தமிழ் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 134 
 
 

ரமில் டைகர்ஸ் பிறீடம் பைட்டர்ஸ் என்று டிவியின் உள்ளே நின்று சற்றே நெஞ்சை முன்தள்ளியவாறு கைகளை உயர்த்திக் கத்திய இளைஞனை எங்கோ கண்டிருந்ததாக அகதித்தஞ்ச விசாரணையின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் குமாரசூரியர் சோபாவில் புதைந்திருந்து விரல்களால் முன் நெற்றியைத் தேய்த்தபடி யோசித்தார். இளைஞனின் ரீ சேர்ட்டில் புலியொன்று பாய்ந்தபடியிருந்தது. தொப்பியிலும் அதே புலி. கழுத்தினில் சுற்றப்பட்டு மார்பினில் தொங்கிய மிதமான குளிரைத்தாங்கும் சிவத்த கம்பளிச் சால்வையின் இரு முடிவிடங்களிலும் இரண்டு புலிகள் பாய்ந்தன. கன்னங்களில் மெல்லிய கறுத்தக்கோடாக தாடியை இழுத்திருந்தவனும், தாடையில் குஞ்சுத்தாடியை விட்டிருந்தவனும், சொக்கிலேட்டுக்கும் குங்குமக்கலருக்கும் இடைப்பட்ட வண்ணத்தில் நெற்றியில் புரண்ட தலைமுடியை நிறம் மாற்றியிருந்தவனுமாகிய அவ் இளைஞனை குமாரசூரியன் தன் நினைவுக்குள் கொண்டுவர முடியுமா எனப் பிரயத்தனப்பட்டார். மேலும் இரண்டொரு தடவைகள் நெற்றியைத் தேய்த்துக் கொண்டார்.
சுமார் பதின்மூன்று, பதின்நான்கு வருடகால அகதித் தஞ்ச மொழிபெயர்ப்பு அனுபவத்தில் நுாற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களையும் இளம்பெண்களையும் கடந்தவர், தனியே இந்த இளைஞனை மட்டும் நினைவு வைத்திருக்க நியாயப்பாடு எதுவும் இல்லைத்தான். இருந்தாலும் இவனுக்கான மொழிபெயர்ப்பாளராக தானேயிருந்து அவனிடம் விஷேட கதைகள் ஏதேனுமிருந்திருப்பின் அவனை அடையாளம் காண்பதொன்றும் சிரமமான காரியமில்லையென்று குமாரசூரியர் நினைத்தார்.

அப்படி நினைவு வைத்துக்கொள்ளக்கூடிய பல கதைகள் குமாரசூரியரின் தொண்டைத்தண்ணீரை வற்றவைத்து அடுத்த வார்த்தை பேசவிடாமல் தடுத்திருக்கின்றன. நெஞ்சடைத்துப் போகும். ஜெர்மன் மொழியில் வார்த்தைகளைக் கோர்க்கமுடியாமல் திகைத்தவர் போல உட்கார்ந்திருப்பார். திருகோணமலையில் ஐந்து பாடசாலை மாணவர்களை இராணுவம் சுட்டதில் செத்தவனின் தம்பியின் விசாரணைக்கு குமாரசூரியர் போயிருந்தார். அவனுக்கு பதினெட்டு வயதுகளே இருந்தது. அண்ணனை விட இரண்டு வயதுகள் இளையவனாயிருந்தான். அவன் ஒரு புகைப்பட அல்பத்தினையும் சில பத்திரிகைகளையும் கொண்டு வந்திருந்தான். அல்பத்தில் ஒன்றாய் சைக்கிளில் உட்கார்ந்தபடி, தோளினை அணைத்தபடி, தலைக்குப் பின்னால் கொம்பு முளைத்தது போல விரல்களைக் காட்டியபடி என அண்ணனோடு சேர்ந்து எடுத்த படங்கள் இருந்தன. பத்திரிகையின் முன்பக்கத்தில் செய்தியோடு அண்ணனும் இன்னும் நான்கு மாணவர்களும் செத்துக் கிடந்த படம் வண்ணத்தில் இருந்தது. அண்ணனின் நெற்றியில் திருநீற்றுக் கீறும் சந்தனப் பொட்டும் அழியாதிருந்தன. விழிகள் திறந்திருந்தன. அவற்றில் மரணபயம் உறைந்திருந்ததாய் குமாரசூரியருக்குத் தோன்றியபோது நெஞ்சடைப்பதாய் உணர்ந்தார். மனதிற்குள் “யேசுவே” என்று உச்சரித்தார்.

அவன் பத்திரிகையையும் அல்பத்தினையும் விசாரணையாளனிடம் கொடுத்தபோது கண்கள் நீரைக் கசியத்தொடங்கின. துடிக்கும் உதடுகளைக் கடித்து அழுகையை அடக்கப் படாதபாடு பட்டான். முடியவில்லைப் போலிருந்தது. தலையை முழுவதுமாகத் தாழ்த்திக் கொண்டான். விசாரணையாளன் பத்திரிகையின் படத்தையும் அல்பத்தின் படங்களையும் பார்த்தபடியிருந்தான். “ஏன் அண்ணாவைச் சுட்டார்கள். அவர் இயக்கத்திலேதாவது இருந்தாரா” என்று கேட்டான். குமாரசூரியன் “தம்பி” என்றார். அவன் நிமிர்ந்தானில்லை. “தம்பி உம்மடை அண்ணை இயக்கத்தில இருந்தவரோ..”

அவனில் அழுகை வெடித்திருந்தது. உடல் குலுங்கி அழத்தொடங்கினான். அப்பொழுதும் அழுகையை எப்படியாவது கட்டுப்படுத்திவிட வேண்டுமென அவன் பிரயத்தனப்படுவது தெரிந்தது. மொழிபெயர்ப்பை தட்டச்சு செய்கிற பெண்ணும் கதிரையைத் திருப்பி அவனைப் பார்த்தபடியிருந்தாள். கரித்தாஸ் நிறுவனம் அனுப்பி வைத்திருந்த பெண்ணுக்கு பத்தொன்பது இருபது வயதுகளே இருக்கும். அவளும் குறிப்பெடுப்பதை நிறுத்திவிட்டு மௌனமாயிருந்தாள். கீச்சிட்ட ஒலியையொத்த அவனது அழுகையைத் தவிர்த்து அந்த அறையில் நிசப்தம் நிரவியிருந்தது. விசாரணையாளன் ஒன்றிரண்டு தடவைகள் கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தான். பெரும்பாலும் விசாரணையை அவன் இன்னொரு நாளுக்கு ஒத்திவைக்கக் கூடுமென குமாரசூரியர் எதிர்பார்த்தார். அப்பொழுது அழுகையை நிறுத்தியவன் நிமிர்ந்து கண்ணீரை புறங்கையால் அழுத்தித் துடைத்தான். “சொறி..”

“அண்ணன், பரீட்சை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தார். அவர் இயக்கங்களில் தொடர்பு பட்டிருக்கவில்லை. அப்பொழுது அச்சமான சூழலும் நிலவியிருக்கவில்லை. போர்நிறுத்தம் அமுலில் இருந்தது. அண்ணனும் அவனது நண்பர்கள் ஆறுபேரும் கடற்கரை சென்று திரும்பியிருந்தார்கள். எந்தப் பதற்றமும் நகரில் ஏற்பட்டிருக்கவில்லை. பின்னேரப் பொழுது இருக்கும். அவனின் கைத்தொலைபேசியில் இருந்து வீட்டிற்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அவன் அப்பாவிடம் பேசினான். அவனது குரல் அச்சமுற்றிருந்தது. இராணுவம் தங்களை கடற்கரை வீதியில் தடுத்து வைத்திருப்பதாகவும், நிறைய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னான். அப்பா அவனை பதட்டப்படவேண்டாம். அடையாள அட்டையில் மாணவன் என்று உள்ளது. அதனை அவர்களிடம் காட்டு என்றார். அண்ணன் அவசர அவசரமாக நான் பின்னர் கதைக்கிறேன் என்று தொடர்பை துண்டித்துக் கொண்டான். அப்பா அவனைப் பார்த்துவரப் புறப்பட்டார். அவர் புறப்பட்ட சற்றைக்கெல்லாம் வெடிச்சத்தங்கள் கேட்கத் தொடங்கின. நிலம் அதிரும் தனித்தனி வெடிகள். நான் எதையெல்லாமோ யோசிக்கத்தொடங்கினேன். அம்மா பதட்டமுற்றிருந்தார். நான் அண்ணனுக்கு தொலைபேசியில் அழைப்பெடுக்க முயற்சித்தேன். அழைப்பு போய்க்கொண்டிருந்தது. பதில் இல்லை.

அடுத்த ஒரு மணிநேரத்தில் அப்பாவின் செய்தி வந்து அம்மாவைச் சைக்கிளில் ஏற்றி ஓடி அடைந்தபோது அண்ணன் செத்துப் போயிருந்தான். அவனோடு இன்னும் நான்குபேர் இரத்தம் வழிய மணலுக்குள் புரண்டு கிடந்தார்கள். நெஞ்சையும் வயிற்றையும் தோள்மூட்டையும் துப்பாக்கி ரவைகள் சல்லடையாக்கியிருந்தன. அண்ணா தொலைபேசியை பற்றியபடியிருந்தான். அதில் இரண்டு இலக்கங்களின் தவறவிடப்பட்ட அழைப்புக்கள் நிறைய இருந்தன. ஒன்று எங்களது வீட்டு இலக்கம். மற்றையது அவனோடு படித்தவளது இலக்கம். எனக்கு அவளைத் தெரிந்திருந்தது.
அண்ணாவின் செத்த வீட்டிற்கு அவள் வந்தே தீருவேன் என புரண்டழுது பிடிவாதம் பிடித்தபோது அவளது அம்மா வந்து அப்பாவோடு பேசினார். அப்பா அவரைத்தனியாக அழைத்துச் சென்று “இன்னமும் காலமும் வாழ்வும் இருக்கிற பிள்ளை அவள். அவளை அழைத்து வந்து ஊர் கண்ணுக்குக் காட்ட வேண்டாம்.” என்றார். பின்னாட்களில் அவளைக் காண்கிற போதெல்லாம் அம்மா பெரும் குரலெடுத்து அழுது தீர்த்தார்.

செத்தவீடு முடிந்த இரண்டொரு நாளில் மிரட்டல்கள் வரத்தொடங்கின. அண்ணாவின் மரணம் பற்றி யாருக்கும் முறையிடக்கூடாதென்றும் வெளிநாட்டு அமைப்புக்களிற்கு தெரியப்படுத்தக் கூடாதென்றும் தொலைபேசி மிரட்டல்கள் வந்தன. கூடவே இன்னொரு மகனையும் இழக்க விருப்பமா என்ற கேள்விகள். கொதித்துக் கொண்டிருந்த அப்பா அடங்கிப்போனார். நாங்கள் எதுவும் செய்ய முடியாதவர்களாகிப் போனோம்.

வழக்குகளில் எனக்கு நம்பிக்கையிருக்கவில்லை. எந்த வழக்கின் முடிவும் அவர்களுக்குத் தண்டனையைப் பெற்றுத்தரப்போவதில்லை. எந்த வழக்கின் முடிவும் எனது அண்ணனை மீளத்தரவும் போவதில்லை. என்ன கேட்டீர்கள், அண்ணனை ஏன் சுட்டார்கள் என்றா..? ஏன் சுட்டார்கள் என்று எங்களுக்கு இதுவரை புரியவேயில்லை. அண்ணனும் அறிந்திருக்க மாட்டான். சுட்டவர்களிடம் கூட காரணமேதுமிருந்திருக்காது அவன் ஒரு தமிழன் என்பதைத் தவிர.. ”

இறுதிச் சொற்களை மொழிபெயர்த்தபோது குமாரசூரியர் தழுதழுத்தபடியிருந்தார். அவனது வார்த்தைகளில் உண்மை இழைந்து கிடந்ததாக பரிபூரணமாக நம்பினார். விசாரணையாளன் எப்பொழுதும் போல விறைத்த தலையனாக முகத்தை வைத்துக்கொண்டிந்தாலும் தட்டச்சுகிற வெள்ளைப் பெண்ணின் முகத்தில் துயரம் படிந்திருந்தது. கரித்தாஸ் பெண் கண்களை அடிக்கடி துடைத்துக்கொண்டிருந்தாள்.

இப்படி மற்றுமொரு அகதித்தஞ்ச விசாரணையையும் குமாரசூரியரால் மறக்க முடியாதிருந்தது. அந்த விசாரணை ஒரு கொலைவழக்கு விசாரணையாகாமல் அவர் தடுத்திருந்தார். அவனுக்கு முப்பது முப்பத்தொரு வயதிருக்கலாம். விசாரணை முழுவதும் ஒருவித மன அழுத்தத்தோடு இருந்தான். நிறையக்கேள்விகளுக்கு எரிச்சலோடும் எடுத்தெறிந்தும் பதில் சொன்னான். அவற்றை மிகப்பணிவான பதில்களாக குமாரசூரியர் மொழிபெயர்த்தார். மூன்று மணிநேரமாக அவனது கேள்விகளும் பதில்களும் குறுக்கு விசாரணைகளுமாகப் போய்க்கொண்டிருந்தது. அவன் சொன்னான். “கல்யாணம் கட்டின கொஞ்ச நாட்களிலேயே தேடத் தொடங்கி விட்டார்கள். ஓட வேண்டியதாய்ப் போனது. ஊரில் மனைவி இப்பொழுது கர்ப்பமாக இருக்கிறா. மூன்று மாதம்.. அவவுக்கு பக்கத்தில் இருக்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை. குழந்தை பிறக்கும் போது முகம் பார்க்கவும் கொடுத்து வைக்கவில்லை. நினைக்கும் போது அந்தரமாயும் விரக்தியாயும் இருக்கிறது.”

விசாரணையாளன் நிமிர்ந்து கண்ணாடிக்கு கீழாகப் பார்த்தான். அவன் அடுத்ததாகக் கேட்ட கேள்வியில் குமாரசூரியரே திக்குமுக்காடிப் போனார். தமிழில் வார்த்தைகளை கோர்த்தபோது மூளை விறைத்தது. க்ளாசிலிருந்த தண்ணீரைக் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

“நல்லது, உம்மடை மனைவி ஊரில மூன்றுமாதக் கர்ப்பம் என்று சொல்லுறீர். ஆனால் இவர் என்ன கேட்கிறார் என்றால், நீர் ஊரைவிட்டுவந்தும் மூன்று மாதங்கள் ஆகிறது என கோரிக்கையில் உள்ளது. அதனால நீர் எப்படி அது உம்மடை பிள்ளைதான் என்று உறுதியாச் சொல்லுவீர்..? அது இன்னொராளின்ரை …” குமாரசூரியர் வார்த்தைகளை முடிக்கவில்லை.

அவன் மேசையில் இரண்டு கைகளாலும் சடார் என்று அடித்து எழுந்தான். கதிரையைத் தலைக்குமேலே ஓங்கி வித்தியாசமான குரல் எழுப்பிக் கத்தினான். தனது தலையே சிதறப்போகிறது என கைகளால் தலையைப் பொத்திய குமாரசூரியர் “லுார்த்ஸ் மாதாவே, காப்பாற்றும்” என்று கத்தினார். தட்டச்சு செய்தவள் எழுந்து ஓடி சுவரோடு ஒடுங்கி நின்றாள். அவன் ஓங்கிய கதிரையோடு விசாரணை அதிகாரியை நோக்கி இரண்டு எட்டு வைக்கவும்தான் சுதாகரித்த குமாரசூரியர் சட்டென்று எழுந்து அவனைப் பின்புறத்தால் கட்டிக்கொண்டார். அவன் திமிறினான். “என்னை விர்றா, இந்த நாயை இண்டைக்கு கொல்லாமல் விடமாட்டன்..”

“தம்பி, சொன்னாக் கேளும், பிறகு எல்லாம் பிழைச்சுப் போயிடும், உடனடியா கதிரையைக் போட்டுட்டு என்ன ஏதென்று தெரியாமல் கீழை விழும்.. மிச்சத்தை நான் பாக்கிறன்..”

அவன் என்ன நினைத்தானோ கதிரையை ஓரமாக எறிந்துவிட்டு நின்ற இடத்தில் கீழே விழுந்து கால்களிரண்டையும் நீட்டி விரித்து மேலே பார்த்து விசும்பி அழத்தொடங்கினான்.

குமாரசூரியர் விசாரணையாளனைச் சமாதானப்படுத்தினார். அவனது முகம் இறுகியிருந்தது. சற்றுப் பயந்தது போலவும் தோன்றிற்று. “மன்னிக்க வேண்டும். எங்களது கலாச்சாரத்தில் ஒருவனைக் கோபப்படுத்தவும், கேவலப்படுத்தவுமே இப்படியான கேள்விகளைக் கேட்பதுண்டு. அவை எல்லோராலும் தாங்கிக் கொள்ள முடியாக் கேள்விகள் ” விசாரணையாளன் தோள்களைக் குலுக்கி “ஊப்ஸ்” என்றான். விசாரணை மற்றுமொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குமாரசூரியர் ஒரு வழக்கறிஞர் அல்ல. வழக்கு எழுதுபவரும் அல்ல. இன்றைய நாளில் ஒரு வழக்கு எழுதுவதற்கு ஐநுாறிலிருந்து ஆயிரம் பிராங்குகள் வரை வாங்குகிறார்கள். இலங்கைப் பிரச்சனையின் தேதி வாரியான முக்கிய சம்பவங்களின் புறப்பின்னணியில் புதிய கதை மாந்தராக தஞ்சக் கோரிக்கையாளரை உள் நுழைத்து புனையும் ஆற்றல் கைவரப் பெற்றிருந்தால் போதும். வழக்கு எழுதியே பிழைத்துக் கொள்ளலாம். குமாரசூரியர் அந்த ஆற்றல் அற்றவர். அவர் வெறும் மொழிபெயர்ப்பாளர். அவரால் வழக்கு விசாரணையைத் தலைகீழாக மாற்றிவிடமுடியாது. ஆயினும் விசாரணைக்கு வருபவர்கள், கெஞ்சும் குரல்களால் “ஐயா உங்களைத்தான் நம்பியிருக்கிறம். எப்பிடியாவது கார்ட் கிடைக்க ஏதாவது செய்யுங்கோ” என்பார்கள்.

அவராலும் செய்ய முடிந்த ஒன்றிரண்டு காரியங்கள் இருக்கத்தான் செய்தன. விசுவநாதனின் முகம் குமாரசூரியரின் நினைவில் நிற்கிறது. அவனது இரண்டு விசாரணைகளுக்கும் அவரே மொழிபெயர்ப்பாளராயிருந்தார். அதுவொரு தெய்வச் செயல் என்றே கருதினார். அவனது முதலாவது விசாரணை வெறும் அரைமணி நேரத்தில் நடந்தது. குறுக்கு விசாரணைக் கேள்விகள் எதுவும் இருக்கவில்லை. வெறுமனே அவனுக்கு என்ன நடந்தது என்று கேட்டு பதிவு செய்து கொண்டார்கள். இரண்டாவது விசாரணை ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு நடந்தது. விசுவநாதன் சற்றே உடல்பருத்திருந்தான். முன்னரைப்போல கன்னத்தசைகள் உப்பியிருக்கவில்லை. ஆனாலும் குமாரசூரியர் அவனை அடையாளம் கண்டுகொண்டார். “ஒன்றரை வருடங்களாக முடிவேதும் சொல்லாமல் இழுத்தடிக்கிறார்கள். இந்த நாட்டுக்கு வந்த நேரம், கனடாவிற்குப் போயிருக்கலாம்” என்று சலித்துக் கொண்டான். அன்றைய விசாரணை ஐந்து மணிநேரத்திற்கு நீடித்தது. விசுவநாதன் கூறிக்கொண்டிருந்தான். “என்னை சிங்கள இராணுவத்தினர் கட்டியிழுத்து ட்ரக்குகளில் ஏற்றினர்..” என்றபோது அவன் இடைமறிக்கப்பட்டான்.

“உங்களை அவர்கள் எதனால் கட்டியிருந்தனர்..”

விசுவநாதன் போகிற போக்கில் “கயிற்றால்” என்றுவிட்டு மேலும் சொன்னபடியிருந்தான். குமாரசூரியருக்கு சட்டென்று பொறி தட்டியது போலயிருந்தது. அவர் தனது நினைவு இடுக்குகளில் அவனது முதல் விசாரணை நாளைத் தேடினார். தனது ஞாபகத்தை ஒருமுறை நிச்சயப்படுத்திக்கொண்டார். இரும்புச் சங்கிலியால் கட்டி இழுத்தார்கள் என குமாரசூரியர் மொழிபெயர்த்தார். சென்றதடவை விசுவநாதன் அப்படியே சொல்லியிருந்தான் என்பது அவருக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது.

கயிறும் சங்கிலியுமாகக் குழப்பினால் என்ன நடக்கும் என்று குமாரசூரியருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. வழக்கு நிராகரிக்கப்பட்ட கத்தையான தாள்களில் ஏதேனும் ஒன்றில், இரண்டு விசாரணைகளிலும் மாறுபாடான தகவல்களைத் தந்துள்ள காரணத்தினால் வழக்கில் உண்மைத்தன்மை இல்லாமற் போகிறது என்றும் இன்னோரன்ன காரணங்களினால் தஞ்சக் கோரிக்கையை ஏற்க முடியாதுள்ளது. நபர் முப்பது நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் எழுதப்பட்ட கடிதமொன்று விசுவநாதனுக்கு அனுப்பப்பட்டிருக்கும். வழக்கின் முடிவில் அவனுக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. ஒருவேளை நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான ஒரு காரணம் குறைந்திருக்கும் என்பது குமாரசூரியருக்குத் தெரிந்திருந்தது.

இப்போதெல்லாம் வழக்கு விசாரணைகளில் மிகக் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு வார்த்தைகளிலும் நிராகரிப்பிற்கான காரணங்களைத் தேடுகிறார்கள். சிறிய தகவல் பிழைகளும் நிராகரிப்பில் கொண்டு வந்து நிறுத்தின. குமாரசூரியர் தன்னால் முடிந்ததைச் செய்தார். கேள்விகளை தமிழ்ப்படுத்தும்போது சொற்களோடு சொற்களாக “முகத்தைச் சரியான கவலையா வைச்சிரும்” என்றோ “நாட்டுக்கு அனுப்பினால் கட்டாயம் என்னைக் கொலை செய்வாங்கள் என்று அடிச்சுச் சொல்லும்” என்றோ அவரால் சொல்லமுடிந்தது. அவருக்குத் தெரியும். இவையெல்லாம் ஒரு மொழிபெயர்ப்பாளன் செய்யக்கூடாதவை. ஆயினும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் குமாரசூரியரும் அகதித்தஞ்சம் கேட்டே இங்கே வந்திருந்தார். ஆதலால் அப்படி வருபவாகள் மீது இப்போதும் இரக்கமாயிருந்தார்.

அப்போதெல்லாம் இன்றைய விசாரணைகளைப்போல நீண்ட கேள்விளும் நிறையப்பதில்களும் ஏகப்பட்ட காரணங்களும் தேவைப்பட்டிருக்கவில்லை. குமாரசூரியரிடம் இருந்தது ஒரேயொரு காரணம்தான். அல்பிரட் துரையப்பாவைத் துளைத்த குண்டு, பாய்ந்து வந்த கோணத்தை வைத்துப் பார்க்கும் போது அது சற்றுக் கட்டையான மனிதனால் சுடப்பட்ட குண்டென்றும் அது காரணமாய் ஊரில் உள்ள கட்டையான மனிதர்களைப் பிடித்துச் சென்று வெட்டிக் கொல்கிறார்கள் என்றும் தானுமொரு கட்டையன் என்பதால் தன்னையும் கொல்வது நிச்சயம் என்று குமாரசூரியர் சொன்னார். விசாரணை அதிகாரியும் ஒரு கட்டையனாக இருந்ததாலேயோ என்னவோ அவரது வழக்கு வெற்றியடைந்தது. அந்த வருடம் எண்பது கட்டையர்களுக்கு விசாக் கொடுத்தார்கள்.

***

“பெயர் சொல்லுங்க”

“பிரதீபன்”

“வேறு பெயர்கள் உண்டா?”

பிரதீபன் சற்றுக் குழம்பினான். கண்கள் அகல விரிந்து முழிப்பது போலிருந்தது. பள்ளிக்காலத்தில் அவனுக்கு முழியன் என்றொரு பட்டப்பெயர் இருந்தது. அதனைச் சொல்லலாமா என யோசித்தான். “அதாவது ஏதேனும் இயக்கங்களிலோ அமைப்புக்களிலோ வேறு பெயர்களில் இயங்கியிருந்தால் அவற்றைச் சொல்லவும்” என்றார். பிரதீபன் இல்லையென்று தலையைப் பலமாக அசைத்து மறுதலித்தான்.

“வாயால் சொன்னால்தான் அதுவொரு ஆவணமாகும்.”

“இல்லை. வீட்டில் தீபன் என்று கூப்பிடுவார்கள், அதை விட வேறு பெயர் ஒன்றும் இல்லை.”

“சுவிற்சர்லாந்தில் வந்து இறங்கிய இடம்..”

“சூரிச் தொடரூந்து நிலையம்”

“பயண வழி”

“இலங்கையிலிருந்து துபாய் அங்கிருந்து ஆபிரிக்காவில் பெயர்தெரியா நாடொன்று, அங்கிருந்து இத்தாலி பின்னர் தொடரூந்தில் சூரிச்”

“யார் அழைத்து வந்தார்கள்”

“யாரும் அழைத்து வரவில்லை. இத்தாலியின் மிலானோ நகரில் தொடரூந்தில் ஏற்றி விட்டார்கள். வந்து இறங்கினேன்..”

“யார்..”

“தெரியவில்லை.

“பயணம் முழுமைக்கும் எவ்வளவு காலம் செலவாயிற்று”

“ஆபிரிக்காவில் மொத்தம் ஒன்றரை வருடங்களும் இத்தாலியில் இரண்டு நாட்களும்”

“பாஸ்போட் எங்கே”

“பாஸ்போட் என்னிடமில்லை.. அதனை அவர்கள் வாங்கிவிட்டார்கள்.”

“வேறும் ஏதாவது நாடுகளில் அகதித் தஞ்சம் கோரியுள்ளீரா, அது நிராகரிக்கப்பட்டுள்ளதா”

“வேறெந்த நாட்டிலும் அகதித் தஞ்சம் கோரியிருக்கவில்லை. ஆதலால் நிராகரிக்கவும் இல்லை”

நிமிர்ந்து உட்கார்ந்த விசாரணை அதிகாரி பிரதீபனை கண்ணும் கண்ணுமாகப் பார்த்தான். பிரதீபன் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டான். அவை கணத்திற்கொருமுறை உலர்வது போலயிருந்தது. முகத்தைத் தாழ்த்திக் கொண்டான்.

“சிறிலங்காவில் பொதுவாக என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு மிக நன்றாகத் தெரியுமாதலால் நீங்கள் உங்களுக்கு அங்கே உயிர்வாழ முடியாத அளவிற்கு என்ன நடந்ததென்பதை மட்டும் சொல்லுங்கள்” என்ற முன்னறிவிப்போது விசாரணையாளன் ஆரம்பித்தான். “நீங்கள் இங்கே அகதித்தஞ்சம் கோருவதற்கான காரணங்கள் என்ன..?”

தஞ்சம் கோருவதற்கான காரணம் ஒன்று

பிரதீபன் ஆகிய நான் யாழ்ப்பாணத்தில் படித்தேன். உயர்தரப் பரீட்சையை முடித்துவிட்டு பல்கலைக்கழகம் நுழைவதற்கு முடிவுகள் போதாது இருந்தபோது இரண்டாவது முறையாகப் பரீட்சைக்குத் தோற்றலாம் என்றிருந்தேன். அப்பொழுது இலங்கையில் சமாதானப்பேச்சுக்கள் ஆரம்பித்தன. அதன்படி புலிகள் யாழ்ப்பாணத்திற்கு வந்து அலுவலகங்களை அமைத்தார்கள். புலிகளும் இராணுவமும் வீதிகளில் கைகுலுக்கிப் பேசியதை நான் கண்டேன். அவ்வாறான படங்கள் பத்திரிகைகளிலும் வெளியாகின. அதனால் அச்சமற்று நாமும் புலிகளோடு கைகுலுக்கிப் பேசினோம். எனது ஊரின் இராணுவ முகாமிற்கு முன்னால் ஒரு விடியற்காலை பிரபாகரனின் ஆளுயரக் கட்அவுட் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதனை இராணுவத்தினர் சிரித்தபடி பார்த்து நின்றனர்.

புலிகள் தம்முடைய பிரதேசங்களில் நிர்வாகம் மற்றும் வங்கிப் பணிகளுக்கு ஆட்களை வேலைக்குக் கேட்டிருந்தார்கள். வன்னியில் இறுதிநேரம் நடந்த சண்டைகளால் அங்கு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்கள் குறைவாக இருந்தார்கள். பலர் படிப்பினை இடைநிறுத்தி புலிகளில் இணைந்திருந்தார்கள். ஆயினும் நிர்வாக வேலைகளுக்கு படித்த ஆட்களே தேவைப்பட்டனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்தார்கள். நான் அவர்களிடத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன்.

கிளிநொச்சியில் தமிழீழ வைப்பகத்தில் எனக்கு கணக்காளர் வேலை கிடைத்தது. வாரத்திற்கு ஒருதடவையோ, இரண்டு தடவையோ யாழ்ப்பாணம் போனேன். மற்றைய நோட்களில் கிளிநொச்சியிலேயே தங்கியிருந்தேன். முகமாலை சோதனைச்சாவடி இராணுவத்திற்கு நான் கிளிநொச்சியில் புலிகளது வங்கியில் வேலை செய்வது தெரிந்திருந்தது.

இப்படியிருந்தபோது திடீரென்று புலிகள் தங்களது அலுவலகங்களைப் பூட்டிக்கொண்டு யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்குப் போனார்கள். சமாதானம் குழம்பப்போகிறது கதை உலாவியது. அதற்குப் பிறகும் நான் சற்றுக்காலம் கிளிநொச்சியில் வேலை செய்தேன். இரண்டாயிரத்து ஐந்தாம் வருடம் டிசம்பரில், நான் வேலையை விட்டு யாழ்ப்பாணத்திற்கு வந்தேன். இரண்டாயிரத்து ஆறு ஒக்டோபரில் இராணுவத்தினர் வீட்டில் வைத்து என்னைக் கைது செய்தனர். கிட்டத்தட்ட ஒரு ஒபரேஷன் போல அதனைச் செய்து முடித்தனர். அதிகாலையில் கிணற்றடியில் பதுங்கியிருந்தவர்கள் நான் ரொய்லெட்டிற்கு தண்ணீர் எடுக்க வரும்போது பாய்ந்து அமுக்கினர். அப்பொழுது எனது முதுகில் துப்பாக்கியின் பின்புறத்தால் குத்தினார்கள்.

புலிகளோடு தொடர்பு வைத்திருந்தேன், புலிகளுக்காக வேலை செய்தேன், புலிகளது பணத்தை யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வந்தேன் இவற்றோடு ஊரில் பிரபாகரனுக்கு கட் அவுட் வைத்தேன் என்றெல்லாம் சொல்லி ஒரு வாரகாலமாக என்னை அவர்கள் சித்திரவதை செய்தார்கள். சித்திரவதையின் போது “சமாதான காலத்தில் எங்களது கைகள் கட்டப்பட்டிருந்தன. ஆயினும் கண்கள் திறந்தே இருந்தன” என்று இராணுவ வீரன் ஒருவன் சொன்னான். அவர்கள் பேசியதிலிருந்து என்னைக் கொல்வதற்கு அவர்கள் திட்டமிடுவதை உணர்ந்து கொண்டேன். இதற்கிடையில் கொழும்பில் இருக்கின்ற மாமா பெருந்தொகைப்பணத்தை இராணுவத்திற்கு கொடுத்து என்னை விடுவித்தார். பணத்தை வாங்கிக்கொண்டு என்னை விடுதலை செய்ததனால் கைதை உறுதிசெய்யும் ஆவணங்களை என்னால் பெறமுடியவில்லை.

தஞ்சம் கோருவதற்கான காரணம் இரண்டு

யாழ்ப்பாணத்தில் உயிராபத்து நிறைந்திருந்தது. நான் கொழும்பிற்குப் புறப்பட்டேன். கொழும்பில் எனது மேற்படிப்பைத் தொடர்வதும் நோக்கமாயிருந்தது. ஒருநாள் ரியுசனுக்கான வழியில் ஒரு பின்னேரப்பொழுதில் வெள்ளவத்தை நெல்சல் ஒழுங்கையில் வைத்து என்னை வாகனமொன்றிற்குள் தள்ளித் திணித்து ஏற்றினார்கள். நான் திமிறியபோது என் பிடரியில் கனமான இரும்புக் கம்பியினால் தாக்கினார்கள். அவர்கள் தம்மை ஈபிடிபி என்று அறிமுகப்படுத்தினார்கள்.

கிளிநொச்சியில் வேலை பார்த்தது, பின்னர் இராணுவம் கைது செய்தது என சகல செய்திகளையும் அறிந்திருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோதே கன்னத்தில் அடித்தார்கள். அவர்களுக்கு அதுவொரு விளையாட்டுப் போலிருந்தது. சிரித்துச் சிரித்து அடித்தார்கள். அப்படி அடிக்கிற போது அவர்களில் ஒருவன் கேட்டான். “நீ ஆமிக்கு மட்டும்தான் காசு குடுப்பியா, எங்களுக்குத் தரமாட்டியோ”
அவன் கேட்ட தொகை இராணுவத்தினருக்கு எனது மாமா அளித்த அதே தொகையாயிருந்தது. உங்களுக்கு புரியும். இராணுவத்தினரும் ஈபிடிபியினரும் திட்டமிட்டு இதனைச் செய்தனர். இம்முறையும் மாமாவே பணம் கொடுத்தார். வெளிநாட்டிலிருந்த ஒன்றிரண்டு சொந்தக்காரர்களும் உதவியிருந்தனர்.

பன்னிரெண்டாவது நாள் அவர்களே என்னை வீதியில் விடுவித்து திரும்பிப்பாராமால் நடக்கச் சொன்னார்கள். அப்பொழுது அவர்கள் பேசிக்கொண்டதை என்னால் தெளிவாக கேட்க முடிந்தது. ஒருவன் சொன்னான். “இவனொரு பொன் முட்டை இடுகிற வாத்து. வாத்தை உடனேயே அறுத்துவிடக் கூடாது” அப்பொழுது அருகிருந்தவன் பெருங்குரலில் சிரித்தான். அறுக்கிறது என அவர்கள் பேசிக்கொண்டது கொலை செய்வதையே. உங்களுக்கு பொன் முட்டையிடும் வாத்துக் கதை தெரியாது போனால் அதனையும் நானே சொல்கின்றேன். ஒரு ஊரில் ஒரு குடியானவனிடம் ஒர பொன்முட்டையிடும் வாத்து இருந்தது.

தஞ்சம் கோருவதற்கான காரணம் மூன்று

யாழ்ப்பாணம், கொழும்பு என கொலை என்னைத் துரத்தியபடியிருந்தது. முழு இலங்கையும் என்னை அச்சறுத்தியது. இலங்கைக்கு வெளியே ஓடித்தப்பினால் அன்றி வேறு வழியில்லை என்றானபோது மாமா அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினார். அதுவரையான நாட்களுக்கு என்னைப் பதுக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. யாழ்ப்பாணத்தில் இராணுவம், கொழும்பில் ஈபிடிபி, மட்டக்களப்பில் கருணா குழு, மலையகத்தில் “வசதிக்குறைவு” என்ற காரணங்களால், வவுனியாவில் ஒளிந்து கொண்டேன். அங்கேயும் புளொட் பிரச்சனை இருந்ததுதான். இருந்தும் வேறு வழியில்லை. மாமா ஏற்பாடுகளைக் கவனிக்கும் வரை வவுனியாவில் தங்கியிருந்தேன். வீட்டைவிட்டு வெளியே இறங்கியதில்லை. வீட்டின் சுவர்களுக்குள் முடங்கியிருந்தேன். அவஸ்தையான வாழ்க்கை அது. இரண்டு மாதங்களைக் கடத்தினேன். பாஸ்போட் எடுப்பதற்காக மாமா உடனடியாக கொழும்பு வரச்சொன்ன அடுத்தநாள் கூமாங்குளம் என்ற கிராமத்து தெருவொன்றில் வைத்து, ஒரு ஓட்டோவில் என்னைத் தள்ளியடைந்து மோசமான ஆயுதங்களால் தாக்கினார்கள். பொல்லுகள், இரும்புக் குழாய்கள், நீண்ட கத்திகளை அவர்கள் வைத்திருந்தார்கள். முகங்களை கறுப்புத்துணியால் மறைத்து மூடிக் கட்டியிருந்தார்கள். அப்பொழுது அவர்கள் என்னோடு மட்டுமல்ல தமக்குள்ளும் பேசியிருக்கவில்லை. அவர்கள் புளொட்டாக இருக்கலாம், இராணுவ உளவுப்பிரிவினராக இருக்கலாம் ஆயினும் தாம் யாரென்றோ எதற்காக அடித்தார்கள் என்றோ எனக்கு இறுதிவரை சொல்லவில்லை. ஆனால் அவர்கள் கொலை வெறியொடு இருந்தார்கள் என்பதை நிச்சயமாகச் சொல்லமுடியும். நான் மயக்கநிலைக்குச் சென்று கொண்டிருந்தேன். கடவுள் கிருபையில் தெருவில் ஆட்கள் நடமாட்டம் திடீரென அதிகரித்தபோது அவர்கள் என்னை விட்டு ஓடினார்கள். நான் காப்பாற்றப்பட்டேன்.

நான் உணர்கிறேன். இலங்கையில் தொடர்ந்தும் வாழ்ந்தால் நிச்சயமாகக் கொல்லப்படுவேன் என்பதை இப்பொழுது நீங்களும் உணர்வீர்கள். அவர்கள் என்னைக் குறிவைத்து கொலை செய்ய அலைகிறார்கள். எனது தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பியனுப்புவீர்களாக இருந்தால் இலங்கைக்குள் நுழைகிற வழியில் நான் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவேன். உயிர்வாழும் உரிமையை ஏற்பதும் மனிதாபிமானம் மிக்கதுமான இந்நாடு எனது உயிரைக் காத்துக் கொள்ள தஞ்சத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

***

இருபது தாள்களில் பிரதீபனின் வழக்கு ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டிருந்தது. “வேறு ஏதாவது சொல்ல இருக்கிறதா” என்றான் விசாரணையாளன். பிரதீபன் இல்லை எனத் தலையாட்டிவிட்டு “இல்லை” என்றும் சொன்னான். அதிகாரி கத்தைத் தாள்களை மேசையில் தட்டி ஒன்றாக்கினான்.

“ஆகவே, உமக்கு, இலங்கையில் ஆயுததாரிகளான இராணுவம், ஈபிடிபி, கருணாகுழு, புளொட் அல்லது புலனாய்வுப் படை என்றறிய முடியாத ஒரு குழு போன்றவற்றால் உயிராபத்து உள்ளது என்கிறீர். உமது வாக்குமூலத்தின் அடிப்படையில் புலிகளால் உமக்கு உயிராபத்து ஏதுமில்லை. நல்லது. இப்பொழுது இந்த தாள்கள் ஒவ்வொன்றிலும் கையெழுத்திட வேண்டும்” என நீட்டினான்.

பிரதீபன் நாக்கைக் கடித்தான். “ஸ்ஸ்” என்றொரு சத்தமிட்டு இரண்டு கைகளாலும் தலையைப்பிடித்துக்கொண்டான். எதையோ நினைவு படுத்திக் கொள்பவனைப்போல கண்களை உருட்டினான். “எனக்கு இப்ப எல்லாம் நினைவுக்கு வருகுது. வவுனியால என்னை ஓட்டோவில கடத்திக்கொண்டுபோய் அடிச்சதெண்டு சொன்னன்தானே.. அது ஆரெண்டு விளங்கிட்டுது. அது புலிகள் தான். இதையும் என்ரை கேசில சேர்க்கவேணும். சேர்க்கலாமோ ” என்று கெஞ்சுவது போலக் கேட்டான். அதிகாரி நெற்றியைச் சுருக்கினான். “எப்பிடித் தெரியும்” என்றான்.

“ஓம்.. எனக்கு அடி மயக்கத்தில சரியா ஆட்களைத் தெரியேல்லை. இருந்தாலும் அவங்கள் சுத்தவர நிண்டு அடிச்சுக் கொண்டிருக்கேக்கை அவங்களில ஒருவருக்கு வோக்கியில மெசேச் வந்தது. அவர் நல்ல தமிழில கதைச்சவர். உங்களுக்குத் தெரியும்தானே. நல்ல தமிழிலதான் புலிகள் கதைக்கிறவை. அதுமட்டுமில்லாமல் கதைச்சு முடிய “ஓவர் ஓவர்.. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று சொல்லிட்டுத்தான் நிப்பாட்டினவர். இது எனக்கு தெளிவாகக் கேட்டது. நான் நிச்சயமாகச் சொல்லுவேன். அவர்கள் புலிகள்தான். ”

பிரதீபன் கடைசியாகச் சொன்னதனைத்தையும் குமாரசூரியர் ஜெர்மனில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்.

***

டிவியில் அந்த இளைஞன் இன்னும் இன்னும் உச்சமான ஸ்தாயியில் கத்தினான். “ரமில் டைகர்ஸ் பிறீடம் பைட்டர்ஸ்” ஒவ்வொருமுறையும் குதிக்கால்களை உயர்த்தி உயர்த்தி அவன் கத்தினான். கமெரா அவனை நிறையத் தரம் முகத்தை மட்டும் காட்சிப்படுத்தியது. அவன் குறையாத வேகத்தோடிருந்தான்.

ஆனால் எத்தனை முயன்றும், குமாரசூரியரால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. முன்னரே சொன்னதுபோல வழமையான கதைகளையும் கதை மாந்தர்களையும் அவரால் நினைவு வைத்துக் கொள்ள முடிவதில்லை.

-கனடா காலம் இதழிலும் பெயரற்றது தொகுப்பிலும் வெளியானது – May 2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *