கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதேசமித்திரன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 413 
 
 

இவ்வுலகமே ஈசனுடைய ‘விளையாட்டு’. உலகத்தை அறிய வேண்டுமானால் விளையாட்டுப் பழக்கமும் வேண்டும்… எழுதும் விஷயங்களுக்கு என்ன மகுடம் ஏற்படுத்தலாமென்ற யோசனையுண்டாயிற்று. பலவிதமான செய்திகளையும் கலந்து பேச நேரிடுமாதலால் “பலசரக்குக் கடை” என்று மகுடமெழுத உத்தேசித்தேன். அது அதிக விளையாட்டாக முடியுமாதலால் விட்டுவிட்டேன். எனக்கும் ஒரு செட்டியாருக்கும் சினேகம்; அவரைப்போல் நாம் ஒரு பலசரக்குக் கடை வைத்தால் அவருக்குக் கோபம் ஏற்படுமென்று கருதி அந்த மகுடத்தை விலக்கினேன். ….”தராசு” என்று பொதுப்படையாகப் பெயர் வைத்திருக்கிறேன். எல்லா வஸ்துக்களையும் நிறுத்துப் பார்க்கும் எல்லாச் செட்டியார்க்கும் இதனால் உதவியுண்டு. எந்தச் செட்டியாரும் நம்மிடம் மனஸ்தாபங் கொள்ள இடமிராது.

1

சுதேசமித்திரன் 25.11.1915
ஐரோப்பிய வைத்தியம் சிறந்ததா? நாட்டு வைத்தியம் சிறந்ததா?

ஐரோப்பிய வைத்தியத்தின் சார்பாக இருப்போர் சொல்லுகிறார்கள்:- “எங்கள் வைத்தியம் சயன்ஸ்படி நடத்தப்படுகிறது. (சயன்ஸ் என்பது தற்காலத்து ஐரோப்பிய இயற்கை சாஸ்திரம்). ‘உடலுக்குள் என்னென்ன கருவிகள் உண்டு? அவை எப்படி வேலை செய்கின்றன?’ என்ற விஷயம் நாட்டு வைத்தியருக்குத் தெரியாது. தொற்று வியாதிகளுக்கு ஆதாரமான, கண்ணுக்குத் தெரியாத துளிப்பூச்சிகளின் செய்தியெல்லாம் நாட்டு வைத்தியர் படித்ததில்லை. மருந்துகளின் தொழில் மர்மங்களெல்லாம் நன்றாகத் தெரியவேண்டுமானால் ரசாயன சாஸ்திரம் கற்றிருக்க வேண்டும். நாட்டு வைத்தியருக்கு அந்த சாஸ்திரம் தெரியாது. நாட்டு வைத்தியத்தால் ஜனங்கள் பிழைப்பது ஒரு அச்சரியமேயன்றி வேறில்லை”.

நாட்டு வைத்தியத்தின் கட்சியார் சொல்லுகிறார்கள்:- ”அந்த ஐரோப்பிய சாஸ்திரங்களையெல்லாம் ராஜாங்கத்தார் எளிய தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவார்களானால் நாங்கள் படித்துக் கொள்ளுவதில் ஆட்சேபமில்லை. ஆனால் வைத்தியனுக்கு முக்கியமாக வேண்டியது நோய் தீர்த்துவிடுதலே. இதில், இந்த தேசம் சம்பந்தப்பட்டவரை, ஐரோப்பிய வைத்தியரைக் காட்டிலும் எங்களுக்கு அதிகத் திறமையுண்டு. எங்களுடைய பூர்வீக மருந்துகளே இந்த தேசத்து சரீர நிலைக்கு அனுகுணமாகும்; இதை வேண்டுமானால் சோதனை செய்து பார்க்கலாம்”.

எனது நண்பர் ஒரு யோகீச்வர் இருக்கிறார். அவரிடம் இந்த இரண்டு கட்சிகளையும் சொன்னேன். அவர் சொல்லுகிறார்:- ”ஒருவனுக்கு வியாதிகள் வராதபடி தடுத்துக் கொள்வது நலம். தன்னை மீறி வந்தால்-நல்ல காற்று, நல்ல நீர், நல்ல வெளிச்சம், சுத்தமான உணவு, இயன்றவரை சரீர உழைப்பு, மனோதைரியம், சந்தோஷம் இவற்றால் பெரும்பான்மையான நோய்கள் இயற்கையிலேயே சொஸ்தமாய் விடும். வைத்தியர் அவசியமென்ற ஸ்திதிக்கு வந்துவிட்டால் பிறகு தெய்வ பலமுள்ளவர்கள் நிச்சயமாகப் பிழைப்பார்கள். சாகத்தான் வேண்டுமென்று தீர்ந்தால், அயல்நாட்டு மருந்தினால் சாவதைக் காட்டிலும், நாட்டு முறைப்படி சாவது நல்லது.

“நாட்டு வைத்தியம்” என்ற பேச்செடுத்ததிலிருந்து எனக்கு வேறொரு செய்தி யோசனைக்கு வருகிறது.

நமது ஜனங்களுடைய உடம்பைப் பற்றிய வியாதிகளுக்கு மருந்து கொடுப்பதைப் பற்றிப் பேசினோமா? அதிலிருந்து, நம்மவர்களின் ஆத்மாவைப் பற்றிய வியாதிகளுக்கு மருந்து கொடுக்கும் பெரிய வைத்தியத்தின் விஷயம் ஞாபகத்துக்கு வந்துவிட்டது.

‘இந்த உலகத்து மேன்மைகளெல்லாம் அநித்யம். ஆகையால் நமக்கு வேண்டியதில்லை. செல்வத்தையும் கீர்த்தியையும் தேடி முயற்சி செய்பவன் அஞ்ஞானத்தில் அழுந்திக் கிடக்கிறான். நாம் ஆத்மலாபத்தை விரும்பி இவ்வுலகத்தை வெறுத்துத் தள்ளி விடவேண்டும்” என்பது ஒருமுறை.

மடங்களிலேயும், காலசேபங்களிலும், பஜனைக் கூட்டங்களிலும் புராண படனங்களிலும் மதப் பிரசங்களிலும், பிச்சைக்காரர் கூட்டத்திலும், வயது முதிர்ந்தோர் சம்பாஷணைகளிலும்-எங்கே திரும்பினாலும், நமது நாட்டில் இந்த “வாய் வேதாந்தம்” மலிந்து கிடக்கிறது.

“உலகம் பொய்; அது மாயை; அது பந்தம்; அது துன்பம்; அது விபத்து; அதை விட்டுத் தீரவேண்டும்” இந்த வார்த்தை தான் எங்கே பார்த்தாலும் அடிபடுகிறது. ஒரு தேசத்திலே படித்தவர்கள், அறிவுடையோர், சாஸ்திரக்கார் எல்லோரும் ஒரே மொத்தமாக இப்படிக் கூச்சலிட்டால், அங்கே லௌகிக காரியங்கள் வளர்ந்தேறுமா? மனம்போல வாழ்க்கையன்றோ?

பூர்வமதாச்சார்யர் ‘பாரமார்த்திக’ மாகச் சொல்லிப்போன வார்த்தைகளை நாம் ஓயாமல் லௌகிகத்திலே சொல்லிக் கொண்டிருப்பது சரியா? வெகு ஜனவாக்கு நமது தேசத்தில் பலித்துப் போய் விடாதோ? இகலோகம் துன்பமென்றும் நம்பினால், அது துன்பமாகத் தான் முடியும். இந்த உலகம் இன்பம். இதிலுள்ள தொழில். வியாபாரம், படிப்பு, கேள்வி, வீடு, மனைவி மக்கள், எல்லாவற்றிலும் ஈசன் அளவிறந்த இன்பத்தைக் கொட்டி வைத்திருக்கிறான். விதிப்படி நடப்போர் இந்த ஸ¤கங்களை நன்றாக அனுபவிக்கிறார்கள். ஈசனுடைய விதி தவறும் கூட்டத்தார் துன்பமடைகிறார்கள்.

“வேதாந்தம்” மற்றொரு சமயத்திலே பார்த்துக் கொள்வோம். “சட்டசபை” சங்கதியொன்று பேசலாம். சேலத்து ஸ்ரீ நரசிம்மையர். சிறு பிள்ளைகள் சுருட்டுக் குடிப்பதைக் குறைக்க வேண்டுமென்று சென்னைப் பட்டணம் சட்டசபையில் பேசப் போவதாகத் தெரிகிறது. இந்த விஷயத்தை மேற்படி வழக்கமுடைய ஒரு சிறு பிள்ளையிடம் நான் சொன்னேன். ”என்ன சட்டந்தான் கொண்டு வரட்டும். நான் சுருட்டுப் பிடிப்பதை அவர்களாலே தடுக்க முடியாது” என்று அந்தப் பிள்ளை சொல்லுகிறான். புகையிலை ஆகாரத்தைக் குறைத்து விடுமென்று வைத்திய சாஸ்திரம் சொல்லுகிறது. அப்படியிருந்தும், அதை வழக்கமாகக் கொண்டவர்கள் விட மனமில்லாமலிருக்கிறார்கள். ஆனாலும், புகையை நம்பி உணவை வெறுக்கும் மனிதர்களை இந்த ஒரு விஷயத்தில் தானாபார்க்கிறோம்?

2

“ஒட்டகத்துக்கு ஓரிடத்திலா கோணல்? தமிழ்நாட்டிற்கு ஒரு வழியிலா துன்பம்?”
சென்ற வாரம் சென்னப்பட்டணம் கந்தசாமி கோயில் வசந்த மண்டபத்தில், சாது மகா சங்கத்தாரின் ஏற்பாட்டிலே ஒரு கூட்டம் நடந்தது. அதிலே, சுவாமி அத்புதாநந்தர் என்பவர் ஒரு நேர்த்தியான உபந்யாசம் செய்ததாகத் தெரிகிறது.

சுவாமி சொல்லியதன் சுருக்கம்:-”மத விஷயங்களில் நமது முன்னோர் மிகவும் உயர்ந்த ஆராய்ச்சிகள் செய்து வைத்திருக்கிறார்கள். இவற்றை நாம் நன்றாகத் தெரிந்து கொண்டு உலகத்தாருக்கெல்லாம் உபதேசம் செய்ய வேண்டும். இவ்விஷயத்தில் அமெரிக்கா ஐரோப்பா முதலிய வெளி தேசத்தார் நமது உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர்.”

இனி, ”மதவிஷயங்கள்” என்பவை பரமார்த்திக உண்மைகளாம்; அதாவது ஐம்புலன்களுக்கெட்டாத, சுத்த அறிவினால் காணுதற்குரிய, தெய்விக உண்மைகள்; இவை ஞானம், பக்தி, யோகம் என்னும் வழிகளிலே கிடைப்பனவாகும். இவற்றை நமது முன்னோர் பெரியபாடு பட்டுத் தேடித் தம்முடைய நூல்களிலே திரட்டி வைத்திருக்கிறார்கள். இந்தச் செல்வத்தை நாம் திறமையுடன் கையாண்டு உலகத்தாருக்கெல்லாம் வாரிக் கொடுத்து இவ்வுலகத்தின் துன்பங்களையும், சிறுமைகளையும் அறியாமைகளையும் மாற்றி இதனை மேன்மைப்படுத்த வேண்டும்.

”தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந்தார்.”

என்று திருவள்ளுவர் சொல்லியபடி, இ•தே ஸ்வாமி அத்புதாநந்தருடைய கருத்தாகும். இதை நான் பரிபூர்ணமாக அங்கீகாரம் செய்து கொள்ளுகிறேன். ஆனால், நமது ஆசையை இவ்வளவுடன் நிறுத்தி விடலாகாது. லௌகிக விஷயங்களிலும் நமது உதவியை உலகம் வேண்டித்தான் நிற்கிறது. இதை நாம் மறந்து விடலாகாது. நமது முன்னோர் பாரமார்த்திகச் செய்திகளில் மாத்திரமே நிகரற்ற மேன்மையடைந்திருந்ததாக நினைத்துவிடலாகாது. இகலோக அறிவிலும் ஆச்சரியமான உயர்வு பெற்றிருந்தார்கள். பல தேசங்களையும் அவற்றின் பலவித சாஸ்திரங்களையும், நன்றாக அறிந்த எனது நண்பரொருவர் ஐரோப்பாவில் மகா கீர்த்தி பெற்றிருக்கும் யவனத்துச் (கிரேக்க தேசத்துச்) சிற்பத்தைக் காட்டிலும் நமது புராதனச் சிற்பம் மேம்பட்டதென்று கருதுகிறார். இதை வெளியுலகத்தாருக்கு விளங்கச் செய்வேண்டுமென்ற நோக்கத்துடன், ஸ்ரீ ஆனந்த குமாரசாமி முதலிய வித்வான்கள் மிகவும் உழைத்து வருகிறார்கள். ஆனால் இதை இங்கு நமது தமிழ் நாட்டிலே வாழும் ஜனங்களுக்கு விளங்கக் காட்டுவார் யாரையும் காணவில்லை. பல தேசத்து சங்கீதங்களையும் நான் ஒருவாறு ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். நமது புராதன சங்கீதத்துக்கு நிகரானது இவ்வுலகத்தில் வேறெங்குமில்லை என்பது என்னுடைய முடிவு. கவிதை விஷயத்திலும் இப்படியே.

இனி கணிதம், ரசாயனம் முதலிய வேறு பல சாஸ்திரங்களும் நமது தேசத்திலே தான் முதலில் வளர்ச்சி பெற்றவையாகும்.


நாம் இகலோகத்து அறிவிலும் மேம்பாடு பெறவேண்டும். தெரியாத சாஸ்திரங்களின் ஆரம்பங்களைப் பிறரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு அவற்றை நமது ஊக்கத்தாலும் உயர்மதியாலும் மேன்மேலும் வளர்ந்து மீளவும் உலகத்தாருக்கு ஊட்ட வேண்டும். இகலோக வளர்ச்சியிலே நாம் தலைமை வகிக்க வேண்டும். அதற்கு நாமே தகுதியுடையோர்.

பம்பாயில் நடக்கப் போகிற காங்கிரஸ் சபைக்குப் பல ஊர்களிலிருந்து பிரதிநிதிகள் வருவதிலே சில மாதர்களும் பிரதிநிதிகளாக வரக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண் பிரதிநிதிகளுக்கு வேண்டிய உதவிகள் செய்யும் பொருட்டு தர்ம சேவர்களாக (வாலண்டியர்களாக) ஆண் பிள்ளைகள் முற்பட்டு வந்திருப்பது போலவே, பெண் பிரதிநிதிகளுக்கு வேண்டிய உபகாரங்கள் செய்வதற்காக தர்மசேவகப் பெண்கள் சிலர் முற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தப் புதுமை நமது தேசத்துக்குப் பெரியதோர் நன்மைக்குறியென்பது என்னுடைய கொள்கை.


அடடா! விளையாட்டுப் பேச்சை மறந்தல்லவோ போய்விட்டோம். யுவான் ஷி காய் சீன தேசத்துக் குடியரசுத் தலைவர்-காயாக இருந்தவர் பழுத்துக்கொண்டு வருகிறார். பூர்வ ராஜ வம்சத்தை ஒழிப்பதற்கு பகீரத பிரயத்தனங்கள் செய்து சீன தேசத்தார் குடியரசு நாட்டினார்கள். யுவான்-ஷி-காயின் பக்கம் சேனாபலம் இருந்தபடியால் அந்தக் குடியரசுக்கு இவர் தலைமை பெறுதல் சுலபமாயிற்று. நாட்பட நாட்பட, வெகு சீக்கிரத்தில், யுவான் மனதில் குடியரசை விட ராஜதிகாரமே சீனத்துக்குப் பொருந்திய ஏற்பாடாகுமென்று உதயமாயிற்று. உலகத்தாரெல்லாம் இவர் தாமே ராஜாவாகிவிட நினைப்பதாக நிச்சயித்தனர். இப்போது பழைய குமார ராஜாவுக்கு இவருடைய பெண்ணை மணஞ் செய்து கொடுப்பதாக வதந்தியேற்படுகிறது. எனவே சீனா தேசத்துக் குடியரசு இன்னும் எவ்வளவு காலம் ஜீவித்திருக்குமென்பதை நமது தேசத்து ஜோதிடர்கள் கண்டு பிடித்துச் சொல்லும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். அதன் ஜாதக விவரங்கள் சிலவேண்டுமானாலும் சொல்லுகிறேன்.

மேற்படி குடியரசுக்கு உச்சஸ்தானத்திலே இராகு இருக்கிறான். இரண்டாமிடத்திலே சனி. சனி சப்பாணியென்ற விஷயம் சகலருக்கும் தெரியும். மற்ற கிரகங்களெல்லாம் வக்கிரந்தான். இதற்கு நானே தீர்மானம் சொல்லிவிடக்கூடும். ஆனால், எனக்கு ஜோதிடத்திலே அரிச்சுவடி கூடத் தெரியாது.


செய்யூரிலிருந்து ஸ்ரீ மாதவய்யா ஒரு கிழவருடைய விவாகத்தின் சம்பந்தமாக எழுதியிருந்த கடிதம் சில தினங்களின் முன்னே ”சுதேசமித்திரனி”ல் பிரசுரஞ் செய்யப்பட்டிருந்தது.

கிழவருக்கு வயது 70; அவருடைய தயா‘ர் இன்னும் உயிரோடிருக்கிறாள். அந்தப் பாட்டிக்கு வயது 98. இந்தத் தாயாருக்கும் தமக்கும் உபசாரங்கள் செய்யும் பொருட்டுக் கிழவர் ஒரு பதினாறு வயதுக் குமரியை மணஞ் செயதுகொள்ளப் போகிறாராம். இதே கிழவரிடம் இதைத் தவிர இன்னும் 21 குமரிகள் ஜாதகம் வந்திருப்பதாகத் தெரிகிறது. கடைசியாக ஒருவாறு தீர்மானஞ் செய்திருக்கிற பெண்ணுடைய தகப்பனார் பணத்தையும் விதியையும் ஜோதிடத்தையும் நம்பி வேலை செய்கிறார். தெய்வத்தை நம்புவதாகத் தெரியவில்லை. ஒட்டகத்துக்கு ஓரிடத்திலா கோணல்? தமிழ் நாட்டிற்கு ஒரு வழியிலா துன்பம்?

இன்று காலை நம்முடைய கடைக்கு ஒரு கவிராயர் வந்து சேர்ந்தார். வந்து, “வங்க தேசத்தின் மகாகவியென்று புகழ் பெற்றிருக்கும் ரவீந்திரநாத் டாகூர் செய்த “கீதாஞ்சலி” என்ற நூலில் சிறிய பாட்டொன்றைத் தமிழில் வசனமாக மொழிபெயர்த்திருக்கிறேன். சரிதானா என்று பார்க்க வேண்டும்” என்றார்.

“வாசித்துக் காட்டும்” என்றேன்.

“எங்கே மனதில் அச்சமில்லை; தலை நிமிர்ந்து நிற்கிறது; எங்கே அறிவுக்குக் கட்டில்லை;

எங்கே மனிதவுலகம் சிறிய வீட்டுச் சுவர்களால் துண்டு துண்டாகப் பிரிவுபடாதிருக்கின்றது;

எங்கே உண்மையின் ஆழத்திலிருந்து சொற்கள் நேரே புறப்படுகின்றன;

எங்கே ஓய்வில்லாத முயற்சி பரிபூரணத் தன்மையை நோக்கிக் கைநீட்டுகிறது;

எங்கே மதியாகிய தெளிந்த வாய்க்கால் செத்த வழக்கம் என்ற கொடிய பாலையின் மணலிலே மடியாது நீங்குகிறது;

எங்கே மேன்மேலும் விரிகின்ற கருத்திலும் செய்கையிலும் அறிவு மூண்டு செல்லும்படி நீ நடத்துகிறாய்;

அமரஸ்தானமாகிய அந்த ஸ்வதந்த்ர நிலையில், ஹே பிதா, எனது தேசம் கண்விழித்திடுக.”

(குறிப்பு:- அமரஸ்தானம்-தேவலோகம் ஸ்வதந்த்ரம்-விடுதலை; பிதா-கடவுள்.)

“மொழி பெயர்ப்பிலே பிழையில்லை. ஆனாலும், இன்னும் சிறிது சுலபமான நடையில் இருக்கலாம்” என்று தராசு சொல்லிற்று.


“பூசனிக்காய் சங்கதி சொல்லட்டுமா?” என்று நண்பர் செட்டியார் கேட்டார்.

“அதென்னையா?” என்று எல்லாரும் வியப்புடன் செட்டியாரைக் கேட்டார்கள்.

செட்டியார் சொல்லுகிறார்:- “சில தினங்களின் முன்பு சென்னைப் பட்டணத்தில் பொருட்காட்சி பார்க்க பத்திரிகையின் மனிதரொருவர் போயிருந்தார். அங்கே சாமான்யமாகக் கிடைக்ககூடிய மிகவும் பெரிய பூசனிக்காயைக் காட்டிலும் அதிகப் பெரிதாகிய ஒரு பூசனிக்காய் இருந்தது. ‘சாஸ்திர-எருப் போட்டதனால் இந்தப் பயன் உண்டாயிற்றென்று தெரிகிறது. ஒரு புல் முளைக்கிற இடத்தில் இரண்டு புல் முளைக்கும்படி செய்பவன் தேசத்துக்குப் பெரிய உபகாரி’ என்று இங்கிலிஷ்காரர் சொல்வதுண்டு. ‘தொகைக்குள்ளது அளவுக்கும் உண்டு’ என்று அந்தப் பத்திரிகைக்காரர் சொல்லுகிறார். அதாவது, சிறிய இலை தரும் வாழையைப் பெரிய இலையைத் தரும்படி செய்பவனும் தேசத்துக்குப் பெரிய உபகாரியாவான். ‘பெரிய பூசனிக்காய் மற்றப் பூசனிக்காய்கள் பார்த்துக் கொஞ்சம் வெட்கப்பட்டது போல விழித்தன. ஆனால் நமது பூர்வீகர்களிருந்த அளவு நமக்கும் போது என்ற ஒருவித வைதீகத் தோற்றமும் அந்தப் பூசனிக்காய்களின் முகத்திலே தென்பட்டது’ என்று அந்தப் பத்திரிகைக்காரர் எழுதியிருக்கிறார்.”

இவ்வாறு செட்டியார் சொல்லிக்கொண்டு போகையில், நான் அவரை நோக்கி:- ”ஆமாங்கானும், அதற்கென்ன இப்போது? ஆலோசனைக்கு என்ன விஷயம் கொண்டு வந்திருக்கிறீர்?” என்று கேட்டேன்.

தராசு:- ”சரி மேலே வியாபாரம் நடக்கட்டும்” என்றது.

”உங்க ஹிந்துக்களுடைய நாலு வேதத்துக்கும் பெயரென்ன?”’ என்று ஜிந்தாமியான் சேட் கேட்டார்.

”ரிக், யஜுர், சாமம், அதர்வணம்” என்றேன். ”எதுக்குக் கேட்கிறீர்?” என்று செட்டியார் கேட்டார். அதற்கு ஜிந்தாமாயின் சேட் சொல்வதானார்:-”கேள்விப்பட்டேன், நேற்றுப் பட்டணத்திலிருந்து ஒரு சாமியார் நம்ம கடைக்கு வந்திருந்தார். அவர் ஹிந்துக்களுடைய வேதம் மிகவும் பழைமையானது. அதிலும் நம்ம குரானைப் போலவே அல்லாவைத் தான் புகழ்ந்து பேசுகிறது. ஆனால் அல்லா என்கிறதுக்கு அவர்களுடைய பாஷையிலே ப்ரஹ்ம என்கிறார்கள். அதிலே ரிஷிகள் என்று பாடினவர்கள் அல்லாவினுடைய உண்மையை அறிந்தவர்கள்’. இன்னும் அந்த சாமியார் ஏதெல்லாமோ சொன்னார். அதிலிருந்து ஞபாகம் உண்டாயிற்று.”

“வேதம் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்களோ?” என்று மற்றொருவர் கேட்டார்.

“இல்லை” என்றேன்.

“என்ன காரணம்? என்றார் கவிராயர்.

“அதற்குத் தகுந்த திறமையுடைய பண்டிதர்கள் இல்லை. ஒரு வேளை இருந்தாலும், அவர்கள் தொழில் செய்யவில்லை.”

“ஆமாம் வேதத்துக்குப் பலவிதமாக அர்த்தஞ் சொல்லுகிறார்களாமே? என்ன காரணம்?” என்று செட்டியார் கேட்டார்.

“மற்றொரு முறை அந்த விஷயம் பேசுவோம். வேறேதேனும் வியாபாரமுண்டோ?” என்றேன்.


சயன்ஸ் என்பதென்ன?

ஐரோப்பிய இயற்கை நூலுக்கு இங்கிலீஷ் பாஷையில் சயன்ஸ் என்று பெயர்.

“ஐரோப்பிய இயற்கை நூல்” என்று தனியாக ஒரு சாஸ்திரமுண்டா?

அப்படியில்லை. அந்த சாஸ்திரத்திலே நம்மைக் காட்டிலும் அவர்கள் அதிகத் தேர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

அதிலே என்ன பயன் உண்டாகிறது,

புதிய விழி உண்டாகிறது.

புதிய விழி என்பதென்ன?

பூமண்டலத்தையும் சர்வத்தையும் பற்றிய புதிய அறிவு.

நமது பூர்வீகங்களுக்கு இல்லாத அறிவு இப்போது சாத்தியப்படுமா?

அதைப் பற்றிய பேச்சில்லை.

நமக்கு இதுவரை இல்லாத அறிவு இப்போது சாத்தியப்படுமோ?

“முற்படுக; எழுக;” என்றது தராசு.


சென்னை சட்டசபையிலே ஜனங்களுக்குச் சார்பான காரியஸ்தர்கள் சில நல்ல தீர்மானங்கள் செய்து வைக்க விரும்பினார்கள். அவற்றுள்ளே, “கட்டாயப்படிப்பு,” “சர்க்கார் உத்தியோகமில்லாதவரை ஜில்லா போர்டுகளுக்குத் தலைவராக நியமித்தல்” முதலிய முக்கியமான அம்சங்களையெல்லாம் சர்க்கார் பக்கத்து ஸ்தானிகர்கள் எதிர்த்துப் பேசிப் பயனில்லாதபடி செய்துவிட்டார்கள்.

இந்த விஷயங்களையெல்லாம் என்னுடைய தராசிலே போட்டுப் பார்த்தேன். தராசுப் படிகள் கொள்ளவில்லை. இதையெல்லாம் ரயில்வே மூட்டைகள் நிறுத்தும் யந்திரத்தைப் போன்ற பெரிய நிறையயந்திரங்களில் போட்டுப் பார்க்க வேண்டும். இப்போது என்னுடைய வியாபாரம் அவ்விதமான பெரிய தராசு வாங்கக்கூடிய நிலையில் இல்லை.


”புதுக்கோட்டை ராஜா ஆஸ்திரேலிய மாதை விவாகம் செய்து கொண்டது சரிதானா?” என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார்.

”பெரிய மூட்டை; சீமை வியாபாரம்; நாட்டு வியாபாரத்துக்குத் தான் நம்முடைய தராசு உதவும். வேறு கடைக்குக் கொண்டு போம்” என்று ஜவாப் சொல்லி விட்டேன்.

”அது போனால் போகட்டும். அந்த ராஜா சமீபத்தில் ஒரு பிரசங்கம் செய்திருக்கிறார். அதில் நமது நாட்டு ஸ்த்ரீகளைக் கொஞ்சம் குறைவாகச் ¦‘சல்லியிருப்பது போல என் புத்திக்குப் புலப்படுகிறது. ‘ஹிந்து’ பத்திரிகையில் இதைப் பற்றி ஒரு தந்தியிருக்கிறது. வாசித்துக் காட்டுகிறேன்” என்று அந்த நண்பர் சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்தார்.

அவர் பின்வருமாறு படித்ததுக் காட்டினார்:- புதுக்கோட்டை ராஜா தமது பிரஜைகளுக்குச் செய்த பிரசங்கத்திலே சொல்லுகிறார்:- ”என் குடிகளே, எனது பத்தினிக்கு நீங்கள் செய்த ராஜோபசாரத்தால் என்ன விளங்குகிறது? என்னையும், எனது ராஜ்யத்தையும் பற்றிய சகல விஷயங்களிலேயும் நீங்கள் எனது தீர்மானத்தை பக்தி விசுவாத்தடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறீர்களென்பது தெளிவாகிறது. என்னையும் எனது ராணியையும் வரவேற்பதில் நீங்கள் செய்த ஆனந்த கோஷங்களினால் என்ன தெரிகிறது? வைதிக ஆசாரங்களுக்கு விரோதமாகத் தோன்றக்கூடிய செய்கைகளிலேகூட நீங்கள் சிறிதேனும் திகைப்பில்லாமல் என்னிடம் ராஜபக்தி செலுத்துவீர்களென்று தெரிகிறது. சில வருஷங்களாக எனது விவாகத்தைப் பற்றி ஆழ்ந்த சிந்தனை செய்து கொண்டு வந்தேன். இன்னவிதமான பத்தினி இருந்தால் நான் நமக்குக் குடும்ப சந்தோஷமும், ராஜ்யபாரத்திலே உதவியும் உண்டாகுமென்பதைப் பற்றி என்னுடைய பயிற்சியிலிருந்தும், யாத்திரைகளிலிருந்தும் எனக்குச் சில விசேஷ அபிப்பிராயங்கள் ஏற்பட்டிருந்தன. நமது ஜன சமூகம் இப்போதிருக்கும் நிலைமையில் நான் விரும்பிய குணங்களுடைய ஸ்திரீ நமக்குள் அகப்படுவது சாத்தியமில்லையென்று கண்டேன். இதற்காக சுதேசிய அபிமானத்தின் வெளித்தோற்றத்தைக் கொஞ்சம் இழந்து விடுதல் அவசியமென்றும் நிச்சயித்தேன். ‘சுதேசிய அபிமானத்தின் வெளித்தோற்றம்’ என்று சொல்லுகிறேன். ஏனென்றால் எத்தனையோ அன்னிய தேசங்களிலே பிறந்தாலும் தாம் சுவீகாரம் செய்துகொண்ட தேசத்தாருடன் பரிபூர்ணமாக ஒற்றுமைப்பட்டுப போவதை நாம் அறிவோம். இத்தனை காலம் கழித்துக் கடைசியாக எனது அபீஷ்டங்களுக்கு இணங்கிய பத்தினியை எனக்கு ஈசன் அருள் செய்திருக்கிறார். எங்களிருவருடைய ஆட்சியிலே இந்த ராஜ்யம் முன்னைக் காட்டிலும் அதிக சேமத்துடனும் சந்தோஷத்துடனும் இருக்குமென்று நம்புகிறேன்” என்பதாக அந்த நண்பர் ஒரு மட்டில் வாசித்து முடித்தார்.

“சரி, அனுபவக் குறைவினால் சொல்லி விட்டார். அகல்யா பாயி முதலிய ஹிந்து ராணிகளைப் பற்றி அவர் தக்க ஆராய்ச்சி செய்ததில்லை” என்று ஜவாப் தெரிவித்தேன்.
“அடா, இப்போது கூட பரோடா மஹாராணி இல்லை?” என்று மற்றொருவர் குறுக்கிட்டார்.

“வேறு விஷயம் பேசுவோம்” என்று சொல்லிவிட்டேன்.

தீர்ப்பு எப்படியிருக்குமென்பதை நீங்களே ஊஹித்துக் கொள்ளலாம்.

4

நேற்று மாலை தராசுக் கடைக்கு சதுரங்க பட்டணத்திலிருந்து ஒரு மாத்வ (ராவ்ஜீ) வாலிபன் வந்தான். “தராசுக் கடை இதுதானா?” என்று கேட்டான். “ஆம்” என்றேன். என் பக்கத்திலிருந்த தராசை ஒரு கோணப் பார்வையாகப் பார்த்தான். கொஞ்சம் மீசையைத் திருத்திவிட்டுக் கொண்டான். மூக்குக் கண்ணாடியை நேராக்கிக் கொண்டான். மனதுக்குள் ஏதோ இங்கிலீஷ் வார்த்தைகள் சொல்லிக் கொண்டான். என்னை ஒரு பார்வை பார்த்தான்.

”நான் கேட்கிற கேள்விக்கு விடை நீர் சொல்லுவீரா? இந்தத் தராசு சொல்லுமா?” என்று கேட்டான்.

”தராசு தான் சொல்லும்” என்றேன்.

நம்பிக்கை கொள்ளாதவன் போலே விழித்தான்.

”அப்படித்தான் சென்னப் பட்டணத்தில் கேள்விப்பட்டேன். ஆச்சரியமான தராசு! உமக்கெங்கே கிடைத்தது? தமிழ் தான் பேசுமோ? இங்கிலீஷ் தெரியாதாமே? ‘வொன்-டர்-புல், வெரி, வெரி வொன்-டர்-புல்” என்று இங்கிலீஷில் கொண்டு சமாப்தி பண்ணினான்.

”நீ கேட்க வந்த விஷயங்களைச் சொல். வீணாக நேரம் கழிப்பதில் பயனில்லை” என்று நினைப்பூட்டினேன்.

அந்தப் பிள்ளையின் பெயர் வாஸ¤தேவராவ். வாஸ¤தேவராவ் சொல்லுகிறான்:- ”வாலன்டீர் பட்டாளம் சேர்க்கிறார்களே, அந்த விஷயம் உம்முடைய தராசுக்குத் தெரிந்திருக்குமென்றே நினைக்கிறேன். எல்லாம் தெரிந்து எந்தக் கேள்வி கேட்டாலும் விடை சொல்லக்கூடிய மாயத் தராசுக்கு இது தெரியாமலிருக்குமா? ‘அப்கோர்ஸ்’ தெரிந்துதான் இருக்கும். அதிலே சேரலாமா? சேர்ந்தால் பயனுண்டா? இதுவரை நம்மவர்களுக்கு தளகர்த்த பதவி கொடுப்பதில்லையென்று வைத்திருந்த வழக்கத்தை மாற்றி இப்போது புதிய விதிப்படி நமக்கு ராணுவ உத்தியோகங்கள் கொடுக்கத் தயாராக இருக்கிறார்களென்று தெரிகிறது. இது நம்பத்தக்க செய்திதானா? நான் எப்படியேனும் நம்முடைய பாரத மாதாவுக்கு உழைக்க வேண்டுமென்ற கருத்துடனிருக்கிறேன். இந்த பட்டாளத்தில் நாம் சேர்வதானால் நமது தேசத்துக்கு ஏதேனும் நன்மையேற்படுமா என்ற விஷயம் என் புத்திக்கு நிச்சயப்படவில்லை. அதை உம்முடைய கீர்த்தி பெற்றதராசினிடம் ஆராயச்சி செய்ய வந்தேன்” என்றான்.

“ஆராய்ச்சியா?” என்று தராசு கேட்டது.

அதற்கு வாஸ¤தேவன் சொல்லுகிறான்:- “ஆம்! ஆராய்ச்சி; அதாவது பரியாலோசனை; இதை இங்கிலிஷில் கன்சல்டேஷன் என்று சொல்வார்கள். இங்கிலீஷ் பாஷையில் சொல்லக்கூடிய ‘ஐடியாஸ்’ நம்முடைய தாய்ப் பாஷைகளில் சொல்ல முடியவில்லை. ‘நெவர்மைண்ட்’. அதுவே விஷயம். ‘கிப்ளிங்’ என்ற இங்கிலீஷ் கவிராயர் சொல்வது போலே, ‘அது மற்றொரு கதை’; நான் கேட்க வந்த விஷயத்துக்கு விடை சொல்ல வேண்டும்” என்றான்.

அப்போது நான் வாசுதேவனை நோக்கி, “நீ ஏன் கேட்கிறாய்? நீ பட்டாளத்தில் சேரப் போகிறாயா?” என்றேன்.

அதற்கு வாஸ¤தேவன்:- “ஆஹா! நான் சேர்வதென்றால் ஏதோ சாமான்யமாக நினைத்துவிட வேண்டாம். எனக்குச் சென்னப்பட்டணம் முதல் டின்னவெல்லி வரைக்கும் ஒவ்வொரு முக்கியமான ஊரிலும் சிநேகிதர் இருக்கிறார்கள். நான் சேர்ந்தால் அவர்களத்தனைபேரும் சேர்வார்கள்; நான் சேராவிட்டால் அவர்கள் சேர மாட்‘ர்கள்” என்றான்.

தராசு கடகடவென்று சிரித்தது.

வாசுதேவனுடைய கன்னங்கள் சிவந்து போயின. மூக்குக் கண்ணாடியை நேரே வைத்துக் கொண்டான். மீசையைத் திருகினான். “வாட்இஸ் திஸ்!” இந்தத் தராசு என்னை நோக்கி ஏன் சிரிக்கிறது?” என்று மகா கோத்துடன் என்னை நோக்கிக் கேட்டான்.

அப்போது தராசு சொல்லுகிறது:- “முந்தி ஒரு தடவை ஒரு வக்கீல் என்னிடம் வந்து எனக்குச் சில ஞானோபதேசங்கள் செய்து விட்டுப் போனார். அதாவது, ராஜ்ய விஷயங்களைப் பற்றி நான் எவ்விதமாக அபிப்பிராயங்களும் சொல்லக்கூடாதென்றும், சண்டை சமயத்தில் ராஜ்ய விஷயங்களைப் பற்றி யாரும் ஒரு வார்த்தைகூடப் பேசாமலிருப்பதே நாம் இந்த ராஜாங்கத்தாருக்குச் செலுத்த வேண்டிய கடமையென்றும் பலமுறை வற்புறுத்திச் சொன்னார். நானும் அவர் சொல்வது முழுதும் நியாயமென்பதை அங்கீகரித்து, நம்மால் கூடியவரை இந்த ராஜாங்கத்தாருக்குத் திருப்தியாகவே நடந்துவிட்டுப் போகலாமென்ற எண்ணத்தால் அவருடைய சொற்படி நடப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். நீயோ, ராஜ்ய விஷயமான கேள்வி கேட்கிறாய். என்ன செய்வதென்று யோசனை பண்ணுகிறேன்” என்று தராசு சொல்லிற்று.

அப்போது வாசுதேவன்:- “நோ, நோ, நோ’; இல்லை. இல்லை. நீ என்னை கேலிபண்ணிச் சிரிக்கிறாய். நான் மதிப்புடன் கேட்க வந்தேன். உன்னுடைய குணம் எனக்குத் தெரியாமல் போய்விட்டது. போனால் போகட்டும்; நீ ரிசத்ததைப் பற்றி எனக்குப் பெரிய காரியமில்லை. உன்னைப் பொறுத்து விடுகிறேன். நான் கேட்க வந்த விஷயத்துக்கு விடை சொல்லு” என்றான்.

அதற்குத் தராசு:- “தம்பி, நான் உனக்கு பயந்து ஒன்றையும் மறைத்துப் பேசவில்லை. நீ கேட்க வந்த விஷயத்துக்கு மறுமொழி ஏற்கெனவே சொல்லியாய்விட்டது. சிரித்தது உன்னைக் குறித்தே தான். அதில் சந்தேகமில்லை” என்றது.
”காரணமென்ன?” என்று வாசுதேவன் சினத்தோடு விசாரித்தான்.

”தேசத்துக்குச் சண்டை போடக்கூடிய வீரனாக உன்னைப் பார்க்கும்போது தோன்றவில்லை. சண்டையிலே சேர்கிறவன் இத்தனை ஆராய்ச்சியும், பரியாலோசனையும், கன்ஸல்டேஷனும் நடத்தமாட்டான். படீலென்று போய்ச் சேர்ந்துவிடுவான்” என்று தராசு சொல்லிற்று.

”என்னை நீ போலீஸ்கார¦ன்று நினைக்கிறாயா?” என்று வாசுதேவன் கேட்டான்.

”நான் அப்படிச் சொல்லவில்லை” என்றது தராசு.

”நான் போய் வரலாமா!” என்று வாசுதேவன் கேட்டான்.

”போய் வா” என்றது தராசு.

அவன் போன பிறகு தராசு என்னிடம் சொல்லுகிறது:- ”இவன் உளவு பார்க்க வந்தவன், சந்தேகமில்லை. பட்டாளத்தில் சேர்ந்து தேசத்தைக் காப்பாற்றக்கூடிய யோக்யதையுடையவன் இத்தனை வீண் பேச்சுப் பேசமாட்டான். அவனுக்கு இத்தனை கர்வமிராது”

5

நேற்றுக் காலையிலே பொழுது விடிந்து இரண்டு நாழிகைக்கு முன்னே நமது ராசுக் கடைக்குச் சென்னப் பட்டனத்திலிருந்து ஒரு வக்கீல் வந்தார். இவருக்கு 40 வயதிருக்கும். ஜாதியிலே பிராமணர், சிவப்பு நிறம். உருளைக் கிழங்கைப் போலே நல்ல வட்டமான சதைப் பற்றிய முகம். நெற்றியிலே கோபீ சந்தனம். இலேசான தொப்பை. அதை மறைத்து ‘அல்பகா’ என்ற பட்டுத்துணியுடுப்பு. காலிலே இங்கிலீஷ் செருப்பு தலையிலே மஸ்லின் பாகை. தங்க விளிம்புடைய மூக்குக் கண்ணாடி உடுப்புப் ப¨யிலே தங்கக் கடியாரம், சங்கிலி முதலியன.

இவருக்குக் கண்ணிலே ஒரு குறை. சமீபத்திலிருக்கிற பொருள் நேரே தெரியாது; தூரத்திலேயிருப்பது தெரியும். எனவே, கண் முன்னே பெரிய தராசு தொங்க விட்டிருப்பதை இவர் காணாமல் கொஞ்சம் விலகியிருந்த நமது நண்பர் எலிக்குஞ்சுச் செட்டியாரை நோக்கித் திரும்பிக் கொண்டு:- ”தராசே, தராசே, உன்னுடைய கீர்த்தி சென்னப் பட்டணமெல்லாம் பரவியிருக்கிறது. உன்னிடம் சில கேள்விகள் கேட்கும்பொருட்டு வந்தேன். கேட்கலாமா?” என்றார்.

அதற்குச் செட்டியார்:- “நான் தராசில்லை. சாமி; நான் எலிக்குஞ்சு செட்டியார். அதோ கிழக்கே தொங்கவிட்டிருக்கிறதே, அதுதான் தராசு. பக்கத்திலிருக்கிறாரே, அவர்தான் தராசுக் கடை அய்யர்” என்றார்.

வக்கீல் கொஞ்சம் வெட்கமடைந்தார். நான் விஷயத்தை அறிந்து கொண்டு வேண்டிய உபசார வார்த்தைகள் சொல்லி முடித்த பிறகு
தராசினிடம் வக்கீல் கேள்விகள் போடத் தொடங்கினார்:-

வக்கீல்:- “நமது தேசத்துக் காருண்ய கவர்ன்மெண்டார் நமக்கு எப்போது ஸ்வராஜ்யம் கொடுப்பார்கள்?”

தராசு:- “ஒவ்வொரு கிராமத்திலும் ஜனத் தலைவர் பள்ளிக்கூடங்கள் வைத்து, தேச பாஷைகளில் புதிய படிப்பு சொல்லிக் கொடுக்க ஏற்பாடுசெய்தால், உடனே கொடுத்துவிடுவார்கள்.”

வக்கீல்:- “அது எப்போது முடியும்?”

தராசு:- நீர் போய் எனக்கு கிராமங்களில் நான் சொல்லியபடி பள்ளிக்கூடங்கள் ஏற்பாடு செய்து விட்டுப் பிறகு வந்து கேளும். சொல்லுகிறேன்.”

வக்கீல்:- “அது சரி, மற்றொரு கேள்வி கேட்கிறேன். செத்துப்போன பிறகு மறு ஜென்மமுண்டா?”

தராசு:- “உண்டு. மனோதைரியமில்லாத பேடிகள் புழுக்களாகப் பிறப்பார்கள். பிறர் துன்பங்களை அறியாமல் தமதின்பத்தை விரும்பினோர் பன்றிகளாகப் பிறப்பார்கள். சொந்த பாஷை கற்றுக்கொள்ளாதவர் குரங்குகளாகப் பிறப்பார்கள். சோம்பேறிகள் எருமைகளாகப் பிறப்பார்கள். அநீதி செய்வோர் தேளாகப் பிறப்பார்கள். பிறரை அடிமைப்படுத்துவோர் வண்ணான் கழுதைகளாகப் பிறப்பார்கள். ஸ்திரீகளை இமிசை செய்வோர் நபும்சகராப் பிறப்பார்கள். சமத்துவத்தை மறுப்போர் நொண்டிகளாகப் பிறப்பார்கள். கருணையில்லாதவர் குருடராகவும், தமது கல்வியைப் பிறருக்குக் கற்றுக் கொடாதவர் ஊமைகளாகவும், அச்சமுடையோர் ஆந்தைகளாகவும் பிறப்பார்கள். மறு ஜன்மம் வரையிலே கூடப் போக வேண்டாம். இந்த ஜன்மத்திலேயே பாவி, கோழை முதலியவர்கள் தாழ்ந்த ஜந்துக்களாக இருப்பதை அவர்களுடைய அந்தக்கரணத்திலே பார்க்கலாம்.”

வக்கீல்:- ”ஏன் தராசே, பயப்பட்டால் அது கூட ஒரு பாவமா?”

தராசு:- ”ஆம். அதுதான் எல்லாப் பாவங்களுக்கும் வேர். அதர்மத்தைக் கண்டு நகைக்காமல் எவன் அதற்கு பயப்படுகிறானோ அந்த நீசன் எல்லாப் பாவங்களும் செய்வான். அவன் விஷப்பூச்சி; அவன் தேள்; அவனை மனித ஜாதியார் விலக்கி வைக்க வேண்டும்”.

வக்கீல்:- அப்படியானால் மனோதைரியம் ஒரு புண்ணியமா?”

தராசு:-”ஆம் அது தெய்வபக்திக்கு சமமான புண்ணியம். உண்மையான தெய்வபக்தியிருந்தால் மனோதைரிய முண்டாகும்; மனோதைரியம் இருந்தால் உண்மையான தெய்வபக்தி உண்டாகும். மனோடைதரியத்தினால் ஒருவன் இந்த ஜன்மத்திலேயே தேவநிலை பெறுவான். ஆண்மை, வெற்றி முடுதலிய தெய்வ சக்திகள் அவனைச் சேரும். அஞ்சாத மனோதைரியத்தைக் காட்டிலும் சிறந்த புண்ணியம் இவ்வுலகத்திலே இல்லை; வானத்திலுமில்லை, அதனால் மனிதன் எல்லா இன்பங்களையும் பெறுவான்.”

வக்கீல்:- ”சரி, வேறொரு கேள்வி கேட்கிறேன்; ஒருவனுக்கு வக்கீல் வேலையில் நல்ல வரும்படி வராவிட்டால் அதற்கென்ன செய்யலாம்?”

தராசு:- ”அந்த வேலையை விட்டு வியாபாரம் அல்லது கைத்தொழில் தொடங்கலாம். பள்ளிக் கூடங்கள் நடத்தலாம். சாஸ்திர ஆராயச்சிகள் செய்யலாம்.”

வக்கீல்:- ”சாஸ்த்ர ஆராயச்சி செய்தால் பணம் வருமா? லட்சுமிக்கும் சரஸ்வதிக்கும் விரோதமென்று சொல்லுகிறார்களே?”

தராசு:- ”அதெல்லாம் பழங்கதை. எல்லாவிதமான செல்வங்களுக்கும் அறிவுதான் வேர். உலகத்தில் இப்போது அதிகச் செல்வத்துடன் இருக்கும் ஜாதியாரெல்லாம் சாஸ்திர வலிமையாலே செல்வம் பெற்றார்கள்.

வக்கீல்:- ”இன்னுமொரு கேள்வி. இழந்துபோன யௌவனத்தை மீளவும் பெறவேண்டுமானால் அதற்கு வழியென்ன?”

தராசு:- ”ஒரு வருஷம் மனதிலும் சரீரத்திலும் பிரமசரிய விரதத்தை அனுசரிக்க வேண்டும். காலையில் ஸ்நானம் செய்ய வேண்டும். கைகால்களை உழைக்க வேண்டும். யௌவனமுடைய பிள்ளைகளுடன் சகவாசம் செய்ய வேண்டும். பயத்தை விடவேண்டும். மனோதைரியம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தெய்வ பக்தி உண்டாக்கிக் கொள்ளவேண்டும். பிறரைத் தாழ்வாக நினைக்கலாகாது. புதிய புதிய கல்விகள் கற்க வேண்டும்.”

வக்கீல்:- “கண் நோய் குணப்பட வழியுண்டா?”

தராசு:- உண்டு. மூக்குக் கண்ணாடியைக் கழற்றியெறிந்து விடும். தெரிந்தவரை படித்தால் போதும். மனதிலே தோன்றிய உண்மைகளையும் நியாயங்களையும் வழக்கத்திலே கொண்டு வர முயற்சி செய்யும். எதிலும், எப்போதும், யாருக்குப் பயந்தும், மனம் வேறு செய்கை வேறாக நடிக்கலாகாது. தாழ்ந்த ஜாதியாருக்குப் பள்ளிக்கூடம் போட்டுப் பாடஞ் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்யும். கண் நேராகிவிடும்.”

வக்கீல்:-”நீ சொல்லும் மருந்தெல்லாம் ஒரு மாதிரி வினோதமாக இருக்கிறதே!”

தராசு:-”வேறு கேள்வியுண்டா?”

வக்கீல்:- ”இல்லை. தராசே, நமஸ்காரம், நான் போய் வருகிறேன்.”

திரும்பிப் போகும்போது வக்கீல் முகமலர்ச்சியுடன் போனார். தராசு அவரைக் காட்டி, ”இன்னும் ஒரு வருஷத்தில் இவர் மனிதனாய் விடுவார்” என்று சொல்லிற்று.

6

தராசுக் கடையின் வெளிப்புறத்திலே சில தினங்களின் முன்பு பின்வரும் விளம்பரம் எழுதி ஒட்டப்பட்டது.

”இங்கு நீடித்த விலைமதிப்புள்ள சாமான் மாத்திரமே நிறுக்கப்படும். விரைவிலே அழிந்து போகக்கூடிய, விலை
குறைந்த சாமான்கள் நிறுக்கப்படமாட்டா.”

இந்த விளம்பரத்தைப் படித்துவிட்டு, ஜிந்தாமியான் சேட் என்னிடத்தில் வந்து, ”உமது வியாபாரத்திலே கொள்கைகளும், சிந்தனைகளம், மனோதர்மங்களுந்தானே சரக்கு? இதில், நீண்ட மதிப்புடையதென்றும், விரைவில் அழிந்து போகக்கூடிய வஸ்து வென்றும் பிரிந்ததெப்படி? மனதைப் பற்றிய விஷயமெல்லாம் நீடித்ததுதானே?” என்று கேட்டார்.

”அறிவுத்துணிவுகள், தர்மக் கொள்கைகள் இவற்றிலும் பொன்னைப் போலே நீடித்து நிற்பனவும், வெற்றிலையைப் போலே விரைவில் அழிவனவும், ஓட்டாஞ்சல்லி போலே பயனற்றனவும் உண்டு” என்றேன்.

”பயனற்றதற்கு ஒரு திருஷ்டாந்தம் சொல்லும்” என்றேன்.

”சிறையூர் ஜமீந்தார் தர்ம ப்ரசங்கம்” என்றேன்.

”அதென்ன கதை?” என்று சேட் கேட்டார்.

”தென்னாட்டிலே சிறையூர் என்றொரு கிராமம் இருக்கிறது. அங்கே பழைய காலத்தில் க்ஷத்ரியராக இருந்து இப்போது மாட்சிமை குறைந்து போயிருக்கும் மறக்குலத்திலே பழம்புலித் தேவர் என்ற ஒரு ஜமீன்தார் இருக்கிறார். அவர் சிறிது காலமாக தர்மோபதேசம் செய்யத் தொடங்கி, ‘மூச்சு விடத் தகுதியுள்ளவர் யார், தகுதியில்லாதவர் யார்? பல்நகம் தரிக்கத் தக்கோர் யார், தகாதோர் யார்?’ என்ற விஷயங்களைப் பற்றி உபந்யாசங்கள் செய்து வருகிறார். இதுபோன்ற வீண் சங்கதிகளை நமது தராசு கவனிக்க மாட்டாது” என்றேன்.

7

நேற்றுக் காலை, தராசுக்கடைக்கு வெளி ஜனங்கள் யாரும் வரவில்லை. ஜிந்தாமியான் சேட் வந்து உட்கார்ந்தார். வழக்கம் போல வேடிக்கை பார்க்க வந்தாரென்று நினைத்தேன்.

”சேட் ஸாஹேப், என்ன விசேஷம்?” என்று கேட்டேன்.

”தராசினிடம் சில கேள்விகள் கேட்க வந்தேன்” என்றார்.

”சரி கேளும்” என்றேன்.

”தர்ம ப்ரசங்கம் செய்யத் தகுதியுடையோர் யார்?” என்று கேட்டார்.

தராசு சொல்லிற்று:- ”கலங்காத நெஞ்சுடைய ஞான தீரர்”.

”அப்படியில்லாதோர் தர்ம ப்ரசங்கம் செய்யத் தலைப்பட்டாலோ?” என்று சேட் கேட்டார்.

தராசு ”மற்றோர் அதை கவனிக்கக் கூடாது” என்றது.

பிறகு ஜிந்தாமியான்:- “ஆண்களுக்கு விடுதலையைப் பற்றிப் பேசலாமோ?”

தராசு:- “பேசலாம்.”

“சேட்:- “முயற்சி கைகூடுமா?”

தராசு:- “தொடங்குமுன்னே எந்த முயற்சியும் கைகூடுமோ கூடாதா என்று ஜோதிஷம் பார்ப்பதிலே பயனில்லை; தொடங்கி
நடத்தினால் பிறகு தெரியும்.”

சிறிது நேரம் சும்மா‘யிருந்துவிட்டு, ஜிந்தாமியான் மறுபடி பின்வரும் கேள்வி கேட்டார்:-

“வருகிறேனென்று சொல்லி வாராதவர்களையும் தருகிறேனென்று சொல்லித் தாராதவர்களையும் என்ன செய்யலாம்?”

தராசு, “சந்தர்ப்பத்துக்குத் தக்கபடி” என்றது.

“விளக்கிச் சொல்லு” என்று சேட் வற்புறுத்தினார்.
தராசு சொல்வதாயிற்று:- தருகிறேனென்று சொல்லும்போதே பின்னிட்டுத் தம்மால் கொடுக்க முடியாதென்பதை அறிந்துகொண்டு சொல்வோர் புழுக்கள். அவர்களைப் படுக்கவைத்துக் கைகால்களைக் கட்டி மேலே ஒரு மூட்டை கட்டெறும்பைக் கொட்டிக் கடிக்கவிட வேண்டும். தருகிறேனென்று சொல்லும்போது உண்மையாகவே கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் சொல்லிவிட்டுப் பின்பு சௌகர்யமில்லாமையால் கொடுக்காதிருப்போர் முன்யோசனையற்றவர்கள். இவர்களை நல்ல சவுக்கினால் இரண்டடி அடித்துவிட்டுப் பின் முகதரிசனமில்லாமல் இருக்கவேண்டும். வருகிறேனென்று சொல்லி வராதவர்களையும், இதைப்போலவே இரண்டு பகுதிகளாகக்கிக் குற்றத்திற்குத் தக்கபடி சி¨க்ஷ விதிக்க வேண்டும்.” இதைக் கேட்டு ஜிந்தாமியான் சில நிமிடங்கள் வரை ஒன்றும் பேசாமல் யோசனை செய்து கொண்டிருந்தார். பிறகு நான் அவரை நோக்கி, “இன்னும் ஏதேனும் கேள்வியுண்டா?” என்றேன். “ஒன்றுமில்லை” என்று சொல்லி விட்டார்.


தராசைக் கட்டி உள்ளே வைத்து விட்டுக் கடையை மூடிய பிறகு நானும் ஜிந்தாமியான் சேட்டும் வீட்டுக்குத் திரும்பினோம். வரும் வழியிலே நான் சேட்டைப் பார்த்து ”சேட் சாஹேப், ‘வருகிறேனென்று வாராதவர், தருகிறேனென்று தராதவர்’ என்பதாக ஏதோ நீண்ட கேள்வி கேட்டீரே; மனதில் எதை வைத்துக் கொண்டு கேட்டீர்?” என்றேன்.

சேட் மறுமொழி சொல்லாமல் புன்சிரிப்புச் சிரித்தார்.

”வியாபார விஷயமோ?” என்றேன்.

”இல்லை” என்று தலையை அசைத்தார்.

”குடும்ப விவகாரமோ?” என்றேன்.

மறுபடியும் ”இல்லை” என்றார்.

”அப்படியானால் விஷயந்தானென்ன? சொல்லுமே” என்றேன்.

சேட் பின்வரும் கதை சொல்லலானார்:-

”ஒரு வாரத்துக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு ஒரு தமிழ்ப் பரதேசி வந்தான். எனக்கு இந்தப் பரதேசிகளிடம் நம்பிக்கை கிடையாது. எங்கள் மாமா ஒரு கிழவர் இருக்கிறாரே, அவருக்கு பயித்தியம் அதிகம். அவருடன் நெடுநேரம் வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தான். நானும் பொழுது போக்குக்காக சமீபத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்தேன். இரண்டு மணிநேரத்துக்குள், மாமா மனதில் இந்தப் பரதேசி பெரிய யோகியென்ற எண்ணம் உண்டாய்விட்டது. கதையை வளர்த்துப் பிரயோஜனமில்லை. நம்பக் கூடாத, சாத்தியமில்லாத, அசம்பாவிதமான இரண்டு மூன்று சாமான்கள் மூன்று தினங்களுக்குள் கொண்டு வருவதாகச் சொல்லி, அவரிடமிருந்து ஐம்பது ரூபாய் வாங்கிக் கொண்டு போய்விட்டான். குறிப்பிட்ட நாளில் வரவில்லை. அதை நினைத்துக்கொண்டு கேட்டேன்”.

எனக்குக் கோபம் வந்துவிட்டது.

”உஸ், சேட்சாஹேப், யாரிடத்திலே காணும் இந்த மூட்டை அளக்கிறீர்? ஐம்பது ரூபாய், பரதேசி, பாட்டி கதை. சம்மதமுண்டானால் மனதிலுள்ளதைச் சொல்லும். இல்லாவிட்டால், சௌகர்யப்படாதென்று சொல்லிவிடும்” என்றேன்.

சேட் சிறிது நேரம் யோசனை செய்துவிட்டு, உம்முடைய தராசுக்குப் புத்தியில்லை. என் மனதிலிருந்ததை சரியாகக் கண்டுபிடித்து
மறுமொழி சொல்லவில்லை. நானும் அதை உம்மிடத்திலே சொல்ல முடியாது. வேண்டுமானால் தராசையே கேட்டுத் தெரிந்து கொள்ளும்” என்றார்.

நான் சிறிது நோயுடன், “தராசு பிறர் மனதிலிருப்தைக் கண்டு சொல்லாது. நேரே கேட்டால் நேரே மறுமொழி சொல்லும்” என்றேன்.

“அப்படியானால் அடுத்த வியாழக்கிழமை வந்து சரியானபடி கேட்கிறேன்” என்று சொல்லிப் பிரிந்து விட்டார் . விஷயம் போகப் போகத் தெரியும்.

8

மைசூரிலிருந்து நம்முடைய கடைக்கு ஒரு ஐயங்கார் வந்தார். “என்ன தொழில்?” என்று கேட்டேன்.

“சமாசாரப் பத்திரிகைகளுக்கு விஷய தானம் செய்து ஜீவிக்கிறேன்” என்று இங்கிலீஷிலே மறுமொழி சொன்னார். இங்கிலீஷ் பத்திரிகைகளுக்கு” என்றார். “நல்ல லாபமுண்டா?” என்று கேட்டேன்.

“ஒரு பத்திக்கு 6 ரூபாய் கிடைக்கிறது. மாதத்திலே ஏழெட்டு வியாசந்தான் எழுத முடிகிறது. ஒரு வியாசம் அனேகமாக ஒரு பத்திக்கு மேலே போகாது. என்னுடைய வியாசங்களுக்கு நல்ல மதிப்பிருக்கிறது. சில சமயங்களில் எனது வியாசமே தலையங்கமாகப் பிரசுரம் செய்யப்படுகிறது. ஆனாலும், அதிக லாபமில்லை. சிரமத்துடனே தான் ஜீவனம் நடக்கிறது. அன்றன்று வியாசமெழுதி அன்றன்று பசி தீர்கிறது. எனக்கு இரண்டு குழந்தைகள். அந்தக் குழந்தைகளையும் பத்தினியையும் ஸம்ரக்ஷணை பண்ண இத்தனை பாடு படுகிறேன்” என்று இங்கிலீஷிலே சொன்னார்.

“இவருக்குத் தமிழ் தெரியாதோ?” என்று தராசு கேட்டது.

ஐயங்கார் சொன்னார், இங்கிலீஷில்:- “தமிழ் தெரியும். நெடுங்காலம் கன்னட தேசத்தில் பழகின படியால் தமிழ் கொச்சையாக வரும். அதனால் இங்கிலீஷில் பேசுகிறேன்.”

தராசு சொல்லுகிறது:- “கொச்சையாக இருந்தால் பெரிய காரியமில்லை. சும்மா தமிழிலேயே சொல்லும்.”

ஐயங்காருடைய முகத்தைப் பார்த்தபோது அவர் சங்கடப்படுவதாகத் தோன்றிற்று. அதன் பேரில், ஐயங்கார் இங்கிலீஷிலேயே வார்ததை சொல்லும்படிக்கும், நான் அதைத் தராசினிடத்திலே மொழிபெயர்த்துச் சொல்லும்படிக்கும் தராசினிடம் அனுமதி பெற்றுக் கொண்டேன்.

தராசு கேட்கிறது:- ”ஐயங்காரே, கையிலே என்ன மூட்டை?”

ஐயங்கார் ”பத்திரிகை வியாசங்களைக் கத்தரித்து இந்தப் புத்தகத்திலே ஒட்டி வைத்திருக்கிறேன். சம்மதமுண்டானால் பார்வையிடலாம்” என்று அந்த மூட்டையைத் தராசின் முன்னே வைத்தார். தராசு அந்தப் புத்தகத்தைப் பரிசோதனை செய்து பார்த்து, ”நன்றாகத்தான் இருக்கிறது” என்றது.

இதைக் கேட்டவுடனே ஐயங்கார்;-”யூ சீ மிஸ்டர் பாலன்ஸ்” என்று தொடங்கி …. (அடடடா! இங்கிலீஷில் அப்படியே எழுதுகிறேன்; வேறெங்கேயோ ஞாபகம்.)

ஐயங்கார் சொல்லுகிறார்:- ”கேளாய் தராசே, நானும் எத்தனையோ வியாசங்கள் எழுதுகிறேன். பிறர் எழுதுவதையும் பார்த்திருக்கிறேன். ஆனாலும், இந்த இங்கிலீஷ்காரருக்கு இங்கிலீஷ் பாஷை எப்படி வசப்பட்டு நிற்கிறதோ, அந்த மாதிரி நம்மவருக்கில்லை. நான் இப்போது இரண்டு மூன்று நாளாக ஒரு இங்கிலீஷ் புத்தகம் வாசித்துக் கொண்டு வருகிறேன். ஆஹாஹா! வசனந்தான் என்ன அழகு; நடை எத்தனை நேர்த்தி; பதங்களின் சேர்க்கை எவ்வளவு நயம்!” என்று ஒரே சங்கதியைப் பதினேழு விதங்களிலே சொல்லிப் புகழ்ச்சி செய்யத் தொடங்கினார்.

அதற்குத் தராசு:- ”சுவாமி, இந்த ஜன்மம் இப்படித் தமிழ் பிராமண ஜன்மமாக எடுத்துத் தீர்ந்து போய்விட்டது. இனிமேல் இதைக் குறித்து விசாரப்பட்டு பயனில்லை. மேலே நடக்கவேண்டிய செய்தியைப் பாரும்” என்றது.

இப்படியிருக்கும்போது, வெளிப்புறத்தில் யாரோ சீமைச் செருப்புப் போட்டு நடந்து வரும் சத்தம் கேட்டது. சில க்ஷணங்களுக்குள்ளே, ஒரு ஆங்கிலேயர் நமது தராசுக் கடைக்குள் புகுந்தார். வந்தவர் தமிழிலே பேசினார்:- ”காலை வந்தனம்”.

”தராஸ¤க்கடை இதுவாக இருக்கிறதா?” என்று கேட்டார்.

”ஆம்” என்றேன்.

”தராஸ¤ எல்லாக் கேள்விக்கும் பதில் சொல்லுமா?*’

”சொல்லும். ஆனால், நீ இங்கிலீஷ் பேசலாம்; தமிழ்ப் பேசித் தொல்லைப்பட வேண்டாம்” என்றேன்.

அப்போது தராசு:- “இந்த ஆங்கிலேயர் இப்போது எந்த ஊரிலே வாசம் செய்து வருகிறார்? இவர் யார்? என்ன வேலை?” என்று கேட்டது.

எனது கேள்விக்கும் தராசின் கேள்விக்கும் சேர்த்து, மேறபடி ஆங்கிலேயர் பின்வருமாறு மறுமொழி சொன்னார்:-

“எனக்குத் தமிழ் பேசுவதிலேயே பிரியமதிகம்.” (ஆங்கிலேயர் பேசிய கொச்சைத் தமிழை எழுதாமல் மாற்றி எழுதுகிறேன்.)

ஆங்கிலேயர் சொல்லியது:- “எனக்குத் தமிழ் பேசுவதிலே பிரியமதிகம். அது நல்ல பாஷை. தமிழ் ஜனங்களும் நல்ல ஜனங்கள். நான் அவர்களுக்கு ‘சுய-ஆட்சி’ கொடுக்கலாமென்று கக்ஷ¢யைச் சேர்ந்தவன். இன்னும் கொஞ்ச காலத்துக்குள் சில சுதந்திரங்கள் வருமென்று நிச்சயமாக நம்புகிறேன். என் உத்தியோகம். நான் இப்போது வசித்து வரும் ஊர்-எல்லாவற்றையும் தங்களிடம் சொல்லிவிடுகிறேன். ஆனால் அதைத் தாங்கள் எந்தப் பத்திரிகையிலும் போடக்கூடாது” என்றார்.

‘சரி’ என்ற பிறகு தமது பூர்வமெல்லாம் சொன்னார். அவரிடம் வாக்குக் கொடுத்தபடி இங்கே அந்த வார்த்தைகள் எழுதப்படவில்லை.

அப்போது தராசு சொல்லுகிறது:- “ஆங்கிலேயரே, உம்மைப் பார்த்தால் நல்ல மனிதனாகத் தெரிகிறது. பொறுத்துக் கொண்டிரும். இந்த ஐயங்கார் கேள்விகள் போட்டு முடித்த பிறகு உம்மிடம் வருவோம்.” “ஐயங்காரே, தம்முடைய கேள்விகள் நடக்கலாம்.”

ஐயங்கார் சொல்லுகிறார், (இங்கிலீஷில்):- “இந்த ஆங்கிலேயரின் கேள்விகளை முதலாவது கவனியுங்கள். என் விஷயம் பிறகு நேரமிருந்தால் பார்த்துக் கொள்ளலாம்.”

அப்போது ஆங்கிலேயர் சொல்லுகிறார்:- “அவசியமில்லை. இருவரும் கேட்கலாம். மாற்றி மாற்றி இருவருக்கும் தராசு மறுமொழி சொன்னால் போதும்.”

“சரி, இஷ்டமானவர் கேட்கலாம்” என்று தராசு சொல்லிற்று.

ஐயங்கார் பேசவில்லை. சும்மா இருந்தார். சில நிமிடங்கள் பொறுத்திருந்து, ஆங்கிலேயர் கேட்டார்:- “ஐரோப்பாவிலே சண்டை எப்போது முடியும்?”

தராசு:- ”தெரியாது”

ஆங்கிலேயர்:- ”இந்த யுத்தம் முடிந்த பிறகு ஐரோப்பாவிலே என்ன மாறுதல்கள் தோன்றும்?”

தராசு:- ”தொழிலாளிகளுக்கும், ஸ்திரீகளுக்கும் அதிக அதிகாரம் ஏற்படும். வியாபாரிகளுக்குக் கொஞ்சம் சிரமம் ஏற்படலாம். கிழக்குத் தேசத்து மதக் கொள்கைகள் ஐரோப்பாவிலே கொஞ்சம் பரவலாம்.”

ஆங்கிலேயர்;-”இவ்வளவுதானா?”

தராசு:-”இவ்வளவுதான் இப்போது நிச்சயமாகச் சொல்லமுடியும்”.

ஆங்கிலேயர்:- ”தேச விரோதங்கள் தீர்ந்து போய்விடமாட்டாதா?”

தராசு;- ”நிச்சயமில்லை. ஒரு வேளை சிறிது குறையலாம். அதிகப்பட்டாலும் படக்கூடும்.”

ஆங்கிலேயர்:- ”சர்வ-தேச-விதிக்கு வலிமை அதிகமாய், இனிமேல் இரண்டு தேசத்தாருக்குள் மனத்தாபங்கள் உண்டானால் அவற்றைப் பொது மத்தியஸ்தர் வைத்துத் தீர்த்துக் கொள்வதேயன்றி, யுத்தங்கள் செய்வதில்லை’ என்ற கொள்கை ஊர்ஜிதப்படாதோ?”

தராசு:- ”நிச்சயமில்லை. அந்தக் கொள்கையைத் தழுவி ஆரம்பத்திலே சில நியதிகள் செய்யக்கூடும். பிறகு அவற்றை மீறி நடக்கவுங்கூடும்”

ஆங்கிலேயர்:- ”இரண்டு தேசத்தார் எப்போதும் நட்புடன் இருக்கும்படி செய்வதற்கு வழியென்ன?”

தராசு;-”ஒருவரையொருவர் நன்கு மதித்தல்; சமத்வ தர்மம். ஹிந்து வேதப் பழக்கம்.

ஆங்கிலேயர் ”சாயங்கால வந்தனம்” என்று சொல்வதற்கு ”சாங்கால வண்டனம்” என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டு எழுந்து போய்விட்டார்.

பிறகு ஐயங்கார் (தமிழில்):- ”நானும் போய் வருகிறேன். இந்த ஆங்கிலேயர் கேட்ட கேள்விகளைத் தான் நானும் கேட்க நினைத்தேன். அவருக்குச் சொல்லிய மறுமொழி எனக்கும் போதும். நான் போய் வருகிறேன், நமஸ்காரம்” என்றார்.

தராசு:- “போய் வாரும், உமக்கு லக்ஷ்மிகடாக்ஷமும், தமிழிலே சிறிது பாண்டித்தியமும் உண்டாகுக” என்று ஆசீர்வாதம் பண்ணிற்று. ஐயங்கார் சிரித்துக் கொண்டே போனார்.

9

இன்று நமது கடைக்கு ஒரு தமிழ்க் கவிராயர் வந்தார்; கைக்கோள் ஜாதி; ஒட்டக் கூத்தப் புலவர்கூட அந்தக் குலந்தானென்று நினைக்கிறேன்.

இவருக்கு இங்கிலீஷ் தெரியாது. தம்முடைய பெயரை வெளிப்படுத்தக் கூடாதென்று சொன்னார். ஆதலால் வெளிப்படுத்தவில்லை.

தராசு முகமலர்ச்சியுடன் சிரித்தது. “இப்படி ஒரு கவிராயன் வந்தால் எனக்கு சந்தோஷம். எப்போதும் வீண் வம்பு பேசுவோரே வந்தால் என்ன செய்வேன்?” என்றது. “கவிராயரே, என்ன விஷயம் கேட்க வந்தீர்?” என்று தராசு கேட்டது.

“எனக்குக் கவிராயர் என்பது பரம்பரையாக வந்த பட்டம். என்னுடைய தகுதியால் ஏற்படவில்லை. அத்தகுதி பெற முயற்சி செய்து
வருகிறேன். அந்த விஷயமாகச் சில வார்த்தைகள் கேட்க வந்தேன்” என்று கவிராயர் சொன்னார். “இதுவரை பாடின பாட்டுண்டானால் சொல்லும்” என்று தராசு கேட்டது.
“இதுவரை நாற்பது அல்லது ஐம்பது அடிகளுக்கு மேல் பாடியது கிடையாது. இப்போதுதான் ஆரம்பம். அது அத்தனை ரசமில்லை” என்று சொல்லிக் கவிராயர் விழித்தார்.

“மாதிரி சொல்லும்” என்றது தராசு.

புலவர் பாடத் தொடங்கினார். தொண்டை நல்ல தொண்டை.

“களை யொருவன் கவிச்சுவையைக்-கரை
காண நினைத்த முழு நினைப்பில்-அம்மை
தோளசைத் தங்கு நடம் புரிவாள்-இவன்
தொல்லறி வாளர் திறம் பெறுவான்.
ஆ! எங்கெங்கு காணிலும் சக்தியடா!-தம்பி
ஏழு கடலவன் மேனியடா!

தங்கும் வெளியினிற் கோடியண்டம்-எங்கள்
தாயின் கைப் பந்தென வோடுமடா!
கங்குலில் ஏழு முகிலினமும்-வந்து
கர்ச்சனை செய்தது கேட்டதுண்டோ?
மங்கை நகைத்த ஒலியதுவாம்-அவள்
வாயிற் குறுநகை மின்னலடா!”

தராசு கேட்டது:- ”புலவரே, தமிழ் யாரிடம் படித்தீர்?”

கவிராயர்:- ”இன்னும் படிக்கவில்லை; இப்போதுதான் ஆரம்பம் செய்கிறேன்.

தராசு:- ”சரிதான், ஆரம்பம் குற்றமில்லை. விடாமுயற்சியும் தெய்வபக்தியும் அறிவிலே விடுதலையும் ஏறினால், கவிதையிலே வலிமையேறும்”.

இங்ஙனம் வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கையில் சீட்டிக் கடை சேட் வந்தார்.

”சாமியாரே, தீபாவளி சமீபத்திலிருக்கிறது. ஏதேனும் சீட்டித்துணி செலவுண்டா?” என்று சேட் கேட்டார்.

”இல்லை” என்று சொன்னேன்.

அப்போது சேட் சொல்லுகிறார்;- ”நான் அதற்கு மாத்திரம் வரவில்லை. வேறு சங்கதி கேட்கவும் வந்தேன். தராசு நடக்கப் போவதை அறிந்து சொல்லுமோ?”

”சொல்லாது” என்று தராசே சொல்லிற்று.

”சொல்ல சம்மதமிருந்தால் சொல்லும். இல்லாவிட்டால் சொல்லாது. எதற்கும், நீர் கேட்க வந்த விஷயமென்ன? அதை வெளியிடும்” என்று நான் சொல்லப் போனேன்.

தராசு என்னிடம், ”காளிதாஸா, அ” என்றது. இந்த ”அ” காரத்துக்கு ”அடக்கு” என்றர்த்தம். அதாவது ”என்னுடைய கருத்துக்கு
விரோதமாக வார்த்தை சொல்லாதே” என்றர்த்தம்.

தராசு ”அ” என்றவுடனே நான் வருத்தத்துடனே தலை குனிந்து கொண்டேன்.

சேட்:- “தீபாவளி சமயத்தில் எங்கள் கடைக்குப் பத்து நூறாகவும், நூறு ஆயிரமாகவும், லாபம் வரும்படி தராசு தன் வாயினால் வாழ்த்த வேண்டும். அப்படி வாழ்த்துவதற்கு ஏதேனும் கூலி வேண்டுமானாலும் கொடுத்து விடுகிறேன்” என்றார்.

தராசு:- “கூலி வேண்டாம், சேட்ஜீ; இனாமாகவே ஆசீர்வாதம் பண்ணிவிடுகிறேன். உமக்கு மேன்மேலும் லாபம் பெருகும். நாட்டுத் துணி வாங்கி விற்றால்” என்றது. சேட் விடை பெற்றுக் கொண்டு போனார்.

கவிராயர் தராசை நோக்கி, “நம்முடைய சம்பாஷைணைக்கு நடுவிலே கொஞ்சம் இடையூறுண்டாகிறது” என்றார்.

தராசு சொல்லுகிறது:- “உமக்கும் அதுதான் காணும் வார்த்தை. நெசவிலே நாட்டு நெசவு மேல். விலைக்கு நெய்வதைக் காட்டிலும் புகழுக்கு நெய்வதே மேல். பணம் நல்லது; ஆனால் பணத்தைக் காட்டிலும் தொழிலருமை மேல். காசிப்பட்டுப் போலே பாட்டு நெய்ய வேண்டும். அல்லது உறுதியான, உழவனுக்கு வேண்டிய, கச்சை வேஷ்டி போலே நெய்ய வேண்டும். “மல்” நெசவு கூடாது. “மஸ்லின்” நீடித்து நிற்காது. பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையுமிருக்க வேண்டும். இதற்கு மேலே நல்ல வர்ணஞ் சேர்த்தால் குற்றமில்லை. சேராமலிருந்தால் விசேஷம்.”

அப்போது புலவர் தராசை நோக்கி:- “நீயே எனது குரு” என்று சொல்லி நமஸ்காரம் பண்ணினார்.

தராசு:- “எழுக! நீ புலவன்!” என்றது.

10

பதினாறு வயதிருக்கும்; பிராமணப் பிள்ளை; வைஷ்ணவன். இவன் போன தீபாவளிக்கு மறுநாள் தராசுக் கடைக்கு வந்தான். வழக்கம்போலே முகவுரைகள் பேசி முடிந்த பிறகு தராசினிடம் பின்வரும் கேள்வி கேட்டான்.

பிராமணப் பிள்ளை:- “எனக்கு பள்ளிக்கூடத்துச் சம்பளம் மூன்று மாதத்துக்கு ஒன்பது ரூபாய் வேண்டும். நாளைக் காலை சம்பளம் கொடுக்காவிட்டால் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டுமென்று பெரிய வாத்தியார் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

எனக்குத் தெரிந்த பணக்காரர், என் பிதாவுக்கு அறிமுகமான பணக்காரர். எங்கள் குடும்பத்திலே நல்லெண்ணமுடைய சில நண்பர்களுக்குப் பழக்கமான பணக்காரர்-எல்லா விதமான பணக்காரர்களிடத்திலும் பலவிதங்களிலே கேட்டுப் பார்த்தாய்விட்டது. பயன்படவில்லை. சம்பளமோ அவசியம் கொடுத்துத் தீர வேண்டும். எனக்கு இந்த ஒன்பது ரூபாய் எங்கே கிடைக்கும்? எப்படி கிடைக்கும்? யார் கொடுப்பார்கள்!” என்றான்.

”விதி கொடுக்கும்” என்று தாராசு சொல்லிற்று.

பிராமணப் பிள்ளை சிரித்தான். சொல்லுகிறான்:- ”தராசே, வதியை நம்புவது பிழை. ஐரோப்பியர் விதியை நம்புவதில்லை. ஆசியாவிலுள்ள மகமதிய ஜாதியாரும் ஹிந்துக்களுந்தான் விதியை மும்மரமாக நம்புகிறார்கள். இதனால் இந்த ஜாதியாரெல்லாம் வீழ்ச்சியடைந்தார்கள். ஐரோப்பியர் நாகரீகத்திலும் செல்வத்திலும் ஓங்கி வருகிறார்கள். முயற்சி செய்பவன் நல்ல ஸ்திதிக்கு வருவான். விதியை நம்பினவன் சோற்றுக்கில்லாமல் பட்டினி கிடப்பான்.

இங்ஙனம் பிராமணப் பிள்ளை சொல்லியதைக் கேட்டுத் தராசு சிரித்தது.

”தம்பி, அய்யங்காரே, உன் பெயரென்ன?” என்று தராசு கேட்டது.

”லக்ஷ்மீ வராஹாசார்யர்; வடகலை; ஸ்வயமா சார்ய பூருஷர் வகுப்பு” என்றான்.

இங்ஙனம் பேசிக் கொண்டிருக்கையிலே, ஒரு பாட்டி வந்தாள். இந்தப் பாட்டிக்கு வயது அறுபத்தைந்து அல்லது எழுபதிருக்கும். தெலுங்குப் பிராமணர்களிலே நியோகி என்ற பிரிவைச் சேர்ந்தவள். கையிலே, ஒரு ஆண் குழந்தை கொண்டு வந்தாள். மூன்று வயதுக் குழந்தை, தராசினிடம் கேள்விகள் கேட்கவிருப்பதாக இந்த அம்மையார் சொல்லியதற்குத் தராசு சம்மதித்தது. ”ஐயங்கார்ப் பிள்ளையைக் கொஞ்சம் நிறுத்தி வைத்துவிட்டு முதலாவது இந்தப் பாட்டி விஷயத்தை முடிவு செய்தனுப்புவோம்” என்று தராசு தீர்மானித்தது.

பாட்டி சொல்லுகிறாள்:- ”ருக்மணி கர்ப்பமாயிருக்கிறாள்.”

”ருக்மணி யார்!” என்று தராசு கேட்டது.
“என்னுடைய இரண்டாவது பேத்தி” என்று பாட்டி சொன்னாள். “அவளுக்கு ஏழெட்டு மாசமாய்விட்டது. மூத்தவளுக்கு நாலைந்து மாதம் இரண்டு பேருக்கும் புருஷக் குழந்தை பிறக்கவேணும். மூத்தவள் புருஷனுக்கு சர்க்காரில் 150 ரூபாய் கொடுக்கிறார்கள். செலவுக்குத் தட்டத்தான் செய்கிறது. அவன் சம்பளம் உயரவேணும். வீட்டிலே காளிபடம் வைத்துப் பூஜை பண்ணுகிறாள். அந்தப் படம் வீட்டிலிருந்தால் நல்லதில்லை என்று சொல்லுகிறார்கள். அவனிடம் சொல்லிப் பார்த்தேன்; கேட்கவில்லை. இந்தக் குழந்தைக்கு அடிக்கடி மாந்தம் வருகிறது. பேய் பிசாசுகளின் சேஷ்டை ஏதேனும் இருக்கலாமோ என்னவோ தெரியவில்லை. மாரியம்மனுக்குப் பூஜை செய்விக்க வேண்டுமென்று பூஜாரி சொல்லுகிறான். எனக்கு அந்த எலிக்கடி விஷம் இன்னும் உடம்பை விட்டுப் போகவில்லை. அடிக்கடி சுரம் வந்து கொண்டிருக்கிறது. எல்லா தோஷங்களும் நீங்குவதற்கு ஏதேனும் பரிகாரம் செய்யவேண்டும். தராசைக் கேட்டால் எல்லா சங்கடங்களுக்கும் தீர்ப்புச் சொல்லுமென்று தராசைக் கேட்டால் எல்லா சங்கடங்களுக்கும் தீர்ப்புச் சொல்லுமென்று காலேஜ் வாத்தியார் கண்ணாடி நாராயணசாமி ஐயர் சொன்னார். ஏதேனும் ஒரு பரிகாரம் சொல்ல வேண்டும்” என்று பாட்டி ப்ரசங்கத்தை முடிவு செய்தாள்.

“விதிப்படி நடக்கும்” என்று தராசு சொல்லிவட்டுச் சும்மா இருந்தது.

நானும் தராசினுடைய மன நோக்கத்தைத் தெரிந்து கொண்டு, “பாட்டியம்மா, வருகிற வெள்ளிக்கிழமை காலையிலே நாலு பிள்ளைகளுக்கும் சாப்பாடு போட்டுவிட வேண்டும். பேரத்திகள் இருவரையும், தினந்தோறும் கோயிலுக்குப் போய் சுவாமி தரிசனம் பண்ணிவிட்டு வரும்படி செய்ய வேண்டும். உங்களுடைய கஷ்டங்களெல்லாம் நிவர்த்தியாகும்” என்று சொல்லிப் பாட்டியைப் போகச் சொல்லி விட்டேன்.

பிறகு, லக்ஷ்மீவராஹன் என்று வைஷ்ணவப் பிள்ளையை நோக்கித் தராசு பின்வருமாறு சொல்லுகிறது:-

“கேளாய், மகனே, விதிப்படிதான் இந்த உலகமெல்லாம் நடக்கிறது. மனித வாழ்க்கை இவ்வுலகத்தின் வாழ்க்கையிலே ஒரு சிறு பகுதி. விதி தவறி ஒன்றும் நடக்காது. பூர்வகாலத்து மகமதியர்களும் ஹிந்துக்களும் விதியை முற்றிலும் நம்பியிருந்தார்கள். அரபியாவிலே உண்டான மகமதிய மதம் மத்திய ஆசியா முழுவதிலும் பரவிற்று; அத்துடன் அற்புதமான சாஸ்திரங்களும் பரவின; ஐரோப்பாவில் தென் பகுதியை வியாபித்தது; ஸ்பெயின் தேசத்திலே போய் அரசாண்டது. ஐரோப்பா முழுவதிலிருந்து பண்டிதர்கள் ஸ்பெயின் தேசத்துக்கு வந்து சாஸ்திரங் கற்றுக் கொண்டு போனார்கள். இப்போது ஐரோப்பாவிலே ஓங்கி நிற்கும் நவீன சாஸ்திரங்களிலே பலவற்றின் வேர் அங்கே மகமதியரால் நாட்டப்பட்டது. மகமதியர் பாரத நாட்டை ராஜபுத்ரரிடமிருந்த வென்றனர்; சிங்கத்தினிடமிருந்து காட்டை வெல்லுவது போலே. இங்ஙனமே ஜாவா முதலிய தென்கடல் தீவுகளைப் பற்றிக் கொண்டனர். வட ஆபரிகா, தென் ஆபிரிகா, மத்திய ஆபிரிகா, சீனம் ருஷியா மனிதனுக்குத் தெரிந்த நாகரிக தேசங்ளெல்லாவற்றிலும், அல்லாவின் குமாரர் வெற்றியும் புகழுமெய்தி விளங்கினர். அக்காலத்தில், இவர்களுக்கு விதி நம்பிக்கை இப்போதைக்காட்டிலும் குறைவில்லை. பூர்வ ஹிந்து ராஜாக்களின் புகழ் திசையெட்டுக்குள் அடங்கவில்லை. அவர்களெல்லாம் விதியைப் பரிபூரணமாக நம்பியிருந்தார்கள். முதலாவது மொகலாயச் சக்ரவர்த்தியாகிய பாபர்ஷா விதியை நம்பி ஹிந்துஸ்தானத்தின் மேலே படையெடுத்தான். அவன் யோசித்தான்:- ‘அரே! அல்லா உலகத்துக்கு நாயகன். அவனுடைய விதி, அவன் உண்டாக்கிய ஒழுங்கு, அதற்குக் கிஸ்மத் (விதி) என்று பெயர். கிஸ்மத்படி எல்லாம் நடக்கிறது. ஒருவனுக்குச் சாக விதியில்லை என்றால், அவன் போர்க்காளத்திலே அம்புகளின் சூறைக்கு நடுவிலே போய் நின்றாலும் சாகமாட்டான். அவன் மேலே அம்பு தைக்காது. விதி கொல்ல வேண்டுமானால் வீட்டிலே கொல்லும். இடி விழாமல் நம்மால் தடுக்க முடியுமா? சாகாத வைத்தியனுண்டா? விதப்படி நடக்கும் ஹிந்துஸ்தானத்தின் மேலே படையெடுத்துப் போவோம். விதியின் அனுகூலமிருந்து வெற்றி கிடைத்தால், உலகத்து மண்டலாபதிகளிலே முதன்மையடையலாம். அங்கே இறந்தோமானால் நம்முடைய சதையைக் காக்காய்கள் தின்னும். நம்மாலே சில ஜீவன்களுக்கு வயிற்றுப் பசி தீர்ந்து சந்தோஷம் சிறிது நேரமுண்டாகும். எல்லாம் ஒன்றுதான். விதியே துணை. ஹிந்துஸ்தானத்தின் மேலே படையெடுப்போம்’ என்றான். ஆள் பலமில்லை; பணமில்லை. ராஜபுத்ர ஸ்தானத்து க்ஷத்திரியர்களை வெல்லுவதென்றால் சாதாரணமான காரியமன்று; ஒவ்வொரு ராஜபுத்ரனும் ஒவ்வொரு மஹா சூரன். எப்படியோ! பாபர்ஷாவென்று விட்டான், விதியை நம்பி, விதி வெற்றிக்குத் துணையாகும். விதியை நம்பி விதை போடமலிருந்தால், பயிர் விளையாது. விதியை நம்பி உழைத்தால்அநேகமாக விளையும்” என்று தராசு சொல்லிற்று.

என் கையிலிருந்த ஒரு தர்ம நிதிப்பணம். அதில் ஒன்பது ரூபாய் எடுத்து அந்தப் பையனிடம் கொடுத்தேன். “விதி உண்மைதான்” என்று சொல்லி லக்ஷ்மீ வராஹன் ஒப்புக் கொண்டு போனான்.

11
சுதேச மித்திரன் 6.12.1915
ஒரு கிராமத்திலே ஒரு ஏழைக் குடியானவர் சுரைக்காய்த் தோட்டம் போட்டிருந்தான். ஒரு நாள் பொழுது விடியுமுன்பு இருட்டிலே, ஒரு திருடன் அந்தத் தோட்டத்துக்குள்ளே புகுந்து சுரைக்காய் திருடிக் கொண்டிருக்கையிலே, குடியானவன் வந்து விட்டான். திருடனுக்கு பயமேற்பட்டது. ஆனாலும் குடியானவன் புத்தி நுட்பமில்லாதவனாக இருக்கலாமென்று நினைத்து அவனை எளிதாக ஏமாற்றிவிடக் கருதி திருடன் ஒரு யுக்தி யெடுத்தான்.

இதற்குள்ளே குடியானவன்:- “யாரடா அங்கே?” என்று கூவினான். திருடன், கம்பீரமான குரலிலே- “ஆஹா! பக்தா, இது பூலோகமா? மானிடர் நீங்கள்தானா?” என்றான்.

தோட்டக்காரனும்:- “ஓஹோ, இவர் யாரோ, பெரியவர். தேவலோகத்திலிருந்து இப்போதுதான் நமது சுரைத் தோட்டத்தில் இறங்கியிருக்கிறார் போலும்” என்று நினைத்து, “ஆம். ஸ்வாமி. இதுதான் பூலோகம். நாங்கள் மானிட ஜாதி” என்று சொல்லித் திருடனுக்குப் பல நமஸ்காரங்கள் செய்து ஏழெட்டுச் சுரைக்காய்களையும் நைவேத்தியமாகக் கொடுத்தனுப்பினான். திருடன் அவற்றை வாங்கிக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தான்.

மேற் கூறிய கதை எனக்கு ஒரு நண்பர் நேற்று தான் சொல்லிக் காட்டினார். அது இன்று காலையில் மிகவும் பிரயோஜனப்பட்டது. போன முறை ஒரு தொப்பைச் சாமியார் நம்முடைய கடை கட்டப் போகிற சமயத்தில் ஒரு விஷயம் கேட்க வந்ததாகச் சொல்லியிருந்தேன். ஞாபகம் இருக்கிறதா! அவர் மறுபடி இன்று காலையில் வந்தார்.

“பெற்றோர், உற்றோர், மனைவி மக்கள், பொன், வீடு, காணி முதலிய தீய விஷயாதிகளிலே கட்டுண்டு, பிறவிப் பிணிக்கு மருந்து தேடாமல் உழலும் பாமருக்குச் சார்பாக நீரும்..” என்று ஏதோ நீளமாகச் சொல்லத் தொடங்கினார். நான் மேற்படி சுரைத் தோட்டத்துக் கதையைச் சொல்லிக் காட்டினேன். சாமியார் புன்சிரிப்புடன் எழுந்து போய்விட்டார்.

நானிருக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவிலே ஒரு சாஸ்திரியார் இருக்கிறார். நல்ல வைதீகர்; அத்தியயனத்திலே புலி; கிராத்தம் பண்ணி வைப்பதிலே ஸாக்ஷ¡த் வியாழக்கிழமைக்கு (பிருஹஸ்பதி பகவானுக்கு) நிகரானவர். அவர் வீ டிலே அவரொரு கக்ஷ¢, இளையாள் ஒரு கஷி, மூத்தாள் பிள்ளை முத்து சாமியும், அவன் மனைவியும் ஒரு கக்ஷ¢ ஆக மூன்று கட்சிகளாக இருந்து பல வருடங்களாக இடைவிடாமல் சண்டை நடந்து வருகிறது. அவர் இன்று காலை என்னிடம் வந்து,” என்ன வாசித்துக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டார்.

”சுதேசமித்திரன் பத்திரிகை” என்றேன்.

”இந்தச் சண்டை எப்போது முடியும்?” என்று கேட்டார். நான் ஏதோ ஞபாகத் வறாக, ”நீங்கள் வேறு குடும்பம், உங்கள் பிள்ளை முத்துசாமி வேறு குடும்பமாகக் குடியிருக்க வேண்டும். உங்கள் பத்தினியும், அவன் மனைவியும் சந்திக்க இடமில்லாதபடி ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது ஒரு வேளை முடியலாம்” என்றேன். ”சரி! நான் போய்வருகிறேன்” என்று கோபத்துடன் எழுந்து போய்விட்டார். அவர் கேட்டது ஐரோப்பா புயத்தத்தைப் பற்றியது என்ற விஷயம் அவர் எழுந்து போன பிறகு எனக்குத் தோன்றிது. நாளை அவரைக் கூப்பிட்ட க்ஷமை கேட்க வேண்டும்.

எதனாலேயோ, இன்று எனக்குக் கதைகள் சொல்வதிலே பிரியமுண்டாய் விட்டது. இன்னுமொரு சிறிய கதை சொல்லுகிறேன். திருவாங்கூரிலே வைத்தியநாதய்யர் என்றொரு நியாயாதிபதி இருந்தார். அவருக்கு ஜனங்கள்” தர்மசங்கடம் வைத்திய நாதய்யர்” என்று பெயர் வைத்தார்கள். எந்த வழக்கு வந்த போதிலும் அவர் இரண்டு பக்கத்து வக்கீல்களும் சாக்ஷ¢களும் சொல்வதையெல்லாம் மிகுந்த பொறுமையுடன் கேட்டுப் பல தினங்கள் ஆலோசனை செய்த பிறகுதான் தீர்ப்புச் சொல்லுவார். கக்ஷ¢க்காரருக்கு அவசரம் அதிகம். நியாயமோ, அநியாயமோ விரைவாகத் தீர்ப்புச் சொன்னால் போதுமென்ற ஸ்திதிக்கு வந்துவிட்டது.

ஒருநாள் இரவு பத்து மணிக்கு இந்த வைத்திய நாதய்யர் திருவநந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் ஒரு தனியிடத்திலே, சமீபத்தில் யாருமில்லையென்ற ஞாபகத்துடன், தமக்குத்தாமே இரைந்து வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தார்.
அவர் சொல்லியது என்னவென்றால்:- “சுவாமி! பத்மநாபா! ஜகந்நாதா! நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும். நான் என்ன
செய்வேன்? வாதி பக்கத்து வக்கீல்களும் சாட்சிகளும் சொல்வதைக் கேட்டால் வாதி பக்கத்திலே நியாயமிருப்பதாகத் தோன்றுகிறது. பிரதிவாதி பக்கத்தார் சொல்வதைக் கேட்டால் அந்தக் கட்சியிலேதான் நியாயமிருப்பது போலத் தோன்றுகிறது. நான் எப்படி தீர்ப்புச் செய்வேன்?”
இவர் சொல்லிய வார்த்தைகளைத் தூண் மறைவிலிருந்த ஒரு சிறுவன் கேட்டு, ஊர் முழுவதும் பறையடித்து விட்டான். அதன் பிறகு தான் இவருக்குத் “தர்மசங்கடம் வைத்தியநாதய்யர்” என்ற பட்டம் ஏற்பட்டது.

இந்த விளையாட்டுக் கதையிலுள்ள நியாயாதிபதியைப் பற்றி யார் எப்படி நினைத்தபோதிலும் எனக்கு இவர் விசயத்தில் ஒருவிதமான மதிப்புண்டு. இவரைப் போன்ற யோக்கியர்கள் உலகத்திலே கிடைப்பது மிகவும் அருமை என்பது என்னுடைய அபிப்பிராயம். பக்ஷபாதமாகத் தீர்ப்பு செய்துவிடுதல் யாருக்குமெளிது. இரண்டு கக்ஷ¢யின் நியாயங்களையும் தீரத் தெரிந்து கொண்டு முடிவு சொல்லுதல் கஷ்டம். நமது தேகாபிமானிகளுள் ஒருவரை என் நண்பன், “ஏனைய்யா, நான் இந்த சுவராஜ்ய சங்கத்திலே (அதாவது, மிஸஸ் அனிபெஸன்ட் ஏற்பாடு செய்யும் “ஹோம்-ரூல்” சங்கத்திலே) சேரலாமா?” என்று கேட்டால், அவர் சொல்லும் மறுமொழியிலிருந்து எந்த விஷயத்திலும் முடிவான தீர்மானஞ் செய்தல் எவ்வளவு கஷ்டமென்பது தெரியும்.

இன்று காலை தராசுக் கடைக்கு இரண்டு பிள்ளைகள் வந்தார்கள். ஒருவனுக்கு வயது பதினெட்டிருக்கும்: மற்றவனுக்கு இருபது வயதிருக்கலாம்.

“நீங்கள் யார்?” என்று கேட்டேன்.

மூத்தவன் சொல்லுகிறான்:- “நாங்கள் இருவரும் புதுச்சேரிக் கலாசாலையில் வாசிக்கிறோம். தராசுக் கடையின் விஷயங்களைக் கேள்விப்பட்டு, இங்கே சில ஆராய்ச்சிகள் செய்துவிட்டுப் போகலாமென்று வந்தோம்.”

தராசினிடம் விஷயத்தைத் தெரிவித்தேன். தராசு சொல்லிற்று:- ”மத விஷயமான கேள்விகள் கேட்பதானால் சுருக்கமாகக் கேட்க வேண்டும்”.

இதைக் கேட்டவுடன் இரண்டு பிள்ளைகளும் திகைத்து விட்டார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு மூத்தவன் ஒருவாறு மனதைத் திடஞ் செய்து கொண்டு சொல்லுகிறான்:-

”நான் சில தினங்களாக ராமாயணம் வாசித்துக் கொண்டு வருகிறேன். அதிலே, விசுவாமித்திரர் என்ற ரிஷி ஆயிர வருஷம் தவம் செய்ததாகவும், அந்த தவத்தில் ஏதோ குற்றம் நேர்ந்து விட்டபடியால் மறுபடி ஆயிர வருஷம் தவம் புரிந்ததாகவும் எழுதப்பட்டிருக்கிறது. இக்காலத்தில் மஹா யோகிகளென்றும் ஞானிகளென்றும் சிலரை நமது ஜனங்கள் வழிபடுகிறார்கள். விசுவாமித்திரர் கதையை நான் ஒரு திருஷ்டாந்தமாகக் காட்டினேன். ‘பழைய புராணங்களிலும், இதிகாசங்களிலும் பொய்க் கதைகள் மலிந்து கிடக்கின்றன’ என்பது என்னுடைய கருத்து. அப்படியிருக்க, ‘ நம்மவர் அவற்றைப் பக்தி சிரத்தையுடன் போற்றத் தகந்த உண்மை நூ¡ல்களென்று பாராட்டுதல் பொருந்துமா?’ என்பது என்னுடைய கேள்வி”.

தராசு சொல்லுகிறது:- ”புராணங்கள் முழுதும் சரித்திரமல்ல; ஞான நூல்கள்; யோக சாஸ்திரத்தின் தத்துவங்களைக் கவிதை வழியிலே கற்பனைத் திருஷ்டாந்தங்களுடன் எடுத்துக் கூறுவன. இவையன்றி நீதி சாஸ்திரத்தை விளக்கும்படியான கதைகளும் அந்நூல்களில் மிகுதியாகச் சேர்ந்திருக்கின்றன. சரித்திரப் பகுதிகளும் பல உண்டு. இவ்வாறு பல அம்சங்கள் சேர்ந்து ஆத்ம ஞானத்துக்கு வழிகாட்டி, தர்மநிதிகளை மிகவும் நன்றாகத் தெரிவிப்பதால் அந்த நூல்களை நாம் மதிப்புடன் போற்றி வருதல் தகும்”.

பிறகு இளைய பிள்ளை கேட்டான்:- “உடையை என்பது நம்முடைய ஜன்மாந்திரத்தில் செய்த பாவ புண்ணியத்தின் பயனல்லவா?”

தராசு சொல்லுகிறது:- “இல்லை. ஒருவன் தன் காலத்திலே செய்யும் செய்கைகளும் அவன் முன்னோர் செய்துவிட்டுப் போன செய்கைகளுமே உடைமைக்குக் காரணமாகும். ஏழ்மைக்கும், செல்வத்துக்கும் காரணம் தெரிய வேண்டுமானால் அர்த்த சாஸ்திரம் (பொருள் நூல்) பார்க்க வேண்டும். ஜன்மாந்தர விஷயங்களைக் கொண்டு வருதல் வீண் பேச்சு. அதிலே பயனில்லை.”
இளையவன் கேட்கிறான்:- “முன் பிறப்பும் வருபிறப்பும் மனிதனுக்குண்டென்பது மெய்தானா?”

தராசு சொல்லுகிறது:- “அந்த விஷயம் எனக்குத் தெரியாது.”

இளையவன்:- “ஆத்மா உண்டா; இல்லையா?”

தராசு:- “உண்டு.”

இளையவன்:- “அதற்குப் பல ஜன்மங்கள் உண்டா, இல்லையா?”

தராசு:- “உலகத்தினுடைய ஆத்மாதான் உனக்கும் ஆத்மா. உனக்கென்று தனியாத்மா இல்லை. எல்லாப் பொருள்களும் அதனுடைய வடிவங்கள். எல்லாச் செய்கைகளும் அதனுடைய செய்கைகள். அவனன்றி ஓரணுவும் அசையாது.”

இளைய பிள்ளை:- “சரி, அது போகட்டும். இப்போது ஒருவன் செல்வம் சேர்க்க விரும்பினால் முடியுமா?”

தராசு:- “முடியும். இஹலோக சாஸ்திரங்களைக் கற்று, வியாபார விதிகளைத் தெரிந்துகொண்டு, தெளிவுடனும், விடாமுயற்சியுடனும் பாடுபட்டால் முடியும். ‘முயற்சி திருவினை ஆக்கும்.”

பிள்ளைகள் “இன்னும் பல விஷயங்கள் கேட்க வேண்டும். மற்றொரு முறை வருகிறோம்” என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.

12

இன்று நமது தராசுக் கடைக்குச் சென்னப் பட்டணத்திலிருந்து ஒரு காலேஜ் மாணாக்கர் வந்து சேர்ந்தார்.

“ஓய்.எம்.ஸி.ஏ.யில் மிஸ்டர் காந்தி செய்த உபந்யாசத்தைப் பற்றி உம்முடைய ‘ஒப்பினியன்’ எப்படி?” என்று அந்த மாணாக்கர் கேட்டார்.

“இதென்னடா, கஷ்டகாலம்! காலை வேலையில் இந்த மனுஷன் ஹிந்துஸ்தானி பேச வந்தான்!” என்று சொல்லித் தராசு நகைக்கலாயிற்று. தராசுக்குஇங்கிலீஷ் தெரியாது. ஹிந்துஸ்தானி யதார்த்தத்திலே தெரியும். தெரியாததுபோல சில சமயங்களில் பாவனை செய்வதுண்டு.

”ஒய்.எம்.ஸி.ஏ. என்பது வாலிபர் கிறிஸ்தவ சங்கம் என்று பெயர் கொண்ட ஒரு சபையைக் குறிப்பிடுவது. அந்த சபையாரின் பிரசங்க மண்டபத்தில் ஸ்ரீமான் காந்தி சில தினங்களின் முன்பு உபந்யாசம் செய்தாராம். அந்த உபந்யாசத்தைப் பற்றி, ஏ தராசே, உன்னுடைய அபிப்பிராயத்தை அறிந்து கொள்ள வேண்டுகிறார்” என்று தராசை நோக்கிச் சொன்னேன்.

”அபிப்பிராயமென்ன?” என்று கேட்டது தராசு.

”ராஜீய விஷயத்தைக் கலக்காமல் பேசும்” என்று நான் விண்ணப்பம் செய்து கொண்டேன்.

காலேஜ் மாணாக்கர் சொல்லுவதானார்:-

ஸ்ரீமான் காந்தி வாசம் செய்யும் ஆமதாபாதில் சத்யாக்கிர ஆசிரமம் ஏற்படுத்தியிருக்கிறார். அந்த ஆசிரமத்தில் யௌவனப் பிள்ளைகள் பலரை வைத்துக் கொண்டு அவர்களை தேச சேவைக்குத் தாயர்படுத்துகிறார். அவருடைய ஆசிரமத்திலே பயிற்சி பெறுவோருக்குச் சில விரதங்கள் அவசியமென்று ஏற்படுத்தியிருக்கிறார். உண்மையிலே லோகோபகாரம் செய்ய விரும்புவோர் எல்லோருமே மேற்படி விரதங்களை அனுஷ்டிக்க வேண்டுமென்பது அவருடைய கொள்கை. கிறிஸ்தவ சங்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் அந்த விரதங்களைக் குறித்துத் தான் பேசினார். விசேஷமாக அவர் வற்புறுத்திச் சொல்லிய விஷயங்கள் பதினொன்று. அவை பின்வருமா:-

  1. சத்ய விரதம்;- எப்போதும், யாரிடத்திலும், என்ன துன்பம் நேரிட்டாலும், பிரஹ்லாதனைப் போல ஒருவன் உண்மையே பேசவேண்டும்.
  2. அஹிம்சா விரதம்:- எவ்வுயிருக்கும் துன்பஞ் செய்யலாகாது; யாரையும் பகைவராக நினைக்கலாகாது; ஒருவன் உன்னை அடித்தால் நீ திரும்பி அடிக்கடக் கூடாது.
  3. பிரமசரியம்:- விவாகம் பண்ணிக் கொள்ளக் கூடாது; ஏற்கெனவே மனைவியிருந்தால் அவளை சஹோதரம் போல நடத்த வேண்டும்.
  4. நாக்கைக் கட்டுதல்:- உணவிலே மசாலா சேரக்கூடாது; ருசியை விரும்பி உண்பது பிழை; அதனால் உஷ்ணம் அதிகரித்து, போக இச்சையுண்டாகிறது.
  5. உடைமை மறுத்தல்:- ஒருவன் ஒரு பொருளையும் தனது சொத்தாகக் கொள்ளலாகாது.
  6. சுதேசியம்:- நமது தேசம், நமது ஜில்லா, நமது கிராமத் தொழிலை முதலாவது ஆதரிக்க வேண்டும்; நமது தேசம், நமது ஜில்லா, நமது கிராமத்து அம்பட்டன் நேரே க்ஷவரம் செய்யாமல் போனாலும், அவனுக்குப் பயிற்சி உண்டாகும்படி செய்து நாம் அவனிடமே க்ஷவரம் செய்து கொள்ள வேண்டும். வெளியூர் அம்பட்டனை விரும்பக்கூடாது.
  7. பயமின்மை:- எதற்கும் நடுங்காத நெஞ்சம் வேண்டும். அ•துடையவனே பிராமணன்.
  8. தீண்டல்:- தீண்டாத ஜாதி என்று ஒருவரையொருவர் அமுக்கி வைப்பது பாவம். அது பெருங்கேடு. எந்த ஜாதியையுந் தீண்டனம்.
  9. தேச பாஷை:- தேச பாஷையிலேயே கல்வி பயில வேண்டும்.
  10. தொழிற் பெருமை:- எல்லாத் தொழில்களுக்கும் சமமான மதிப்புண்டு. ஒரு தொழில் இழிவாகவும் மற்றொரு தொழில் உயர்வாகவும் கருதலாகாது.
  11. தெய்வ பக்தி:- பொதுக் காரியங்களிலும் ராஜீய விஷயங்களிலும் பாடுபடுவோருக்கு தெய்வ பக்தி வேண்டும்.

இதுதான் ஸ்ரீ காந்தி செய்த பிரசங்கத்தின் சாராம்சம்.

தராசு சொல்லலாயிற்று:-

“ஸ்ரீமான் காந்தி நல்ல மனுஷர்.

“அவர் செல்லுகிற சத்ய விரதம், அஹிம்சை. உடைமை மறுத்தல். பயமின்மை-இந்த நான்கும் உத்தம தர்மங்கள்-இவற்றை எல்லோரும் இயன்றவரை பழகவேண்டும். ஆனால் ஒருவன் என்னை அடிக்கும்போது நான் அவனைத் திரும்பி அடிக்கக்கூடாதென்று சொல்லுதல் பிழை.

“சுதேசியம், ஜாதி சமத்வம், தேச பாஷைப் பயிற்சி, தெய்வ பக்தி இந்த நான்கையும் இன்றைக்கே பழகி சாதனை செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நமது தேசம் அழிந்துபோய்விடும்.

“நாக்கைக் கட்டுதல், பிரமசரியம், இவையிரண்டையும் செல்வர்கள், இடையிடையே அனுஷ்டித்தால் அவர்களுக்கு நன்மையுண்டாகும். ஏழைகளுக்கு இந்த உபதேசம் அவசியமில்லை. அவர்களுக்கு நாக்கை ஏற்கனவே கட்டித்தான் வைத்திருக்கிறது. பிரமசரயத்தை ஜாதி முழுமைக்கும் ஸ்ரீ காந்தி தர்மமென்று உபதேசம் செய்யவில்லை. அந்த வேலை செய்தால் தேசத்தில் சீக்கிரம் மனிதரில்லாமல் போய்விடும்.

”காந்தி பதினோரு விரதம் சொன்னார். நான் பன்னிரண்டாவது விரதமொன்று சொல்லுகிறேன். அது யாதெனில்:- ”எப்பாடுபட்டும் பொருள் தேடு; இவ்வுலகத்திலே உயர்ந்த நிலைபெறு. ‘இப்பன்னிரண்டாவது விரதத்தை தேசமுழுதும் அனுஷ்டிக்க வேண்டும்.”

13

சில தினங்களாக நமது தராசுக் கடையில் வியாபாரம் சரியாக நடக்கவில்லை. சந்தேக நிவ்ருத்தியே நமது வியாபாரத்தின் நோக்கம். சந்தேகங்களையெல்லாம் தீர்த்துவிடுவதென்றால் இது சாமான்யக் காரியமன்று. கீதையிலே பகவான் ”சம்சயாத்மா விநச்யதி” (சந்தேகக்காரன் அழிந்து போகிறான்) என்று சொல்லுகிறார்.

எந்த முயற்சி செய்யப்போனாலும், ஆரம்பத்திலேயே பல வழிகள் தோன்றும். இந்த வழிகள் ஒன்றுக்கொன்று பொருந்தாமலிருக்கும். எந்த வழியை அனுசரிப்போமென்ற சந்தேகம் ஏற்படும். நானிருக்கும் வேதபுரத்திலே ஒரு செட்டிப் பிள்ளை கையிலே சொற்ப முதல் வைத்துக்கொண்டு எந்த வியபாரத்துறையில் இறங்கலாமென்று சென்ற ஐந்து வருடங்களாக யோசனை செய்துகொண்டு வருகிறான். இன்னும் அவனுக்குத் தெளிவேற்படவில்லை. மணிலாக் கொட்டை வியாபாரம் தொடங்கலாமென்று நினைத்தான். ஆனால் அந்த வியாபாரம் இங்கு பெரிய பெரிய முதலாளிகளையெல்லாம் தூக்கியடித்து விட்டது. நாளுக்குநாள் விலை மாறுகிறது. இன்று ஒரு விலைபேசி முப்பது நாளில் ஆயிரம் மூட்டை அனுப்புகிறேனென்று சீமை வியாபாரியுடன் தந்தி மூலமாக ஒப்பந்தம் செய்து கொண்டோமானால், இடையிலே எதிர்பாராதபடி விலையேறிப் போகிறது. ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல், சீமை வியாபாரிக்குத் தண்டம் கொடுக்க நேரிடுகிறது. நாம் இதிலே புகுந்து கையிலிருக்கும் சொற்ப முதலையும் இழக்கும்படி வந்தால் என்ன செய்வோமென்று செட்டிப் பிள்ளை பயப்படலானான். கடைசியாகச் சென்ற வருஷத்தில், ஒரு சமயம், ”என்ன வந்தாலும் சரி, ஒரு கை பார்ப்போம். மணிலாக் கொட்டையே தொடங்கவோம்” என்று யோசித்தான். சண்டையினால் கப்பல்களின் போக்கு வரவு சுருக்கமாய் விட்டது. சில கப்பல்கள் போய் வருகின்றன.இவற்றில் இடக்கூலி தலைக்குமேலே போகிறது. பெரிய முதலாளிகளே இந்த வியாபாரத்தைச் சுருக்கப்படுத்திக்கொண்டு வருகிறார்கள். ஆதலால் செட்டிப் பிள்ளை இந்த யோசனையை அடியோடு நிறுத்திவிட்டான். இப்படியே துணிமணி, பீங்கான், கண்ணாடி, வெங்காயம் முதலிய எந்த வியாபாரத்தை எடுத்தாலும் அவனுக்கு ஏதேனுமொரு தடை ஏதேனுமொரு ஆ§க்ஷபம் வந்து கொண்டேயிருக்கிறது. வருஷம் ஐந்தாகிவிட்டது.!

லாபாலாபங்களை யோசித்த பிறகுதான் ஒரு துறையில் இறங்க வேண்டும். ஆனால் வாழ்நாள் முழுதும் வெறுமே யோசனை செய்து கொண்டிருந்து காரியந் தொடங்காமலே காலத்தைக் கழிப்போர் எவ்வித இன்பத்தையுமறியாமல் மாய்ந்து போகிறார்கள். வியாபாரத்தில் மாத்திரமன்று. ஒருவன் போக சாதனம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறான். ஹடயோகம் நல்லதா, ராஜயோகம் நல்லதா. பக்தியோகம் நல்லதா? என்ற சந்தேகமுண்டாகிறது. யோகசித்தி ஏற்பட வேண்டுமானால் குடும்பத்தாருடன் வீட்டிலிருந்து முயற்சி செய்யலாமா? அல்லது குடும்பத்திலிருந்தே விலகிப்போய் எங்கேனும் தனியிடத்திலிருந்து பாடுபட வேண்டுமா, இப்படி எத்தனையோ கேள்விகள் பிறக்கின்றன. இங்ஙனமாக மணிலாக் கொட்டை வியாபார முதல் ஆத்ம ஞானம் வரை எந்தக் காரியத்திலும் ஆரம்பத்திலே திகைப்புக்களுண்டாகும். இப்படி நாக்கு வழிகளைக் காட்டி எது நல்ல வழியென்று கேட்டால் நமது தராசு சரியான வழியைக் காட்டிக் கொடுக்கும். மேலும் பொதுப்படையாக எந்த ஆராய்ச்சிலும், கொள்கைப் பிரிவுகள் தோன்றிப் பல கக்ஷ¢கள் ஏற்படுவது இவ்வுலகத்தியற்கை. நமது தராசு எந்தக் கக்ஷ¢ நியாயமென்பதைத் திட்டமாகக் கண்டுபிடித்துச் சொல்லும். இவ்வளவு நல்ல தராசாக இருந்தும் என்ன காரணத்தாலோ வியாபரம் ரசமாக நடக்கவில்லை.

ஆதலால் நேற்றுத் தராசினிடம் நானே கேள்விகள் போடத் தொடங்கினேன்.

“தராசே, நம்முடைய சொந்த வியாபாரம் நன்றாக நடப்பதற்கு வழியென்ன?” என்று கேட்டேன்.

தராசு கலகலவென்று நகைத்துப் பின்வருமாறு சொல்லலாயிற்று:-

”ஆஹா, காளிதாசா, நல்ல கேள்வி கேட்டாய். நீ இதை எப்போது கேட்கப் போகிறாயென்று நான் பல தினங்களாக ஆவலுடன் எதிர்பாத்திருந்தேன். உன் வசத்திலே குறுங்குறு மஹாரிஷி என்னை ஒப்புவிக்கும்போது என்ன வார்த்தை சொன்னார். ஞாபகமிருக்கிறதா?”

காளிதாசன்:- ”ஆம், தராசே, நன்றாக ஞாபகமிருக்கிறது. ‘கேளாய் காளிதாசா, தெய்வ ஆராய்ச்சி ஒன்றையே உனது வாழ்க்கையின் முதற்காரியமாக வைத்துக் கொள்ள வேண்டும். லௌகிகத் தொழிலொன்று சேர்ந்தால் தான் யோக சித்தி விரைவாகக் கைகூடுமாதலால், உனக்கு லௌகிகத் தொழிலாக இந்தத் தராசு வியாபராத்தை ஏற்படத்திக் கொடுக்கிறேன். இதன் மூலமாக உன்னுடைய இஹலோக தர்மங்கள் நேரே நிறைவேறும். உனக்கு சக்தி துணை; உன்னைச் சார்ந்த உலகத்திற்கு இந்தத் தராசு நல்ல உதவி; இவை இரண்டையுந் தவிர, மூன்றாவது காரியத்தில் புத்தி செலுத்தக்கூடாது. உனக்கு நன்மையுண்டாகும்’ என்று சொன்னார்.

தராசு:- ”நீ அந்தப்படி செய்து வருகிறாயா?”

காளிதாசன்:- ”ஏதோ, என்னால் இயன்றவரை செய்து வருகிறேன்.”

தராசு:- ”ஞபாகமில்லாமல் பேசுகிறாய், இரண்டு மாதத்திற்கு முன் ஒருமுறை பட்டு வியாபாரம் தொடங்கலாமென்று யோசனை செய்தாய். மனிதன் செல்வந்தேடுவதற்குப் பல உபாயங்கள் செய்வது நியாயந்தான். ஆனால் அவனவன் தகுதிக்குரிய வழிகளிலே செல்லவேண்டும். ஒரு முயற்சியைச் கைகொண்டால் பிறகு வெற்றியுண்டாகும் வரை எப்போதும் அதிலேயே கண்ணும் கருத்தாகப் பாடுபட வேண்டும். பல மரங்கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான்.

காளிதாசன்:- ”நீ சொல்வது சரிதான். ஏதோ மறதியினால் வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும்படி நேரிட்டது. மறுபடி தராசு
வியபாரத்தையே ஒரே உறுதியுடன் நடத்த வேண்டுமென்று மனோ நிச்சயம் செய்துவிட்டேன். அதை ஓங்கச் செய்வதற்கு வழி சொல்லு.”

தராசு:- ”இந்த வியாபாரத்தின் மஹிமையை நீயே சில சமயங்களில் மறந்து விடுகிறாய். ‘எட்டும் இரண்டும் என்ன?’ நீலப் போர்வை வாங்கலாமா? பச்சைப் போர்வை வாங்கலாமா?’ என்பவை போன்ற அற்பக் கேள்விகள் கேட்போரை சில சமயங்களில் அழைத்துக் கொண்டு வருகிறாய். இப்படி அற்ப விசாரணைக்கெல்லாம் இடங்கொடுத்தால், நமது கடையின் பெயர் கெட்டுப் போகாதா? மேலும் அறிவுத் தராசு போட்டு, உலக வாழ்க்கையின் விதிகளையும், சிரமங்களையும், நிறுத்துப் பார்ப்பதே உனது தொழிலென்பதை மறந்து, வேறு முயற்சிகளிலே சிந்தை செலுத்துகிறாய். புலி பசித்தால் புல்லைத் தின்னுமா? வயிர வியாபாரி ஒரு மாதம் நல்ல வியாபார மில்லாவிட்டால் மொச்சைக் கொட்டைச் சுண்டல் விற்கப் போவானோ? காளிதாசா, கவனத்துடன் கேள். நம்முடைய வியாபாரம் அருமையானது. இதிலே ஜயம் பெற வேண்டுமானால் சாமான்ய உபாயமெதுவும் போதாது. செய்கைக்குத் தகுந்தபடி உபாயம்; இதை மறந்து விடலாகாது. உனக்கு வேண்டியதெல்லாம் இரண்டே நெறி. தெய்வ பக்தி. பொறுமை. குறுங்குறு மஹா ரிஷி வாக்யத்தைத் தவற விடாதே. லௌகிகச் செய்கை நேரும்போது அதை முழுத் திறமையுடன் செய். மற்ற நேரங்களில் பராசக்தியை தியானம் செய்து கொண்டிரு. நமது வியாபரம் மேலான நிலைமைக்கு வரும்.”

காளிதாசன்:- “எப்போது?”

தராசு:- “பொறு. விரைவிலே நன்மை காண்பாய்.”

14

தராசுக்கடையை நெடுநாளாக மூடி வைத்துவிட்டேன். விஷயம் பிறருக்கு ஞாபகத்திலிருக்குமோ, மறந்து போயிருக்குமோ என்ற சந்தேகத்தால் எழுத முடியவில்லை. தராசுக்கடை என்பதென்ன? பத்திரிகை படிப்போர் சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். ஞாபகம் இல்லாவிட்டாலும் பெரிதில்லை. அந்தக் கடையை மாற்றிவிட்டேன்; தராசு என்ற மகுடமிட்டு இனிமேல் எழுதப்படும் வினாவிடைகளில் கதைக்கட்டு சுருங்கும்; சொல் நேர்மைப்படும்.

தராசு என்பது தர்க்க சித்தாந்தம். ஒரு கக்ஷ¢ சொல்லி அதற்கு ப்ரதி கக்ஷ¢ சொல்லி அங்கு தீர்ப்புக் காணுவதே தராசின் நோக்கம்.

என்னுடைய சிநேகிதர் வேணு முதலியார் என்றொருவர் உண்டு. அவர் வைஷ்ணவர். அவர் வாயினால் பேசுவதே கிடையாது. ஆஹாரவ்யவஹாரங்கள் எல்லாம் குறிகளால் நடத்திவருகிறார். அவர் தமிழில் ஒரு வியாசம் “ஊமைப் பேச்சு” என்ற மகுடத்துடன் எழுதி வெளியிட்டிருக்கிறார். ஐந்தாறு வருஷங்களுக்கு முன்பு அந்த நூல் அச்சிடப்பட்டது. சமீபத்தில் நான் அவரிடம் விசாரணை செய்தபோது ஒரு பிரதிகூட மிச்சம் இல்லை என்று சொன்னார்.

அந்தப் புஸ்தகத்தின் கருத்து எப்படி என்றால்:-

”ஒரு மனிதன் தனது மனக்கருத்தை வெளிப்படச் சொல்ல வேண்டும் என்றால், அதற்கு பாஷை அவசியம் இல்லை. பாஷை அவசியம் என்று சாதாரண ஜனங்கள் நினைக்கிறார்கள். அது பிழை.

”பாஷையானது மனதின் இன்றியமையாத கருவி அன்று. வண்டி ஓடும்போது சக்கரம் கிச்சென்று கத்துவது போல், மனம் சலிக்கும் போது நாக்கு தன் வசம் இன்றிப் படைத்துக் கொள்கிறது.

”பலவேறு நாடுகளில் பல வேறு பாஷையாக ஏற்பபட காரணம் என்னவென்றால், அது கால தேசவர்த்தமானங்களுக்கும் ஜனங்களுக்கும் உள்ள தொடர்களின் வேற்றுமையாலே ஏற்படுகிறது.

”பக்ஷ¢களின் மனக்கிளர்ச்சிக்குத் தக்கபடி இயற்கையில் அவற்றின் வாய்க்கருவி கூவுகின்றது: மிருகங்களிலும் அங்ஙனமே காண்கிறோம். அவையெல்லாம் ஒரு பாஷை பேச வேண்டும் என்று கற்பிதம் பண்ணிக் கொண்டு இலக்கணம் போட்டுப் பேசவில்லை. பசி வந்தால் குஞ்சு இன்ன வகை கத்தும் என்ற நியதி இருக்கிறது. அதைத் தாய் அறிந்து கொள்ளுகிறது. நாக்கே இல்லாவிட்டாலும் மனிதர் பரஸ்பரம் சம்பாஷணை அதாவது வ்யாபார சம்பந்தங்கள் நடத்திக் கொள்ளலாம். பேசத் தெரியாத ஜந்துக்கள் எத்தனையோ கூட்டம் போட்டுக் குடித்தனம் பண்ணி வருகின்றன. மனிதருக்குள்ளே ஊமையின் கருத்தை அவன் எப்படியேனும் பிறருக்குத் தெரியும்படி செய்துவிடுகிறான்.”

இங்ஙனம் பலவித நியாயங்கள் காட்டி வேணு முதலியார் தமது நூலில் மனிதனுக்கு பாஷையே மிகை என்று ஸ்தாபனம் செய்திருக்கிறார். ஆனால் மேற்படி விதியை அவர் தமது நடையில் பழக இல்லை. அவர் எப்போதும் சளசள என்று வாயினால் பேசாவிட்டாலும் எழுதிக் குவிக்கிறார். ”எழுத்து பாஷையின் குறிதானே, வேணு முதலியாரே? நீர் பாஷையே மிகை என்று சொல்லிவிட்டு ஓயாமல் எழுதி எழுதிக் கொட்டுகிறீரே?” என்று அவரிடத்தில் கேட்டால், அவர்” பேச்சே துன்பம்; எழுத்து சுகம்” என்று எழுதிக் காட்டுகிறார். இன்னும் ஒரு வேடிக்கை; ‘வாயினால் பேசக்கூடாது’ என்று விரதம் வைத்துக் கொண்டு வேணு முதலியார் பாட்டுப் பாடுவதில் சலிப்பது கிடையாது. இவரும் நமது வேதாந்த சிரோமணி ராமராயர் என்ற மித்திரரும் சிலதினங்களின் முன்பு (சந்திர கிரஹணம் பிடித்த தினத்தின் மாலையில்) என்னைக் கடற்கரையில் பார்த்தார்கள்.

“தராசுக்கடை கட்டியாய் விட்டது போல் இருக்கிறதே?” என்று ராமராயர் சொன்னார். “இங்கே செய்வீர். இன்னே செய்வீர்” என்று வேணு முதலியார் காம்போதி ராகத்தில் பாடினார். “தராசுக் கடையை இங்கே இப்போது திறக்க வேண்டும்” என்ற கருத்துடன் வேணு முதலி பாடுகிறார்” என்று ராமராயர் வ்யாக்யானம் பண்ணினார்.

“திறந்தோம்” என்றேன்.

ராமராயர் சொல்லுகிறார்:- “நான் ஒரு கக்ஷ¢ சொல்லுவேன். எதிர்க்கக்ஷ¢யை வேணு முதலியார் பாட்டிலே பாடிக் காட்ட வேண்டும். காளிதாசர் தீர்ப்புச் சொல்ல வேண்டும். இதுதான் தராசுக்கடை” என்றார்.

“சம்மதம்” என்றேன். வேணு முதலியாரும் தலையை அசைத்தார்.

ராமராயர் சொல்லுகிறார்:- “அனிபெஸன்ட் அம்மை ‘தியாஸபி’ நடத்தினதெல்லாம் ஸ்வராஜ்ய வேலைக்கு அடிப்படையென்று நம்புகிறேன்.

வேணு முதலியார் பாடுகிறார்:-

“நந்தவனத்திலோ ராண்டி; அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தானொரு தோண்டி; அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.”

ராமராயர்:- “அன்ய ஜாதியிலே பிறந்த போதிலும் நான் அனிபெஸன்டை ஹிந்துவாகவே பாவிக்கிறேன்.”

வேணு முதலியார்:-

“தன்னைத்தான் ஆளவேண்டும்
தன்னைத்தான் அறியவேண்டும்
தன்னைத்தான் காக்கவேண்டும்
தன்னைத்தான் உயர்த்த வேண்டும்.”

ராமராயர்:- ‘ஸ்வராஜ்யம் என்பது விபரீதம் அன்று. அதை ஆங்கிலர் கொண்டாடுவது ஆச்சர்யமில்லை. ஆங்கில ஸ்திரீகளும் புருஷர்களும் நம்மிடம் நேசம் காட்டும்போது நாம் சந்தேகப்படுவது நியாயமில்லை. ஆங்கிலேயர்களில் நல்லவர்களே இருக்கக்கூடாதா? எல்லாரும் மனித ஜாதிதானே? ஹிந்துக்களுக்கு ஸ்வராஜ்யம் உடன் பிறந்த உரிமை என்பதை ஒப்புக் கொள்ளும் பிறரை நாம் மித்திரராகவே கொள்ளவேண்டும். இங்கிலாந்திலுள்ள ராஜ வம்சத்தாருக்கு நாம் ஸ்வராஜ்யம் பெறுவதனாலே எவ்விதமான நஷ்டமும் கிடையாது. பொது ஜனங்களுக்கும் அப்படியே. பார்லிமெண்டாருக்கும் அப்படியே. நம்முடைய உபத்ரவம் இல்லாமலிருந்தால் அவர்கள் உள்நாட்டு விஷயங்களை அதிக சிரத்தையுடன்கவனிக்க இடம் உண்டாகும். சிற்சில வியாபாரிகளுக்கும் சிலஉத்தியோகஸ்தர்களுக்கும் நாம் ஸ்வராஜ்யம் செலுத்துவதனாலே வரும்படி குறையும். ஆதலால் இந்த வியாபாரிகளின் கூட்டத்தையும் உத்யோகக் கூட்டத்தையும் சேராத ஆங்கிலேயர்களுக்கு நம்மிடம் அபிமானம் ஏற்படுதல் அசாத்யமன்று. அது நம்பத் தக்கதாகும்” என்றார்.

வேணு முதலியார் பாடுகிறார்:-

”நல்ல விளக்கிருந்தாலும் கண் வேண்டும், பெண்ணே;
நாலு துணையிருந்தாலும் சுய புத்தி வேண்டும்;
வல்லவர்க்கு மித்திரர்கள் பலருண்டு, பெண்ணே;
வலிமையிலார் தமக்குலகில் துணேயேது, பெண்ணே?”

ராமராயர் சொல்லுகிறார்:- ”அதிகாரிகள் அனிபெஸன்ட் சொல்வதைத் தடுக்க முடியாது. லோகத்தின் அபவாதத்துக்கு பயப்படுவார்கள். அனிபெஸன்ட் சீக்கிரம் விடுதலை பெறுவாள். அவளைப் பிடித்து வைத்ததனாலே இப்போது உலகமெங்கும் இந்தியாவின் நிலைமை தெரியக் காரணம் ஏற்படும். ஆங்கில ராஜாங்கத்துக்கு விரோதமான ராஜத்துரோகம் செய்கிறாள் என்ற வார்த்தையை அனிபெஸன்ட் விஷயத்தில் எவனும் சொல்லத் துணியமாட்டான். ஸ்வராஜ்யம் கேட்பது ராஜத்துரோகம் இல்லை’ என்பதை இங்கிலாந்து ஜனங்களும் ராஜாவும் தெரிந்து கொள்ளுவதற்கு அனி பெஸன்ட் செய்த காரியம் உதவியாயிற்று.”

வேணு முதலியார் பாடுகிறார்:-

”சொல்லால் முழக்கிலோ
சுகமில்லை மவுனியாய்ச்
சும்மா இருக்க அருள்வாய்,
சுத்த நிர்க்குணமான பர தெய்வமே
பரஞ்சோதியே சுக வாரியே.”

அப்போது ராமராயர் என்னை நோக்கி, “காளிதாசரே, உம்முடைய தீர்ப்பென்ன? தராசின் தீர்ப்பைச் சொல்லும்” என்று கேட்டார்.

அதற்கு நான்

“நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்ல
தன்றே மறப்பது நன்று.”
“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு.”
“தோன்றிற் புகழொடு தோன்றுக, அ•திலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.”
“வேண்டிய வேண்டியாங் கெய்தலான், செய்தவம்
ஈண்டு முயலப் படும்.”

என்ற நாலு குறளையும் சொன்னேன்.

“தராசின் கருத்தை நீர் நேரே சொல்லாதபடி, வேணு முதலியைப் போலே பாட்டில் புகுந்த காரணம் என்ன?” ராமராயர் கேட்டார்.

“தராசு ராஜாங்க விஷயத்தை கவனியாது. சண்டை முடிகிறவரையிலும் ராஜாங்க விஷயமான வார்த்தை சொல்லுவதிலே தராசுக்கு அதிக ருசி ஏற்படாது. சண்டை பெரிது; நம்முடைய கடை சாதாரணம்; ராஜாங்க விசாரணைகளோ மிகவும் கடிமை. ஆதலால் அனி பெஸன்டின் ராஜாங்கக் கொள்கையை நாம் நிர்ணயிக்க இடமில்லாவிடினும், அவள் சரியான ஹிந்து ஆதலால் நம்முடைய சகோதரி என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஹிந்து மதத்தை அவள் போற்றுகிறாள். அதனால் அவளுடைய ஜன்மம் கடைத்தேறும். வேதம் என்று சொன்னால் பாவம் போகும். பகவத் கீதையை நம்புகிறவர்கள் யாராயினும் அவர்கள் நமக்கு சகோதரரே. ‘தியாசபி,’ ‘ஹோம் ரூல்’ இரண்டுக்கும் சம்பந்தமில்லை; அது வேறு, இது வேறு. ஹிந்துக்கள் அனிபெஸண்டுக்கு நன்றி கூறவேண்டும். தமக்குத் தாமே உதவி செய்து கொள்ள வேண்டும்.”

– கதைக் கொத்து (சிறுகதை தொகுப்பு), முதற் பதிப்பு:1967, பாரதி பிரசுராலயம், சென்னை.

நன்றி: https://www.projectmadurai.org

Print Friendly, PDF & Email
பிறப்பு சுப்பையா (எ) சுப்பிரமணியன் திசம்பர் 11, 1882 எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம், இந்தியா இறப்பு செப்டம்பர் 11, 1921(அகவை 38) சென்னை, இந்தியா இருப்பிடம் திருவல்லிக்கேணி தேசியம் இந்தியா மற்ற பெயர்கள் பாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்தி தாசன் பணி செய்தியாளர் அறியப்படுவது கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி குறிப்பிடத்தக்க படைப்புகள் பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு மற்றும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *