அறைக்கு வெளியே யாரோ நிற்பது நிழலாடியது. என்னைப் பார்க்கக் காத்திருப்பவராயிருந்தால் இந்த நேரம் அட்டெண்டர் சுப்பிரமணி உள்ளே அவரை அனுப்பியிருப்பான். நானும் உதவி ஆசிரியர் சூர்யமூர்த்தியும் பகல் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் தான் பல விஷயங்களை விவாதிக்க எங்களால் முடியும். அதனால் ஒருவேளை காத்திருப்பவரை சுப்பிரமணி உள்ளே அனுப்பாமல் நிறுத்தியிருக்கலாம்.
‘வர, வர விநாயக பவன் ஓட்டல் மசாலா தரம் குறைந்து வருகிறது என்று கூறிச் சிறு பகுதியை எடுத்து இலையின் ஓரம் ஒதுக்கி வைத்தேன். ‘ஒரேடியாகத் தீய்ந்து போய்… என்று கூறும் போது சூர்யமூர்த்தி குறுக்கிட்டு, என்ன சார் ! அது தீயத்து போகவில்லை! ஸ்பெஷல் மசாலாவில் முறுகலான பகுதி அதுதான். ரொம்ப ருசியாக இருக்கும்!’ என்றார்.
என்னவோ, நாளையிலிருந்து ஓட்டலை மாற்ற வேண்டும்’ என்று சொல்லிக்கொண்டே. கை கழுவ அறைக்கு வெளியே வந்தேன்.
அவர் இன்னும் நின்று கொண்டிருந்தார். தோய்த்துத் தோய்த்து உலர்த்தியதால் சற்றுப் பழுப்பேறியதாலும் கதருக்கே உள்ள இயற்கைக் குணத்துடன் உடுத்தியிருந்த உடை கசங்கியும் இருந்தது.
பார்வையில் ஏக்கம். இரண்டு, மூன்று நாள்களாக மழிக்கப்படாத தாடி. வயது அதிகமிருக்காது. ஆனால் வறுமை. கவலை. முகத்திலும் கண்களிலும் பிரதிபிலித்தன. சரியான தூக்கமில்லை என்பதைக் கலங்கிய விழிகள் புலப்படுத்தின. அவனைப் பார்க்காதவன் போல் போனேன். முதன்மை ஆசிரியர் என்ற பந்தா இருக்கிறதே! எனக்காகத்தான் அவர் நின்று கொண்டிருக்க வேண்டும். வேகமாக நான் அறைக்குள் நுழைந்தேன். அட்டெண்டர் அங்கு இல்லை. ஆனாலும் அந்த இளைஞர் என்னைப் பின் தொடர்ந்து அறைக்குள் வரவில்லை.
ஆபீஸ் பையன் சுப்பிரமணி அவரை ஏன் இவ்வளவு நேரமாக வெளியே நிறுத்தி வைத்திருந்தான் என்று புரியவில்லை. அழைப்பு மணியை அழுத்தினேன். சுப்பிரமணி வந்தான்.
மேஜையைச் சுத்தம் செய்தவனைப் பார்த்துக் கேட்டேன்; வெளியே நிற்பவர் யாருக்காக நிற்கிறார்?
“உங்களைப் பார்க்கணுமாம்…”
“ஏன் உள்ளே அனுப்பவில்லை ?”
“ஸார், தினமும் காலையிலேயே வந்துவிடுகிறார். கையில் அரசாங்கத்திடமிருந்து வரும் மேலுறை போல் பழுப்பு நிறக் கவர்.”
“தினமும் வந்துக் காத்திருக்கிறார் என்கிறாய். இன்று நீண்ட நேரமாக நிற்கிறாரே, உள்ளே ஏன் என்னிடம் வந்து சொல்லவில்லை?” நான் சற்றுக் கடிந்து கொண்டேன்.
“தினமும் நான்கைந்து கதைகளுடன் வருகிறார். அவற்றை வரவேற்பு அறையிலேயே கொடுத்து விடுங்கள் என்பேன். அவர் போய்விடுவார். இப்படி தினமும் வருகிறார். அதிகம் பேசுவதில்லை . இன்று உங்களைப் பார்க்க வேண்டும் என்று பிடிவாதத்துடன் கால் கடுக்க நிற்கிறார்” என்று சமாதானமாகப் பேசிக் கொண்டே போனான்.
“கால்கடுக்க நிற்கிறார் என்று நீயே பச்சாதாபப்படுகிறாய். உள்ளே அனுப்பாமல் ஏன் நிற்கவிட்டாய்!” என்று சுப்பிரமணியை மீண்டும் கடிந்து கொண்டேன்.
“சரியான ‘பிஸி’ நேரத்தில் அவர் உள்ளே வந்தால் கதையைப் படித்துக் காட்டத் தொடங்கிவிடுவார். அதனால் நீயே ஏதாவது சொல்லி அனுப்பிவிடு என்று சூர்யமூர்த்தி ஸார் சொல்லியிருக்கிறார். அதனால்தான்…”
நான் ஒன்றும் பேசவில்லை. அறை அருகே நிழலாடியது. “சுப்பிரமணி, அவரை உள்ளே வரச்சொல்லு” என்றேன். வந்தவர் வணக்கம் தெரிவித்தார். ஒருமுறை அவரை ஏற இறங்கப் பார்த்தேன். அவர் மெல்லப் புன்முறுவர் பூத்தார்.
“உட்காருங்கள்” என்றேன். அவர் உட்காரவில்லை . மறுபடியும் வற்புறுத்தினேன்.
“இவ்வளவு நேரமாக நிற்கிறீர்கள். தினம் வருகிறீர்களாம். கதை என்றால் கொடுத்துவிட்டுப் போயிருக்கலாம்!” என்றேன் மெய்ப்புகளை ஒழுங்குப்படுத்திக் கொண்டு.
அவர் மீண்டும் மெல்லச் சிரித்தார். கையிலிருந்த கவரைக் கொடுத்தார். கவரின்மீது ஆசிரியர் தனிப்பார்வைக்கு என்று எழுதப்பட்டிருந்தது.
“உட்காருங்கள்” என்றேன். அவர் நாற்காலியின் நுனியில் பட்டும் படாததுமாக உட்கார்ந்தார். கவரைப் பிரித்தேன். ஒரு சிறுகதை; உடனே படிக்கத் தூண்டுமளவுக்கு மணிமணியான கையெழுத்து. கதையின் தலைப்பில் ‘ஞான் மறந்து போயி ‘ என்று எழுதப்பட்டிருந்தது. எழுதியவர் பெயர் கேசவன், 12 புதிய தெரு, மங்களாபுரம் என்ற முகவரி.
நான் அவரைப் பார்த்தேன்.
“மங்களாபுரத்திலிருந்தா வருகிறீர்கள்?” என்று கேட்டேன் . ஏன் நேரே வந்து தொந்தரவு செய்கிறீர்கள் என்பதை மறைமுகமாகத் தெரிவிக்க “தபாலில் அனுப்பியிருக்கலாமே?’ என்று தொடர்ந்தேன்.
கேசவன் மெல்லப் பேசினார்.
“பத்து ரூபாய் ஸ்டாம்பு ஒட்ட வேண்டும். மெல்ல பொடி நடையாக நடந்து வந்துவிடலாம் என்று தான்…”
மெல்லிய குரலில் பேசினாலும், அதில் களைப்பு, சோர்வு, ஏமாற்றம் நிறைந்திருந்தன.
“நீங்கள் கேரளாவா?” என்று கேட்டேன். கதையின் தலைப்பைப் பார்த்தேன். சில தமிழ் எழுத்துக்களும் மலையாள வடிவில் இருந்தன.
“ஆமாம், ஆனா சென்னையிலேயே பத்து வருடங்களாக தாமசம். மலையாளமும் தமிழும் தெரியும்” என்றார் கேசவன். நான் கதையின் பக்கங்களை மெல்லப் புரட்டினேன்.
“வேறு வேலை ஏதாவது செய்றீங்களா!”
“இல்லை , கதை, கவிதை எழுதுகிறேன். ஓட்டலில் வேலை. நிரந்தரமாக கிடைக்கவில்லை”.
நான் அதற்கு மேல் அவருடன் பேசவில்லை. கதை, கவிதை எழுதிக் காலம் தள்ளலாம் என்ற எண்ணமுடைய கேசவனின் துணிவைக் கண்டு வியந்தேன். இப்படியும் நம்பிக்கையோடு சிலர் இருக்கிறார்கள்!
“சரி, படித்துப் பார்த்துச் சொல்கிறேன்” என்றேன். கைகூப்பினேன். இடத்தைக் காலி செய்யுங்கோ என்ற அர்த்தத்தில்.
“ஸார், ‘புதிய புனலில்’ ஒரு கதையாவது வர வேண்டும் என்று நான் விடாமல் எழுதுகிறேன். நேரே படையெடுக்கிறேன்” என்று சொல்லி மெல்ல நகைத்தார். பாப்புலர் பேப்பரில் ஒரு கதை வந்தால் சீக்கிரம் பிரபலமாகிவிட முடியும். மேலும் நீங்கள் கொடுக்கும் ரெம்யுனிரேஷன். மற்ற பத்திரிகைகளைவிட அதிகம். ஒரு கதை வந்தால் ஒரு மாதம் என் வீட்டிற்கு அரிசி வாங்கி விடுவேன்’ என்றார். மலையாளம் கலந்த தமிழாக இருந்தாலும் பேச்சில் தெளிவு இருந்தது.
“சரி, கதை நன்றாக இருந்தால் பார்த்துப் பிரசுரிக்கிறேன்” என்றேன். வழக்கமான பதில் தான். சீக்கிரம் இடத்தைக் காலி செய், வேலை இருக்கிறது என்று அதில் மறைமுகமாக ஒலித்தது.
அவர் கொடுத்துச் சென்ற கதையின் கையெழுத்துப் பிரதியை மீண்டும் ஒருமுறை பார்க்கிறேன். கதையின் தலைப்பு ஞான் மறந்து போயி.
ஏன் மலையாள வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். “ஆசைமுகம் மறந்து போச்சே” என்ற பாரதியின் வரிகளைக் கொடுத்திருக்கலாமே. ஒரு கணம் யோசித்தேன்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய என் முதல் கதையின் பெயரும், நண்பா மறந்து விட்டாயா?’ கதையின் பக்கங்களை வேகமாகத் திருப்புகிறேன்.
மீண்டும் அழைப்பு மணியை அழுத்துகிறேன். “இப்போ வந்து போகிறாரே அவரை உடனே கூப்பிடு ” என்றேன் சுப்பிரமணியிடம்.
கேசவன் வந்தார். என் பர்சிலிருந்து ஐந்து ரூபா நோட்டை எடுத்து அவரிடம் கொடுத்து நீண்ட நேரமாகக் காத்திருந்து விட்டீர்கள். காபி சாப்பிட்டு விட்டுப் போங்கள்’ என்றேன்.
முதலில் வாங்கக் கூச்சப்பட்டார். பிறகு வாங்கிக் கொண்டார்.
“உங்களிடம் வாங்கும் இந்த ஐந்து ரூபாய், ஐம்பதாயிரத்துக்குச் சமம்”. என்று கூறி, ரூபாயைக் கண்ணில் ஒத்திக் கொண்டு வெளியேறினார்.
உதவி ஆசிரியர் சூர்யமூர்த்தி வந்தார். “என்ன ஸார். அந்த அட்டைப் பூச்சி போயிடுத்தா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டு எதிரே உட்கார்ந்தார்.
“ஸார், விடாமல் கதையைக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார் ஒன்று கூட தேறவில்லை” என்றார் சூர்யமூர்த்தி.
“ஏன், சரியில்லையா?”
“ஒன்றுகூடப் புரியவில்லை ஸார்.”
கதாசிரியர் கேசவனை சூரியமூர்த்தி புரிந்து கொள்ளவில்லை .
பத்து நாட்கள் கழித்து, உதவி ஆசிரியர் சூர்யமூர்த்தி வேகமாக அறைக்குள் வந்தார்.
“நான்கு பக்கம் மேட்டர் குறைகிறது ஸார். தொடர்கதை ஆசிரியர் பக்கங்கள் குறைத்து எழுதிவிட்டார். என்ன செய்வது? உடனே பாரம் தயாராக வேண்டும்” என்று பரபரத்தார்.
“நீங்கள் ஒரு கதை எழுதிவிடுங்களேன்” என்றேன்.
“உடனே எப்படி ஸார் முடியும்?”
‘சில ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு வாரமும் எழுதிக் குவித்தீர்களே!
“கற்பனை வற்றிவிட்டது”! மெல்லச்சிரித்தார்.
அவரை ஏற இறங்கப் பார்த்தேன். மேஜை டிராயரை இழுத்தேன். கேசவன் கதையை எடுத்துக் கொடுத்து, “இதை உடனே கம்போசுக்குக் கொடுத்துப் பிரசுரியுங்கள்” என்றேன்.
பிறகு நான் அந்த நிகழ்ச்சியை மறந்துவிட்டேன். அந்தக் கதையைப் பற்றி ஓரிரு கடிதங்கள் வந்தன. தமிழ்ப் பத்திரிகையில் மலையாளத் தலைப்பா?” என்று சிலர் சீறியிருந்தனர், ஆங்கிலத் தலைப்பு போட்டால் எதிர்க்காதவர்கள்! ஏனோ? கதையை நான் படிக்கவில்லை.
பல வருடங்கள் ஓடிவிட்டன. எவ்வளவு வருடங்கள் என்று நினைவு இல்லை. பத்திரிகைத் தொழிலையே வெறுத்து ஓய்வு பெற்றுவிட்டேன். புறநகர்ப் பகுதியில் குடியேறினேன். வார, மாத இதழ்களைப் படிப்பதில்லை. நாளேட்டில் முக்கியச் செய்திகளை மட்டும் படிப்பேன். அமைதியை விரும்பினேன். குடும்பம் நடத்தும் அளவுக்கு வருவாய் வந்தது.
ஒருநாள் என் தங்கையின் பெயர்த்தி தன் மகளை அழைத்துக் கொண்டு என்னைக் காண வந்தாள். அவளைக் கல்லூரியில் சேர்க்க வேண்டுமாம்!
“சிபாரிசா, நானா? யாருக்காகவும் அரசு அதிகாரிகளையோ, அமைச்சர்களையோ பார்த்ததில்லை, பார்ப்பதுமில்லை என்று உறதி பூண்டிருக்கிறேன். உனக்குத் தெரியாதா?” என்றேன். அவள் மெல்லச் சிரித்தாள்.
“என்ன அண்ணா. அப்படி நீ உறுதியா இருப்பதால் தான் உனக்கு மிக மதிப்பு என்று தெரியும்” என்றாள் புகழ்வதாக நினைத்து…
“மதிப்பு சோறு போடாது என்று எனக்குத் தெரியும்.”
“சோறு உனக்குப் போடாது. ஆனால் மற்றவர்களுக்குப் போட உன் சிபாரிசு உதவும். உன் பெயர் சொன்னால் எல்லாம் நடக்கும். அப்படித்தான் மற்றவர்கள் பேசிக் கொள்கிறார்கள். உன் மதிப்பு உனக்குத் தெரியாது” என்று தங்கை மேலும் புகழ்ந்தாள். நான் மௌனமாயிருந்தேன்.
“என்ன அண்ணா , நான் சொல்கிறேன் – பேசாமல் இருக்கிறீர்களே கல்வித் துறை இயக்குனர் மிகவும் நல்ல மாதிரி நீங்கள் சொன்னால் நடக்கும் பெண்ணை அழைத்து வந்திருக்கிறேன். பணம் காசாக உதவாவிட்டாலும் சிபாரிசு செய்து கைகாட்டி விடலாமல்லவா?” அழுத்தமாகப் புகழ்வது போல் பண உதவி நான் செய்யவில்லை என்ற சொற்களையும் சேர்த்துப் பேசினாள்.
எங்காவது எப்போதாவது செல்வதற்கென்று ஒரே ஒரு கதர்ஜிப்பா வெளுப்பாக வைத்திருந்தேன். மேல் துண்டைத் தேடி எடுத்தேன். ஊன்றுவதற்குக் கைத்தடியை எடுத்துக் கொண்டேன்.
கல்வித்துறை அலுவலகத்திற்குச் சென்று பல ஆண்டுகள் ஆகின்றன. அவர்கள் தாம் எதற்காகவாவது என்னைத் தேடி வருவார்கள், கருத்துக் கேட்பதற்காக, ‘பாப்புலர் பத்திரிகை ஆசிரியன் ஆயிற்றே!
குறிப்பிட்ட அதிகாரியைத் தேடி மெல்ல அலைந்தேன். என்னை அடையாளம் கண்டு கொண்டு வணக்கம் தெரிவித்தவாறே ஒரு சிலர் வேகமாகச் சென்றார்கள். தொலைவில் நின்று என்னை மற்றவரிடம் ‘யார் என்று அடையாளம் கூறியவர்கள் எல்லாருக்கும் நான் தலையசைத்துப் புன்முறுவல் பூத்து, சில இடங்களில் வணக்கம் தெரிவித்தேன். ஏறமுடியாமல் இரண்டாவது மாடியை அடைந்தேன். அரசு அலுவலக இலட்சணம் மாறவில்லை . ஆனால் யாரும் இப்போது ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதில்லை. காதோடு செல் போன் உறவாடிக் கொண்டிருந்தது. கோப்புகளைப் பார்ப்பது போல் செல்போனில் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். வழிகாட்ட ஒருவருக்கும் நேரமில்லை. கடைசியில் செல்வி சேஷம்மா’ என்ற பெயர்ப் பலகையைச் சுட்டிக்காட்டினார் கருணை உள்ளம் கொண்ட இளைஞர் ஒருவர். அந்த அம்மா இயக்குனர், பல ஆண்டுகள் கல்வித் துறையில் அடிமட்டத்திலிருந்து உழைத்து முன்னேறியவர். அந்த அதிகாரி அறையின் அருகே ஒரு சிறு ஸ்டூல்; அடுத்துக் கையிழந்த நாற்காலி. ஒரு பழைய மரப்பெஞ்ச். நெருக்கியடித்தவாறு பார்வையாளர்கள் உட்கார்ந்திருந்தனர்.
‘ஸ்டூலில் உட்கார்ந்து பழைய கிரைம் நாவல் ஒன்றைச் சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டிருந்தவரிடம் என் முகவரி எழுதிய சீட்டைக் கொடுத்தேன். அவர் அதை வாங்கி ஒருமுறை மேலும் கீழும் பார்த்துவிட்டு, உட்காருங்கள் என்றார்.
அவர் சொல்லியிராவிடினும் என்னால் நிற்க முடியாததால் உட்கார்ந்திருப்பேன். அரை மணி நேரமாகியது. அந்த ஊழியர் உள்ளே சென்று என் பெயர் விபரக் காகிதத்தைக் கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன். முன்பு என்றால், வேட்டை நாய் போல் பாய்ந்து அவரைக் குதறியிருப்பேன். இப்போது காலம் மாறிவிட்டது. என்னையும், என் மதிப்பையும் யார் அறியப் போகிறார்கள்?
நான் மெல்ல எழுந்துச் சென்று அந்த ஊழியரிடம் ஞாபகப் படுத்தினேன். நல்லவனாயிருக்க வேண்டும். “ஸார். ஞான் மறந்து போயி ” என்று கூறி உள்ளே சென்றான்.
பளிச்சென்று ஏதோ நினைவுக்கு வந்தது. மறு நிமிடம், அறைக்குள்ளிருந்து ஐம்பதைத் தாண்டிய பெண் வந்தார். படாடோபமில்லாத உடை! சற்றே நறைத்த முடி.
“மிஸ்டர், அஜாதசத்ரு – வாங்க வாங்க. ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா” என்று கூறி, அந்த அதிகாரி என்னை உள்ளே அழைத்துச் சென்றதைப் பார்த்தவர்கள் வியப்படைந்தனர். ‘ஞான் மறந்து போயி ‘ ஊழியர் வியப்புடன் என்னைப் பார்த்து இப்போது ‘ஸாரி ‘ என்றார்.
“ஐயா, உங்களை அதிக நேரம் காக்க வைத்துவிட்டேன். நீங்கள் எவ்வளவு பெரியவர். எங்கள் ஸ்டூடன்ஸ் டேசில்’ உங்களைப் பார்க்கத் தவமிருப்போம்’ என்று கூறினார் கல்வி அதிகாரி சேஷம்மா. வியப்பாக இருந்தது அதிகாரியின் அடக்கம்.
“இந்தத் தள்ளாத வயதில் வந்திருக்கிறீர்களே. ஒரு போன் செய்திருக்கலாமே?” என்றார் மரியாதையாக.
அந்தச் சமயத்தில் அர்த்தமற்ற சிரிப்பு வருமன்றோ! நான் சிரித்தேன்.
“போனா? – போனில் நடக்கிற காரியமா? நேரே வந்தாலே நடக்குமா என்று சந்தேகம்” என்று கூறி நான் விவரத்தைக் கூறினேன். கையிலிருந்த விண்ணப்பத்தைக் கொடுத்தேன்.
“ஓ! என்ன சாப்பிடுறீங்க டீயா காபியா?” என்று உபசரித்தாள் அந்த அதிகாரி. அவ்வளவே. வாங்கி வருவதற்குக் காண்டினுக்குச் சென்றால், செல்பவரையும், காபியையும் மறந்துவிட வேண்டியது தான் !
மறுபடியும் நான் கொடுத்த விண்ணப்பத்தை மீண்டும் ஒரு தடவைப் படித்து
“இவ்வளவுதானே? ஞான் கவனிக்கும். அடுத்த வாரத்திற்குள் ஆர்டர் வந்துவிடும்” என்றார். அந்த விண்ணப்பத்தில் ஏதோ எழுதி. அழைப்பு மணியை அழுத்தி, அந்தப் பணிக்குரிய அதிகாரியை அழைத்து, உடனே உத்திரவு போட்டுடுங்க” என்றாள். அவர் என்னைப் பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. நன்றி தெரிவித்து, கைகூப்பி விடைபெற்றுக் கொண்டேன். பத்து நாள்களில் சேஷம்மா சொன்னபடி உத்தரவு வந்தது. தங்கைக்குச் சந்தோஷம். எனக்கு ஒன்றும் மகிழ்ச்சி இல்லை. பத்திரிகையாளர்களுக்குத் தரும் ஓய்வூதியம் எனக்கு வழங்கப்படாமல் அந்த விண்ணப்பம் நான்கு ஆண்டுகளாகத் தூங்குகிறது. அதை விரைவுபடுத்த என்னால் முடியவில்லை. என் சொந்தக் காரியத்தை நிறைவேற்ற முடியவில்லை. நான் பரிந்துரை செய்த காரியம் உடனே நடைபெற்றுவிட்டது.
ஹும்…
“பார்த்தாயா அப்போதே சொன்னேனே! உன் பெருமையை அந்த அதிகாரி உணர்ந்திருக்கிறார். அதனால் காரியம் உடனே நடந்து விட்டது. கேரளத்துக்காரியானாலும் தமிழ்ப் பத்திரிகையாளரை அறிந்திருக்கிறார்!’ என்று பெருமைப் பொங்க கூறினாள் என் தங்கை, காரியம் நிறைவேறிவிட்டதன்றோ! நல்லவேளையாக என் பெயர்த்தி கெட்டிக்காரி. அதனால்தான் கிடைத்தது என்று சொல்லாமலிருந்தாளே!
“எல்லாவற்றிற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உன் பெயர்த்தி அதிர்ஷ்டம் செய்தவள். என் பெருமை, புகழ் ஒன்றும் அங்கே காரியத்தை முடிக்கவில்லை” என்றேன் சோர்வுடன் . அப்படி என்றால் என் ஓய்வூதியம் எப்போதோ வந்திருக்கும். இல்லாவிடில் செலவைச் சரிகட்ட முடியாமல் இப்போது திண்டாடுவேனா?” என்றேன். கோபமும் வெறுப்பும் கலந்து. தங்கையின் வேண்டுகோள் நிறைவேறிவிட்டது. என்னைப் பற்றி என்ன கவலை?
நாள்கள் ஓடியே போய்விட்டன. நான் அந்த நிகழ்ச்சியை மறந்துவிட்டேன். ஒருநாள் பதிவுத் தபால் ஒன்று வந்தது. கடிதம் வருவதே அபூர்வம். அந்தப் புறநகர்ப் பகுதிக்குத் தபால்காரர் வாரம் ஒருநாள் வந்தால் அதிசயம்.
நான் பிரித்துப் படித்தேன். ‘மதிப்புமிகு பிரபல எழுத்தாளர் அஜாதசத்ரு அவர்களுக்கு . சேஷம்மா வணக்கம். உங்கள் ரசிகை நான். ஒன்றை மறந்தே போனேன்.’ என்று தொடங்கிய கடிதம், தொடர்ந்து தமிழில் தான் எழுதப்பட்டிருந்தது.
‘என் தந்தை கேசவன் பிரபல எழுத்தாளர். அவர் பிரபல எழுத்தாளரானது உங்களால் தான். உங்களுடைய புகழ் பெற்ற வாரப் பத்திரிகையில் என் தந்தை எழுதிய சிறுகதையைப் பிரசுரித்தீர்கள். அது மிகவும் வறுமையால் அவர் வாடிய காலம். சில ஆண்டுகள் கழித்து அந்தக் கதையைப் படித்த மலையாளம் தெரிந்த தமிழ் எழுத்தாளர் கோட்டயத்திலுள்ள வாரப்பத்திரிகை ஒன்றில் மலையாளத்தில் அதை மொழி பெயர்த்து, வெளியிட்டிருக்கிறார். அதைப் படித்த டைரக்டர் ஒருவர் ஸப்ஜக்ட்டின் சிறப்பை உணர்ந்து அதைத் திரைப்படமாக்க முன்வந்தார். என் தந்தையைச் சந்தித்தார். உரிமையை வாங்கினார். படம் எடுத்தார். அது பல ‘அவார்டுகள்’ பெற்றது. என் தந்தை இறந்தபோது அவருடைய டைரியில் எழுதியிருந்ததைப் படித்தேன்.
‘அஜாதசத்ரு கொடுத்த அந்து ஐந்து ரூபா என் பசியைப் போக்கியது. கதைக்கான அன்பளிப்பு என் ஒரு மாதத் தேவையைப் பூர்த்தி செய்தது. பிறகு நான் முனைந்து எழுதினேன். அந்தக் கதையை மலையாளத்தில் ஒருவர் மொழிபெயர்த்து வெளியிட்டார். அதைப் படித்த டைரக்டர் அரவிந்த்குமார் நல்ல தொகை கொடுத்து வாங்கினார். வெற்றிப்படமாக அது ஓடியது. அதற்குப் பிறகு பல படங்களுக்குத் திரைக்கதை எழுதினேன். ‘ஞான் மறந்து போயி என்ற அந்தக் கதை உலகப் புகழ் பெற்றது. அதைப் பிரபல தமிழ் வார இதழில் வெளியிட்ட அஜாதசத்ருவுக்குக் கடிதம் எழுதினேன். அவர் ஓய்வு பெற்று எங்கோ கிராமத்திற்குச் சென்றுவிட்டதாக ‘புதுப்புனல்’ பத்திரிகையிலிருந்து தெரிவித்தார்கள். மகளே, சேஷம்மா! ஞானும் மறந்து போயி. மறந்து விட்டேன். அவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தர எண்ணி அதை, என் உயிலிலும் எழுதி வைத்திருக்கிறேன். எப்படியாவது அவர் முகவரியைக் கண்டுபிடித்து அவருக்குக் கொடுத்துவிடு !
அந்தக் கடிதத்தில் பலமுறை மன்னிப்புக் கேட்டு சேஷம்மா எழுதி ‘ஐயா, என்னை மன்னித்துவிடுங்க. தமிழ்நாட்டில் பல ஊர்களில் பணி செய்தேன். என் தந்தையின் உயிலை மறந்தேன். ஆனால் உங்கள் பெயர் மனத்தில் நிலைத்திருந்தது. மெய்யாகவே ‘ஞான் மறந்து போயிருந்தேன், இந்த ஐம்பதாயிரத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். மீண்டும் மன்னிப்புக் கோரும் – சேஷம்மா.’
நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன். ‘ஞான் மறந்து போயி’ என்ற கதையைப் பல மாதங்கள் மறந்து போய் மேஜை அறையில் வைத்திருந்ததைப் பிரசுரித்தேன். பிறகு எனக்கிருந்த வேலைப் பளுவினால் அந்தச் சம்பவத்தை மறந்தேன்.
– மாந்தோப்பு மரகதம், சிறுகதை தொகுதி -7, முதற் பாதிப்பு: 2013, யாழினி பதிப்பகம், சென்னை 600108.