கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 18, 2013
பார்வையிட்டோர்: 14,326 
 
 

ஆங்கில மூலம்: சீமமாண்டா என்கோஸி அடீச்சி
தமிழில்: ஜி. குப்புசாமி

நைஜீரியாவின் இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் முதன்மையானவர். நைஜீரிய இலக்கியவாதிகளின் பிதாமகரான சினுவா ஆச்சிபீ, நோபல் பரிசு பெற்ற வொலே சொயிங்கா, மிகப்பிரபலமான பென் ஓக்ரி போன்ற மகத்தான கலைஞர்களை 1977இல் பிறந்த அடிச்சீ தன் முதல் நாவலான Purple Hibiscus மூலம் மிக எளிதாகக் கடந்து சென்றிருக்கிறார். நைஜீரிய ராணுவம், ரத்தக்களறியான போரில் நைஜீரியாவின் எண்ணெய் வளமிக்க பயாஃப்ரா பகுதியின் தனிநாட்டுக்கான-சுதந்திரத்திற்கான கனவைச் ஆங்கில – அமெரிக்க உதவியுடன் கோரமாகச் சிதைத்ததை, அந்த வருடங்களில் பிறந்தே இராத இந்த இளம் எழுத்தாளர் தனது முதல் நாவலில் பதிவு செய்தது உலக இலக்கிய அரங்கில் முக்கியமான நிகழ்வு. தற்போது அமெரிக்காவில் வசித்து வந்தாலும் இன்றைய நைஜீரியாவைத் தனது சிறுகதைகளில் தொடர்ந்து படம் பிடித்துவருபவரின் கதைகளில் மேற்கில் குடியேரிய நைஜீரியர்களின் அடையாளச் சிக்கல்கள் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

Cell One என்ற இக்கதை ‘The NewYorker ஜனவரி 29, 2007’ இதழில் வெளிவந்தபோதே பரவலான கவனத்தைப்பெற்றது. இவரின் இரண்டாவது நாவல் Half of a Yellow Sun ‘ஆரஞ்சு விருது’ பெற்றது. The Thing Around your Neck என்பது இவரது சிறுகதைத் தொகுப்பு.

எங்கள் வீட்டில் முதல்முறை திருடியது எங்கள் பக்கத்து வீட்டுக்காரப் பையன் ஒசிட்டா. உணவறை சன்னல் வழியாக இறங்கி, எங்கள் டிவி, விசிஆர், அப்பா அமெரிக்காவிலிருந்து வாங்கி வந்திருந்த பர்ப்பிள் ரெயின், த்ரில்லர் வீடியோ டேப்புகள் போன்றவற்றைத் திருடிக்கொண்டு போயிருந்தான். இரண்டாம்முறையாக எங்கள் வீட்டில் திருடியது என் அண்ணன் நாமாபியா. கதவை உடைத்துத் திருடன் வந்ததைப்போல நாடகமாடிவிட்டு அம்மாவின் நகைகளைத் திருடிச் சென்றான். அது நடந்தது ஒரு ஞாயிற்றுக்கிழமையில். என் பெற்றோர்கள் எங்கள் சொந்த ஊரான எம்பெய்ஸியில் தாத்தா பாட்டியைப் பார்க்கச் சென்றிருந்தார்கள். நாமாபியாவும் நானும் சர்ச்சுக்குத் தனியாகச் சென்றோம். அம்மாவின் பூஜோ 504 காரை அவன் ஓட்டிவந்தான். சர்ச்சில் வழக்கம்போல ஒன்றாக உட்கார்ந்தோம். ஆனால் ஒருவரையொருவர் சீண்டிக்கொள்ளவோ எதிரில் இருந்தவரின் அசிங்கமான தொப்பியையோ கந்தலான கப்தானையோ பார்த்துச் சிரிக்கவோ இல்லை. அதற்குக் காரணம் வந்து உட்கார்ந்த பத்து நிமிடங்களிலேயே நாமாபியா என்னிடம் ஒரு வார்த்தையும் செல்லாமல் எழுந்து வெளியே சென்றுவிட்டதுதான். பாதிரியார், ‘திருப்பலி ஆராதனை நிறைவுற்றது. அமைதியாகக் கலையலாம்’ என்று சொல்வதற்குச் சற்று முன்பாகத் திரும்பி வந்தான். நான் கொஞ்சம் கோபத்தில் இருந்தேன். புகைபிடிக்க அவன் வெளியே சென்றிருக்கலாம் அல்லது கார் கையில் இருந்ததால் ஏதாவது பெண்ணைச் சந்திக்கப் போயிருக்கலாம் என நினைத்தேன். ஆனால் எங்கே போனான் என்பதைச் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். வீட்டிற்குத் திரும்பியபோது அமைதியாகவே வந்தோம். வீட்டின் நீளமான வண்டிப்பாதையில் காரை நிறுத்தினான். நான் செடிகளில் பூத்திருந்த இக்ஸோரா மலர்களைப் பறித்துக்கொண்டிருந்தபோது நாமாபியா முன்கதவுப் பூட்டைத் திறந்தான். நான் உள்ளே நுழைந்தபோது அவன் நடுக்கூடத்தில் ஆடாமல் அசையாமல் நின்று வெறித்துக்கொண்டிருந்தான்.

‘வீட்டில் திருட்டு நடந்திருக்கிறது’ என்றான் ஆங்கிலத்தில்.

தாறுமாறாகக் கலைக்கப்பட்டிருந்த அறையைப் பார்த்து நிலைமையைப் புரிந்துகொள்ள எனக்குச் சற்று நேரம் பிடித்தது. அப்போதுகூட அந்த இழுப்பறைகள் திறக்கப்பட்டிருந்த விதத்தைக் கவனித்தபோது, வந்து பார்த்தவுடனேயே திருட்டு நடந்திருப்பது தெரிய வேண்டுமென்பதற்காகவே நாடகத்தனமாக ஜோடித்து வைத்தாற்போல எனக்குத் தோன்றியது. அல்லது என் சகோதரனைப் பற்றி நன்கு அறிந்திருந்ததாலும் இருக்கலாம். பின்னர் என் பெற்றோர் திரும்பி வந்து, அக்கம் பக்கத்திலுள்ளோர் வரிசையாக வந்து ‘என்டோ’ சொல்லிவிட்டு விரலைச் சொடுக்கித் தோளைக்குலுக்கி விட்டுப் போனபோதுகூட மாடியில் என் அறையில் தனியாக உட்கார்ந்து உள்ளுணர்வின் குரலைக் கேட்டுக்கொண்டிருந்தேன்: நாமாபியாதான் செய்திருக்கிறான். எனக்குத் தெரியும். அப்பாவுக்கும் தெரிந்திருந்தது. சன்னலின் கண்ணாடிப் பலகைகள் உட்புறமிருந்து நீக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டினார் (நாமாபியா அவ்வளவு அசடு அல்ல. மிகவும் சாமர்த்தியசாலிதான். ஆராதனை முடிவதற்குள் சர்ச்சுக்குத் திரும்பிவர வேண்டிய அவசரத்தில் இருந்திருப்பான்.) பிறகு அந்தத் திருடனுக்கு அம்மாவின் நகைகள் எங்கே வைக்கப்பட்டிருந்தன – இரும்புப்பெட்டியின் இடது மூலையில் – என்று சரியாகத் தெரிந்திருக்கிறது. அடிபட்ட கண்களால் நாமாபியா அப்பாவை பார்த்து, நாடக வசனம் போல ‘கடந்த காலங்களில் உங்கள் இருவருக்கும் பெரும் வேதனைகளைத் தந்திருக்கிறேன். ஆனால் உங்கள் நம்பிக்கையை நான் ஒருபோதும் இதுபோலக் குலைக்க மாட்டேன்’ என்றான். அவன் இதை ஆங்கிலத்தில் சொன்னான். ‘பெரும் வேதனை’, ‘குலைவு’ போன்ற தேவையற்ற வார்த்தைகளை அவன் தன்னைத் தற்காத்துக்கொள்வதற்காகப் பேசும்போது பயன்படுத்துவது வழக்கம். பின்னர் வீட்டின் பின்வாசல் வழியே வெளியேறினான். அன்றிரவு வீட்டுக்கு வரவில்லை. மறுநாள் இரவும் வரவில்லை. அதற்கடுத்த இரவும் வரவில்லை. இரண்டு வாரங்கள் கழித்து இளைத்து, பீர் நெடியோடு வந்தான். தன்னை மன்னித்துவிடுமாறு அழுதான். எல்லா நகைகளையும் எனூகுவில் உள்ள ஹௌஸா டிரேடர்ஸில் விற்றுவிட்டானாம். எல்லாப் பணமும் தீர்ந்துவிட்டதாம்.

‘என் தங்க நகைகளுக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள்?’ அம்மா அவனைக் கேட்டாள். அவன் சொன்னதும், இரண்டு கைகளையும் தலைமேல் வைத்துக்கொண்டு கூவினாள்: ‘ஓ!ஓ! ச்சி ம் எக்புவோம்! என் கடவுளே என்னைக் கொன்றுவிட்டாரே!’ நல்ல விலைக்கு விற்றிருந்தால் பரவாயில்லை என்பதுபோலிருந்தது அவள் அழுகை. அவள் கன்னத்தில் ஓங்கி அறையலா மென்றிருந்தது எனக்கு. அப்பா நாமாபியாவிடம் அந்த நகைகளை அவன் எப்படி விற்றான், பணத்தை எந்தெந்த வகையில் செலவழித்தான் என்ற விபரங்களோடு அறிக்கை எழுதித்தரச் சொன்னார். நாமாபியா உண்மையைச் சொல்வான் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. அப்பாவுக்கும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் என்னுடைய அப்பா பேராசிரியர் அல்லவா? அறிக்கைகளின் மனிதர் அவர். ஒழுங்காக எழுதப்பட்ட, முறையாக வரிசையிடப்பட்ட பதிவுகள் அவருக்குப் பிடித்தமானவை. மேலும் நாமாபியாவுக்குப் பதினேழு வயது. கவனமாகக் கத்தரித்துவிடப்பட்ட தாடியோடு இருந்தான். மேல்நிலைப்பள்ளிக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடைப்பட்ட பருவத்தில் இருப்பவன். பிரம்பால் அடிக்கும் வயதைத் தாண்டிவிட்டிருந்தான். அப்பாவால் வேறு என்ன செய்ய முடிந்திருக்கும்? நாமாபியா அறிக்கை எழுதி முடித்ததும், அதை அப்பா எடுத்துச் சென்று தன் வாசிப்பறையில் எங்கள் பள்ளி விடைத்தாள்களை வைத்திருக்கும் கோப்பில் கோத்து இரும்பு அலமாரியின் இழுப்பறைக்குள் வைத்தார்.

‘இப்படிக்கூடவா ஒருவன் அவன் அம்மாவை கஷ்டப்படுத்துவான்!’ என்று முனகிவிட்டு அப்பா வேறு எதுவும் பேசவில்லை.

அவனொன்றும் அம்மாவை வேண்டுமென்றே கஷ்டப்படுத்துவதற்காகக் கிளம்பவில்லை. வீட்டில் இருந்த விலைமதிப்புள்ள ஒரே பொருள் அம்மா வாழ்நாள் முழுக்கச் சேமித்து வைத்திருந்த அந்தத் தங்கம் மட்டும்தான். பேராசிரியர்கள் பலரின் பிள்ளைகள் செய்ததையே அவனும் செய்திருந்தான். அமைதி தவழும் எங்கள் என்சூக்கா வளாகத்தில் அது திருட்டுப் பருவம். ‘ஸெஸமி ஸ்ட்ரீட்’ பார்த்து, எனிட் பிளைட்டன் படித்து, காலை உணவுக்குக் கார்ன் ஃபிளேக்ஸ் சாப்பிட்டு, அழகாக பாலீஷ் செய்யப்பட்ட பழுப்புக் காலணிகள் அணிந்து பல்கலைக்கழக ஊழியர் ஆரம்பப்பள்ளியில் படித்து வளர்ந்த பையன்கள் இப்போது அடுத்த வீட்டுச் சன்னல்களில் அடிக்கப்பட்ட கொசுவலையைக் கத்தரித்து, கண்ணாடிப் பலகைகளை நீக்கி, உள்ளே புகுந்து டிவி பெட்டிகளையும் விசிஆர்களையும் திருடிக்கொண்டிருக்கிறார்கள். திருடர்களை எங்களுக்குத் தெரியும். என்சூக்கா வளாகம் மரங்கள் வரிசையிட்ட தெருக்களில் அடுத்தடுத்து அமைந்த வீடுகள் கொண்ட சிறிய இடம். யார் திருடுகிறார்கள் என்பது சுலபமாகத் தெரிந்துவிடும். ஆனாலும் பணியாளர் கழகத்திலோ சர்ச்சிலோ ஆசிரியர் கூட்டங்களிலோ ஒருவரையொருவர் சந்திக்கும் பேராசிரியப் பெற்றோர்கள் ஒன்றுமே அறியாதவர்கள்போல நகரத்திலிருந்து வரும் போக்கிரிப்பயல்கள் தங்கள் புனிதமான வளாகத்திற்குள் நுழைந்து இப்படித் திருடிவருவதாகப் புலம்புவார்கள்.

திருடும் இளைஞர்கள் எங்கள் வட்டாரத்தில் பிரபலமானவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய பெற்றோர்களின் கார்களில் இருக்கையைப் பின்னுக்குத் தள்ளிக் கையை எட்டி ஸ்டீயரிங் வீலைப் பிடித்துக்கொண்டு மாலைநேரங்களில் பறந்தார்கள். நாமாபியா திருடிய சம்பவத்திற்குச் சில வாரங்கள் முன்பு எங்கள் டிவியைத் திருடியிருந்த பக்கத்து வீட்டுப் பையன் ஒஸிட்டா இளகிய உடற்கட்டோடு உறங்கும் விழிகளோடு அழகாக இருப்பவன். நடையில் பூனைத்தன்மை தெரியும். எப்போதும் கூராக இஸ்திரியிடப்பட்ட சட்டையைத்தான் அணிந்திருப்பான். வேலிக்கு மறுபுறத்தில் அவனைப் பார்த்ததுமே என் கண்களை மூடிக்கொள்வேன். அவன் மெதுவாக என்னை நெருங்கிவந்து, என்னைத் தன் உடைமையாக்கிக் கொள்வதைப் போலக் கற்பனை செய்துகொள்வேன். அவன் என்னைக் கவனிக்கவேமாட்டான். அவன் எங்கள் வீட்டில் திருடிச்சென்ற பிறகு, என் பெற்றோர் பேராசிரியர் எபூபேவின் வீட்டுக்குச் சென்று அவர் மகன் எங்கள் வீட்டிலிருந்து திருடிச்சென்ற பொருட்களைத் திருப்பித்தரச் சொல்லிக் கேட்கவேயில்லை. பதிலாக, நகரத்திலிருந்து வந்த போக்கிரிகள்தாம் அந்த வேலையைச் செய்ததாக எல்லோரிடமும் சொன்னார்கள். ஆனால் அது ஒஸிட்டாதான் என அவர்களுக்குத் தெரியும். ஒஸிட்டா நாமாபியாவைவிட இரண்டு வயது பெரியவன். திருடும் பையன்கள் எல்லோருமே நாமாபியாவைவிடச் சற்றுப் பெரியவர்கள்தாம். ஒருவேளை அதனால்தான் நாமாபியா மற்றவர்கள் வீட்டில் திருடாமலிருந்தான் போலிருக்கிறது. மற்றவர்கள் வீட்டில் திருடும் வயது வந்திருக்கவில்லையென நினைத்திருக்கலாம். அம்மாவின் நகைகளை ஒரு சில்லரைத் திருட்டாக, ஆரம்ப முயற்சியாக அவன் சோதித்துப் பார்த்திருப்பான்போல.

நாமாபியா பார்ப்பதற்கு அம்மாவைப் போலவே இருப்பான். தேன் நிறச் சருமம், பெரிய கண்கள், அழகாக வளைந்த பெரிய இதழ்கள் என அவன் அம்மாவேதான். அவனை அம்மா கடைக்குக் கூட்டிச் செல்லும்போது கடைக்காரர்கள், ‘மேடம், ஏன் உங்கள் சிவப்புத் தோலை வீணாக உங்கள் பையனுக்குக் கொடுத்துவிட்டு, பெண்ணுக்குக் கறுப்புத் தோலைத் தந்திருக்கிறீர்கள்? இவ்வளவு அழகை வைத்துக்கொண்டு இந்தப் பையன் என்ன செய்யப்போகிறான்?’ என்று கேட்பார்கள். அம்மா பெருமையாகச் சிரித்துக்கொள்வாள். நாமாபியாவின் அழகுத் தோற்றத்திற்குத் தானே காரணம் என்று எல்லோரும் நினைப்பதில் அவளுக்குப் பெருமிதம். பதினோரு வயதில் வகுப்பறைச் சன்னலை அவன் கல்லெறிந்து உடைத்தபோது, அம்மா அதை அப்பாவிடம் சொல்லாமல் பழுதுபார்ப்பதற்கு அவனிடம் ரகசியமாகப் பணம் கொடுத்தாள். இரண்டாம் வகுப்பு படித்தபோது நூலகப் புத்தகங்கள் சிலவற்றைத் தொலைத்துவிட்டான். அம்மா அவன் வகுப்பு ஆசிரியையிடம் எங்கள் வீட்டு வேலைக்காரப் பையன் அவற்றைத் திருடிச் சென்றுவிட்டதாகச் சொன்னாள். மூன்றாம் வகுப்பு படித்தபோது அவனைக் கிருத்துவத் திருச்சபைப் பாட வகுப்பில் சேர்த்துவிட்டார்கள். வீட்டிலிருந்து ஒவ்வொரு நாளும் வகுப்புக்குச் சீக்கிரமாகவே கிளம்பிச் சென்றுவிடுவான். ஆனால் அவன் ஒருநாள்கூட வகுப்புக்குச் செல்லவேயில்லை என்பது ஹோலி கம்யூனியன் வழங்கப்படாதபோதுதான் தெரிந்தது. ஆனால் அம்மா எல்லாரிடமும் தேர்வு நடந்த அன்று அவனுக்கு மலேரியாக் காய்ச்சல் வந்துவிட்டதால் போக முடியவில்லை என்று சொன்னாள். ஒருமுறை அப்பாவின் கார்ச் சாவியைத் திருட்டுத்தனமாக எடுத்து ஒரு ஈரச் சோப்புக்கட்டியில் பதித்து அச்செடுத்துக்கொண்டிருந்தபோது கையும் களவுமாக அப்பா அவனைப் பிடித்துவிட்டார். ஆனால் அம்மா மட்டும் அலட்சியமாக முனகிவிட்டு அவன் சும்மா வேடிக்கைக்காகச் சாவியை அச்செடுத்துப்பார்த்திருப்பான்; வேறு எந்தக் கள்ள நோக்கமும் அவனுக்குக் கிடையாது என்று அவனுக்காகப் பரிந்து பேசினாள். அப்பாவின் அறையில் இருந்த தேர்வு வினாத்தாட்களைத் திருடி அவருடைய மாணவர்களுக்கு அவன் விற்றபோது அம்மா அவனிடம் கத்தினாலும், அப்பாவிடம் வந்து நாமாபியாவுக்குப் பதினாறு வயதாகிவிட்டது, அவனுக்குத் தரும் பாக்கெட் மணியைக் கொஞ்சம் கூட்டித்தர வேண்டும் என்றாள்.

அவள் நகைகளைத் திருடி விற்றதற்காக நாமாபியா வருத்தப்பட்டானா என்று எனக்குத் தெரியாது. என் அண்ணனின் கனிவான, புன்னகை மலர்ந்த முகத்திலிருந்து அவன் உண்மையில் என்ன நினைத்தான் என்பதை என்னால் எப்போதுமே உணர முடிந்ததில்லை. அதைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டதுமில்லை. அம்மாவின் சகோதரிகள் தங்களுடைய தங்கக் காதணிகளைக் கொடுத்தனுப்பியிருந்தார்கள். இத்தாலியிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யும் கவர்ச்சிகரமான திருமதி மோஸீயிடமிருந்து காது வளையமும் தொங்கணியும் வாங்கிவிட்டு மாதமொருமுறை அம்மா அவள் வீட்டுக்குச் சென்று தவணைப்பணம் கட்டிவந்தாள். நாமாபியா நகைகளைத் திருடிய தினத்திற்குப் பிறகு அதைப் பற்றி நாங்கள் பேசவேயில்லை. அவன் அது போன்ற காரியத்தைச் செய்யவே இல்லை என்பதுபோல நடந்துகொண்டால், பழசையெல்லாம் மறந்து திருந்திவிடுவான் என நம்பியதைப் போல் அவர்கள் நடந்துகொண்டார்கள். மூன்று வருடங்கள் கழித்துப் பல்கலைக்கழகத்தில் அவன் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்டுக் காவல்நிலையத்தில் அடைக்கப்பட்டிருக்காவிட்டால், நகைத் திருட்டைப் பற்றிக்கூட மறுபடியும் பேச வேண்டிய சந்தர்ப்பம் வந்திருக்காது. அது அமைதி தவழும் எங்கள் என்சூக்கா வளாகத்தில் ‘கல்ட்’டுகள் என்றழைக்கப்பட்ட எதிர்ப்போக்கு வெறியாளர்களின் காலமாக இருந்தது. பல்கலைகழக வளாகமெங்கும் ‘கல்ட்டுகளை ஆதரிக்காதீர்கள்’ என்று எழுதப்பட்ட தட்டிகள் காணப்பட்டன. தி ப்ளாக் ஆக்ஸ், பக்கனியர், பைரேட்ஸ் போன்றவை பிரபலமாக இருந்தன. ஆரம்பத்தில் இவை உபத்திரவமில்லாத கோஷ்டிகளாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது பயங்கர ‘கல்ட்’டுகளாகப் பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தன. அமெரிக்க ராப் வீடியோக்களின் அலட்டல் தோரணையைப் போலிசெய்தபடி திரிந்துகொண்டிருந்த பதினெட்டு வயசுப் பையன்கள் இப்போது ரகசிய இடங்களில் விநோதமான சாகசப் பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். இது சில சமயங்களில் ஓடிம் ஹில் பகுதியில் ஒன்றிரண்டு கொலைகளிலும் முடிந்தது. துப்பாக்கிகள், விசுவாசத் துரோகங்கள், கோடாரிகள் சாதாரணமாகக் காணப்பட்டன. கல்ட் குழுக்களிடையே சண்டைகளும் சாதாரணமாகிவிட்டன. ஒரு பையன் ஒரு பெண்ணைப் பார்த்து இளித்திருப்பான். அந்தப் பெண் ‘பிளாக் ஆக்ஸ்’ கேப்போனின் சிநேகிதியாக இருந்திருப்பாள். பல்லிளித்த பையன் அதற்குப் பிறகு கேண்டீனில் சிகரெட் லைட்டர் வாங்குவதற்காகப் போயிருப்பான். அங்கே அவன் தொடையில் யாரோ கத்தியால் குத்தியிருப்பார்கள். குத்துப்பட்டவன் ‘பக்கனிய’ரின் உறுப்பினராக இருந்திருப்பான். உடனே சக பக்கனியர்கள் பக்கத்து மதுக் கடையில் புகுந்து முதலில் கண்ணில் பட்ட ‘பிளாக் ஆக்ஸ்’ பையனின் தோள் பட்டையில் சுடுவார்கள். அடுத்த நாள் உணவுக் கூடத்தில் ஒரு ‘பக்கனியர்’ பையன் சுட்டுக்கொல்லப்படுவான். அவன் உடம்பு அலுமினியக் கிண்ணங்களில் ஊற்றப்பட்ட சூப் வரிசையின் மேல் சரிந்திருக்கும். அன்று மாலையே விடுதி அறையில் ஒரு ‘பிளாக் ஆக்ஸ்’ பையன் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பான். அவன் சிடிபிளேயர் ரத்தத்தில் மூழ்கியிருக்கும். அர்த்தமற்ற முட்டாள்தனமான பயங்கரங்கள். இது எந்தளவுக்கு அசாதாரணமென்றால் வெகுவிரைவிலேயே இந்தச் சம்பவங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டன. விரிவுரைகள் முடிந்ததும் மாணவிகள் தமது விடுதி அறைகளுக்குள்ளேயே அடைந்திருந்தனர். ஏதாவது ஒரு வண்டு சத்தமாக ரீங்கரித்தபடியே வகுப்பறைக்குள் புகுந்துவிட்டால்கூட விரிவுரையாளர்கள் மிரண்டுபோனார்கள். போலீஸ் வரவழைக்கப்பட்டது. அவர்கள் தமது அரதப்பழசான நீலநிற பூஜோ 505 காரில் வளாகத்தைச் சுற்றிவந்தார்கள். கார் சன்னல்களுக்கு வெளியே துருப்பிடித்த துப்பாக்கிகள் மாணவர்களைப் பார்த்து அச்சுறுத்தும்படி நீட்டிக்கொண்டிருந்தன. நாமாபியா வகுப்பை முடித்துவிட்டு உரக்கச் சிரித்தபடியே வந்தான். ‘போலீசுக்கு இன்னும் கொஞ்சம் அறிவு தேவை. கல்ட் பையன்களிடம் இதைவிட அதிநவீனத் துப்பாக்கிகள் இருப்பது எல்லோருக்கும் தெரியுமே’ என்றான்.

நாமாபியாவின் சிரிக்கும் முகத்தை என் பெற்றோர் அமைதியான கவலையுடன் கவனித்துக்கொண்டிருந்தனர். அவனும் ஏதாவது ஒரு ‘கல்ட்’டில் சேர்ந்திருந்தானா என அவர்கள் யோசித்தது எனக்குத் தெரிந்தது. சில நேரங்களில் அவனும் அப்படி ஒன்றில் இருந்ததாக நினைத்தேன். ‘கல்ட்’ இளைஞர்கள் பிரபலமாக இருந்தவர்கள். நாமாபியா மிகவும் பிரபலமானவன். பையன்கள் அவனுக்கொரு செல்லப்பெயர் வைத்திருந்தார்கள். ‘ஃபங்க்!’ என்று அவனைப் பார்த்தாலே கூவுவார்கள். அருகில் வந்து கைகுலுக்குவார்கள். பெண்கள் – குறிப்பாகப் பிரபலமான ‘பிக் ச்சிக்ஸ்’ – ஹலோ சொல்லிவிட்டுத் தேவைக்கு அதிகமாக வெகுநேரத்திற்கு அவனைக் கட்டியணைத்துக்கொண்டிருப்பார்கள். வளாகத்தில் நடக்கும் சாதுவான பார்ட்டிகளிலிருந்து நகரத்தின் உச்சஸ்தாயி பார்ட்டிகள்வரை எல்லாவற்றிற்கும் நாமாபியா செல்வான். அவன் பெண்களுக்குப் பிரியமானவன். பையன்களுக்கும் அவனைப் பிடிக்கும். ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் ராத்மன்ஸ் புகைக்கிற, ஒரு பெட்டி ஸ்டார் பீரை ஒரே அமர்வில் காலிசெய்யும் கீர்த்தியுடையவனாக இருந்தான். சில நேரங்களில் அவன் ‘கல்ட்’டாக இருக்கமாட்டானெனத் தோன்றும். அவன் எல்லோருக்கும் நண்பன், எல்லா கல்ட் பையன்களையும் உடனே நட்பாக்கிக்கொள்வான். யாருக்கும் எதிரியாக இருக்க அவனால் முடியாது. ‘கல்ட்’டாகச் சேர்வதற்கு அவசியமான துணிச்சலோ பாதுகாப்பின்மையோ என் அண்ணனிடம் இருந்ததாவென்று நிச்சயமாகத் தெரியவில்லை.

அவன் ஒரு ‘கல்ட்’டா என்று அவனிடம் ஒரே ஒருமுறை கேட்டிருக்கிறேன். கேட்டதும் தனது நீண்ட, அடர்ந்த கண்ணிமைகளை ஆச்சரியத்துடன் கொட்டிக்கொண்டு ‘இல்லையே!’ என்றான். இப்படிக் கேட்டுவிட்டாயே, உனக்கே தெரியாதா என்னும் கேள்வி அதன் பின்னே தொக்கியிருந்தது. நான் அவனை நம்பினேன். என் அப்பாவும் நம்பினார். ஆனால் எங்கள் நம்பிக்கைக்கு எந்த அர்த்தமும் இல்லாமல், அவன் ஒரு ‘கல்ட்’டைச் சேர்ந்தவன் எனக் குற்றம் சாட்டப்பட்டு ஏற்கனவே கைதுசெய்யப்பட்டிருந்தான். அவன் அந்த ‘இல்லையே’வைச் சொன்னது அவனை முதல்முறையாகக் காவல்நிலைய லாக்கப்பில் பார்க்கச் சென்றிருந்தபோது.

அது நடந்தது இப்படித்தான். ஒரு புழுக்கமான திங்கட்கிழமை. நான்கு கல்ட் உறுப்பினர்கள் வளாக நுழைவுவாயிலில் காத்திருந்தார்கள். ஒரு சிவப்பு நிற மெர்ஸிடிஸ் காரை ஓட்டி வந்த பேராசிரியையை மறித்து, அவர் தலையில் துப்பாக்கியைப் பதித்து அவரைக் கீழே இறக்கிவிட்டுக் காரை எடுத்துக்கொண்டு பொறியியல் துறைக்குச் சீறிச்சென்ற அவர்கள் வகுப்பு முடிந்து வெளியே வந்துகொண்டிருந்த மூன்று மாணவர்களைச் சுட்டார்கள். அது மதியநேரம். பக்கத்திலிருந்த வகுப்பில்தான் நான் அப்போது இருந்தேன். துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடனேயே வகுப்பறையைவிட்டு முதலில் வெளியே ஓடியது எங்கள் விரிவுரையாளர்தான். கூச்சலும் குழப்பமுமாக மாணவர்கள் கலைந்து ஓடினர். மாடிப்படிகளில் எந்தப் பக்கம் ஓடுவது என்று தெரியவில்லை. வெளியே புல்தரையில் மூன்று சடலங்கள் வீழ்ந்திருந்தன. சிவப்பு மெர்ஸிடிஸ் கிறீச்சிட்டபடி பறந்தது. அவசர அவசரமாகப் புத்தகங்களைப் பைகளில் அள்ளிப்போட்டுக்கொண்டு மாணவர்கள் ஓடிவர, வாகன நிறுத்தம்வரை செல்வதற்கு ஓகாடா ஓட்டிகள் இரண்டு மடங்கு வாடகை கேட்டார்கள். துணைவேந்தர் மாலை வகுப்புகள் எல்லாவற்றையும் ரத்துசெய்துவிட்டு, இரவு ஒன்பது மணிக்குப் பிறகு அனைவரும் வெளியே வராமல் அறைக்குள்ளேயே இருக்க வேண்டுமென அறிவித்தார். எனக்கு அது அர்த்தமற்றதாகத் தோன்றியது பட்டப்பகலில்தான் துப்பாக்கிச் சூடுகள் நடந்தன. நாமாபியாவுக்கும் இது அர்த்தமற்றதாகப் பட்டிருக்க வேண்டும். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் நாளே அவன் ஒன்பது மணிக்குள் வீடு திரும்பவில்லை. அன்றிரவு முழுக்க வரவில்லை. நண்பர்கள் வீட்டில் தங்கிவிட்டிருப்பானென்று நினைத்தேன். இரவு வீடு திரும்பாமல் இருப்பது அவனுக்கு வழக்கம்தான். அடுத்த நாள் காலை வீட்டிற்குக் காவலர் ஒருவர் வந்தார். நாமாபியா சில கல்ட் இளைஞர்களோடு ஒரு மதுக்கூடத்தில் இருந்தபோது போலீசால் கைதுசெய்யப்பட்டுப் போலீஸ் வண்டியில் கொண்டுசெல்லப்பட்டதாகக் கூறினார். அம்மா கூவினாள்: ‘எக்வூஸிக்வானா! சொல்லாதீர்கள்!’ அப்பா அமைதியாக அவருக்கு நன்றி தெரிவித்தார். எங்களை நகரில் உள்ள காவல் நிலையத்திற்குக் காரில் அழைத்துச் சென்றார். கான்ஸ்டபிள் ஒருவர் அழுக்குப் பேனா மூடியைக் கடித்துக்கொண்டே, ‘நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட கல்ட் பையன்களா? அவர்களை எனூகுவிற்குக் கொண்டுசென்றிருக்கிறார்களே! ரொம்ப ஸீரியஸான கேஸ்! இந்த கல்ட் தொல்லையை அடியோடு ஒழித்துக்கட்டப்போகிறோம்!’ என்றார்.

காருக்குத் திரும்பினோம். புதிய பயம் எங்கள் எல்லோரையும் பீடித்தது. என்சூகாவென்றால் சமாளித்துவிடலாம். அமைதியான, அவசரமில்லாத சிற்றூர். அதுவும் எங்கள் வளாகம் தனித்த ஒதுக்கமான தீவு. ஆனால் எனூகு பரிச்சயமில்லாத ஊர். நைஜீரிய ராணுவத்தின் இயந்திரப் பிரிவும் காவல் துறைத் தலைமையகமும் அமைந்திருக்கும் மாநிலத் தலைநகரம். பரபரப்பான சாலைச் சந்திப்புகளில் போக்குவரத்துக் காவலர்கள் நிற்பார்கள். துப்புதுலக்க முடியாமல் நெருக்கடியில் திணறும்போது இங்குள்ள போலீசார் அவற்றிலிருந்து விடுபடுவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கை மிகவும் பிரசித்தமானது: ஆட்களைக் கொல்வது.

எனூகு காவல் நிலையம் நெடிதுயர்ந்த மதிற்சுவருக்குப் பின்னால் பரந்த இடத்தில் எண்ணற்ற கட்டடங்களுக்கு மத்தியில் இருந்தது. வாசலுக்குப் பக்கத்தில் தூசு படிந்து, சிதைந்து கார்கள் குப்பைபோல் குவித்துவைக்கப்பட்டிருந்தன. அப்பா அந்த வளாகத்தின் மறுமுனையிலிருந்த செவ்வக வடிவப் பங்களாவிற்குக் காரை ஓட்டிச் சென்றார். முகப்பறையில் உட்கார்ந்திருந்த இரு காவலர்களுக்கு அம்மா பணமும் ‘ஜாலாஃப்’ பிரியாணி பொட்டலமும் பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுத்தாள். அவர்கள் உள்ளே சென்று நாமாபியாவைக் கூட்டிவந்தார்கள். மாபெரும் குடை மரத்திற்கடியில் போடப்பட்டிருந்த பெஞ்சில் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் அங்குச் சென்று அமர்ந்தோம். ஊரடங்கு அறிவிக்கப்பட்டது தெரிந்த பிறகும் அன்றிரவு அவன் ஏன் வெளியே சுற்றிக்கொண்டிருந்தான் என்று யாரும் அவனைக் கேட்கவில்லை. காரணமேயில்லாமல் மதுக்கடைக்குள் நுழைந்து அங்கே குடித்துக்கொண்டிருந்த பையன்களையும் மதுக்கடை உரிமையாளனையும்கூடப் போலீஸ் கைதுசெய்தது அக்கிரமம் என்று யாரும் சொல்லவில்லை. பதிலாக நாமாபியா பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தோம். அந்தப் பெஞ்சின் இரண்டு பக்கங்களிலும் காலைப் பரப்பித் தொங்கவிட்டுக்கொண்டு, கண்கள் பிரகாசிக்க, நடிப்பைத் தொடங்கத் தயாராகவிருக்கும் மேடைக் கலைஞன்போல எதற்காகவோ காத்திருந்தான். அவனெதிரே கோழிக்கறிச் சோறு வைக்கப்பட்டிருந்தது.

‘இந்தச் சிறையில் இருப்பதுபோல நைஜீரியாவை நிர்வகித்தால், இந்த நாட்டில் உள்ள எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்’ என்று ஆரம்பித்தான். ‘எல்லாமே சீரான ஒழுங்கில் இருக்கும். எங்கள் சிறைக்கு அதிகாரி ஜெனரல் அபாச்சா. அவருக்கு உதவியாளர் உண்டு. சிறைக்கு வந்ததுமே அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும். கொடுக்காவிட்டால் சிக்கல்தான்.’

‘உன்னிடம் பணம் இருந்ததா?’ அம்மா கேட்டாள். நாமாபியா புன்னகைத்தான். அவன் நெற்றியில் புதிதாக இருந்த பருவைப் போன்ற பூச்சிக்கடியின் தடிப்பில் அவன் முகம் மேலும் அழகாக இருந்தது. மதுக்கூடத்தில் அவனைக் கைதுசெய்த சற்று நேரத்திலேயே அவனிடமிருந்த பணத்தைச் சுருட்டி, ஆசனவாய்க்குள் செருகிக்கொண்டதாக இக்போவில் கூறினான். அவன் ஒளித்துவைத்திருக்காவிட்டால் போலீஸார் அதைப் பிடுங்கிக்கொண்டிருப்பார்கள். சிறைக்குள் செல்லும்போது பணம் இல்லாவிட்டால் பிரச்சினைதான் என்றான். வறுத்த முருங்கைக்காயை எடுத்துக் கடித்துக்கொண்டே ஆங்கிலத்திற்கு மாறினான். ‘நான் பணத்தை எப்படி ஒளித்துவைத்திருந்தேன் எனத் தெரிந்ததும் ஜெனரல் அபாச்சா ஆச்சரியப்பட்டுப் பாராட்டினார். நான் அவரோடு நெருக்கமாகிவிட்டேன். எந்நேரமும் அவரைப் புகழ்ந்துகொண்டே இருப்பேன். சிறை அதிகாரிகள் புதிதாகக் கைதுசெய்யப்பட்டு வந்த எங்கள் எல்லோரையும் வரிசையாக நிற்கவைத்துக் காதைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடச் சொன்னபோது, என்னை மட்டும் பத்தே நிமிடத்தில் போகச் சொல்லிவிட்டார். மற்றவர்கள் ஏறக்குறைய அரை மணிநேரத்திற்குத் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அம்மா குளிரால் தாக்குண்டவளைப் போலத் தன்னைத்தானே கட்டிக்கொண்டாள். அப்பா எதுவும் பேசவில்லை. நாமாபியாவை நுணுக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். நூறு நைரா நோட்டுகளை, மெல்லிய சிகரெட்டுகள் போல் சுருட்டித் தன் பேன்ட்டின் பின்புறம் கையை விட்டு ஆசனவாய்க்குள் என் இணக்கமான அண்ணன் வலியோடு செருகிக்கொள்வதைக் கற்பனை செய்து பார்த்தேன்.

என்சூக்காவுக்குத் திரும்பி வந்தபோது அப்பா, ‘முதல்முறை அவன் வீட்டை உடைத்துத் திருடியபோதே, நான் அவனைப் போலீசில் பிடித்துக் கொடுத்திருக்க வேண்டும்’ என்றார். அம்மா மௌனமாகச் சன்னலுக்கு வெளியே வெறித்தாள்.

‘ஏன்?’ என்று கேட்டேன்.

‘முதல்முறையாக அவனை ஜெயில் கதிகலங்க வைத்திருக்கிறது. பார்த்தாலே தெரியவில்லையா?’ அப்பா சிறு புன்னகையோடு கேட்டார். எனக்கு அப்படித் தெரியவில்லை. அதாவது அன்றைக்குத் தெரியவில்லை. நாமாபியா சௌக்கியமாகவே தெரிந்தான். பணத்தைச் சுருட்டி ஆசனவாய்க்குள் செருகிக்கொள்வது போன்ற வேலைகளைச் செய்துகொண்டு அவன் நன்றாக இருந்ததாகவே தோன்றியது.

நாமாபியாவின் முதல் அதிர்ச்சி அந்த ‘பக்கனியர்’ இளைஞன் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்ததைப் பார்த்ததுதான். அவன் உயரமாக, முரட்டுத்தனமாக இருந்த பையன். ஒரு கொலைகூடச் செய்திருப்பதாக பேச்சு உண்டு. அடுத்த செமஸ்டரில் ‘கேப்போனாக’ அவன் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்பிருந்தது. ஆனால் அவன் இப்போது சிறையில் பெரிய அதிகாரி பின்னந்தலையில் ஓங்கி அடித்ததற்காகக் கூனிக்குறுகி, தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தான். இதை அடுத்த நாள் அவனைப் பார்க்கப் போயிருந்தபோது நாமாபியா என்னிடம் சொன்னான். அவன் குரலில் வெறுப்பும் ஏமாற்றமும் இருந்தன. ‘இன்க்ரெடிபிள் ஹல்க்’ வெறும் பச்சை பெயின்ட்தான் என்று அவனுக்கு திடீரெனத் தெரிந்ததுபோலிருந்தது. அவனுக்கு இரண்டாம் அதிர்ச்சி சில நாட்கள் கழித்து ஏற்பட்டது. அது அவன் இருந்த சிறைக்கூடத்திற்குத் தள்ளி இருந்த ‘தனிச்சிறை’ தொடர்பானது. இந்த ஒன்றாம் தனிச்சிறையிலி ருந்து உடல் முழுக்க வீங்கியிருந்த ஒருவனின் சடலத்தை காவலர்கள் இருவர் தூக்கிவந்தார்கள். நாமாபியாவின் சிறைக்கெதிரே நின்று அங்கிருப்பவர்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியுமாறு சடலத்தைக் காட்டினார்கள்.

அவனது சிறைத் தலைவனுக்குக்கூட அந்தத் தனிச்சிறையின் மீது பயமிருந்ததைப் போலிருந்தது. குளிப்பதற்குப் பழைய பெயின்ட் வாளிகளில் தண்ணீர் வாங்கும் வசதி படைத்த நாமாபியாவும் அவனுடைய சகக்கைதிகளும் திறந்தவெளியில் குளிக்கும்போது இரைச்சலிட்டால், காவலுக்கு நின்றிருக்கும் போலீஸ்காரர், ‘சத்தம் போடுவதை நிறுத்தப் போகிறீர்களா இல்லையா? தனிச்சிறைக்கு அனுப்பிவிடுவார்கள், ஜாக்கிரதை!’ என்று கத்துவார். நாமாபியாவுக்கு அவன் இருக்கும் சிறையைவிட மோசமாக இன்னொன்று இருக்குமெனக் கற்பனை செய்ய முடியவில்லை. அந்த அறைக்குள் அத்தனை பேரும் அடைக்கப்பட்டிருந்ததில் பெரும்பாலான நேரம் அச்சிறையின் விரிசலிட்ட சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டுதான் நின்றிருப்பான். அந்த விரிசல்களுக்குள் வசிக்கும் குட்டி ஜீவன்களான க்வாலிக் வாட்டாக்கள் அவனையே தேர்ந்தெடுத்துக் கடித்துக்கொண்டிருந்தன. அவன் வலி தாங்காமல் கத்தினால் சகச்சிறைவாசிகள் அவனைப் ‘பாலும் பழமும்’ பையன் என்று கிண்டல் செய்வார்கள். ‘பல்கலைக்கழகப் பையன்’ ‘நல்ல பையன்’ போன்றவை அவனுக்குக் கிடைத்த இதரபெயர்கள்.

அத்தனை சிறிய அளவில் இருந்தாலும் அந்தப் பூச்சிகள் கடிக்கும்போது பயங்கரமாக வலிக்கும். இரவு நேரங்களில் அதிகமாகக் கடிக்கும். அந்தச் சிறையில் இருப்பவர்கள் எல்லோரும் ஒருக்களித்துதான் படுத்திருப்பார்கள். அதற்கு மட்டும்தான் இடமிருக்கும். அவர்களுடைய சிறைத் தலைவனுக்கு மட்டும்தான் தாராளமாக மல்லாந்து படுத்துத் தூங்குவதற்கு உரிமை உண்டு. ஒவ்வொரு நாளும் சிறைக் கதவின் ஊடாக உள்ளே தள்ளப்படும் ‘கார்ரி’ தட்டுகளையும் நீர்த்துப்போன சூப்புகளையும் பகிர்ந்து கொடுப்பது சிறைத் தலைவன்தான். ஒவ்வொருவருக்கும் இரண்டு கரண்டிகள். இந்த விஷயங்களையெல்லாம் முதல் வாரத்தில் நாமாபியா எங்களிடம் சொன்னான். அவன் பேசியபோது அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். சுவரில் இருந்த பூச்சிகள் அவன் முகத்தையும் கடித்தனவா அவன் நெற்றி முழுக்கப் புடைத்திருந்ததற்கு ஏதாவது இன்ஃபெக்ஷன் காரணமா என யோசித்தேன். சில புண்கள் கூராக, முனையில் க்ரீம் நிறச் சீழோடு இருந்தன. நாமாபியா அவற்றைச் சொறிந்துகொண்டே பேசினான், ‘இன்று நின்றவாக்கிலேயே ஒரு பிளாஸ்டிக் பைக்குள் மலம் கழிக்க வேண்டியிருந்தது. கக்கூஸ் நிரம்பியிருந்தது. சனிக்கிழமைகளில் மட்டும்தான் சுத்தம் செய்கிறார்கள்.’

அவன் பேச்சில் செயற்கைத் தொனி இருந்தது. வாயை மூடு என்று அவனை அதட்ட நினைத்தேன். அவமதிப்புகளில் அவதியுறுபவன்போலத் தன்னைக் காட்டிக்கொள்வதில் அவனுக்குப் பெருமைபோலிருந்தது. சிறைக் காவலர்கள் அவனை வெளியேவிட்டு வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிட அனுமதித்திருந்தது எவ்வளவு பெரிய அதிருஷ்டம் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. ஊரடங்கு இரவன்று வெளியே நண்பர்களோடு குடித்துக்கொண்டிருந்தது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பதையும் அவன் அறிந்திருக்கவில்லை. அவனை விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் எவ்வளவு நிச்சயமற்றிருந்தன என்பதைக்கூட அவன் அறிந்திருக்கவில்லை.

முதல் வாரத்தில் நாங்கள் அவனைத் தினமும் சென்று பார்த்தோம். அம்மாவின் பூஜோ 504வை என்சூக்காவுக்கு வெளியே எடுத்துச் செல்வது ஆபத்தானது என்பதால் அப்பாவின் பழைய வால்வோ காரில் சென்றோம். சாலையில் காவல் துறைச் சோதனைச் சாவடிகளைத் தாண்டியபோதெல்லாம் என் பெற்றோர்களின் நடத்தை வித்தியாசமாகத் தெரிந்தது. மிக நுட்பமான வித்தியாசம் என்றுதான் சொல்ல வேண்டும். காவலர்கள் கையசைத்து எங்களுக்கு வழிவிட்டதுமே, காவல் துறை எவ்வளவு அறிவற்றதாக, ஊழல்மிகுந்ததாக ஆகிவிட்டது என்று அவர் வழக்கம்போல் முணுமுணுக்கவில்லை. போலீசுக்கு லஞ்சம் தர மறுத்ததற்காக அவரை ஒரு மணிநேரத்திற்கு நிறுத்திவைத்த தினத்தை அவர் நினைவுகூரவில்லை. என் அழகான அத்தை மகள் ஓகேச்சி சென்றுகொண்டிருந்த பேருந்தை நிறுத்தி, அவளை மட்டும் குறிப்பாக வெளியே அழைத்து நிற்க வைத்து, அவளிடம் இரண்டு கைப்பேசிகள் இருந்ததால் அவளை விபச்சாரி என அழைத்து, ஒரு பெரிய தொகையை லஞ்சமாகக் கேட்டதையும் அவள் தராததால் அவளைத் தனியாக விட்டுவிட்டு அந்தப் பேருந்து கிளம்பிச் செல்ல அனுமதித் ததையும் கொட்டிய மழையில் அவள் மண்டியிட்டுத் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சி அழுததையும் அவர் சொல்லிக் காட்டவில்லை. இவையெல்லாம் ஒரு மிகப் பெரிய சீர்கேட்டிற்கான அறிகுறிகள் என அம்மா முனகவில்லை. ஏதோ போலீசை வழக்கம்போல விமரிசிக்காமலிருந்தால் நாமாபியா உடனடியாக விடுதலை செய்யப்பட்டுவிடுவான் என அவர்கள் நம்பியதைப் போலிருந்தது. என்சூகாவிலிருந்த காவல் துறைக் கண்காணிப்பாளர் ‘சிக்கல்’ என்னும் வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார். நாமாபியாவை உடனே விடுதலை செய்வதில் சிக்கல் இருக்கும் என்றார். எனூகுவில் போலீஸ் கமிஷனர் கைதுசெய்யப்பட்ட கல்ட் இளைஞர்களைப் பற்றித் தொலைக்காட்சியில் விரிவான பேட்டியும் அளித்திருக்கிறார். கல்ட் பிரச்சினை தீவிரமானது. அபூஜோவில் உள்ள பெரிய மனிதர்கள் நடந்துகொண்டிருந்தவற்றை உன்னிப்பாகக் கவனித்துவந்தார்கள் என்றெல்லாம் சொல்லியிருந்தார். எல்லோருக்கும் எதையாவது செய்துகாட்டியாக வேண்டுமென்ற கட்டாயம் இருக்கிறது.

இரண்டாம் வாரம், நாமாபியாவைப் பார்க்கப் போக வேண்டாமென்று என் பெற்றோர்களிடம் சொன்னேன். இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இப்படியே போய்வந்துகொண்டிருப்பது, பெட்ரோல் விற்கும் விலையில் ஒவ்வொரு நாளும் மூன்று மணிநேரம் காரில் சென்றுவருவது அனாவசியச் செலவு என்றேன். ஒரு நாளைக்கு வீட்டுச் சாப்பாடு இல்லாவிட்டால் நாமாபியாவுக்கு ஒன்றும் ஆகிவிடாது என்று சொன்னேன்.

அப்பா ஆச்சரியத்துடன், ‘என்ன சொல்கிறாய்?’ என்றார். அம்மா என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு வாசலை நோக்கி நடந்துகொண்டே யாரையும் கூட வரச்சொல்லி யாரும் கெஞ்சவில்லை என்றாள். என் அப்பாவி சகோதரன் அங்கே அவதிப்பட்டுக்கொண்டிருக்கும்போது நான் வீட்டுக்குள்ளேயே எதுவும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்திருக்கலாம் என்றபடியே காரை நோக்கிச் செல்ல, நான் அவள் பின்னே ஓடினேன். வெளியே வந்ததும் என்ன செய்வதெனத் தெரியவில்லை. இக்ஸோரா புதருக்கருகே கிடந்த ஒரு கல்லை எடுத்து வால்வோவின் முன்பக்கக் கண்ணாடியின் மேல் எறிந்தேன். கண்ணாடி விரிசல்விட்டது. அது மொர மொரப்பாக நொறுங்கிய சத்தத்தைக் கேட்டேன். கண்ணாடியில் கதிர்கள்போல மெல்லிய விரிசல்கள் தெரிந்ததைப் பார்த்தேன். திரும்பி மாடிக்கு ஓடினேன். அம்மாவிடமிருந்து தப்பித்துக்கொள்ள என் அறைக்குள் புகுந்து தாழிட்டுக்கொண்டேன். அம்மாவின் கத்தல் கேட்டது. அதன் பின் அப்பாவின் குரல் கேட்டது. கடைசியில் அமைதி. கார் கிளம்பும் சத்தம் கேட்கவில்லை. நாமாபியாவைப் பார்க்க அன்று யாரும் செல்லவில்லை. இந்தச் சிறிய வெற்றி என்னை ஆச்சரியப்படுத்தியது.

அவனை அடுத்தநாள் சென்று பார்த்தோம். பனியில் உறைந்த ஓடையில் வெடிப்புகள்போல விரிசல்கள் விரிந்திருந்தாலும் கார்க் கண்ணாடியைப் பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை. முகப்பறையில் அமர்ந்திருந்த இனிமையான, கருத்த சருமம் கொண்ட போலீஸ் நாங்கள் ஏன் நேற்று வரவில்லை என்று கேட்டான். அம்மாவின் ‘ஜாலாஃப்’ நேற்று கிடைக்காததில் வருத்தம் என்றான். நாமாபியா கேட்பான் என்று எதிர்பார்த்தேன். அதிருப்தி அடைந்திருப்பானென்றுகூட நினைத்தேன். ஆனால் விநோதமாக அமைதியாக இருந்தான். அந்த முகபாவத்தை அதற்கு முன் நான் பார்த்ததில்லை. சோற்றை மிச்சம் வைத்துவிட்டான். வளாகத்தின் முடிவில் விபத்தில் உருக்குலைந்து, பாதி எரிந்திருந்த கார்களின் குவியலைக் கழுத்தைத் திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘என்ன நடந்தது?’ அம்மா கேட்டாள்.

இதற்காகவே காத்திருந்ததைப் போல நாமாபியா உடனே பேசத் தொடங்கினான். அவனது இக்போ ஏற்ற இறக்கமின்றிச் சீராக இருந்தது, குரல் உயரவுமில்லை, இறங்கவுமில்லை. அந்தச் சிறைக்குள் வயதானவர் ஒருவரை முந்தைய தினம் கொண்டுவந்து அடைத்தார்களாம். வயது எழுபதுகளின் மத்தியில் இருக்கலாம். வெளுத்த கேசம். மெல்லிய சுருக்கங்கள் விரவிய சருமம். அந்தக் காலத்தைய நேர்மையான அரசாங்க ஊழியருக்குரிய பண்பட்ட நடத்தை. அவருடைய மகனைக் காவல் துறையினர் ஆயுதத் திருட்டுக்காகத் தேடிக்கொண்டிருந்தார்கள். மகன் கிடைக்காததால் அவரைக் கைதுசெய்து அடைத்திருந்தார்கள்.

‘அந்த மனிதர் எதுவும் செய்யவில்லை’ நாமாபியா சொன்னான்.

‘நீயும்தான் எதுவும் செய்யவில்லை’ என்றாள் அம்மா.

அவன் சொல்ல வந்ததை அம்மா புரிந்துகொள்ளவில்லை என்பதுபோலத் தலையை ஆட்டிக்கொண்டான். அடுத்து வந்த தினங்களில் அவன் மேலும் உள்ளடங்கியிருந்தான். குறைவாகப் பேசினான். பேசியதும் அந்தக் கிழவரைப் பற்றியே இருந்தது.

‘அவரிடம் பணமே இல்லை. குளிப்பதற்குத் தண்ணீர் வாங்க அவரால் முடியவில்லை. மற்றவர்கள் எல்லோரும் அவரைக் கிண்டல் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர் மகனை ஒளித்துவைத்திருப்பதாகக் குற்றம்சாட்டுகிறார்கள். சிறைத் தலைவன் அவரை அலட்சியப்படுத்துகிறான். அவர் மிரண்டுபோயிருக்கிறார். பயத்தில் சுருங்கிப்போயிருக்கிறார்.’

‘தன்னுடைய பையன் இருக்கும் இடம் அவருக்குத் தெரியுமா?’ அம்மா கேட்டாள்.

‘அவர் அவனைப் பார்த்து நான்கு மாதங்களாகின்றன’ நாமாபியா சொன்னான்.

‘அவன் எங்கிருக்கிறான் என்பது அவருக்குத் தெரியுமா தெரியாதா என்பதெல்லாம் போலீசுக்கு ஒரு பொருட்டே அல்ல . . .’ என்று அப்பா ஏதேதோ பேசினார்.

‘இது ரொம்பத் தப்பு’ என்றாள் அம்மா.

‘ஆனால் இதைத்தான் போலீஸ் எப்போதுமே செய்துவருகிறது. அவர்கள் தேடிக்கொண்டிருக்கிற ஆள் கிடைக்காவிட்டால், அவனுடைய அப்பாவையோ அம்மாவையோ அவனுடைய உறவினர்கள் யாரையோ சிறையில் அடைத்துவிடுவது அவர்களுக்கு வழக்கமாக இருக்கிறது.

அப்பா தன் முட்டியைப் பிசைந்துகொண்டார். அவர் பொறுமையிழந்து இருப்பதற்கான சமிக்ஞை இது. பட்டவர்த்தனமான விஷயத்தை அம்மா ஏன் பேசிக்கொண்டிருந்தாள் என்று அவருக்குப் புரியவில்லை.

‘அந்த மனிதருக்கு உடல் நலமில்லை. அவர் கைகள் தடதடவென்று நடுங்கிக்கொண்டேயிருக்கின்றன, தூங்கும்போதுகூட.’

என் பெற்றோர் அமைதியாக இருந்தார்கள். நாமாபியா சோற்றுப் பாத்திரத்தை மூடி அப்பாவிடம் கொடுத்தான். ‘இதிலிருந்து கொஞ்சம் எடுத்துக்கொண்டுபோய் அவருக்குக் கொடுக்கலாம். ஆனால் ஜெனரல் அபாச்சா பிடுங்கிக்கொள்வார்.

அப்பா அங்கே உட்கார்ந்திருந்த காவலரிடம் சென்று நாமாபியாவின் சிறையிலிருந்த அம்முதியவரைச் சில நிமிடங்களுக்குப் பார்க்க முடியுமா என்று கேட்டார். அந்தப் போலீஸ்காரன் வெளுத்த நிறத்தில் இருந்த சிடுமூஞ்சி. அம்மா பிரியாணியும் பணமும் கொடுக்கும்போது நன்றிகூடச் சொல்லமாட்டான். அவன் இப்போது அப்பாவின் முகத்தில் சீறினான். நாபியாவை வெளியில்விட்டதற்கே அவனுக்கு வேலைபோய்விடலாம். இப்போது சம்பந்தமே இல்லாத இன்னொருவரைப் பார்க்க அனுமதி கேட்கிறோம்? இது என்ன போர்டிங் பள்ளி விடுதியின் பார்வையாளர் தினம் என்று நினைத்தோமா? சமுதாயத்தை நாசப்படுத்திக்கொண்டிருந்த குற்றவாளிகளை அடைத்துவைக்கும் உயர் பாதுகாப்புச் சிறை இது என்பது எங்களுக்குத் தெரியுமா, தெரியாதா? அப்பா திரும்பி வந்து பெருமூச்செறிந்து கொண்டு உட்கார்ந்தார். நாமாபியா மௌனமாக வீங்கிப்புடைத்த தன் முகத்தைச் சொறிந்துகொண்டான்.

அடுத்த நாள் நாமாபியா சோற்றைத் தீண்டவேயில்லை. சிறைச்சாலைத் தரையையும் சுவர்களையும் சுத்தப்படுத்துவதாகச் சொல்லிக்கொண்டு வழக்கமாகச் செய்ததைப் போல அன்றும் சோப்புத் தண்ணீரைத் தெளித்தார்களாம். குளிப்பதற்குத் தண்ணீர் வாங்கக் காசில்லாமல் ஒரு வாரமாகக் குளித்திருக்காத அம்முதியவர் அதைப் பார்த்ததுமே சிறை அறைக்குள் ஓடிச் சட்டையைக் கழற்றிவிட்டுத் தரையில் படுத்துக் கொண்டு தன் ஒட்டி உலர்ந்த முதுகைத் தேய்த்துக் கொண்டாராம். அதைப் பார்த்த காவலர்கள் சிரிக்கத் தொடங்கி, அவருடைய எல்லாத் துணிகளையும் கழற்றவைத்துச் சிறைக்கு வெளியே தாழ்வாரத்தில் அணிவகுப்புபோல நடக்கவைத்திருக்கிறார்கள். அவரைப் பார்த்து இன்னும் அதிகமாகச் சிரித்துக்கொண்டே, அவருடைய மகனுக்குத் தன் அப்பாவின் ஆண்குறி மிகவும் வற்றிச் சுருங்கியிருந்தது தெரியுமா எனக் கேட்டிருக்கிறார்கள். நாமாபியா தன்னெதிரே வைக்கப்பட்டிருந்த மஞ்சள், ஆரஞ்சுநிறச் சோற்றை வெறித்தபடியே பேசிக்கொண்டிருந்தான். தலையை நிமிர்த்தியபோது என் அண்ணனின் கண்களில் – சுயநலவாதியான அவனுடைய கண்களில் – கண்ணீர் நிரம்பியிருந்ததைப் பார்த்தேன். என்னால் விவரித்து சொல்ல முடியாத நெகிழ்ச்சியை அவனுக்காக உணர்ந்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து வளாகத்தில் மற்றுமொரு கல்ட் தாக்குதல். இசைத் துறைக் கட்டடத்திற்கெதிரே ஒரு பையனை இன்னொரு பையன் கோடாரியால் வெட்டினான்.

‘இது நல்லதுக்குத்தான்’ என்றாள் அம்மா. அப்பாவும் அவளும் என்சூக்கா காவல் துறைக் கண்காணிப்பாளரை மறுபடியும் சந்திக்கப்போவதற்காகத் தயாராக இருந்தார்கள். ‘எல்லாக் கல்ட் இளைஞர்களையும் கைது செய்துவிட்டதாக அவர்களால் இப்போது சொல்ல முடியாது அல்லவா?’ கண்காணிப்பாளரோடு அதிக நேரம் செலவாகிவிட்டதால் அன்று எனூகுவிற்குச் செல்லவில்லை. ஆனால் அவர்கள் நல்ல செய்தியோடு திரும்பி வந்தார்கள். நாமாபியாவும் அந்த மதுபானக் கடைக்காரனும் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள். கல்ட் இளைஞர்களில் ஒருவன் இன்ஃபார்மராகிவிட்டிருந்தான். அவன் நாமாபியா கல்ட் உறுப்பினன் அல்ல என்பதைச் சொல்லியிருக்கிறான். காலையில் வழக்கத்தைவிடச் சீக்கிரமாகவே கிளம்பினோம். ‘ஜாலாஃப்’ பிரியாணி இல்லாமல். வெயில் அதற்குள்ளாகவே உக்கிரமாயிருந்தது. கார்ச் சன்னல்கள் எல்லாவற்றையும் கீழிறக்கிவிட்டிருந்தோம். அம்மா பதற்றத்தில் இருந்தாள். எதிர்ச்சாரியிலும் பக்கத்துத் தடத்திலும் வரும் வாகனங்களையும் அபாயகரமான திருப்பங்களையும் அப்பாவால் பார்க்க முடியாது என்பதுபோல, ‘நோக்வா யா! ஜாக்கிரதை! பார்த்து ஓட்டுங்கள்!’ என்று அலறுவது அவள் வழக்கம். இம்முறை நைந்த் மைலை அடைவதற்கு முன்பாகவே பலமுறை அவ்வாறு அலறிவிட்டாள். ஒக்பாவையும் வேகவைத்த முட்டைகளையும் முந்திரிக் கொட்டைகளையும் தட்டுகளில் அடுக்கி விற்றுக்கொண்டிருந்தவர்கள் காருக்குக் குறுக்கே அபாயகரமாகக் கடந்துகொண்டிருந்தபோது அம்மா மறுபடியும் கத்தினாள். அப்பா சட்டென்று காரை நிறுத்திவிட்டு, அம்மாவை ‘உஸோவாமாக்கா’ எனக் கூப்பிட்டார். ‘இந்தக் காரை ஓட்டுவது யார், நீயா நானா?’ என்றார்.

அந்த விஸ்தாரமான காவல் நிலைய வளாகத்துக்குள்ளே குடைமரத்தின் கீழே தரையில் கிடந்த ஒருவனை காவலர்கள் இருவர் சாட்டையால் அடித்துக்கொண்டிருந்தார்கள். முதல் பார்வைக்கு அது நாமாபியாவைப் போலத் தெரிந்து என் நெஞ்சுக்குள் எழும்பியது. ஆனால் அவனல்ல. வலியில் துடித்தபடி தரையில் நெளிந்துகொண்டு, காவலர்களின் ஒவ்வொரு கோபோகோ கசையடிக்கும் கத்திக்கொண்டிருந்த அந்தப் பையனை எனக்குத் தெரியும். அவன் பெயர் அபோய். குரூரமான, வேட்டை நாய்போல அசிங்கமான முகம் கொண்டவன். கல்லூரி வளாகத்தில் ‘லெக்ஸஸ்’ காரை ஓட்டிவருவான். அவன் ஒரு ‘பக்கனியர்’ என்று சொல்வார்கள்.

அவன் எழுந்து காவல் நிலையத்துக்குள் செல்வதைப் பார்க்க விரும்பாமல் தலையைத் திருப்பிக்கொண்டேன். அம்மா லஞ்சம் கொடுத்தபோது ‘கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்’ என்று சொல்லும், கன்னங்களில் பழங்குடித் தழும்புகள் கொண்டிருந்த போலீஸ்காரன்தான் காவலுக்கு இருந்தான். எங்களைப் பார்த்ததும் அவன் பார்வையை வேறெங்கோ திருப்பிக்கொண்டான். என் உடம்பெங்கும் முட்களாகச் சிலிர்த்தன. ஏதோ தவறு நடந்திருந்ததாகத் தெரிந்தது. கண்காணிப்பாளரிடமிருந்து வாங்கி வந்திருந்த குறிப்பை என் பெற்றோர் அவனிடம் நீட்டினர். அவன் அதைப் பார்க்க மறுத்தான். விடுதலை உத்தரவு பற்றித் தனக்குத் தெரியும் என்றான். மதுக்கடைக்காரன் ஏற்கனவே விடுதலையாகிவிட்டானாம். ஆனால் இந்தப் பையன் விஷயத்தில் சிக்கலாகிவிட்டதாம். என் அம்மா அலறத் தொடங்கினாள். ‘பையனா? என்ன சொல்கிறாய்? எங்கே என் மகன்?’

அவன் எழுந்து நின்றான். ‘நான் என் மேலதிகாரியைக் கூப்பிடுகிறேன். அவர் சொல்வார்.

அம்மா பாய்ந்து சென்று அவன் சட்டையைப் பிடித்தாள். ‘எங்கே என் மகன்?’ அப்பா அவளை விலக்கினார். அந்தப் போலீஸ்காரன் தன் சட்டையை அம்மா அழுக்குப்படுத்திவிட்டதைப் போலத் துடைத்துக் கொண்டு திரும்பினான்.

அப்பா மிகவும் நிதானமான, மிகவும் உறுதியான குரலில், ‘எங்கே எங்கள் மகன்?’ என்றார். அவன் நின்றான்.

‘அவனைக் கொண்டுபோய்விட்டார்கள் ஸார்’ என்றான்.

‘கொண்டுபோய்விட்டார்களா?’ அம்மா குறுக்கிட்டாள். அவள் இன்னமும் கத்திக்கொண்டுதான் இருந்தாள். ‘என்ன சொல்கிறாய்? என் மகனைக் கொன்றுவிட்டாயா? என் மகனைக் கொன்றுவிட்டாயா?’

‘எங்கே அவன்?’ அப்பா அதே நிதானமான குரலில் கேட்டார். ‘எங்கள் மகன் எங்கே?’

‘என்னுடைய உயர் அதிகாரி நீங்கள் வந்தவுடனே அவரை கூப்பிடச் சொன்னார்’ என்று அவசரமாகத் திரும்பி விரைந்தான்.

அவன் சென்றதும் பயத்தில் எனக்குச் சில்லிட்டது. அவன் பின்னால் ஓடி அம்மா செய்ததைப் போல அவன் சட்டையைப் பிடித்து நாமாபியாவை அவன் அழைத்து வரும்வரை உலுக்க வேண்டும் போலிருந்தது. உயர் அதிகாரி வந்தார். சற்றும் உணர்ச்சியற்ற அவர் முகத்தில் ஏதாவது பாவனை தெரியுமாவெனத் தேடினேன்.

அப்பாவிடம், ‘குட் டே ஸார்’ என்றார்.

‘எங்கள் மகன் எங்கே?’ அப்பா கேட்டார். அம்மா சத்தமாக மூச்சிரைத்துக்கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் நாங்கள் அனைவரும் துப்பாக்கி வெறிபிடித்த இந்தக் காவலர்களால் நாமாபியா கொல்லப்பட்டிருப்பானென்றே சந்தேகப்பட்டுக்கொண்டிருந்தோம் என்பதைப் பின்னால் அறிந்தேன். அவன் எப்படி இறந்தான் என்பதைச் சொல்வதற்கு நல்ல பொய்யைத் தயார் செய்துகொண்டு அந்த அதிகாரி வந்திருப்பதாகத்தான் நினைத்தோம்.

‘எதுவும் பிரச்சினை இல்லை, ஸார். அவனை வேறு இடத்திற்கு மாற்றியிருக்கிறோம். உங்களை இப்போதே அங்கே கூட்டிச் செல்கிறேன்.’ அந்த அதிகாரியின் குரலில் ஏதோ ஒரு நடுக்கம் இருந்தது. அவர் முகம் பாவமற்றிருந்தாலும் அப்பாவின் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டிருந்தார்.

‘மாற்றிவிட்டீர்களா?’

‘விடுதலை உத்தரவு இன்று காலை எங்களுக்கு வந்தது. ஆனால் அவனை ஏற்கனவே இடமாற்றம் செய்துவிட்டிருந்தார்கள். ரோந்து வாகனம் எதுவும் எங்களிடம் இல்லை. அதனால் நீங்கள் வருவதற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன். உங்கள் வண்டியிலேயே போய்விடலாம்.’

‘அவன் எங்கே இருக்கிறான்?’

‘வேறோரிடத்தில். உங்களை அங்குக் கூட்டிச் செல்கிறேன்.’

‘எதற்காக அவன் இடம் மாற்றப்பட்டான்?’

‘அப்போது நான் அங்கே இல்லை, ஸார். நேற்று அவன் முறைகேடாக நடந்துகொண்டதாச் சொன்னார்கள். அதனால் அவனைத் தனிச்சிறைக்கு மாற்றிவிட்டார்கள். ஏற்கனவே அந்தத் தனிச்சிறையில் இருந்தவர்களை வேறொரு இடத்திற்கு மாற்றியிருக்கிறார்கள்?’

‘முறைகேடாக நடந்துகொண்டானா? அப்படியென்றால்?’

‘அப்போது நான் இங்கே இல்லை, ஸார்.’

அம்மா உடைந்த குரலில், ‘என் மகனிடம் என்னைக் கூட்டிச் செல்லுங்கள்! இப்போதே என் மகனிடம் என்னைக் கூட்டிச் செல்லுங்கள்!’ என்று வீறிட்டாள்.

காரின் பின்னிருக்கையில் காவல் அதிகாரியோடு அமர்ந்தேன். அம்மாவின் ட்ரங்க்பெட்டியைத் திறந்தால் அடிக்கிற பழைய கற்பூரவாசனை அவரிடமிருந்து வந்தது. அப்பாவுக்கு அவர் வழி சொல்லிக்கொண்டு வந்ததைத் தவிர எங்களிடையே எந்த உரையாடலும் இல்லை. பதினைந்து நிமிடங்கள் நீடித்த அந்தப் பயணத்தில் அப்பா அதுவரை நான் அறிந்திராத வேகத்தில் – என் இதயம் அடித்துக்கொண்டதைப் போன்ற படுவேகத்தில் – காரை ஓட்டினார். அந்தச் சிறிய வளாகம் வெறிச்சோடியிருந்தது. வெட்டப்படாமல் பீறிட்டு வளர்ந்த புற்களும் புதர்களும் திட்டுத்திட்டாக மண்டியிருந்தன. பழைய பாட்டில்களும் பிளாஸ்டிக் பைகளும் காகிதங்களும் எல்லா இடங்களிலும் சிதறியிருந்தன. அப்பா காரை நிறுத்துவதற்கு முன்பே காவல் துறை அதிகாரி கதவைத் திறந்து பாய்ந்து இறங்கினார். எனக்கு மீண்டும் பயம் சில்லிட்டது. நகரின் கைவிடப்பட்ட பகுதி. இதுவரை சாலையில்லாத தடத்தில்தான் வண்டியில் வந்திருக்கிறோம். காவல் நிலையம் என்பதற்கான அடையாளமே கண்ணில் படவில்லை. காற்று ஸ்தம்பித்திருக்க, ஒரு விநோதமான வெற்றுணர்வு அந்த இடத்தில் கவிந்திருந்தது. காவலர்கள் நாமாபியாவோடு வெளியே வந்தார்கள். அதோ என் அழகிய சகோதரன் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தான். தூரத்திலிருந்து பார்க்கும்போது அவனிடத்தில் மாற்றம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அருகில் வந்ததும் அம்மா அவனைக் கட்டிக்கொள்ளப் பாய்ந்தபோது முகத்தைச் சுளித்து விலகிக்கொண்டான். அவன் இடது கரம் முழுக்கப் பட்டை பட்டையாக வீங்கியிருந்தது. மூக்கின் அடியில் ரத்தம் கட்டியாக உறைந்திருந்தது.

‘நாமாபியா, கண்ணே, எதற்காக இவர்கள் உன்னை இப்படி அடித்திருக்கிறார்கள்?’ அம்மா காவல் அதிகாரியிடம் திரும்பினாள். ‘என் பிள்ளையை எதற்காக இப்படி அடித்திருக்கிறீர்கள்?’

அவர் தோளைக் குலுக்கிக்கொண்டார். அவர் தோரணையில் ஒரு புதிய அகந்தை வந்திருந்தது. நாமாபியாவுக்கு நடந்தது எதுவுமே அவருக்குத் தெரிந்ததாகத் தெரியவில்லை. ஆனாலும் அம்மாவிடம் அவர் வெடித்தார்: ‘உங்கள் பிள்ளைகளை உங்களால் ஒழுங்காக வளர்க்க முடியவில்லை. பல்கலைக்கழகத்தில் நீங்களெல்லாம் பணிபுரிவதால் முக்கியமான பிரஜைகள். உங்கள் பிள்ளைகள் முறைகேடாக நடந்துகொண்டால் அவர்கள் தண்டிக்கப்படக் கூடாது என்கிறீர்கள். நீங்கள் மிகவும் அதிருஷ்டசாலி, மேடம். மிக மிக அதிருஷ்டசாலி இவனை விடுதலை செய்ததே பெரிய விஷயம்.’

‘வா போகலாம்’ என்றார் அப்பா.

கார்க் கதவைத் திறந்தார். நாமாபியா உள்ளே ஏறினான். கார் வீட்டுக்குக் கிளம்பியது. அப்பா காவல் துறைச் சோதனைச் சாவடிகள் எதிலும் நிறுத்தவில்லை. ஒரு சாவடியில் எங்கள் கார் வேகமாகக் கடந்தபோது ஒரு போலீஸ்காரன் துப்பாக்கியை நீட்டி எங்களை மிரட்டுவதுபோல ஆட்டினான். அம்மா ஒரே ஒருமுறைதான் பேசினாள். ‘நைன்த் மைலில் நின்று ஒக்பா வாங்கிக்கொள்ளலாமா?’ என்று நாமாபியாவைக் கேட்டாள். அவன் வேண்டாம் என்றான். கடைசியில் என்சூக்காவிற்கு வந்து சேர்ந்ததும்தான் அவன் பேசினான்.

‘நேற்று அந்த முதியவரிடம் போலீஸ்காரர்கள் குளிப்பதற்கு அரை வாளி தண்ணீர் இலவசமாக வேண்டுமா என்று கேட்டார்கள். அவர் வேண்டும் என்றார். உடனே அவர்கள் அவரை உடைகளைக் களைந்துவிட்டுத் தாழ்வாரத்தில் நடந்துகாட்டச் சொன்னார்கள். என் சகக்கைதிகள் எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் சிலர் மட்டும் ஒரு கிழவரை இப்படி நடத்துவது தவறு என்றார்கள்.’ நாமாபியா நிறுத்தினான். அவன் கண்கள் தொலைவை வெறித்தன. ‘நான் அந்தக் காவலர்களைப் பார்த்துக் கத்தினேன். அந்தக் கிழவர் அப்பாவி. உடல்நலமில்லாமல் இருக்கிறார். அவரை இங்கே அடைத்துவைத்திருப்பதால் அவர் மகனை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. அவருக்கே அவன் எங்கேயிருக்கிறான் என்பது தெரியாது என்றேன். அவர்கள் என்னை வாயை மூடு என்று கத்தினார்கள். வாயை மூடாவிட்டால் தனிச்சிறைக்கு என்னைக் கொண்டுபோய்த் தள்ளிவிடுவதாக மிரட்டினார்கள். நான் கவலைப்படவில்லை. நான் வாயை மூடவில்லை. அதனால் அவர்கள் என்னை அடித்து இழுத்துச்சென்று தனிச்சிறையில் அடைத்துவிட்டார்கள்.

நாமாபியா இந்த இடத்தில் பேசுவதை நிறுத்தினான். நாங்கள் அவனை மேலும் எதுவும் கேட்கவில்லை. ஆனாலும் அவன் குரலுயர்த்திக் கத்துவதை மனத்திற்குள் கற்பனை செய்து பார்த்தேன்.

அந்தப் போலீஸ்காரர்களை அறிவுகெட்ட மூடர்கள், முதுகெலும்பில்லாத கோழைகள், ஸேடிஸ்ட்டுகள், வேசி மகன்கள் என்று என் அண்ணன் திட்டுவதைக் கற்பனை செய்து பார்த்தேன். அந்தக் காவலர்கள் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி, உயர் அதிகாரி திறந்த வாயை மூடாமல் அதிர்ந்துபோய்ப் பார்த்துக்கொண்டிருந்தது, பல்கலைக்கழகத்திலிருந்து வந்த இந்த அழகான இளைஞனின் துணிச்சலைக் கண்டு சகக் கைதிகள் ஸ்தம்பித்துப்போனது எல்லாவற்றையும் கற்பனை செய்து பார்த்தேன். இந்தக் கிழவரும் ஆச்சரியமும் பெருமிதமுமாக அண்ணனை ஏறிட்டுப் பார்ப்பதையும் உடைகளைக் களைய அமைதியாக மறுப்பதையும் கற்பனை செய்து பார்த்தேன். தனிச்சிறையில் என்ன நடந்தது என்பதையோ புதிய இடத்தில் என்ன நடந்தது என்பதையோ நாமாபியா சொல்லவில்லை. புதிய இடம் என்று சொல்லப்படுகிற அந்த இடத்திற்குக் கொண்டுசெல்லப்படுபவர்கள்தாம் பிறகு மாயமாக மறைந்துபோவார்கள். தனக்கு நடந்ததை ஒரு சுவாரஸ்யமான கதையாக, நாடகத்தனமாக விவரிப்பது அவனுக்கு எளிதான, இயல்பான காரியமாகவே இருந்திருக்கும். ஆனால் அவன் சொல்லவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *