ஜேன் டீச்சர் ஒரு தேவதைதான்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 10,211 
 
 

நீர்கொழும்பு நகரத்தைத் தாண்டி ஒரு ஒதுக்குப்புறமான அமைதியான சூழலில் அமைந்திருந்தது அந்த கிறிஸ்தவ பாடசாலை. அது கிறிஸ்தவர்கள் செறிந்து வாழும் பிரதேச மாதலால் அந்த பாடசாலையிலும் கிறிஸ்தவ பிள்ளைகளே அதிகம் படித்தனர்.

அன்று பாடசாலை ஆரம்பமாகி முதலாவது நாள். நான்காம் தரம் பூர்த்தி செய்து ஐந்தாம் தரத்தில் உள் நுழையும் மாணவர்களுக்கு விசேடமான நாள். அந்த ஆண்டில்தான் அவர்கள் புலமை பரிசில் பரீட்சை எழுத வேண்டும். தாய், தந்தையர்கள், பிள்ளைகள் அதிக புள்ளி எடுக்க வேண்டுமென்பதற்காக பல்வேறு பாடங்களுக்கும் டியூசன் கிளாஸுக்கு அனுப்பி அவர்களை வறுத்து வதைத்து காய்ச்சி எடுப்பார்கள்.

ஜேன் டீச்சர் தன் வகுப்பின் எல்லாப் பிள்ளைகளையும் வரிசையாக நிறுத்தி அவர்கள் அனைவருக்கும் முகமன் கூறி வரவேற்றார். அவர்கள் அனைவருமே தன் பிள்ளை போன்றவர்கள் என்றும் எல்லோரையும் தான் சமமாக மதித்து அன்பு செலுத்துவதாகவும் கூறினார். ஆனால் அவர் அப்படிக்கூறியது விரைவிலேயே பொய்த்துப்போனது.

அதற்கு பிரதான காரணம் அந்த வகுப்பின் கடைசிப் பெஞ்சில் சோகம் அப்பிய முகத்துடனும் வெறித்துப் பார்த்த கண்களுடனும் அமர்ந்திருந்த அன்டன் ஜோன் என்ற மாணவன் தான். அவன் அழுக்கடைந்த நைந்த ஆடைகளை அணிந்திருந்தான்.
குளிக்காத அவன் தலை பரட்டையாக இருந்தது. ஏனைய மாணவர்களுக்கு அவன் வேண்டத் தகாதவனாக இருந்தான்.

ஜேன் டீச்சர் அவனை முதல் வருடத்தில் இருந்தே கவனித்திருக்கிறார். அவன் எப்போதும் உற்சாகமிழந்தவனாகவும் பெருந்துன்பத்தில் அல்லற்படுபவனாகவுமே இருந்திருக்கிறான்.
அவனை நினைக்க அவன் மீது அனுதாபமும் பரிதாப உணர்வும் அவருக்கு ஏற்பட்டது.

இப்படியாக மூன்று மாதங்கள் கழிந்தன. முதல் தவணை பரீட்சைகளும் நடந்தேறின.

தவணைப் பரீட்சைகள் முடிந்ததும் பரீட்சை வினாத்தாள்களை திருத்தும் நடவடிக்கைகளில் ஜேன் டீச்சர் ஈடுபட்டிருந்தார். அன்டன் ஜோனின் வினாத்தாள்களை அவர் திருத்த முற்பட்டபோது அவன் எல்லா பாடங்களிலும் குறைந்த புள்ளிகளை பெற்றிருப்பதையும் சில பாடங்களில் முற்றாக பெயில் ஆகியிருப்பதனையும் அவதானித்தார்.

அன்டன் ஜோன் தொடர்பில் மேலும் மனவருத்தமும் பச்சாத்தாபமும் கொண்ட ஜேன் டீச்சர் அவனைப்பற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டுமென மனதிற்குள் தீர்மானித்துக்கொண்டார்.

அதன் பொருட்டு ஜோனின் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரையிலான முன்னேற்ற அறிக்கைகளை தருவித்து அவற்றை ஆராய்ந்து பார்த்தார்.

அவனது முதலாம் வகுப்பு டீச்சர் அவனது முன்னேற்ற அறிக்கையில் ”அன்டன் மிகவும் திறமையுள்ள மாணவன். கேள்விகள் கேட்டு புதிய விடயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவான். அவன் முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை இருந்து கொண்டே இருக்கும்” என்று எழுதப்பட்டிருந்தது.

அவனது இரண்டாம் வகுப்பு டீச்சர் அவன் தொடர்பில் ”ஜோன் மிகப்பிரகாசமான புத்திக்கூர்மையுள்ள ஏனைய வகுப்புத்தோழர்களால் விரும்பப்படுகின்றவனாக இருக்கிறான் என்ற போதும் வீட்டில் அவன் அம்மா சுகவீனமுற்று படுக்கையில் வீழ்ந்திருப்பதால் அவன் பாதிக்கப்பட்டுள்ளான்” என்று தெரிவித்திருந்தார்.

அதன் அறிக்கையின் இரண்டாவது வாசகத்தால் கவலையடைந்த ஜேன் டீச்சர் அவசர அவசரமாக மூன்றாம் ஆண்டின் அறிக்கையை புரட்டினார்.

அந்த வகுப்பாசிரியரின் அன்டன் தொடர்பான கூற்று ஜேன் டீச்சரை சற்றே அதிர்ச்சி கொள்ள வைத்தது. ”ஜோன் நன்றாக படிக்கக் கூடிய மாணவன் அவன் படிப்பில் ஆர்வம் காட்ட முயற்சித்த போதும் அவனது அம்மாவின் மரணம் அவனை பெரிதும் பாதித்து விட்டது.

இது தொடர்பில் கவனமெடுக்கப்படாவிட்டால் அவன் எதிர்காலம் பாதிக்கப்படலாம்”.

ஜேன் டீச்சர் அன்டனின் நான்காம் வகுப்பாசிரியரின் குறிப்பை கவனமாக ஆராய்ந்தார். அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. ”கற்றல் தொடர்பில் அன்டனின் ஆர்வம் மிகக் குறைந்து போய்விட்டது. அவன் வகுப்பறையில் தூங்குபவனாகவும் சக மாணவர்களால் வெறுக்கப்படும் மாணவனாகவும் உள்ளான். அவன் வகுப்பறையில் ஒரு பிரச்சினையாக உள்ளான்”.

இதைப்படித்ததும் ஜேன் டீச்சருக்கு அன்டன் தொடர்பில் கடுமையான விசனம் ஏற்பட்டது.

இறுதியாக அவனது நான்காம் ஆண்டு வகுப்பாசிரியர் தெரிவித்த கூற்று முற்றிலும் உண்மையானது என்பதை அவர் உணர்ந்தார். அவன் இப்போதும் அதே நிலையில்தான் இருந்தான். அடுத்து வந்த நாட்களில் அவன் தொடர்பில் என்ன செய்யலாம் என்று கடுமையாக சிந்தித்துக் கொண்டிருந்தார்.

இருந்தாலும் என்ன செய்தும் அன்டனில் ஏதும் மாற்றங்கள் தெளிவாகத்தோன்றவில்லை.

இத்தகைய தருணத்தில்தான் அவ்வாண்டின் கிறிஸ்மஸ் பண்டிகை வந்தது. அவர்கள் பாடசாலையில் கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சி, நாடக நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன.

கிறிஸ்மஸ் தினத்துக்கு முதல் நாளன்று ஜேன் டீச்சரின் மாணவ, மாணவிகள் அவருக்கு கிறிஸ்மஸ் பரிசுப்பொருட்கள் கொண்டு வந்திருந்தார்கள். அன்டனும் ஒரு சிறு பார்சலை டீச்சரிடம் கொடுத்தான். எல்லா பார்சல்களும் அழகிய பேப்பர்களில் பொதி செய்யப்பட்டு வண்ண வண்ண ரிபன்களால் கட்டப்பட்டிருந்தன.

அவற்றுள் அன்டனின் பார்சல் மாத்திரம் கடையில் சாமான் சுற்றும் காக்கிப்பேப்பரில் சுற்றப்பட்டு அவனின் நாதியற்ற நிலையை பறை சாற்றியது.

ஜேன் டீச்சர் எல்லார் முன்னிலையிலும் அந்த பார்சலை பிரித்தார். அதனுள் மணிக்கட்டில் அணியக்கூடிய ஒரு பழைய நிறம் மங்கிய உலோக காப்பும் கால்வாசி வாசனைத் திரவம் நிரம்பியிருந்த சென்ட் போத்தலும் இருந்தது.

காப்பில் பதிக்கப்பட்டிருந்த சில கண்ணாடி கற்களும் உதிர்ந்திருந்தன. இதனை பார்த்து எல்லாப்பிள்ளைகளும் ஓவென கைகொட்டி சிரித்தார்கள்.

”நிறுத்துங்கள் என்று தன் சைகையால் பிள்ளைகளின் கேலிக் கெக்களிப்பை அடக்கிய ஜேன் டீச்சர் அன்டனை அருகில் அழைத்து அவன் தோளைத்தொட்டு முதுகிலும் தட்டிக்கொடுத்து ”காப்பு அழகாக இருக்கின்றது” என்று நன்றி கூறி சென்ட் போத்தலில் இருந்த சிறிது வாசனைத்திரவியத்தையும் தன் உடையில் விசிறிக் கொண்டார்.

அப்போதுதான் சுருங்கிப்போயிருந்த அன்டனின் முகம் பிரகாசமடைந்தது. அவன் உதட்டில் முதன் முறையாக ஒரு புன்னகையை ஜேன் டீச்சர் அவதானித்தார். அவனும் டீச்சரின் காதருகில் ”நீங்க அம்மாவைப் போல வாசமா இருக்கீங்க டீச்சர்”
என்றான்.

அன்றைய தினம் எல்லாப் பிள்ளைகளும் போன பின்னர் தனியான ஒரு இடத்துக்குச் சென்று சுமார் ஒரு மணி நேரம் அழுது தீர்த்தார் ஜேன் டீச்சர். அடுத்த தவணையில் இருந்து அன்டன் ஜேன் டீச்சருடன் அன்புடன் ஒட்டிக்கொண்டான்.

அவரும் அவனுக்கு எல்லாவிதங்களிலும் உதவி ஒத்தாசைகள் செய்து உற்சாகப்படுத்தினார். அவன் அவருக்குக் கொடுத்த காப்பினை மினுக்கி மெருகூட்டி கல்பதித்து அவ்வப்போது அணிந்து கொண்டு வருவார். அவ்வப்போது அவன் கொடுத்த சென்டையும் பூசிக் கொண்டு வருவார்.

அவன் விரைவிலேயே அப்பாடசாலையில் மிகத்திறமை கொண்ட மாணவன் என்று பெயர் வாங்கினான்.

அவன் வேறு வகுப்புக்குச் சென்ற பின்னரும் ஜேன் டீச்சரை தேடி வருவதை நிறுத்தவில்லை.

ஜேன் டீச்சர் அவன் வாழ்வை திசை திருப்பிய தேவதையாக அவன் கருதினான். அதன் பின்னர் அவன் உயர்தர வகுப்பில் விஞ்ஞானக்கல்வி கற்று பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி மருத்துவம் பயிலச் சென்றான்.

அதன்பின் சில காலமாக அவனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை.

அன்று காலை வெளி முற்றத்தில் ஆறுதலாக மரத்துக்கடியில் அமர்ந்திருந்தபோது அன்டனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதம் அன்டன் ஜோன் எம்.பி.பி.எஸ்.எம்.டி என்ற கடிதத்தலைப்பில் எழுதப்பட்டிருந்தது.

தான் இப்போது மருத்துவப்பட்டப்படிப்பு முடித்து டொக்டராக கடமை புரிவதாகவும் இந்த வாழ்க்கையைத் தந்தது ஜேன் டீச்சர் தானென்றும் தனது தந்தை சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டதாகவும் தான் தன்னுடன் படித்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் முடிக்கவுள்ளதாகவும் அந்தத் திருமணத்தின் போது ஜேன் டீச்சர்தான் திருமணத்தை தாயின் ஸ்தானத்தில் இருந்து நடத்தி வைக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருந்தான்.

ஜேன் டீச்சர் பல தடவைகள் அந்தக் கடிதத்தை திரும்பத்திரும்ப படித்தார்.

அப்படிப்படிக்கும் ஒவ்வொரு முறையும் அவர் கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் திரண்டு வருவதை அவரால் தடுக்க முடியவில்லை.

Print Friendly, PDF & Email

1 thought on “ஜேன் டீச்சர் ஒரு தேவதைதான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *