தண்ணீரில்லாத தாமரைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 9, 2018
பார்வையிட்டோர்: 5,777 
 

அன்று வந்திருந்த கடிதங்களை பிரித்து படித்துக்கொண்டிருந்தார் பிரபல வார இதழின் ஆசிரியர்.

முதல் கடிதம்..

மதிப்பிற்குறிய ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்.

தங்கள் இதழில் சென்ற வாரம் வெளிவந்த “தண்ணீரில்லாத தாமரைகள்” – சிறுகதையைப் பற்றிய என் விமர்சனமே இந்த கடிதம்.

அந்த சிறுகதை மிக நல்ல சிறுகதை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் சென்ற நூற்றாண்டில் வந்திருக்கவேண்டிய சிறுகதை என்பது என் அபிப்ராயம்.

அதன் மையக்கருத்தை எடுத்துக்கொள்ளுங்கள், கணவனால் கைவிடப்பட்ட ஒரு இளம்பெண், தன் மகளை வளர்க்க மிகுந்த சிரமப்படுவதும் பின் தன் கடைசி காலங்களில் திரும்பி வந்த கணவனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரை தியாகம் செய்வதாக செல்கிறது அந்த கதை.

சற்றே சிந்தித்துப் பாருங்கள். இந்த கதை இந்த நூற்றாண்டிற்கு கொஞ்சமேனும் ஒத்துவருமா?. இப்போதிருக்கும் பெண்கள், பாரதி கண்ட புதுமைப் பெண்களாக வலம் வரும் நேரத்தில், பெண்களால் பெரிதும் மதித்து போற்றப்படும் தங்கள் இதழில் இன்னமும் இது போன்ற பத்தாம் பசலித்தனமான கருத்துக்களை கொண்ட கதைகளை வெளியிடலாமா? அப்படி வெளியிட்டால் அது இன்றைய நவயுக இளைஞர்களையும், யுவதிகளையும் தவறான பாதைக்கு இட்டுச் செல்லாதா?. இந்த என் கடித்ததின் மைய கருத்தை தாங்கள் முழுமனதுடன் சிந்திப்பீர்கள் என்று நம்புகிறேன்.

தங்கள் இதழின் நிறுவனரும் ஆசிரியருமான அமரர் கமலேஷ், பெண் சுதந்திரம் விதவைத் திருமணம், பெண்கள் சுய சிந்தனையுடனும், சுயசார்புடனும் இருத்தல் போன்ற தன் புதுமையான கருத்துக்களை ஐம்பதுகளிலேயே வெளிப்படுத்தியவர் என்பதை உங்களுக்கு நினவுபடுத்த விரும்புகிறேன்.

நிற்க,

இந்த கடிதத்துடன் ‘வேரை தண்டித்த விழுதுகள்’ என்னும் சிறுகதையை இணைத்துள்ளேன். இந்த கதையில் வரும் நாயகி சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருந்து கொண்டு தன் தாயை நம்ப வைத்து ஏமாற்றிய ஒருவனை, அவன் செய்த குற்றத்திற்காக அவனது கடைசி காலங்களில் தனிமைப்படுத்தி, தண்டனையளிப்பதாக எழுதியிருக்கிறேன். அந்த கதாநாயகி திருமணம் செய்துகொள்ளாமல் தான் விரும்பியவனுடன் சேர்ந்து(லிவிங் டுகெதர்) அவள் தந்தை வசித்து வரும் அதே வீட்டின் கீழ் தளத்தில் வாழ்கிறாள் என்பதே இந்த கதையின் சிறப்பு.

இது போன்ற புதுமையான சிந்தனையைத்தான் தாங்களும் விரும்புவீர்கள், இந்த சிறுகதையை கட்டாயம் பிரசுரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மிகுந்த எதிர்ப்பார்ப்புடன்

ராதா.

கடிதத்தை நாங்காக மடித்து இரண்டையும் எடிட்டரிடம் கொண்டு சென்று கொடுத்தார் ஆசிரியர்.

கடிதத்தையும் சிறுகதையையும் படித்துப் பார்த்த எடிட்டர், “அப்படியே போட்டுடுங்க நல்லாருக்கு” என்றார்.

சிறுகதை பிரசுரமான இரண்டு நாட்களில்

அப்போது வந்த கடிதங்களை படித்த்க்கொண்டிருந்தார் ஆசிரியர்.

முதல் கடிதம்.

மதிப்பிற்குறிய ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்..

தங்கள் இதழில் சென்ற வாரம் வெளிவந்த ‘வேரை தண்டித்த விழுதுகள்’ – சிறுகதையைப் பற்றிய என் விமர்சனமே இந்த கடிதம்.

ஏற்கெனவே கலாச்சார சீர்கேடுகள் மலிந்திருக்கும் இந்தக் நேரத்தில், பெற்றவர்களை போற்றிப் பாதுகாக்கபடவேண்டிய இந்த காலக்கட்டத்தில், திருமணமாகாமல் சேர்ந்திருப்பதும், பெற்றவர்களை தண்டிப்பதும் நமது கலாச்சாரத்திற்கு ஒத்துவருமா? என்று சிந்தித்து இது போன்ற சிறுகதையை தாங்கள் தவிர்த்திருக்கவேண்டும் என்பது என் எண்ணம்.

தங்கள் இதழின் நிறுவுனரும் ஆசிரியருமான அமரர் கமலேஷ், கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றிற்கு காவலராகவே திகழ்ந்தார், அதனை தன் எழுத்துக்களின் மூலமும் வெளிப்படுத்தினார் என்பதை உங்களுக்கு நினவுபடுத்த விரும்புகிறேன்.

நிற்க.

இந்த கடிதத்துடன் ‘நிழலைத் தாங்கும் நிஜங்கள்’ என்னும் சிறுகதையை இணைத்துள்ளேன். இந்த கதையில் வரும் நாயகி, தன் தாயைப் பிரிந்து சென்ற தந்தையை அவருடைய தவறுகளை மன்னித்து, கடைசி காலங்களில் எப்படி பாதுகாக்கிறாள் என்பதே கதையின் மையக் கருத்து.

இதைனையே தாங்களும் விரும்புவீர்கள் என்றும் சிறுகதையை பிரசுரிப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.

மிகுந்த எதிர்ப்பார்ப்புடன்

மோகன்.

பி.கு. சிறுகதைக்கான காசோலை அனுப்பும்போது, முகவரியில் ‘மாடி போர்ஷன் மோகன்’ என்று தவறாமல் குறிப்பிடவும்.

கடிதத்தையும் சிறுகதையையும் படித்துப் பார்த்த ஆசிரியர், இதனை பிரசுரித்தால் அடுத்து என்ன மாதிரி கடிதம் வருமோ என்ற எண்ணத்தில் கடிதத்தை கவரில் செலுத்திக்கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக சென்ற எடிட்டர் ”அட அடுத்த வாரத்துக்கு கதை ரெடியா? கலக்கறீங்க சார் ஜமாய்ங்க” என்று சிரித்துக்கொண்டே தன் அறைக்கு சென்றார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *