தசமங்கலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 1,465 
 

(1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எனது மதிப்புக்குரிய ஆசிரியப் பெருந்தகை அமரரான செய்தி நாலைந்து நாட்கள் கழித்துத்தான் எனக்குத் தெரியவந்தது. அவரிடம் படித்த மற்றொரு மாணவர் பெரும் துயரத்தோடு அதனைத் தெரிவித்தார். நேரில் சென்று என் இறுதி அஞ்சலியைச் செலுத்த முடியவில்லையே என்று எனக்குப் பெரிய கவலை!

வாத்தியாரின் மரணச் செய்தி ரேடியோவில் அறிவிக்கப்பட்டதாம். கேட்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

என் வாரிசுகளினால் வந்த வினை. வானொலியில் எந்த நேரமும் சினிமாப் பாட்டுகள் தான் போய்க்கொண்டிருக்க வேண்டும். செய்தி வாசிக்கும் நேரங்களில் சிரமத்தோடு மீற்றரைத் திருப்பி விடுவேன். செய்தி முடிவுற்றதுதான் தாமதம், மறுபடியும் பாட்டுக்கள் ஒலிக்கத் தொடங்கிவிடும். அதனால், மரண அறிவித்தல்களைக் கேட்க முடியாது போய்விடும்.

எப்படியும் வாத்தியார் வீட்டுக்குப் போய் அவர் குடும்பத்தவரிடம் என் ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்க வேண்டும் என்ற மனம் துடித்துக் கொண்டிருந்தது.

கடைசியாகப் பத்து ஆண்டுகளுக்கு முன் அவரைச் சந்தித்தேன். அவரிடம் படித்து அப்பாடசாலையிலிருந்து வெளியேறிய பின் முதலும் கடைசியுமாக அவரைச் சந்தித்தது அந்த ஒரு தடவைதான்!

ஆசிரியப்பயிற்சி பெற்று பதினைந்து ஆண்டுகள் வரை பதுளையிலும் கொழும்பிலுமாகப் பணியாற்றிவிட்டுச் சொந்த ஊருக்கு வந்தேன். யாழ்ப்பாணப் பட்டினத்தில் குடியேறினேன். இருந்தும் நான் பிறந்த வராத்துப்பளைக்கிராமத்துக் கண்மையில் புதிதாகத் தொடங்கப்பட்ட பாடசாலையொன்றில் சிறிது காலம் பணியாற்றுமாறு என்னைக் கேட்டிருந்தார்கள். நான் ஒப்புக் கொண்டேன்.

அதிகாலை ஏழு மணிக்கு யாழ் பட்டினத்தில் பஸ் எடுக்க வேண்டும். எட்டு மணியளவில் பருத்தித்துறை புலோலிக் கிராமக் கோட்டடியில் இறங்கி, பாடசாலை இருக்குமிடத்துக்குச் சுமார் ஒன்றரை மைல் தூரம் நடந்து செல்ல வேண்டும். அரைவாசித் தூரம் தார் றோட்டு, அப்புறம் ஊர்மனைக்குள் சிறிது தூரம் நடந்தபின் மிகுதித்தூரத்தைப்பனங் கூடல்கள் நிறைந்த காணிகளுக்கூடாகக் கடக்க வேண்டும்.

ஒற்றையடிப் பாதை காலடி பட்டுப் பட்டுப் புற்கள் அழிந்து மணற் கோடாக இருக்கும். கரையில் பலவித புற்களும் காரைப் பற்றையுமாக வரண்டு பரட்டை தட்டிய பூமி. தொடக்க மணியடிப்பதற்கு முன் எப்படியும் பாடசாலை வாசலையடைந்து விட வேண்டுமென்ற துடிப்பில் அவசர நடை!

அன்றும் அப்படித்தான் அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்து முன்னேறிக் கொண்டிருந்த போது, அதே தடத்தில் எதிரே ஒருவர் வந்து கொண்டிருந்தது தெரிந்தது.

கட்டை உருவம். உயர்த்திக் கட்டிய வேட்டி, தோளில், கழுத்தைச் சுற்றி ஒரு துண்டு. நிதானமாக நடந்து வந்தார். என் பார்வைக்குக் கிட்டிய தூரம் வந்த போது தான், தலைமயிர் உச்சி பிளந்து சீவி இருந்தது தெரிந்தது. ஆ! எனது ஆசிரியர்தான்! வாத்தியார் தான்! முடி சற்று வெளிறி விட்டது.

எனக்கு அருகே வந்ததும், பக்குவமாக, மெல்ல, பாதையை விட்டு நகர்ந்து விலகி நின்றார்.

எனக்குப் பகீரேன்றது! திடுதிப்பென்று, நான் மறுபக்கம் வழிவிலகி, மிகவும் மரியாதை தோய்ந்த குரலில், “வணக்கம் வாத்தியார்!” என்று தலை குனிந்து நின்றேன்.

வெளுத்த இமைப் புருவங்களை நிமிர்த்தி, என்னை உற்றுப் பார்த்தபடியே, “ஆர் மோனை நீ?” என்று மெதுவான குரலில் கேட்டார்.

“நான் உங்களிட்டைப் படிச்சனான் வாத்தியார். தம்பித்துரை!” என்று பணிவுடன் சொன்னேன்.

“ஆ! தம்பித்துரையே? நினைவிருக்குது மோனை. எங்கை மோனை இந்த வெள்ளணத்திலை?”

“உந்தப் பள்ளிக்குடத்திலை படிப்பிக்கிறன் வாத்தியார்,” என்று சொல்லி, அவருக்குப் பின்பக்கமாகச் சற்றுத் தூரத்திலுள்ள பாடசாலையைச் சுட்டிக் காட்டுகிறேன்.

அவர் கண்களில் பளிச்சென ஒளி வீசியது! முகம் மலரச் சிரித்துக் கொண்டே, “படிப்பிக்கிறியா மோனை? நல்ல காரியம் மோனை; கெதியாப் போ மோனை!” என்று சொல்லிக் கொண்டே, பின் ககம் தரும்பிப் பாடசாலையைப் பார்த்தார்.

“நல்லாப் படிப்பிக்கோணும் மோனை!” என்று அழுத்தமான குரலில் சொல்லி கொண்டே, என் தோளில் கை வைத்துத் தடவினார். பின்னர் பாதையிலிறங்கி நடக்கத் தொடங்கியவர் , சட்டெனத் திரும்பி, இமைப் புருவங்களைக் குறுக்கி, “உதாலை எங்கையிருந்து வாறாய்?” என்று கேள்வி எழுப்பினார்.

“யாழ்ப்பாணத்திலிருந்து வாறன் வாத்தியார்!” “ஏன், பெண்சாதி பிள்ளையள் அங்கையே?” நான் தலை குனிந்த படி, “ஓம் வாத்தியார்!” என்றேன்.

சரியான தூரதமருக்குங்கள் பில் நடக்க,

“சரியான தூரந்தான். என்ன செய்யிறது?…….. கெதியாப் போ மோனை. பிள்ளையள் பாத்துக்கொண்டிருக்குங்கள் ….” என்றவர் “நல்லாப் படிப்பிக்கோணும் மோனை!’ என்று மீண்டும் கூறியபடி பாதையில் நடக்கத் தொடங்கினார்.

நான் அவர் பக்கம் பார்வையைத் தொடர்த்தி, “எப்படி வாத்தியார், சுகமாயிருக்கிறியளோ?” என்று கேட்டேன்.

“சுகமாயிருக்கிறன் மோனை” என்று கூறியபடி திரும்பி, என்னைப் பார்த்துச் சிரித்தார். “பாக்கத் தெரியேல்லையெ?”

நான் இரண்டடி அவர் கிட்ட நகர்ந்தேன். “பிள்ளையள் எப்படி இருக்கினம் வாத்தியார்?”

“அவங்கள் நல்லாயிருக்கிறாங்கள் மோனை. ஒருத்தன் டொக்ரராயிருக்கிறான். ஒருத்தன் இஞ்சினியர். பாங்கிலை ஒருத்தன் வேலை செய்கிறான். ஒரு பெட்டை ரீச்சர்…எனக்கு ஒரு குறையுமில்லை…நான் உங்களைச் சும்மாவெ மோனை படிப்பிச்சனான்? போ மோனை, போ! பிள்ளையள் சத்தம் போடப் போகுதுகள்..”

அவர் நடக்கத் தொடங்கினார். ஒரு பரபரப்புமில்லாத, நிதானமான, ஆறுதலான நடை.

நான் சிறிது நேரம் வைத்த கண் வாங்காமல், அவர் போகும் திசையைப் பார்த்துக் கொண்டு நின்று விட்டுப் பாடசாலையை நோக்கி வேகமாக நடக்கிறேன்.

தேவாரம் முடிந்து மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்லும் நேரம், நானும் என் வகுப்புக்குள் நுழைகிறேன்.

ஊருக்குப் பக்கத்திலுள்ள கற்கோவளம் மெதொடிஸ்ற் மிஸன் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தபின், தொடர்ந்து படிப்பதற்காகச் சற்றுத் தொலைவிலுள்ள சிவப்பிரகாச வித்தியாசாலையில் என்னைச் சேர்த்து விட்டார்கள்.

புதிய பாடசாலை அது. அக்கம் பக்கங்களிலுள்ள மெதொடிஸ்த பாடசாலைகள், கத்தோலிக்கப் பாடசாலைகளைப் பின்னடையச் செய்வதற்காக உருவாக்கப்பட்டது. புதிய கட்டடம். எஸ். எஸ்.ஸி. வரை வகுப்புகள். பாடசாலை உயர் நிலையடையச் செய்வதற்காகப் பொறுப்பு வாய்ந்த ஆசிரியர்கள். அதனைக் கட்டியெழுப்புவதற்காகக் கடமையுணர்ச்சி மிக்க தலைமையாசிரியராகத் தம்பையா வாத்தியாரைத் தேர்ந்தெடுத்தார்கள்.

வாத்தியாரின் வீடு புற்றளையில். பாடசாலை தும்பளையில். பாடசாலைக்கும் வீட்டுக்கு மிடைப்பட்ட தூரம், எப்படியும் இரண்டரை மூன்று மைல் இருக்கும். சைக்கிள்கள் நம்மவர் பாவனைக்கு வந்து விட்டன. என்றாலும் தம்பையா வாத்தியார் சைக்கிள் ஓடமாட்டார்; பழகவில்லை. அதிகாலை எழுந்து நடந்தே வருவார் . ஆசிரியரோ பிள்ளைகளோ பாடசாலைக்குள் நுழைவதற்கு முன் அவர் நுழைந்து விடுவார்.

பாடசாலை மண்டபத்தின் ஓரமாகவிருக்கும் சதுர மேடையிலுள்ள தனது விசாலமான மேசையில், இடாப்புகள் மற்றும் கோவைகளை அறையிலிருந்து எடுத்து வைத்து வேலை தொடங்கி விடுவார்.

பயிற்சி பெற்ற ஆசிரியர் தான் அவரது உத்தியோக தராதரம். தமிழ்ப் பண்டிதர், கேம்பிறிட்ஜ் சீனியர் சித்தி பெற்றவர். இவை அவரது மேலதிக உன்னதத் தகுதிகள். எஸ். எஸ்.ஸி. வகுப்புக்குச் சமயம், கணிதம், இலக்கியம் கட்டாயம் படிப்பிப்பார். ஆங்கிலக் கணிதப் புத்தகத்திலிருந்து கணக்குப் படிப்பிப்பார்.

பாடசாலையிலிருந்து, ஆசிரியர் மாணவர் உட்படச் சகலரும் வெளியேறிய பின்னர் தான், அவர் வீட்டுக்குக் கிளம்புவார்.

ஆறாம் வகுப்பில் சேர்ந்த நான், எல்லா வகுப்புகளையும் தாண்டி, எஸ். எஸ். ஸி. க்கு வந்தபோது, அவர் தனது வழமையான பாடங்களைப் படிப்பித்தார். சமய பாடமென்றால் அகோரம்! தேவாரங்கள் பாடமாக்கி ஒப்புவிக்க வேண்டும். மாணவர்களுக்கு நடுக்கம். பாடசாலை தொடங்கிய முதலாவது பாடமாதலால், அவர் தனது நிர்வாக அலுவல்களின் காரணமாக, இடைக்கிடை வகுப்புக்கு வரமாட்டார்.

“கடவுளே ! இன்றைக்கு வரக் கூடாது. உமக்கு நேர்த்தி வைக்கிறோம்!” என்று மன்றாடுவோம். அவர் வரவில்லையென்றால், உடனடியாக, தலைக்கு ஒரு சதம் அரைச் சதமாகச் சேர்த்துப் பாடசாலையில் உள்ள சரஸ்வதி கோயில் உண்டியலில் காணிக்கை இடுவோம். சமயம் படிக்காதிருக்க தெய்வத்துக்கே லஞ்சம்!

கணக்குப் பாடம் வகுப்பறையில் நடக்கும். விளங்கப்படுத்த அவருக்குக் கரும்பலகை வேண்டும். எழுதுவதற்கு எங்களுக்கு மேசை வேண்டும். அதன் காரணமாக வகுப்பறையிலேயே நடக்கும். ஆனால், இலக்கிய பாடம் வெளியே தான் நடைபெறும்!

பாடசாலைக்கு முன் பக்கத்தில் நன்கு செழித்த வேப்பமரம் ஒன்று நின்றது. அந்த மரத்தின் கீழே தான் வகுப்பு. ஆறே ஆறு மாணவர்தான். ஐந்து ஆண்கள். ஒரேயொரு பெண். நாங்கள் அரை வட்டமாக நிற்போம். வாத்தியார் ஓரத்தில் நின்று படிப்பிப்பார் . கதிரை என்ற பேச்சுக்கே இடமில்லை.

உரைநடைச் சிலம்பு, குசேலோபாக்கியானம் என்பவை பாடப் புத்தகங்கள். உரைநடைச் சிலம்பு உரைநடை இலக்கியம். பண்டிதர்கள், வித்துவான்கள் எழுதிய கட்டுரைகளை வாசித்துச் சுவை தோன்ற விளங்கப்படுத்துவார்.

குசேலோபாக்கியானம் வல்லூர்த் தேவராஜபிள்ளையின் செய்யுள் இலக்கியம். குசேலர் சரிதை. ஆடிப்பாடி அங்க அசைவுகள் செய்து படிப்பிப்பார்.

குசேலர் இருபத்தேழு பிள்ளைகளைப் பெற்றெடுத்தார் என்று சொல்லும் போது, “அடேயப்பா! சரியான விண்ணன் தான்!” என்று பாராட்டு வழங்குவார்.

எங்கள் வயதுக்குரிய உணர்வுகளுக்கு ஒத்தடம் தரும் வகையில், அபிநயத்துடன் இசைந்த வாத்தியாரின் கற்பித்தல் எங்களை வேறு உலகுக்குக் கொண்டு சென்றுவிடும்!

வாத்தியாரின் வீட்டைக் கண்டு பிடிக்க எனக்கு எவ்விதசிரமமும் இருக்கவில்லை. புற்றளையில் தான் அவர் வீடு என்பது தெரிந்த விடயம். ஆனால், ஒருபோதும் அங்கு சென்றதில்லை. பிரதான வீதியிலிருந்து ஒழுங்கையில் இறங்கியதும், எதிர்ப்பட்ட ஒருவரிடம் விசாரித்தேன்.

பேரோடு புகழோடு வாழ்ந்த மனிதர். அண்மையில் தான் காலமானார் என்பதால் பெரும் அக்கறையோடு வழிகாட்டினார் அவர்.

வெகு சுலபமாக வீட்டை அடைந்தேன். கேற்றைத் திறந்து உள்ளே நுழைந்ததும், முற்றத்தில் நின்ற ஒருவர், அன்புடன் உள்ளே கூட்டிப் போய் உட்கார வைத்தார். இளைஞர் ஒருவரும் ஒரு பெண்பிள்ளையும் வந்து வரவேற்றனர்.

“நான் வாத்தியாரிடம் படித்த மாணவன், அன்றைக்கு வரச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை…” என்று விநயமாகக் கூறினேன்.

“அதனால் என்ன? எல்லோருக்கும் வசதியும் கிடைக்க வேணுமே?” என்று கூறினார் இளைஞர்.

வழக்கமாக ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில் கூடியிருக்கும் உறவினர். சுற்றத்தவர் என்று சோகத்தினிடையிலும் வீடு கலகலப்பாக இருந்தது. அங்கு மிங்குமாகச் சிறுவர்கள் ஓடித் திரிந்தார்கள். அவர்களில், இரண்டொருவரின் உடைகள் சற்று வித்தியாசமாக இருந்தமை மனதில் பதிந்தது. அத்துடன், அவர்கள், ‘மம்மி’, ‘டடி’ என்று அழைத்துத் தங்கள் தேவைகளைக் கேட்டதையும் அவதானித்தேன்.

வாத்தியாரின் பிள்ளைகள் ஒன்றிரண்டு போர் வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கிறார்கள்; அவர்களின் பிள்ளைகள் தான் இவர்கள் என்று ஊகித்தேன்.

என்னோடு உரையாடிக் கொண்டிருந்தவர்கள், தாங்களும் வாத்தியாரின் பிள்ளைகள் தான் எனக் கூறினார்கள்.

என் மனதில் சந்தேகம் கிளம்பியது. கடைசியாக நான் வாத்தியாரைச் சந்தித்த வேளை, அவரது பிள்ளைகளைப் பற்றி விசாரித்த போது, நான்கு பிள்ளைகளைப் பற்றி மட்டும் கூறிவிட்டு, “அவங்கள் நல்லாயிருக்கிறாங்கள் மோனை!” என்று சொன்னது நினைவுக்கு வந்தது. இப்போது, முன்னால் இருக்கிற இருவரும் அவருடைய பிள்ளைகள் தான் என்றால்..?

கடைசியாக நான் வாத்தியாரைச் சந்தித்து உரையாடியதை அவர்களோடு பகிர்ந்து கொண்டேன். வாத்தியாருக்கு நாலு பிள்ளைகள் மட்டுந்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்…” என்று இழுத்தேன்.

இருவரும் அகம் மலரச் சிரித்தார்கள். “எங்களில் பத்துப் பேர்! நீங்கள் அப்பாவைச் சந்தித்தபோது, அந்த நாலு பேர் தான் படித்து மேலே வந்தவர்களாயிருக்கவேணும். எல்லோரும் படிப்பால் முன்னுக்கு வந்துள்ளோம். இரண்டு டொக்ரர்மார், இஞ்சினியர் ஒருவர், கட்டிடக் கலைஞர், கணக்காளர், ஆசிரியர் இரண்டு பேர், வங்கியாளர்..நான் யூனிவர்சிற்றியில் படிக்கிறான். இவ, ஏஎல் எடுத்திட்டிருக்கிறார்…”

நான் மகிழ்ச்சிப் பெருக்கினால் முகம் மலரச் சிரித்துக் கொண்டிருந்தேன்.

“அப்பாவின் தூய்மையான சேவைக்கு உரிய பலன் கிடைத்திருக்கிறது!” என்று ஆனந்தம் பொங்கத் தெரிவித்தேன்.

பெண் பிள்ளை தேநீர் கொண்டு வந்து தந்தாள்.

“வந்தது ஆறுதலாக இருக்கிறது. உங்களைக் கண்டது மிகவும் சந்தோஷம்…எனது கவலையை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்!” என்று சொல்லி விட்டு நான் விடை பெற்றேன்.

இருவரும் வாசல் வரை வந்து வழியனுப்பினார்கள்.

கேற்றைத் திறந்து சாத்தியபொழுது, தூணில் பொறித்திருந்த எழுத்துக்கள் என் கண்களில் பட்டன!

என் கண்கள் அகல விரிந்தன. அந்த எழுத்துக்களையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“வாத்தியாரே! நீங்கள் பெரும் உத்தமர் ஐயா! பிறர் பிள்ளை தலை தடவ, தன் பிள்ளை தானே வளரும்!’ என்ற உண்மைத் தத்துவத்தின்படி வாழ்ந்து காட்டிய பெருமைக் குரியவர் ஐயா!”

மனதில் அவரைப் போற்றியவாறே வழி நடந்தேன்.

நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து மெல்லச் சிரிப்போம். “வறுமையால் வாடிய அந்த இருபத்தேழு பிள்ளைகளுக்கும் எப்படிச் சாப்பாடு போடுவது?” என்று கேட்டு, வயிற்றினை எக்கித் தடவுவார். “இருபத்தேழு பிள்ளைகளும் சாப்பிட்ட பாத்திரங்களை வழித்து நக்கினாலே பெத்தவளுக்கு வயிறு நிரம்பி விடுமே!” என்று ஆறுதல் படுவார்.

உடனேயே, “வருடம் ஒரு பிள்ளை என்ற கணக்கில் பெற்றிருந்தாலும் கூட, கடைசிப் பிள்ளையைப் பெறும் போது, இருபது வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் ஏழு பேர் இருந்திருப்பார்களே, அவர்கள் உழைக்கத் தொடங்கியிருப்பார்களே! பின், அந்தக் குடும்பத்தில் வறுமைக்கிடமேது?” என்று தர்க்க ரீதியாகவும் விமர்சிப்பார்.

அதே சமயம், “குசேலரிடம் கண்ணபிரான் கொண்டிருந்த நட்பின் மேன்மையைச் சொல்ல வந்த வல்லூர்த் தேவராஜபிள்ளை, இந்த உண்மை நிலையைக் கவனிக்கத் தவறி விட்டாராக்கும்!” என்று அதற்கு நியாயமும் கற்பிப்பார்.

இவையெல்லாம் போகட்டும்!

வறுமையின் கொடுமை தாங்காது, குடிசையிலிருந்த பிடி அவலைக் கையில் எடுத்துக் கொண்டு, குசேலர், தன் ஆத்ம நண்பனான கண்ணபரமாத்மாவைத் தேடிச் செல்கிறார். செல்லும் வழியில் பலவிதமான காட்சிகள்…?

மீனவப் பெண்கள் குசேலரைத் தாண்டிச் செல்கிறார்கள். நடப்பதற்குச் சுகமாக, உடுத்தியுள்ள சேலையை முழங்கால்களுக்கு மேலே தூக்கி இடையில் சொருகிக் கொண்டு, தலையிலுள்ள மீன் கூடையை ஒரு கையால் பிடித்து, மறுகையை முன்னும் பின்னும் அசைத்து அசைத்து நடக்கும் காட்சியை அபிநயிப்பார். துவாரகையின் மீனவப் பெண்கள் எப்படி நடந்தார்களோ தெரியாது; கலிகை என்ற ஊரிலிருந்துவந்து, வல்லிபுரத்தாழ்வார் தீர்த்தமாடும் பெரிய பாட்டுக் கடலில் பிடிக்கும் மீன்களை வாங்கிக் கொண்டு, ஊர் ஊராகச் சென்று அவற்றை விற்கும் பெண்களை வாத்தியார் தத்ரூபமாகச் சித்தரிப்பார்.

வாத்தியார் சட்டை அணிவதில்லை. தோளில் இருக்கும் சால்வையை எடுத்து மார்பிலே குறுக்குக்கட்டுக் கட்டுவார். முளங்கால்களுக்கு மேலே வேட்டியைத் தூக்கிச் சுருக்கி, இரு பக்க இடையிலும் சொருகுவார். ஒரு கை தலைக்கு மேலே பெட்டியைப் பிடிக்கும் பாவனை; மறுகையை முன்னும் பின்னும் ஆட்டி ஆட்டி, பிருஷ்டத்தை அசைத்து அசைத்து நடப்பார்.

எங்களை வெட்கம் பிடுங்கித் தின்னும்! வானத்திலே தெரிகின்ற வளர்பிறையைப் பார்த்துக் கொண்டு குசேலர்

நடக்கிறார். சற்றுத் தூரம் நடந்து மறுபுறம் திரும்பினால் இன்னொரு பிறை ! துவாரகாபுரி வானிலே இரண்டு பிறைகளா? வாத்தியாரே குசேலராக மாறி முகத்தில், ஆச்சரியக் குறி தோன்ற அந்த இரண்டாவது பிறையைப் பார்த்துத் திகைப்படைகிறார்!

மாளிகையொன்றின் மேன்மாடச் சாளரத்தினூடாகத் தெரிவது ஓர் அழகியின் பிறை நுதல் ! அந்த அங்கையற் கண்ணி தன் காதலன் எப்போ வருவான் என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கிறாளாம். வான் விஞ்ஞானம் பிழைத்தது!

இன்னும்…

ராஜ வீதி. அந்தப்புர அழகு தேவதைகள் நீராடும்போது மேனியில் பூசிய அத்தர், புனுகு, ஜவ்வாது போன்ற வாசனாதித் திரவியங்களைக் கழுவ, அந்தக் குளம்புநீர் வெளியே பாய்ந்து, வீதியால் செல்பவாகள் அதில் சறுக்கி விழுகிறார்களாம். வாத்தியாரே சறுக்கிக் காட்டினார். ஆச்சரியம் ! குளம்புக்குப் பதிலாகச் சிறு கல்லொன்றில் தடக்கி அவரே விழுந்து விட்டார்.

மாணவர்கள் ஓடிச் சென்ற அவரைத் தூக்கி விடுகிறோம். பரத்தையர் வீதியைப் படிப்பிப்பார். ‘வெளிவருவாரும் உட்புகுவாரும் வீதியிற்கலாம் விளைப்பாரும் பாட்டு.

வேசியிடம் போய், கையிலிருந்த பணத்தையெல்லாம் கொட்டிக் கொடுத்துவிட்டு, உடல் சோர்ந்து, மனம் சோர்ந்து ஆடவர்கள் வெளி வருகிறார்களாம். அதேவேளை, ஆசை பொங்கும் மனத்தோடு, கம்பீர நடை நடந்து சிலர் உள்ளே போகின்றார்களாம். “நான் தான் முதல் வந்தனான். நீ எனக்குப் பிறகு …..” என்று முன்னே நிற்பவரை விலக்கித் தள்ளிக் கொண்டு-நான் முந்தி நீ முந்தி என்று வீதியில் கலகம் செய்கின்றார்களாம். அதேவேளை

ஆசை பிடர் பிடித்து உந்தித் தள்ளினாலும், வேசிக்குக் கொடுக்கக் கையில் காசில்லாததால், தலையைத் தொங்கப் போட்டுச் சோர்ந்துபோய், சிலர் அவள் வீட்டுக் கதவோரம் ஏக்கத்துடன் சாய்ந்து கொண்டு நிற்கிறார்களாம்!

அந்தோ பரிதாபம்! சோர்ந்த நிலையில் வேப்பமரத்தோடு சாய்ந்து கொண்டு வாத்தியாரே நிற்கிறார்!

இப்படியான கட்டங்களை அவர் அபிநயிக்கும் போது, பெண் பிள்ளை வெட்கம் தாங்காது முகத்தைப் புத்தகத்துக்குள் மறைத்துக் கொண்டு குனிந்து நிற்பாள். நாங்கள் ஆளை ஆள்ப் பார்த்துச் சிரித்துக் கொள்வோம். இடைக்கிடை அவளையும் பார்போம்!

– சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *