கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2023
பார்வையிட்டோர்: 2,102 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சென்ற சில நாட்களாகவே சதுகீன் சேர், மனம் குழம்பிப் போய்த் தான் இருந்தார்.

துவான் ஜொஹரான் மௌலவிக்கு இப்படி நடந்திருக்கக் கூடாதுதான்.

அது ஒரு பக்கப் பார்வை.

விளைவை மற்றுமொரு கோணத்திலிருந்து நோக்கினால் அந்தச் சம்பவம் நடந்ததற்குப் பிறகு அந்த வட்டாரத்தில் அவருக்குத் திடீரென்று ஒரு பிரபலம் வந்துவிட்டது. சகலரது கவனத்தையும் ஈர்த்து விட்டார்.

மற்றது அவரது துணிச்சல். மனுக்குல நேசிப்பு. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். குறிப்பாக மலாய் மக்கள் வட்டாரத்தில் ஒரு பெரும் வரவேற்பு மௌலவிக்கு! ஆனால் ஓய்வு பெற்றிருந்த ஒரு சில மூத்த மலாய் ஜவான்களின் இரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது. ”மௌலவி மடையன்… பேசாமல் அந்த இரத்த ஒழுக்குடன் பொலிசுக்குப் போய் ஒரு முறைப்பாடு செய்திருந்தால் அந்த மதவெறியர்களுக்குச் செம்மையான உதை கிடைத்திருக்கும்” என்று ஆவேசப்பட்டார்கள். ஆனால் அது முறையான அணுகுமுறையல்ல. அது அவ்வாறிருக்க… “அவசரப் பட்டுக் கல்லெறிந்து நாங்கள்தான் அவமானத்தைத் தேடிக் கொண்டோம். அந்தத் தழும்பு இனி அப்படியேதான் இருக்கப் போகிறது” என்று எதிர் கோணத்துச் சில புத்திஜீவிகள் அபிப்பிராயப்படு கிறார்களாம்!

அந்தத் தழும்பு நெற்றியில் இருக்க வேண்டுமென்பதுதான் ஜொஹரான் மௌலவியினதும் விருப்பம். எனவே காயத்துக்கு மட்டுமே சிகிச்சை பெற்றார்.

கால்போன போக்கில் வீட்டைச் சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருந்தார் சதுகீன் சேர்.

வீட்டின் முன்றலில், ஒரு பெரிய நீள் சதுர வடிவில் பரந்த புற்றரை. அதன் மத்தியில் சற்று உயர்ந்து வளர்ந்து பச்சைக் குடை விரித்து நிழல் பரப்பிக் கொண்டிருக்கிறது அந்த ஜாம் மரம். கண்களைக் கிறங்க வைக்கும் அழகான சூழல்.

வழக்கம் போல் மரத்தடி ஆசனத்தில் அமர்ந்து பார்வையை அலையவிட்டுக் கொண்டிருந்தார் சதுகீன் சேர்.

அவரின் வீடு சொய்சாக்கெல் ரோட்டிலிருந்து ஒரு சிறு மேட்டில் அமைந் திருக்கிறது. மேட்டிலிருந்து அவர் பார்வை காசிம் ஹாஜியார் வீட்டின் முன் பகுதியில் அலைந்தது. ஹாஜியார் அப்பொழுதுதான் ஆற்றில் குளித்துவிட்டு வந்து சாரம் சட்டையெல்லாம் கொடியில் காயப்போட்டுக் கொண்டிருந்தார். ஆழ்ந்த வியாபாரச் சிந்தனையுடன் வெண் தாடியைக் கோதிக் கொண்டே உள்ளே நுழைகிறார். வியாபாரம் சம்பந்தமாகப் புத்தளம் மாவட்டத்திற்குப் போகத்திட்டம். அதற்கான ஆயத்தங்களைச் செய்ய வேண்டும். அதுதான் அந்த ஆழ்ந்த சிந்தனை. யோசிப்பதற்கு அவருக்கு வேறு என்ன கிடக்கிறது.

அவரது வீட்டையடுத்த பள்ளத்தில் காசிநாதன் மாஸ்டரின் வீடும் தோட்டமும். அவருடைய சொந்த ஊர் யாழ்ப்பாணம்.

காசிம் ஹாஜியாரின் அந்த இடம் மிக அருமையானது. யார் யாருக்கோ கைமாறி இப்பொழுது காசிநாதன்மாஸ்டருக்குச் சொந்தம். அவர் ஒருவிஞ்ஞான பட்டதாரி ஆசிரியர். நல்ல பண்பாளர்.

சதுகீன் சேரின் பார்வை அவரது அழகான வீட்டுக் கூரையைத் துழாவி அந்த அத்திமரத்தையும், வயலையும் வேறு பலன் தரும் மரங்களையும் ஊடறுத்துக் கொண்டு, ரயில் பாதையில் ஓடிச் ‘சேலம் பிரிட்ஜ்’ என்று அழைக்கப்படும் பாலத்தில் நிலைத்து நிற்கிறது. எவ்வளவு ரம்மியமான காட்சி. இன்று அவருடைய

ஆதங்கமெல்லாம் ஜொஹரான் மௌலவியைப் பற்றித்தான்.

இன்று சனிக்கிழமை. வழக்கம் போல் ஜொஹரான் மௌலவி காலை பத்தரை மணிக்கு வரவேண்டியவர். ஆனால், தான் படிப்பிக்கும் கம்பளை சாஹிரா கல்லூரியில் ஒரு விசேட வைபவத்திற்குச் சமூகமளிக்க வேண்டி இருப்பதாகக் கூறியிருந்தாரே!

நெற்றியில் அடிபட்ட காயத்துக்கு பிளாஸ்டர் மாற்றிய கோலத்துடன் போயிருப்பாரா? என்பது சந்தேகம்தான். போயிருந்தாலும், போயிருக்கா விட்டாலும் இன்று எப்படியும் வரக்கூடும். ஒரு தகவலாவது அனுப்பியிருக்கலாம். சே! எவ்வளவு படித்துத் தெளிந்தும் வேலையில்லை.

சதுகீன் சேருக்கு ஒரே ஆவல்.

அன்றைக்கு நடந்தது இதுதான்.

நகரத்தில் அம்பகமுவச் சந்தியில் காசிம் ஹாஜியாரும், காசிநாதன் மாஸ்டரும் உரையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். திடீரென்று அவர்களுக்கு அருகே ஓர் ஆட்டா வந்து நின்றது. சேர்ட் முன் பக்கத்தில் இரத்தக் கறைகளுடன் ஜொஹரான் மௌலவி இறங்கினார். நெற்றியில் காயம். தண்ணீரில் நனைத்த கைக்குட்டையால் பொத்திக் கொண்டே காட்சி தந்தார்.

காசிம் ஹாஜியாருக்கும், காசிநாதன் மாஸ்டருக்கும் விசாரிக்க நேரமில்லை . உடனே அவர்கள் அதே ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று மருந்து கட்டியிருக்கிறார்கள். பின்னர் அவரைப் பாதுகாப்பாக வீட்டில் விட்டிருக் கிறார்கள். காசிம் ஹாஜியார் வீட்டுக்குப் போகிற வழியில் வந்து சதுகீன் சேருக்குத் தகவல் சொல்லிவிட்டுப் போனார்.

‘நெற்றியில் கல்லடி’ அவ்வளவுதான் சங்கதி. சதுகீன் சேர் உடனே பதறி யடித்துக் கொண்டு, மௌலவியின் இல்லத்திற்கு விரைந்து, விபரங்களை அறிந்து வந்தும் தொடர்ந்து சில நாட்கள் ஆழ்ந்த அவதானத்துடன் போய்ச் சுகம் விசாரித்து விட்டும் வந்தார்.

வீசியெறிந்த ஒரு கல் நெற்றியைத் தாக்கியிருந்ததாம்.

கடந்த வெள்ளியன்று தொலைபேசி மூலம் ஒரு பிரபல ஊர்ப் பள்ளிவாசல் நிர்வாகியின் அழைப்பை ஏற்றுத்தான் அவர் பிரசங்கத்துக்குப் போயிருந்தார். இயற்கையிலேயே எவரையும் தன் பக்கம் ஈர்க்கும் கவர்ச்சியான பேச்சு. அது அவருக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.

கம்பளைக்குப் போயிருந்தால் எப்படியும் இன்றைக்கு வரக்கூடும் என்று சதுகீன் சேரின் உள்மனம் சொல்கிறது.

எவ்வளவு நேரந்தான் ஜாம் மரத்துக்குக் காவல் காத்துக் கொண்டிருக்கிறது. எழுந்து மீண்டும் புற்றரையைச் சுற்றி உலாவிக் கொண்டிருந்தார் சதுகீன் சேர். தூரத்தே ‘கடக்…… கடக்….. கடக்’ கென்று ரயில் வண்டியின் ஓங்காரம்.

நாவலப்பிட்டி நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்கிய ‘உடறட்ட மெனிக்கே’ மீண்டும் ஹற்றனில் இளைப்பாற விரும்பி விரைந்து கொண்டிருந்தாள்.

‘சேலம் பிரிட்ஜ்’ என்னும் அந்த ரயில் பாலத்தைக் கடக்கும் போதுதான் அந்த இரைச்சல்.

சிலவேளை இந்தப் புகைவண்டியில் மௌலவி வந்திருக்கலாம். நிலையத்தை விட்டு நேராக ‘பெனிதுடு முல்லைக்குப் போயிருந்தால், வீட்டில் பகலுணவை முடித்துவிட்டு ஆள் பதறிக் கொண்டு வரும். அப்படி இல்லாமல் இங்கு நேராக வருவதாயிருந்தால் ரயில் பாலத்தைக் கடந்து பதினைந்து நிமிடங்களில் வரவேண்டும். எதற்கும் ஒருமுறை முன்ஹால் சுவரில் தொங்கும் கடிகாரத்தை எட்டிப் பார்த்துக் கொள்கிறார் சதுகீன் சேர்.

ஜொஹரான் மௌலவி சிறுவயதிலிருந்தே சதுகீன் சேரின் அபிமானத்திற் குரிய மாணவன். அவரது தாய்மொழி மலாய். இருந்தாலும் அவரது தமிழ்மொழி ஆற்றல் தனி. தமிழில் கவிதைத்துறையில் அவருக்கு நிறைய ஆர்வம். சதுகீன் சேருக்குக் கவிதை எழுதுவதில் ஈடுபாடில்லை . ஆனால் ரசித்துப் படிப்பார். நாவல், சிறுகதை வடிவங்களைப் பற்றியும் நிறையப் படித்திருக்கிறார். தற்பொழுது பின் நவீனத்துவம் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். அவரது கருத்துக்கள் விமர்சனங்கள் அல்ல. வெறும் ரசனைதான். மாணவர்கள் கேள்வி கேட்பார்கள். அவர்களுக்கு அவர் கூறும் கருத்துக்கள் சரியான வழிகாட்டல்களாக, சரியான தகவல்களாக இருக்க வேண்டும். அதிலும் ஜொஹரான் மௌலவி கேட்கும் வினாக்களுக்கு விடைகள் கூறவே பல நூல்களைப் படித்துத் தெளிய வேண்டியிருந்தது.

‘சேர் உங்கள் கருத்துரைகள் என்னை செழுமைப்படுத்தியிருக்கிறது…’ என்று ஜொஹரான் மௌலவி அடிக்கடி கூறும்போது சதுகீன் சேருக்குக் கேட்கவே கூச்சமாக இருக்கும்.

பாடசாலைப் படிப்பு முடிந்ததும் ஜொஹரான் அரபுக் கல்லூரிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

ஒரு மௌலவியாக வரவேண்டும் என்பதற்குத் தனிப்பட்ட காரணம் இருந்தது. சிறுவயதில் ஒரு சந்தர்ப்பத்தில் ‘ஜாவா ஆட்கள்’ மார்க்கத்தில் ‘பொடு போக்கு’ என்று ஒரு சோனகத்துவேசி ஏளனமாகச் சுட்டிக்காட்டியிருந்தான். இளம் வயதான ஜொஹரானின் மனதை அது பெரிதும் சுட்டுவிட்டது. அதன் விளைவு தான் அரபிக் கல்லூரிப் பிரவேசம். அது தவிர நாட்டில் எத்தனை மலாய் இளைஞர்கள் அரபுப் பாடநெறியில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மார்க்க பக்தர்களாய் இருக்கிறார்கள் என்றெல்லாம் ஆராய முனையவில்லை. மலாயர் என்றால் ‘பொலிஸ், ஆமி, நேவி மட்டுந்தான் என்று ஒரு தவறான கணிப்பீடு. எல்லாவற்றிற்கும் சேர்த்துத்தான் ஜொஹரானின் நொந்த உள்ளம் ஒரு முன்மாதிரியைக் காட்ட விரும்பியிருக்க வேண்டும்!

அரபுப் பாட விதானம் பல வருடங்களை விழுங்கி அன்று மௌலவி பட்டத்துடன் வந்து நின்றபோது –

சதுகீன் சேருக்குப் பெருமையாக இருந்தது. முதன் முதலில் “ஜொஹரான் மௌலவி வாங்க வாங்க…….” என்று வரவேற்று மகிழ்ந்தவர் சதுகீன் சேர்தான்.

“சேர் நான் உங்கள் மாணவன்தான். எனக்கு எதுக்கு இந்த மரியாதை எல்லாம்…” என்று தயங்கினார்.

“இல்லை மௌலவி, நீங்கள் இப்ப ஒரு மதகுரு. உங்கள் இலட்சியம் நிறைவேறி விட்டது. அரசினர் பாடசாலையில் மௌலவி ஆசிரிய நியமனம் கிடைக்கப் போகிறது. ஆசிரியர்கள் எப்போதும் தம் மாணவர்களை மட்டமாகப் பார்க்கக் கூடாது. அவர்கள் எப்பொழுதும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. மாணவர்களின் தரமும் தராதரமும் உயரும் போது ஆசிரியர்களுடன் மனம் விட்டுக் கருத்துக்கள் பரிமாறி சமமாகப் பழக வேண்டும். ஆசிரியர்களும் சிம்மாசனங்களில் அமர்ந்து கொண்டு மாணவர்களை அடிமைகளாக நோக்குவது நாகரிகமல்ல…..” சதுகீன் சேரின் விரிவுரையால் ஜொஹரான் மௌலவியின் மனம் குளிர்ந்தது. சொல்லி வைத்தாற் போல் கம்பளை சாஹிராவுக்கு நியமனமும் கிடைத்தது. இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டன. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பிரிவுக்கு வெளிவாரி பட்டதாரி மாணவனாகப் பதிவு செய்து கொண்டார்.

சதுகீன் சேரின் மனக்குழப்பத்திற்கு மருந்தாக, அவர் மனைவி, இஞ்சிப் பிளேன் டீயுடன் வருகிறாள். அவள் உளவியல் படித்தவள் அல்ல! ஆனால் இப்படியான சந்தர்ப்பங்களில் அவரது மனநிலையை மாற்றுவதற்குக் கோப்பி அல்லது பிளேன்டி தான் என்பது அவளது கண்டுபிடிப்பு.

“…….. இந்தாங்க பௌசியா, ஜொஹரான் மௌலவி வருவாரோ தெரியா… வந்தா ரெடி பண்ணுங்க. பள்ளத்து கடையில் ஏதும் வாங்க வேணுமா…?”

அவள் ஒரு சிறிய பட்டியலைத் தயாரித்து வருவதற்குள், வலது பக்கமாகப் பரோபகார ஐயாவு வீட்டிற்கும், நண்பன் கருணே வீட்டிற்கும் இடையில் ஒரு ‘சொங்கோ தொப்பி’ (மலாயரின் தொப்பி) தெரிந்தது. சந்தேகமில்லை. ஜொஹரான் மௌலவிதான்.

“ஸலாமத் சேர்”

“ஸலாமத்….. வாங்க வாங்க…. எக்ஸ்பிரஸிலா வந்தீங்க…?”

“ஓ… சேர்”

“அப்படியா…? அவளுக்குத்தான் நன்றி சொல்ல வேணும்”

“யார் சேர்… அவள்…”

“உடறட்ட மெனிக்கே… நீங்க வாரத சொல்லத் தான் இப்ப கொஞ்சத்துக்கு முந்தி பாலத்தை உடைச்சிக் கொண்டு போனாளோ…”

மௌலவிவாய்விட்டுச் சிரித்தார்.

“சரி… சரி போன விசயமெல்லாம் முடிஞ்சுதா…?”

“ஓ சேர்… மாற்றலாகிப் போகும் நயிமா ரீச்சருக்குப் பிரியாவிடை. நான் கவி வாழ்த்து, அவ்வளவுதான்…”

“அட……! வெளுத்து வாங்கியிருப்பீங்களே!”

“இப்ப எல்லாம் வெளுத்து வாங்கித்தான்…. வாங்கிக் கட்டிக் கொள்கிறேன்…”

அப்பொழுது ரோட்டில் காசிம் ஹாஜியார் வந்து கொண்டிருந்தார். ‘இஸ்திரி’, பண்ணப்பட்ட காவி நிற ஜிப்பா. மடிப்புகள் கலையாமல் இடது பக்கத்தில் பிரயாணப் பை தொங்கிக் கொண்டிருந்தது. அது தூரப் பயணங்களுக்கு மட்டுந்தான் வெளியே வரும். சதுகீன் சேரையும் மௌலவியையும் கண்டதும், “நான் போய் வருகிறேன்” என்ற கருத்தை வெளிப்படுத்த ஒரு கையசைப்பு. மரத்தடி ஆசனத்திலிருந்து எழுந்து சென்று வழியனுப்பினார்கள்.

காசிம் ஹாஜியார் மிகுந்த மகிழ்ச்சியும் திருப்தியும் பொங்கச் சொன்னார், “ஜொஹரான் மௌலவி நீங்கள் நெற்றியில் கல்லடி பட்டதும் எந்தவித அவசர நடவடிக்கையும் எடுக்காமல், குனிந்த தலை நிமிராமல், ஆட்டாவில் ஏறினீர்களே…. அது சாதாரண விசயமல்ல. உங்களுக்கே தெரியும் அது நபிகளாரின் முன்மாதிரி…”

“ஜஸாக்கல்லாஹ்…..”

ஹாஜியார் கிளம்பிவிட்டார். பஜாரில் அவருக்கு நிறைய வேலை. மாலைத் தொழுகைக்குப் பிறகுதான் அவர் புத்தளத்திற்குப் பயணமாவார்.

மீண்டும் மரத்தடி ஆசனத்தில் அவர்களுடைய உரையாடல் தொடர்ந்தது.

“ஜொஹரான் மௌலவி, இன்றைக்கும் முஸ்லிம்கள் மத்தியில் ஒருவிதமான பிரக்ஞையுமில்லாமல்…. மனம் போன போக்கில்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்……”

“இஸ்லாம் வற்புறுத்தும் முக்கிய கடமைகளை புறக்கணித்து வாழ்பவர்கள் நாடெங்கிலும் இருக்கிறார்கள்… சேர்”

“அப்படியானவர்கள் செறிந்து வாழும் ஊர்களில் உங்கள் ஜூம்மா பிரசங்கங்கள் தொடர வேண்டும் மெளலவி… இந்த நெற்றியடியால் உங்கள் பேச்சுகள் தளர்ந்து விடக்கூடாது. சொல்ல போனால் இன்னும் முனைப்புப் பெற வேணும்…”

“இன்க்ஷாஅல்லாஹ். சேர் நீங்கள் சொல்வது போல் இனித்தான் எனது உரைகள் முனைப்பு பெறும். அதில் சந்தேகம் இல்லை. தூய மார்க்கத்திற்கு மாறுபட்ட கொள்கைகள் உட்புகுந்து பிளவுகள், பிரிவுகள் தோன்றாமல் விழிப்பாக இருந்து பாதுகாத்து கொள்வது மிக அவசியம்… பிரிவினைகளை இணைப்பதைத் தவிர் மென்மேலும் பிரிவுகள் தோன்ற இடம் கொடுக்கக் கூடாது. மக்கள் இணைந்து மக்களாக வாழவேண்டும் தான் என் பேச்சுக்களின் தொனிப் பொருளாக இருக்கும். அன்று வெள்ளிக்கிழமை பிரசங்கத்தில் இந்தக் கருத்துக்களைத்தான் முன் வைத்தேன். இஸ்லாத்தில் புதுப் புதுக் கொள்கைகைளைப் புகுத்தி ஒவ்வொரு ஒவ்வொரு தலைமைத்துவத்தை உருவாக்கிக் கொண்டு ஒன்றுக்கொன்று முரண்பட்டுக் கொள்ளக்கூடாது என்று சொல்வது தவறா சேர்…..?”

“யார் சொன்னது தவறென்று…. வெற்றி உங்களுக்குத்தான்…. அதும் கல்லடி உங்களுக்குப் பெரும் வெற்றி… உண்மையை நிலைநிறுத்தும் துணிச்சலை

இழந்து விடாதீர்கள் கொஞ்சம் இருங்க மௌலவி இந்தா வந்துட்டேன்”

என்று கூறிய சதுகீன் சேர் படியிறங்கினார்.அவ்வேளை,

“மௌலவி இன்னும் பிளாஸ்டரைக் கழட்டவில்லையா….? இந்தக் கல்லெறி எப்படி…?” இஞ்சிப் பிளேன்டீயைக் கொண்டு வந்து நீட்டிய பௌசியா ஆர்வமுடன் கேட்டாள்.

“தாத்தா (அக்கா) சேர் சொல்லவில்லையா? அன்றைக்கு ஜூம்மா தொழுகை முடிஞ்சி வெளியே வந்ததும், ஒரே இரைச்சல். கருத்து வித்தியாசப்பட்ட இரண்டு கோஷ்டி மோதிக் கொண்டாங்க. சிலர் என்னை மறித்துக் கேள்விச் சரங்களை கொட்டினாங்க… நான் உணர்ச்சிவசப்படாமல் கூறினேன்: “உங்களுக்கு என் பிரசங்கம் புரியவில்லை. விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க இது சந்தர்ப்ப மில்லை. நீங்கள் முன்வைக்கும் கொள்கைகளுக்கு மாறுபட்டவன, நான் என்ன விளக்கம் சொன்னாலும் நீங்கள் ஏற்கப் போவதில்லை. உங்கள் பள்ளிவாசல் டிரஸ்டிமாருடன் பேசித் தீர்த்துக் கொள்ளுங்க” என்று கூறீட்டு நான் அவசரமாக நடந்தேன். நிர்வாகிகளைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் மறந்துவிட்டேன்… நான் வந்த முச்சக்கரத்தில் சாரதி என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். நான் வண்டியில் ஏறுவதற்குள் யாரோ எறிந்த கல் என் நெற்றியைப் பதம் பார்த்துவிட்டது. இதுதான் நடந்தது……”

ஜொஹரான் மௌலவி மனைவிக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் போது சதுகீன் சேர் கடையில் வாங்கிய பொருட்களுடன் வந்து சேர்ந்தார்.

“ஜொஹரான் மௌலவி இருங்க. பகல் சாப்பாடு இங்கதான். பதறாமல் இருந்து சாப்பிட்டு ஆறுதலா பேசுவோம்”

“சேர் சாஹிராவில திண்ட கேக், பட்டீஸ் இன்னும் வயிறு புள்…. அதான் வீட்டுக்குப் போகாம நேரா இங்க வந்துட்டென்”

“பரவாயில்லை நீங்கள் இளந்தாரி… கருங்கல்லையும் விழுங்குகிற வயசு…”

“கல்லால் அடிபடுகிற வயசு என்று சொல்லாமல் விட்டீர்களே சேர்…..”

இருவரும் சிரித்தார்கள். பல உரையாடல்களை உள்ளடக்கி வைத்திருக்கிற அந்த ஜாம் மரத்தில் கூட ‘கீச்’ என்று ஒரு சிரிப்பொலி.

“ளுஹரை” (பகல் நேரத் தொழுகை) வீட்டிலேயே தொழுதுவிட்டு, பகலுணவைச் சாப்பிட்டார்கள். சற்று நேரம் இளைப்பாறிக் கொண்டிருந்த போதுதான் தொலைபேசி வீரிட்டது.

சதுகீன் சேர் தொடர்பு கொண்டார். இரண்டு நிமிடங்களுக்குப் பின் மீண்டும் வந்து மௌலவியின் பக்கத்தில் அமர்ந்தார். அவருடைய முகம் கலவரமடைந் திருந்தது. மாற்றத்தை அவதானித்த மௌலவி மௌனமாக இருந்தார். “என்ன செய்தி?” என்று கேட்பது நாகரிகமல்ல என்று நினைத்த மௌலவி ஆவலுடன் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“மௌலவி செய்தி எங்களுக்குத் தான்… எங்கள் பள்ளிவாசல் பேக்ஷிமாம் பேசினார்கள்… உங்களைத் தேடி உங்கள் வீட்டுக்கு ஆளனுப்பியிருக்கிறார்.”

“என்னவாம் சேர்….?” பரபரப்புடன் மௌலவி.

“நீங்கள் பிரசங்கத்திற்குப் போன ஊரிலிருந்து பள்ளிவாசல் நிர்வாகிகள் வருகிறார்களாம். எதிர்வரும் புதன்கிழமை அசருக்குப் பின் நீங்களும் நானும், காசிம் ஹாஜியாரும் எங்கள் பேக்ஷிமாமுடன்…. தலைவரும், செயலாளரும்…. பள்ளிவாசலில் ஒரு சந்திப்பு”

அச்சந்திப்பில் கலந்து கொள்வதற்காக, அலுவல் காரணமாகக் கம்பளைக்குச் சென்றிருந்த ஜொஹரான் மௌலவி ஊர் திரும்புவதற்காகப் பஸ் தரிப்பை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.

“அன்றைக்கே அவர்களைச் சந்தித்து வந்திருந்தால் இன்றைக்கு இந்த நிகழ்வைத் தவிர்த்திருக்கலாம்” கடுமையான சிந்தனைகளுடன் நடந்து கொண்டிருந்தார். தூரத்தில் ஒரு பஸ் வருவதைக் கண்டதும் ஓட்டமும் நடையுமாக விரைந்தவர் கால்கள் இடறிக் குப்புற விழப் போனவரை பக்கத்தில் நடந்து கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் தக்க சமயத்தில் வந்து தாங்கிப் பிடித்தார்கள். மௌலவிக்கு ஒருகணம் என்ன செய்வதென்றே தெரியவில்லை. மிகுந்த நன்றியுடன் அவர்களுடன் சில வார்த்தைகள் பேசிய போது, இனங்காண முடியாத ஒரு தெம்பும் மகிழ்ச்சியும் இழையோடியது. அவரது பயணம் தொடர அந்த இளைஞர்கள் அவரை பஸ் ஏற்றிவிட்டார்கள்.

“றிஸ்மி பார்த்தியா, அவரது நெற்றியை, தொழுது தொழுது அவரது நெற்றியில் தழும்பு அப்படியே பதிந்து போய் கிடக்கிறது…..”

“ஓ….. ஆழமான… தழும்புதான்…..”

வெளியில் அந்தப் புதிய இளைஞர்கள் உரையாடிச் செல்லும் சொற்கள் ஜொஹரான் மௌலவியின் செவிகளைச் சிலிர்க்க வைக்கிறது. மிகுந்த உற்சாகத்துடன் அவரை அறியாமலேயே அவரது கை அந்த நெற்றித் தழும்பைத் தடவிக் கொண்டது.

– மல்லிகை டிசம்பர் 2004

– கொங்கணி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: 2014, எஸ்.கொடகே சகோதரர்கள் பிரைவேட் லிமிடெட், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *