தங்கம் பூசிய இரும்புத்துண்டு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 5, 2022
பார்வையிட்டோர்: 7,418 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கச்சபேச முதலியார் என்றால் அழுத பிள்ளை வாய் மூடும், அந்த மாவட்டம் முழுவதும் அவருடைய புகழ் பரவியிருந்தது. அவருக்கு நிரம்ப நிலபுலன்கள் இருந்தன. பெரிய தென்னை, மாந்தோப்புக்கு நடுவில் வானளாலிய மாளிகை இந்திர பவனம்போல் இருந்தது. பங்களாவைச் சுற்றிப் பல பழ மரங்கள் வானளாவி நின்றன. தோட்டக்காரர்கள் பலர்; காரோட்டிகள், காவலர்கள், சமையல்காரர்கள், பசுமாடுகள், விருந்தினர்கள், அந்த வீடு நித்ய கல்யாணம் போல் விழாக் கோலம் பூண்டு விளங்கியது.

கச்சபேச முதலியாருக்கு இத்தனை இருந்தும் குழந்தை இல்லை. அந்த வீட்டில் கட்டில்கள் இருந்தன. தொட்டில் மட்டும் இல்லை. வீட்டரசி விசாலாட்சி அம்மாள், தங்க நிறம், மான் விழியும், தேன் மொழியும் உடையவள். அந்தப் பங்களாவில் இலட்சுமியே மானிட வடிவில் வந்து உலாவுவது போல் காட்சியளித்தாள்.

அந்த அம்மா நுங்கம்பாக்கம், அபிராமி சில்க் மாளிகை போய், விலை உயர்ந்த பட்டுப் புடவைகளை எடுத்து வந்து, தினமும் ஒரு புடவையை உடுத்துக்கொள்ளுவாள். வீட்டுக்கு வந்தவர்களை அகமும் முகமும் மலர்ந்து வரவேற்று உபசரிப்பாள்.

ஒரு நாள் அவர்கள் மாளிகைக்கு எம்.எல்.ஏ மூவர், எம்.பி. இருவர், மற்றும் பெரிய பதவியில் உள்ளவர்கள் அங்கு வந்தார்கள். வந்தவர்களை கச்சபேச முதலியாரும், வீட்டு அரசி விசாலாட்சி அம்மாளும் வரவேற்று விருந்து வைத்து இனிது உபசரித்தார்கள். பசு நெய்யால் தயார் செய்த முதல் தரமான உணவுகள், அந்நாசிப் பழம், மோர்க் குழம்பு, பலாப் பழம், ரசம். பால் பாயசம், கட்டித் தயிர், ராஞ்சி, நெல்லிக்காய் ஊறுகாய், வந்தவர்கள் அமுதம் போன்ற சுவையான உணவுகளை வயறு புடைக்க உண்டு வந்தார்கள்.

கூடத்தில் சிறந்த ஆசனங்களில் அமர்ந்து வாரப் பத்திரிகைகளையும் செய்தித் தாள்களையும் படித்தும், அரசியலைப் பற்றிப் பேசியும் மகிழ்ந்தார்கள்.

விசாலாட்சியம்மா உணவு செய்துவிட்டுப் படுக்கையறை (ஏர் கண்டிஷன் )யில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து சற்றுக் கண்ணயர்ந்தாள்.

சமையல்காரர்கள் சாப்பிட்டு விட்டுத் தங்கள் இருப்பிடம் போய்விட்டார்கள். அப்போது பகல் மணி இரண்டு, வீதியில் ஒரு பழுத்த சிவனடியார், நெற்றியில் திருவெண்ணீறு: மார்பில் உருத்திராட்ச மாலை, சிவந்த மேனி, சடையுடன் “அம்மா! நான் அருந்த பசி; அருந்த பசி” என்றார்.

அடியவர் குரலைக் கேட்ட கச்சபேச முதலியார் திடுக்கிட்டு எழுந்தார். சுவாமிகளைத் திண்ணையில் இருக்கச் செய்து, உள்ளே சென்றார். மனைவி அயர்ந்து உறங்குவதைப் பார்த்தார், சமையலறைக்குச் சென்று பார்த்தார். எல்லாப் பாத்திரங்களும் அலம்பிக் கவிழ்த்து வைத்திருந்தன. ஒரு மூலையில் அலுமினியப் பாத்திரத்தில் மூந்தா நாள் பழைய சோறு புளிச்ச நாற்றம் அடித்துக்கொண்டிருந்தது.

முதலியார் வெளியே வந்து, “சுவாமீ! பழைய சோறு சாப்பிடலாமா?” என்று கேட்டார்.

சுவாமிகள், “அன்பா! தனவந்தன் வீடு தீப்பிடித்து எரிந்தால் பன்னீர் விட்டுத்தான் அணைக்க வேண்டுமா? தண்ணீர் விட்டால் தீ அணையாதா? – ‘கனியேனும் வறிய செங்காயேனும் உதிர் சருகு கந்தமூலாதியேனும், கனல்வாதை வந்தெய்த அள்ளிப் புசித்து’ என்கின்றார் தாயுமானார். இருக்கிறதை இடு” என்றார்.

முதலியார் பழைய சோற்றை எடுத்து வரும்போது வாசற்படி தட்டியது. அந்த ஓசை கேட்டு விசாலாட்சியம்மா விழித்துக் கொண்டாள்.

“இந்தச் சோற்றை எங்கே, எதற்காக எடுத்துப் போகின்றீர்?” என்று சற்று உரத்த குரலில் கேட்டாள்.

முதலியார்: “அதோ ஓர் ஏழை சன்னியாசிக்குப் பசி காதை அடைக்கின்றதாம். அவருக்கு இதைத் தரக் கொண்டு போகின்றேன்”

அந்த அம்மாவுக்குச் சீற்றம் பொங்கி எழுந்தது. “ஏனுங்க, உங்களுக்கு அடியார் பெருமை தெரியவில்லையா? அடியார்க்குப் பழைய சோறு படைக்கலாமா? – ‘நம்பரடி யார் அடியார் அடைந்தால் நல்ல திரு அமுதளித்து’ என்று காரைக்காலம்மையார் புராணத்தில் பிரபு சேக்கிழார் பெருமான் கூறுகின்றாரே? நீங்கள் பெரிய புராணம் படிக்கவில்லையா? முற்றாத கருக்காய் நெல்லை வயலில் இட்டால் முளைக்குமா? முற்றிய மணியான நெல்லை இட்டால் தானே முளைக்கும்? அதுபோல் அடியார்கட்கு உயர்ந்த அன்னம் நெய் பாலுடன் தருவது தானே நியாயம்? வேறு உணவு இல்லை யென்றால் நான் புதிதாகச் சமைக்க மாட்டேனா? இந்த உடம்பு எதற்காக இருக்கிறது? அடியார்க்கிட்டது ஆண்டவனுக்கு இட்டது ஆகுமே” என்று பலப் பல அறிவுரை கூறினாள். கணவன் கையில் இருந்த பழைய அன்னத்தைக் கொண்டுபோய் உள்ளே வைத்தாள்.

மின்சார அடுப்பை ஏற்றி ஒரு ஆழாக்கு சீரகச் சம்பா அரிசி அன்னத்தை மல்லிகை அரும்புபோல் வடித்தாள். காயமிட்டு எலுமிச்சம் பழம் ரசம், மிளகு சீரகம் இட்டுத் தயாரித்தாள். பருப்புத் துவையல் அரைத்தாள். அடியாரை இருக்கச் செய்து அன்னம் பரிமாறி உண்பித்து உபசரித்து அனுப்பினாள்.

அங்கிருந்த எம்.எல்.ஏ., எம்.பி. முதலிய அனைவரும் அந்த அம்மாவை வாயாரப் பாராட்டினர்கள், “சார்! உங்கள் மன்னவியார் ஆயிரம் மாற்றுத் தங்கம். ஓர் ஏழை சந்நியாசிக்காக, தன் உடல் வருத்தத்தைப் பாராமல், தானே சமைத்து அடியாருக்கு அன்னம் படைத்தாரே! ஆஹா! உங்கள் ஜாதகத்தில் ஏழாமிடம் வியாழன் இருக்க வேண்டும். இப்படி மனைவி வாய்ப்பது அரிது அரிது. நீர் மிகக் கொடுத்து வைத்தவர். பாக்கியசாலி!” என்று வாயாற வாழ்த்தினர். இதனைப் படிக்கின்ற நீங்களும் வாழ்த்துவீர்கள், எல்லாரும் போய்விட்டார்கள்.

கச்சபேச முதலியார் “விசாலம், ஒரு ஏழைப் பரதேசிக்காக மெய் வருத்தம் நோக்காது சமைத்து உணவு படைத்த உன் குணம் பால் கடல் போன்றது. அந்தப் பழையதை எடுத்து மாட்டுத் தொட்டிலில் விட்டு விடட்டுமா?” என்றார்.

விசாலாட்சி, “பேசாமல் இரும். மாட்டுத் தொழுவத்தில் உட்கார வைத்திருக்கிற உங்கள் தாயாருக்காக அந்தப் பழையதை வைத்திருக்கிறேன். நீர் இதில் தலையிடாதீர்!” என்றாள்.

அவர் அப்படியே அயர்ந்து நின்றுவிட்டார். தங்கம் பூசிய இரும்புத்துண்டு இவள் என்று எண்ணிப் பெருமூச்சுவிட்டார். அவர் மனம் பட்ட வேதனைக்கு அளவே இல்லை.

– 07-12-1980

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *