தகுதியான கலைஞர் தற்குறிகளுக்குத் தெரியமட்டார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2023
பார்வையிட்டோர்: 743 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தச் சிற்றூரின் கல்யாண மண்டபம் கலகலப்பாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

உரிய நேரத்தில் ஆரவாரத்துடன் சிறப்பதிதியாக நகரசபைத் தலைவர் வந்ததும் அனைவரும் மரியாதைக்காக ஆசனங்களி லிருந்து எழுந்து நின்றனர்.

அதிதி சபையோருக்கு ஆயுபோவன், ‘வணக்கம்’, ‘அஸ்ஸலாமு அலைக்கும்’, ‘ஸலாமத் கூறிவிட்டு இருக்கை கொண்டதும் எல்லாரும் மீண்டும் அமர்ந்தனர்.

நாடறிந்த எழுத்தாளரும், கலைஞரும் கவிஞருமான சனூன் கௌரவிக்கப்படுவோர் வரிசையில் கம்பீரமாக வீற்றிருக்காமல் யாரையோ எதிர்பார்த்துக் குழம்பிப்போய் அடிக்கடி வெளியே போய் வந்து கொண்டிருக்கிறார்.

மலைகளால் சூழ்ந்துள்ள இந்தச் சிறுநகரில் பிறந்து வளர்ந்து, பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர்கள் நகரில் முதன் முறையாக, இன்று கல்யாண மண்டபத்தில் பாராட்டும் கௌரவமும் பெறவிருக்கிறார்கள்.

“என் ஊரில் இத்தனை கலைஞர்களா…..?” அதைப் பார்த்ததுமே கவிஞர் சனூனுக்கு ஒரே அதிர்ச்சி! அதிலிருந்து விடுபட முடியாமல் ஒரு தவிப்பு! தத்தளிப்பு!

சனூன் தனிப்பட்ட முறையில் பலதடவைகள் தன் பிறந்த மண்ணுக்கு வந்து பல நாட்கள் சென்றல் ஹோட்டலில் தங்கியிருந்து அலுவல்களைக் கவனித்திருந் தாலும் இலக்கியத்துறையில் மூன்று தசாப்த இடைவெளிக்குப் பின் இப்பொழுது தான் சுவடு பதிக்கிறார்.

ஒரு பக்கம் மகிழ்ச்சி. மறுபக்கம் சோகம் கலந்த ஆவேசம்!

கல்யாண மண்டபம் நிறைந்து வழிய, சரியான நேரத்திற்கு வைபவத்தை தொடக்கினார் தலைவர்.

தேசிய கீதம், தமிழ்மொழி வாழ்த்து, தலைமையுரை, கருத்துரைகள்…. என்றெல்லாம் மளமளவென்று நிகழ்ச்சி நிரலின் நிகழ்வுகள் செவ்வனே நிறைவேறிக் கொண்டிருந்தன.

‘இனி இந்தச் சிற்றூரில் பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்தவர்களும், நாடாளாவிய ரீதியில் விருதுகள் பெற்று ஊருக்குப் பெருமை சேர்த்தவர்களும் பாராட்டிக் கௌரவிக்கப்படுவார்கள்’ விழாத் தலைவரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து விறுவிறுப்புடன் அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோது தான் –

அதுவரைக்கும் மிக அமைதியாக இருந்த அந்த சபையில் சொல்லி வைத்தாற்போல் கவிஞர் சனூனின் மானசிக ஆவேசம் வெடித்தது.

உண்மையான ஒரு எழுத்து ஜீவியின் தார்மிகக் கோபந்தானோ என்னவோ அது!

சபையில் இரு சாராரிடையே வாக்குவாதங்கள்! வேடிக்கைப் பார்ப்பதற்குப் பலரும் எழுந்து நின்றனர்.

“ஏங்க தெரியாமத்தான் கேக்குறோம். இந்த ஊரிலேயே பொறந்து வளர்ந்து, அலட்டிக்காம இலக்கியச் சேவைசெஞ்சிக்கிட்டிருக்கும்…… நம்ம மூத்த இலக்கியச் செம்மல் முத்துச்செல்வன் பெயர் லிஸ்ட்ல வரல்லியே…… அவர் ஏங்க…. கௌரவிக்கப்படல்ல……”

இந்தத் திடீர் பிரச்சினையின் எழுச்சி சபையை ஒரு கலக்குக் கலக்கிவிட்டது.

“யார் முத்துச் செல்வனா….?”

“யார் முத்துச்செல்வன்…?” என்று சபையின் ஒரு பகுதி அல்லோல கல்லோலப்பட்டது.

முத்துச்செல்வன் ஆறு தசாப்தங்களுக்கு முன் விதைக்கப்பட்ட ஒரு விலை மதிக்க முடியாத விதை!

இன்று அது ஒரு பெரிய விருட்சம்! இந்நாட்டின் இலக்கியச் செழிப்பிற்கு கட்டியம் கூறும்.

அதிலிருந்து விழும் கனிகளிலிருந்து புதிய விதைகள் முளைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நாளைய இளைய சக்தியின் தேடலில் நிச்சயம் முதன்மை பெறும் உன்னத இலக்கிய சக்தி!

சனூனின் சிந்தனை பின்னோக்கிச் சென்று முத்துச்செல்வனின் இலக்கிய ஆற்றல் பற்றிச் சற்று மீள்பரிசீலனை செய்து பார்த்தது.

‘எழுதிக் கிடப்பதே என்பணி’ என்ற கருத்தில் ஊறிப்போயிருந்தாலும், அவரது கவிதைகள் வாசகனின் உள்ளுணர்வலைகளைத் தட்டிவிட்டுச் சிந்தனையைத் தூண்டும் மகாகவி பாரதி ,பித்தன், பாரதிதாசன், பட்டுக்கோட்டை போன்றோரின் நிழலைத் தொடர்ந்து விட்டதன் விளைவு –

நம் முத்துச்செல்வன் கவிதைகள் படைக்கிறார். மரபுக் கவிதைகள்…புதுக்கவிதைகள்…

அவரது ஆக்கங்களைப் புதிய தலைமுறையினர்தான் மறுபடியும் மறுபடியும் படிப்பர். அவரது வசனங்கள் மேற்கோள்களாகப் படைப்புக்களுக்குள் சிக்கும்.

இன்று காலை கூட ரயிலைவிட்டு இறங்கியதும் முத்துச்செல்வனைப் பற்றித் தான் சனூன் தீவிரமாக விசாரணை செய்தார். ஒரு தகவலும் சிக்கவில்லை . துரை, நாதன், முருகு போன்ற புதிய தலைமுறையினருக்கு அந்த மூத்த படைப்பாளி பற்றித் தகவல் கூறும் அளவுக்கு விபரங்கள் தெரியாது. அவர்கள் வெறும் விழா

வரவேற்புக் குழுவில் மட்டும் அங்கம் வகிக்கும் ஆட்கள் அவ்வளவுதான்.

இந்நிலையில் வழிமேல் விழியேற்றித் தேடிய முத்துச்செல்வனை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து கௌரவம் பெறச் செய்வது எப்படி….?

ரயிலை விட்டு இறங்கியதும் அனைவரும் புதிய சென்றல் ஹோட்டலுக்குத் தான் நடந்தார்கள். அங்கு காலையுணவை முடித்தவுடன் நண்பர்கள் பிரிந்தனர். கவிஞர் சனூன் சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார். சரியாக ஒரு மணிக்கு நண்பர் நூர் அவர்களின் இல்லத்திற்கு வரவேண்டும் என்பது திட்டம். தூரத்திலிருந்து வரும் மூவருக்குப் பகல் விருந்துபசாரப் பொறுப்பை நண்பர் நூர் ஏற்றிருக்கிறார்.

சனூன் முதலில் நகரசபை நூலகத்திற்குச் சென்று பார்வையிட்டதும் அப்படியே பிரமித்துப் போய் நின்றார்.

நூலகத்தின் தமிழ்ப்பிரிவு அவர் எதிர்பார்த்ததைவிட நூற்றுக்கணக்கான நூல்களை உள்ளடக்கித்தரமாக இருந்தது.

முத்துச்செல்வனின் இரு கவிதைத் தொகுப்புகளும், சனூனின் சிறுகதைத் தொகுப்புகளும், முதல் நாவலும் அவற்றுள் அடங்கியிருந்தன.

இன்று முன்மாதிரியாக நவீன கலை இலக்கியம் சார்ந்த நூல்களை மாணவர்கள் தேடுவது பாராட்டும்படியாக வளர்ந்துள்ளதையும் அவதானித்தார்.

சனூனின் சிந்தனை நான்கு தசாப்தங்களுக்கு முன், ஒரு சிறு இருமாடிக் கட்டிடத்தில் நிலை குத்தியது. மேல் மாடியில் சுதேச வைத்தியமும் கீழ்ப் பகுதியில் வாசிகசாலையுமாக வகுக்கப்பட்டிருந்தது. சிங்கள தேசியப் பத்திரிகைகள் மட்டுமே வாசிப்பிற்கு இருந்தன.

இதனால் தமிழ் வாசகர்களுக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.

‘அனைத்து நாளாந்த வாராந்த தமிழ்ப் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் தமிழ் வாசகர்களுக்குத் தேவை’ என்று மகஜர் தயாரித்து வாசகர்களிடமிருந்து கையொப்ப வேட்டையில் மும்முரமாக ஈடுபட்டவர் முத்துச்செல்வன். அவருக்குப் பக்கத் துணையுடன் நூலகத்தின் வளர்ச்சிகக்காகச் சுறுசுறுப்பாக இயங்கிய வர்கள் சனூன், பிரபா, நூர், ரசாக், சனூர்டீன் போன்ற இன்னும் சில இளைஞர்கள். இதன் தோற்றம் அறுபதுகளில்…. என்பதில் சந்தேகமில்லை .

இன்று பதியப்படாத உண்மை வரலாறு இது! இளைய சந்ததிக்குத் தெரியாது!

நாளிதழ்கள் வாசிப்புப் பகுதியில் பெரிய கூட்டம் இருக்கவில்லை . சிலர் நீள்சதுர மேசையைச் சுற்றி இருந்து நாளிதழ்களைப் படித்துக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் புத்தகங்களில் மூழ்கியிருந்தனர்.

எங்கேயாவது ஒரு மூலையில் முத்துச்செல்வன் படித்துக் கொண்டிருக்கிறாரா? என்று கவிஞர் சனூன் தனது தடித்த மூக்குக் கண்ணாடியின் ஊடாக அவதானித்துக் கொண்டிருந்தார்.

அதிர்ஷ்டவசமாக வெள்ளை கோட் சனூர்டீன் நானா அவரை அடையாளங் கண்டு வெளியே அழைத்துச் சென்று நட்புறவுடன் உரையாடினார்.

“நா…. முத்துச்செல்வனை நேற்று அந்தியில் நூல் நிலையத்தில் கண்டன்…. பேச கிடைக்கல்ல. எங்கே தங்கியிருக்கிறாரோ…?”

கவிஞர் சனூனுக்கு இந்தத் தகவல் இனித்தது.

“அப்ப நிச்சயமா இன்றைய பரிசளிப்பு விழாவுக்கு வரக்கூடும்…” என்ற நம்பிக்கை அவர் மனதில் துளிர்த்தது.

சரியாக ஒருமணிக்கு நண்பர் நூர், கவிஞர் சனூனைத் தனது இல்லத்தில் வரவேற்றார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு சந்திப்பு. அந்த இனிமையான சமயத்தில் முத்துச்செல்வனைப் பற்றிய விசாரிப்பு பீரிட்டு நின்றது.

“முத்துச்செல்வன் ஊர்ல அவ்வளவா தங்குறதில்ல… அந்த பழைய வீடு… அன்பகம் எப்பவும் பூட்டியே இருக்கும். ஒரு மாதத்துக்கு முன் லைப்ரரியில சந்திச்சேன். ஆனா பேசல்ல… ஒரு சிரிப்போடு சரி…இனி என்ன! கல்யாண மாகாத சுதந்திரப்பறவை. ஊர் சுற்றிக் கொண்டிருப்பார். அழகா கத்தரிக்கப்பட்ட வெள்ள தாடி, ஒட்டி வைச்சமாதிரி இருக்கும்…

ஒரு கவர்மன்ட் ஒபிசிலதான் கிளரிகல் வேல. இன்னும் பென்சன் எடுத்திருக்க மாட்டார் என்று நினைக்கிறன். அவர் எழுதிய கவிதை புஸ்தகம் லைப்ரரிக்கு வந்திருக்கு, புதுக்கவிதைகளை புதிய தலைமுறையினரும் படிக்கிறாங்க…”

இத்தியாதி தகவல்களுடன் நண்பர் நூர் தயாரித்திருந்த சுவையான பகலுணவு விருந்திற்குப் பின் மீண்டும் சென்றல் ஹோட்டலுக்குத் திரும்பினார்.

இலேசான ஒரு தூக்கம்.

துரை நேரத்திற்கு வந்து எழுப்பினார்.

“ஊரைச் சுத்திப் பாத்தீங்களா…..?”

முத்துச்செல்வனைப் பற்றி தனக்குக் கிடைத்துள்ள தகவல்களைப் பற்றி எடுத்துச் சொல்லி, முகம் கை கால்களை அலம்பிவிட்டு விழாவிற்குப் போகத் தயாரானார் சனூன். விழர்வில் முக்கியமான சிலரைச் சந்திக்க ஒரு திட்டம் போட்டிருக்கிறார்.

விசேடமான உடுப்பு என்று சொல்வதற்கு இல்லை. நீட்டுக்கை வெள்ளை சேர்ட்டும், ‘பேஜ் நிறத்தில் காற்சட்டையும், கால்களில் கறுப்பு பம்ஸ்’ சப்பாத்தும் …. எளிமையாகவும் பொருத்தமாகவும் இருந்தன. முதுமை தெரியவில்லை . ஒரு கம்பீரத்தைத்தான் காண முடிந்தது.

அவர்கள் புறப்பட்டார்கள்.

கவிஞர் சனூன் மீண்டும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

“துரை கிட்டடியில நீங்களும் முருகுவும் நாதனும் புறக்கோட்டையில் என்னை சந்திச்சி நீண்ட நேரமா ஊர்ப்பற்றுடன் கருத்துக்கள் பரிமாறினீங்க….. அந்த நேரத்தில கூட ஏன் முத்துச்செல்வனைப் பத்தி ஒரு வார்த்தை பேசல்ல…?”

“சனூன் சேர் ஒங்களுக்கு சொல்றதுக்கு, உண்மையில் முத்துச்செல்வனைப் பத்தி எங்களுக்கு ஒண்டுந் தெரியாது. ஆனா ஒன்ற மட்டும் நாங்க நல்லா புரிஞ்சிக்கிட்டம் ….. ஊர்ப்பற்று மட்டும் இருந்தா காணாது. ஊர் சார்ந்த இலக்கிய விசயங்கள் என்று வரும்போது ஊரின் நவீன இலக்கிய விழிப்புணர்வின் வரலாற்ற அடியிலிருந்தே ஆராஞ்சி, யாரால் எந்த வருஷத்தில் அந்த விழிப்புணர்வு தோன்றிச்சி என்று ஆய்ந்திருந்தா இந்தச் சிக்கல் வந்திருக்காது. முத்துச்செல்வன் போன்றவங்க முன் வரிசையில இருந்திருப்பாங்க…”

நடந்து கொண்டே முருகுவும் ஒரு மணியான உண்மையை வெளியிட்டார்.

“எங்க ஊரில மட்டுமில்ல சேர், பொதுவா நாட்டில் எந்த மூலை முடுக்காயிருந் தாலும் சரி கௌரவம், விருது, பரிசு என்று வரும்போது நடுநிலைமை செத்து விடுகிறது.

“…சனூன் சேர் உங்களுக்கு ஒருவிசயம் தெரியுமா…? மூன்று வருஷங்களுக்கு முன்பும் கூட ஊரின் இலக்கிய முன்னோடிகளைப் பாராட்டி கௌரவிக்க வேணு மெண்டு முயற்சி எடுக்கப்பட்டது. அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பத்துப் பன்னிரண்டு முக்கியஸ்தர்கள் சமூகமளித்திருந்தாங்க. அந்தச் சந்தர்ப்பத்தில் பாராட்டி கௌரவிக்க வேண்டியவர்கள் வரிசையில் உங்க பெயர் பிரேரிக்கப் பட்டபோது, நீங்க ஊருக்காக என்ன சாதிச்சிருக்கிறீங்க என்றொரு எதிர்ப்புக் குரல் எழுந்திச்சி…

அதுவும் போக அவர் ஊரைவிட்டுப் போய் நீண்ட காலமாயிருச்சி…இப்ப ஊரில இருப்பவர்கள மட்டும் ஆலோசிப்போம்..என்று மற்றுமொரு மறுப்பு.

இப்படி வேறு பல விடயங்களையும் போட்டுக் குழப்பி, அந்த ஆண்டு பாராட்டு விழா நடக்கவில்லை .”

கவிஞர் சனூன் ஊரைவிட்டு ஓடவில்லை . இயற்கையாகவே அவரது வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சியான திருப்புமுனை!

அரச முதல் நியமனம் நிமித்தம் பிறந்த மண்ணைவிட்டு வெளிமாவட்டம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியதால் ஏற்பட்ட ஓர் இடைவெளி. ஆயினும் அவரது இலக்கியத்துறை இடையூறுகள் இன்றிச் செழுமையுடன் மலையருவி போல் ஓடிக்கொண்டிருந்தது.

அதையடுத்து முத்துச்செல்வனுக்கும் அதே நிலை. அரச அலுவலகத்தில் தொழில் கிடைத்தது.

சனூன் முத்துச்செல்வன் இலக்கிய உறவு முறிந்தது ஒரு பெரிய இழப்புத்தான்!

கிராமப்புறங்களில் கல்வி கற்ற இளைஞர்களுக்கு அங்கேயே தொழில் கிடைப்பது பூஜ்யந்தானே!

நண்பர்களோடு நேரகாலத்தோடு கல்யாணமண்டபத்திற்கு வந்தவர் அனைத்து இலக்கியவாதிகளுடனும் கைகுலுக்கிக் கொண்டார். வெறும் சம்பிரதாயத்திற்காக மட்டுமல்ல நண்பர்களைச் சந்திக்கவேண்டும் என்ற அந்த உணர்வோடும்தான்!

நண்பர்களைச் சந்திப்பதிலேயே முனைப்புக் கொண்டிருந்தார். முத்துச் செல்வனைத் தேடியே மிகவும் களைத்துப் போயிருந்தார்.

சனூனும் முத்துச்செல்வனும் பெரிய சாதனையாளர்கள் அல்ல. சாதாரண படைப்பாளிகள். சில காத்திரமான நூல்களை வெளியிட்டிருந்தாலும் பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை. அது அவர்களுக்குரிய சுபாவமாக இருக்கலாம்!

அவர்கள் சொந்த மண்ணைவிட்டு எங்கு வாழ்ந்திருந்தாலும் கடந்த நான்கு தசாப்தங்களாக இலக்கியத்துறையில் ஓயாது சிந்தித்துக் கொள்கைப் பிடிப்புடன் ஈடுபட்டிருக்கிறார்களே! அது உண்மையிலேயே ஒரு தியாக உணர்வின் நிமித்தம் முகிழ்ந்த மகத்தான அர்ப்பணிப்புத்தான்.

முத்துச்செல்வன் தவிர்க்க முடியாத பிரமுகர். இவ்விழாவின் நாயகனாகத் திகழ வேண்டியவர். இந்த ஊரின் பெயரை பிரசித்தப்படுத்தியவர். திரும்பிப் பார்க்க வைத்தவர்.

இந்தச் சிற்றூர் இலக்கியவாதிகளும், ஆர்வலர்களும் தமது மகிழ்ச்சியைக் காட்டுவதற்காகத் திரண்டு வந்திருப்பது அவர்களது பெருந்தன்மையைக் காட்டுகிறது. நீண்டகால இடைவெளியை நிரப்பியிருக்கிறது. எப்படியிருந்தாலும் சனூனின் அண்மைக்கால வெளியீடுகளை வாங்கி உற்சாகப்படுத்த வேண்டு மென்று புதிய தலைமுறையினர் முன் அறிவித்தல் கொடுத்துச் சமூகமளித் திருப்பது இலக்கிய உலகில் ஒரு புதிய அபூர்வ நிகழ்வு. வளர்ந்தவர்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவ மாணவிகள்….. என்று இப்படிப் பல்வேறு பட்டவர்கள் சனூனின் படைப்புகளை ரசிக்கின்றனர்.

இந்த ஒழுங்குமுறைகளையெல்லாம் பார்க்கப் பார்க்க சனூன் பூரித்துப் போய் ஒரு சுற்றுப் பெருத்துவிட்டார்.

“நம்ம ஊரில் இப்படியொரு இலக்கிய புதினமா?” அசந்தே விட்டார்!

அதே நேரத்தில் அவர் மனதில் சட்டென்று ஒரு கீறல்.

முகத்தைப் பார்த்து முகம் முறுவலிக்காத தலைநகரில், தனது முதலாவது நாவலை வெளியிட்டபோது, முப்பது பேர் கூட அவ்விழாவுக்குச் சமூகமளிக்காத அந்தக் கசப்பான அனுபவத்தை எண்ணிப் பார்க்கிறார்.

மண்டபம் நிறைந்த இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் பொழுது, அவருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

“முத்துச்செல்வன் எங்கே……?” அவர் மனம் துணுக்குற்றது.

விழாச் சிறப்புமலர் இன்னும் வெளியாகவில்லை. துரை தனது சொந்த முயற்சியில் கவர்ச்சியாகத் தயாரித்திருப்பதாகப் பேச்சு அடிபடுகிறது. கௌரவிக் கப்படுபவர்களின் புகைப்படங்களுடன் சுருக்கக் குறிப்புகளும் நகரின் வரலாற்றுக் குறிப்புகளும் பதித்திருப்பதாகத் துரை அறிவித்திருந்தார்.

அண்மையில் கவிஞர்சனூன் தலைநகரில் நூற்றுக்கணக்கான சிங்கள, தமிழ், முஸ்லிம் கலைஞர்களுக்கு மத்தியில் மிகுந்த பணிவுடன் கலாசார அமைச்சரிட மிருந்து பெற்றுக்கொண்ட கலாபூஷண விருது வழங்கல் நிழற்படமும் இடம் பெற்றிருப்பதாக முருகு பெருமைப்படுகிறார்.

அப்பெருவிழாவிற்கு ஊரிலிருந்து துரையும் முருகுவும் மட்டும் கலந்து கொண்டதுதான் சனூனுக்குப் பெருமை மட்டுமல்ல, பிறந்த மண்ணைக் கண் முன்னால் கண்டது போலிருந்தது.

எப்படியோ களைகட்டிக் கொண்டிருந்த கல்யாண மண்டப இலக்கிய மேடையில் தனக்கெனப் போடப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தார் சனூன்.

ஓடியோடிப் பலரையும் சந்தித்துக் கொண்டிருந்ததாலும், முத்துச்செல்வனைத் தேடிக் கொண்டிருந்ததாலும் களைத்துப் போயிருந்தார்.

புதியவர்கள் தாமாகவே வந்து அறிமுகமாகிக் கொண்டிருந்தனர்.

மொசு மொசுவென்ற பஞ்சு மயிரோடு அவர் கண்ட இளைய சந்ததி இன்று அவர் முன் கருகருவென்ற மீசையோடும் குறுந்தாடிகளோடும் நிற்கின்றனர். அவரை உற்றுநோக்கி எதையோவெல்லாம் பேசுகின்றனர். ஒருசிலர் அருகே வந்து ஒருக்களித்து நிற்கின்றனர். அதற்காகவேனும் இந்த விழா அவர் நெஞ்சத்தில் ஆழ்பதிவைச் செய்யும்.

முந்திய தலைமுறையினருக்கும் இளைய சந்ததிக்கும் இடையில் அப்படியொரு இடைவெளி நீண்டகாலமாக நிலவியதால்தான் இலக்கிய வளர்ச்சியில் ஒரு தேக்க நிலை ஏற்பட ஏதுவாயிருந்துள்ளதை அவதானித்துப் புரிந்துகொள்ள சனூனுக்கு வெகுநேரம் பிடிக்கவில்லை.

பழையவர்களிடமிருந்து புதியவர்களும் புதியவர்கள் முதிர்வடையும்போது அந்த அடிச்சுவடு மாறாமல் மேலும் புதியவர்கள் முகிழ்ந்து முன்வரவேண்டும், தவறினால் தேக்கம் மட்டுமல்ல ஒருவகையான அந்நியத் தன்மைதான் உருவாகும். அதனைத் தகர்த்து முற்றாக நீக்கி, புதிய சுவடுகளைப் பதிக்க வேண்டும் என்று அவரது மனம் அந்தக் கணமே துடியாய்த் துடித்தது. முத்துச்செல்வன் போன்றவர்கள் பின்தள்ளப்பட்டதற்கும் இந்த இடைவெளி முரண்தான் காரணிகள்.

சனூனும், முருகுவும் நாதனும் அறிமுகம் இல்லாதவர்கள், இருந்தாலும் அவரது நூல்களைப் படித்து, சலூனின் நெருங்கிய குடும்ப நண்பர் என்ற வகையில் துரையிடமிருந்தும் தகவல்களைப் பெற்றிருந்தார்கள்.

சபையில் தோன்றிய அமளி துமளி அடங்க சில நிமிடங்கள் பிடித்தன.

வாக்குவாதங்கள் முற்றித் தானாகவே தணிந்து அமைதி நிலவியது.

எப்படியோ முத்துச்செல்வன் ஏன் கௌரவிக்கப்படவில்லை….?’ என்னும் கேள்வியைச் சபையறிய விதைத்து விட்டார்கள்.

கவிஞர் சனூனுக்கு மிகுந்த திருப்தியளித்தது.

தடைப்பட்டிருந்த விழா நிகழ்ச்சிகள் தடைக்கற்கள் இன்றித் தொடர்ந்தன.

கவிஞர் சலூனின் பெயர் அழைக்கப்பட்டதும் பெருத்த கரகோஷங்கள் அவருக்கான ஏகோபித்த கௌரவத்தைக் கோஷம் போல் வானில் பறக்க வைத்தன.

சரியாகப் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு சிறப்பதிதியின் உரை இடம்பெற்றது.

“இந்தப் பாராட்டையும் கௌரவிப்பையும் விழா மலரையும் பார்க்கும்பொழுது இந்தச் சிறுநகரத்தில் இனவேறுபாட்டிற்கே இடமில்லை என்பதை ஏற்பாட்டாளர்கள் நிரூபித்துக் காட்டிவிட்டார்கள்…

“மூத்தவர்களுக்கும் இளையவர்களுக்கும் இடையில் ஒரு புதிய இணைப்பு ஏற்பட்டிருப்பதையும் அவதானிக்கிறேன். நிச்சயமாக மூத்தவர்களின் வழிகாட்டல் இளைய தலைமுறைக்குக் கிடைக்கும் என்றும் நம்புகின்றேன். நகரசபைத் தலைவர் என்ற முறையில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

இதுபோன்ற பணிகள் தொடர என் ஒத்துழைப்பு என்றென்றும் கிடைக்கும்.

“….கலை இலக்கியத்துறைக்கு பங்களிப்புச் செய்த மூத்த எழுத்தாளர்கள், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு விபரப்பட்டியலை தயாரித்து நகரசபைக்குச் சமர்பிக்க வேண்டியது இவ்விழா ஏற்பாட்டாளர்களின் கடமை. பெயர்கள் தவறுதலாக விடுபட்டிருந்தால் தேடிப்பிடித்து அடுத்தடுத்த கௌரவிப்பு விழாக்களில் உரிய முறையில் கௌரவிக்க வேண்டும். விடுபட்டுப் போன மூத்தவர்களுக்கு விஷேட கௌரவிப்பு வழங்க வேண்டும்…வாழ்த்துக்கள்…”

கைதட்டல்கள் மீண்டும் மண்டபத்தை நிறைத்தன.

சிறப்பதிதியின் மணிக்கருத்துக்கள் அழகு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

“இப்பொழுது கவிஞர் சனூன் அவர்கள் எமது நகரசபை நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்புச் செய்வார்…” என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, சனூன் தான் கொண்டு வந்திருந்த நவீன தமிழ் இலக்கியம் சார்ந்த இரு நூற்பொதிகளையும் நகரசபைத் தலைவரிடம் கையளித்தார்.

இறுதியாக நன்றியுரையுடன் தேசிய கீதம் ஒலித்தது. நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றதும் மீண்டும் சலசலப்புடன் சந்திப்புகள் தொடர்ந்தன.

சனம் வெளியேறிக் கொண்டிருந்தது. இரவு உணவுக்காகத் துரையும் சனூனும் ‘வளர்மதி விலாஸிற்கு நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று சனூன் “முத்துச் செல்வன்…முத்துச்செல்வன்..” என்று குரலை உயர்த்திக் கத்தினார். ஆனால் அந்த உரத்த குரல் முத்துச்செல்வனின் செவிப்பறைகளுக்கு எட்ட நியாயமில்லை.

வெகுதூரத்தில், அவர் தன்பாட்டிற்கு முன்னேறிக் கொண்டிருந்தார்.

சவாரி ஒன்றிற்காக வழிமேல் விழிவைத்துக் கொண்டிருந்த ஆட்டோ ஒன்று சனூனின் கண்ணில் பட்டுவிட்டது. துரையையும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டார். ஆட்டோ ஜெற்றின் வேகத்தில் பறந்தது. சனூனின் வேண்டுகோளுக்கு அமைய இடையில் நின்றது.

“முத்துச் செல்வன்…”

முன் சென்ற உருவம் நின்றது.

“உங்களுக்கு ஆத்திரம் இருக்குந்தான் முத்து!” கையைப் பிடித்தபடி துரை.

“என்னை மன்னித்துவிடு முத்து. இந்தப் பொன்னாடை பாராட்டு…உனக்குரியதே…” தளதளத்த குரலில் சனூன் சொன்னார்.

முத்து எதையும் பேசவில்லை. மௌனம்.

“எங்கள்ள கோபமா…?” துரை முத்துவை ஏறிட்டுப் பார்த்தார்.

“என்ன பைத்தியமா துரை! அருமையான விழாவை நேரில் பார்க்க முடியாத போதும், மரத்தின் கீழிருந்து கேட்டு மகிழ்ந்தேன்….. இந்த இலக்கிய விழிப்பு என்னூரில் பிரவகித்ததை என் வாழ்வில் கண்டுவிட்டேன். இந்த சாதனைக்கு வித்திட்டவனென்ற வகையில் நான் பூரித்தேன். அதுவே எனது இலக்கியத் தொண்டிற்கு நான் பெற்ற பொன்னாடைகள், மாலைகள், பாராட்டுக்கள், விருதுகள். இன்றுதான் நான் நிம்மதியாகத் தூங்குவேன்…”

அற்புதமான இம்மண்ணுக்கே தேவையான இலக்கியச் சக்தி முத்துச்செல்வன் சொல்லி முடித்தார்.

தனக்கு அழைப்பிதழ் கூடக் கிடைக்கவில்லையென்ற தகவல் முத்துச்செல்வன் சொல்ல மறந்த கதையல்ல.

நாட்டை வாழ்விக்கும் உண்மையான சிந்தனையாளன்!

முத்துச்செல்வன் திரும்பி நடந்தார்.

“எங்க…முத்து போற ஏறு ஓட்டோவில். இனி உன் வீட்டிலதான் அடுத்த விழா!”

ஆட்டோவில் மூவரும் ஏறிக்கொண்டனர். ஆட்டோ புறப்பட்டது.

– கொங்கணி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: 2014, எஸ்.கொடகே சகோதரர்கள் பிரைவேட் லிமிடெட், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *