தகர்ப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 12, 2023
பார்வையிட்டோர்: 820 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அழியா வரம்வேண்டி நிலையாய்த் தவம் புரியும் முனிவனைப் போல அவர்கள் பஸ்வண்டியை எதிர்பார்த்துத் தவம் கிடக்கின்றனர்.

அந்த இடத்தில் அவனும் நிற்கின்றான். உயிரோட்டமுள்ள இரண்டு இளசுகளும் அவனுடன் நிற்கின்றனர்.

அவனுக்கு இளமையின் எல்லைக்கோட்டில் நிற்கின்ற பருவம். வாலிப மிடுக்கும் இளமைத் துடிப்பும் அகலாத, முதுமை இன்னும் எட்டிப்பிடிக்காத இரட்டை நிலை. நன்றாகப் பழுத்த அனுபவ முத்திரை அவனது முகத்தில் நிலவுகின்றது. உருக்குப் போன்ற மன உறுதியும், மனோ தைரியமும், குன்றாத இலட்சிய வேட்கையும் அவனிடமிருக்கின்றன.

பஸ்வண்டிகள் வருகின்றன, போகின்றன. அவைகள் போய்க்கொண்டும் வந்துகொண்டுமிருக்கின்றன. ஆனால் அவர்கள் எதிர்பார்த்து நிற்கின்ற பஸ்வண்டி வந்தபாடில்லை.

அவர்கள் எதிர்பார்த்து நிற்கின்ற பஸ்வண்டி இரண் டொன்று வரத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றில் அவர்களில் ஒருவர் தானும் ஏறிக்கொள்ள முடியவில்லை. அவற்றில் பிரயாணிகள் நிரம்பி வழிகின்றனர். சிலர் புட்போட்டில் தொங்கிக் கொண்டு நிற்கின்றனர். செட்டை விரித்த அடைக் கோழி மாதிரி அந்த பஸ்வண்டிகள் அவர்கள் காத்து நிற்கின்ற இடத்தில் நிற்காமலேயே அரைந்துகொண்டு சென்று விட்டன.

அவர்களுக்கு மனதில் கொதிப்பு.

ஏறுவெய்யில்.

இளஞ்சூரியனின் கானல் அலைகள் அவர்களுடைய உடல்களைக் காந்திக் கொண்டிருக்கின்றன.

இயற்கை அன்னையின் வளத்தையும், வனப்பையும் சிதைத்துச் சீரழித்து அந்த அழிவின் மீது அகங்காரத்துடன் ஆரோகணித்து நிற்கின்றது நகரத்தின் கட்டடக்காடு இந்தக் கட்டக்காட்டின் அசுரப் பசிக்கு இரையாகி விடாமல் தற்செய லாகத் தப்பிப் பிழைத்து தன்னந் தனியனாய் றோட்டோரத்தில் நிற்கின்ற வாகை மரம் தீக்குளித்துக் கொண்டு நிற்கின்றது.

செஞ்சடை பரப்பி நிற்கின்ற அந்த நெருப்பு வாகை மரத்தின் அரை வட்டக் குளிர் நிழல், அனல் வெய்யிலில் தவித்துக் கொண்டு நிற்கின்ற அந்தப் பிரயாணிகளை ஆதர்ஸமாக அரவணைத்து ஆறுதலளிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் பஸ் நிலையத்திற்குப் பின்புறமாயுள்ள அந்த இடிந்து பாழடைந்த கட்டடத்தின் இடிபாடுகளின் மேல் சோக மயமாய் சாய்ந்து வீழ்ந்து கிடக்கின்றது.

பிரயாணிகளுக்கு வெக்கை தாங்க முடியவில்லை. கால்கள் கடுக்கின்றன.

அவர்களுடைய நீண்ட நேரத் தவநிலை குலைகின்றது.

“நாசமாய்ப்போன இந்த பஸ் எப்பதான் வந்து துலையப் போகுதோ?”

வெறுப்புக் கலந்த ஏக்கத்துடன் ஒருவர் கூறுகின்றார்.

“நான் ஆஸ்பத்திரிக்குப் போக வேணும். நேரம் பிந்தினால் நம்பர் துண்டு எடுக்கேலாது. என்ன செய்யிறதெண்டு தெரியா மல் கிடக்கு.”

ஒரு நோயாளியின் அவஸ்தை.

“வழக்குத் தவணைக்கு நான் கோட்டுக்குப் போக வேணும். நேரம் போட்டுது. கொள்ளையிலைபோன இந்த பஸ்ஸை இன்னும் காணல்லையே.”

மற்றொருவர் அவசரப்பட்டுக்கொண்டு நிற்கின்றார். “வாழ்க்கையிலே அரைவாசி நாளுக்கு மேலை பஸ்ஸுக்கு காத்து நிற்கின்றதிலை கழிஞ்சு போகுது. என்ன கடைகெட்ட சீவியம்?”

விரக்தியின் வெளிப்பாடு.

“முந்தி என்ன மாதிரி பஸ் சேவை நல்லாய் நடந்து கொண்டிருந்தது. “அநியாயப்படுவாங்கள் சிலர் திட்டம் போட்டு அந்தப் போக்குவரத்துச் சேவையை நாசமாக்கினாங்கள். “ஊழல் மலிஞ்சு போச்சு”, “நட்டத்திலை போகுது” எண்டு சாட்டுச் சொல்லி முந்தியிருந்த ஆட்சிக்காரர் அந்த பஸ் சேவையை தனியாரிட்டை தாரை வார்த்துக் குடுத்தாங்கள். இப்ப இந்தப் பெருச்சாளியள் எங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறாங்கள். எலி இருக்குதெண்டு வீட்டை எரிச்ச கதைதான் இது.

ஒருவர் வெறுப்புடன் கூறுகின்றார்.

“இப்ப இவங்கள் எங்களை மனிசராய் நடத்துறாங்களே? ஆடுமாடுகளைப் போலைநடத்துறாங்கள். நாங்கள் வாயில்லாப் புழுக்களாய்க் கிடந்து மிதிபடுகிறம்.

விரக்தி மேலிடப் பிரலாபிக்கின்றார் ஒருவர்.

நேரம் செல்லச் செல்ல சாலையை இரும்புக் குதிரைகள் ஆக்கிரமிக்கின்றன. வாகனங்களின் முற்றுகையினால் சாலை யில் மக்கள் நகர முடியாமலிருக்கின்றது.

ஜப்பானில் கழித்துவிடப்பட்ட பழைய இரும்புகளும் கறள் பிடித்த தகரங்களும் இரும்புக் குதிரைகளாய் இந்த நகரத் திலுள்ள சாலைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.

நகரத்தின் ஆத்மாவையே விழுங்கி ஏப்பமிடும் வேட்கை யுடன் இந்த வாகனங்கள் உறுமிக் கொண்டு கரும்புகையைக் கக்கியபடியே ஊர்ந்து சென்று கொண்டிருக்கின்றன.

அன்றிருந்த மக்களுடைய போக்குவரத்துச் சேவையைக் கபளீகரம் செய்து ஏப்பமிட்டுவிட்ட இறுமாப்பில் திமிருடன் உறுமியபடியே சென்றுகொண்டிருக்கின்றன தனியாருக்குச் சொந்தமான பஸ் வண்டிகள். இவைகளில் பெரும் தொகை யானவற்றை இரண்டொரு மந்திரிமார்களும், அரசாங்க உய ரதிகாரிகளும் சொந்தமாக வைத்திருக்கின்றார்கள் என்பது எவருக்கும் தெரியாத விஷயம்.

பஸ்சிற்காகக் காத்துநிற்கின்ற அந்த மக்களுக்கு மனக்கொதிப்பு.

தார்மிக அரசின் ஆசியுடன் இறக்குமதியான கொக்கோ கோலாக் கலாசாரத்தின் சுழிப்புக்குள் சிக்கி அதற்குத் தாக்குப் பிடிக்க முடியாமலும், வெளியே வரமுடியாமலும் சீரழிந்து கொண்டிருக்கின்ற விடலைகள் கும்பலொன்று அங்கு வந்து சேர்கின்றது.

ஆணெது பெண்ணெது என்று அடையாளம் காண முடியாத வகையில் உருவத்திலும் உடையிலும் அர்த்த நாரீஸ்வரர்களாயிருக்கின்றனர் இந்த விடலைகள். போதை. வஸ்துப் பாவனை யால் அவர்களது முகங்கள் உப்பி வெளிறிப் போயிருக்கின்றன. சிலருடைய ‘ரீ’ சேட்களில் U. S. A. என்று பச்சை மஞ்சள் நிற எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருக்கின்றன.

விடலைகள், கிரிக்கட் விளையாட்டு விசிறிகள். ஹொலி வூட் படங்களின் நடிக நடிகைகள், அவைகளில் வருகின்ற ஆபாசக் காட்சிகள், போதைவஸ்து பாவனை, இரவு விடுதிக் களியாட்டங்கள், அங்கு நடக்கின்ற ஆபாச நடனங்கள், பாலியல் செயற்பாடுகள் பற்றி ஒளிவு மறைவின்றி பச்சையாகவே சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்கின்றது இந்தக் கும்பல். இக்காட்டாக்காலி விடலைகளின் அசிங்கமான உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கின்ற பிரயாணி களுக்கு எரிச்சல், மனக்கொதிப்பு. சிலர் முகம் சுழிக்கின்றனர்.

சமூகத்தில் பெரும் செல்வாக்குடைய சில குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இக்கட்டாக்காலி விடலைகள். இவர்கள் நகரத்திலேயுள்ள பெரிய பிரபல்யமான கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்று நடக்கவிருக்கின்ற பெரும் கிரிக்கட் ‘மாச்சிற்கு செல்வதற்கு வந்திருக்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி மோட்டார் வாகனங்களில் பிரயாணம் செய்யும் வாய்ப்பும் வசதியுமுள்ளவர்கள். ஆனால் இப்படியான பஸ்வண்டிகளில் நெருங்கி இடிபட்டு கைச் சேட்டைகள் விட்டுக்கொண்டு செல்வதில் இவர்களுக்கு ‘திறில்’.

“அந்த நாட்டுப்புறச் சிட்டு எப்படி மச்சான்?”

“பாத்தா அது சண்டைக் கோழி மாதிரியிருக்கடா?”

“வெளிப்பார்வைக்கு அப்பிடித்தான். ஆனால் அவளை ஒரு மாதிரி வளைச்சுக் கையுக்கை போட்டிட்டால் பிறகு சொல்லத் தேவையில்லை. அவள் தன்னையே முழுசாய்…. ஆனால் அது ஒரு கடுமையான முயற்சியடா’

“என்ன அனுபவம் பேசுதோ?”

“இவளைப்போலை எத்தினை பேரை நான் மடக்கி யிருக்கிறன் தெரியுமே? இப்ப நான் இவளைச் சாடையாய் ‘லைன்’ பண்ணிப் பார்ப்பம்.’

“மச்சான் அவசரப்படாதையடா. காரியம் கெட்டுப்போம். அவள் பஸ்சுக்கை ஏறினாப் பிறகு நாங்கள் எங்கடை கை வரிசையைக் காட்டுவம். கொஞ்சம் பொறுமையாயிருடா.”

தாங்கள் கதைப்பது அவளுக்கு எங்கே புரியப் போகின்றது என்ற நினைப்பில் மனம் போன போக்கிலே கதைத்துக் கொண்டு நிற்கின்ற அந்தக் கட்டாக்காலிகள் அவள் பக்கம் திரும்புகின்றனர்.

அவளுடைய செந்தழல் விழிகள் அந்தக் கட்டாக் காலிகளையும் தன்னுடைய காலிலுள்ள செருப்பையும் மாறி மாறிப் பார்க்கின்றன.

அவளுடைய கரங்கள் செயல்படுவதற்கு வெடவெடத்துத் துடிக்கின்றன.

அவனுக்கருகிலுள்ள அந்த இளசு சீறிப்பாயத் தயாரா யிருக்கின்ற சிறுத்தையாய் நிற்கின்றான்.

ஆஜானுபாகுவான உடல்வாகைக் கொண்ட சோமன் வெறுப்பும் கோபமும் கொண்ட வெட்டுப் பார்வையுடன் நிற்கின்றான்.

“உங்களுக்கு முதுகு உளையுதோடா” என்ற கேள்விக் குறி அவனுடைய உக்கிரப் பார்வையில் பீறிடுகின்றது.

அம் மூவருடைய ரௌத்ராவேச நிலை அந்தக் கட்டாக் காலிகளைக் கதிகலங்கச் செய்கின்றது.

அப்பொழுதுதான் அங்கு வந்து நிற்கின்ற ஒரு பஸ் வண்டியில் அந்தக் கட்டாக்காலி விடலைகள் இடிபட்டு முண்டி யடித்துக் கொண்டு ஏறித் தப்பித்துக் கொள்கின்றனர்.

நேரம் நீண்டு செல்கின்றது.

வெய்யிலின் மூர்க்க வெறி தாங்க முடியாத நிலை பிரயாணிகளுக்கு.

அதிர்ஷ்டவசமாக ஒரு பஸ் வண்டி வந்து நிற்கின்றது. அது வெற்று வண்டி அவர்கள் எதிர்பார்த்துத் தவம் கிடந்த பஸ் வண்டி.

அவர்களுக்கு ஆச்சரியம். வெற்று வண்டியாக இருந்தும் அவர்கள் பரபரப்புடன் ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளி முண்டியடித்து ஏறுகின்றனர்.

அந்த பஸ்சிற்கு இரட்டை வாசல்கள்.

அவனும் இளசுகள் இருவரும் பின் பக்கமுள்ள வாசலால் ஏறி கடைசி ஆசனத்தில் அமருகின்றனர்.

பஸ் வண்டி புறப்படுகின்றது.

பிரயாணிகளுக்குத் திருப்தி.

பஸ்வண்டியின் சாரதி கறுப்பு ‘ரீசேட்’ அணிந்திருக் கின்றான். அத்துடன் கறுப்புக் கண்ணாடி. அவனுக்குக் கறுப்பு நிறத்தில் மோகம் போலும். சடை வளர்த்துக் குதிரைவாலாய்த் ‘தொங்க விட்டிருக்கின்றான். அவனுடைய முன்பக்கத் தலை மயிர் கோழிக் கொண்டையாய்க் கத்தரிக்கப்பட்டு அடர்த்தி யாய்க் குத்திட்டு நிற்கின்றது. அவன் அநாயாசமாய் சிகரெட் புகையை இழுத்து ஊதிவிட்டுக் கொண்டே பஸ்வண்டியைச் செலுத்திக் கொண்டிருக்கின்றான்.

பஸ் கொண்டக்டர் நல்ல உடற்கட்டான காளை. பச்சை நிற சேட் அணிந்திருக்கின்றான். இந்தப் பச்சை நிற சேட் சென்ற தேர்தல் காலத்தில் அவனுக்கு இலவசமாகக் கிடைத்திருக்க வேண்டும் போலும். அவன் கழுத்தில் ஒரு லேஞ்சித் துண்டு கட்டியிருக்கிறான். அவனுடைய இரத்தச் சிவப்பேறிய கேடு சூழும் கழுகுக் கண்கள் பிரயாணிகளைக் கொத்திக் கொண்டிருக்கின்றன.

சோமனும் அந்த இரு இளசுகளும் எதைப் பற்றியோ தங்களுக்குள் காரசாரமாகக் கதைத்துக் கொண்டிருக்கின்றனர்.

பஸ்வண்டிக்குள்ளிருந்த பிரயாணிகளது அத்தனை விழிகளும் அந்த மூவர் மீதும் மையப் புள்ளியாய்க் குவிந்திருக்கின்றன. அவ்விழிகளின் பார்வையில் சந்தேகம்.

“எல்லாரும் எங்களைத்தான் உன்னிப்பாய்க் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கினை.”

ஒரு இளசின் எச்சரிப்பு.

“இவை எங்கையோ குண்டு வைக்கத்தான் போகினை போலக் கிடக்கு”.

எவராலும் ஆழம் காணமுடியாத அவளுடைய அகலமான விழிகளில் குறும்புத்தனம் நடனமாட, பொட்டு வைத்திருக் கின்ற அவள் கூறுகின்றாள்.

பிரயாணிகளை ஏற்றுவதற்காக வண்டி ஓரிடத்தில் நிற்கின்றது.

“கெதியாய் இறங்குங்கோ கெதியாய்….”

பிரயாணிகளை அவசரப்படுத்தி அவர்களது முதுகுகளில் தள்ளிக்கொண்டே கரகரத்த குரலில் அடித்தொண்டையால் கத்துகின்றான் கொண்டக்டர்

“கெதியாய் ஏறுங்கோ”, “கெதியாய் ஏறுங்கோ”, “பின்னுக்குப் போங்கோ”, “என்ன மரம் மாதிரி நட்ட கட்டையாய் நிக்கிறியள்”, “ஏ சிவப்பு சாரி, பின்னுக்குப் போ”, “ஏ நீலச்சட்டை, போ, பின்னுக்குப் போ”, “கெதியாய் ஏறுங்கோ.”

பஸ்வண்டியின் புட்போட்டில் நின்றுகொண்டே உரத்த குரலில் அதட்டி பிரயாணிகளை இடித்துத் தள்ளி அவர்களைத் துரிதப்படுத்துகின்றான் கொண்டக்டர்.

நடுத்தர வயசுப் பிச்சைக்காரன் ஒருவன் பஸ்சிற்குள் ஏறுகின்றான். அவன் தமிழின விரோதப் பாடல் ஒன்றை உரத்துப் பாடுகின்றான். அவனுக்கு நல்ல சாரீரம்.

இனவிரோதப் பாடலைப் பாடினால் தனக்குக் கூடுதலாகப் பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு போலும் அவனுக்கு. ஆனால் பிரயாணிகள் அவனைப் பொருட்படுத்தவில்லை.

அவன் பிரயாணிகளைச் சபித்துத் திட்டிக் கொண்டே பஸ்சைவிட்டு இறங்கிச் செல்கின்றான்.

பிரயாணிகளை இறக்கி ஏற்றுவதற்காக பஸ் நின்று விட்டுப் புறப்படுகின்ற ஒவ்வொரு இடத்திலும் அவன் உரத்த குரலில் அதட்டி பிரயாணிகளை அவசரப்படுத்தி அவர்களுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டேயிருக்கின்றான். ஆனால் இளம் பெண்களை அவன் தட்டியும் தடவியும் ஆதூரத்துடன் அனைத்துப் பெளவியமாக பஸ்சிற்குள் ஏற்றியும், இறக்கியும் விடுகின்றான்.

கொண்டக்டரின் இந்த வக்கிரச் செயல்களையும் சேட்டைகளையும் சில பிரயாணிகள் பார்த்தும் பாராதவர் களாகப் பாவனை செய்து கொண்டிருக்கின்றனர். சிலர் தங்க மன: ளுக்குள்ளேயே வெதும்பிக் குமைகின்றனர். இதைத் தவிர அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?

பிரயாணிகளை அவசர அவசரமாய் அவலப்படுத்தி பஸ்சிற்குள் ஏற்றியும் இறக்கியும் கொண்டிருக்கின்ற இவர்கள் தாங்கள் நினைத்த நினைத்த இடங்களிலெல்லாம் பிரயாணி களை ஏற்றுவதற்காகப் பத்துப் பதினைந்து நிமிடங்களாய் பஸ்வண்டியை மறித்து வைத்துத் தாமதப்படுத்துகின்றனர். இதனால் பிரயாணிகள் குறித்த நேரத்திற்குச் செல்ல முடியாமல் பஸ்சிற்குள்ளேயே காத்துக்கிடந்து பெரும் சிரமங்களுக் குள்ளாகின்றனர்.

“என்ன இவங்கள்! கெதியாய் ஏறுங்கோ”, “கெதியாய் இறங்குங்கோ” எண்டு எங்களை அவலப்படுத்துறாங்கள். ஆனால் தாங்கள் நினைச்ச ஒவ்வொரு இடத்திலையும் பத்துப் பதினைஞ்சு நிமிடங்கள் பஸ்சை மறிச்சு வைச்சு எங்களைத் தாமதப்படுத்துறாங்கள். இப்பிடியெண்டால் நாங்கள் என்னண்டு குறிப்பிட்ட நேரத்துக்கை போய் சேருறது. அரை மணித்தி யாலத்திலை செய்யிற பிரயாணத்துக்கு ஒண்டரை மணித்தி யாலம் சிலவழிக்க வேண்டியிருக்கு, நேரகாலத்துக்கு நாங்கள் பயணம் செய்யேலாமல் கிடந்து உத்தரிக்கிறம். இவங்கடை நட்டாமுட்டித்தனத்தைக் கேக்க ஆரிருக்கினை?”

பிரயாணிகள் தங்களுக்குள்ளேயே அலுத்துச் சலித்துக் கொள்கின்றனர்.

“என்னப்பா பஸ்சுக்கை நாங்கள் நிக்கேலாமை நெரி பட்டுக் கொண்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றம். கொண்டக்டர் என்னடாவெண்டால் ஆடுமாடுகள் மாதிரி ஆக்களை ஏத்தி அடையுறான்”.

வெறுப்புடன் கூறுகின்றார் ஒரு பிரயாணி.

“நெருக்கத்திலை சனவெக்கை தாங்கேலாமல் கிடக்கு. மூச்சு விடேலாமல் நாங்கள் திணறிக் கொண்டிருக்கிறம். மேலேல்லாம் சலம்சலமாய் வேர்த்து வழிஞ்சு கொண்டிருக்கு. நாங்கள் எல்லாம் சுண்ணாம்புச் சூளைக்குள்ள அம்பிட்ட மாதிரி அவிஞ்சு கொண்டிருக்கிறம். காலெடுத்து வைக்கேலாமல் கிடக்கு. அவனென்னண்டால் பின்னுக்குப் போங்கோ பின்னு க்குப் போங்கோ எண்டு கத்திக்கொண்டு அளவு கணக்கில் லாமல் ஆக்களை ஏத்தி அடைஞ்சு கொண்டிருக்கிறான். இந்தக் கொடும் பாவியளைக் கலைச்சால்தான் எல்லாஞ் சரிவரும்.”

அந்தப் பிரயாணியின் குரலில் வேதனையும், வெறுப்பும்.

“அவர்கள் எங்களைப் பற்றி ஏன் கவலைப்பட போறாங்கள். எவ்வளவு காசை எங்களிட்டை புடுங்கேலுமோ அவ்வளவையும் சூறையாடுறதுதான் அவங்களுடைய நோக்கம்.”

“காசைக் குடுத்தால் டிக்கட்டைத்தானும் தாறாங்களே?” “டிக்கட் குடுத்தால் வருமான வரிக்காரனுக்கு காட்டி வரி குடுக்க வேண்டிவருமே.”

பஸ்வண்டியில் பொருத்தப்பட்டிருக்கின்ற வானொலியில் ஆங்கில ஆபாச பாடலொன்று உச்சஸ்தாயியில் கர்ண கடூரமாய் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. சனநெருக்கத் திலும் வெக்கை யிலும் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கின்ற பிரயாணிகளுக்கு இது இன்னுமொரு சித்திரவதையாக இருக்கின்றது.

“எங்கடை கலாசாரம் போற லட்சணத்தைப் பாருங் கோவன்” என்று நடுத்தர வயதுப் பிரயாணி ஒருவர் அருவருப்புடன் கூறுகின்றார்.

பஸ் டிறைவர் திடீரென பிறேக்கைப் போட்டு பஸ்வண்டியை நிறுத்தும் பொழுதும் திடீரென பஸ்சை எடுக்கும் பொழுதும் பிரயாணிகள் முன்னுக்கு வீசப்பட்டும் பின்னுக்கு வீசப்பட்டும் ஒருவருடனொருவர் மோதி அவஸ்தைப் படுகின்றனர். இக் காட்சியை டிறைவர் தனக்கு முன்னால் தலைக்கு மேலேயுள்ள கண்ணாடியில் பார்த்து ரசித்து தனக்குள் நமட்டுச் சிரிப்புச் சிரிக்கின்றான். அதுமாத்திரமல்ல பஸ்வண்டியை திடீர் திடீரென அவன் வலப்புறமாகவும் இடப்புறமாகவும் அடிக்கடி மடக்கி வெட்டும் பொழுது பிரயாணிகள் வலப்புறமாகவும் இடப் புறமாகவும் திடீர் திடீரெனச் சரிந்து ஒருவருடன் ஒருவர் முட்டி மோதுப்படுகின்றனர். இதையும் அவன் பெரும் வேடிக்கையாய் பார்த்து ரசிக்கின்றான்.

“கட்டேலை ஏத்த வேண்டிய பஸ் வண்டியளை, றோட்டிலை ஓடவிட்டு சனங்களை கட்டேலை போகப் பண்ணிக் கொண்டி ருக்கின்றாங்கள் இவங்கள்.’

ஒரு முதியவர் முறையிடுவது போல் கூறுகின்றார். “இந்த தனியார் பஸ் வண்டியளிலை பிரயாணம் செய்யி றவை எல்லாரும் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள். உறுதியாகக் கூறுகின்றார் ஒருவர்.

பிரயாணிகளில் சிலர் அவரை வியப்புடன் பார்க்கின்றனர்.

பிரயாணிகளை ஏற்றுவதற்கு ஒரு இடத்தில் பஸ் நிற்கின்றது.

மூன்று வயதுக் குழந்தை ஒன்றைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு நிறைமாதக் கர்ப்பிணித்தாய் பஸ்சிற்குள் ஏறு வதற்கு முயற்சிக்கின்றாள்.

“கெதியாய் ஏறு”, “கெதியாய் ஏறு” என்று புட்போட்டில் நின்று கொண்டிருக்கின்ற கொண்டக்டர் அவளை அவசரப் படுத்துகின்றான்.

கர்ப்பிணித் தாயால் பஸ்சிற்குள் ஏற முடியாமலிருக்கின்றது.

கொண்டக்டர் புட்போட்டில் நின்றுகொண்டிருப்பதால் அவள் ஏறி உள்ளே செல்வதற்கான வாசல் இடைவெளி போதா மலிருக்கின்றது.

“ஏன் சுணங்கிறாய்? கெதியாய் ஏறித் துலையன்.” அவன் அவசரப்படுத்துகின்றான்.

அந்தக் கர்ப்பிணித்தாய் நெரிந்து கொண்டு ஏறுகின்றாள். கொண்டக்டர் தற்செயலாக நடப்பதுபோலப் பாவனை செய்து கொண்டு தனது கையால் அவளுடைய மார்பில் வேண்டுமென்றே இடிக்கின்றான்.

கர்ப்பிணித்தாய் பதட்டமடைந்து கால் இடறி விழப்பார்க்கின்றாள்.

பின் ஆசனத்தில் இருந்து இதை அவதானித்துக் கொண்டிருந்த சோமன் திடீரென எழுந்து விழவிருந்த அந்தக் கர்ப்பிணித் தாயை கைகொடுத்துப் பிடித்து தனது இடத்தில் இருத்துகின்றான்.

“அக்கிரமத்திற்கும், அடக்குமுறைக்கும் எதிராகக் கிளர்ந்தெழுகின்ற இந்தச் சமூகம், இன்று இந்த தனியார் பஸ் மாஃபியாக் கும்பலின் நவீன நரகாசுரர்களின் அட்டகாசங் களையும், சண்டித்தனங்களையும் எப்படித்தான் சகித்துக் கொண்டு இவ்வளவு பொறுமையுடனிருக்கின்றதோ? இதனுடைய தன்மான உணர்வு செத்துவிட்டதா?”

இக்கேள்வி சோமனுடைய உள்ளத்தில் எழும்புகின்றது. சோமன் கொண்டக்டர் பக்கம் திரும்புகின்றான்.

வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கின்ற கொண்டக்டர் அவன் கண்ணில் படுகின்றான்.

கோபத்தில் சோமனுடைய நாளங்களில் இரத்தம் வீறிட்டு வேகமாய்ப் பாய்ந்தோடுகின்றது. நரம்புகளும் நாளங்களும் புடைத்து விண்ணென்று நாணாய்த் தெறித்து நிற்கின்றன.

நெடுந்தூரம் பாரிய வாகனத்தை ஓட்டுவதைத் தொழிலா கக் கொண்டிருக்கின்ற தன்னுடைய நீண்ட உருண்டு திரண்டு முறுக்கேறிய கைகளினால் அந்த அற்பனை அலாக்காகத் தூக்கி எதிரிலேயுள்ள மதில் மேல் மோத வேண்டும் போலிருக்கின்றது அவனுக்கு.

சோமனுடைய முப்புரமெரித்த உருத்திரப் பார்வையில் கொண்டக்டருக்கு பீதியில் உதறலெடுக்கின்றது. அவனுடைய முகம் பேயறைந்த மாதிரி வெளிறிக் கிடக்கின்றது.

இந்தக் கோழை ஆத்மாவைத் தாக்கித் தன்னுடைய கரங்களைக் கறைப்படுத்தக் கூடாதென்ற எண்ணத்தில் அவன் தன்னுடைய கோபத்தைக் கடும் பிரயத்தனப்பட்டு அடக்கு வதற்கு முயற்சிக்கின்றான்.

“இறங்கடா றாஸ்கல், புட்போட்டாலை”.

சோமனுடைய கோபக்கனல் வார்த்தைகளாய் வெடிக்கின்றது.

எதிர்பாராத இந்தத் திடீர் தாக்குதலால் கொண்டக்டர் நிலை தடுமாறி அதிர்ச்சியடைகின்றான்.

“நீ ஆரடா எனக்குச் சொல்றதுக்கு?”

சிறிது நேரத்தில் தன்னைச் சுதாரித்துக் கொண்ட கொண்டக்டரின பாய்ச்சல்.

“நான் ஒரு பிரயாணியடா. நீங்கள் விடுகின்ற சேட்டையளை, உங்கடை அட்டகாசங்களை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் வாறம். எதுக்கும் ஒரு எல்லை வேணும்.’

சோமன் நிதானித்துக் கூறுகின்றான்.

“என்னத்தைக் கண்டிட்டியள்? நாங்கள் என்ன செய்யிறம்?”

ஒன்றுமே தெரியாத அப்பாவி போல கொண்டக்டர் நடிக்கின்றான்.

“உங்கடை வக்கிர உடல் வேட்கையைத் தீர்க்கிறதுக்கு பஸ் பிரயாணிகள் தான் கிடச்சினையோ?”

“என்ன கதையளக்கிறாய்?”

ஏளனமாய் கேட்கின்றான் கொண்டக்டர்.

“நீங்கள் புட்போட்டிலை நிண்டுகொண்டு பஸ்சிலை ஏறுற, இறங்கிற இளம் பெண் பிள்ளையளை உரஞ்சிறது, இடிக்கிறது எங்களுக்குத் தெரியாதெண்டு நினைக்கிறியளே?”

“என்ன சொல்லிறாய்?’

“ஏன் இப்ப நீ என்ன செய்தனீ?”

“உன்ரை தாய்க்கு அல்லது உன்ரை சகோதரிக்கு இப்பிடி ஆராவது செய்தால் நீ என்னடா செய்வாய்?”

கொண்டக்டர் மௌனமாய் நிற்கின்றான்.

“உன்ரை பெண்சாதிக்கு இப்பிடி ஆராவது இடிச்சால் நீ பாத்துக கொண்டு சும்மாய் நிப்பியோடா?”

சோமனுடைய ஆக்ரோஷ வார்த்தைகள் கொண்டக்டரைச் சாடுகின்றன. அவன் மலைத்துப் போய் நிற்கின்றான். மௌனிகளாயிருந்த பிரயாணிகள் மத்தியில் சலசலப்புக் கிளம்புகின்றது.

“எடே நாங்கள் சிங்களவரடா. இது எங்கடை இடமடா. நீங்கள் தமிழரடா. உங்கடை இடம் யாழ்ப்பாணம். நீங்கள் எல்லாரும் யாழ்ப்பாணம் போங்கோடா.”

புதிதாக எதையோ கண்டுபிடித்துவிட்டதாக நினைத்துப் பெருமையுடன் கூறுகின்றான் கொண்டக்டர்.

“நீ போடா மாத்தறைக்கு”.

சோமன் கத்துகிறான்.

“எதுக்கடா நான் போகவேணும்?”

“யாழ்ப்பாணம் இந்த நாட்டின்ரை ஒரு பகுதியடா. அது மாதிரித்தான் மாத்தறையும் இலங்கையின்ரை ஒரு பகுதி. இந்த நாட்டிலை பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த நாடு சொந்தம். இது என்ரை தாய்நாடு. என்னை யாழ்ப்பாணம் போகச் சொல்ல உனக்கு என்ன உரிமையிருக்கடா? என்னை நீ யாழ்ப்பாணம் போகச் சொல்ல உனக்கு உரிமையிருக் கெண்டால் உன்னை மாத்தறைக்குப் போகச் சொல்ல எனக்கு உரிமையிருக்கு. இந்த நாட்டிலை உங்களுக்கிருக்கிற உரிமைதான் எங்களுக்குமிருக்குதெண்டதை நீங்க மறந்தி டாதையுங்கோடா. நாங்கள் எங்கை இருக்கிறதெண்டு தீர்மானிக்கிற உரிமை எங்களுக்குத்தானிருக்கடா.”

தீர்க்கமாய் உறுதிப்பாட்டுடன் கூறுகின்றான் சோமன்.

தென்பகுதியிலுள்ள கிராமப்புற மக்கள் கதைக்கின்ற பாணியில் சோமனுடைய பேச்சு இருந்ததைத் தெரிந்துகொண்ட பிரயாணிகளுக்கு வியப்பு.

சோமன் எண்பதாம் ஆண்டு ஜுலை வேலை நிறுத்தம் வரை, கொழும்புக்கும் மாத்தறைக்குமிடையில் பஸ் சாரதியாய் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன். அந்தக் காலத்தில் தென்பகுதிக் கிராமப்புற மக்களுடன் அவன் அந்நியோன் யமாகப் பழகி அவர்களுடைய பேச்சு வழக்கை பரிச்சயப் படுத்திக் கொண்டதால் அவர்களுடைய பாணியில் இப்படி அவனால் சரளமாகப் பேச முடிகின்றது என்பது இந்தப் பிரயாணிகளுக்கு எங்கே தெரியப்போகின்றது.

நிலைகுலைந்து தடுமாறி நிற்கின்றான் கொண்டக்டர்.

“நீங்கள் எல்லாம் புலியள்!”

திடீரெனக் கத்துகின்றான் கொண்டக்டர். இது மற்றுமொரு புதிய கண்டுபிடிப்பு என்ற நினைப்பு அவனுக்கு.

“நீதி நியாயத்தைப் பற்றிப் பேசிறவனை புலியெண்டு நீங்கள் நினைச்சால் அதுக்கு எங்களாலை ஒண்டும் செய்யேலாது”.

பொட்டு வைத்திருக்கின்ற அந்த பெண் இளசு பிரத்தி யட்சமாய்க் கூறுகின்றாள்.

“நாங்கள் புலியளெண்டால் பஸ்சை பொலீசுக்குக் கொண்டு போங்கோவன்.”

நிர்ப்பயமாகக் கூறுகின்றாள் அவள்.

பொலிஸ் என்றதும் பஸ் சாரதியின் நெஞ்சு திக்கென்றது.

“என்ன நடந்தாலும் கடைசிவரையும் நான் பொலிஸ் ஸ்டேசனுக்குப் போகமாட்டன். இது நடக்காத காரியம்.”

அவனுடைய நெஞ்சு படபடக்கின்றது.

“முதலாளியும்கூட பொலீஸ் ஸ்டேசன் பக்கம் தலை காட்டக் கூடாதெண்டு துடக்கத்திலேயே சொன்னவர். நான் போக மாட்டன். வாறது வரட்டும்.”

கொண்டக்டர் கூட பொலீஸ் என்றதும் பீதியில் பதறுகின்றான்.

“பொலீஸ் ஸ்டேசனுக்குப் போனால் எங்கடைபாடு அதோ கதிதான். இப்பென்ன செய்யிறதெண்டு எங்களுக்கு ஒண்டும் தெரியாமல் கிடக்கு?”

அவன் திரிசங்கு நிலையில் நிற்கின்றான்.

“எங்களுக்கு நேரம் போட்டுது. சும்மா புடுங்குப் பட்டுக் கொண்டு நில்லாதையுங்கோ. பஸ்சை பொலீசுக்கு விடுங்கோ அல்லது போவேண்டிய இடத்துக்கு பஸ்சை விடுங்கோ”.

சில பிரயாணிகள் ஏககாலத்தில் கூறுகின்றனர்.

“பொலீசுக்குப் போனால் எங்களுக்கும் நல்லது. ஐஞ்சாறு மாதம் உள்ளுக்கை இருந்திட்டு வரலாம். நாங்கள் ‘லொச்’ காரனுக்குக் கொட்டி அளக்கிற காசு மிச்சம். அதோடை சைவக்கடைக்காறன்ரை பழைய சாப்பாட்டுக்கு காசு தானம் பண்ணவும் தேவையில்லை.”

மூன்று நான்கு தடவைகள் வெலிக்கடைச் சிறைக்குச் சென்று வந்த அவள் கூறுகின்றாள். அங்குதான் அவள் இப்படிச் இ சிங்களம் பேசக் கற்றுக் கொண்டாள். அத்துடன் வேறு சிலருடனும் அவளுக்குத் தொடர்பு ஏற்பட்டது. அந்தச் சிலருடைய தொடர்பு அவளுடைய உள்ளத்தை விழிப்படையச் செய்துள்ளது.

“அற நனைஞ்சவனுக்கு குளிரென்ன கூதலென்ன? நாங்கள் அப்பாவியள். எங்களை வீட்டிலையும், றோட்டிலையும் கண்ட நிண்ட இடங்களிலையெல்லாம் வைச்சு நாயளைப்போல் அள்ளிக் கொண்டு போறாங்கள். ஆண் பெண், சிறிசு பெரிசு, கிழடுகட்டை எண்ட வித்தியாசமில்லாமல்தான் பிடிக்கிறாங்கள்.”

வேதனை மேலிட அவள் கூறுகின்றாள்.

“அது மாத்திரமே? நட்டநடுச் சாமத்திலையும் வந்து பிடிக்கிறாங்கள். பெண்பிள்ளையளை உடுத்த உடுப்போடை பிடிச்சுக்கொண்டு போறாங்கள். அதோடை இளம் பெண் பிள்ளையளை இரவு உடுப்போடை படம் கூடப் பிடிக்கிறாங்கள்.”

அவளுடைய வார்த்தைகளில் வேகமும் துடுதுடுப்பும்.

“ஏன் தாமதிக்கிறியள்? பஸ்சை பொலீசுக்கு கொண்டு போங்கோவன்.”

அவர்கள் மூவரும் ஒரே மூச்சில் கூறுகின்றனர்.

பஸ் ஓடிக்கொண்டிருக்கின்றது.

பொலீஸ் நிலையத்தை நோக்கி அந்த பஸ்வண்டி செல்லவில்லை.

“சுந்தரம் மாமா, நாங்கள் திரும்பிப் போவம்”.

அவள் கூறுகின்றாள்.

“என்ன மோனை? திரும்பிப் போகவா?”

“ஓம் மாமா, நாங்கள் லொச்சுக்குத் திரும்பிப் போவம். “என்ன உங்களுக்காகத்தானே நான் லீவு எடுத்துக் கொண்டு வந்தனான். இண்டைக்கு நான் தங்காலைக்கு லொறி கொண்டு போக வேணும். அதையும் விட்டிட்டு இஞ்சை வந்தனான். நீங்கள் என்னடா வெண்டால். ?”

“மாமா நாங்கள் ஏஜன்சிக்காரனிட்டை போகேல்லை.”

“என்னது?”

“நாங்கள் கனடாவுக்குப் போகேல்லை. இஞ்சைதான் நாங்கள் நிக்கப்போறம்.”

இளசுகள் இரண்டும் உறுதியுடன் கூறுகின்றனர்.

“இப்படி நடக்குமெண்டு எனக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் அது உங்கடை வாயுக்காலை வரட்டுமென்டுதான் நான் இருந்தன்.”

இரண்டு இளசுகளும் சுந்தரத்தைப்பார்த்து அர்த்தபுஷ்டியாகச் சிரிக்கின்றனர். அந்தச் சிரிப்பில் பூரணத்துவ எழில்.

சுந்தரத்திற்கு தலைகால் தெரியாத ஆனந்தம். அது பேரானந்தம்.

பஸ் ஓடிக் கொண்டிருக்கின்றது.

பொலீஸ் நிலையத்தை நோக்கி பஸ் செல்லவில்லை.

ஏன்?

இந்த பஸ் சாரதியும் கொண்டக்டரும் தென்பகுதியில் நடந்த அநேக கொள்ளை, கற்பழிப்பு, கொலைகளுக்காகப் பொலீஸாரால் நீண்ட காலமாகத் தேடப்பட்டு வருபவர்கள்.

இருவரும் இராணுவத்தை விட்டு ஓடி வந்தவர்கள். இந்த விஷயம் இந்த பஸ்சின் முதலாளிக்கு மாத்திரம் தான் தெரியும். பஸ் முதலாளி இதைப்போல ஏழெட்டு பஸ்களின் சொந்தக்காரர்.

இந்த பஸ் முதலாளி ஓய்வு பெற்ற ஒரு பொலீஸ் உயர் அதிகாரி.

– 1998, வேட்கை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2000, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *