குதறப்பட்டு மொட்டென்று வறண்டு போய் கிடக்கும் எங்கள் ஊர் ஆற்று மணல் திட்டில்தான் வழக்கம் போல் நாங்கள் கூடியிருந்தோம். இன்றைய பேசுபொருளாக ஹாட் டாப்பிக் ஒன்று ரெடியாக காத்திருக்கிறது. `மோடியின் பண மதிப்பிழப்பும், விமர்சனங்களும்’.—- இதில் எங்களுக்குள் பல்வேறு பார்வைகள் இருந்தன. பேசவிருந்த தலைப்பை விட்டுவிட்டு அந்நேரத்துக்கு மணிதான்வித்தியாசமாய்திடீரென்று வேறஒரு பிரஸ்தாபத்தைஇடையில் கொளுத்திப்போட்டான்.
“ஏம்பா! வெட்டியாய் பொறந்தோம், வெந்ததை தின்னுட்டு விதி வந்து செத்தோம்னு இருக்கக் கூடாதுப்பா.நாம வாழ்க்கையிலஎதையாவதுஉருப்படியாசாதிக்கணும்பா.”
“ அட! கவித…கவித.. இன்னா செய்யலாம்?னு நீயே சொல்லுப்பா.”
“ஒருதமிழ்ச்சங்கம்ஆரம்பிக்கணும்.”— இப்படித்தான் மணி சும்மா இருந்த சங்கை ஊதினான். ஊதிக்கெடுத்தானா.,காப்பாற்றினானா? என்றுநீங்கபார்க்கத்தானேபோறீங்க.
“இன்னாய்யா திடீர்னு வேற லெவலுக்கு போயிட்ட?. சரிய்யா ஆரம்பிச்சி?.”
“ மெல்லத்தமிழினிசாகும்னுசொல்றாங்களே, தமிழுக்குநாமஎத்தையாவதுசெய்யணும்யா. சங்கம்ஆரம்பிச்சிதமிழைப்பேசலாம், தமிழ்இலக்கியங்களைப்பத்திபேசலாம். எல்லாரையும்பேசவைக்கலாம், வாசிப்பை தூண்டலாம்.” — மணியைப் பொறுத்தமட்டில் தமிழ்பற்று உள்ளவன்.
கால்டுவெல் போப் ரேஞ்சுக்கு தமிழ் சீர்திருத்தம் பற்றியெல்லாம் யோசிப்பான், அவ்வப்போது சுமாராக கவிதை கூட எழுதுவான். ஆனால் வாயைத் திறந்தால் சென்னை தமிழுக்கு ஒரு அகராதியே போடலாம்.
“ஆமாமா நான் கூட படிச்சேன். உலகளவில் மொழி ஆராய்ச்சியாளர்ங்க ஆராய்ந்து அடுத்த நூற்றாண்டில் அழிந்து போகக் கூடிய நூறுமொழிகளை பட்டியல் போட்டிருக்காங்கப்பா. அதில தமிழ் எட்டாவது இடத்தில இருக்காம்.”—என்றான் முரளி.
“அட ஏன்யா! இங்லீஷ்காரன் ஆண்டகாலத்தில கூட ஆறாம் கிளாஸிலிருந்துதான் இங்லீஷ் படிச்சோம். அதுக்கப்புறம் மூணாம் கிளாஸிலிருந்து படிச்சோம், இன்னைக்கு கிண்டர்கார்டனிலேயே தமிழுக்கு இடமில்லை. அதிலிருந்து காலேஜ் வரைக்கும் முழுசும் இங்லீஷ்தான?. அப்புறம் எப்பிடிய்யா தமிழ் உசுரவெச்சிட்டிருக்கும் சொல்லு?. இப்படியே போனால் அடுத்த ரெண்டாம் தலைமுறையில் தமிழ் இருக்காதுதான்யா.”
நடராசன்ப்.ப்.ப்.ப்..பூ.பூ..வென்று எச்சில் தெறிக்க சிரித்தார்.
“யோவ்! மணி! தமிழை காப்பாத்தணும்னா மொதல்ல கஸ்மாலம், கயித, பேமானி, இஸ்துக்கிணு, போய்க்கிணு, வந்துக்கிணுன்னு சங்கம் வளர்த்த தூய தமிழில் நீ பேசறயே அதை நிறுத்து போதும் தமிழ்பொழைச்சிக்கும்.” ——-மணி எரிச்சலுடன் பார்த்தான்.
“ இவரு இன்னாமோ ஆகாசத்தில இருந்து குதிச்ச மாதிரிதான். இதான்யா நம்ம பிரச்சினையே. நாமளே நம்ம மொழியை இளக்காரமா நெனைக்கிறது. இது இந்தப் பக்கத்தில பேசற வட்டார வழக்குத் தமிழ்யா. இன்னும் கேட்டினா தொண்டைமண்டல தமிழ். வாளா, போளா, ஒன்ற, அச்சோட்டுக்கு, அங்கமார, தோக்காப்பறி, என்னளா?, ன்ற திருநெல்வேலி தமிழை ஆஹா ஓஹோ ன்றீங்களே?. ரெண்டும் ஒண்ணுதான?. அது அவங்க பக்கத்து வழக்குமொழி, இது நம்முடைய வட்டாரத்து மொழி. நம்ம தமிழை நாமளே இப்படி ஆளாளுக்கு பகடியம் பேசாம மதிக்க கத்துக்கணும்யா. கொச்சைப் படுத்தக் கூடாது. ”—மணி நிஜமாகவே வருத்தப்பட்டான்.
“அதவுடுப்பா, உன்னுடைய தமிழ்ச்சங்க ஐடியாந ல்லாத்தான் இருக்கு. முயற்சிக்கலாம்.”—என்றேன் நான்.
“மொதல்ல உறுப்பினர்களைச் சேர்க்கணும். ஆண்டு சந்தா முந்நூறு ரூபான்னு வெச்சிக்கலாம். இன்னா?.”
“அட மணி பக்கா பிளானோடதான் வந்திருக்காப்பல.”
“இன்னா பண்றது ஆங்கிலம் என்பது அறிவு இல்லை மொழின்னு நம்ம பிரகஸ்பதிகளுக்கு புரியலையே.”
இப்போது எங்களுக்கும் இதில் கொஞ்சம் கொஞ்சமாக சுவாரஸ்யம் ஏற்பட ஆரம்பித்தது. இப்படித்தான் எங்கள் கதை துவங்கியது. அடுத்து ஒரு நாலைந்து நாட்களுக்கு கூடிக்கூடி எதையெதை எப்படியெப்படி என்பதுபற்றி பேசியதில் வேகமெடுத்தது. அடுத்த வாரம் உறுப்பினர் சேர்க்கையை ஆரம்பித்தோம். சுறு சுறுப்புடன் வசூலுக்குக் கிளம்பி விட்டோம். நண்பர்கள்வட்டாரம், உறவினர்கள், வழியில்பார்த்தவன், வந்தவன், போனவன், மளிகை, காய்கறி சப்ளை பண்ற வியாபாரிகள், அவரவர்களின் ஆபீஸ் வட்ட நண்பர்கள், ஒருத்தரையும் விடவில்லை. ஆனால் ஒருத்தனும் அவ்வளவு சீக்கிரத்தில் சிக்கவில்லை. அன்றைக்கெல்லாம் சுற்றியலைந்ததில் பதினாலு ஆடுகள்தான் அகப்பட்டன, அதுக்கே நாக்கு தள்ளிட்டுது. அன்றைக்குத்தான் தமிழுக்கு ஆள் பிடிப்பது எவ்வளவு கடினம் என்பதும், இங்கிருக்கும் உணர்ச்சிகரமான தமிழ்…தமிழ், தமிழ் வாழ்க கோஷங்களெல்லாம் அரசியல் என்ற எதார்த்தமும் புரிந்தது. ஒரு கட்டத்தில் முரளியும், நடராசனும் விளம்பரம் பத்தாது என்று சொன்னதினால் அன்றைக்கே ஆளுக்கு ஆயிரம் ரூபாய் முதல் வைக்கலாம் என்று மணி சொல்ல, முரளி அழமாட்டாத குறையாய் ஆரம்பித்தான்.
“ஆயிரமா……?. எம்பொண்டாட்டி குதறிடுவாய்யா. அவளுக்குத் தெரியாம ஒரு ரூபா கூட செலவு பண்ண முடியாதுபா.” —-
“அதை பெருமை மாதிரி சொல்றான் பாரு. ஏம்பா!எல்லாரும் கையெழுத்து போட்டு இவன் வீட்டுக்கார அம்மாவுக்கு ஒரு சிபாரிசு லெட்டர் குடுத்தனுப்பலாம்யா.”
இந்த விஷயத்தில் முரளி ஓபனாக தன் நிலமையை சொல்லிட்டான், ஆனால் இங்க எல்லாருடைய நிலைமைகளும் அதேதான். கடைசியில அவரவர் வீடுகளில் நடந்த விவாத களங்களில் சாம, பேத, தான, தண்ட, பிரயோகங்களில், முதல் மூன்று பிரயோகங்களை நாங்கள் எடுக்க, கடைசி பிரயோகத்தை எங்க மனைவிமாருங்க கையிலெடுக்க, ஏற்பட்ட உள் காயங்களில் இரங்கி ஒழிஞ்சிப் போன்னு தூக்கிப் போட எங்களுக்கு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்து விட்டது. எல்லாம் தமிழுக்காக என்று தேற்றிக் கொண்டோம். ஹும்! நாட்டில் எவ்வளவோ பேர் தமிழுக்காக ரத்தம் சிந்தியிருக்காங்க இது ஒன்றும் பெருசில்லை. முதல் வேலையாக எங்கள் சங்கத்தை உ.வே.சா. தமிழ் சங்கம் என்று பெயர் பதிவு செய்தோம். முக்கியமான சலைகளின் சந்திப்பில் விளம்பரபேனர்வைத்தோம். பிட் நோட்டீஸ் போட்டு கடைத்தெரு முழுக்க விநியோகித்தோம். எங்களுடையஒருமாததேடலுக்கப்புறம்பார்த்தால்மொத்தம்முப்பத்தெட்டுபேர்தான் சேர்ந்திருக்கான்.இந்தஒரு மாச காலத்தில் எங்கள்முதலீடுவேறு கணிசமாககுறைந்துபோயிருந்தது. நாங்க சாப்பிட்டகாபி, கூல்ட்ரிங்ஸ், பிஸ்கட், டிபன், இத்தியாதிசெலவுகளையும்பொது நிதியத்திலதானேபற்றுஎழுதியாவணும்?. எங்கசகாமுரளி இருக்கானே அவன்வடிவேலுவுக்குவாய்ச்சசிஷ்யன்மாதிரி. எப்ப கிளம்பினாலும் பிள்ளையார் சுழி போட்றது அவன்தான்
“ ஏம்பா! கிருஷ்ணாபவன்ல ஆளுக்கு ஒரு ரசவடை, ஸ்பெஷல் மசால் தோசை, காபி,சாப்பிட்டுட்டு அப்புறமாவசூலைஆரம்பிக்கலாம்பா. பசிக்குது.”
“குட்ஐடியா .”— எப்பவும் மணி முரளிக்கு ஆதரவாக ஒரு ஓட்டு போடுவான்.இந்த விஷயத்தில் இரண்டு பேர்களுக்கிடையில் நல்ல புரிதல் இருந்தது.
முறைப்போம். ஆனா கடைசியில அப்படித்தான் நடக்கும். ஓட்டலில் வைத்து நடராசன் இங்க பாஸந்தி சூப்பரா இருக்கும்பா என்று ஒரு பிட்டை போடுவார்.. அவ்வளவுதான் ஐட்டத்தில பாஸந்தியும் சேர்ந்துக் கொள்ளும்.இப்படித்தான் எங்க தமிழ் சேவை ருசியாக போய்க் கொண்டிருந்தது.
“இதுக்கெல்லாம் எனக்கு நேரமேது சார்! உங்களுக்கெல்லாம் சம்பளம் வருது, பூவாவுக்கு கவலை இல்லை. தமிழு, சங்கம்னுசுத்தறீங்க. நாங்க அப்படி இல்ல சாரு. கை ஒழைச்சாத்தான் கஞ்சி.”
“இல்லப்பா, நீ அப்படி சொல்லக்கூடாது. நீ படிச்சவன்தானே?. நம்ம தாய் மொழி கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சிக்கிட்டு வருதுப்பா. நமக்கு நம்ம மொழி மேல பற்று இல்லப்பா. மத்தவங்ககிட்ட பேசறப்போ ஒரு மலையாளி மலையாளத்தில பேசறான், கன்னடத்துக்காரன் கன்னடத்தில பேசறான்.இந்திக்காரன் இந்தியில பேசறான். தமிழன் மட்டும்தான் தமிழ்ல பேசறதில்லை. இங்கிலீஷ் அல்லது தங்லீஷ்ல பேசறான். அதெல்லாம் மாறணும்யா. அதுக்குத்தான் இந்த தமிழ் சங்க முயற்சி.”— சே! நான் சொன்னதில ஒரு அட்சரம் கூட அவன் காதில் ஏறவில்லை. அவன் கணக்கு வேறவாக இருந்தது.
“சரி சாரு நீங்கள்லாம் நம்ம கஸ்டமருங்க. சம்பளகிராக்கியவுட்ரக்கூடாது பாரு. சரி இந்தா முந்நூறு. கைதவறிப் போச்சின்னு நெனைச்சிக்கிறேன்.”
“ஹும்! இது ஒரு எழவு. நேத்து ஆளுங்கட்சிக்காரன் பில்புஸ்தகத்தை தூக்கிக்கிணு வந்துட்டான். முந்தாநாளு சாதிகட்சிக்காரன், நேத்து மத்தியானம் கட்சிமாநாடுன்னு எதிர்கட்சிக்காரன், இதுக்கு நடுவுல அம்மனுக்குக் கூழு ஊத்தறேன் ஆத்தாவுக்குக் கூழு ஊத்தறேன்னு ஒரு கும்பலு, காத்தால கும்பாபிஷேகம்னு ஒரு கும்பலு. சீ! இப்பிடியே ஆளாளுக்கு வந்து வந்து புடிங்கிக்கிணு பூட்டா நாங்க எப்பிடிய்யா பொழைக்கிறது?..”— ஒரு கடைக்காரர் கொடுத்த ரியாக்ஷனில் எங்களை பிச்சைக்காரர்களாக உணர்ந்தோம்.
ஆரம்பத்தில இப்படி முகத்துக்கு நேராகவே சொல்லிட்டு தலையை சுத்திபோட்டவங்ககிட்ட அட போய்யா நீயுமாச்சி உன் சந்தாவுமாச்சின்னு,வாங்காமலேயே வந்து விடுவோம். இப்போதெல்லாம் ஒன்றும் பேசாமல் பொறுக்கிக் கொள்கிறோம். காரியம் பெருசா, வீரியம் பெருசா?. தமிழுக்காக எந்த கஷ்டங்களையும், அவமானங்களையும் தாங்கிக் கொள்வோம் என்று குடைகிற மனசுக்கு சமாதானம் சொல்லிக்கொண்டோம்.
“இன்னாசாரு! தமிழுகிமிழுன்னுகெளம்பிட்டீங்க?. கட்சி ஆரம்பிக்கப் போறீங்களா? சூப்பருபா. மொதல்ல லேங்வேஜ் டாப்பிக்கை கையில எடுத்தீங்க பாரு சூப்பரோ சூப்பருபா.அதான் ஜனங்க கிட்ட சுலுவா பத்திக்கும். பிக்கப் ஆயிடுச்சின்னா சும்மா பணத்தைவாரிக் கொட்டலாம். கவலையேபடாதீங்க இந்த ஜனங்களை இஸுக்கறது சுலுவுபாதெர்தா?. ஓசியில முட்டாயிதர்றேன்னா கூட பத்து பேரு சேர்ந்துப்புடுவான். ஹ..ஹ..ஹா.. இன்னாபேஜாருன்னா மொதலுபோட்டுட்டு அப்புறமாலாபம் பார்க்கணும். பிக்கப் ஆவட்டும் நானும் வந்து சேந்துக்கறேன்பாஸு.”
“அடச்சீ! வாங்கப்பா சனியன்புடிச்ச இந்தாளுகிட்ட பேசினதேதப்புபா.”
அப்படி இப்படீன்னு ரெண்டு மாசத்தில அறுபது ஆடுங்களை பட்டியில் அடைச்சாச்சி. இதிலபடிக்கு பாதி கடன் சந்தா. ஹும்! கடனுக்கு உறுப்பினர்களை சேர்க்கிற ஒரே தமிழ்ச்சங்கம் எங்க உ.வே.சா.தமிழ்ச்சங்கமாத்தான் இருக்கும்.
“தியாகுசார்! இதையெல்லாம் வாராக்கடன் லிஸ்ட்லதான் வெச்சி தள்ளுபடி பண்ணியாவணும்.” ——இப்படி நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதுஎங்கள் பேச்சினூடே ஒருத்தர் வந்து குறுக்கிட்டார்.
“சார்! தமிழ்ச் சங்கந்தான ஆரம்பிக்கிறீங்க?.
“ஆமாம்.”
“மெல்லத் தமிழினிச் சாகும்னு சொல்றாங்களே ஏன் சார். சொல்லுங்க?.”—ஒரு நிமிஷம் திக்கு முக்காடினோம்.
“இங்கிலீஷாலதாங்க. அதான் தமிழை காலி பண்ணப் போவுது பாருங்க. தமிழன் தமிழ் பேசறதே குறைஞ்சிப் போச்சே.”
“ இதுக்கு நடிகர் சிவகுமார் ஒரு இடத்தில சொன்னதை அப்படியே சொல்றேன் கேளுங்க. `இங்கிலீஷ்தாய்யா இப்ப சோறு போடுது. அதான் இங்கிலீஷ் படிக்கிறான். தமிழை சோறு போட வெச்சிப் பாரு அப்ப எல்லாரும் தமிழ் படிச்சிட்டுப் போறான்’. அவரு சொன்னது கரெக்ட்தான சார்?. மொதல்ல பெரிய அளவுல வேலை வாய்ப்புக்கு கம்ப்யூட்டர் மொழியை முழுசா தமிழுக்கு கொண்டாரணும். அதுக்கு முயற்சித்தாலே போதும் சார். ஜனங்க தமிழை படிக்க ஆரம்பிச்சிடுவாங்க.இதுதான் தேவையை (Necessity) யை உண்டாக்கறது.”
“ஆமாம்பா, சார் சொல்றது சரிதான். ஜெர்மனி, சீனா,ஜப்பான், ரஷ்யா, போன்றநாடுகள்லஜனங்களுக்கு இன்னமும் அவங்க தாய்மொழி தவிர வேறு பாஷை தெரியாதுப்பா.அதே சமயம் அவங்க எல்லாத்திலியும் நம்மை மிஞ்சி இருக்காங்களே. அங்கெல்லாம் அவங்கவங்க தாய் மொழியிலதான் கம்ப்யூட்டர் மொழியை படிக்கிறாங்க. ஆனா இங்க ஆள்றவங்க இல்லே இது பத்தி யோசிக்கணும்?. நாம நம்ம லெவலுக்கு செய்யக் கூடியது இன்னா?. தமிழ் வாசிப்பை தூண்ட்றதுதான். அத செய்வோம்”——-இப்படியே பேசிப் பேசி அந்த புது ஆளையும் உறுப்பினராக சேர்த்தாச்சி.
அடுத்த மாச மூன்றாவது வாரத்தில் எங்கள் உ.வே.சா. தமிழ்ச்சங்கத்தின் முதல் கூட்டத்தை நடத்தினோம். முதல் கூட்டமேகெத்தா இருக்கணும்னு ஒரு பார்ட்டிஹாலை வாடகைக்கு எடுத்திருந்தோம். அறுபது உறுப்பினர்களைக் கொண்ட எங்கள் சங்கத்தின் முதல் கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் மொத்தம் இருபத்தி நாலு பேர், எங்களையும் சேர்த்து. நடராசன் அழற மாதிரி ஆயிட்டார்.
“ த்தூ! இன்னைக்கு தமிழன் கிட்ட எந்த சிந்தனைகளும் சீரா இல்லய்யா. விழிப்புணர்வு இல்லாம, எடுப்பார் கைப்பிள்ளையா,இலவசங்களுக்கு விலை போய்விட்ட சமூகமா, சாதி,மத, பிரிவினை குரோதங்கள்தான் நம்ம பலம்னு நெனைச்சிக்கிட்டு திரியறவனா இருக்கான்.இங்க எல்லாத்தையும் செய்துதர இவனுக்கு எங்கிருந்தோ ஒரு ராஜகுமாரன் வரணுமே தவிர இவன் ஒரு சிறு துரும்பையும் அசைக்க மாட்டான். ஆன்னா ஊன்னா விதியை நொந்துக்கிறது, சாமிக்கு பிரார்த்திக்கிறது, ஜோஸ்யக்காரன் கிட்ட படையெடுக்கிறது, இல்லேன்னா குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுத்துக்கிறது இதான் தமிழன். ச்சே! இவங்க தூக்கத்தை எப்படீய்யா கலைக்கிறது?.”
“இல்லபா நாளைக்கு முகூர்த்த நாளுபா, ஜனங்க கல்யாணத்துக்கு போயிட்டிருக்கும்.”
“ என்னை தேத்தறீயா?. அஷ்டமி, நவமி, கிழக்கே சூலம், ராகு காலம், எமகண்டம். ஹும்! தமிழ் சங்கத்துக்கு வர்றதுக்காடா இத்தினி காரணம்?. த்தூ! விளங்கிடும்.”
“சே! நாட்டில மத்த தமிழ் சங்கமெல்லாம் எப்படிப்பா கும்பலை சேர்க்கறாங்க?. டி.வி.யில காட்றானே ஆடிட்டோரியம் முழுக்க இன்னா கூட்டம்?.”
“அதெல்லாம் நாற்பது வருசங்களுக்கு முன்ன ஆரம்பிச்சதா இருக்கும். அப்பல்லாம் வாசிப்பு பழக்கமும் அதிகம், கதை கேக்கறதும் அதிகம்.”
சிறப்பு அழைப்பாளராக ஒரு பிரபல எழுத்தாளரை கூப்பிட்டிருந்தோம். அவருக்காக கூட கூட்டம் சேரவில்லை. எழுத்தாளர் எங்களை பரிதாபமாகப் பார்த்தார்.
“ஆளே இல்லாத வெற்று தரையைக் கூட பார்த்து பேசிடுவேன் என்ற அளவுக்கு நான் இன்னும் பக்குவப் பட்லீங்க. சங்கம் நல்லா வளர்ந்தப்புறம் வெளியாட்களைக் கூப்பிடுங்க. இல்லேன்னா வர்றவன் தன் ஊருக்குப் போயி உங்க சங்கத்தைப் பத்தி கழுவிக் கழுவி ஊத்துவான்.”
“இன்னாடா இந்தாளு கழுவிக் கழுவி ஊத்துவான்னு குழாயடி இலக்கியம் பேசறரு.” –என்றான் மணி ரகசியமாக.
கூட்டம் ஆரம்பித்தது. அந்த பெரியஹாலே வெறிச்சோடிக்கிடக்க நடுவில் ஹாலுக்கு திருஷ்டி மாதிரி இருபத்திநாலுபேரும் நெருக்கமாக உட்கார்ந்திருந்தனர். இந்த கும்பலுக்கு பேசாம கூட்டத்தை மரத்தடியில வெச்சிருக்கலாம். சிலர் கவிதை வாசித்தார்கள். அடுத்ததாக ஒரு தமிழாசிரியர் தொல்காப்பியத்தில் எச்சவியல்பற்றிபேச ஆரம்பித்தார்., அவர்பாட்டுக்கு நான்ஸ்டாப்பாக பேசிக் கொண்டே இருக்க,,பர்வையாளர்கள் அவங்க பாட்டுக்கு தனிஆவர்த்தனமாய் சளசளவென்று ஊர்க்கதைகளை பேசிக்கொண்டிருந்தார்கள். இறுதியில் பிரபல எழுத்தாளர் எழுந்து இலக்கியம் பேசாமல் கழுவி ஊத்திட்டு கிளம்பினார். கூட்டம் சப்பென்று முடிந்தது.நடராசன்குதி குதின்னு குதிக்க ஆரம்பிச்சிட்டார்.
“யோவ்! வந்தவன், போனவனையெல்லாம் உறுப்பினரா சேர்த்தா இதான்யா நடக்கும் அதிலியும் ஓசி, வாராக்கடன்சந்தாவுல வந்தவன்க. அவன் இன்னா முடிச்சி அவுத்தது சொல்லு?. எவனாவது பேச்சை கவனிச்சானா பார்த்தியா?. வரும் போதே தெருக்கூத்துக்கு கித்தான் விரிச்சி எடம் புடிச்சவன்களாட்டம் முறுக்கு, தட்டை, மிக்சர்னு பெருசா பொட்டணம் வாங்கிட்டு வந்துட்டான்க போல.கறக்..முறக்குனுஜரூராஅந்தவேலைதான்யாநடந்திச்சி. தமிழை எங்கே கேட்டான்.”
“இல்லபாகடையில வாங்கினதா இருக்காது.தீபாவளிக்குசுட்டதாஇருக்கும்.” —அவனைஎல்லாரும்புழுமாதிரிபார்த்தார்கள்.
“ரொம்பஅவசியம். கைதட்றதுக்குக்கூடநாமதான் மொதல்லகைத்தட்டிஉசுப்பிவுட்டோம். வர்றவனுங்களுக்குகொஞ்சமாவதுஇலக்கியவாசனைஇருக்கணும்யா. இன்னாபொழப்புடா?.”
“இன்னொரு ஐடியாப்பா. இனிமேல் அறுவதை தாண்டிய வயசானவங்களா பார்த்து புடிக்கலாம்பா. அதிலும் ரிடையர்ட் ஆனவங்க சிலாக்கியம். அவங்களுக்கு வேலை வெட்டி கிடையாது. பொழுது போவணும், பென்ஷன் வர்றதால சந்தா வசூலாவறது சுலுவு. தவறாம கூட்டத்துக்கு ஆஜராயிடுவாங்க.”
“ முட்டாளே! வயசானவங்களுக்கு தமிழ் வாசிப்பை தூண்டுறதாடா நம்ம இலக்கு?.
அடுத்த மாசக் கூட்டத்தை மூணாவது ஞாயிற்றுக் கிழமையன்றுகாலையில எங்க ஊரு ஹைஸ்கூலில் தலைமையாசிரியரின் அனுமதியுடன் நடத்தினோம். உறுப்பினர் எண்ணிக்கை எழுபத்தி நாலாக உயர்ந்திருந்தது. ஏறின பதினாலும் ஓய்வூதியதாரர்கள்.அன்றைக்கு பெருவாரியாக ஆஜரானது மொத்தம்இருபத்தியாறு. கல்யாணத்துக்குப் போயிட்டேன், கருமாதிக்கு போயிட்டேன், உடம்பு சரியில்லை, பாட்டிக்கு திவசம்னு கூட சிலபேர் சொன்னாங்க.
அன்றைக்கு இருபத்தியாறு பேருடன் எங்களுடைய உ.வே.சா. தமிழ்ச்சங்கத்தின் தமிழ் மாநாடு துவங்கியது. சிறப்பு அழைப்பாளராக தமிழாசிரியர் ஒருத்தர் அழைக்கப்பட்டிருந்தார்.
“ஜனங்களை ஈர்க்கிற மாதிரிகூட்டத்தை நடத்துங்க. தன்னால கும்பல் வரும்.”—என்று ஆலோசனை வழங்கினார். நான் பணிவுடன். “எப்படி நடத்தலாம்னு யோசனை சொல்லுங்கய்யா.”
“ கேட்டுக்கங்க முதல் அரைமணி நேரம் ராமலிங்க அடிகளார் அருளிய ஆறாம் திருமுறை, அடுத்த அரைமணிநேரம் பத்துப் பாட்டுல மலைகடுபடாம், அரைமணி நேரம் பெரியபுராணம், அரைமணிநேரம் ஆசாரக் கோவை, போதும். பெரியபுராணத்தை எடுத்துக்கிட்டால் இன்னைக்கெல்லாம் பேசிக்கிட்டிருக்கலாம். ஆண்டாள் பாசுரங்களின் இலக்கிய நயங்களை எடுத்தால்நேரம் போறதே தெரியாதுப்பா.——`குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல். மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி.’– ஆஹா என்னமா சொற்களை கோர்த்து வெச்சிருக்கு?.”—இசையுடன் பாட ஆரம்பித்துவிட்டார். நடராசனுக்கு பொறுக்கவில்லை எழுந்தார்.
“ தமிழ் இலக்கணத்தைவுட்டுட்டீங்களேய்யா. வினைத்தொகை, உயிரளபெடை, ஒற்றளபடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், வினைமுற்று, இரட்டைக்கிளவி…இப்படீ ஒரு மணிநேரம் விலாவாரியா போட்டு தாளிச்செடுக்கலாம்யா.” ——தமிழய்யா குஷியாயிட்டாரு.
“அப்படியா சொல்றீங்க.” —என்று வெள்ளந்தியாய் கேட்டார்.
“ஆமாங்க ஜனங்க தூங்கிரும்.” ——தமிழய்யாடென்ஷனாயிட்டாரு.
“அய்யா! கோவிச்சிக்காதீங்க இதில பேச உங்களுக்கு மேடை கிடைக்கும், கேக்க ஆளிருக்குமா?. சொல்லுங்க. பேச்சைகேட்கிற பார்வையாளர்கள் எப்படிப்பட்டவங்கன்னு பார்க்கணும். தமிழ் வித்துவான்கள் இல்லை, சராசரி ஜனங்க. அவங்ககிட்ட, மலைகடுபடாம், ஆசாரக் கோவை, பெரியபுராணம்னாபிச்சிக்குவான் அய்யா. தப்பா எடுத்துக்காதீங்க தமிழ் சங்கம்னா உங்க அகராதியில சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், மற்ற மறை நூல்கள் மட்டும்தானா?. அதில் இந்த கால இலக்கியங்களுக்கு இடமில்லையா?. புதுமைப்பித்தன், மெளனி, நா.பிச்சைமூர்த்தி, சுந்தர ராமசாமி, தி.ஜா.ரா., லா.ச.ரா., ஜெயகாந்தன், அகிலன், கி.ராஜநாராயணன், சா.கந்தசாமி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், இன்னும் எவ்வளவு பெரிய பெரிய படைப்பாளிகள்?, அவர்களின் படைப்புகள்?. அவற்றையெல்லாம் பேசணும் சார். முதல்ல மக்களை கேட்கவைக்கணும், இலக்கிய ருசியை அவனுக்கு தூண்டணும், வாசிக்க வைக்கணும். அதான் இப்பத்திக்கு முதல் தேவை. கனமானவிஷயங்களைகொடுக்கிறதைபின்னாடிபார்த்துக்கலாம்.” —தமிழாசிரியருக்குரோஷம்பொத்துக்கொள்ள
“அப்ப ரெக்கார்டு டேன்ஸ் வெச்சிக்கலாமா?. கூட்டத்தை சமாளிக்க முடியாது. அம்மாம் கூட்டம் வரும்.”—– தமிழாசிரியரின் குசும்பு இது. நடராசனும் விடவில்லை.
“ உங்களுக்கு ரெக்கார்ட்டேன்ஸ் புடிக்கும்னு நான் என்னத்தைக் கண்டேன்?..”—– நான் எழுந்தேன்.
“ உங்கள் வாதத்தை நிறுத்துங்கள். நான் என்னசொல்றேன்னா அரைமணிநேரம் சங்கஇலக்கியம் பேசலாம், அரைமணிநேரம் சமகால இலக்கியம் பேசலாம்.. ஆதியில இருந்தே கதைகேட்டு வளர்ந்த சமூகம் நம்மளுடையது. அதனால அவசியம் ஒரு சிறுகதை அல்லது ஒரு நாவல் பத்தி பேசலாம், பார்வையாளர்களும் பங்கேற்கின்ற உத்தியாக அதை ஒருதிறனாய்வு மாதிரி கதை போக்கு பத்தி தங்கள் கருத்துக்களை பேசவைக்கலாம். அப்புறம் கவிதைகளுக்கு ஒரு அரைமணி நேரமும். அவைகளின் விமர்சனத்துக்கு கொஞ்ச நேரமும்விடலாம். அப்பப்ப கிராமியபாடல்களை இசையுடன் பாடவைக்கலாம். எப்போதும் நாமளே பேசிக்கிட்டு இல்லாம, அவ்வப்போது வெளியூர்களிலிருந்து பிரபலங்களை அழைத்து வந்து வித்தியாசமான தலைப்புகளில் பேசவைக்கலாம், புதுப்புதுவிஷயங்கள் கிடைக்கும். கூத்துக்கலைஞர்களைக் கூட கூப்பிட்டு அவங்க அனுபவங்களை பேச வைக்கலாம். உறுப்பினர்களுக்கு சின்னச் சின்ன போட்டிகள் வெச்சிகதை, கவிதை எழுத தூண்டலாம்.”——-என்கருத்து மாநாட்டில் ஏகமனதாக ஏற்கப்பட்டது.
“எனக்கு ஒரு ஐடியாப்பா. இன்னிக்கு கலந்துக்கிட்ட பதினெட்டில் நம்ம நாலை தள்ளி மிச்சம் பதினாலு பேர் இருக்காங்க. இதான் அவங்க லிஸ்ட்டு. அவங்களுக்கெல்லாம் செயற்குழு உறுப்பினர்கள் பதவி குடுத்திடலாம்.பதினெட்டு வருகைன்றது நிச்சயமாயிடும். நமக்கும் எடுக்க புடிக்க ஆளு வோணும்.”
ஆனால் அடுத்தமாசக் கூட்ட தேதி வர்றதுக்குள்ள அதிசயம் மாதிரி ஒரு விஷயம் நடந்துவிட்டது. உறுப்பினர் எண்ணிக்கை இருநூற்று ஐம்பதாக உயர்ந்தது. எப்படி எப்படி?. ஆச்சரியமா இருக்கில்ல?. இதுக்கு சூத்திரதாரிகள் நடராசனும், முரளியும்தான். அவர்கள்தான் போயி பேசிப் பேசி, எப்படியோ உள்ளூரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ராஜாராமனை உறுப்பினராக சேர்த்துட்டாங்க. வாராக்கடன் சந்தாவுலதான்னு சொல்லணுமா?. அரசியல்வாதிகளைப் பொறுத்த மட்டில் பணம் என்பது ஒருவழிப் பாதைதானே?. வெளியே வந்தவர்களிடம் எம்.எல்.ஏ.வின் கைத்தடி ஒருத்தர் பிடித்துக் கொண்டார்.
“ தோ பார்பா! தலைவர் வரணும்னா பெருசு பெருசாபேனர்ங்கவெக்கணும் தெர்தா?, சால்வைபோடணும், அவர்பேச்சுபோட்டோவோடஎல்லா பத்திரிகைகளிலும்நியூஸ்வரணும். இதான் கண்டீசனுதெர்தா?.”—– அடுத்தடுத்த நாட்களில் எம்.எல்.ஏ. கையைக் காட்டியவர்களெல்லாம் ஏன் எதுக்குன்னு கேட்காம முந்நூறுரூபா குடுத்து பெயர், போன்நெம்பர், அட்ரஸ் குடுத்து உறுப்பினர்களாக ஆனார்கள். எங்களுக்கெல்லாம் குஷியாகிவிட்டது. நடராசனும், முரளியும் தொடை தட்டினார்கள்.
அடுத்த மாத கூட்டத்தை ஒரு கல்யாணமண்டபத்தில் ஏற்பாடு செய்தோம். சிறப்பு அழைப்பாளராக அதே கழுவி ஊத்திய எழுத்தாளரை அழைத்தோம். எம்.எல்.ஏ. வும் கலந்துக் கொள்வதை சொல்லும் பேனரை அங்கங்கே வைத்தோம். அரங்கு நிறைந்த கூட்டம். பல பேர் தத்தம் மனைவியருடன் வந்திருந்தார்கள். வந்த அந்த எழுத்தாளர் கூட்டத்தைப்பார்த்து திகைத்து நின்றுவிட்டார். எங்களுக்கெல்லாம் சந்தோஷம் பிடிபடவில்லை. அன்றைய கூட்டத்தில் எழுத்தாளர் உற்சாகத்துடன்பேச ஆரம்பித்தார். நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்ற திருநாவுக்கரசரின் பாடல்வரியைச் சொல்லி ஆரம்பித்தவர் தன் உணர்ச்சியுட்டும் பேச்சில் அரங்கை கட்டிப்போட்டார். ஒருத்தனுக்கும் பயப்படாம சமூக அவலங்களை சுட்டிக்காட்டும் நேர்மையாளன்தான் எழுத்தாளன் என்று முழங்கினார். போகிறபோக்கில் அரசின் ஊழல்ஆட்சியைஒருபிடிபிடித்தார். இங்கே எங்களுக்கு வயிற்றில்புளியை கரைக்குது. மணி எரிச்சலாக குமுறினான்.
“த்தூ! ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வை வெச்சிக்கிட்டு இன்னாவில்லங்கமான பேச்சு இது?. இந்த மனுசனுக்கு இங்கிதமே தெரியாதுய்யா.இப்பத்தான் எங்க பார்த்தாலும் எழுத்தாளன் அடிவாங்கற நெலமையா கீதே,சும்மா மூடிக்கிணு இருக்கலாமில்ல?.”—- கீழேடாய்…டாய்…னு குரல் கிளம்பியது. அடுத்து எம்.எல்.ஏ. பேச எழுந்தார். முகத்தில் கனல் வீசுகிறது.
“இன்னய்யா பேசற நீ? எப்பவும் நீங்கள்லாம் பூவாவுக்கு எங்களைதான் அண்டி பொழைச்சாவணும் தெர்தா?. பேச மேடை ஆப்புட்ச்சின்னு உன்னை கடவுள் ரேஞ்சுக்கு தூக்கிடுவியா நீ?. நாங்க இருக்கிறதாலதான் உங்க பொழப்பு ஓடுது. இல்லன்னா நாறிடும். ஹக்காங்! ”—- எங்களுடைய புகழ் பெற்ற எழுத்தாளர் சடக்கென்றுஎ ழுந்து சற்று கோபத்துடன் குறுக்கிட்டார்.
“ தலைவருடையது தவறான வாதம்.”—என்று ஆரம்பித்து கடுமையாக ரெண்டொரு வார்த்தைகளை வீச, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சூடான வாக்குவாதங்களில்.”—- எம்.எல்.ஏ. திடீரென்று பிளாஸ்டிக் சேரை எட்டி உதைத்தார். அதுதான் அவருடைய கைத்தடிகளுக்கான சமிக்ஞை போல. உடனேமூலைக்குமூலைஎம்.எல்.ஏ.வின்கைத்தடிகளும், கைக்கூலிகளும்எழுந்தார்கள்.
“டாய்…டாய்..த்தா!..டாய்!..என்தலைவனையே எதுக்கிறீயாடா? ஒதடாஅவனை. போடு… அடங்குடாபாடூஸ்.”–ரெண்டுமூணுபேர் எம்.எல்.ஏ. வின் ஷொட்டுக்காக எழுத்தாளரைஅடிக்கமேடைக்குஓடினார்கள். நாங்கள் அவர்களைதடுக்கஓடினோம்.
“சார்..சார்..! இருங்க, அவசரப்படாதீங்க.”—நடராசன்வேறமுன்கோபி. அதற்கேற்றாற்பொல கரணை கரணையாக, திடமான ஆகிருதி. ஆறடி உசரம். ஓடிப்போய்அடிக்கஓடியவர்களைமடக்கிப்பிடித்து நெட்டி தள்ளினார்அவ்வளவுதான்.ஒருகும்பல்எங்கநாலுபேரையும்சுற்றிவளைத்தது. எங்களுக்கு
வெலவெலத்துப் போச்சி. பார்த்தால் திடீர்னு ரெண்டு தடியனுங்ககிட்ட உருட்டுக்கட்டை. எப்படீ?. வாய் வறண்டுப் போக நாக்கு பிசறுகிறது. முரளி உஷார் பேர்வழி. முன் ஜாக்கிரதை முனுசாமியாக அடிவிழறதுக்கு முன்னேயே நூற்றிபத்துடெசிபல்களில் ஐய்யயோ….ஐயய்யோ!. கத்த ஆரம்பிச்சிட்டான்.தர்ம அடிவிழறநேரம் எம்.எல்.ஏ. கையை உயர்த்த கும்பல்அடங்கியது. நாங்கள் தலையில் கையை வைத்துக் கொண்டோம்.
“இதுக்குத்தான்அரசியல்வாதியை இலக்கிய சங்கத்தில் சேர்க்கக்கூடாதுபா. கட்சி கூட்டமாக்கிட்டான் பாரு.”—அதையும் மணி என் காதுகிட்ட ரகசியமாகச் சொன்னான். வெளியே கேட்டால் உதைவிழும். எழுத்தாளர் பாவம் ரொம்பபயந்து போய், போக்குவரத்து செலவைக் கூட வாங்கிக்காமல் போய்விட்டார். கருத்து மோதல் வரவேண்டிய மன்றத்தில் வன்முறை. அத்துடன் நாலைந்து மாதங்களுக்கு மேல் யாரும் தமிழ்ச்சங்கத்தின் பக்கமே தலை வைத்துப்படுக்கவில்லை. நாங்களும் வெறுத்துப் போய் கிடந்தோம். எங்களில் மணிக்கும், நடராசனுக்கும், இப்படி சங்கத்துக்கு மூடுவிழா பண்றதில் விருப்பமில்லை. அப்படி முடியவும் முடியாது. முந்நூறு ரூபாய் கொடுத்தவன்லாம் சும்மா வுட்ருவானா?. அதுவும் எம்.எல்.ஏ.வின்கைத்தடிங்களை நினைக்கும் போதே ஒவ்வொருத்தரும் மூணு தடவைக்கு மேல கக்கூஸ் போய் வந்தோம்..
நாலாவதுமாத இறுதியில் பெருமுயற்சியில் உ.வே.சா.தமிழ்ச்சங்கத்தின் அடுத்தகூட்டம் நடந்தது. அன்னைக்கு எம்.எல்.ஏ.ஊரிலில்லை அதனால் கைத்தடிகளும் மிஸ்ஸிங். நான் ஒரு விஷயத்தை சொன்னேன்.
“எம்.எல்.ஏ.வுக்கு ஆயிரத்தெட்டு வேலை கிடக்கும். அவரால எப்பவாவது ஒரு தடவைதான் நம்ம கூட்டத்தில் வந்து கலந்துக்கமுடியும். அப்ப மட்டும் பக்குவமா நடந்துக்கலாம். மத்தபடி அவரை பயன்படுத்திக்கிட்டு சங்கத்தை வளர்த்தெடுக்கிறதுதான்புத்திசாலித்தனம்.”
கூட்டம் ஆரம்பித்தது. எங்களுக்கெல்லாம் ஆச்சரியம். சுமார் ஐம்பது பேர்களுக்கு மேல் வந்திருந்தார்கள்.இந்தமாதக் கூட்டத்தில் வாசிக்கப்படும் கவிதைக்கு தலைப்பு `ஊழல்’ என்றுஏற்கனவேஅறிவிச்சிருந்தோம். நிறையபேர் உரைநடைக்கவிதைவாசித்தார்கள். பரவாயில்லை போகப் போக சரி பண்ணிக்கலாம் என்று நம்பிக்கை வந்தது. ஒருதமிழாசிரியர்தொல்காப்பியத்தில் களவியல் பற்றிநாற்பத்தி ஐந்து நிமிஷம்பேசினார். அடுத்துசிறுகதைவாசிப்பு—எழுத்தாளர்ஜெயகாந்தனின் `அக்கினிப்பிரவேசம்’. எங்களில்மணியும், முரளியும்கவிதைவாசிக்க, நானும், நடராசனும்சிறுகதைபற்றிபேசினோம். இன்னும்சிலர்கூடசிறுகதைபற்றிப்பேசினார்கள். உண்மையில்கூட்டம்எங்களுக்குஒருநம்பிக்கையைத்தந்தது. இதிலே ஒரு விஷயத்தை இந்த நேரத்தில் நான் சொல்லியாவணும். நான் ஒரு வேலை செய்து வைத்தேன். கூட்ட முடிவில் சிற்றுண்டி வழங்கப்படும்னு பிட் நோட்டீஸில் குறிப்பு போட்டிருந்தேன். இன்றைய சிற்றுண்டி செலவு என்னுடையது என்று முறைத்த நண்பர்களின் வாயை அடைத்தேன்.
“ தப்பில்லை, ஜனங்களை ஈர்க்க இதுதான்யா சரியான வழி. நம்மூரில் படைப்பாளிகளும், கவிஞர்களும் அதிகமில்லை என்பதோடு வாசகர்களும் அருகிப்போனது நம்முடைய துரதிர்ஷ்டம். ஜனங்ககிட்டபுத்தகவாசிப்பே குறைஞ்சிபோச்சி. மொதல்ல அவனைவாசிக்க தூண்டணும்.”— இப்படி ஆளாளுக்கு பேசிக்கொண்டிருக்க, நான் குறுக்கிட்டேன்.
“நாமளும் இனிமே டிபன் போட்ருவோம்யா. ஊறுப்பினர்களின்பிறந்தநாள், கல்யாணநாள்ல மாச ம்ஒருத்தர் டிபன் செலவை ஏத்துக்குவோம். டிபன் உபயதாரரை கூப்பிட்டு மேடையேத்தி அவரைப்பத்தி நாலு வார்த்தை புகழ்ந்து பேசுவோம். அதைப் பார்த்துமத்தவங்களுக்கும் அந்த எண்ணம் வரட்டும். ஊரில் வசதியானவங்களைப் பிடிச்சிஸ்பான்சர் பண்ணச் சொல்லுவோம். அதுக்கு எம்.எல்.ஏ.வை உப்யோகப்படுத்திக்கலாம். சரியா?.” —நடராசன் முகத்தில் சுரத்தே இல்லை, சோர்ந்து போனார்.
“இன்னைக்கு ஐம்பது பேருக்கு மேல திரண்டதுக்குக் காரணம் தமிழில்லை, டிபன்தான்னு கேக்கவே வேதனையா இருக்குபா.”—என்றார் நடராசன்.
“யோவ்! ஆதியில இருந்து இன்னைக்கு வரைக்கும் ஜனங்களை கோயிலுக்கு வரவழிக்கவே பிரசாதமா வெண்பொங்கல், சுண்டல், சர்க்கரைப்பொங்கல்னு போட்றோம். தமிழுக்குக் கேக்கணுமா?.இதெல்லாம் சின்னதாய் ஒரு தூண்டல் தான். சலிச்சிக்காதீங்கப்பா தமிழை மீட்டெடுக்கிற நிகழ்வில் சின்ன முயற்சி நம்மளுடையது. அப்படித்தான் இருக்கும்.
உள்ளே சாமி கல்லாலே, உலவும் சாமிசெம்பாலே அன்னம் சாமி இல்லேன்னா எல்லா சாமியும் போம் போம்.
சித்தர் பாடல்.
– கணையாழி – மார்ச் 2018 இதழில் பிரசுரமான கதை.