கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 3, 2023
பார்வையிட்டோர்: 1,877 
 
 

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1

குமாரசாமிக்கு நல்ல பசி.

மத்தியானம், சாப்பாட்டு நேரத்தில் கோட்டைக்கு ஒரு அலுவலாகப் போனவர், மினைக்கெட்டுப் போனார். நேரே கந்தோருக்கு வந்தும் இரண்டரை மணியாகி விட்டது. இனி, வழக்கம் போல கணேஷ் கஃபேக்கு – அங்கே தான் அவருக்கு அக்கௌன்ட் – போய்ச் சாப்பிட்டு விட்டு வருவது முடியாத காரியம்.

இந்த நேரத்திலும் இங்கே கன்ரீனில் சோறு கிடைக்குந் தான். ஆனால், குமாரசாமி சைவம்.

கண்ணாடி அலுமாரிக்குள் பார்த்தார். வடை இல்லை. எள்ளு ‘தலகுளி’யையுங் காணவில்லை. மற்றதெல்லாம் நம்ப முடியாது. மச்சமாயிருக்கும்.

‘தம்பி மரக்கறியாக ஒண்டு மில்லையா?’

கன்ரீன் பெடியன் கட்லட் தட்டைத் தூக்கி நீட்டினான். ‘இது மரக்கறிதான் மாத்தயா.

குமாரசாமி தயங்கினார்.

‘பயப்பட வேணாம், இது சைவம்…..’ என்றான். அரை குறைத் தமிழில்.

தேத்தண்ணிக் கிளாசை இடது கைக்கு மாற்றிக் கொண்டு, ஒரு கட்லட்டை எடுத்தார். நல்லாயிருந்தால் இன்னொன்று எடுக்கலாம் என்ற எண்ணம், திரும்பிய போது வந்தது.

‘ஹலோ கும்….. இங்கே வாருமன்..’

‘ஹலோ….’ சில்வா இருந்த மேசையடிக்குப் போய், காலால் கதிரையை மெல்ல அரக்கிக் கொண்டு உட்கார்த்தார்.

‘இந்தக் கன்ரீன் வரவர மோசம்’ சில்வா சொன்னார்.

இங்க பாரும். ரீ எண்டு சொல்லித் தந்தான். சீனி இல்லை. ஒரே சாயம். படு கைச்சல்.’

உறிஞ்சிய தேநீரை மிடறு விழுங்கியபடியே, குமாரசாமி ‘ம்ம்…..’ என்றார். தலையை மேலுங் கீழுமாட்டிப் புன்னகைத்தார்.

அந்தத் தர்மசங்கடப் புன்னகையை மாறவிடாமலே, கட்லட்டை வாயருகிற் கொண்டு போய், முறுகி மொறு மொறுத்த அதன் தோலை எச்சரிக்கையாய் நுனிப் பற்களாற் கடித்துப் பிய்த்தார்.

ஜன்னல் பக்கத்து மேசையில் என்னவோ, ஒரே ஆரவாரம்.

டனிபாஸ் கத்திக் கொண்டிருந்தான்.

‘அங்கே பாரும்…..’ என்றார் சில்வா, பிறகும்.

‘…பைப்பிலை தண்ணி இல்லையாம். சாப்பிட்டவன்கள் கைகழுவத் தண்ணியில்லையெண்டால் சத்தம் போடுவான்கள் தானே’.

குமாரசாமி திரும்பிப் பார்த்தார். டனிபாஸ் மாத்திரமில்லை, அந்த மேசையிலிருந்த மற்றவர்களும் சேர்ந்து இரைந்து கொண்டிருந்தார்கள். இலையான்கள் மாதிரி, இந்தச் சத்தமும் அரியண்டமாயிருந்தது.

கட்லட்டில் முழுதாய் ஒரு கடி கடிக்கப் போன போதுதான் அது மணத்தது. வெடுக்கு, சரியான மீன் வெடில், குமாரசாமி துள்ளியெழுந்து வாசலடிக்கு ஓடினார். வயிற்றைப் புரட்டிக் கொண்டு வந்தது. துப்பினார். கையிற் கிடந்ததை எறியப் போனவர் எறியவில்லை.

கைலேஞ்சியால் வாயை அழுத்தித் துடைத்த போதே, வந்த ஆத்திரத்தையும் துடைத்துக் கொண்டார். திரும்பிக் கணக்கு மேசையடிக்குப் போனபோது…

‘என்ன, என்ன,கும்?…’ என்று சில்வா கேட்டது அவர் காதில் விழவில்லை. இந்த அமளிகள் ஜன்னலடி மேசையைச் சுற்றியிருந்தவர்களை இங்கே திரும்பச் செய்ததையும் அவர் கவனிக்கவில்லை.

‘இந்தா பார், தம்பி…’ பொடியனிடம் கடித்த கட்லட்டை நீட்டினார். அமைதியாகக் கேட்டார்.

‘மரக்கறியெண்டு சொன்னாய், இல்லையா?’

‘மரக்கறி தான் மாத்தயா’.

அவன் அதை வாங்காமலே பிடிவாதமாகச் சொன்னான்.

இதற்குள் சில்வா எழுந்து வந்துவிட்டார்.

‘என்ன பிரச்சினை, கும்?’

‘இது என்ன பாரும்?’

வாங்கி முகர்ந்து விட்டு, வலு சாதாரணமாக, ‘மாலு’ என்றார் சில்வா.

‘…ஏன், என்ன அதில்’

சில்வாவுக்கு உடனேயே நினைவு வந்தது:

‘ஓ! கும், நீர் வெஜிற்றேரியன் நான் அதை மறந்தே போனேன்’.

‘இது மீன் தான் பொடியா…மீன்..’ என்று சில்வா சொன்ன பிறகுதான் கன்ரீன் பெடியன் கையை நீட்டி அதை கும்மிடமிருந்து வாங்கினான். விரல்களால் அழுத்திப் பிரித்தான். அதைப் பார்க்கவே அருவருத்தது, குமாரசாமிக்கு.

‘பார்த்தியா?…’ என்ற போது அவன் பதில் சொல்லாமல் முணு முணுத்தான். வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது.

‘கணக்கு எழுதியாச்சா?’ குமாரசாமி கேட்டார். அவன் தலையாட்டினான்.

‘ஐம்பது சதம் வீண் காசு…அந்தக் கணக்கை வெட்டி விடேன்.’

‘ஓமோம், மாத்தயாவில் பிழை இல்லை, வெட்டிவிடு…’ என்றார் சில்வாவும்.

‘தேத்தண்ணியோட சமாளிக்க வேண்டியது தான்.’ என்று நினைத்தபடி, இன்னொரு தரம் சொண்டெல்லாவற்றையும் இறுக்கித் துடைத்தார், குமாரசாமி.

‘பாருங்க மாத்தயா, வெட்டிறன்’ – பெடியன் பேனையைத் திறந்தபோது, பின்னாலிருந்து டனிபாஸின் குரல் பலத்துக் கேட்டது.

‘வேண்டாம், வெட்ட வேண்டாம்’.

இவர்கள் திரும்பிப் பார்த்த போது அவன் சொன்னான் – ‘வெட்டத் தேவையில்லை’

இவனுக்கென்ன வந்தது, இதில்? பைத்தியமா?

‘ஏன்?’

குமாரசாமிக்குப் போன கோபமெல்லாம் ஒன்றுக்குப் பத்தாகத் திரும்பி வந்த மாதிரி.

அவன் எச்சிற் கையை வெறும் வட்டிலிற் தட்டி விட்டு எழும்பி வந்தான்.

கும்மின் கேள்வியைக் கவனியாமலே பெடியனுக்குச் சொன்னான் – ‘அது இந்த ஆளுடைய பிழை. வாங்கினபோதே பார்த்து வாங்கியிருக்க வேணும்’.

இந்த பாஸ் பயல் நல்லாய்க் குடித்துவிட்டுச் சாப்பிட வந்திருக்க வேண்டும் என்று குமாரசாமிக்குப் பட்டது.

‘நீ உன்னுடைய வேலையைப் பார்…உனக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை…’

‘என்ன ஓய் சொல்லுறீர்? யாழ்ப்பாணத்திலையிருந்து வந்து, இங்க சண்டித்தனமா விடுகிறீங்கள்?’

கும்மின் இடது கன்னத்தில், அவனது எச்சிற்கை அடையாளம் பதித்தது.

2

காலையில் வந்தவுடன் இந்தக் கதையைக் கேள்விப் பட்டதும் ரமணன் திடுக்கிட்டான். இது நேற்று நடந்திருக்கிறது. நேற்று அவன் லீவு.

‘இவ்வளவும் மட்டுந்தானா, நடந்தது?’

‘இன்னும் என்ன நடக்க வேணும்?’

‘இவ்வளவு மட்டுந் தானெண்டா, அவனுக்கேன் அவ்வளவு கோபம்?’

‘கொஞ்ச நாளைக்கு முந்தி அவன் பத்துரூபா கடன் கேட்க இவர் இல்லையெண்டு சொல்லி இருக்கிறார்’

‘இதைப் பற்றி ஒருத்தருக்கும் றிப்போட் பண்ணேல்லையா?’

‘ம் ஹும்…’

ரமணனுக்கு ஆத்திரமாக வந்தது.

நேரே குமாரசாமியிடம் போனான்.

‘ஏன் அண்ணை, ஏன் றிப்போட் பண்ணாமல் விட்டீங்கள்?’

குமாரசாமி ஒரு நிமிஷம் பேசாமலிருந்து விட்டுப் பிறகு அவனையே திருப்பிக் கேட்டார்-

‘அது வீண் பிரச்சினையளைக் கொண்டு வராதா?’

‘என்ன பிரச்சினையள்?

‘றிப்போட் பண்ணுறதாலை இந்த விஷயம் ஒரு இனவாத விவகாரமாகத் திரும்பிக் கொண்டால் என்ன செய்யிறது? ஆனபடியாலை இவ்வளவோட விடுகிறது புத்திசாலித்தனம் எண்டு சொல்லுறாங்கள்…’

‘ஆர்?’

‘எங்கட ஸெக்ஷன் ஆக்கள் தான்…’

‘மறைமுகமான மிரட்டல்’ கூடவே வந்து நின்ற சந்திரன் கசந்து சிரித்தான்?

‘…இதிலை இனித் திரும்பிறதுக்கு என்ன இருக்கு?’

ரமணன் ஒரு பெருமூச்சுக்குப் பிறகு சொன்னான். ‘ஏன் எல்லாத்தையும் இந்த இனக் கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறாங்கள்? எங்கட ஸெக்ஷனைச் சேர்ந்த ஒருத்தனுக்கு எங்கட தொழிலைச் செய்யிற ஒருத்தனுக்கு ஒரு பிறத்தியான் அநியாயமாகக் கை நீட்டி விட்டானே எண்டு ஏன் பார்க்க முடியுதில்லை?…. அண்ணை இது எப்பிடித் திரும்பினாலும் திரும்பட்டும். அதுக்குப் பயந்து இதெல்லாத்தையும் பொறுத்துக் கொண்டிருக்க வேணுமா?’

‘அதுதானே?’ என்றான். சந்திரனும்.

பென்சிலை உருட்டியபடியே பேசாமலிருந்தார், குமாரசாமி. யோசிக்கிறார் போலும்.

3

ரமணன் தனது இடத்திற்குத் திரும்பிய கொஞ்ச நேரத்தில் அவர் அவனிடம் வந்தார்.

‘நீ சொன்னது சரிதான். தம்பி…’ ஒரு பெருமூச்சுக்குப் பிறகு ஆறுதலாகச் சொன்னார்-

‘ஆனா, எனக்கும் இப்ப காலம் அவ்வளவு சரியில்லை. இந்த வியாழன் மாற்றம் என்ர சாதகப் பலனின் படிக்கு தேவையில்லாத கோளாறுகளைத் தரக் கூடிய காலமெண்டு சொல்லியிருக்கின்றார்கள். – வீண் சண்டை, வம்பு, வழக்கு, கோடு, கச்சேரி எண்டு அலைய இடமிருக்காம்… ஏன் வீண் தொல்லைகளை?’ எழுந்து, தானும் ஒரு அடி போடலாமா என்றிருந்தது, ரமணனுக்கு.

– இதழ் 131, பெப்-மார்ச் – 1979, மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

ஐயாத்துரை சாந்தன் ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 27 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார். யாழ்ப்பாண மாவட்டம், மானிப்பாய், சுதுமலை என்ற ஊரில் வசித்து வரும் சாந்தன் மொறட்டுவ உயர்தொழில் நுட்பவியல் கழகத்தில் பயின்ற குடிசார் பொறியியலாளர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழி எழுத்தாளர். ஆங்கில…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *