தபால் மூலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2024
பார்வையிட்டோர்: 209 
 
 

 (1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“உங்களுக்கு நாக்கு இருக்கிறதா? அப்படியானால் நாலு பேருக்கு நடுவில் நன்றாகப் பேசுவீர்களா? ஒரு சபையிலே பேசத் தைரியம் உண்டா? இல்லையானால் ஏாக்கு இருந்து பிரயோசனந்தான் என்ன? உடனே எங்க ளுக்கு எழுதுங்கள் தபால் மூலமாகப் பேச்சு வன்மையை உங்களுக்குக் கற்பிக்கிறோம்.” 

இப்படி, ஒரு நாள் ‘தினமித்திரன்’ பத்திரிகையிலே விளம்பரம் ஒன்று வந்திருந்தது; எஸ்.எஸ்.எல்.சி. படித்து விட்டு வேலை ஒன்றுமில்லாமல் பொழுது போக்கிக் கொண்டிருந்தேன். என்னுடைய குடும்ப நிலை, உத்தி யோகத்தை எதிர்பார்க்கும்படி என்னை வைக்கவில்லை. பொழுது போவதற்காக நாள் தோறும் ‘ரீடிங் ரூமி’ல் சென்று தினசரிப் பத்திரிகைகளைப் பார்ப்பேன். சமாசாரங்களில் எனக்குக் கவலையில்லை; விளம்பரங்களில் ஒன்று விடாமற் படிப்பேன். ‘தேவை’ என்ற தலைப்பின் கீழ் வருபவைகளில் எனக்கு அதிகக் கருத்து. பெண்ணுக்குப் புருஷன், ஆபீஸுக்குக் குமாஸ்தா, பள்ளிக்கூடத்துக்கு உபாத்தியாயர், மருந்துக்கு வியாதியஸ்தர், ஏமாற்று பவர்களுக்கு ஏமாறுபவர் – இவ்வாறு தேவை வகைகளைத் தான் பார்த்துப் பார்த்து அலுத்துப் போயிருக்கிறேன். பேச்சுவன்மை ஒரு கலையென்பதை நான் அறிவேன். பேச்சு வன்மை ராஜாங்கத்தையே ஆளும் காங்கிரஸ் காரரைப் பாருங்களேன். கிராமங்களில் எல்லாம் காந்தி ஸமாச்சாரத்தைப் பரப்பிப் பரப்பி இப்போது ராஜாங்கக் கோட்டையை அல்லவா பிடித்துக் கொண்டார்கள்? அவர்களிடம் இருக்கும் ஆயுதம் பேச்சு வன்மையேயல்லவா? 

சபையிலே பேசுவதைக் கற்றுக் கொடுப்பதாக வந்த விளம்பரத்தைக் கண்ட அன்றே, “பேச்சு வன்மை நிலையம், மதுரை’ என்ற விலாஸத்திற்கு எழு போட்டேன். இரண்டு நாள் கழித்து ஒருகற்றை விளம்பரங்களும் அறிக்கைகளும் வந்தன. பேச்சு வன்மையிலே யாருக்கும் மோகம் வரும்படி அவ்வளவு ரஞ்சகமாக அந்த விளம்பரங்கள் இருந்தன. அவற்றைத் தயாரித்தவர்களுடைய எழுத்து வன்மையை நான் வியத்து கொண்டாடினேன். 

“பேச்சுதான் மனிதனிடமுள்ள உயர்ந்த சொத்து. மாடு பேசுகிறதா? சிங்கம் பேசுகிறதா? பிரம்மாண்டமான ஸ்வரூபத்தையுடைய யானைதான் பேசுகிறதா? மனிதன் அல்லவா பேசுகிறான்? அந்தப் பேச்சு அவனுக்கு உயர்வைக் கொடுக்கிறது. பேச்சினால்தானே பாஷை உண்டாயிற்று? காவியங்கள் உண்டாயின?”

இப்படி ஓர் அத்தியாயம், மனிதனுடைய வாக்கின் விசேஷத்தைப் பாராட்டி இருந்தது. 

சபைக் கோழையாக இருப்பதைவிட ஒரு சிறையிலே இருந்து விடலாம். நம்முடைய மனசிலே தோன்றுகிற எண்ணங்களை எடுத்துச் சொல்லத் தெரியாமல் இருப்பதைப் போன்ற பலகீனம் வேறு இல்லை. நமக்கு நாக்கை முரடாகவா வைத்திருக்கிறார் கடவுள்? எவ்வளவு லாவகமாக வைத்திருக்கிறார்? நம்முடைய பாஷையிலே தான் ஏதாவது ‘சொட்டு’ச் சொல்ல முடியுமா? ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம்’ என்று தேசிய கவி முழக்குவதை யார் அறியார்?” 

இவ்வாறு பிரசங்கத்தைப் பற்றியும் தமிழ் மொழியின் பிரபாவத்தைப் பற்றியும் ஓர் அத்தியாயம் இருந்தது. 

“உங்களுக்குப் பேச வராதென்று தானே பயப்படு கிறீர்கள்? நீங்கள் வீட்டிலே உங்கள் மனைவி மக்களுடன் பேச வில்லையா; நண்பர்களுடன் பேசவில்லையா? வம்பளக்க வில்லையா? அதே மாதிரியானதுதான் சபையிலே பேசுவதும். உங்களுக்குப் பேசுகிற சக்தி நிறைய இருக்கிறது. அந்தச் சக்தியைச் சரியான வழியிலே திருப்ப வேண்டும். அவ்வளவுதான். அதற்கு ஏற்ற வழி எங்களுக்குத் தெரியும். 

இந்த மாதிரி யாவர்க்கும் அபயப்பிரதானம் செய்யும் அத்தியாயம் அடுத்தபடி இருந்தது. 

தபாலிலே என்ன சொல்லிக் கொடுக்க முடியுமென்று யோசிக்காதீர்கள். இப்போது தபால்மூலம் நடக்காத காரியம் என்ன இருக்கிறது? வீணாக வேலையையும் காலத்தையும் கெடுத்துக் கொண்டு படிப்பதில் லாபம் இல்லை. எங்களிடம் நேரே கற்றுக் கொள்பவர்களைவிடத் தபால் மூலம் கற்றுக் கொள்பவர்களே அதிக பலனை அடைவார்கள்.’ 

இங்ஙனம் தற்புகழ்ச்சிப் படலம் அடுத்தபடி வந்தது. எல்லாம் படித்துப் பார்த்தேன். ‘நாமும் பேச்சு வன்மையை அடையத்தான் வேண்டும் என்று நிச்சயித்துக் கொண்டேன்! அதற்கு வேண்டிய ஸ்ம்ஸ்காரங்கள் ஆயின. 


இந்த ஒரு வருஷத்திலே பேச்சு வன்மையைப் பற்றி எனக்குச் சரியாக 32 – பாடங்கள் தபால் மூலம் அனுப்பப் பட்டன. 

“பேசுபவர்கள் முதலில் பயத்தைப் போக்கிவிட வேண்டும். சபையைக் கண்டால் பயப்படக் கூடாது. 

இந்த விஷயத்தைப் பற்றி இரண்டு பாடங்கள். 

“லளிதமான பாஷையில் உபமான உபமேயங்களோடு பேச வேண்டும், பெரும்பாலும் வீட்டிலே பழகுகிற சாமான்களையும், தினத்தோறு நம் கண்முன் நிகழும் நிகழ்ச்சிகளையும் உபமானமாக எடுத்துப் பேசவேண்டும்.”

இந்த விஷயத்தை விளக்குவன இரண்டு பாடங்கள். 

இன்ன இன்ன புஸ்தகங்களை வாசித்தால் அநுகூலம் உண்டாகுமென்று சொல்லி ஒரு பெரிய புஸ்தக ஜாபிதா எனக்கு அனுப்பப் பட்டது. அதில் ஆங்கிலத்திலே எழுதிய சில புஸ்தகங்களும், தமிழிலே எழுதிய பல புஸ்தகங்களும் காணப்பட்டன. தமிழ்ப் புஸ்தகங்களுக்குள் முக்கால் வரிசை, மதுரைப் பேச்சு வன்மை நிலயத் தலைமை ஆசிரியர் ஸ்ரீமான் குமார சங்கர நாவலரால் எழுதப் பட்டவை. அவற்றிற் சில புஸ்தகங்களின் பெயர் களை உங்களுக்குத் தெரிவிக்கிறேன். 

(1) நாவின் உபயோகம் சாப்பிடுவதுதானா? 

(2) சபாரஞ்சிதம். 

(3) நாவலர் காமதேனு. 

(4) பிரசங்க சிந்தாமணி. 

(5) உபந்யாஸ ரத்தினாகரம். 

(6) சொற்பொழிவுத் துணைவன். 

(7) விரிவுரை விளக்கம். 

(8) வாக்கு வன்மைக்கு வழி. 

மேற்படி புஸ்தகங்களிலே சிலவற்றை வாங்கிப் படித்துப் பார்த்தேன். 

வருஷ முடிவில் பரீக்ஷை ஒன்று நடத்தப் பெறு மென்றும், அதிலே தேர்ச்சி பெறுபவர்களுக்கு நிலயத் தாரால் ‘ஸர்ட்டிபிகேட்’ வழங்கப்படுமென்றும் தெரிய வந்தது. நான் பள்ளிக்கூடத்தில் பரீக்ஷைகளுக்காக மொந்தையுருப் போட்டுப் பழகினவன். ஆகையால் இந்தப் பரீக்ஷைக்கு நான் பயப்படவில்லை. 

பரீக்ஷையும் முடிந்தது. ஒரு மாதம் ஆயிற்று. எனக்கு ஒரு நாள் தபாலில் மிக அழகாக அச்சிடப் பெற்ற ‘ஸர்ட்டிபிகேட்’ ஒன்றும் கடிதம் ஒன்றும் வந்தன. அந்த ‘ஸர்ட்டிபிகேட்’ டைப் பார்த்தவுடன் எனக்கு உடம்பு பூரித்தது.கடிதத்தைப் பிரித்துப் படித்தேன். 

“அன்பார்ந்த ஐயா. 

இன்று இதனுடன் எங்கள் நிலயத்தில் நடத்திய பரீக்ஷையில் தேர்ச்சி பெற்றதற்காகத் தங்களுக்குரிய ஸர்ட்டிபிகேட்’டை அனுப்பி இருக்கிறோம். இந்த வருஷத்தில் தாங்களே யாவரினும் முதல்வராக நிற்கிறீர்கள்.ஏன்? இவ்வளவு வஷங்களாக எங்களிடம் கற்றுக் கொண்டவர்களில் தங்களைப் போன்ற அறிவாளிகளை நாங்கள் கண்டதில்லை. தாங்கள் இவ்வளவு சிறந்த அறிவாளி யென்பதை அறிந்து உவப்பதோடு அன்றி ஒரு வகையிலே பெருமையும் அடைகின்றோம். இவ்வளவு அறிவுள்ள நீங்கள் எங்கள் நிலயத்தின் தொடர்பில்லாமல் இருந்திருப்பின் உங்கள் அறிவு: குடத்தில் உள்ள விளக்குப் போல் அல்லவோ இருந்திருக்கும்? உங்கள் அறிவை இப்போது நாங்கள் தீட்டிக் கூர்மைப் படுத்தி விட்டோம். இனிமேல் நீங்கள் பெரிய பிரசங்கியாகப் போகிறீர்கள் என்பதை முன்ன தாகவே எதிர்பார்த்து அளவற்ற சந்தோஷத்தை அடைகிறோம். 

‘இனி நீங்கள் எங்கேனும் பிரசங்கம் செய்யப் போனால் அப்பிரசங்க அறிவிப்பின் பிரதியொன்றை எங்களுக்கும் அனுப்பச் செய்தால் நாங்கள் உங்க களுடைய அபிவிருத்தியை அறிந்து சந்தோஷிப்போம்.  பெற்ற தாய்க்கல்லவா பிள்ளையின் அருமை தெரியும்? 

“தாங்கள் எங்கள் நிலையத்தினிடத்தில் என்றும் குன்றாத அன்புடயவர்களாக இருக்க வேண்டும். தங்க ளுடைய இளைய நண்பர்களையும் எங்களுக்கு அறிமுகப் படுத்தி வைக்க வேண்டும். உங்கள் பேச்சு வன்மை மேன்மேலும் சிறந்து விளங்குவதாக!” 

எனக்கு இந்தக் கடிதத்தைப் படிக்கும்போது உச்சி குளிர்ந்தது.”என்ன இருந்தாலும் பொறாமை இல்லாமல் ஓரறிஞர் மற்றோர் அறிவாளியை வியந்து பாராட்டுவது மிகவும் அபூர்வமான குணம்” என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன். 


சில வருஷங்கள் கடந்தன. நான் இப்போது ஒரு பணக்காரக் குடும்பத்தின் தலைவனாக இருக்கிறேன். ஸர்டிபிகேட்’ எங்கள் வீட்டுச் சுவற்றிலே தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் பேசுவதென்றால் எனக்கு முள்ளை விழுங்குவது போல இருக்கும். 

ஒரு நாள் எங்கள் ஊரில் நடந்த மாகாநடொன்றில் கௌரவத்தை உத்தேசித்து என்னை வரவேற்புத் தலைவராகப் போட்டு விட்டார்கள். அச்சிட்ட வரவேற்புப் பத்திரம் ஒன்றை நான் வாசித்தேன். அப்பொழுது என் உடம்பு நடுங்கினதும், வேர்வையில் என் சட்டை நனைந்து போனதும், நடுவிலே என் நாக்கு சுருட்டியடித்ததும் எனக்கு ‘ஸ்ர்டிபிகேட்’ தந்தவர்கள் கண்டிருந்தால் பேசாமல் அதை வாங்கிக் கிழித்துப் போட்டிருப்பார்கள். 

என்ன செய்வது? பேச்சு வன்மையைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதத் தெரியும்; பேச வேண்டுமே அதுதான் பூஜ்யம். 


இன்னும் சில வருஷங்களாயின. நான் இப்பொழுது ஒரு ஜில்லா போர்டு தலைவர் பதவியை வகித்தேன். ஒரு சமயம் மதுரையிலே நடைபெற்ற ஒரு சபைக்குத் தட்டுக் கெட்டு என்னை அக்கிராசனாதிபதியாகப் போட்டு விட்டார்கள். நான் வகித்த ஜில்லா போர்டு தலைவர் பதவியை உத்தேசித்து இந்தக் கௌரவம் எனக்குக் கொடுக்கப்பட்டது. ஜில்லா போர்டுக் கூட்டம் வெறும் சந்தை இரைச்சல். அதிலே சமாளிக்கிறது பிரமாதம் அன்று. சீட்டாட்டத்திலே வாதம் செய்து சண்டை போட வில்லையா? அதுபோல ஜில்லா போர்டு கூட்டத்து வாதங்கள் எப்படியோ நடந்து விடுகின்றன. பல” அறிவாளிகள் கூடின சபையிலே பேச வேண்டுமே! 

தலைவர் முன்னுரையை எழுதிக் கொண்டு போனேனோ, பிழைத்தேனோ: இல்லாவிட்டால் என் மானம் போயே போயிருக்கும். நடுவிலே இன்னார் இன்னார் பேசுவார்களென்ற விஷயத்தைக்கூட வரவேற்புச் சபைக் காரியதரிசி படித்து விட்டார். நான் கல்லும் பிள்ளையார் போல நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். 

பின்னுரை சொல்ல வேண்டுமே, என்ன செய்வதும் நான் படித்து ஸ்ர்ட்டிபிகேட்’ வாங்கியதொன்று? அங்கே உதவவில்லை. ‘சகோதரிகளே! சகோதரர்களே! என்று ஆரம்பிக்க வேண்டுமல்லவா? பெண்மணிகளே! கனவான்களே! சொன்னால் நன்றாயிருக்கும் என்று எண்ணினேன்; சொல்ல வாயெடுத்தேன். ‘பெண் வான்களே! கனமணிகளே!’ என்று வந்து விட்டது. கூட்டத்தில் கொல்லென்று ஒரே சிரிப்பு. தட்டுத் தடங்கலோடு ஊறிக் கொட்டிக் கிளறி மூடினேன். ‘சீ சீ ! இந்தப் பாழுங் கௌரவத்துக்கு ஆசைப்பட்டுக் கொண்டு இந்த மாதிரியான காரியங்களில் தலையிடக் கூடாது’ என்று நிச்சயம் செய்து கொண்டேன். 


பேச்சுவன்மை நிலையத்தின் விளம்பரத்தை நான் அடிக்கடி பத்திரிகைகளிலே பார்த்து வந்தேன். ஆதலால், அந்த நிலையத்துக்குப் போய் அங்குள்ள ஆசிரியர்களைப் பார்த்துப் பேசி வரலாமென்று புறப்பட்டேன். 

நிலையம் ஒரு சந்தில் ஒரு சிறிய வீட்டிலே இருந்தது. நான் அங்கே ஒருவரைப் பார்த்தேன். “குமாரசங்கர நாவலர் இருக்கிறாரா?” என்று விசாரித்தேன்.அவர் மிகவும் அவசரமாகப் பல கடிதங்களிற் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார். 

“அவரைப் பார்க்க வேண்டுமே’ என்றேன்.

“நந் – தந் – நந் நான்தான்” என்றார் அவர்.

நான் அவர் பேசுவதைக் கேட்டுத் திடுக்கிட்டேன். 

“பிரசங்க வன்மை நிலைய ஆசிரியரைக் கேட்கிறேன்; தாங்களா?”

அவர் புன்னகை புரிந்தார். 

“நான் பல்லடம்; உங்களிடம் பாடம் கற்றுக் கொண்டேன்” என்றேன். 

“ப -ப-பப பல்லடமா?” என்று அவர் சொல்வதற்குள் அவர் உதடுகள் நூறு தடவை அடித்துக் கொண்டன. பாவம், அவர் திக்குவாயர்! 

“இப்படி வந்து எவ்வளவு காலமாயிற்றோ?” என்று இரக்கத்தோடு கேட்டேன். 

“எப் – ப் – ப் – ப் போதுமே” என்றார். 

நான் பிரமித்துப் போனேன். அப்பொழுது அவர் முன்பு அனுப்பிய விளம்பரங்களுள் ஒன்றில் இருந்த ‘எங்களிடம் நேரே கற்றுக் கொள்பவர்களை விடத் தபால் மூலம் கற்றுக் கொள்பவர்களே அதிகப் பலனை அடைவார்கள்’ என்ற வாக்கியம் நினைவுக்கு வந்தது!

– 1932-42, கலைமகள்.

– கதை சொல்லுகிறார் கி.வா.ஜ., முதற் பதிப்பு: டிசம்பர் 1992, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *