அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை 8 மணிக்குத்தான் கண்விழித்தான் சுந்தர். இன்று சூரியன் கூட மெதுவாகத்தான் உதிக்கிறதோ என்று நினைத்துக்கொண்டான். ‘அன்றாடப் பரபரப்போ, அவசரமோ இல்லாமல் ஓய்வாக இருப்பதற்கு ஒரு நாளாவது கிடைக்கிறதே’, என்று நினைத்தான்.
கோமதி தான் அவனை எழுப்பினாள். “இன்னிக்கு உங்களுக்கு விடுமுறை தானே… இன்னிக்காவது கொஞ்சம் வீட்டு வேலைகளை கவனிங்க; உங்களுக்குத்தான் இன்று விடுமுறை. எனக்கு எப்பவும் போலத்தான். இன்னும் சொல்லப்போனால், ஞாயித்துகிழமையிலதான் காலை டிபனுக்கு 2 வகை சட்னியோட சாம்பார், மதியத்துக்கு, கறியோ மீனோ, பிரியாணி, குருமா, பிரைனு நிறைய ஐயிட்டங்கள் வகைவகையா சமைக்கனும். எனக்குத்தான் என்னைக்கும் ‘லீவே’ கிடையாது” என்றாள்.
‘சரி, ஒருநாள் ஹோட்டலில் சாப்பிடலாமே’ என்றால்… “ஒண்ணும் வேண்டாம்… ஒரு வேளைக்கு மேலே வெளியில சாப்பிடமுடியலை” என்று மறுத்துவிடுவாள்.
‘நியுஸ் பேப்பர்’ படித்துக் கொண்டிருந்த சுந்தரிடம் , “நேற்று நான் கடைக்கு போயிட்டு வரும்பாது என் செருப்பு அறுந்து போச்சிங்க. நீங்க கறி வாங்கப்போகும் போது வழியில கொஞ்சம் என் செருப்பையும் தச்சிகிட்டு வந்திடுங்க”, என்றாள் கோமதி.
எந்தக்காலத்திலிருக்கிறாள் இவள். பத்தாயிரம் ரூபாய் மொபைல் போனைக் கூட ரிப்பேர் செய்தோ உதிரிப் பாகங்கள் மாற்றியோ உபயோகப்படுத்தாமல், புதுமாடல் வாங்குகிற உலகம் இது. எதற்காக பழயதை தச்சிப்போடனும். அறுந்து போன உடனே புதுசு வாங்கிக்கொள்ள வேண்டியதுதானே. இல்லையென்றால் ஆன்லைனில் புதுசு ஆர்டர் பண்ணினா மறுநாளே வந்திடுமே.
அப்போது, ஏனோ அவனது பால்ய நாட்கள் நினைவுக்கு வந்தது. அதோடு பக்கத்து வீட்டுச் சங்கரன் தாத்தாவின் நினைவும் வந்தது. அவர் தான் திண்ணை வாத்தியார் இவனுக்கு. திண்ணையில் அமர்ந்தபடியே எல்லா விஷயங்களையும் பேசுவார். அவர் சொல்லும் விஷயங்களையும் கதைகளையும் வாய்திறந்தபடியே கேட்டிருக்கிறான்.
அந்நாட்களில் செருப்பு, சட்டை, குடை, இத்யாதி என எதுவும் அறுந்தாலோ கிழிந்தாலோ தைத்துப்போட்டுக் கொள்ளும் பழக்கமிருந்தது. இங்க் பேனாவில் இங்க் நிரப்பி எழுதுவது, பேனா “நிப்” மாற்றி எழுதுவது ,”பால் பாயிண்ட் பேனா”விலும் “ரீபிள்” தீர்ந்தால் மீண்டும் பெட்டிக்கடையில் ரீபிள் வாங்கிப்போட்டுப் பயன்படுத்துவது மாதிரி பல வழக்கங்கள் இருந்தன. காலப்போக்கில் இந்த நிலை மாறத்துவங்கி ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி எறியும் “யுஸ் அன் துரோ” பழக்கம் அதிகமானபோது அதை மிகவும் எதிர்த்தவர் அவர்.
“இப்படிச்செய்வதால் ஒவ்வொரு நாளும் எவ்வளவுக் குப்பைகளை உருவாக்குகிறோம். உலகத்தைக் குப்பை மேடாக்கி சுற்றுச்சூழலை எவ்வளவு பாழாக்குகிறோம் ; இப்படியே போனா மனுஷாலேயும் பயன்படுத்திட்டு தூக்கிப்போடுற நிலைமை வந்திடும்…” என நீண்ட பிரசங்கம் செய்வார்.
அவர் சொன்னது ஒருவேளை ‘சரியோ’ எனப்பட்டது அவனுக்கு. காலைச் சிற்றுண்டி முடித்தபின் கோமதி கொடுத்த காபியை குடித்து விட்டு காலி டம்ளரைத் தரையில் வைத்தான். காபி, தேநீர் போன்ற திரவங்களைக் குடிக்க டம்ளர்கள், பீங்கான் மற்றும் கண்ணாடி கோப்பைகளுக்குப் பதிலாக “யுஸ் அன் த்ரோ” பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கோப்பைகள் மட்டுமே உலகம் முழுதும் பயன்படுத்தியிருந்தால் உலகம் ஒருவேளை “குப்பை மேடாகவோ”, “கோப்பை மேடாகவோ” ஆகியிருக்கும் எனத் தோன்றியது.
“எந்நேரமும் எதையாவது யோசிச்சிக்கிட்டே இருக்காதிங்க. கடைக்கு போயிட்டு வாங்க”, என்ற கோமதியின் குரல் சுந்தரின் நினைவலைகளைக் கலைத்தது.
சாலையில், யாராவது செருப்பு தைப்பவர்கள் கண்ணில் படுகிறார்களா என்று பார்த்துக் கொண்டே சென்றான். இருசக்கர வாகனத்தை ஓட்டும்போது சாலையை பார்த்து ஓட்டாமல் இப்படி இரண்டு பக்கமும் பார்த்தபடி ஓட்டுவது சிரமமாக இருந்தது. சிலரோ சாலையை கவனிக்காமல் செல் போனில் பேசியபடியே சென்றனர். சிலர் மனதுக்குள் பேசிக் கொண்டேயும் செல்லலாம், ஒரு வேளைத் தானும் அந்த வகையோ, என நினைத்தான். நல்ல வேளையாக, ஞாயிற்றுக்கிழமை காலை நேரம் என்பதால் போக்குவரத்து மிதமாகத்தான் இருந்தது.
அப்போதுதான் அந்தச் சாலை முனையில் அமர்ந்திருந்த அந்தக் காலணிகள் சீர் செய்பவர் கண்ணில் பட்டார். நான்கு சாலைகள் சந்திக்கும் அந்த இடத்தில் வலது புறத்திலுள்ள சாலை ஓரம் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் சிறு குழந்தையோடு ஒரு பெண்ணும் அமர்ந்திருத்தார். அவர்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த கட்டிடத்தின் முன் சில விலை உயர்ந்த வெளி நாட்டுக்கார்கள் ‘பார்க்கிங்’ செய்யப்பட்டிருந்தன. அந்தக்கட்டிடத்தில் அதி நவீன ‘பியுட்டி பார்லர்’ இருந்தது. அங்கு முந்நூறு ரூபாய்க்கு முடிதிருத்தம் செய்து கொள்ளலாம்.
காலையிலிருந்து எவரும் தைக்க வராததால் சாலையில் போகிறவர்கள் வருகிறவர்கள் என அனைவரின் கால்களையும் கவனித்தபடி அமர்ந்திருந்தார் அவர். அந்தப்பெண்ணுக்குக் கண் பார்வையில் ஏதோ குறைபாடு இருக்கும் போலிருந்தது. அவள் மடியிலிருந்த குழந்தை பசியால் அழுது கொண்டிருந்தது. ஒரு கிழிந்த பெரிய குடையை கூரையாக்கி அவர்கள் அமர்ந்திருந்தனர்.
சுந்தர் அவரிடம் அறுந்துபோன காலணிகளை கொடுத்து தைக்கச் சொன்னான். “எவ்வளவு ஆகும்பா,,?” எனக் கேட்டவனிடம், “நாப்பது ரூபாய் சார்” என்றான். அதிகமோ என சில விநாடிகள் நினைத்தான். கொஞ்சம் குறைச்சிக்கோ எனச் சொல்ல நினைத்தவன் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு “சரிப்பா பார்த்து நல்லா தச்சிக் கொடு, நாப்பது ரூபா கொடுத்துடறேன்”, என்றான். “வேலை சுத்தமாயிருக்கும் சார்” என்றான். அவருடைய உடைகள் மட்டும் அழுக்காக இருப்பதைக் கவனித்தபோது அவனுக்கு மனம் உறுத்தியது..
சட்டென்று அவரிடம் அப்படிக்கேட்க நினைத்தது தவறென்று பட்டது சுந்தருக்கு. சென்றவார ஞாயிற்றுக்கிழமை மாலையில் நகரிலுள்ள “மாலில்” ஷாப்பிங் செய்தபோது மகன்கள் கேட்ட எதையோ எதையோ தள்ளுவண்டிக் கூடையில் அள்ளிப்போட்டுக் கொண்டு
மொத்தமாக ஒரு பெருந்தொகையை எந்தப் பேரமுமில்லாமல் எதையும் பேசாமல் செலுத்திவிட்டு வர நேர்ந்ததை நினைத்தான். அப்போது எதையும் யோசிக்கவோ மறுக்கவோ முடியாத சூழல்.
“தச்சிட்டேன் சார்… செருப்பு நல்லாத்தான் இருக்கு, இன்னும் கொஞ்ச நாளைக்குத் தாராளமா போட்டுக்கலாம்…” என்றார் அவர். அவரிடம் நாற்பது ரூபாயைக் கொடுத்துவிட்டு செருப்பைப் பெற்றுக்கொண்டவன், கறிக்கடைக்குச் செல்ல தன் இரு சக்கரவாகனத்தில் ஏறி அமர எத்தணிக்கையில் தான் சுந்தர் அதை கவனித்தான்.
அந்த நாற்பது ரூபாயை தன் சட்டைப் பையில் வைத்துக்கொண்டவர் கையில் மூடியில்லாத சிறு கூஜாவை எடுத்துக்கொண்டு அந்தப்பெண்ணிடம் “சித்த இரு பிள்ளை, இதோ டீயும் பன்னும் வாங்கிட்டு வந்துடறேன்…” என அவசரஅவசரமாக புறப்பட்டார். பசியில் அழுது கொண்டிருந்த தன் குழந்தையைத் தேற்ற முயன்று கொண்டிருந்தாள் அந்தத் தாய்.