(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இன்றைக்கு பத்து வருடங்களுக்கு முன்னால் எனக்கு அவள் அறிமுகமானாள். ஒரு நண்பன் அவளை அறிமுகப்படுத்தி வைத்தான். இராஜ கம்பீரமான தோற்றத்தில் பெண்மையின் வசீகரங்களுடன் அவள். ஒரு விடாப்பிடியான, எடுத்தெறிந்த பேச்சு, எவரையும் என்னால் அடிமை கொள்ளமுடியும், பணிய வைக்கமுடியும் என்ற வீம்பு.
எனக்கு அவள் ஒரு சுவாரஸ்சியமான பொருளானாள். ஓர் இனிய சவாலாகத் தோன்றினாள். அவளை வெற்றிகொள்ளும் முயற்சியே அக்காலத்தில்
எனது வாழ்வாயிற்று. அவளை அவள் போக்கிலேயே இயங்கவிட்டு பின் கட்டி இழுப்பதாய், நூல் மாட்டிய பம்பரம் போல் ஓடவிட்டு திடீரென இழுத்து நிறுத்துவதுமாய்… நூலுடன் சேர்ந்து சுழன்று தானாக நிதானமடைந்து நிற்பதாய்… ஆரம்ப காலங்கள் இப்படி… இப்படியே…
அந்தக் காலங்கள் சந்தோஷமான காலங்கள்தான்.
அதற்கு முந்திய வெட்ட வெளிப் பாலையில் அலைந்த காலங்கள்; ஒரு தருவைத் தேடி, ஒரு இலையைத் தேடி, ஒரு தளிரைத் தேடி, ஒரு மலரைத்தேடி அலைந்த காலங்கள். ஓடு, ஓடு ஓடென விரட்டும் பாலை வெளியின் கொடுமை. ஓடி,ஓடி, வியர்த்துக் களைத்துச் சோர்ந்து… மீண்டும் ஓடி… மீண்டும் களைத்து… மீண்டும்… மீண்டும்…
அப்போதுதான் ஒரு காட்டு மலராய், ஒரு முரட்டு கவிதையாய், ஒரு புன்னகையாய் அவள் அறிமுகமானாள்.
காட்டு பாலைவெளி அந்தகாரத்தில் அவளும் அலைந்திருக்க வேண்டும். அந்தச் சந்திப்பை ஒரு தருவின் நிழலாய் நான் நினைத்தது போலவே அவளும் நினைத்திருக்க வேண்டும். அது எங்கள் களைப்பைப் போக்கும். வசந்தத்தை உணர வைக்கும், கானம் இசைக்க வைக்கும், கைகோர்த்து உலாவி, கதைத்து, சிரித்து, சல்லாபித்து… வாழ்வே இன்பமானது… வாழ்வே இன்பமானது” என்று பிரகடனம் செய்ய வைக்கும். என்ன…? என்ன…? என்ன!
அந்தக் காட்டு மனிதன் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தான். வேணவாக்கொண்ட ஒரு பயங்கர மிருகத்தின் பார்வையாய் அவன் பார்வை எனக்குப் பட்டது. ஒரு பழகிய மிருகத்தின் குழைவும் காணப்பட்டது போல இருந்தது. எதுவித கூச்சநாச்சமும் இல்லாமல் எதுவித பயபக்தியும் இல்லாமல் அந்தக் காட்டு மனிதன் எங்கள் தருவின் கீழ் இளைப்பாறிக் கொண்டிருந்தான். எங்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் இங்கிதமில்லாத காட்டுமனிதன்.
“ப்றேமி அவனைப் பார்த்தாயா? எங்களையே வெறித்துக் கொண்டு…”
“இல்லை இல்லை அவன் பார்வை இயற்கையிலேயே அப்படித்தான்”
“ஏற்கெனவே அவனை நீ அறிவாயா?”
“அலைந்து திரிந்த காட்டு வாழ்கையில் அவனை அவ்வப்போது எதிர்ப்பட்டதுண்டு”
ப்றேமி அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவள் பார்வையில் ஒரு வாத்சல்யத்தின் குளுமை இருந்தது போலப் பட்டது.
அவன் அப்படியே வெறித்துக் கொண்டிருந்தான்.
அந்தத் தரு எங்களுக்கேயான தருவாயிற்று. தருவின் நிழல் எப்போதும் குளுமையாகதான் இருந்தது. வெளியே இப்போதும் ஓட ஓட விரட்டும் அந்தப் பாலைவெளியின் கொடுமை தொடரலாம். எத்தனையோ நெஞ்சங்கள் தருவின் குளிர்மைக்காய் ஏங்கலாம். அலைந்து அலைந்து உருக்குலையலாம். வாழ்வுப் பாதையில் ஒருபோதும் தருவின் நிழலைக் காணாது மாய்ந்து போகலாம். கொடுமை!
ஆனால், நான் அதையெல்லாம் மறந்தாயிற்று! தருவும் குளிர் நிழலும், நிலவும் இனிய கானமும், வசந்தத் தென்றலும், அழகிய காலையும்… மாலையும், நானும் ப்றேமியுமாய்…
ஆனால், அந்த காட்டு மனிதனின் வெறித்த பார்வையும் அவனிலான ப்றேமியின் வாத்சல்யமும்…
குளிர் தருவின் கீழும் பாலையின் வெப்பக் காற்று புகுந்தது போல இருந்தது. என்னால் தாங்க முடியாது போயிற்று. பயமும், கிலேசமும், வெறுப்பும் மேலோங்கிற்று.
அந்தக் காட்டு மனிதனை தருவின் நிழலினின்றும் துரத்தினால், எல்லாம் பழையபடியே ஆகலாம் போலிருந்தது. ஆனால் அவன் அசையாத பிடிவாதத்துடன் அப்படியே இருப்பான் போலிருந்தது. அவன் மேல் ப்றேமி காட்டும் வாத்சல்யம் தயக்கத்தைத் தந்தது.
என்றாலும் ஒருநாள் கேட்டேன்.
“ப்றேமி இங்கேயும் இந்தத் தருவின் கீழும் பாலை வெளியின் வெக்கையை உன்னால் உணர முடியவில்லையா?”
“இல்லையே” என்றாள் வெறிதாய்…
“நான் உணர்கிறேன். என்னால் தாங்க முடியாது போல இருக்கிறது. அந்தக் காட்டு மனிதன் இங்கிருப்பதால் தான் இப்படி நேரிடுகிறது போலும்’
“இல்லையில்லை, எல்லாம் உங்கள் மனப்பிரமை” என்றாள்
என்றாலும் அந்த வெக்கையை என்னால் உணர முடிந்தது. மேலும் மேலும் உக்கிரமாக…
காட்டு மனிதன் தருவின் நிழலில் மேலும் கூடிய சுயாதீனத்துடன் உலாவத் தொடங்கினான். தன்மீதுள்ள ப்றேமியின் வாத்சல்யம் அவனுக்கு புரிந்திருக்க வேண்டும். அவன் கூடிய தைரியத்துடன் தருவின் நிழலில் அத்துமீறிப் பிரவேசித்துக் கொண்டிருந்தான். ப்றேமியின் வாத்சல்யம் கலந்த பார்வைகள்… புன்னகைகள், நிமிர்ந்தால்… திரும்பினால்… அசைந்தால்… அதற்காவே காத்திருப்பவனாய்… எங்கோ வெறிப்பதாய் பம்மாத்துப் பண்ணிக் கொண்டு, தலையை மடக்கிப் படுத்துக் கொண்டு… இடையிடையே பாட்டுகளும் பாடிக் கோண்டு…
”ப்றேமி என்னால் இந்த வெக்கையைத் தாங்க முடியவில்லை. நான் அந்தக் காட்டு மனிதனை இந்த இடத்தை விட்டே துரத்தப் போகிறேன்’.
“பாவம் அப்படி செய்யாதீர்கள். அந்தரித்த சீவன்; இந்த நிழலே தஞ்சமென வந்திருக்கிறது. இன்னும் நாலைந்து மாதத்தில், இவ்வளவு நாளும் அலைந்த அதன் களைப்பு சற்றே தீர்ந்த பிறகு, வேண்டுமென்றால்…”
எனக்கு எரிச்சலாக இருந்தது. காட்டு மனிதன் சுயாதீனமாகவே இயங்கினான். ப்றேமி மேலேயே என் கட்டுப்பாடு கூடிற்று. நிமிரக்கூடாது, திரும்பக் கூடாது, அசையக் கூடாது.
கூர்மையாகப் பார்க்கக் கூடாது புன்னகைக்கக் கூடாது.
”எப்படி…? எப்படி என் அடக்கு முறை”
அவளை சந்தித்த தொடக்க காலத்தைப் போலவே, இப்போதும் என்னால் அவளையே சுற்றிக் கொண்டு திரிய முடியுமா? நானில்லாத வேளைகளில் அவள் நிமிருவாள்; திரும்புவாள்; அசைவாள்; பார்ப்பாள். அந்த வேதனையிலும் இந்த வேதனை பரவாயில்லைப் போலப்பட்டது. நானிருக்கும் போதே, நான் இல்லை என நினைத்துக் கொண்டு நிமிர, திரும்ப, அசைய, புன்னகைக்க…
அது மகா மகா வேதனையாயிற்று.
காட்டு மனிதன் என்னுடனேயே மோதத் தொடங்கினான். அவ்வப்போது சிறு சிறு மோதல்கள் நடந்தன. நான் வலிமை பொருந்தியவனாகவும், தருவின் நிழலிலே கூடிய காலம் இளைப்பாறித் தென்பு பெற்றவனாயும், தருவிற்கும் – நிழலுக்கும் உரிமை பூண்டவானயிருந்தும், அவ்வப்போது அவன் கையும் மேலோங்கியதுண்டு. மாறாகத் தளர்ந்த காலங்களில் அவன் என்னுடனேயே குழைந்து பேசி மன்றாடியதுண்டு.
ஒரு நாள் சிறு மோதலின் பின் அவன் திடீரென உரத்த குரலில் பிரகடனம் செய்தான்.
“இந்த தருவின் நிழல் உனக்கு மட்டும் உரிமையானதல்ல. இந்தத் தருவின் நிலம் உனக்கு மட்டும் சொந்தமானதுமல்ல”
என்னால் என் காதுகளையே நம்ப முடியவில்லை. என் ப்றேமியும்… என்னுடன் தருவிற்கும், நிழலிற்கும், நிலத்திற்கும் உரிமைபூண்ட என் ப்றேமியும்… அதைக் கேட்டுக் கொண்டு பேசாமல் நின்றாள்.
அன்று இரவில், அமைதியற்ற உறக்கத்தின் பின் – திடீரென விழிப்பு வந்த அதிகாலைப் பொழுதில், நான் என்னையே சுயவிசாரணை செய்யத் தொடங்கினேன். “நான் யார்? காட்டு மனிதன் யார்? தருவின் நிழலிற்கும், நிலத்திற்கும் உரிமையானவன் யார்? எப்படிக் காட்டுமனிதனால் அந்தப் பிரகடனத்தை விட முடிந்தது…?”
“பேசாமல் செத்துத் தொலை!”
என்னால் சாகமுடியவில்லை.
பாலை வெளியின் வெக்கை தாங்க முடியாத அளவிற்கு மோசமாயிற்று!
சொல்லில் அடங்காத வேதனையோடு நான் உழன்று கொண்டு…
தருவின் நிழலே நரகமாயிற்று.
இப்போதெல்லாம் பாலைவெளிக்கும், தருவின் நிழலிற்கும் வித்தியாசமே இல்லை என்றாற்போல ஆகிவிட்டது! பாலைவெளியிலும் பார்க்க தருவின் நிழலே கொடுமையானது என்று கூடப்பட்டது. அந்தத் தருவின் நிழலைவிட்டு ஓடிவிட்டால் அந்த வேதனை – வெக்கை குறையுமென்று கூடப்பட்டது.
ஆனால் ஓடமுடியவில்லை, “இந்த வேதனைகளிலேயே உழன்று, உழன்று வாழ்ந்து முடி” என்று சபிக்கப்பட்டே பிறந்தவனாக, அவற்றை மேன்மேலும் சுமந்து கொண்டு…
இடையிடையே வசந்தத்தின் வர்ணங்கள், இடையிடையே கண்ணீர்ப் பெருமூச்சுக்கள், இடையிடையே மோதல்கள், இடையிடையே சமாதானங்கள், குமைச்சல்கள், ஆசூசைகள், அற்ப சந்தோஷங்கள் என்றவாறு…
அந்தரித்த சீவனாக வந்த காட்டு மனிதன் இப்போது அங்கேயே காலூன்றி விட்டான். ஆலோசனை, அபிப்பிராயங்கள் சொல்லத் தொடங்கினான். கர்வம் பிடித்த ஒரு வேலைக்காரனைப் போலவும் செயற்பட்டான். எடுத்தெறிந்து பேசினான். “நீ யார், எங்களைக் கேட்க…” என்றவாறு நடந்து கொண்டான்.
ஒருநாள் கேட்டேன்.
கடுமையான தொனியில் விடாப்பிடியாகத் தான் கேட்டேன். அப்போது ப்றேமியும் அங்கு நின்று கொண்டிருந்தாள்.
அவன் சொன்னான், மெதுமையான குரலில் தான் சொன்னான். “உனக்கு நான் துரோகம் செய்யப்போவதில்லை”
உலகம் எல்லாமே அப்படியே ஸ்தம்பித்து நின்றாற் போன்ற மௌனம்… மௌனம்… பெரிதாய் கனக்கும் மெளனம்! ஆடாது, அசையாது நிற்கும் ப்றேமியைப் பார்த்தேன். மௌனம்… மௌனம்… மெளனம்.
தரு பெயரளவிலேயே தருவாயிற்று, எல்லாமே கொதிக்கும் அனல் கக்கும் பாலைவெளியாயிற்று.
இந்தக் கனவு எனக்குக் கற்றுத்தந்த படிப்பினைகள் மூன்று.
- கெக்கட்டமிட்டுச் சிரிப்பவன் விக்கி விக்கி பெருங் குரெலெடுத்து அழுவது மாதிரி, அதிகமான இன்பங்களை அனுபவிப்பவன், அதிகமான துன்பங் களையும் அனுபவிக்கத் தான் வேண்டும்.
- எந்தச் சுதந்திரமான உணர்ச்சியையும் பயங்கரமான அடக்குமுறைச் சட்டங்களால் அழித்துவிட முடியாது.
- ஊற்றுப் போன்று இயல்பாகவே கிளரும் அன்பை வற்புறுத்தல்களினால் ஏற்படுத்தவும் முடியாது. அடக்கி விடவும் முடியாது.
ஆனால், மகா சனங்களே மேலும் ஒன்று சொல்வேன். வாழ்வியக்கமே இன்ப நாட்டமாகும் போது, நீங்கள் வேதனைகளை -மகா கொடிய பயங்கரமான வேதனைகளைச் சுமக்கத்தான் வேண்டும்.
இந்தச் சிலுவையிலிருந்து யாரும் மீட்சி பெற்றுவிட முடியாது.
– திசை 04-05-1990
– உதிரிகளும்…(சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: ஆவணி 2006, புதிய தரிசனம் வெளியீடு.