான் அவ்வப்போது அவதானித்தேன். வளரும் பருவத்தில் அவள் அவரைப் பற்றிய நூல்களையே அதிகம் விரும்பிப்படித்தாள்.

‘இந்தியாவிற்கு நள்ளிரவில்தான் சுதந்திரம் கிடைத்ததாம், அது உனக்குத் தெரியுமாண்ணா?’ என்று பேச்சு வாக்கில் ஒருநாள் தங்கை குறிப்பிட்டாள்.

‘ஆமாம், அப்பா அவர்களைப் பற்றித்தானே தினமும் போதிக்கிறார்.’ என்றேன்.

‘இந்தியாவின் சுதந்திரத்தில் நேதாஜிக்கும் பங்கிருக்கு தெரியுமா?’

‘தெரியும்!’

‘அப்போ ஏன் அதைச் சிலர் மூடிமறைக்கிறாங்க?’

‘வன்முறையை அவங்க விரும்பவில்லைப் போலும், அதனால்தான் அதை முன்னிலைப்படுத்த அவங்க விரும்பவில்லை.’ என்று பதில் சொன்னேன்.

எனது வாதத்தை அவள் ஏற்கவில்லை என்பது அவளது பார்வையில் புரிந்தது. அகிம்சைக்குப் பதில் கிடைக்காவிட்டால், அடுத்தது என்ன? என்பது போலப் பார்த்தாள்.

ஒருநாள் பகத்சிங்கின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம் அவளது படுக்கையில் தலையணைக்கு அடியில் இருந்ததை அவதானித்தேன். காலத்தின் கட்டாயத்தில் அவள் வளர்ச்சி;க்கு ஏற்ப அவளது சிந்தனையும் வளர்ச்சியடைந்தது.

‘ஏனப்பா அயல் நாடான இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களையே வீட்டுச்சுவர் எல்லாம் மாட்டியிருக்கிறீங்கள்’ என்று ஒரு நாள் இரவு உணவு அருந்தும்போது அப்பாவிடம் கேட்டேன்.

‘கடல்தான் எங்களைப் பிரிக்கிறதே தவிர மொழியால், உணர்வால், பண்பாடு கலாச்சாரத்தால் நாங்கள் ஒன்றாகவே வாழ்கிறோம்’ என்றார் அப்பா.

‘அப்பா இன்னமும் அந்தக் காலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்’ என்பது போன்ற ஒரு அசட்டுச் சிரிப்பு தங்கையிடம் இருந்து உதிர்ந்ததை அப்போது அவதானித்தேன்.

‘காணி நிலம் வேண்டும் பராசக்தி’ என்று பாரதி கண்ட கனவு போல, வீடும், காணியும், கிணறும் அதைச் சுற்றிலும் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்களும் வைத்து அப்பாவும் அம்மாவும் சேர்ந்து தாங்கள் வாழ்ந்த இடத்தை ஒரு சோலையாகவே மாற்றியிருந்தனர். எந்த மண் பச்சைப் பசேலென்று செழித்த பூமியாக் காட்சி தரவேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டாரோ, எதற்காக அப்பா பாடுபட்டாரோ அந்த மண் இன்று காய்ந்த பூமியாய்ப் போயிருந்தது. யாழ்ப்பாணத்துக் கற்பகதரு என்று சொல்லப்பட்ட பனைமரங்கள் அனேகமாகத் தலையிழந்து முண்டங்களாய் நின்றன. மரங்கள் எல்லாம் இராணுவம் ஏவிய செல் விழுந்தும், தண்ணீர் இல்லாமலும் கருகிப் போயிருந்தன. இதைவிட நச்சுப் புகைகளின் தாக்கமும் செடி கொடிகளின் இலைகளில் தெரிந்தன.

காங்கேசன்துறை வீதிக்கரையில் மாவிட்டபுரத்தில் இருந்த தோட்டங்களில் வெற்றிலைச் செடிகள் எப்பொழுதும் பச்சைப் பசேலென்று இருக்கும். கடும் பச்சையும், குருத்துப் பச்சையுமாய் முள்முருக்கை மரத்தைச் சுற்றி மேல் நோக்கி அவை படர்ந்திருக்கும். வீதியின் இரு மருங்கும் தோட்டத்தில் படர்ந்திருக்கும் அந்தக் கொடிகளின் அழகும் அழகுதான். அனேகமான முள்முருக்கை மரங்கள் பட்டுப் போயிருந்தன. அந்த வெற்றிலைக் கொடிகள் எல்லாம் நச்சுப் புகையின் தாக்கத்தால் சுருண்டு கீழே விழுந்து கிடந்தன. கொழுகொம்பு கிடைத்தால் மீண்டும் படர்ந்து நிமிர்ந்துவிட அவை தயாராக இருப்பதுபோல் தெரிந்தன. எங்கே எழுந்து நிற்க ஒரு ஊன்றுகோல் கிடைக்கும் என்று எதிர்பார்த்து நிற்கும் அந்த மண்ணின் மக்களின் வாழ்க்கையும் இப்படித்தான் தலைகீழாய் மாறிப்போயிருந்தன. யுத்தம் தின்ற எச்சக் காட்சிகளை எல்லாம் பார்க்க நேர்ந்தபோது, காலா காலமாய் யுத்தம் என்பது ஒரு கொலைக் களம் என்பது மட்டுமல்ல அழிவுகளின் ஏகப்பிரதிநிதியாகவும் இருப்பது மனித சமுதாயத்திற்கு ஒரு சாபக்கேடே என்று நினைக்கத் தோன்றியது. மனித உயிர்கள் மட்டுமல்ல மரங்கள், செடிகள், விலங்குகள், காக்கை குருவியினங்கள் என்று எல்லாமே அழிந்து போவதற்கு இந்த யுத்தமே எப்போதும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.

ஊரிலே மற்றவர்களைவிட எங்க அப்பா நடையுடை பாவனையில் வித்தியாசமானவராக இருந்தார். மற்ற ஆண்கள், குறிப்பாக ஆசிரியர்கள் எல்லாம் பாண்டும் சேர்ட்டும் அணிந்து பாடசாலைக்கு வந்த  காலத்தில் இவர் மட்டும் கதராடை கட்டி காந்திக் குல்லா போட்டிருந்தார். ‘சட்டம்பியார்’ என்றே பெற்றோர்கள் இவரை மரியாதை நிமிர்த்தம் அழைத்தார்கள். மதிப்பும் மரியாதையும் அவரிடம் வைத்திருந்ததால் தங்கள் குறைகளைத் தீர்க்கத் தினமும்  எங்க வீடுதேடி அவர்கள் வந்தனர். தங்கள் பிள்ளைகளின் படிப்பு சம்பந்தமாக அறிவுரை கேட்க, குடும்பப் பிரச்சனைக்கு புத்திமதி கேட்க, திருமணப் பொருத்தம் பார்க்க, காணிப்பிரச்சனை, எல்லைப் பிரச்சனை என்று தினமும் வீடுதேடிவந்து அப்பாவிற்காகக் காத்திருந்தனர். அரச கடிதங்களை ஆங்கிலத்தில் எழுதுவதற்கும், அவர்களோடு தொடர்பு கொள்ளவும் அப்பாவையே நம்பிக்கையோடு நாடிவந்தனர். அப்பா அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டாலும், பிறந்து வளர்ந்த சொந்த மண்மீதும், மொழிமீதும் ஆழ்ந்த பற்று வைத்திருந்தார்.

இந்தியப் பண்பாடு கலாச்சாரத்தில் ஒன்றிப் போனதால், எப்பொழுதும் கலைமகள், ஆனந்தவிகடன், கல்கி, மஞ்சரி போன்ற பத்திரிகைளை வாங்கிப் படித்தார். வீடு முழுவதும் நல்ல தரமான புத்தகங்களால் நிரம்பி வழிந்ததால் எங்களை அறியாமலே எங்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தெற்பத்திருவிழாவின் போது அப்போது கலைமகள் ஆசிரியராக இருந்த அறிஞர் கி.வா. ஜெகநான் அவர்கள் அந்த விழாவில் உரையாற்ற தமிழ் நாட்டில் இருந்து வந்திருந்தார். காங்கேசன்துறைக் கடற்கரையில் நடந்த, பக்தர்களால் நிரம்பி வழிந்த அந்த விழாவில் அப்பா கி.வாவின் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருக்க, இதமான கடற்காற்றைச் சுவாசித்தபடி, அப்பாவின் மடியில் உட்கார்ந்து நான் நிலக்கடலையை உடைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். கடற்கரை முழுவதும் மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுப் பளீச்சென்றிருந்தது. இதேபோல அந்த நாட்களில் பல அறிஞர்கள் தமிழ்நாட்டில் இருந்து சொற்பொழிவாற்ற வருவதுண்டு. சில சமயங்களில் புலம் பெயர்ந்த மண்ணில் இருந்து கொண்டு, அந்த நாட்கள் திரும்பவும் வந்திடாதா என்ற ஏக்கத்தோடு நினைத்து பார்ப்பேன்.

விடுதலை வேண்டி ஊரெல்லாம் திரண்டு காந்தியின் அகிம்சை முறையில் சத்தியாக்கிரகம் செய்தபோது அப்பாவும் தன் பங்கிற்கு அதில் கலந்து கொள்ளக் கதராடை அணிந்து காந்திக் குல்லாவோடு பயபக்தியாகச் சென்றார். யாழ்பாணக்கச்சேரி என்று சொல்லப்பட்ட அரசகரும அலுவலகத்திற்கு முன்னால் ஏனைய தமிழ் அரசியல் வாதிகளுடன் சேர்ந்து அகிம்சை முறையில் ஒத்துழையாமைப் போராட்டம் நடத்தினார். அவருடைய நெற்றியிலே இருந்த தழும்பு ஏன் எற்பட்டது என்று காரணம் கேட்டபோதுதான், அகிம்சை முறையில் நடந்த ஒத்துழையாமை இயக்க நடவடிக்கையின்போது குண்டர்கள் கூட்டம் கற்களால் தாக்கிய போது ஏற்பட்ட தழும்புதான் அது என்பதை அவர் வேதனையோடு ஏற்றுக் கொண்டார்.

‘ஏனப்பா நிராயுத பாணியான உங்களை அவங்க தாக்கிய போது கோழைபோல முதுகு காட்டி ஓடினீங்களாப்பா?’ என்று தங்கை மாலதி கேட்டபோது அவரால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை.

‘அதற்காக வன்முறையை ஆதரிக்கச் சொல்கிறாயாம்மா?’ என்று மட்டும் எதிர்க் கேள்வி கேட்டுத் தங்கையின் வாயை அடைத்துவிட்டார்.

அந்த நேரம் தங்கை மாலதி மௌனமாகிவிட்டாலும், இனம் புரியாத ஏதோ ஒரு வகை எழுச்சியை நோக்கி அவளின் சிந்தனை திரும்புவதை அவ்வப்போது நான் அவதானித்தேன்.

– தொடரும்…

– தமிழகத்திலிருந்து வெளிவரும் மூத்த இதழான கலைமகள் ராமரத்தினம் குறுநாவல் போட்டி – 2011ல் பரிசு பெற்ற கதை. நன்றி: கலைமகள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *