கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 23, 2023
பார்வையிட்டோர்: 1,149 
 

“உடலை தங்கள் விருப்பங்களுக்கு ஆட்டி வைக்கின்ற ஐம்புலன்களுக்கு நம் மனம் கட்டுப்படாமல், அவற்றை நாம் அறிவால் கட்டுப்படுத்தும் நிலைக்கு பெயர்தான் ஞானம்.

புலன்கள் சொல்லுவதையெல்லாம் மனம் உடனே செயல்படுத்த விரும்பும். ஆனால் விளைவுகளைப்பற்றி ஆராயாது. விளைவு பாதகமானால் மனமும்,உடலும் துன்புறும். பின் விளைவுகளை நமக்கு சொல்வது அனுபவங்களும்,ஆன்றோர் வார்த்தைகளும் தான். அதை அறிவென்றும் கூறலாம். ஆக எந்த செயலையும் புலன்கள் மனதை வைத்து இயக்க முற்பட்டாலும் அதை அப்படியே செயல் படுத்தாமல் மனமானது அதை அறிவிடம் கொண்டு சென்று விளைவுகளை அதனிடமிருந்து வாங்கி செயல்படுத்தினால் துன்பமெனும் பெருங்கடலை நம் ஆத்மாவால் எளிதாக கடந்துவிட முடியும்”என சுவாமி விவானந்தா கூறியதைக்கேட்ட மக்கள் கைகூப்பி அவரைப்பார்த்து வணங்கினர்!

விவானந்தாவிற்கு சிறு வயது முதலே இந்த உலகில் வாழும் அனைவரும் துன்பமில்லாமல் வாழ வேண்டும். அதற்க்கு ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணமுண்டு. சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால் குடும்பத்தில் மூத்த மகனான தனக்கு தந்தையாற்றும் கடமைகள் கண் முன் வந்தன. படிப்பை உதறி விட்டு உழைப்பில் நாட்டம் செலுத்தி குடும்பத்தை அன்னப்பஞ்சத்திலிருந்து காப்பாற்றினார்!

அவரது அழகான முகத்தைப்பார்த்து அவரிடம் பழக வராத கன்னியர்களே இல்லையென்றாலும், காதலெனும் வட்டத்துக்குள் சிக்காமல் உயர்ந்த சிந்தனையுடன் உழைப்பே மூலதனமாய் இருந்து அக்கா,தங்கைக்கு திருமணம் நடத்தி சீர்வரிசை செய்து தாயின் சுமையை இறக்கிவைத்தவர்,தினமும் இரவு நேரம் ஊர் பிரச்சினைகளை பேசித்திரிந்த மக்களை ஒன்றாக அமரச்செய்து வாழ்வில் ஏற்படும் சிரமங்களைக்கடக்க வழி சொல்ல விவேகானந்தன் விவானந்தாவானார்!

அவரது புகழ் மக்களிடம் பரவவே தினம் ஓர் ஊரென ஆன்மீக கருத்துக்களை எடுத்துரைத்து மக்களை நல்வழிப்படுத்தினார்!

“ஐந்து பேர் தான் எல்லாத்துக்கும் காரணம். உடம்பை இயக்குவது ஐம்புலன்கள். உலகை இயக்குவது ஐந்து பூதங்கள். அவர்களின் குணங்களை மனதை அறிய வைப்பதே ஞானம்” என தொடர்ந்து விளக்கினார்!

“பஞ்ச பூதங்களில் காற்று எப்ப,எப்படி வரும்?நெருப்பை எந்தளவு பயன்படுத்தனம்? நீரை எதற்க்கெல்லாம் பயனுபடுத்தலாம்?ஆகாயத்துல இயங்குகின்ற கிரகங்கள் நம்மை எந்த காலம் எப்படி இயக்கும்? மண் எப்ப விளையும்? இது பஞ்சபூதங்களின் அறிவு.

ஒருவரை பார்த்தால் என்ன நினைப்பார்?அனைவரையும் தொடத்தோன்றினால் தொடலாமா? சுவையிருப்பதால் எதை வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும் உண்ணலாமா? மனதில் தோன்றுவதையெல்லாம் தோன்றியபடியே அனைவரிடமும் பேசலாமா? அனைத்தையும் சுவாசிக்கலாமா? என கேட்பது புலன்களின் செயல்களினால் ஏற்படும் விளைவுகளைத்தெரிந்து கொள்ள மனம் கேட்கும் போது பதில் கூறக்காத்திருக்கும் அனுபவ பதிவின் சாரத்திலிருந்து சரி,தவறு எனக்கூறும் அறிவு” என சொன்னபோது மெத்தப்படித்த பலரும் மெச்சிப்பேசினர்!

படிக்காத பாமர மக்களையும் இந்த இரண்டு வித இயக்கங்களிலிருந்தும் காப்பாற்றி கரை சேர்ப்பதையே பரதேசிகளைப்போல தனக்கென எதையும் சேர்க்காமல், கடவுளின் அவதாரம் போல செயல்பட்ட விவானந்தாவிற்கு உலகலவில் பக்தர்கள் சேர்ந்தனர்!

அவர் யாரிடமும் எதையும் பெறாமல் தன்னிடமிருக்கும் ஞானத்தை மக்களுக்கு கொடுத்துக்கோண்டே இருந்தார். எடுக்க,எடுக்க குறையாமல் அதிகமாவது ஞானம் என்பது அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்!

“அறிவே ஞானம். அறிவே இன்பம். அறிவே அகிலம். அறிவைப்பெற எதையும் இழக்க வேண்டியதில்லை. பாலுக்குள் இருக்கும் வெண்ணையை எடுக்க செயல்படும் அம்மா கண்டு பிடித்த வித்தைதான். பாலை வெண்ணையாக்குவது போல அனுபவத்தாலும்,ஆன்றோர் பேச்சைக்கேட்பதாலும்,நல்ல நூல்களை வாசிப்பதாலும் நம் பால் மனதை வெண்ணையாக்கினால் துன்பமெனும் உலகை எளிதில் கடந்து விட இயலும்” என்று அவர் பேசியபோது கூட்டத்தினரின் கைதட்டல் நிற்க சில நிமிடங்களானது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *