ஞானோதயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 185 
 
 

“உங்கள் நாட்டு மக்களின் மனோபாவமே விசித்திரமானது. என் வரையில் அந்தப் போக்கு எனக்குப் புரியவேயில்லை” என்றார் மிஸ்டர் வின்டன் போல்ட்நட் பாலனா

“நாங்களும் மனிதர்கள் தாம். உங்களைப் போலவே எங்களுக்கும் பசி, பயம், ஆசாபாசங்கள், கோபதாபங்கள், விருப்பு வெறுப்புகள் எல்லாம் இருக்கின்றன. இதில் புரியாமல் இருக்க என்ன இருக்கிறது?” என்றேன்.

மிஸ்டர் போல்ட்நட், “நான் அதைச் சொல்லவில்லை. சரீர அமைப்பிலும், ஆறறிவுகளிலும் உலகம் முழுவதுமுள்ள மனிதர் களெல்லாம் ஒரே மாதிரிதான். ஆனால் இந்த மனம் என்ற சக்தி இருக்கிறதே, அது ஓடும் வழிகள்தாம் வெவ்வேறு விதமாகத் தோன்றுகின்றன. அதுதான் எங்களுக்குப் புரிவதில்லை என்கிறேன்” என்றார்.

நான், “அதற்குக் காரணம் ரொம்பத்தெளிவு, கீழ்த் திசையில் உள்ளவர்கள் இந்த உலகில் தங்களுக்குக் கிடைத்துள்ள இடம், அல்லது முயற்சியினால் அடையச் சாத்தியமான இடத்தை விட, பரத்தில் – அடுத்த உலகில் – கிடைக்க வேண்டிய இடத்தைப் பற்றித்தான் அதிகமாக எண்ணுகிறார்கள். அங்கே எந்தமாதிரி இடம் கிடைக்க வேண்டும் என்பதை ஒரு லட்சியமாகக் கொண்டு அதற்காக வாழ முயலுகிறார்கள். நீங்கள் மேல் திசையார்; அதற்கு, நேர் எதிராக இருக்கிறீர்கள். இதுதான் வித்தியாசம். இது புரிந்துவிட்டால் அப்புறம் எங்கள் மனோ பாவம் புரிவதும் ரொம்ப சுலபம்” என்றேன்.

மிஸ்டர் போல்ட்நட், “நன்றி, என் கட்சியைச் சுலபமாக்கி விட்டீர்கள். அந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல; அந்தமாதிரியான பரலோக நோக்கு வாழ்க்கையென்ற போக்கு அசட்டுத் தனமானது என்று நம்புகிறவர்களுக்கு அது புரிவதும் சிரமம். என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து சொல்லுகிறேன். முன்பே துறவியாகிச்சந்நியாசவாழ்க்கை நடத்தும் ஒருவன் அந்த வாழ்க்கையைத் துறப்பதென்பது புரியக்கூடிய விஷயந்தானா?” என்றார்.

“துறவைத் துறப்பதா! அது எப்படி சாத்தியம்?” என்றேன் நான் குழப்பத்துடன்.

மிஸ்டர் போல்ட்நட் “கேட்பதற்குக் கதை மாதிரி இருக்கும். ஆனால் நான் நேரில் கண்டது. உங்கள் நாட்டில் நடந்தது. நீங்கள் சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவர்தானே? உங்கள் சென்னை நகர வீதியொன்றில்தான் நடந்தது” என்று சொல்லி விட்டுச் சிகரெட்டுப் பற்ற வைக்க நிறுத்தினார்.

மிஸ்டர் போல்ட்நட்டை நான் லண்டன் நகரத்தின் இதய கேந்திரம் போன்ற பிக்காடில்லியில் சந்தித்து நண்பனானேன். இல்லை, அவர் சந்தித்து என்னை நண்பனாக்கிக்கொண்டார்.

சென்னையிலும் சரி, வேறு எந்த நகரத்திலாயினும் சரி, எனக்கு ஜன நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் போய்க் குறுக்கும் நெடுக்குமாக, சாரி சாரியாக விரைந்து கொண்டிருக்கும் ஜனங்களைப் பார்த்துக்கொண்டு நிற்பதில் ரொம்ப ஆசை. இந்த இடையற்ற சாரிகளைப் பார்க்கும் போது என் மனத்தில் வெள்ளம் பொங்கி வரும் ஆற்றைப் பார்த்துக் கொண்டிருப்பதைப்போன்ற ஒரு கற்பனை தோன்றும், ஆற்று வெள்ளம் விரைந்து விரைந்து கடலில் போய் விழுந்து விடுகிறது. இந்த வெள்ளம் எதில்? ‘வாழ்க்கை’ என்ற கடலிலா? அல்லது வருங்காலம்’ என்ற கடலிலா? இந்த நிகழ்காலத்தில், இப்படி எதிரெதிராகவும், குறுக்கு நெடுக்காகவும் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டங்கள் ‘வருங்காலம்’ என்ற கடலை நோக்கித்தான் விரைந்து கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

என்னுடைய வழக்கப்படி, லண்டன் நகரத்திலும் பிக்காடில்லி வட்டத்தின் ஒரு கரையோரமாக மணிக்கணக்காக அந்த மனிதச் சாரிகளின் இயக்கத்தைப் பார்த்துக்கொண்டே நின்றிருக்கிறேன். அப்படி ஒரு நாள் நின்றுகொண்டிருந்த போது நான் முன்பின் கண்டறியாத ஓர் ஆங்கிலேயன் என் முன் நின்று, “ஹலோ” என்று புன்னகை பூத்தான். நானும் உற்சாகத்துடன், “ஹலோ” என்றேன்.

அவன், “நீங்கள் இந்தியர்தானே? நான் அங்கே ஒன்பது வருஷம் வசித்திருக்கிறேன். என் பெயர் வின்டன் போல்ட்நட்” என்று தன்னைத் தானே அறிமுகம் செய்வித்துக் கொண்டான்.

நானும் என் பெயரைச்சொன்னேன்.எனக்கு ரொம்ப ஆச்சரிய மாக இருந்தது. அவன் நடந்துகொண்டவிதம் ஆங்கிலேயர் சுபாவத் திற்கு முற்றும் மாறாக இருந்தது. மூன்று நாள் இரவு பகலாக உங்கள் எதிரிலும் பக்கத்திலும் வளையம் வந்துகொண்டிருக்க நேர்ந்தாலும், ஓர் ஆங்கிலேயன், முறையாக அறிமுகம் செய்விக்கப்பட்டாலன்றி உங்களுடன் மனம் விட்டுப் பேசவே மாட்டான்.

மிஸ்டர் போல்ட்நட் தாமாக வலிய வந்து பேசியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்ட பிறகுதான் என் மனம் அடங்கியது. இவரும் ஒரே சூளைச் செங்கல்தான் என்ற திருப்தி எழுந்தது.

“லண்டன் நகரத்தை வேடிக்கை பார்க்கிறீர்களா?” என்றார் போல்ட்நட்

“நகரத்தையல்ல; மனிதவெள்ளத்தின் ஓட்டத்தை. இவ்வளவு ஜனங்களும் எங்கே எதை நோக்கி இப்படிப் பரபரத்துக் கொண்டு போகிறார்கள்?” என்றேன்.

போல்ட்நட், “இந்த வெள்ள இயக்கந்தான் வாழ்க்கை என்பது. வாழ்வதுதான் இந்த இயக்கத்தின் காரணம் சக்தி எல்லாம்” என்றார்.

அன்றிலிருந்து இருவரும் நண்பர்களாகிவிட்டோம். என்ன என்னவோ விஷயங்களைப் பற்றிப் பேசினோம். அவர், தாம் இந்தியாவிலிருந்த விவரங்களைச் சுருக்கமாகச் சொன்னார். அதன் பிறகு அடிக்கடி சந்திப்பது வழக்கமாயிற்று,

அன்று முதலிலேயே பேச்சு மனித சுபாவத்தைப் பற்றித்தான் தொடங்கியது. அங்கே பாய்ந்து கீழ்த்திசை மனோ பாவம் மேல்திசைப் போக்கு என்ற எல்லையை அடைந்தது.

போல்ட்நட் சிகரெட்டுப்புகையை இழுத்து ரஸித்து வெளியே விட்டுவிட்டு அந்தக் கதையைச் சொன்னார்.

இந்தியாவில் அவர் போலீஸ் இலாகாவில் வேலை பார்த்தார். முதலில் வடக்கே மத்திய மாகாணத்திலும், பிறகு பம்பாயிலும் இரண்டிரண்டு வருஷங்கள் இருந்தார். பிறகு தெற்கே சென்னைப் பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டார்.

அவர் போலீஸ் இலாகாவில் மத்திய சர்க்காரின் சேவகத்திலும் இருந்தார். அந்த அந்தப் பிராந்திய போலீஸ் இலாகாக்களுடன் சேர்ந்தோ, அல்லது தனியாகவோ வேலை செய்வது வழக்கம்.

ஒரு சமயம் அவருக்கு மத்திய சர்க்காரிலிருந்து ஓர் உத்தரவு வந்தது.மைசூர்ப்பிராந்தியத்திலிருந்துஸ்வாமி ஜடானந்த சரஸ்வதி என்பவர் திக்விஜயமாகச் சென்னைக்கு வருவதாகவும், அவரைப் பற்றி எல்லாத் தகவல்களையும் சேகரித்து அனுப்ப வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கண்டிருந்தது.

போல்ட்நட் பெங்களூரிலும் மைசூரிலும் போய்த் தகவல் சேகரித்தார். அந்தப் பிராந்தியத்துப் போலீசாரிடமும் முழுத் தகவலும் இல்லை.

ஸ்வாமி ஜடானந்தா எந்த ஊரைச் சேர்ந்தவர், என்ன பாஷை பேசுகிறார் என்பது கூடத்தெரியவில்லை. சுமார் நாலைந்து வருஷங் களுக்கு முன் அவர் சிவசமுத்திரத்திற்கு அருகிலுள்ள காடுகளில் தம்மை மறந்த நிலையில் திரிந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முப்பது வயதிருக்கும். பிரமசரியம்,ஆசாபாசங்கள் அற்ற மனவளர்ச்சி ஆகியவற்றின் களை படர்ந்து, பார்த்தவர்கள் உடனே அவரிடம் பற்றும் பக்தியும் கொள்ளச் செய்யும் முக விலாசம்.

பெங்களூரிலிருந்து தொட்டமல்லண்ண ராஜு என்பவர், தம் விருந்தினருக்குச் சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சியைக் காட்டுவதற்காக அழைத்துக்கொண்டு போயிருந்தார்.அப்போதுதான் அவர் ஸ்வாமி ஜடானந்தாவைச் சந்தித்தார்.

ஸ்வாமியிடமிருந்து மல்லண்ண ராஜு என்ன விவரங்களை அறிந்தாரோ என்னவோ, அவரைத் தம்முடன் பெங்களூருக்கு அழைத்துக் கொண்டு திரும்பினார். தொடக்கத்தில் அவர் ஸ்வாமியைத் தமது வீட்டிலேயே ஒரு பகுதியில் தங்கவைத்தார். பின்னால் ஸ்வாமிக்கென்று ஒரு தனி மடம் கட்டி அதில் குடி யேற்றினார்.

தொட்டமல்லண்ண ராஜுசுமாரான செல்வந்தர் குத்தகைத் தொழில் செய்பவர். அவர் ராஜு என்ற பட்டம் வைத்துக் கொண் டிருந்தாலும், அக்கம் பக்கம் ஆந்திரத் தமிழ்ப் பகுதிகளிலுள்ள ராஜுக்களைச் சேர்ந்தவர் அல்ல. அவர்களும் க்ஷத்திரியர்கள்தாம். மல்லண்ண ராஜுவும் க்ஷத்திரியர்தாம். ஆனால் இருவகை யினருக்கும் வித்தியாசம் உண்டு.

மற்ற ராஜுக்கள் வடக்கே இருந்து வந்த க்ஷத்திரியர்கள். மல்லண்ண ராஜு வகையறாக்கள் ஆதியிலிருந்து தெற்கேயிருந்த க்ஷத்திரியர்கள். அவர்களுக்குக் குண்டல கர்ண க்ஷத்திரியர்கள் என்று பட்டம்.

மகாபாரத யுத்தத்தின்போது தென் பாரதத்திலிருந்து மல்லண்ண ராஜுவின் மூதாதையர் படைகளுடன் குருக்ஷேத் திரத்திற்குப் போயிருந்தார்கள். அவர்கள் போய்ச் சேர்ந்த சமயம் கௌரவப் படைகளுக்குக் கர்ணனைச் சேனாதிபதியாகப் பட்டம் கட்டினார்கள்.

தெற்கேயிருந்து சென்றவர்கள் கௌரவர் பக்கத்தில் கர்ணனின் சேனாதிபத்தியத்தின் கீழ் போரிட்டார்கள். அவர் களுடைய வீரதீர பராக்கிரமசாகஸங்களைக் கண்டு வியந்த கர்ணன், அவர்களுக்குக் குண்டல கர்ண க்ஷத்திரியர்கள் என்று ஒரு பட்டம் அளித்தான். அதோடு அவர்களுடைய படையாட்கள் எல்லோ ருக்கும் ஒரு புதுமாதிரியான குண்டலம் அளித்து அதை அணிந்துகொள்ளவும் சொன்னான்.

குண்டலகர்ணக்ஷத்திரியப்படைகளில் பெரும்பகுதி கௌரவ சேனைகளுடன் அழிந்துவிட்டது. பாரதப்போர் முடிந்த பிறகு, அர்ஜுனனே மிகுந்திருந்த குண்டல கர்ணர்களைச் சந்தித்து அவர் களுடைய சூரத்தனத்தைப் பாராட்டினான். அவர்களுக்குச் சன்மானங்களும், விருதுகளும் அளித்து நாட்டுக்குத் திருப்பி அனுப்பிவைத்தான்.

குண்டல கர்ண க்ஷத்திரிய குலம் அப்போது அடைந்த ஆள் எண்ணிக்கை நஷ்டத்தை மறுபடி ஈடுகட்டிக் கொள்ள முடியவே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாய்ச் சிதறியும் போய்விட்டது.

தொட்டமல்லண்ணராஜு அந்தக் குண்டலகர்ண க்ஷத்திரிய குலத்தில் வந்தவர். தங்கள் பழம் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும், தங்கள் குலத்தினரை ஒன்று திரட்டி, தங்களுடைய மூதாதையரின் புகழை உணர்ந்து அந்த நிமிர்வுடன் அவர்களை வாழச் செய்ய வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் ஆசை.

சிவ சமுத்திரத்திற்கருகில் ஸ்வாமி ஜடானந்த சரஸ்வதியைச் சந்தித்தவுடன், அவருக்குத் தமது அந்தரங்கக் கனவு நனவாகும் வழி தோன்றியது. ஸ்வாமியை பெங்களூருக்கு அழைத்து வந்து, அவரைக் குண்டல கர்ண க்ஷத்திரிய குலகுரு பீடத்தில் ஏற்றி அமர்த்தி விட்டார்.

ஸ்வாமி ஜடானந்தா அந்தக் குலத்தினரின் பண்டைச் சரிதத்தைத் தம் வாயாலேயே விவரித்தார். மல்லண்ண ராஜுவின் விடாமுயற்சியால், மைசூர் ராஜ்ய எல்லைக்குள் இருந்த குண்டல கர்ணர்கள் அநேகமாக எல்லோரும் ஸ்வாமியைப் பற்றி அறிந்து அவரைத் தங்கள் குலகுருவாக ஏற்றுக் கொண்டார்கள். பெரும் பாலோர் பெங்களூருக்கு யாத்திரை போய் குருவைத் தரிசித்து அவரிடமிருந்து பிரசாதமும் ஆசியும் பெற்றுத் திரும்பினர்.

ஸ்வாமி ஜடானந்த சரஸ்வதி சுமார் நான்கு வருஷங்கள் பெங் களூரிலேயே தங்கியிருந்தார். அவருடைய மடம் கொஞ்சங் கொஞ்சமாக பலமடைந்தது. அதன் செல்வ நிலை வளர்ந்து உறுதி யடைந்து மேலும் பெருகிக்கொண்டே இருந்தது. அதற்குத் தக்கபடி மடத்தில் ஆள் மாகாணங்கள் சேர்ந்தன. மடத்திற்கென்று ஒரு திவான் கூட நியமிக்கப்பட்டார்.

தம்மைச் சுற்றி உலக விஷயங்கள் வளர்ந்து வளைத்துக் கொண்டு வருவதை ஜடானந்தா உணர்ந்தாரோ என்னவோ! இந்திரிய இச்சைகளைத் தூண்டிவிட்டுக் கவர்ந்திழுக்கும் சக்திகள் அவர்மேல் மோதிக் கொண்டே இருந்தன.

அதனால் அவர் மனத்தில் எத்தகைய சலனங்கள் தோன்றின வோ! ஆனால், அவர் அன்று காட்டில் காணப்பட்ட அதே நிலையில், அதே மனோபாவத்துடன்தான் இருந்தார். அவருடைய வாழ்க்கை முறையிலும் மாறுதல் ஏற்படவில்லை.

நான்கு வருஷங்கள்வரை அவர் மடத்தைவிட்டு வெளியேறவே இல்லை. யாரானாலும் மடத்திற்குப் போய்த்தான் அவரைத் தரிசிக்க வேண்டும் மைசூர் அரசாங்கத்தில் சில உயர் பதவிகளிலிருந்த குண்டலகர்ணக்ஷத்திரியர்கள் கூடத்தான்.

தொட்ட மல்லண்ண ராஜுதான் இந்த நியதியை மாற்றக் காரணமானார். அவருடைய பேரப் பிள்ளைக்கு ஒரு வயது பூர்த்தியாயிற்று. அன்றுஸ்வாமிஜி அவருடைய இல்லத்திற்கு வந்து, பிட்சை ஏற்றுக் குழந்தையை ஆசீர்வதிக்க வேண்டும் என்று கோரினார். ஸ்வாமிஜி மறுக்கவில்லை.

உடனே அவர் மடத்திலிருந்து வீட்டுக்கு எப்படிப் போவ தென்ற பிரச்னை எழுந்தது. ஜடானந்தா நடந்தே வந்துவிடுவதாகச் சொன்னார். ஆனால் மல்லண்ண ராஜுவும் அவருடைய இதர பக்தர்களும் அதற்குச் சம்மதிக்கவில்லை. ஸ்வாமிஜியின் புனிதப் பாதங்கள் தரையில் படவே கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

ஒரே வாரத்தில் ஒரு பல்லக்குக் கட்டப்பட்டது. அதைத் தூக்க ஆட்களும், சூழ்ந்து செல்ல, பரிவார அலங்காரங்களும் அவசர அவசரமாகச் சேகரிக்கப்பட்டன. வாத்திய மேளங்கள் அமர்த்தப் பட்டன. ஆக, ஸ்வாமிஜடானந்த சரஸ்வதியின் புறப்பாடு கம்பீர ஆடம்பர ஆரவாரங்களுடன் நிகழ்ந்தது.

ஸ்வாமிஜி மல்லண்ண ராஜுவின் பேரனை ஆசீர்வதித்து, அவனுக்கென்று பாரதகாலப் பாணியில் செய்யப்பட்ட ஒரு ஜதைக் குண்டலங்களை வழங்கினார். குழந்தைக்குக்காது குத்திக்குண்டலங் களைப் பூட்டினார்கள்.

ஸ்வாமி ஜடானந்தா மடத்தைவிட்டு வெளியேறலாம் என்ற நிலைமை வந்தவுடன், அவரைக்குலகுருவாக ஏற்றமற்ற பக்தர்களும் அவரைத் தம்தம் இல்லங்களுக்கு பிட்சைக்கு அழைக்கப் போட்டியிட்டனர்.

ஸ்வாமிஜி, யாருடைய அழைப்பையும் மறுக்க விரும்ப வில்லை. ஆனால் கண்ட கண்டவர்களெல்லாம் வந்து தொந்தரவு செய்யாமலிருக்கவும், அநாவசியமான மனக் கசப்புகள் வளராம லிருக்கவும் தடைக் கட்டாக, பிட்சைக்கு அழைப்பவர்கள் அந்த மதிப்புக்காக மடத்திற்குக் குறிப்பிட்ட தொகை கட்டிவிடவேண்டு மென்று திவான் ஒரு நிபந்தனை விதித்தார். எல்லோரும் அதை நியாயந்தான் என்று ஏற்றுக்கொண்டு தொகையைக் கட்டியே அழைத்தார்கள்.

அதிலிருந்து ஸ்வாமி ஜடானந்தா அநேகமாக தினசரி வெளியில் பிட்சையேற்கப் போகவேண்டியிருந்தது. பெங்களூரி லிருந்து அக்கம் பக்கம் அருகிலிருந்த கிராமங்களுக்குப் போனார். அப்படி அப்படியே விரிந்து மைசூருக்கும் போய்ச் சேர்ந்தார். இதற்குள் அவருடைய பரிவாரத்தின் அளவும் அம்சங்களும் விரிவடைந்தன. ஒரு யானை வந்து சேர்ந்தது. இரண்டு ஒட்டகங் களும், சில குதிரைகளும் கூடச் சேர்க்கப்பட்டன.

மைசூரிலிருக்கும்போதுதான் ஸ்வாமிஜி திக்விஜயம் செய்ய வேண்டுமென்ற யோசனை பிறந்தது. அதை முதலில் யார் ஆரம்பித்தது என்பதற்கு நிச்சயமான தகவல் இல்லை.

இந்தியாவிலிருந்த ஆங்கிலேய சர்க்காருக்கு அதில் விசேஷ அக்கறை இருந்தது. இம்மாதிரி மதத் தலைவர்களின் பலம் வளருவது, அந்நிய அரசாங்கத்தின் நன்மைக்கு உகந்ததல்ல என்பது தெளிவு. ஆகையால் ஸ்வாமி ஜடானந்த சரஸ்வதியைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க ரகசியப் போலீஸ் இலாகாவிலிருந்து எனக்கு உத்தரவு அனுப்பப்பட்டது.

நான் இவ்வளவு தகவல்களையும் சேகரித்து, அதோடு, ‘ஸ்வாமி ஜடானந்தாவுக்கும் ராஜியத்திற்கும் மைல் கணக்கில் சம்பந்தமில்லை’ என்ற குறிப்பையும் எழுதியனுப்பினேன். பிராந்தியப் போலீஸ் இலாகாவைச் சேர்ந்தவர்களும் அதைத்தான் எழுதியிருப்பார்கள். இருந்தும் அவருடைய யாத்திரை மார்க்கத் தைக் கண்காணித்து, அவ்வப்போது அறிக்கை அனுப்பும்படி எனக்கு உத்தரவு வந்தது.

ஸ்வாமி ஜடானந்தா மைசூரிலிருந்து சிறு சிறு கிராமங்களுக் கெல்லாம் போய்த் தங்கிப் பிரயாணம் செய்தார். என்னைப் போன்ற ஒரு வெள்ளையன் அம்மாதிரி சிறு கிராமங்களுக்குப் போவது சாத்தியமா? நான் என் உத்தியோக சம்பந்தமாகமைசூரில் ஸ்வாமிஜி தங்கியிருந்த மடத்திற்குப் போனேன். உடனே அங்கே ஏற்பட்ட பரபரப்பு! திவானே ஓடிவந்து விட்டார். என்னைப் பிரமாதமாக வரவேற்று என் பூட்ஸுகளைக் கழற்றச்சொல்லி ஸ்வாமிஜியின் முன் அழைத்துச்சென்றார். என்னைப்பிரசாதம் பெற்றுக்கொள்ளச் செய்தார்.

அடுத்த நாளே கன்னட பாஷைப் பத்திரிகைகளில் ஸ்வாமி ஜடானந்த சரஸ்வதியின் தவ தேஜஸ் வெள்ளைக்காரர்களைக் கூட வசீகரித்துவிட்டதாகச் செய்திகள் வெளியாயின. என்னை ஸ்வாமி ஜியின் லட்சக் கணக்கான பக்தர்களில் ஒருவனாகவே ஆக்கி விட்டன.

அதனால் நான் ஸ்வாமிஜியின் உடனிருந்து கவனிக்க வேறு ஏற்பாடுகள் செய்துவிட்டுச் சென்னைக்குப் போய்க் காத்திருந்தேன்.

நான்கு மாதங்களுக்குப் பிறகுதான் அவர் சென்னை எல்லையை அடைந்தார். அதுவரை அவருடைய அன்றாடப் பிரயாணம், அங்கங்கே நிகழ்ந்த விவரமெல்லாம் என்னிடம் இருந்தன. இவற்றிலெல்லாம் ஒரே ஓர் அம்சம்தான் என் மனத்தைப் பெரிதும் கவர்ந்தது. அதுதான் அவருடைய தூய துறவு வாழ்க்கை . அவர் உலக போக வழிகளில், எந்த இந்திரியத்திற்கும் இம்மியளவு இடம்கூடக் கொடுக்காமல் திடமான நியமங்களுடன் வாழ்ந்து வந்தார் என்பது தெளிவாக இருந்தது. அந்த ஓர் அம்சமே என் மனதைக் கவர்ந்து அவர் மெய்யாகவே மகான்தான் என்ற முடிவுக்கு வரச் செய்தது.

கடைசியாக ஸ்வாமிஜி சென்னை எல்லையை அடைந்தார். சென்னை நகரிலுள்ள குண்டலகர்ண க்ஷத்திரிய குலத்தினரைக்கை விரல்களில் எண்ணிவிடலாம். என்னிடமிருந்த தகவல்களிலிருந்து, அவருடைய சென்னை விஜயம் வெறும் பிசுபிசுப்பாகத்தான் முடியும், அதிக ஆர்ப்பாட்டங்கள் இரா என்ற முடிவுக்குவந்திருந்தேன்.

அதனால், சென்னைஎல்லையில் அவரைவரவேற்க இரண்டாயிரம் ஜனங்களுக்குமேல் வந்து காத்திருப்பதாகத் தகவல் எட்டியபோது என்னால் நம்பவே முடியவில்லை. என்னுடனிருந்த சென்னைப் போலீஸ் இந்திய அதிகாரி ஒருவர், “மிஸ்டர் போல்ட்நட், இந்த நாட்டில் ஒருகுலத்தாரின் குரு என்றால், அந்தக் குலத்தார் மாத்திரந் தான் அவரைப் பூஜிப்பார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவருடைய வாழ்க்கைத் தூய்மைக்குத் தக்கபடி மற்ற எல்லா வகுப்பாரும் அவரைப்பூஜிக்கக்கூடுவார்கள். அதுதான் இந்த நாட்டின் விசேஷம்” என்ற பிறகுதான் எனக்குப் புரிந்தது. “அவருடைய தூய்மைக்குத் தக்கபடி” என்ற வார்த்தை களைக் கேட்டு மனம் சிலிர்த்தது.

சென்னை நகர எல்லையில் மூன்று கோஷ்டி மேளங்களுடன் ஸ்வாமிஜியை வரவேற்று அழைத்து வந்தார்கள். வழி நெடுக மலர்களை வாரிவாரித் தூவினார்கள்.எனக்கு வந்த “ரிப்போர்ட்டின்” படி வழி நெடுக வேடிக்கை பார்த்த ஜனங்கள் எல்லாரும் ஸ்வாமிஜியைக் கைகூப்பி வணங்கினார்கள்.

ஊர்வலம் சென்னைக் கீழ்ப்பாக்கத்திலிருந்து புரசைவாக்கம் பெரியசாலையில் நுழைந்தது. வண்டிப் போக்குவரத்து அமைப்புக் குழறிவிடக்கூடும் என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. உடனே அந்த எல்லைக்கு அதிகப் போலீஸ் ஜவான்கள் அனுப்பப்பட்டார்கள்.

ஊர்வலம் அந்தச் சாலையில் பாதி தூரம் வந்துவிட்டது.புள்ளி போட்டுச் சொன்னால் புரசைவாக்கத்தில் ஒருசைவர்கள் கோவில் இருக்கிறதே, அதன் குளக்கரைக்கு நேர் எதிராகப் போய்க் கொண் டிருந்தது.

அதே சமயம் எதிர்ப்புறத்திலிருந்து ஓர் ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. அதன் முன்னும் மேளதாளங்கள் முழங்கிக் கொண்டு வந்தன. சிலர் பாட்டுக்கள் பாடிப் பஜனை நடனம் செய்வதுபோல ஆடிக் கொண்டு வந்தனர். அவர்களையடுத்துப் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பல்லக்கு வந்து கொண் டிருந்தது.

ஸ்வாமி ஜடானந்த சரஸ்வதி தமக்கு அளிக்கப்பட்டுக் கொண் டிருந்த கோலாகலமான வரவேற்பின் பெருமையை அனுபவித்துக்கொண்டிருந்தாரோ, அல்லது உங்கள் நாட்டு வேதாந்திகள் சொல்வது போல் மெய்ப்பொருளைப்பற்றிய தத்துவ ஆராய்ச்சியில் மூழ்கியிருந்தாரோ; எதிர்த் திசையிலிருந்து வந்த கோஷத்தைக் கேட்டுத் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தார். அங்கே நடுநாயகமாக வந்த பல்லக்கைக் கண்டார். உடனே தமது பல்லக்கை நிறுத்தச் சொன்னார்.

பல்லக்குடனேயே வந்துகொண்டிருந்த மடத்து நிர்வாகியை அருகில் அழைத்து, “எதிரில் வந்து கொண்டிருக்கும் ஊர்வலம் யாரு டையது?” என்று கேட்டார். அந்த மனிதன் அப்பட்டம் மைசூர்க் காரன். அவனுக்குத் தெரியவில்லை . அதனால் அருகிலிருந்த ஒரு சென்னைக்காரனிடம், “அந்தப்பல்லக்கில் வரும் மகாபுருஷன் யார் என்றுஸ்வாமிஜி அறிய விரும்புகிறார்” என்றான்.

சென்னவாசி அலட்சியத்துடன், மகானுமில்லை, மண்ணாங் கட்டியும் இல்லை; சாவுப்பல்லக்குப் போகிறது என்றான்.

நிர்வாகி அதைத் தர்ஜுமா செய்து செல்லும்வரை ஸ்வாமிஜி காத்திருக்கவில்லை. அவருக்குப் புரிந்துவிட்டதென்பது அவர் முகத்திலேயே தெரிந்தது. கையை வீசி, பல்லக்கைக் கீழே வைக்கச் சொன்னார். மறுகணம் வெறிகொண்டவர்போல அதிலிருந்து துள்ளிக் குதித்துக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஓடினார். பக்கத்தி லிருந்த சுந்தரம்பிள்ளை தெருவில் நுழைந்துவிட்டார்.

அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் என்ன நிகழ்ந்தது என்று புரிந்து கொண்டு இயங்குவதற்குப் பிடித்த சில விநாடிகளுக்குள் ஸ்வாமிஜி எங்கேயோ சென்று மறைந்துவிட்டார்.

அவரைப் பின்பற்றி ஓடியவர்கள் சுந்தரம்பிள்ளை தெருவுக்குள் போய்ப் பார்த்தார்கள். யாரோ ஒருவர் ஸ்வாமிஜி வலக்கைப் பக்கமிருக்கும் குறுக்குத்தெருக்களுள் ஒன்றில் நுழைந்து போனதாகச் சொன்னார். அந்தப்பக்கமாகப் பாய்ந்து பலர் ஓடினார்கள். இன்னொருவன் ஸ்வாமிஜி நேரே போய் இடப்புறம் திரும்பியதாகச் சொன்னான். அந்தப் பக்கம் சிலர் ஓடினார்கள். இரு பக்கம் சென்றவர்களும் அவரைக் காணவில்லை.

உடனே அங்கே எத்தகைய குழப்பம் ஏற்பட்டிருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். ஸ்வாமிஜியின் பக்தர்களில் சிலர் அவர் சித்து விளையாட்டு விளையாடி மறைந்திருக்கிறார் என்றும், திடீரென்று மறுபடி தோன்றி விடுவாரென்றும் சொன்னார்கள்.

அது உண்மையோ பொய்யோ எங்கள் இலாகா சம்பந்தப் பட்டவரை அவருடைய மறைவு அளவுகடந்த குழப்பத்தையும், தொல்லையையும் விளைவித்துவிட்டது. அந்தத் தொல்லை யெல்லாம் என் தலையில்தான் விடிந்தது.

சென்னைப் போலீசார் இரண்டு நாள் நகரத்தை வலைபோட்டு அரித்துவிட்டார்கள்.ஸ்வாமிஜி போன சுவட்டைக் கூடக் கண்டு பிடிக்க இயலவில்லை .

இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஸ்வாமி ஜடானந்த சரஸ் வதியைப் போன்ற ஒருவர், அவ்வளவு பெரிய நகரத்தில் திடீரென்று மறைந்து போவதும், அதைப்பற்றி யாருக்குமே ஒன்றுமே தெரியாமல் போவதும் சாத்தியமே இல்லை என்பதுதான். அவர் ஒரு சிறு காவித் துண்டு அணிந்து கால்களில் பாதக்குறட்டுக்கட்டைகள் அணிந்திருந் தார். அவர் முகத்தில் கருகருவென்று அரைச்சாண் அளவுக்குத்தாடி வளர்ந்திருந்தது.

தலையில் அடர்த்தியாக நீண்ட கேசம், அதை அவர் உச்சந் தலைக்கு மேல் கொண்டு வந்து சுருட்டிச் சுருட்டிவேணிமுடியாகக் கட்டியிருந்தார். அதனாலேயே அவருக்கு ஜடானந்தா என்று பெயர் வந்ததாகக்கூட எனக்குக் கிடைத்த ஒரு தகவல் சொல்லியது. கழுத்தில் இரண்டு வடம் ருத்திராக்ஷ மாலை அணிந்திருந்தார். இம்மாதிரி வேஷமுடைய ஒருவரைச் சென்னை நகரவாசிகளில் யாருமே காணவில்லை என்று போலீசார் எழுதி வைத்துவிட முடியுமா?

மேலிருந்து எனக்கு உத்தரவு பறந்தது. அந்தச் சந்நியாசியின் மறைவு மர்மத்தை எப்படியாவது தெளிவாக்கிவிடவேண்டும் என்று உத்தரவு.

ஸ்வாமிஜியின் சென்னை விஜயத்தைப் பற்றி இது வரை நான் உங்களுக்குச் சொல்லி வந்தது எல்லாம், அவருடைய கூடவே வந்து கொண்டிருந்த எங்கள் உளவாளிகள் எனக்கனுப்பிய அறிக்கை களிலிருந்து திரட்டிய சாரந்தான். அந்த அறிக்கைகளை ஆதார மாகவும், சென்னைப் போலீசாரைத் துணையாகவும் கொண்டு மூன்று நாள் துருவிப் பார்த்த பிறகு, ஸ்வாமி சென்னையிலிருந்து நெல்லூர் போகும் சாலைவழி சென்றதாகத் தகவல் கிடைத்தது.

அங்கிருந்து நான் எங்கெங்கெல்லாம் அலைந்தேன், எத்தனை ஊர்களுக்கு விஜயம் செய்தேன் என்ற விவரங்களையெல்லாம்விட்டு விடுகிறேன். இரண்டு மாதங்களுக்குப்பிறகுஸ்வாமி ஜடானந்தாவின் வருணனைக்குப் பொருந்தும் ஒரு நாடோடியைக் கைது செய்து வைத்திருப்பதாக, ஹைதராபாத் ராஜ்யத்தின் வடக்கெல்லையி லிருந்து, எனக்கு ஒரு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்தேன். அவரே தான். அவரை நான் கேட்ட முதற் கேள்வி, “இத்தனை நாளும் போலீசார் கண்ணில்படாமல் எப்படிப் பிரயாணம் செய்து இவ்வளவு தூரம் வந்தீர்கள்?” என்பதுதான்.

ஸ்வாமிஜி,“மனித நடமாட்டம் அதிகமில்லாத வழிகளைத் தேடி வந்தால் தான் அது சாத்தியமாயிற்று. ஆனால் போலீசார் கண்களில் படாமலிருப்பதற்காக அல்ல. என்னைக் குண்டலகர்ண க்ஷத்திரிய குல குருவாக அறிந்தயாருடைய கண்களிலும் பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான்” என்றார்.

கடைசியாக அவர் அப்படித் திடீரென்று குதித்து ஓடி வந்த தன் காரணத்தைக் கேட்டேன். ஸ்வாமிஜி தம் வாழ்க்கைச் சரித்திரத்தையே விவரமாகச் சொல்லத் தொடங்கிவிட்டார். சிறு வயதிலிருந்தே தனிமை அவரை விசேஷமாகக் கவர்ந்து இழுத்தது. அதனால் தம்முடைய பன்னிரண்டாவது வயதில், தென் தமிழ் ஜில்லாக்கள் ஒன்றிலிருந்து வீட்டைவிட்டுயாரிடமும் சொல்லாமல் வெளியேறிவிட்டார். அலைந்து திரிந்து கடைசியாகச் சிவ சமுத்திரம் நீர்வீழ்ச்சியை அடுத்திருந்தவனப் பகுதியை அடைந்தார். அந்தப் பிராந்தியம் அவர் மனத்தைக் கவர்ந்தது. தங்கிவிட்டார். அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் போது, அந்த வழியாக வந்த ஒரு ஒரு சந்நியாசியைச் சந்தித்தார். அவருடன் கூடவே போக விரும்பினார்.ஆனால் சந்நியாசி ஏற்றுக் கொள்ளவில்லை.

இருவரும் பிரிய நேர்ந்தபோது சந்நியாசி ஜடாதரனிடம், அது தான் அவருடைய பெயர் – “தம்பி! இந்த உலகம் வெளித் தோற்றத்தைக் கண்டு மயங்கும்; மதிக்கும். அதற்குத் தான் பூஜை செய்யும். மெய்ச் சக்தியை, ஒளியைக் காண உலகத்துக்கு மன உறுதி போதாது. நீயும் அப்படி ஏமாந்து விடாதே” என்று உபதேசம் செய்துவிட்டுப் போனார்.

ஜடாதரன் அந்த உபதேசத்துடன் முன் போலவே அந்தக் காடுகளில் இயற்கையுடன் வசித்துக்கொண்டிருந்தார்.

“எப்படி நேர்ந்தது, எப்படி ஏமாந்தேன் என்ற விவரமே புரியாமல் என் வாழ்க்கையில் அந்த மாறுதல் நிகழ்ந்து விட்டது. தொட்ட மல்லண்ண ராஜு என்னைச் சந்தித்து பெங்களூருக்கு அழைத்துச் சென்றதைத் தான் சொல்கிறேன்.

“அப்போது ஏற்பட்ட மாயைத் திரை நாளுக்கு நாள் பல மடைந்து என் மனத்தை முழுவதும் மறைத்து மூடி விட்டது. ஓரிரு நிமிஷங்கள், எனக்கு அளிக்கப்பட்ட மதிப்பைக் கண்டு உள்ளூற எக்களிக்கும் எல்லைக்குக் கூட வந்துவிட்டேன்.

“அந்த நிலைமையில் தான் சென்னை வீதியில் எதிரில் வந்த ஊர்வலத்தைக் கண்டு நிறுத்தச் சொன்னேன். ஒரு கணம் என் நெஞ்சில் சகிக்க முடியாத எரிச்சல் எழுந்தது. எனக்கு நிகராக, அப்படி ஊர்வலம் விட்டுக்கொண்டு எதிரில் வரத் துணிந்தவன் யார் என்று குமுறியது.

“அந்தக் குமுறலுக்குக் கிடைத்த பதில் என்னைக் குலுக்கி எடுத்துவிட்டது. அந்தச் சந்நியாசி – அவர் தான் நான் குருநாதர் என்று பாவித்துக் கொண்டவர் – சொல்லிச் சென்ற வார்த்தைகள் என் காதுகளில் அப்போது கணீரென்று ஒலித்தன. என்னுடைய ஊர்வலம், ஆம், என்னைச் சூழ்ந்து வந்த அவ்வளவு ஆர்ப்பாட்டச் சின்னங்களும், என்னை ஒரு பிணத்துக்குச் சமமாக்கி விட்டன என்ற உண்மை புலர்ந்தது என் உள்ளத்தில், அதன் பிறகு நடந்த தெல்லாம் உங்களுக்குத் தெரியுமே” என்று முடித்தார் ஸ்வாமி.

“நீங்கள் முன்பே தூய துறவு வாழ்க்கை நடத்துவதாக எனக்குக் கிடைத்த அறிக்கைகளிலெல்லாம் தெளிவாக இருக்கிறதே” என்றேன்.

ஸ்வாமிஜி,“இல்லை, உள்ளே கள்ளமிருந்தது. அது உங்கள் உளவாளிகள் கண்களுக்குத் தெரிந்திராது” என்றார்.

அதன்பின்னர் நான் ஸ்வாமி ஜடானந்தாவைச் சுதந்தர மாகவிட்டு விடஏற்பாடு செய்துவிட்டேன்.

“இப்பொழுது சொல்லுங்கள்: அந்த ஸ்வாமிஜி அப்படி ஓடியது சரிதானா?” என்றார் மிஸ்டர் போல்ட்நட்.

“எங்கள் நாட்டினரில் பெரும்பாலோர் அதுதான் சரி என்று தான் பதில் சொல்லுவார்கள். ஸ்வாமி ஜடானந்த சரஸ்வதிக்கு மல்லண்ணராஜுவினால் இந்த உலகத்தில் கிடைத்த இடத்தைவிட, அடுத்த உலகில் அவருக்குக் கிடைக்க வேண்டிய இடத்தைப்பற்றிய கவலைதான் அதிகச் சக்தி வாய்ந்தது. இதில் எங்களுக்குப் பெருமை தரும் அம்சம் ஒன்றிருக்கிறது. எவ்வளவு உயர்ந்த இடம் கிடைத்தாலும் அதை ஒரே கணத்தில் உதறியெறிந்து விடும் மனோபலமும், பக்குவமும் எங்கள் நாட்டினருக்குத் தான் உண்டு” என்றேன்.

மிஸ்டர் வின்டன் போல்ட்நட், “அது பெருமைப்பட வேண்டிய மன நிலைதானா என்பதுதான் எனக்குப் புரியவில்லை” என்றார்.

நான் பதில் சொல்லவில்லை.

– முத்துக்கள் பத்து, 2010, அம்ருதா பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *