கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 31, 2023
பார்வையிட்டோர்: 7,633 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

[டைமன் : ஏதென்ஸ் நகரத்துக் குபேரன்

பிளேவியஸ் : யோக்யமான வேலைக்காரன்

அல்கிப்யாடிஸ் : உண்மையான வாஞ்சையுள்ள சேனாதிபதி

அப்பெமென்டாஸ் : லோகத்தை திட்டும் சித்தாந்தி

அயோக்ய நண்பர்கள், கவிராயர்கள், கடன்காரர்கள், செனட் சபையினர் முதலியோரும் வந்துபோவார்கள்.]

பணக்கார டைமன்

டைமன் குபேர சம்பத்துடையவன்; கிரேக்க நாகரிகத்தின் நாற்றங்கால் என்று சொல்லவேண்டிய ஏதன்ஸ் நகரத்தின் பிரதான பிரஜை. உலகத்தின் சௌபாக்கியங்கள் யாவும் அவன் காலடியில் கிடந்தன. பணம் இருந்தால் மட்டும் போதுமா. தாராளமாக இரு கைகளாலும் வாரி வழங்கும் மனசும் இருந்தது.

ஷேக்ஸ்பியர்

அவன் மாளிகையிலே நண்பர்களுக்கு ஓயாத விருந்து. எடுத்த வார்த்தைக்கெல்லாம் பரிசு. அவனுடைய ஜீவியமே பெருங் களியாட்டமாக இருந்தது.

ஏதன்ஸ் நகரத்தின் குடியாட்சியில் அவனுக்கு சொல் சக்தி உண்டு ; ஏனென்றால் நகரத்துச் சேனையில் தலைமை வகித்துப் போர் புரிந்து பவித்திரமான வடுக்கள் பெற்றவன்.

டைமனை, ஏதன்ஸ் நகரத்தின் அதிர்ஷ்ட தேவதை என்றே சொல்லவேண்டும். அவன் வீட்டில், “ஐயோ ” என்று வருகிறவன் மனம் ஒடிந்து திரும்பமாட்டான். பாட்டுக் கட்டிவரும் கவிராயரும் வர்ணப்படம் தீட்டிவரும் ஓவியக் காரரும் பட்டினியோடு திரும்பியதில்லை. நகை வியாபாரிகளுக்கு அவர் முற்றத்தில் கொள்ளை லாபம்.

டைமன் அவ்வூரில் மூன்றுபேரைத் தன் உயிருக்குயிரான நண்பர்களாக மதித்திருந்தான். அவன் வீட்டுக்கு அவர்கள் விருந்தாடி வந்து பரிசில் பெற்றுப் போகாத நாள் கிடையாது. ஆனால் அவர்கள் அவனைப் பணம் காய்ச்சி மரம் என்று நினைத்திருந்தார்கள். அவன் புன்சிரிப் பின் தன்மையிலே தளிர்த்தார்கள்.

டைமன், வாரி வழங்கும் துரு துருப்புக் கொண்டவனாதலால், இரண்டு கைகளாலும் கடன் வாங்கி வந்தான். வென்டிட்டஸ் என்ற நண்பன் ஒருவன் கடன் காரன் கையில் சிக்கிக் கொண்டானா; உடனே அவனை மீட்க டைம னின் பணம் விரைகிறது. ஒரு ஏழைக் கிழவன்; அவனுக்கு ஒரு மகள். அவளை டைமனுடைய வேலைக்காரன் காதலிக்கிறான். கிழவனுக்கோ, தட்டுத் தூக்குகிறவன் தன் மகளைக் கலியாணம் செய்துகொள்வதா என்பது. இந்தச் செய்தி காதில் விழுந்ததும் அந்த இரண்டு இளம் ஜீவன் களும் சுகமாக இருக்க, வேண்டிய பணத்தை வேலைக்காரனுக்குக் கொடுத்து, அவனை அடி மைத் தளையிலிருந்து விடுவித்து, கல்யாணமும் செய்துவைக்கிறான்.

டைமனுக்கு வாழ்விலே கஷ்டம் தெரிய வில்லை. பணத்தின் சிக்கல்கள், மனித குணத்தின் ஆழம்,- இவற்றை அறிந்துகொள்ள அவகாசம் இல்லை; அப்படி பெரியதொரு கேளிக்கையாக. இருந்தது அவர் வாழ்வு. ஆனால் அவனுடைய கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள், அவனது ஆசைகள் ஓடும் திசையில் போக்கு அறிந்து அவற்றை நடத்திவைப்பது அவனுடைய மாளி கைக் கணக்கப்பிள்ளையான பிளாவியஸ். அவன் யோக்யன்.; டைமனின் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டின் விபரீதம் எங்கு வந்து விடியும் என்பதை உணர்ந்தவன்; எ ஜமான் பேரில் மாறாத பாசம் வைத்த பணியாளன்.

ஏதன்ஸ் நகரத்தைக் காப்பதற்காக, முன்பு டைமன்ஸ் தலைமையில் நடைபெற்ற போரில், துணையாக நின்ற அல்க்கிப்யாடிஸ் என்றசேனாதி பதிக்கு உண்மையான நட்பும் விசுவாசமும் உண்டு. அவன் இப்போது ஏதன்ஸ் நகர குடி யாட்சியின் ஸ்தானாதிபதி.

ஆனால் நகரக் குடியாட்சியோ உளுத்துப் போனதொரு செனேட் சபையின் நிர்வாகத்தின் கீழ் சிக்கிக் கிடந்தது. சபை அங்கத்தினரோ உடலும் நெஞ்சும் வரண்ட பேர்வழிகள், பணத்தை குட்டிபோட விட்டுப் பெருக்குவதி லேயே பொழுதையும் வயதையும் கழிப்பவர்கள். இவர்களுக்கு டைமன் என்றால் பிடிக்காது. கெவுருதை ‘ பிடித்த பயல், படாடோபக்காரன் என்று வெறுப்பவர்கள். டைமனுடைய கிரகம் உச்சத்திலிருக்கும்வரை அவனை இவர்களது வெறுப்புத் தீண்டுவதற்கு திராணியற்று முடங்கிக் கிடந்தது.

இந்த நகரத்தின் கோலாகல வாழ்வுக்கும் சர்கேட்டுக்கும் மாற்று மருந்துபோல ஒரு சித் தாந்தி நடமாடித் திரிந்தான். லோகத்தின் பகட்டு, படாடோபம், நம்பிக்கை மோசடி இவற்றை குத்திக் குத்திக் காண்பிக்கும் சுபாவம் உள்ளவன். அழையா விருந்தினனாக எல்லா இடங்களிலும் நுழைவான், திட்டுவான், தூற்று வான். மனிதர்கள் என்றால், சகல துற்குணங் களுக்கும் தாயகமான “கெட்ட ஜாதி” பிராணி என்று நினைப்பவன். வலியப் போய் ஒருவன் முன்னால் உட்கார்ந்துகொண்டு அவனை வாய்க்கு வந்தபடி திட்டுவான். ஏதன்ஸ் வாசிகள் தங் களுக்குப் பொழுது போகாவிட்டால், இவனது திட்டுகளை உல்லாசமாக ரசிப்பார்கள். இவன் பெயர் அப்பெமென்டாஸ். இவனுக்கு ஒரு சீடன் உண்டு. அவன் பெயர் முட்டாள்.

கடைசி விருந்து

செல்வம் என்பது என்ன வற்றாத ஊற்றா. டைமனுக்கும் பணமுடை என்ன என்பது தெரியும் சமயம் வந்தது. ஒருநாள் வேட்டை யாடி விட்டு உத்சாகமாக விருந்துக்குத் திரும்பு கிறான் டைமன். கடன்காரர்களுடைய வேலைக்காரர்கள் பணத்துக்கு அவனிடம் நேரில் இடை மறித்துக் கேட்கிறார்கள். சிறிது மண் கரைங் தால் போதுமல்லவா? கரை உடைத்துக் கொண்டதுபோல் நாலா திசையிலும் கடன் காரர்கள் பிச்சுப் பிடுங்குகிறார்கள். கணக்குப் பிள்ளை பிளேனியஸ் எத்தனையோ நாள் சால் ஜாப்புச் சொல்லிப் பார்த்தான். கடன்காரர்கள் எத்தனை நாட்கள்தான் பொறுத்திருப்பார்கள். டைமனோ “கொடு கொடு” என்பதைத் தவிர கணக்குப் பார்க்க உட்காரவில்லை.

டைமனுக்கு உட்கார்ந்து கணக்கைப் பார்த் ததும் பயமாகத்தானிருந்தது. இத்தனை நாள் ஏன் சொல்லவில்லை என் று கோபிக்கிறான். சொல்லுவதற்கு வாயெடுக்க விட்டால்தானே. பணத்தைத் திருப்பிக் கொடுப்பதில் என்ன பிர மாதம். உயிர்த்தோழர்களுக்கும், உதவி பெற்ற வர்களுக்கும் ஆள் அனுப்புகிறான். அவர்களுக்கு, என்ன பைத்தியமா. இப்பொழுதில்லையே. ” ஒரு மணி நேரத்துக்கு முன் வந்திருக்கக் கூடாதா. “என் பணம் வேறு ஒரு இடத்தில் சிக்கிக் கிடக்கிறதே.” ஐயோ பாவம் டைம. னுக்கா இப்படி வரவேணும்” என்று சொல்லி அனுப்பிவிடுகிறார்கள்.

“இத்தனை நாள் வெறும் அந்தரத்தில் அல்லவா நடமாடிக்கொண்டிருந்தோம்”. “தடுமாறிய காலுக்கு தாங்கல் இல்லை” என்ற உண்மை டைமனை நிலைகுலையச் செய்கிறது.

அவனுடைய சித்தம் கலங்கி விடுகிறது. ஒரே நாளில் பிச்சைக்காரனாகி, இத்தனை நாள் கூடிக் குலாவியவர்கள் ஏறெடுத்தும் பார்க்காமல் போனால் யாருக்குத்தான் மூளை கலங்கி விடாது. மனம் கைத்துப்போய் நண்பர்களை மறுபடியும் விருந்துக்கு அழைக்கும்படி பிளேவியஸுக்கு உத்தரவு போடுகிறான்.

எஜமானுடைய கோபத்தை சமாளித்துக் கொண்டு வந்த கணக்குப் பிள்ளைக்கு இன்னுமா வெறித்தனம் என்று படுகிறது.

“போய் அழைத்துக்கொண்டுவா” என்று கர்ஜிக்கும்போது என்ன செய்ய முடியும்.

அழைப்பைக் கண்ட நண்பர்கள், டைமன் அடியோடு அழிந்துவிடவில்லை என்று நினைக் கிறார்கள். அவனுடைய மனசு கள்ளங் கபடு அற்றது. பிறரை சந்தேகிக்காதது என்பது அவர்களுக்குத் தெரியும். பஞ்சப்பாட்டுப் பாடி இன்னும் கிடைக்கிறதைத் தட்டிக்கொண்டு போகலாம் என்று நினைக்கிறார்கள். ருசிகண்ட பூனைகள் அல்லவா.

டைமன் மாளிகைக்கு ஒவ்வொருவராக வந்து பழய கும்பல் கூடுகிறது. அதிதிகளுக்கு மூடியிட்ட பாத்திரங்களில் பறிமாறப்பட்டிருக் கிறது. நம்மை பிரமிக்க வைத்து மகிழ வைக்க புது தினுசான பரிசில் வந்திருக்கும் என்று மனப் பால் குடிக்கிறது இந்த சீலைப்பேன் கும்பல்.

“தகுதிக்குத் தகுந்தபடி விருந்து.” கொடுக்கிற விருந்தை ரசியுங்கள்; கொடுக்கிறவனை நினைக்க வேண்டாம்! இருபதுபேர் கூடினால், இருபதுபேரில் யோக்கியர்களே இருக்கக் கூடாது; லோகம் அப்படி. அழைப்புபற்றி எனக்குக் கவலையில்லை; பாத்திரத்தைத் திறந்து நக்குங்களடா. நாய்களா” என்கிறான் டைமன். பாத்திரத்தில் மூடி வைத்திருந்தது வெறும் வென்னீர்தான்.

வென்னீரை இந்த அயோக்கிய கும்பல்மேல் ஊற்றி அடித்துத் துறத்தி விடுகிறான் டைமன்.

இதற்கிடையே, அல்கிப்யாடிஸ், தன்னு டைய நன்பனுக்காக செனேட் சபையில் பரிந்து பேசுகிறான்; வரட்டுக் கிழங்கள் அவனையும் நாடு கடத்தி விடுகின் றன. டைமன்மீதும் கடுந்தண் டனை விதிக்கப்போவதாக கொக்கரிப்பு. அதற் காக அவன் காத்திருந்தால்தானே. மனிதர்களுள் கூடி வாழ்வதைவிட மிருகங்களிடை காட்டில் திரிவது நல்லது என்று நாகரிகத்தின் பகட்டை பசையற்ற தன்மையை வைதுகொண்டே போய் விடுகிறான்.

மிஸ் ஆந்த்ரபாஸ்

சித்தம் கலங்கி காட்டில் மனம்போனபடி நடமாடித் திரிகிறான் டைமன். அவன் உள்ளம் அக்னியாகக் கொதிக்கிறது. லோகமானது அன்பு, பாசம் என்பவை சற்றும் தளிர்விட முடி யாத சுடுகாடாகத் தோன்றுகிறது அவனுக்கு. மீஸ் ஆந்த்ரபாஸ் என்று தனக்கு பெயர் ஒன்று வைத்துக்கொண்டு உலகத்தையும் அதன் அயோக்கியத் தன்மைகளையுமே திட்டுபவனாக காலத்தைக் கழிக்கிறான். வெறிகொண்ட மன சுக்கு குழிதோண்டும் குணம் ஒன்று ஏற்பட்டு விடுகிறது.

இவன் இவ்வாறு தோண்டிக் கொண்டிருக் கையில் ஒரு புதையல் கிடைக்கிறது. மனம் கலங்கிய டைமனுக்கு தங்கத்தின் உபயோகம் புதுமாதிரியாகப்படுகிறது. உலகத்தை அழிக்க, அதை நாசம் செய்ய உபயோகப்படுத்த வேண்டும்.

கடற்கரையருகிலே உள்ள குகை ஒன்றில் டைமன் குடியிருக்கிறான். இந்தச் சமயத்தில் அல்கிப்யாடிஸ் தன்னுடைய சைன்னியத்துட னும், வைப்பாட்டிகள் இருவருடனும் அங்கு வருகிறான். டைமன் மனசுக்கு ஆறுதல் சொல்லி அழைத்துப் போகவேண்டும் என்ற ற ஆசை. டைமனைக் கொடுமைப்படுத்திய ஏதன்ஸ் நகரத் தின்மேல் படை எடுத்துச் சென்று அதை அடக்கவேண்டும் என்று விரும்புகிறான்.

ஆனால் டைமனுடைய மனம் அடியோடு சிதைந்துவிட்டது. அல்கிப்யாடிஸையும் அவனு டன் வந்த இரு பெண்களையும் வாய்க்கு வந்தபடி வைகிறான். ஈவு இரக்கம் காட்டாமல், ஏதென்ஸ் வாசிகளை கிழம், குஞ்சு, பெண் என்ற பேதம் பாராமல் கொல்லு என்று கூவுகிறான். லோகத் தில் நோயைப் பரப்பும்படி, பெண்களுக்கு புத்தி சொல்லி, கண்டெடுத்த பொன்னை கொடுக்கிறான்.

இவன் போன பிறகு அப்பெமென்டாஸ் வருகிறார். ‘யாரடா என் வேஷத்தைப் போட்டுக் கொண்டு உலகத்தைத் தூற்றுகிறவன்?’ என்று கோபிக்கிறான். இரண்டுபேரும் மனமார வாயார வைதுகொள்கிறார்கள். “உன்மேல் ஒரு கல்லெடுத்து அடித்தால், கல் நஷ்டம்” என்கிறான் டைமன்.

“அடே உன்னை ஏமாற்றினவனைப்போல் வேஷம்போட்டு அவனை ஏமாற்று; அதுதான் லோக சம்பிரதாயம்” என்கிறான் அப்பெமெண் டாஸ்.

“நாயே,” “பேயே” என்று திட்டிக்கொள்ளுகிறார்கள்.

“நீடூழி வாழ்ந்து உன் கசப்பைக் கட்டிக் கொண்டு அழு” என்று ஆசீர்வதிக்கிறான் அப்பெமென்டாஸ்.

“நீடூழி வாழ்ந்து பிறகு செத்துத் தொலை” என்று மறு ஆசீர்வாதம் கொடுக்கிறான் டைமன்.

டைமனிடம் இன்னும் பணம் இருக்கிறது. என்ற ரகசியம் எப்படியோ பரவிவிடுகிறது. அவனிடம் கொள்ளையடிக்கலாம் என்று சில திருடர்கள் வருகிறார்கள். அவர்கள் எதிர்பார்த் ததற்கு மாறாக, அவர்களுக்கு பணத்தைக் கொடுத்து லோகத்தைக் கொள்ளையடிக்கும்படி சொல்லியனுப்புகிறான். “லோகமே ஒரு பெரும் திருட்டு; சந்திரன், சூரியனிடமிருந்து வெளிச் சத்தைத் திருடுகிறது; சூரியனும் திருடன் கடலிலிருந்து தண்ணீரைத் திருடுகிறான்; உலகமும் திருடுகிறது. உங்களைப் பிடித்துக் கட்டும் சட்டம்; அதுவும் திருடுகிறது! இதோ இன் னும் பொன் இருக்கிறது; எடுத்துக்கொண்டுபோய் இன்னும் கொள்ளையடியுங்கள்” என்று அனுப்புகிறான்.

டைமன் பித்தம் பிடித்து புறப்பட்டுவிட்ட தைக் கண்டு மனம் நொந்துபோன பிளேவியஸ் வனைத் தேடிக்கொண்டு கடைசியாக இந்தக் குகைக்கு வந்து சேருகிறான்.

கோலாகலமாக வாழ்ந்து வந்த டைமன் இருக்கும் நிலை கண்டதும் அவனது நெஞ்சம் வெதும்புகிறது. தன்னிடம் பணம் இருக்கிறது; இன்னும் பழயபடி அவரிடம் பணியாளாக. வேலைபார்க்க விரும்புவதாகச் சொல்லுகிறான்.

“லோகத்திலுள்ள தனி யோக்கியனே, இதோ என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது; அதை எத்துக்கொண்டுபோய்ச் சேர்; மனுஷன் மூஞ்சியைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை; நாயைப் பட்சமாக பார்த்துக்கொள்; மனுஷ னுக்குக் கொடுக்காதே” என்று பதில் கொடுக்கிறான் டைமன்.

‘வேறு ஒன்றும் வேண்டாம்,’ உமது பக்கத்திலிருந்து ஆறுதல் சொல்ல அனுமதி கொடுங்கள்’ என்று கெஞ்சுகிறான் பிளேவியஸ்.

“சாபத்துக்கு பயம் இருக்குமானால் இங்கே இருந்து ஓடிப்போ. இந்தப் பக்கம் தலைகாட்டாதே” என்று சொல்லிவிடுகிறான்.

டைமனிடம் பணம் இருக்கிறதென்ற சேதி ஏதன்ஸ் நகருக்குள்ளும் பரவிவிடுகிறது. கவிராயரும், படம்போடுகிறவனும் இவனைத் தேடிக் கொண்டு வருகிறார்கள். கூழைக்கும்பிடு போட்டு, வாயாரப் புகழ்கிறார்கள். கவிராயர் தம் கற்பனைச் சரடுகளை எல்லாம் அள்ளி வீசு கிறார். கொஞ்சநேரம் இவர்களை நையாண்டி செய்துவிட்டு “சில அயோக்கியர்கள் இருக்கி றார்கள்; அவர்களைப் போக்கிவிட்டால் உங்களுக்குப் பொன் தருகிறேன் ” என்கிறான் டைமன்.

“சொல்லுங்கள், நிமிஷத்தில் தீர்த்துவிட்டு மறுவேலை பார்க்கிறோம்” என்று ஆரவாரம் செய்கிறது இந்தக் கற்பனைக் கும்பல்.

“நீங்கள்தானடா அந்த அயோக்கியர்கள்” என்று அவர்களை உதைத்து விரட்டிவிடுகிறான்.

இந்த நிலையில் அல்கிப்யாடிஸின் சைன்யம் ஏதன்ஸ் நகரை நெருங்குகிறது. பீதியடித்துப் போன செனட் சபைக்கு டைமன் ஞாபகம் வருகிறது. அவன் காலடியில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அவனை அழைத்துவந்து, அவனது வீரத்தை உபயோகித்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயலுகிறது.

மன்னிப்புக் கேட்டுக்கொண்டு சமாதானம் செய்து, டைமனை அழைத்துப்போவதற்காக, ஏதன்ஸிலிருந்து இரண்டு செனட்டர்கள் வருகி றார்கள். பிளேவியஸ், அவர்களை அழைத்துக் கொண்டு வருகிறான்; ஆனால் எச்சரிக்கிறான், டைமன் யாரையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்று.

இருந்தாலும் ஆசை யாரை விட்டது ; அதுவும் அபாயம், பின்புறம் நின்று துரத்தும் போது.

குகைக்கு வெளியே வந்து நின்றுகொண்டு பெயர்சொல்லி அழைக்கிறார்கள்.

“அடே நாசமாய்ப் போக; நாக்குப் புழுத்துப்போக” என்று ஏசிக்கொண்டே வெளியே வருகிறான்.

ஏதன்ஸ் நகரத்தின் சார்பாக மன்னிப்புக் கேட்கிறார்கள். அல்கிப்யாடிஸின் சீற்றத்தைத் தடுக்க தாங்களே வந்து தலைமைபூண்டு சேனையை நடத்திச் செல்லவேண்டும் என்று கோருகிறார்கள்.

அல்கிப்யாடிஸிடம் இதைச் சொல்லுங்கள்: அவன் எப்படிக் கொலை செய்து குடலைப் பிடுங்கி எறிந்தாலும் டைமனுக்குக் கவலையில்லை. கிழ வர்களை, கன்னிகளை, வாலிபர்களை கொன்று யுத்தம் என்ற யாக குண்டத்தில் போடட்டும், டைமனுக்கு கவலையில்லை. பணக்காரக் கடவுள் கள் எங்களைக் காப்பாற்றும்; திருடர்கள், பணக்காரர்களைக் காப்பாற்றுவதைப்போல” என்று சொல்லுகிறான் டைமன்.

“அவரிடம் பேசிப் பிரயோஜனமில்லை; திரும்பிப் போங்கள்” என்று சொல்லுகிறான் பிளேவியஸ்.

“ஏதென்ஸ் நாசமாகப் போகிறதென்றால் வருத்தமாகத்தானிருக்கிறது. எப்படியிருந்தாலும் தாய்நாடு அல்லவா” என்று ஆரம்பிக்கிறான் டைமன்.

செனட்டர்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது.

“பிரபுவே” என்று வாயார வாழ்த்துகிறார்கள்.

“ஏதென்ஸ் நகரவாசிகளிடம் இதைப் போய்ச் சொல்லுங்கள். இங்கே ஒரு பெரிய மரம் ஒன்று தளதளப்பாக வளர்ந்திருக்கிறது. அதை என் னுடைய உபயோகத்துக்காக வெட்டி விடலாம் என்றிருக்கிறேன். ஏதென்ஸ்வாசிகள் எல்லாரும், அவகாசத்தை நழுவவிடாமல் சீக்கி ரம் வந்து அந்த மரத்தில் தூக்குப்போட்டுக் கொள்ளட்டும்; பிறகு மரம் இருக்காது” என்றுகிண்டல் செய்கிறான் டைமன்.

“அவரிடம் பேசிப் பயனில்லை; அவர் இப்படியேதான் சொல்லிக்கொண்டிருப்பார்” என்கிறான் பிளேவியஸ்.

“டைமன் கடற்கரையருகிலே அழியாத மாளிகை கட்டிக்கொண்டான்; கடல் அலைகள் அந்த மாளிகையை தினசரி குளிப்பாட்டும்; என்னுடைய கல்லறை குத்துக்கள், கைத்த வார்த்தைகளில் நோய்க்கும் போருக்கும் மிஞ்சுகிறவர்களை சபிக்கும் என்று ஏதென்ஸுக்கு சொல்லுங்கள். டைமன் ஆட்சி முடிந்தது.”

அல்கிப்யாடிஸ் ஏதென்ஸ் நகரத்து மதில் களை எட்டிவிட்டான். தொடை நடுங்கித் தலைவர்கள், சரணாகதி செய்துவிட்டார்கள். டைமனுக்கு கொடுமை இழைத்தவர்களுக்கு அவர்கள் வகுத்த சட்டமே நியாயம் சொல்லும் என்று எச்சரிக்கிறான். எதற்கும் சம்மதிக்கிறார்கள்; யுத்தமில்லாவிட்டால் போதும்.

ஆனால் வெற்றிக்கு முந்திவிட்டான் டைமன். அவனைத் தேடிச் சென்ற சோல்ஜர் அங்கு ஒரு கல்லறையைத்தான் பார்க்கிறான். அதிலே “இங்கு கிடக்கிறது ஒரு சடலம்; என் பெயரைக் கேட்காதே; லோகத்தில் லோகத்தில் மிஞ்சிய அயோக்கியர்கள் நாசமாய்ப்போக; உலகம் வெறுத்த டைமன் இது. ஆசை தீர சபித்து விட்டுப் போ; நிற்காதே போ.”

தாராளமாக வழங்கிய கை, மண்ணாகி மக்கி சபிக்கிறது.

– உலக அரங்கு (நாடகக் கதைகள்), ஷேக்ஸ்பியர், தமிழில் தருபவர்: புதுமைப்பித்தன், முதற் பதிப்பு: மார்ச் 1947, ஸ்டார் பிரசுரம், திருச்சினாப்பள்ளி.

Print Friendly, PDF & Email
புதுமைப்பித்தன் என்ற புனைபெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *