தயக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 8,879 
 
 

ஓயாமல் கேட்டு கொண்டிருந்த இரைச்சல் நின்று, நீர் மெல்ல மெல்ல சொட்டும் ஒலி கேட்ட உடன் கிருஷ்ணன் எழுந்து கொண்டான். மாலை பயிற்சி வகுப்பில் இருந்து திரும்புகையில் வாங்கி வந்திருந்த ரொட்டியை சுற்றியிருந்த காகிதம் காற்றில் மெல்ல பட படத்து கொண்டு இருந்தது. இருட்டிலேயே துழாவி கண்டுபிடிக்கும் அளவிற்கு மின்விளக்கின் சுவிட்ச் இந்த மூன்று நாட்களில் பழக்கத்திற்கு வந்து விட்டு இருந்தது.

“மே மாதம், கேரளாவுக்கா? அதுவும் அலுவலக செலவிலேவா, ம்ம்ம் ஜமாய்” என்று அந்த கரு நாக்கு பையன் அறிவு எப்போ சொன்னானோ, வந்த மூன்று நாட்களாய் திருவனந்தபுர நகரமே இரவு மழையால் மிதந்து கொண்டு இருக்கிறது. ஜன்னலுக்கு வெளியே எட்டி பார்க்க, மழை நன்றாக மட்டு பட்டிருந்தது.

எட்டு மணியை கடந்து வினாடி முள் வேகமாக ஓடி கொண்டு இருக்க, என்ன செய்வது என்று தெரியாத குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான். கடந்த மூன்று நாட்களாய் அவன் வைத்து கொண்டிருந்த அட்டவணை இன்று சற்று பிசகி விட்டு இருந்தது. ஐந்து மணிக்கு அலுவலகத்தில் பயிற்சி வகுப்பை முடித்து விட்டு, நாயர் கடையில் ஒரு தம்முடன் சாயா அருந்திவிட்டு (சொர்க்கம்) மான்சனுக்கு வர வர மழை வலுக்கும், மழையை சபித்து கொண்டே தெருமுனை பாக்கரியில் நான்கு ரொட்டி துண்டுகளை வாங்கி கொண்டு வந்துவிடுவான். தினம் பேச்சு கொடுத்து அந்த பாக்கரி முதலாளி கூட நல்ல பழக்கம் ஆகி இருந்தார். வந்த உடன் தூங்கி விட்டு, பத்து மணிக்கு மெல்ல எழுந்து ஜாமுடன் அந்த ரொட்டி துண்டுகளை விழுங்கி விட்டு பால்கனிக்கு போனால், மழை இப்போதுதான் கொட்ட தொடங்கியது போல கொட்டி கொண்டு இருக்கும். வாங்கி வந்திருந்த தம்மை ஆசை தீர இழுத்துவிட்டு வந்து படுத்து விடுவான்.

தினம் சபித்ததனாலோ என்னவோ இன்று எட்டு மணிக்கே எழ வேண்டியதாயிற்று. அவன் கண் முன்னால் பிரமாண்டமாய் விரிந்திருந்த இரவு சற்று அச்சமூட்ட தொடங்கியது. இடையில் களைந்து விட்டதனால் மீண்டும் தூங்கவும் வழி இல்லை. சடாரென கட்டிலில் இருந்து எழுந்து கைலியை நின்ற படியே கழட்டி விட்டு அடுத்த ஐந்து நிமிடத்தில் வெளிய செல்ல ஆயத்தமானான். மனிதர்களுடன் சகஜமாக பேசியே மூன்று நாட்கள் ஆகிறது. பயிற்சி வகுப்பிற்கு கூட வரும் அத்தனை பெரும் மலையாளிகள், அவர்கள் என்னமோ சகஜமாக பேச வருவது போலதான் உள்ளது. ஆனால், அவனுக்கு இந்த இடமும் ஊரும் மனதில் ஒட்டவில்லை. வாசலில் நின்றிருந்த விடுதி காப்பாளன் மெல்ல ஒரு புன்னகையை உதிர்த்தான்.

அவனையும் அந்த சாலகுழி தெருவின் அத்தனை குப்பைகளையும் அள்ளி சேர்த்து ஓடி கொண்டு இருந்த மழை நீரையும் பட்டும் படாமலும் கடந்து சாலையின் எதிர் புறம் அடைந்தான். இன்று இரவு உணவுக்கு அந்த காய்ந்து போன ரொட்டியை தின்ன வேண்டியதில்லை என நினைத்து கொண்டே பாக்கரியை நெருங்கி விட்டு இருந்தான். அந்த கடையும், அந்த முதாலளியையும் பார்த்து ஏனோ ஆத்திரமாக வந்தது, பழைய ரொட்டியை விக்கிறார்கள், இரவு பத்து மணிக்குள் “வரட்டி” போல ஆகிவிடுகிறது என எண்ணி கொள்ளவும், கடைக்காரர் “என்ன சாரே ஊனு கழிக்கவோ?” எனவும் சரியாக இருந்தது. ஹி ஹி ஆமாம் என சொல்லிவிட்டு, ச்சே அந்த கடைக்காரர் நல்லவர் தான், நாம் ஏன் திடீர் திடீர் என்று இப்படி கோவபடுகிறோம் என தலையில் தட்டி கொண்டான்.

தனியாக இப்படி சென்று, கடையில் காசு கொடுத்து சாப்பிட போகிறோம் என்ற உணர்வே அவனுக்கு சற்று உற்சாகம் தருவதாக இருந்தது. ஊரில் என்றால் அம்மா எப்படியும் சோறு கட்டி கொடுத்து விடுவாள், அதுவும் இல்லாமல் ஒரு பி.எஸ்.என்.எல் அலுவலக குமாஸ்தா ஓட்டலில் சென்று சாப்பிடுதல் தகாது. ஆனால் இப்போது அப்படி இல்லை, அலுவலகம் சேர்ந்த மூன்று மாதத்தில் பயிற்சி வகுப்பிற்கு சிபரசு செயப்படும் அளவிற்கு வளர்ந்தாகிவிட்டது, அதன் காரணமாய், நாள் ஒன்றுக்கு பேட்டவாக சுளையாக 140 ரூபாய். தனியாக இப்படி வீட்டை விட்டு வருவதும் நல்லதுதான் போல.

திருநெல்வேலி “அமுதா உணவகம்” என்ற பெயரை பார்த்து ஓட்டலுக்குள் சென்றான். சொகுசாக கை கழுவி கொண்டு வந்து, வைக்கப்பட்ட சுடுதண்ணியை மெல்ல உருஞ்சியவாறே விலையை பார்த்தான்.

“ஏன்னா சார் சாப்ட்றீங்க” என்ற சர்வரிடம், ஒரு நெய் தோசை என சொல்ல வாய் எடுத்தவன் ஒரு நொடி தயங்கி, இல்லை நண்பருக்காக காத்துட்டு இருக்கேன் என்றான். வைட்டார் சந்தேகத்துடன் பார்த்து விட்டு செல்ல, சிகரட் பத்த வைப்பது போல் வெளியே வந்து, அந்த சர்வர் பின்னால் தொடர்ந்து வருவது போலவே கற்பனை செய்து கொண்டு வெகு தூரம் வந்து விட்டிருந்தான்.

ராத்திரி கொள்ளையா இருக்கு, ஒரு தோசைக்கு 38 ரூபாயா. இதுக்கு பத்து ரூபாய்க்கு ஒரு முழு சாப்பாடே சாப்பிடலாமே என திருவனத்தபுரம் மருத்துவ கல்லூரியை ஒட்டி, அவன் பயிற்சி வகுப்பு நடக்கும் இடத்தில் இருந்த உணவு விடுதிக்கு சென்றான். பத்து ரூபாய்க்கு ஒரு முட்டை கறியும், முழு சாப்பாடும் சாப்பிட்டு விட்டு வந்தான். மணி ஒன்பதுதான் ஆகி இருந்தது, இன்னும் தூங்குவதற்கு எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும். அதுவரை நேரம் கழிக்க சிமன்ட் பெஞ்சில் அமர்ந்தான்.

மருத்துவமனையை ஒட்டிய இடம் என்பதால் மிக அமைதியாக இருந்தது. சிமின்ட் பெஞ்சை ஒட்டி நின்ற மரத்தின் இலைகள் ஊடே நிலவொளி வழிந்துகொண்டு இருந்தது. இலைகளின் அசைவுகளுக்கு ஏற்ப சாலையில் மாறி மாறி வரும் ஒளி சித்திரங்களை பார்த்தபடி அமர்ந்திருந்தான். “தம்பி தமிழா?” என பக்கத்துக்கு பெஞ்சில் இருந்து குரல் வந்தது. சற்று தடிமனான கண்ணாடியும், வெள்ளை வேட்டி சட்டையும் அணிந்து, நான் இந்த கட்சியோட மாவட்ட தலைவர் என்று சொன்னால் நம்பக்கூடிய அளவில் இருந்த அந்த மனிதர்தான் அப்படி கேட்டார்..

மெல்ல சிரித்து, “சார் தமிழா” என்றான்.

“இல்லை, நான் கன்யாகுமரியில ஆறு வருடம் வொர்க் செய்துட்டு உண்டு” என்றார். அந்த வொர்க்கை அவர் சொன்ன விதமே, அவர் தமிழ் இல்லை என அவனுக்கு புரிந்து
விட்டது.

“தம்பி மெடிக்கல் காலேஜா?”

“இல்லை சார், நான் இங்க அலுவலக பயிற்சி வகுப்புக்கு வந்திருக்கேன். இப்போதான் சேர்ந்தேன் மூணு மாசம் ஆச்சு, அப்பா வேலை எனக்கு வந்துடுச்சு அவர் இறந்துடதால” என்றான்.

“அது சரி, அதுதானே தம்பி ரொம்ப சின்ன பையனால இருக்கீங்க. இங்க எவட தாமசம்?”

லாட்ஜில் என்றான். சிகரட் என எழுந்து வந்து என் முன்னால் சிகரட் பெட்டியை நீட்டினார். இல்லை சார் வேண்டாம் பழக்கம் இல்லை என்றான்.

“உதடு கறுத்து இருக்கு, பழக்கம் இல்லைன்றீங்க?”

ஒரு அசட்டு சிரிப்பை வரவழைக்க முயல அதற்குள் அவர் மெல்ல அருகில் அமர்ந்து, அவன் தொடை மேல் கையை வைத்து, “தாழோட்ட வருதா” என்றார்.

அவன் உடம்பெல்லாம் சூடாக, ஒரு வித உதறலுடன் அவரை பார்க்க, அவர் உதடை குவித்து ஒரு செய்கை செய்து, “ம்ம்ம் வருதா?” என்றார்.

ஒரே ஒரு நிமிடம் தயங்கி, அவர் அவர் முகத்தை பார்த்து, கையைத் தூர தள்ளிவிட்டு திரும்பி பார்க்காமல் விறு விறுவென விடுதியை நோக்கி நடக்கத் துவங்கினான்.

– மே 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *