கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 23, 2024
பார்வையிட்டோர்: 508 
 
 

 பேட்ரிக் ஐயா கால் நீட்டிப் படுக்கும் அளவுக்குத்தான் அந்த முதியோர் இல்லத்தின் தனியறை இருந்தது. அது அவருக்கு போதுமானதாகவே இருந்தது. குளியலறையும் கழிவறையும் இணைந்த ஒரு சிற்றறையும் இந்தத் தனியறையோடு இணைந்தே இருந்தது. பேட்டரிக் ஐயாவுக்குச் சமைக்கத் தெரியாது. அதனால் அவருக்குச் சமையலறை தேவைப்படவில்லை. துணிகளைத் துவைத்துத் தர அந்த முதியோர் இல்லத்தில் தனியாட்கள் இருந்ததால் அந்த வேலையும் அவருக்கு இல்லை.  

இரண்டுவேளை காப்பி மூன்று வேளை சைவ உணவு ஆகியன அந்த இல்லத்தின் பொதுக்கூடத்தில் உரிய நேரத்தில் தயார்நிலையில் தரப்பட்டு வந்தன. உணவுக்கும் தங்குவதற்கும் மற்ற செலவுகளுக்குமென பேட்ரிக் ஐயா மாதந்தோறும் ரூபாய் பத்தாயிரம் செலுத்துவதற்குத் தயாராக இருந்ததால்தான் அவருக்கு மட்டும் இந்த முதியோர் இல்லத்தில் தனியறையை ஒதுக்கியிருந்தனர்.  

பேட்ரிக் ஐயா இங்குக் குடியேறி ஒருவாரம்தான் ஆகிறது. இதற்கு முன்பு அவர் தன் பேத்தி வீட்டில் தன் மனைவியோடு தங்கியிருந்தார். அவரின் மனைவி காலமாகி இரண்டு மாதங்கள் ஆகின்றன. அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை அவர் தன் மகள் வீட்டில்தான் இருந்தார்.  

நேற்று மதியம் அவருக்கு மும்பையில் எள்ளுப் பேத்தி பிறந்த தகவல் அலைபேசி வழியாகத் தெரிவிக்கப்பட்டபோது அவர் சூப்பர் நேச்சுரல் பீரியடையும் கடந்து தன் மாணவன் நடத்தும் பள்ளியில் சீனியர் உடற்கல்வி ஆசிரியராகப் புதிதாகப் பணியில் சேர்ந்திருந்தார்.  

எள்ளுப் பேத்தியின் பிறப்பு அவருக்குப் பெரு மகிழ்வைத் தந்தது. மகிழ்ச்சியில் அவருக்குக் கண்ணீரை வந்துவிட்டது. வராதா பின்னே? கல்யாணமாகி பிள்ளை பெறுவதே கடினமாகிவிட்ட இந்தக் காலச் சூழலில், அப்படியே பிள்ளை பெற்று விட்டாலும் தன்னுடைய பேரப் பிள்ளையைப் பார்ப்போம் என்ற நிச்சயம் இல்லாத இந்த நவீன உலகத்தில், ஒருவர் தனக்கு எள்ளுப் பேத்தி பிறக்கிற வரையில் வாழ்கிறார் என்றால் அது கடவுளின் கொடையின்றி வேறு என்ன? நேற்றோடு பேட்ரிக் ஐயா தன்னுடைய ஆயுளில் 80 ஆண்டுகளை ரசித்து கழித்து இருந்தார். இந்தக் கோடை விடுமுறையில் மும்பை சென்று தன்னுடைய எள்ளுப் பேத்திப் பார்க்க வேண்டும் என்று திட்டத்தோடுதான் நேற்றுத் தூங்கி இன்று அதிகாலையில் எழுந்தமர்ந்துள்ளார் பேட்ரிக் ஐயா. 

பிறந்த குழந்தையின் அழுகுரல் கேட்டது. மெல்ல எழுந்து சென்று ஜன்னல் வழியாகப் பார்த்தார். குரல் வாசல் பக்கமாக இருந்து வந்தது. மெல்ல நடந்து சென்று வாசல் கதவைத் திறந்தார். முதியவர் நின்றிருந்தார். சட்டென அடையாளம் தெரியவில்லை. எங்கோ புகைப்படத்தில் பார்க்க முகம். முதியவர் புன்னகைத்தார். அந்தச் சிரிப்பு தன் தந்தையின் சிரிப்பைப் போலவே இருந்ததால் பேட்ரிக் ஐயாவின் மூளை விழித்துக் கொண்டது. இந்தச் சிரிப்பு பழைய புகைப்படத்திலிருந்த சிரிப்பு. ஆண்டுதோறும் தன் வீட்டில் அப்பா படையல் வைத்து வணங்கும் புகைப்படத்தில் மங்கலாகத் தெரியும் சிரிப்பு. பேட்ரிக் ஐயா அந்த முதியவரை அடையாளம் கண்டுகொண்டார்.  

“தாத்தா வாங்க! வாங்க தாத்தா, வாங்க!” 

தாத்தா உள்ளே வந்தார். அவருக்குப் பின்னேயே பாட்டியும் வந்தார். அவரைத் தொடர்ந்து பேட்டரிக்கின் அப்பாவும் அம்மாவும் வந்தனர். எல்லோரையும் தன்னுடைய கட்டிலில் அமரச் செய்தார். பின்னர் கொலுசு சத்தம் கேட்டது. பேட்டரிக் ஐயாவின் மூத்த அக்கா வாசலுக்கு வந்து நின்றார். 

“உள்ள வாக்கா! உள்ள வா!. இப்பத்தான் நம்ம அப்பா, அம்மா, தாத்தா பாட்டி எல்லாம் வந்தாங்க. உள்ள வாக்கா!” 

மூத்தா அக்காவுக்குப் பின்னால் வரிசையாக பேட்டரிக் ஐயாவின் ஏழு அக்காமார்களும் வந்து அந்தச் சிற்றறையை நிறைத்தபடி நின்றனர். வாசலில் யாரோ செருப்புகளைக் கழற்றும் சத்தம் கேட்டது. பேட்ரிக் வாசலைப் பார்த்தார். மூத்த அக்காவின் கணவர் நின்றிருந்தார். அவருடன் பேட்டரிக் ஐயாவின் ஏழு அக்காமார்களின் கணவன்மார்களும் வரிசையாக நின்றிருந்தனர். 

“வாங்க மாமா! வாங்க! வாங்க! எல்லாரும் வாங்க. உள்ள வாங்க” 

அந்தச் சிறிய அறைக்குள் ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு நின்றனர். பேட்டரிக் ஐயா வாசலில் நின்றுகொண்டார்.  

“குழந்தே! பேட்ரிக்!  நீயும் உள்ளே வாயேன். எங்கிட்ட வாப்பா. வா. கட்டில்ல உட்காரு” என்று தந்தை அழைத்ததும் வேறு வழியின்றி அந்தக் கூட்டத்தை இடித்துக்கொண்டு, தன் தந்தையை நோக்கிச் செல்ல முயன்றார். 

அம்மா, “நீ அங்கேயே இருப்பா. ஏங்க! இப்போதைக்கு உள்ள வர வேண்டாம். இன்னும் கொஞ்ச நாள் வெளியேயே இருக்கட்டும்” என்றார். உடனே தாத்தா, “போதும். இனியும் தாங்காது. அவன் உள்ள வரட்டும். இன்னைக்கே அவனும் வரட்டும்” என்றார்.  

‘உள்ளே செல்வதா, வேண்டாமா?’ என்ற குழப்பத்தில் இருந்த பேட்டரிக் ஐயாவை இடித்துத் தள்ளியபடியே, “எப்பவும் வாசல்லயே நில்லுங்க. வெளியேயும் போகாம உள்ளேயும் வாராம” என்று முனங்கிக் கொண்டே உள்ளே வந்தார் பேக்டரிக் ஐயாவின் மனைவி. 

அடுத்த சில நிமிடங்களில், “இங்க பாருமா, மாமாவை. வழியையே விடாம நின்னுகிட்டு, இந்த வயசுலயும் அக்கா மகள்களோட விளையாடிக்கிட்டு இருக்காரு” என்று செல்லமாகக் கோபித்துக்கொண்டு பேட்ரிக் ஐயாவின் 16 அக்கா மகள்களும் வரிசையாக அறைக்குள் நுழைந்தனர். அவர்களுக்குப் பின்னால் 12 அக்கா மகன்களும் உள்ளே வந்தனர். அவர்களைத் தொடர்ந்து பேட்ரிக் ஐயாவின் மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் வந்தனர். கடைக்குட்டி மகள் மட்டும் வரவில்லை. ‘அடுத்து யார் வருகிறார்?’ என்ற எதிர்பார்ப்புடன் வாசலில் எட்டிப் பார்த்தார் பேட்ரிக் ஐயா.  

யாரும் வரவில்லை. ஆனால், எங்கோ பிறந்த குழந்தையின் அழுகுரல் கேட்டது. அது தன் எள்ளுப்பேத்தியின் குரல்தான் என்று நம்பினார் பேட்டரிக் ஐயா. வாசலில் எட்டி எட்டிப் பார்த்துத் தேடினார். கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அறைக்குள் பார்த்தார். மூட்டைகளை அடுக்கி வைத்ததுபோல மனித உடல்கள் நிமிர்ந்த நிலையில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அவருக்குத் தோன்றியது. எல்லா உடல்களும் அசைந்தசைந்து பேசின. சிரித்தன. பேட்டரிக் ஐயாவுக்கு மூச்சுத் திணறியது.  

உடல்களை விலக்கித் தள்ளி நுழைந்து கழிவறைக்குள் சென்றார். அவர் உடல் வியர்த்திருந்தது. முகத்தைக் கழுவினர். லுங்கியை அவிழ்த்துவிட்டு நேற்று கழற்றித் தொங்க விட்டிருந்த டி-ஷர்ட்டையும் ஜீன்ஸ் பேண்டையும் அணிந்து கொண்டார். வெளியே வந்து உடல்களை விலக்கி விலக்கித் தள்ளிக்கொண்டே வாசல்வரை வந்தார்.  

அப்போது அவரிடம், தாத்தா, “பேரா! எங்க போற?” என்று கேட்டார். 

உடனே பாட்டி, தன் கணவரை முறைத்துப் பார்த்துவிட்டு, “போறப்பவே எங்க போறேனா கேட்கிறீங்க? உங்களுக்கு கொஞ்சமாவது புத்தி இருக்கா? இப்படி என்னையக் கேட்டுக் கேட்டுத் தானே எதுக்கும் உருப்படாம ஆக்கிட்டீங்க!” என்றார். 

“நீ சும்மா இரு” என்றார். 

பேட்டரிக் ஐயா புன்னகைத்துக்கொண்டே, “தாத்தா! நான் டீ சாப்பிடப் போறேன்” என்றார். 

“சரிப்பா, வரும்போது சுருட்டு வாங்கிட்டு வா!” என்றார். 

உடனே பாட்டி, “இந்தப் புகையை இழுத்து இழுத்துத்தானே என்னைய விட்டுட்டுச் சீக்கிரமாவே போயிட்டீங்க? இன்னுமா இதையே கேக்குறீங்க?” எனறு சினந்தார். 

“ நீ சும்மா இரு” என்றார் தாத்தா. 

தாத்தா நான் ஹாலுக்குத்தான் போறேன். அங்கதான் டீ வைச்சிருப்பாங்க. அங்க இன்னும் டீ வைக்கலையின்னாத்தான் நான் வெளியே போயி டீ குடிப்பேன்” என்று கூறிக்கொண்டே, அறையைவிட்டு வெளியேறினார். 

உடனே, பேட்டரிக் ஐயாவின் கடைக்குட்டி அக்காவின் மகள் வாசற்கதவைப் பிடித்து பாதி அடைத்தவாறு, தலையை மட்டும் வெளியே நீட்டி, “மாமா! எனக்கு மல்லிகை பூ” என்று கேட்டார்.  

உடனே பேட்டரிக் ஐயாவின் மனைவி எழுந்து வந்து, “நீங்க டீய மட்டும் குடிச்சிட்டு வாங்க” என்று கூறிவிட்டு, கதவினை முழுவதுமாகப் அடைத்தார்.  

வாசலில் நின்றிருந்த பேட்டரிக் ஐயா தான் தனித்து விடப்பட்டதாக உணர்ந்தார். ‘தான் பிறந்ததுமுதல் பார்த்து வந்தவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை’ என்பதை நினைத்ததும் அவருக்கு மன அழுத்தம் கூடியது. அவரின் பெற்றோர், மனைவி, பிள்ளைகளில் கடைக்குட்டி மகள் தவிர யாருமே இப்போது உயிருடன் இல்லை. பேட்டரிக்கின் நண்பர்களும் அவர்களின் பிள்ளைகளும்கூட இப்போது உயிருடன் இல்லை. வயது மூப்பிலும் நோய்வாய்ப்பட்டும் இருந்தவர்களையும்கூட கொரோனா துடைத்தழித்துச் சென்றுவிட்டது. பேட்ரிக் ஐயா மட்டுமே தப்பியது எப்படி? அது கர்த்தருக்கே வெளிச்சம்! 

முதியோர் இல்லத்தில் காப்பி என்னும் தயாராகவில்லை. ‘தன் ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் பணம் இருக்கிறதா?’ என்று தேடினார் பேட்ரிக் ஐயா. ஒரேயொரு பத்து ரூபாய் நாணயம் இருந்தது. டீ 12 ரூபாய். ‘அதனால் என்ன? ‘சீனியர் மோஸ்ட் சிட்டிஷனுக்குத் தள்ளுபடி தா!’ எனக் கேட்கலாம் அல்லது ‘டீயின் அளவினைக் குறைத்துக் கொள்’ எனக் கூறிவிடலாம்’ என்று நினைத்துக்கொண்டு வேகமாக வெளியே நடக்கத் தொடங்கினார் பேட்ரிக் ஐயா. 

செம்மண் சாலையில் இறங்கியதும் ஜன நெரிசல் மிகுந்திருந்ததை உணர்ந்தார். சாலையின் ஓரமாகவே நடந்தார்.  

காலையில் வெறும் வயிற்றில் பச்சை முட்டையைக் குடிக்கும் பழக்கம் பேட்ரிக் ஐயாவுக்குப் பத்து வயதிலேயே தொடங்கிவிட்டது. குடித்ததும் ஓட்டமும் நடையுமாக ஜிம்முக்குச் செல்வார். ஆசானிடம் வாழ்த்து பெற்று, சிறாருக்கான கர்லாக்கட்டையை எடுத்துச் சுழற்றத் தொடங்கி விடுவார். தொடர்ந்து இரண்டு மணிநேரங்கள் தன் கையில் கிடைக்கும் அத்தனை உடற்பயிற்சி உபகரணங்களையும் பயன்படுத்திவிட்டு ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு வருவார். ஒரே ஆண் வாரிசு என்பதால் மூன்று வேளைகளும் அவருக்குச் சுடு கஞ்சி அல்லது சுடுகளி, எப்பவாவது நெல்லுச்சோறு கிடைத்தே தீரும். வயிறுமுட்ட உண்ட பின்னர் நேராகப் பள்ளிக்கூடம். அவர் பள்ளியில் முதன்மையான விளையாட்டு வீரன் என்பதால், ‘அவர் படிக்கவே தேவையில்லை’ என்று ஆசிரியகள் உட்பட தலைமை ஆசிரியரும் முடிவு செய்துவிட்டனர்.  

18 வயது நிறைவடைந்ததும் ஆணழகன் போட்டியில் பங்கேற்றார். உடலுக்கு வலுவேற்றி 20 வயதில் போட்டியில் வென்றார். ஹிந்தி திரைப்படங்களைப் பார்த்து ‘கிட்டார்’ இசைக்கருவியின் மீது காதல்கொண்டு கிட்டாரை இசைக்கப் பழகினார். வீட்டில் கிட்டாரும் பெரிய கர்லாக்கட்டையும் வாங்கி வைத்தார். கல்லூரிப் படிப்பை முடித்ததும் திருமணம். பின்னர் விளையாட்டுத்துறை ஆசிரியருக்கான பட்டப்படிப்பு. தனியார்ப் பள்ளியில் வேலை. விளையாட்டிலும் இசையிலும் மாணாக்கரை உருவாக்குவதையே தன் வாழ்நாள் இலக்காக ஆக்கிக்கொண்டார்.  ஊர் ஊராக இசைக்கச்சேரி, விளையாட்டுப் போட்டி எனச் சுற்றத் தொடங்கி நிலையற்ற பல்வேறு பணிகளில் அமர்ந்தும் பறந்தும் இளைப்பாறியும் கழித்தார் தன் இளமையை. பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னரும் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருந்தார் பேக்டரி ஐயா. 

தார்ச்சாலை வந்தது. அதில் வாகனப் போக்குவரத்து மிகுந்தது. நடைபாதையில் கடைகள் நீட்டி வைக்கப்பட்டிருந்தன. மிகுந்த கவனத்தோடு நடந்தார். எதிர்ப்புற சாலையின் வலது மூலையில்தான் டீக்கடை இருந்தது. சாலையைக் கடப்பதற்காக நின்றிருந்தார். ஒரு நொடிகூடப் போக்குவரத்து குறையவில்லை. பேட்ரிக் ஐயா நின்று கொண்டே இருந்தார். அவர் கண்கள் சாலையில் போவோர் வருவோரையே பார்த்துக் கொண்டிருந்தன. யாரும் தனித்துச் சொல்லவில்லை. எல்லோரும் யாருடனோதான் சென்று கொண்டிருந்தனர். தான் மட்டும் தனித்து நிற்பதாக உணர்ந்தார்.  

உடனே அவர் தனக்குள் ‘எனக்குத்தான் என் அறை நிறைய ஆட்கள் இருக்கிறார்களே!’ என்று நினைத்ததும் அவரிடம் இருந்த தனிமை உணர்வு மெல்ல மெல்ல மறைந்து நீங்கியது. அவரால் சாலையைக் கடக்கவே முடியவில்லை. ‘டீ வேண்டாம்’ என்று முடிவுக்கு வந்தார். திரும்பி முதியோர் இல்லத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார். 

தார்ச்சாலையைக் கடந்து செம்மண் சாலைக்கு வந்தார். தெருமுனையில் சிறுவன் சைக்கிள் கேரியரில் பூக்கூடையை வைத்துக்கொண்டு பூக்களை விற்றுக்கொண்டிருந்தான். அவர் அந்தச் சிறுவனை நோக்கிச் சென்றார்.  

அந்த பத்து ரூபாய் நாணயத்தை எடுத்து அவரிடம் நீட்டி, “மல்லிகை பூ தா” என்று என்றார்.  

அவன் நாணயத்தை வாங்கிப் பார்த்துவிட்டு ஏளனமாக, “பத்து ரூபாய்க்கு மல்லி பூ வா? நாலு பூ தாரேன். அதைக் காதுல வச்சுக்கிட்டு போ, பெருசு” என்றான்.  

அவன் மீது சினம்கொள்ளாமல், “சரி தா” என்றார்.  அவன் எரிச்சலுடன் ஓர் இனுக்கு மல்லிகைச் சரத்தைக் கொடுத்தான். அதனை வாங்கிக்கொண்ட அவர் செம்மண் சாலையைக் கடந்து முதியோர் இல்லத்தின் வாசலுக்கு வந்தபோது காபி மணம் கமழ்ந்தது. உள்ளே நுழைந்தார். 

நான்கு பெரியவர்கள் சேர்ந்தமர்ந்தபடி காப்பியைப் பருகிக் கொண்டிருந்தனர். ஒருவர் மடியில் பாதி விரித்த நிலையில் தினத்தந்தி நாளிதழ் இருந்தது. மற்றொருவர் கையில் மடித்த நிலையிலேயே தி ஹிந்து ஆங்கில நாளிதழ் இருந்தது. அவர்களுக்குச் சற்றுத் தள்ளி அமர்ந்தபடி முதிய பெண்மணிகள் அமர்ந்து காப்பியை ஊதி ஊதிக் குடித்துக்கொண்டிருந்தனர். ‘காப்பியைக் குடிக்கலாமா, வேண்டாமா?’ என்று சிந்தித்தார் பேட்ரிக் ஐயா. அந்தப் பெண்மணிகளுள் ஒருவராக இருந்த கேரளப் பெண் பேட்ரிக் ஐயாவின் வலது கையில் இருந்த மல்லிகை இனுக்கைப் பார்த்தார். அனிச்சையாகத் தன் இடக்கையால் நரைத்து, எலிவால்போல் நீண்டிருந்த தன் கூந்தற்கற்றையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டார். ஒருகாலத்தில் சரஞ்சரமாகச் சூட்டிக்கொண்ட அடர்ந்த கருங்கூந்தல் அது. 

முதியோர் இல்லப் பணியாளர் முத்து அந்தப் பக்கமாகக்  கடந்து சென்றார். அவரைப் பார்த்ததும் பேட்ரிக் ஐயாவுக்கு,  ‘விருந்தாளிகளுக்குக் காப்பி தரலாமே!’ என்று ஒரு யோசனை வந்தது. உடனே முத்துவைக் குரல் எழுப்பியும் கைகாட்டியும் அழைத்தார். 

“என்ன சார்?” 

“என் ரூமுக்கு விருந்தாளிங்க வந்திருந்தாங்க”. 

 “ஓகே”. 

“அவங்களுக்குக் காபி வேணும்”. 

“சரிங்கையா. எத்தனை பேருங்க சார்?” 

“ஒரு 50 பேர் இருப்பாங்க” 

“50 பேரா? வந்துட்டாங்களா?”. 

“வந்தாச்சு” 

“எப்ப? நான் பார்க்கலையே!” 

“காலையிலேயே. விடிஞ்சதுமே வந்துட்டாங்க”. 

“சத்தமே கேட்கலை. அம்பதுபேரும் அமைதியாவா இருக்காங்க? மொட்டை மாடியிலே இருக்காங்களா? 

“இல்லை என் ரூம்ல. 

“உங்க ரூம்லயா? ஐம்பது பேருமா? இல்ல, உங்க ரூமுக்கு முன்னாடியா? நான் அந்தப் பக்கமாத்தானே வந்தேன்!” 

“இருக்காங்கப்பா. அவுங்கள உட்கார வச்சுட்டுத்தான் நான் டீ சாப்பிடவே போனேன். ரோடவே கிராஸ் பண்ண முடியலை. அதான் திரும்பி வந்துட்டேன்”. 

“சரிங்கையா, 50 காப்பின்னா கொஞ்சம் லேட் ஆகுமே” 

“சரி, பரவாயில்லை” 

“காசு?” 

“ரூம்ல இருக்கு”. 

“சரிங்கய்யா, நான் காபி கொண்டு வரும்போது காசு வாங்கிக்கிறேன். ஒரு அரை மணி நேரம் ஆகும்” 

 “சரி”. 

பேட்ரிக் ஐயா தன் அறைக்குச் சென்றபோது வாசற்கதவு திறந்திருந்தது. உள்ளே யாரும் இல்லை. ‘சொல்லாமல் கொள்ளாமல் போயிட்டாங்களா!’ என்று நினைத்துக்கொண்டே கட்டில் மீது அமர்ந்தார். தன் வலது கையில் இருந்த மல்லிகைச் சர இனுக்கைப் பார்த்தார். ‘இதை என்ன செய்ய?’ என்று நினைத்தார். அதை எங்கும் வைக்க அவர் விரும்பவில்லை. அவருக்குத் தலைசுற்றுவது போல இருந்தது. கட்டிலில் கால்நீட்டி, நிமிர்ந்து படுத்தார். தன் வலது கரத்தை நெஞ்சின் மீது வைத்துக் கொண்டார். மூச்சு வாங்கியது.  

யாரோ ஓர் இளைஞன் தனக்கு அருகில் நின்றுகொண்டு வியர்க்க விறுவிறுக்க கர்லாக்கட்டையைச் சுழற்றிக் கொண்டிருப்பதையும் அவனுக்கு எதிர்த்திசையில் ஓர் இளைஞன் மிகுந்த மகிழ்ச்சியுடன் முழுமையான அலங்காரத்துடன் இளையராஜாவின் காதல் பாடலைத் தன் கிட்டாரில் வாசித்துக் கொண்டிருப்பதையும் அவரால் பார்க்க முடிந்தது. அவரின் கால்மாட்டுப் பகுதியில் ஒரு விழா மேடை. மேடையில் ஓர் இளைஞன். எண்ணெய் தேய்க்கப்பட்ட தன் வெற்றுடல் தசைகளை வளைத்தும் நெளித்தும் முறுக்கியும் தன் ஆண்மையை வெளிப்படுத்தினான். அவரின் தலைமாட்டுப் பகுதியில் ஓர் இளைஞன் அமர்ந்து, தன்னைவிட வயதில் இளைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் கிட்டார் இசைக்கக் கற்றுக் கொடுக்கிறான். பேட்ரிக் ஐயா தன் அறை முழுவதும் கிட்டார் இசையால் நிறைவதையும் உணர்ந்தார். அவரின் உடற்தசைகள் முறுக்கேறி மேலும் மேலும் சுருதி கூட்டப்பட்ட தந்திக்கம்பிகள் ஓர் எல்லைக்கு மேல் இறுக்கம் தாழாமல் அறுந்து தெறிப்பதைப்போல அவர் தன் உணர்ச்சிப் பெருக்கால் சுருதி கூடி சுருதி கூடி உயிர் அறுபட்டார். வலது கை நெகிழத் தொடங்கியது. விரல்கள் மல்லிகையை அங்கேயே நழுவ விட்டு இறங்கிச் சரிந்தன. வலதுகை அவர் நெஞ்சில் இருந்து இறங்கிக் கட்டிலில் விழுந்தது. 

முக்கால் மணிநேரம் கழித்து முத்து காபி கேனுடனும் 50 பேப்பர் கப்புகளுடனும் பேட்ரிக் ஐயாவின் அறைவாசலுக்கு வந்தபோது அறைக்குள் கட்டிலின் மீது பேட்ரிக் ஐயாவின் உடலும் அதன் நெஞ்சுப் பகுதியில் ஓர் இனுக்கு மல்லிகைப் பூச்சரமும் இருந்தன.  

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *