தானாக வந்த திறமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 24, 2022
பார்வையிட்டோர்: 3,939 
 

குமரேசபுரம் என்னும் ஒரு சிற்றூர், அந்த ஊரில் ஒரு நடு நிலை பள்ளியும், நூலகமும், சிறிய அரசு மருத்துவமனை, பஞ்சாயத்து அலுவலகம் இவைகள் எல்லாம் இருந்தன.

அந்த ஊரில் பொதுவாக எல்லாரும் விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள். ஓரளவு படித்தவர்கள் வெளியூருக்கு வேலைக்கு சென்று இரவு ஊருக்கு திரும்பி வந்து விடுவார்கள்.

அந்த ஊரிலிருந்து மூன்று முறை பேருந்து வந்து சென்றதால் வெளியூருக்கு வேலைக்கும், மற்றபடி பொருட்கள் வாங்கி வருவதற்கும் அந்த ஊர் மக்களுக்கு வசதியாக இருந்தது.

அந்த ஊரில் அழகேசன் என்னும் சிறுவன் இருந்தான். அவன் எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தான்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவன். அம்மாவும் ஒரு தங்கை மட்டும்தான் இருந்தார்கள். அப்பா உடல்நிலை சரியில்லாமல் இவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே இறந்து விட்டார்.

அப்பொழுது தங்கை கைக் குழந்தையாக இருந்தாள். அவன் அம்மா கைக் குழந்தையை தன் தோள் மீது போட்டு இறுக்கி கட்டிக்கொண்டு விவசாய வேலைக்கு செல்வாள். அங்கு குழந்தையை ஒரு மரத்தில் தொட்டில் கட்டி அதில் படுக்க வைத்து விட்டு மற்றவர்களைப்போல் வயலில் இறங்கி நாற்று நடுவது களை எடுப்பது போன்ற வேலைகளை செய்வாள்.

அழகேசன் சுமாராகத்தான் படிப்பான். புத்தகங்கள் வாங்க கூட வசதி இல்லாதவன், அரசாங்கம் கொடுத்த புத்தகங்களாலும், மதிய உணவாலும் தான் அவனால் பள்ளிக்கு வந்து படிக்க முடிகிறது. இருந்தாலும் மற்ற செலவுகளுக்கு அவர்கள் குடும்பம் மிகுந்த சிரமப்படும். அம்மாவிடம் நான் வேணா படிக்க போகாம உன் கூட வயலுக்கு வரட்டா? அம்மாவிடம் கேட்பான்.

அம்மா உங்க அப்பா படிக்க வேண்டிய காலத்துல ஒழுங்கா படிச்சிருந்தா நம்ம குடும்பம் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்காது. உங்கப்பாவோட அப்பாவும், அம்மாவும் விவசாய கூலியா போய்கிட்டிருந்தவங்கதான், அப்ப உங்கப்பா ஒழுங்கா படிச்சு ஒரு வேலைக்கு போயிருந்தா வழிமுறையா நாமளும் இப்படி ஒரு கூலி வேலைக்கு போக வேண்டியதிருக்காது. உங்கப்பாவுக்கு பின்னாடி நீ இந்த தொழிலுக்கு வந்துற கூடாதுன்னுதான் உன்னைய எவ்வளவு கஷ்டமின்னாலும் போய் படிக்க சொல்றேன்,

நம்மளை மாதிரி விவசாய கூலியா போய்கிட்டிருந்தவங்க குழந்தைங்க ஓரளவு படிச்சு வெளியூருல வேலை தேடிகிட்டதால இப்ப அவங்க எல்லாம் நிம்மதியா கூலோ கஞ்சியோ குடிச்சிகிட்டிருக்காங்க. அது மாதிரி நீயும் எப்படியாவது படிச்சு வெளியூருல ஒரு வேலைக்கு சேர்ந்த பின்னாடிதான் நம்ம குடும்பம் நல்லா இருக்கும், புரியுதா?

அம்மா இப்படி சொன்ன பின்னால் நாம் இனிமேல் நன்றாக படிக்க வேண்டும் என்று நினைப்பான். இருந்தாலும் அவனுக்கு படிப்பை விட எதை பார்த்தாலும் படமாக வரைவதற்கு பிடிக்கும். இதனால் நிறைய முறை வகுப்பாசிரியரிடம் பாடங்களை சரியாக கவனிப்பதில்லை என்று திட்டுக்கள் வாங்கியிருக்கிறான். ஒரு முறை தலைமையாசிரிடமே போய் தண்டனையும் பெற்று வந்திருக்கிறான்.

ஆனாலும் அந்த படங்களில் வரையும் உருவங்களை எல்லாம் தனக்கு தோன்றியபடி கிண்டலாய் வரைந்து விடுவான்.

எலியாருக்கு சட்டை போட்டு கையில் குச்சியுடன் இவர்தான் நம்ம் வாத்தியார் என்று எழுதி வைத்து விடுவான்.

தலைமையாசிரியரை கூட கரடியாய் வரைந்து கையில் குச்சியுடன் கண்ணாடியும் போட்டிருப்பதாக வரைந்து ஹெட்மாஸ்டர் என்று எழுதியிருப்பான்.

ஒரு நாள் வகுப்புக்குள் நுழைந்த ரங்கநாதன் ஆசிரியர் அழகேசா உன்னை நம்ம தலைமையாசிரியர் கூப்பிடறாரு, போய் பார்த்துட்டு வா, சொன்னவர் எல்லாரும் தமிழ் புத்தகத்தை எடுத்து வச்சுக்குங்க, சொல்லிவிட்டு பாடம் நடத்த ஆரம்பித்தார்.

அழகேசனுக்கு மனசு திக்கென்று ஆனது, ஹெட்மாஸ்டர் நம்மை எதுக்கு கூபிடறாரு? இதை ரங்கநாதன் ஆசிரியரிடம் கேட்கவும் பயம். மெதுவாக வகுப்பை விட்டு வெளியே வந்தவன் தலைமையாசிரியர் அறையை நோக்கி நடந்தான்.

தலைமை ஆசிரியர் உள்ளே உட்கார்ந்திருந்தார். இவன் வாசலில் நின்று ஐயா உள்ளே வரலாங்களா? கேட்டுவிட்டு அங்கேயே நின்றான்.

உள்ளே வா, அழைத்த தலைமை ஆசிரியர், இந்த நோட்டு யாரோடது? ஒரு நோட்டை எடுத்து காட்டினார்.

அழகேசனுக்கு மனசு திக்கென்று ஆனது, ஐயையோ அதுல என்னனென்னவோ எழுதி வச்சிருந்தமே, அது எப்படி தலைமையாசிரியர் கைக்கு போச்சு?

என்னோடதுதான் சார், பணிவுடன் சொன்னான். ஆனா?

என்ன ஆனா? இதுல இதுல எழுதியிருக்கறது வரைஞ்சிருக்கறது எல்லாம் நீதானே?

பயத்துடன் ஆமாம் சார் தெரியாம செஞ்சுட்டேன், சார், இனிமேல் இந்த மாதிரி செய்ய மாட்டேன் சார் என்னை மன்னிச்சிடுங்க சார், தலைமையாசிரியர் தன்னை பள்ளியில் இருந்து நீக்கி விடுவாரோ என்னும் பயத்தில் அவனுக்கு தானாக கண்ணில் நீர் வழிந்தது.

முதல்ல அழுகைய நிறுத்து கரடியா வரைஞ்சிருக்கறயே, அதுல என் பேர வேற எழுதி வச்சிருக்கே !ம்…. அவனை முறைக்க.

சார் சார் என்னை மன்னிச்சிடுங்க சார், இனிமேல் இது மாதிரி வரையவும் மாட்டேன், எழுதவும் மாட்டேன்.

இன்னைக்கு சாயங்காலம் உங்கம்மாவ நான் பார்க்க வர்றேன், இப்ப நீ வகுப்புல போய் உட்காரு, அவனை அங்கிருந்து அனுப்பினார்.

வகுப்புக்கு சென்று உட்கார்ந்த அழகேசனுக்கு அழுகை அழுகையாக வந்தது. தலைமை யாசிரியர் அம்மாவிடம் வந்து என்ன சொல்வாரோ? இனிமேல் பள்ளிக்கு அனுப்ப கூடாது என்று சொல்லிவிடுவாரோ?

மாலை அழகேசனின் குடிசையில் அவனது அம்மாவின் வருகைக்காக காத்திருந்தார் அவனின் தலைமையாசிரியர். இவன் என்ன சொல்வது எங்கிற பையத்தில் அவர் முன் நின்று கொண்டே இருந்தான்.

அழகேசனின் அம்மாவுக்கு அதிர்ச்சியாகிவிட்டது, ஹெட்மாஸ்டர் ஐயாவே இங்க வந்திருக்காறே, நம்ம புள்ளை என்ன தப்பு பண்ணுச்சோன்னு தெரியலையே?

வாங்க ஐயா, பயத்துடன் கை கூப்பி வரவேற்றாள்.

உங்க பையன் இங்க பாருங்க என்னை பத்தி எப்படி வரைஞ்சிருக்கான்னு? நோட்டை காட்ட அதை பார்த்த அழகேசனின் அம்மா ஐயா என் புள்ளை இனிமே இந்த மாதிரி செய்ய மாட்டான்யா, அவனை இந்த ஒரு தரம் மன்னிச்சிருங்க ஐயா,

அதெல்லாம் முடியாது, அவனை இந்த பள்ளிக்கூடத்துல இருந்து அனுப்பறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

அதை கேட்டவுடன் அழகேசனும் அவன் அம்மாவும் அதிச்சியாகி ஐயா..எங்களை மன்னிச்சிருங்க ஐயா..

அதுவரை கோபமாக இருப்பது போல இருந்த தலைமையாசிரியர் பக பகவென சிரித்தார். நான் அவனை இந்த பள்ளியில இருந்து அனுப்பறதே இவன் இப்படி படம் போடணும்னுதான்.

இவர்கள் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.

உங்க பையன் அருமையா படம் போடறான், அதை விட அந்த படத்துல நக்கல் நையாண்டியா வேற எழுதறான். என்னோட நண்பர் ஒருத்தர் ஒரு பத்திரிக்கை நடத்தறாரு, அவர் பக்கத்துல இருக்கற டவுனுலதான் இருக்கறாரு. அவருக்கு இந்த மாதிரி படம் வரையறதுக்கு ஒருத்தர் வேணும்னு கேட்டுக்கிட்டே இருக்காரு. அதுக்காக சம்பளமும் போட்டு கொடுத்திடுவாரு. அவர்கிட்டே பேசிட்டேன்.

இனி அடுத்த வருசம் அவன் ஒன்பதாவது படிக்கணும்னா வெளிய போய்த்தான் படிக்கணும், உங்க பையனை நம்ம பக்கத்து டவுனு ஸ்கூல்ல சேர்த்து விட்டுடறேன், நம்ம ஊர்ல இருந்து காலையில போற பஸ்ல அவன் அந்த ஊர்ல இருக்கற அரசு ஸ்கூல சேர்ந்து படிச்சிட்டு சாயங்காலம் ஸ்கூல் விட்டுட்டு அதுக்கப்புறம் அவர் ஆபிசுக்கு போய் அவங்களுக்கு என்ன படம் வேணும்னு சொல்றாங்களோ அந்த படம் போட்டு கொடுத்துட்டு, இராத்திரி பஸ்சுக்கு வீட்டுக்கு உங்க கிட்டயே வந்துடுவான்.

இதுனால கொஞ்சம் கஷ்டம்தான், இருந்தாலும் உங்க பையனுக்கு மேல மேல வரையற பயிற்சி கிடைக்கும், அதோட வருமானமும் கிடைக்கும். மத்தபடி போக வர்ற எல்லா செலவுகளும் அவரே ஏத்துக்குவாரு, என்ன சொல்றீங்க?

இதுல நாங்க சொல்றதுக்கு என்ன இருக்குதுங்க? பையனுக்கு போக வர்ற கஷ்டமா இருக்குமேன்னு..அம்மா சொல்ல சொல்ல,

அழகேசன் மகிழ்ச்சியுடன் சார் எனக்கு சம்மதம்தான் சார், எங்கம்மாவுக்கு நானும் கொஞ்சம் சம்பாதிச்சு கொடுத்த மாதிரியும் இருக்கும், என்னோட படம் வரையற பயிற்சியும் நல்லா கிடைக்கும் சார். இதுக்காக இந்த சிரமமெல்லாம் எனக்கு பெரிசா தெரியாது சார்.

ரொம்ப நல்லது, இந்த வருசம் முடிய இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு, அடுத்த வருசம் நீ அங்க சேர்ந்துக்கலாம், வருங்காலத்துல நீ நல்ல ஒரு “ஆர்ட்டிஸ்டா” வர முடியும். சரியா?

மகிழ்ச்சியுடன் அழகேசனும், அவன் அம்மாவும் தலையசைத்தனர். அடுத்த வருடம் முதல் அழகேசனும், இந்த ஊரில் படித்து முடித்து வெளியூர் சென்று சம்பாதித்து பெற்றோர்களுக்கு கொடுப்பவர்கள் போல் இவனும் படித்துக்கொண்டே சம்பாரித்து அம்மாவுக்கு கொடுக்க போகிறான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *