கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 30, 2021
பார்வையிட்டோர்: 3,386 
 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

யாழ்ப்பாணம். மூன்றாம் குறுக்குத் தெரு, கிட்டங்கி ரோட்டினைக் கட்டித் தழுவும் சந்தி. அதன் மேற்குப் புறமாகப் ‘பவுண் மார்க்’ ஓட்டுக் கிட்டங்கி. கிட்டங்கியிலிருந்து பத்து கஜ தூரத்தில், தனிமையில்-விரகதாபத்துடன் தவிக்கும் பெண்ணைப் போன்று காட்சி தரும் – முனிசிப்பல் மின்சாரக் கம்பம். அதன் தலைப்பில் மின்மினிப் பூச்சியின் கைவிளக்கேந்தி மினுக்கிக் காட்டும் ‘பல்ப்’. அதன் ஒளிக்கற்றைகள் சக்தி குறைந்தனவாக, மிக மிக மங்கிய வெளிச்சத்தை நிலத்தில் பாய்ச்சுகின்றன. தன் நிழலைக் கால்களுக்கிடையில் மிதித்துக்கொண்டு, அந்தக் கம்பத்தில் ஒரு கரத்தைத் தாக்குக் கொடுத்த வண்ணம், ஓணானைப்போல தலையை ஆட்டியபடியே நிற்கின்றான், ‘ஷோக்கல்லோ’ கந்தையா அண்ணன்.

அவனுக்கு இப்பொழுது ஞானம் பிறந்த நிலை என்பதை அவனைப் பார்த்ததும் ‘சட்’டென்று சொல்லிவிடலாம். வைசாக பௌர்ணமியிலேதான், சித்தார்த்தனுக்கு ஞானோதயம் பிறந்ததாம். அதைப்போல கந்தையாவுக்கு இந்தக் காலங்களிலேதான் ஞானம் பிறக்கும். காரணம், பனை கொடியேறிவிட்டது. இருபது சதத்திற்கு ஒரு போத்தல் பனங்கள்ளும், ஒரு சுருட்டும் கிடைக்கும் காலம். கொடியேறிய காலத்தை எப்பொழுதும் கந்தையா பயன்படுத்திக் கொள்ளுவான். ஒன்பது மணிக்குமேல், வயிற்றில் புளித்துப் போதை கொடுக்கும் சக்தியின் சக்தியில் தன் சக்திகளை இழந்து, ஞான நிலையை அடைந்துவிடுவான்.

இன்று, இப்பொழுது, மணி ஒன்பது…… கந்தையாவுக்கு ஞானம் பிறந்துவிட்டது!

கந்தையா அண்ணன் தனிக்கட்டை. வீடு வாசல், குடும்ப பந்தம் எதுவும் அற்றவன். ‘பவுண்மார்க்’ கிட்டங்கியில் ஓடு சுமக்கும் வேலை. கிட்டங்கிக்குச் சற்றே தெற்கில் — விரிந்து பரந்து கிடக்கும் கடலில், அலுப்பாந்தித் துறையில் கள்ளிக்கோட்டையிலிருந்து வரும் பாய்மரக் கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சி நிற்கும். அந்தக் கப்பல்களில் வந்த ஓடுகளைத் தலையில் சுமந்துவர இருபது தொழிலாளர்கள்–ஆண்களும் பெண்களுமாக-வேலை செய்கிறார்கள். நாள் முழுவதும் ஓடு சுமக்கும் அவர்களுக்கு மாலையில் இரண்டு ரூபாய்கள் சம்பளமாகக் கிடைத்துவிடும். அந்தச் சொற்ப சம்பளத்தில் ‘வயிறு இறுக்கி’க் குடும்பம் நடத்தும் அந்தத் தொழிலாளர் மத்தியில் தனிக்காட்டு ராஜாதான் கந்தையா. வயதில் இளையவர்களானாலும் சரி, மூத்தவர்களானாலும் சரி, சக தொழிலாளர்கள் எல்லோரும், கந்தையாவைக் ‘கந்தையா அண்ணன்’ என்றுதான் அழைப்பார்கள். பேசும்பொழுது அடிக்கடி ‘ஷோக்கல்லோ’ என்ற வார்த்தையையும் சேர்த்துக் கொள்வதினால், ‘ஷோக்கல்லோ’ என்ற விருதுப் பெயரும் ஒட்டிக்கொண்டது.

கந்தையா ஞானம் பிறக்காத நிலையில் மிக்க நல்லவன் தான். அந்த நேரங்களில் அவனுடன் வேலை செய்யும் அடைக்கலமுத்து, ரப்பியல், மேரிப்பிள்ளை லூர்த்தம்மா… என்று யாராக இருப்பினும் வெகு சகஜமாகப் பழகுவான். அவர்களுடன் ஒட்டியும் ஒட்டாமலும் பழகினாலும், சில சமயங்களில் ஒட்டியும் ஒட்டியும் பழகுவான்.

பின்னேரங்களில், கிட்டங்கிக்கு முன்னால் நிற்கும் மர நிழலில் குந்தி, பக்கத்துக் கடையிலிருந்து : டின்பால் பேணியில் வாங்கிக் கொண்டுவரும் ‘வெறுந் தேத்தண்ணி’ யைக் குடித்து, ‘வெத்திலை’ போட்டு, கலகலப்பாகப் பேசிக் கொள்வார்கள். ஏனைய தொழிலாளர்களுடன் சேர்ந்து கந்தையா தேநீர் பருகுவதில்லையாயினும் அந்தச் ‘சமா’வில் தானும் ஒருவனாகக் கலந்து கொள்ளத் தவறுவது கிடையாது. கந்தையா, சும்மாடாகப் பயன்படும் செந்நிறக் காவி யேறிய துவாலைத் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு, அவ்விடம் வந்தால் வேடிக்கைக்குக் குறைச்சலில்லை. அங்கு லூர்த்தம்மாவும் இருந்துவிட்டால், பேச்சுகள் மிக்க ரசமாக இருக்கும்.

லூர்த்தம்மா, தன்னுடைய வெற்றிலைக் காவியேறிய உதடுகளைக் கோணலாக – நெளித்துக்கொண்டு, “என்ன கந்தையா அண்ணை? இண்டைக்கு மாப்பிளையாட்டம் சோக்குப் பண்ணுறியளே!” என்று கேட்பாள்.

“ஓமடி, ஓமடி…… உன்னை நான் கட்டுவன் எண்டு வளையம் போட்டுப் பாக்கிறியா? ஏன்டீ அப்பிடித் தானே?…ம்…ஷோக்கல்லோ.. கொண்டாடி ஒரு நெட்டி பொயிலை” என்பான்.

“ஓமோம், பொயிலை கடன் வாங்கிறதிலை குறைச்சலில்லை; வாங்கித் தந்து வைச்ச புருஷனாட்டம்” என்று சொல்லிக் கொண்டே, தன் இடுப்பில் சொருகி வைத்திருக்கும் கொட்டப் பெட்டியைத் திறந்து ஒரு நெட்டி புகையிலையைக் கிள்ளி எடுத்துக் கொடுப்பாள்…

“நெடுக நெடுக லூர்த்தம்மாட்டைத்தான் – கந்தையா அண்ணன் பொயிலை வாங்குது. . என்ன சங்கதியோ?– என்ன சூதோ” என்று சொல்லிக்கொண்டே, முன்னால் பரட்டை விட்டிருக்கும் இளநரை கொண்ட மயிரைக் கோதிச் சொருகிவிடுவாள் மேரிப்பிள்ளை.

“அவளுக்கென்னடீ? உன்னைப்போல கிளவியாடீ? அவள் குமரெடி, குமர்” என்று கந்தையா சொல்வான்.

இதெல்லாம் காதல் விவகாரமல்ல. லூர்த்தம்மாதான் அங்கு வேலை செய்யும் பெண்களுள் குமரி; ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்ற ரீதியில் அழகி. அவளைக் காரணமாக வைத்து நகைச்சுவை அனுபவிப்பதில் எல்லோருக்குமே ஒரு தனிப்பிரீதி. இந்தப் ‘பகிடி’களில் கந்தையா கலந்து கொள்ளும்பொழுது, அவனும் அங்கு வேலை செய்யும் – ஓடு சுமக்கும் – சேரி மக்களின் ஒரு அங்கமாகத்தான் காட்சி தருவான். இருப்பினும் தன்னை மறந்த நிலையிலேகூட, கந்தையா தன்னுடைய ஜாதிப் பெருமையை மறந்தது கிடையாது.

அதை. வெளிப்படுத்த அவனுக்கு ஞானம் பிறக்க வேண்டும். அது பிறந்துவிட்டால், தன் பாட்டில், “ஷோக்கல்லோ, என்னை யாரெண்டு நினைச்சுக்கொண்டியள்? நான் ஓடு தூக்கிறதாலை பறையனல்ல. நான் வெள்ளாளனடா, வெள்ளாளன். முந்தி நல்லூரை ஆண்ட சங்கிலியன்ரை பரம்பரையடா. நான் கீழ்சாதி இல்லையடா; எழிய சாதி இல்லையடா…ம்…ஷோக்கல்லோ …என்ர சாதி ஷோக்கான சாதி” என்று விஸ்தரிப்பான்…

காலையில் விழிப்பு ஏற்பட்டுவிட்டால், அவன் ஓடு சுமக்கும் கந்தையாதான். அவனுக்கு அடைக்கலமுத்து அடைக்கமுத்து தான், ரப்பியல் ரப்பியல் தான், மேரிப்பிள்ளை மேரிப்பிள்ளை தான், லூர்த்தம்மா லூர்த்தம்மா தான்…

ஆனால், இப்பொழுது, மின்சாரக் கம்பத்திற்கு முட்டுக் கொடுத்து நிற்கும் கந்தையாவுக்கு ஞானம் பிறந்த நிலை!

நேற்றும் இப்படியான ஞானம் பிறந்த நிலையிலே தான் வந்தான். வந்து, இதே இடத்தில் நின்று கொண்டே, கலைகொண்ட தனது ஞான நிலையைப் பறை சாற்றினான். அன்று கிளாக்கர் ஐயா கூப்பிட்டு, ‘என்ன கந்தையா, நீ இப்ப ஒவ்வொரு நாளும் குடிச்சுப்போட்டு அயல் அண்டைக்குக் கரைச்சல் குடுக்கிறியாம்’ என்று கண்டித்தும் கண்டிக்காமலும் சொல்லிவிட்டார். அதைக் கந்தையாவால் தாங்க முடியவில்லை. அதனாலே தான் செப்பமாகக் கலை ஏற்றினான்.

ஞானம் பெற்ற நிலையில், அதே மின்சாரக் கம்பத்தின் கீழே நின்ற வண்ணம் பார்த்தான். எதிரே அந்த ஓலைவீடு. மூன்றாம் குறுக்குத் தெரு நாகரிக கனதனவான்கள் வசிக்கும் வீதி. ஒறுப்பாக, ஒன்றே ஒன்று கருவேப்பிலைக் கொத்து மாதிரி, ஒரு ஓலைக்குடிசை தனித்து நிற்கின்றது. அதற்குள் தான் அடைக்கலமுத்து குடும்பத்துடன் வசிக்கிறான். அவனும் ஓடு தூக்குபவன் தான் என்றாலும், ‘நல்ல பிள்ளை’ என்ற பெயரை எப்படியோ அக்கிட்டங்கி நிர்வாகிகளிடம் தட்டிக்கொண்டு, இரவில் ‘வாச்சர்’ வேலையும் பெற்று விட்டான். வாச்சர் வேலையின் பெருமையினால் வாடகை இன்றிக் கிடைத்தது தான் அந்த ஓலைக்குடிசை.

ஞானம் பெறும் கந்தையா தினமும் அந்த குடிசைக்குச் சமீபமாக இருக்கும் மின்சாரக் கம்பத்தின் கீழே நின்றுதான் தனக்கு வாலாயமான ஞானப்பாக்களை அர்ச்சனை செய்வது. வழக்கம். கிளாக்கரிடம் இந்தச் செய்தியை இந்த அடைக்கலமுத்துதான் சொல்லியிருப்பான் என்று பனங்கள்ளுக் கொண்ட புளாவில் ‘சொத்தை’யைக் குத்தும்பொழுது எழுந்த சந்தேகம், பனங்கள்ளு ஆண்டவனின் புண்ணிய கைங்கரியத்தினால், உண்மையாக உறுதிப்பெற்றது.

“எனக்குத் தெரியும் – நல்லாத் தெரியும் – ஆர் என்னைக் குடிகாரனெண்டு கிளாக்கர் ஐயாட்டைக் கோள் மூட்டினவ னெண்டு. ஷோக்கல்லோ …… நான் குடிக்கிறனாம். ஏண்டா, அடைக்கலமுத்து! உன்ரை கொப்பன்ரை வீட்டுக் காசிலையாடா நான் குடிக்கிறன்? நான் ஓடு தூக்கினாலும் வெள்ளாளனடா, சங்கிலியன்ரை பரம்பரையடா. நீ பறையன் கீழ்சாதியடா, உன்ரை சாதிப் புத்தியை காட்டீட்டாய்……. நான் கடவுளானை குடிக்கிறனான் தான். அதுக்கு உனக்கென்னடா? ஷோக்கல்லோ…டேய் பறைப் பயலே! வாடா வெளியிலை. உன்ரை மூட்டெல்லாம் முறிச்சுக் காட்டுறன்” என்று அங்கிருந்தபடியே சவால் விட்டான் அடைக்கலமுத்துவுக்கு.

“இந்தா, கந்தையாண்ணை! இரா இருட்டிலை மனிஷர் மாஞ்சாதி படுக்கிறேல்லையா?…… போய் வீட்டுக்கு நேரத் தோடை சாப்பிட்டுப்படன்.”

“சடாப்பிய மவுத்’ எண்டால் வாயைப் பொத்தடா எண்டு அர்த்தம். உன்னைப்போல பறைப்பயலாடா நான். நான் தனி ஆளடா- தனிக்கட்டை. காசை விட்டெறிஞ் சால், ஷோக்கல்லோ, சாப்பாடு. ஆர்ரை திண்ணையிலாவது சரிஞ்சாப் படுக்கை……ஆனால் நீ உன்ரை சாதிப் புத்தியைக் காட்டிட்டாயடா: உன்னைச் சரிக்கட்டீட்டு, அப்பிடியே மறியலுக்குப் போய் கொழுக்கச் சாப்பிட்டிட்டு வரப்போறனடா…”

அடைக்கலமுத்து, அதற்குமேல் பேச்சை வளர்க்கவில்லை. படலையைச் சாத்திவிட்டான்.

கந்தையா “திரிலோகமும் புகழும் தீரவீர் சூர சங்கிலி மன்னன் நானே” என்று கூத்து மெட்டில் பாட்டிழுத்து, இடையிடையே தாளக்கட்டிற்காகத் தூஷணைச் சொற்களையும் சேர்த்துக் கொண்டான்.

“ஆரடா, அவன்?”

அது அடைக்கலமுத்துவின் குரலல்ல என்பது ஞான நிலையிலும் கந்தையாவுக்கு விளங்கிவிட்டது.

உற்றுப் பார்த்தான்.

ரோட்டில் ரோந்து வந்த இரண்டு போலீஸ்காரர்…..

“ஆரடா, அது? ரோட்டிலை என்னடா கூத்து? நீதானாடா கந்தையா. உன்னைப்பற்றி நிறையக் ‘கொம்பிளே’யின் வந்திருக்கு. உன்னாலை அக்கம்பக்கத்து ஆக்களெல்லாம் நித்திரை கொள்ளுறதில்லையாம். ஏண்டா தூஷணம் பேசிக்கொண்டு நிற்கிறாய்? உன்ரை உடம்புக்கு ஏதாவது கேக்குதா? இரண்டு ஒட்டகப்புலத்துப் ‘புக்கை’ கட்டத்தான் ஆசையா?” என்று ஒரு போலீஸ்காரன் மிரட்டினான்.

“தான் தூஷணம் கொட்டுறனா?-அட கடவுளே! தூஷணம் கொட்டினால் நாக்கு அழுகிப் போகும் எண்டு எனக்குத் தெரியாதா? நீங்கள் என்ன பேய்க் கதை கதைக்கிறியள்?”

“அட, அது கிடக்கட்டும் மென். இதுதான் கடைசி. இனிமேல் நீ குடிச்சிட்டு இப்பிடி ஏதாவது ரோட்டிலை சேட்டை கீட்டை விடுறாய் எண்டு கொம்பிளேயின் வந்தால், அவ்வளவு தான்.”

“கோட்டை முனியப்பராணைச் சொல்லுறன். நான் ஏன் குடிக்கப்போறன்? நான் ஏன் சத்தம் போடப் போறன் ?”……என்று கந்தையா நெளிந்து, வளைந்து, குழைந்து, கூழைக் கும்பிடு போட்டு எப்படியோ நேற்று போலீஸ்காரரை அனுப்பிவிட்டான்.

இன்று நேற்றையைப் பார்க்கிலும் நல்ல ‘கலை’!

முனிசிப்பல் மின்சாரக் கம்பத்திற்கு ஒரு கரத்தை. முட்டுக் கொடுத்து ஞானம் பெற்ற நிலையில் சிந்தித்த ஷோக்கல்லோ கந்தையா அண்ணனுக்கு, நேற்றுப் போலீஸ்காரன் மிரட்டியது ஞாபகத்திற்கு வந்தது. ரோஷம் வேறு. ‘இதுவும் அடைக்கல முத்துவின் வேலையாகத்தான் இருக்கும்’ என்ற சந்தேகம் விஸ்வரூபம் எடுத்தது. உறக்கத்தில் ஆழ்ந்ததாகக் காணப்பட்ட அந்த் ஓலை வீட்டைத் துழைத்துத் தன் சத்தம் பாயவேண்டும் என்ற எண்ணம் கொண்ட வனைப்போலக் கத்தத் தொடங்கினான்.

“ஷோக்கல்லோ! டேய், அடைக்கலமுத்து. கீழ்சாதிப் பறப்பயலே! நீதானடா பொலிசுக்கு என்னைப்பற்றி சொல்லிக் குடுத்தனீ…… நேற்று வந்த அந்தப் பொலிசு மயிராண்டி என்னைத் திண்டிட்டானே?……ரோட்டிலை சேட்டை கீட்டைவிட்டால் திண்டுபோடுவன் எண்டல்ல வெருட்டுறான். அவங்களை வெளுத்திடுவன் வெளுத்து. பாவம் எண்டுதான் விட்டனான். நான் ஆரடா? ஓடு தூக்கிறவன் எண்டாலும், சங்கிலியன்ரை பரம்பரையடா. ஷோக்கல்லோ…டேய், அடைக்கலமுத்து…கூட்டியாடா உன்ரை பொலிசுக்காரங்களை. ஒரு கை பாத்திடுறன்” என்று உச்சஸ் தாயியில் முழக்கமிட்டான்.

சொல்லி வைத்தாற்போல், நேற்று வந்த அதே போலீஸ்காரர் இன்றைக்கும் வருகிறார்கள்.

“என்னடா கந்தையா? உடம்பு புளிக்குதா?”

“உந்த வெருட்டுகளுக்கு நானா அவியிறது”-‘இன்று இந்தப் பொலிசுக்குப் பயப்படுறதில்லை’ என்ற சங்கற்பத்துடன்தான் குடித்தான். ஆகையினாலேதான் பலாபலன்களை ஆராயாமல் சொல்லுகிறான்.

“நான் ஆர் தெரியுமா, பொலிசய்யா! வீரதீரச் சங்கிலியன்ரை பரம்பரை. பறைப்பயலல்ல…” மீண்டும் கந்தையா முறுகுகிறான்.

அந்த அவமானத்தைக் காக்கி உடைகளால் தாங்க இயலவில்லை. அவர்களுக்கு மூக்கு நுனி வரை கோபம் ஏறுகிறது. ஒரே பாய்ச்சல்; கந்தையாவிற்குச் செப்பமான அடி…

கந்தையா கானிற்குள் அனுங்கிக்கொண்டு கிடக்கிறான்…

வந்த போலீஸ்காரர் இருவரும் வந்த சுவடுகூடத் தெரியாமல் மறைகிறார்கள். சட்டத்தைப் பாதுகாப்பதாகச் சொல்லும் அவர்கள், சட்டத்தை மீறுவதைத்தான் நுண்கலையாகக் கொண்டிருக்கிறார்கள்…

கந்தையாவுக்கு ‘மண்டகப்படி’ கிடைத்தது அந்த வீதி வாழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் கனதனவான்க்ளுடைய வீட்டுப் படலைகளெல்லாம் சாத்தப்படுகின்றன.

நிசப்தம். அதைக் கிழித்துக்கொண்டு இடையிடையே அனுங்கல்…

பயந்து பயந்து, அரிக்கன்லாந்தரை எடுத்துக்கொண்டு, தன் மகனையும் அழைத்துக்கொண்டு, அடைக்கலமுத்து கந்தையாவைப் பார்க்க வருகிறான்.

பலமான அடி. தலையிலிருந்து இரத்தம் ஊற்றெடுக்கிறது. தண்ணீர் தெளித்து முதலுதவி செய்துகொண்டே, மகனை ஒரு கார் பிடித்துவரும்படி சொல்கின்றான் அடைக்கலமுத்து.

கார் வருகிறது.

அடைக்கலமுத்துவும், மகனும் கந்தையாவைத் தூக்கிக் காருக்குள் ஏற்றுகிறார்கள். கந்தையாவுக்கு இலேசான ஸ்மரணை வருகிறது…

கார் ஆஸ்பத்திரியை நோக்கி விரைகிறது…

போதை தெளியாது, இன்னும் ஞான நிலையிலிருக்கும் கந்தையாவின் வாய் பிதற்றிக்கொண்டிருக்கிறது:

“டேய்! நான் ஆரெண்டு தெரியுமா? பொலிசு எண்டால் கொம்பு முளைச்சவனா?……டேய், அடைக்கலமுத்து, கீழ்சாதிப் பறைப்பயலே! கவனம்! நான் ஓடு தூக்கினாலும் பறையனில்லையடா,…சங்கிலி மன்னன் பரம்பரையடா…”

– 1960 – தண்ணீரும் கண்ணீரும் – சரஸ்வதி வெளியீடு – முதற் பதிப்பு – ஜூலை 1960

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *