டான்ஸ் டீச்சர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 6,584 
 
 

டான்ஸ் டீச்சர் சுந்தராம்பாள் மேடையே இல்லாமல் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தாள்.

“யார்தான் விமரிசனம் எழுதறதுன்னு ஒரு இது..,” சரியான வார்த்தைக்காகச் சற்று யோசித்தாள். ஆத்திரத்தில் ஒன்றும் பிடிபடாததால், அதையே திருப்பிச் சொன்னாள். “..ஒரு இது வேண்டாம்? நம்ப மாணவிங்களைக் குறை சொல்ல இவன் யாருங்கறேன்! லட்சக்கணக்கான பேர் படிக்கிற தினசரியிலே இப்படி பப்ளிக்கா எழுதியிருக்கான் அந்த.. அந்த..,” பிசாசு என்று வாய்வரை வந்ததைச் சிரமப்பட்டு விழுங்கினாள்.

அவள் தானே அரற்றிக்கொண்டிருந்தாலும், `யாருக்கு வந்த விருந்தோ!’ என்பதுபோல் கண்டும் காணாமல் அமர்ந்திருந்த பசுபதியின் காதுகளில் அந்த வார்த்தைகள் விழத்தான் செய்தன.

“நான் சரியாச் சொல்லிக்குடுக்காமதான் இந்த இருபது வருஷமா நூத்துக்கணக்கான பொண்ணுங்க எங்கிட்ட வந்து கத்துக்கிட்டுப் போனாங்களா! எத்தனை சலங்கை பூசை, எத்தனை அரங்கேற்றம்!” என்று பொருமினாள்.

வசதி குன்றியவர்களின் குடியிருப்பு ஒன்றில், நான்கு வகுப்புகளுக்கு ஐந்து ரிங்கிட் என்று மிக மலிவாக கற்றுக்கொடுக்கும் ஒருத்தியைப்பற்றி அவள் கேள்விப்பட்டிருந்தாள்.

தான் அவளைவிட ஒரு படி மேல் இல்லையோ? சில மாதங்களாவது கற்றிருக்கிறோமே! அந்த அறிவையும், திரைப்படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கற்றிருந்ததையும் வைத்துக்கொண்டு, துணிவாக ஒரு நடனப்பள்ளி ஆரம்பிக்கும் சாமர்த்தியம் எத்தனை பேருக்கு வரும்!

நாட்டியம் பயில வந்த சிறுமிகளின் பெற்றோரிடம் `நீங்கள் புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும், இப்படி ஒரு தாள ஞானம் மிகுந்த மகளைப் பெற!’ என்று தேனொழகப் பேசிப் புகழ்ந்து தள்ளியதால்தான் சுந்தராம்பாளுக்கு இத்தனை செல்வாக்கு என்பது அவள் கணவருக்குத் தெரியாததல்ல.

ஏதாவது கோயிலில் பண்டிகை காலங்களில் நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய வருகிறவர்களிடம் பணிவுடன் பேசுவது எப்படி என்பதையும் கலையாகவே கற்றிருந்தாள்.

முறையாக, பன்னிரண்டு ஆண்டுகளுக்குமேல் நாட்டியம் கற்றுத் தேர்ந்த சிலரும் நாட்டில் இருந்தனர். நன்கு படித்து, நிரந்தரமான வருமானம் கொண்ட உத்தியோகத்தில் இருந்ததாலோ, அல்லது மேடைகளில் ஆட மாணவிகளை அழைத்துச் செல்கையில் ஆண்களுடன் பழக வேண்டிவரும், அதனால் குடும்பத்தில் விரிசல் ஏற்படுமே என்று பயந்தோ, அதைத் தொழிலாக வைத்துக்கொள்ளாதது சுந்தராம்பாளுக்குச் சௌகரியமாகப் போயிற்று.

`எங்க குடும்பத்திலேயே மொதமொதலா சலங்கை கட்டிட்டு மேடை ஏறப்போறது எங்க மகதான்! ஒங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே, டீச்சர்!” என்று நெகிழ்ந்துபோன தந்தை இரண்டு, மூன்றிடங்களில் சூபர் மார்க்கெட் வைத்திருந்தார் என்பது அவளுக்குத் தெரியும். குருதட்சணையாக அவள் கேட்ட ஐயாயிரம் ரிங்கிட் அளிப்பதற்கு அவர் சிறிதும் தயங்காதது அவளது தைரியத்தை அதிகரிக்கச் செய்தது.

திரைப்படங்களில் ஒலித்த பாடல்கள் சில இந்தியக்கடைகளில் கிடைத்தன. `ரெகார்டு டான்ஸ்!’ என்று யாராவது பெயர் கட்டிவிடப்போகிறார்களே என்று, திரைப்படங்களில் வந்த நடிகைகள் அணிந்தமாதிரியே ஆடைகள் தயாரித்திருந்தாள்.

இவ்வளவெல்லாம் பிரயாசைப்பட்டும், `நாட்டியம் கற்றுக்கொடுக்க உனக்கு என்ன தகுதி?’ என்று யாராவது கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயம் சுந்தராம்பாளுக்கு உள்ளூர இருந்தது.

ரிங்கிட்டில் கிடைத்த பணத்தை ரூபாயாக மாற்றிக்கொண்டு, தாய்நாட்டுக்கு (அவளுடைய தாய் விட்டுவந்த மண்ணுக்கு) பயணமானாள். அந்தக் கொள்ளைப்பணத்தில் அவள் கேட்ட பட்டத்தைத் தர பல சபாக்கள் தயாராக இருந்தன. இருப்பதற்குள் குறைந்த செலவுக்கு ஒப்புக்கொண்ட சபாவைத் தேர்ந்தெடுத்தாள்.

`ஒங்களுக்கு எதுக்குங்க வீண் சிரமம்! நானே எல்லாம் தயாரிச்சுக்கிட்டு வரேன்!’ என்றாள். இன்ன பட்டம் இன்னாரால் இன்ன தேதியில் இவருக்குக் கொடுக்கப்பட்டது என்ற விவரங்களை உள்ளடக்கிய நகைப்பெட்டிமாதிரி ஒன்றைத் தயாரிக்கத் தீர்மானித்தாள். அதைத் திறந்தால், இந்த விவரங்கள் எல்லாம் தங்க எழுத்தில் ஜொலிக்கும். பார்ப்பவர்கள் மயங்குவார்கள் என்று கணக்குப்போட்டாள்.

தொடர்ந்து, அந்த சபாவில் தன் `சீனியர்’ மாணவிகள் இருவரின் நாட்டிய நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தாள்.

`பெரிய இடம்பா! பாத்து எழுதுங்க!’ என்று ஏற்பாட்டாளர் பயமுறுத்த, `எதற்கு வம்பு!’ என்று அஞ்சியவர்கள்போல், `நாட்டிய உடைகளுக்காக நிறையச் செலவழித்திருக்கிறார்கள்!’ என்று மட்டும் ஒரே ஒரு தினசரியில் வெளியிட்டிருந்தார்கள்.

அகமகிழ்ந்துபோன சுந்தராம்பாள் இரண்டு கிலோ பால்கோவா வாங்கி அனுப்பினாள் அந்த விமரிசகர் வீட்டுக்கு.

வெற்றி வாகை சூடிய மன்னன்போல் முகமெல்லாம் சிரிப்பாக, இனி தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற கர்வத்துடன் திரும்பியவள், முதல் வேலையாக, எல்லா தினசரிகளுக்கும் பேட்டி கொடுத்தாள்.

தினசரிகளில் மட்டும் சும்மாவா போடுவார்கள்! `கட்டட வேலைக்குக் கொஞ்சம் குடுத்துட்டுப் போங்க!’ என்று அவரவரும் கேட்க, அந்தச் செலவை ஈடுகட்ட ஒரு அரங்கேற்றத்தையே நிகழ்த்திக் காட்டினாள். அதற்கான விமரிசனத்தையும் ஒருவர்மூலம் எழுதி வாங்கி, பிரசுரம் கண்டதும், `இன்னிக்கு பேப்பரில பாத்தீங்களா? எங்க நிகழ்ச்சியை எவ்வளவு புகழ்ந்து எழுதியிருக்காங்க!’ என்று தம்பட்டம் அடித்துக்கொண்டாள்.

அவளுக்கு அடுத்த வீடு அரசியலில் ஒரு முக்கிய புள்ளியினுடையது என்று தெரிந்ததும், தன் அதிர்ஷ்டத்தை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை சுந்தராம்பாளால்.

தன் வீட்டு சமையல்காரரை விதவிதமான பட்சணங்கள் செய்யச்சொல்லி, அந்த வீட்டு அம்மாளுக்குக் கொண்டுபோய் கொடுத்து, அவளை சிநேகமாக்கிக்கொண்டாள்.

அந்த சிபாரிசில், அரசாங்க நிகழ்ச்சிகளில் ஆட நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. அம்மாதிரியான கொண்டாட்டங்களில் யாரும் நடனத்தைப் பார்க்காது, பக்கத்திலிருந்த பிரமுகரிடம் பேசுவதிலும், வகைவகையான உணவுப்பண்டங்களைச் சாப்பிடுவதிலுமே கவனமாக இருந்துவிட்டது பெரிய சௌகரியமாகப் போயிற்று. அவர்கள் சிரித்த முகத்துடன் எல்லாரையும், எல்லாவற்றையும் பாராட்டுவதே முன்னேறும் வழி என்ற பேருண்மையை அறிந்து வைத்திருந்தவர்கள். `Quite nice, eh?” என்று பக்கத்திலிருப்பவர்களிடம் சிலாகித்து, நல்ல பெயர் தட்டிக்கொண்டு போனார்கள். அத்துடன், பாரம்பரிய இந்திய நடனங்களைப்பற்றி எதுவுமே அறியாதவர்கள். தெரிந்தால் மட்டும், உண்மையைச் சொல்லி இருப்பார்களா, என்ன!

பிரபலமாக ஆயிற்று அவளது நடனப்பள்ளி. சில வருடங்களிலேயே, ஒரு பெரிய பங்களா வாங்கமுடிந்தது. இந்த சமயத்தில்தான் அப்படி ஒரு விமரிசனம்!

ஆடிய மாணவி ஒரு பத்திரிகையின் நிருபரது மகள் என்பதால், மரியாதை கருதி, அத்துறையிலிருந்த அனேகருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர் வேற்று மதத்தினர் ஆனதால், தில்லை நடராஜனுக்கு இவள் கிருஷ்ணனை அபிநயம் பிடிக்கும்படிச் சொல்லிக்கொடுத்திருந்தது புரியவில்லை. தவறாகப்படவுமில்லை.

ஆனால், அந்த நிருபரின் பத்திரிகை ஆசிரியர், தன் கீழ் வேலை செய்பவருக்கு நன்மை செய்வதாக நினைத்து, ஒரு விமர்சகரை அனுப்பிவிட்டார். அவர் விஷயம் தெரிந்தவராக இருந்ததால் வந்தது வினை. `எந்தக் கோயிலில் சிவன் புல்லாங்குழல் வாசிக்கும் சிலை இருக்கிறது? ஒரு நடனத்தின் நடுவில், காரணமில்லாமல் பிரதட்சணம், அப்பிரதட்சணம் இரண்டும் எதற்காக?’ என்றெல்லாம் கேலியாக எழுதியிருந்தார்.

“இவ்வளவு காட்டமா எழுதியிருக்கானே! அந்த மனுசனுக்கு தி-தி-தை, தக-திமி எல்லாம் போடத்தெரியுமா? இல்லே, அலாரிப்புதான் கத்துவெச்சிருக்கானா?” சுந்தராம்பாளின் மனம் ஆறவே இல்லை.

சமயம் கிடைத்தபோதெல்லாம், தன்னை `உதவாக்கரை! பிழைக்கத் தெரியாதவர்’ என்றெல்லாம் பழிக்கத் தயங்காத மனைவி! அவளுடைய தாழ்மையில் பசுபதிக்கு ஒரு குரூரமான திருப்தி உண்டாயிற்று. இந்தவரைக்கும் இவளை அடக்க, இவளது பொய்களை உலகத்துக்கு வெளிக்காட்ட ஒருவர் புறப்பட்டிருக்கிறாரே என்று உள்ளூர மகிழ்ந்தார்.

`ஒருவர் அழகாக இல்லை என்று சொல்ல நாமும் அழகாக இருக்க வேண்டுமா, என்ன!’ என்று அவருடைய யோசனை போயிற்று. எந்த ஒரு உன்னதமான கலையையும் பார்க்கும்போதோ, அல்லது கேட்கும்போதோ, ஆன்மிக உணர்வு ஏற்பட, விவரம் புரியாவிட்டாலும், சிலிர்ப்பு உண்டாக வேண்டும் என்றவரையில் புரிந்து வைத்திருந்தார்.

சுந்தராம்பாள் ஓய்வதாகத் தெரியவில்லை. “அவனோட கிறுக்கலைப் படிச்சுட்டு, நாலுபேரு நின்னுபோயிட்டாங்க! நான் அவன்மேல கேஸ் போட்டு, நஷ்ட ஈடு வாங்கப்போறேன்!” என்று கத்தினாள். “சரிதானே? என்ன சொல்றீங்க?”

தன் அபிப்ராயத்தைக் கேட்கிறாள்! பசுபதிக்குப் பெருமிதம் எழுந்தது. அவருக்குக் கொஞ்சம்போல சட்ட அறிவு இருந்தது. “கோர்ட்டிலே அந்த நிகழ்ச்சியோட ஒலித்தட்டை போட்டுப் பாப்பாங்க. அவன் பக்கத்திலே உண்மை இருக்குன்னு தெரிஞ்சுடும். நீ எப்படி எப்படியோ..,” கனைத்துக்கொண்டார். “கேஸ் நடந்தா, நீ கஷ்டப்பட்டு சம்பாதிச்சதெல்லாம் காத்தா பறந்து போயிடும்!”

இந்த திருப்பத்தைச் சற்றும் எதிர்பார்க்காத சுந்தராம்பாள் அயர்ந்துபோனாள். அப்படியே சரிந்து உட்கார்ந்தாள். “இப்போ என்னதாங்க செய்யறது?”

அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது அவருக்கு. “இந்த விஷயத்தை இதோட விடு, சுந்தரா. இந்தச் சமயத்திலே நீ உணர்ச்சிவசப்பட்டா, வயத்திலே இருக்கிற குழந்தையைத்தான் பாதிக்கும்! இத்தனை வருஷத்துக்கு அப்புறம் இப்போதான் ஒண்ணு ஒன் வயத்திலே தங்கியிருக்கு”.

அவளும் யோசிக்க ஆரம்பித்தாள். “என்ன செய்யச் சொல்றீங்க?” மீண்டும் கேட்டாள், வழக்கமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கே காட்டிவந்த பணிவுடன்.

“கொஞ்சம் ஓய்வா இரு! குழந்தையை நீயே பாத்துக்கிட்டாதான் நல்லா வளரும்!” என்றார் நைச்சியமாக.

“நீங்க சொல்றது சரிதாங்க! பணமா பெரிசு!”

தன் காதில் விழுந்ததை அவராலேயே நம்பமுடியவில்லை.

“டான்ஸ் கிளாஸை மூடிடப்போறேன். என்ன, எல்லா பொண்ணுங்களும், `இப்படிப் பண்ணிட்டீங்களே, டீச்சர்!’னு கண்ணால தண்ணி விடுவாங்க. ஆனா, என் உடம்பையும் கவனிச்சுக்கணுமில்ல!”

அப்போது பசுபதிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில், மானசீகமாக இறைவனுடைய பாதங்களில் பணிந்தார்: `அப்பனே, நடராஜா! ஒன் கோபத்திலே எங்களுக்குப் பிறக்கப்போற குழந்தையின் காலை முடக்கிப் போட்டுடாதேப்பா!’

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *