ஜீவரசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 1,729 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன்னொரு காலத்தில் நான் பதினெட்டு வயதுள்ள இளைஞனாய் இருந்தேன். கலாசாலையில் எம்.ஏ., வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். போதாதற்கு பரீட்சை சமீபத்திருந்தது. நானே பரிட்சையில் முதல் தரமாக தேறவேண்டுமென்பதில் பெரியப் பிரமே கொண்டவன், இவ்வளவும் தவறான விஷயம் என்பது பிற்காலத்தில் தான் எனக்கு விளங்கிற்று.

பரீட்சைக்கு முன்னால் மாணாக்கர்கள் அமைதியாக படிப்பதற்கென்று ஒரு வாரம் விடுமுறை விட்டார்கள். நகரில் இருந்தால் இந்த ஒரு வாரமும் நிச்சயமாய் வீணாகி விடுமென்று நான் அனுபவத்தில் கண்டறிந்தவன். காப்பி ஹோட்டல்கள், சினிமாக்கள், நாடகங்கள், சீட்டுக்கச்சேரிகள் முதலியவை குறித்துப் பரீட்சை வினாக்கள் கேட்பதாயிருந்தால் நகரிலிருக்கலாம். அதனால் அந்தக் குருட்டுப் பரீட்சைகளோ டார்வினைப் பற்றியும், ஷேக்ஸ்பியரைப் பற்றியும் அல்லவா கேள்வி கேட்கிறார்கள்? ஆகவே என்ன செய்யலாமென்று யோசித்தேன். ஓர் அற்புதமான யோசனை தோன்றிற்று.

நகரத்துக்கருகிலுள்ள ஏதேனுமொரு கிராமத்துக்குச் சென்று அந்த ஒரு வாரமும் அமைதியாகப் படித்துப் பரீட்சைப் பாடங்களைக் கரைத்துக் குடித்துவிட்டு வந்து விடுவதென்று தீர்மானித்தேன். அவ்வாறே ஒரு நாள் காலையில் ஸ்நானஞ் செய்து உடையணிந்து கைப்பெட்டி ஒன்றில் டார்வின், ஷேக்ஸ்பியர் முதலியவர்களையும், மாற்றி அணிவதற்குச் சில துணிகளையும் எடுத்து வைத்துக்கொண்டு கிளம்பினேன். ரயில்வே ஸ்டேஷன் சென்றதும் எந்த ஊருக்கு டிக்கெட் வாங்கலாமென்று பார்த்தேன். நகருக்கு ஐந்தாறு ஸ்டேஷனுக்கப்பால் தாமரைவேலி என்ற ஸ்டேஷன் இருந்தது. ஊரின் பெயர் அழகாய் இருந்த படியால் அந்த ஸ்டேஷனுக்கே டிக்கெட் வாங்கிக் கொண்டு ரயில் ஏறினேன்.

ரயில் ஒடிய போது சிந்தனையும் வெகுதூரம் ஓடிற்று. தாமரைவேலி! ஆஹா! என்ன அழகான பெயர்! ஊரும் அத்தகைய அழகாகத்தான் இருக்கும். பக்கத்திலே சல சலவென்று ஜலம் ஓடிக்கொண்டிருக்கும் ஆறு; தாமரையும், அல்லியும் பூத்திருக்கும் பெரிய குளம், தென்னந்தோப்புகள், மாமரங்கள், வாழைத்தோட்டங்கள்; வீடுகள், இரண்டு சிறு கோவில்கள், ஆகா படிப்பதற்கு எவ்வளவு அமைதியான இடம்? சாப்பாட்டைப் பற்றிக் கவலையில்லை. ஹோட்டல் இராதென்பது உண்மையே. அதனால் என்ன மோசம்? ஒரு வீட்டிற்குள் தைரியமாக நுழைந்து சாப்பாடு போடும்பபடிக் கேட்கலாம். விஷயத்தைச் சொன்னால் சந்தோஷமாகப் போடுவார்கள்.

“லொடக்’ என்று ஆடிக்கொண்டு ரயில் நின்றது. அவசர அவசரமாக வண்டியை விட்டுக் கீழே இறங்கினேன். என்ன ஏமாற்றம். எல்லாம் வெறும் ஆகாசக் கோட்டையாக முடிந்தது. ஆறு இருந்தது; தண்ணீர் இல்லை , குளம் இருந்தது. தாமரையும், அல்லியும் இல்லை. தென்னைமரம் இருந்தது. ஆனால் சமீபத்தில் இடி விழுந்திருக்க வேண்டும். எனவே மட்டையாவது தேங்காய் தலையாவது இல்லாமல் மொட்டையாய் நின்றது. மாமரம் பெயருக்கும் இல்லை . புளியமரம் ஏராளம். கோவில் ஒன்றிருந்தது. ஆனால் இடிந்து பாழாய் கிடந்தது. நந்தவனத்துக்குப் பதிலாக எங்கெங்கும் குப்பைமேடுகளாய் காணப்பட்டன. ஒரு கள்ளுக்கடை, ஒரு காப்பி ஹோட்டல், ஒரு போலீஸ் ஸ்டேஷன், ஒரு சுருட்டுக்கடை, ஒரு பள்ளிக்கூடம், பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயர் ”அர்ரிதமெட்டிக்” என்று அழுத்தந்திருத்மாய் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆயினும் நான் தைரியத்தைக் கைவிடவில்லை . அடுத்த ரயில் வரும் வரையில் இராமவாசம் செய்தே தீருவதென்று தீர்மானித்தேன். வேறு வழியும் இல்லை . . என்னதான் இருந்தாலும் கிராமம். ஆகா! எவ்வளவு விஸ் தாரமான மைதானம்? என்ன அழகான அருகம்புல்? எவ்வளவு நேர்த்தியான மண்? அப்புறம் இதோ, தெரியும் சப்பாத்திக் கள்ளி இவையெல்லாம் காணக்கிடைக்குமா? அவசரப்பட்டு கிராம வாழ்க்கை ‘வெறும் ஹம்பக்’ என்று தீர்மானித்தது பிசகுதான். எப்படியும் இந்தப் புல் நிறைந்த மைதானத்தில் சிறிது நேரம் உட்கார்ந்து அமைதியாகப் படிக்கலாம். ஆனால் அதற்கு முன்னால் கொஞ்சம் தாகத்துக்குச் சாப்பிட வேண்டும். தொண்டை வரளுகிறது. காப்பி கிளப்புக்கு ‘சை’ கிராமத்துக்கு வந்தும் காப்பி கிளப்பா? ஏதாவது ஒரு வீட்டுக்குள் நுழைந்து கெஞ்சம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு வரலாம்.

கிராமத்துக்குள் சென்றேன்; கொஞ்சம் ஒதுங்கி நின்ற ஒரு வீடு என்னைக் கவர்ந்திழுத்தது. அது சிறிது பாழடைந்த வீடு. “ஏழை வீட்டுக்குப் போனால் தான் நல்லது. தைரியமாகக் காலணா கொடுத்து மோர் கேட்கலாம்” என்று எண்ணியவாறு, வீட்டினருகில் சென்றேன். பெயர் “லலிதாவிலாசம்” கதவு தாளிட்டிருந்தது. வெளிச்சுவரில் ஏதேதோ எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தேன். இராஜப் பிரதிநிதி அர்வின் பிரபுவுக்கு ஒரு நோட்டீசு; இது கண்ட ஒரு வாரத்திற்குள் நீர் நமக்கு தரவேண்டிய இரண்டு லட்சம் ரூபாயையும் அனுப்பி வைக்க வேண்டியது. இல்லாவிடில் உம்மை வேலையிலிருந்து தள்ளிவிடும்படி சிபாரிசு செய்யப்படும்.” சென்னை ஹைகோர்ட்டு நீதிபதிகளையெல்லாம் இந்தியாவிலுள்ள பற்பல இடங்களுக்கு மாற்றியிருப்பதாக மற்றோர் உத்தரவு எழுதப்பட்டிருந்தது. இடையிடையே “ஜீவரசம், ஜீவரசம்” என்று பல இடங்களில் பொறிக்கப்பட்டிருந்தது. “சரி! நமது கிராம வாசம் வீண் போகவில்லை. இங்கே ஏதோ வினோதம் இருக்கிறது” என்று எண்ணிக் கொண்டேன். கதவைத் தட்டினேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் கதவு திறக்கப்பட்டது. முதலில் ஒரு கரும்பூனை வெளியே வந்தது. அப்புறம் ஒரு முயல்குட்டி, அப்புறம் ஒரு நாய், பின்னர் ஒரு கிழவரின் முகம் மட்டும் தெரிந்தது. பிறகு கிழவரின் உருவம் முழுதும் வெளியே வந்தது. ஆகா! எத்தனைய கிழவர்? நீண்ட வெண்ணிறத் தாடி? முழங்கால் வரை வந்த வெண்மையான மேலங்கி; கண்ணில் மூக்குக் கண்ணாடி; நெற்றியில் குங்குமம்; ஆஜானுபாகுவானத் தோற்றம். யாரோ பிரும்மஞான சங்கத்தைச் சேர்ந்த மகானாயிருக்க வேண்டுமென்றும், இங்கேத் தனிமையாக வந்து தவம் செய்கிறார் என்றும் நான் எண்ணினேன்.

“என்னப்பா! எங்கே வந்தே? என்றார். “தங்களுக்கு தொந்தரவு கொடுத்தற்காக மன்னிக்க வேண்டும். தாகமாய் இருக்கிறது. கொஞ்சம் மோர் கிடைக்குமா? என்று கேட்க வந்ததேன்” என்றேன்.

“மோர்-மோர் என்ன? மோரா? ஓகோ! மோர் சாரி-சர்ரி உள்ளே வா’ என்றார் கிழவர்.

எனக்குக் கொஞ்சம் சந்தேகம் தட்டிற்று. இருந்தாலும் உள்ளே சென்றேன். சுற்றும் முற்றும் பார்த்ததும் என் கலக்கம் அதிகரித்தது. காரணம் அவ்வளவு விசித்தரமாக சாமான்கள் அங்கே காணப்பட்டன. பழைய அலமாரி அதற்குள் கணக்கில்லாத கண்ணாடிப் புட்டிகள், ஒடிந்த மேஜை, அதன் மீது கண்ணாடிக்குழாய் முதலிய என்னென்னவோ கருவிகள், மூலைக்கு மூலை கிழிந்தப் பழையப் புத்தகங்கள், ஒரு ஜோடிப் பூனை, நாலு முயல், ஒரு நாய், எலி வலை முதலியன. கிழவர் ஒரு சட்டியிலிருந்து கொஞ்சம் மோர் ஊற்றிக் கொடுத்தார். அதை மறுப்பதற்கு எனக்கு தைரியமில்லை. வாங்கிக் குடித்தேன். சட்டென்று ஒரு யோசனை தோன்றிற்று.

“தாங்கள் என்ன இரசாயன சாஸ்திரியோ?” என்று கேட்ன்ே. ரகசியத்தைக் கண்டு பிடித்து விட்டதாகவே எண்ணினேன்.

“என்ன? என்ன? ரசாயானாமா? இல்லை ! ஹ!ஹ!ஹ! ாரசவாத சாஸ்திரி ரசவாத சாஸ்திரி, ர்ரசவாதம் ரசவாதம், ாரசவாதம்.”

கிழவன் பைத்தியக்காரன் என்பது இப்போது நன்கு விளங்கிவிட்டது. திரும்பிப் போவதற்காக ஓர் அடி எடுத்து வைத்தேன். அனால் அதற்குள் கிழவன் என் கையைப் பிடித்துக் கொண்டான். ஏதோ பெரிய ரகசியம் சொல்வது போல் அவன் கூறியதாவது.

* “தெரியுமா? நான் ஜீவரசம் கண்டு பிடித்திருக்கிறேன்! ஒரு லட்சம் உயிர்களின் வடிகட்டி ஜீவசத்து! ஆமாம் ஒரு லட்சம் உயிர்கள்! ஓர் உயிருக்கு நூறு வருஷம், லட்சம் உயிருக்கு கோடி வருஷம் கோடி வருஷத்து ஆயுள் இதோ இந்தப் புட்டியில் அடங்கியிருக்கிறது!”

இவ்வாறு சொல்லிக் கிழவன் மேஜையிலிருந்து ஒரு சிறு புட்டியை எடுத்துக் காட்டினார். இந்தப் பைத்தியக்காரனிடமிருந்து எப்படித் தப்பி வெளியே போகப் போகிறோம் என்று எனக்கு ஏக்கம் உண்டாகிவிட்டது.

“நல்லது, ஐயா! ரயிலுக்குப் போகவேண்டும், மோர் கொடுத்தீர்களே, அதற்கேதாவது காசு…” என்று நான் தயங்கினேன். ‘

“நீ நல்லப் பையன். நான் சொல்கிறதைக் கேளு. ஒரு புட்டி வாங்கிக்கோ . ஜீவசரம் ஒரு லட்சம் உயிர்களின் வடிகட்டிய சத்து, கோடி வருஷ ஆயுசு” என்ற கிழவன் ஜீவரசத்தைப் பற்றி வர்ணித்தான்.

அங்கிருந்து தப்புவதற்கு இது தான் வழியென்று நினைத்தேன். “என்னவிலை?” என்று கேட்டேன்.

“விலை மூன்று ரூபாய். நீ நல்லப் பையன், உனக்கு மட்டும் இரண்டு ரூபாய்.”

ஒரு குவளை மோருக்கு இரண்டு ரூபாய் நல்லப் பேரம். அல்லவா? ஆனால் எனக்கு அப்போதிருந்த மனக் குழப்பத்தில் கையில் இருந்த பத்து ரூபாயையும் கேட்டாலும் கொடுத்து வந்திருப்பேன்.

நான் வெளியே வந்து அந்த வீட்டின் கீழண்டைச் சுவரைப் பார்த்தபோது அதில் “பித்துக் கொள்ளிக் கிழவன்” என்று யாரோ குழந்தைகள் எழுதியிருப்பதைக் கண்டேன். என் நடையின் வேகம் நான் சொல்லாமலே அதிகமாயிற்று. நேரே ரயில்வே ஸ்டேஷனுக்குப் போனேன். இப்போதுதான் ஒரு வண்டி போயிற்றென்றும், அடுத்தவண்டி வர இன்னும் மூன்று மணி நேரம் ஆகுமென்றும் சொன்னார்கள். “அட தெய்வமே” என்று எண்ணியவனாய் ஸ்டேஷனில் இருந்த கடையில் வாழைப்பழம் வாங்கிக்கொண்டு சமீபத்தில் புல் முளைத்திருந்த ஒரு மைதானத்தில் போய் உட்கார்ந்தேன். வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. ஏதோ வந்ததற்கு சிறிது நேரம் அமைதியாய்ப் படிப்போம் என்று எண்ணினேன். அதற்கு முன் மருந்துப்புட்டியை எடுத்து ஒருமுறை பார்த்தேன். பெருமூச்சுடன் அதைக் கீழே வைத்துவிட்டு டார்வின் புத்தகத்தைக் கையில் எடுத்துப் படிக்கத் தொடங்கினேன், ஜீவ வர்க்க பரிணாமத்தைப் பற்றியும் குரங்கிலிருந்து மனிதன் எப்படிப் பிறந்தான் என்பதைப் பற்றியும் வெகு ரசமாகச் சொல்லப்பட்டிருந்தது.

அந்த ரசத்தில் சொக்கில் போன எனக்கு ஆனந்தமான நித்திரை வந்தது.

“சை? தூங்கக்கூடாது!” என்று எண்ணி நான் கண்ணைக் கசக்கியபோது சமீபத்தில் காலடி சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன். எதிரில் யார் வந்ததென்று நினைக்கிறீர்கள்? புத்தகத்தில் யாரைப் பற்றி படித்துக் கொண்டிருந்தேனோ அந்த சாஷாத் ஆஞ்சனேயப் பெருமாள் தான். குரங்குடன் மனிதன் ஒருவனும் கூட வந்தான். அவன் கழுத்தில் ஒரு பழைய ஹார்மோனியப் பெட்டி தொங்கிக் கொண்டிருந்தது. குரங்கு, சட்டையும் குல்லாவும் அணிந்திருந்தது. இந்தப் பிராணியிடமிருந்தா நாம் எல்லாரும் பிறந்தோம்? டார்வினும் ‘ஒரு பெரிய பைத்தியக்காரன் போலிருக்கிறதே” என்று நான் எண்ணினேன்.

“குட்மார்னிங் சார்!” என்றான் குரங்காட்டி. அவனுடைய குரங்கு என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்ட தென்பதை அவன் எப்படியோ கவனித்திருக்க வேண்டும்.

“அனுமார்! ஐயாவுக்கு சலாம் போடு!” என்றான். அனுமார் சலாம் போட்டது.

“ஐயாவுக்கு வாத்தியம் கேட்கப் பிரியமா? என்று கேட்டான் அந்த மனிதன்.

“இல்லை” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னேன். ஹார்மோனியம் என்றாலே எனக்குப் பிடிக்காது. அதிலும் நான் வசித்த ஹோட்டலுக்கு அடுத்த வீட்டிலிருந்த ஹார்மோனியம் என் படிப்பைக் கெடுப்பது போதாதென்று இங்கு அமைதியாகப் படிக்க வந்த இடத்திலுமா?

“ஐயா, அனுமாருக்குக் காலணா கொடுப்பாரு. நான் வாத்தியம் வாசிப்பேன்” என்றான் மனிதன்.

“இரண்டும் இல்லை ” என்றேன் நான்.

“அப்படியானால் ஐயா அரையணாக் கொடுப்பாரு. நான் வாத்தியம் வாசிக்காதிருப்பேன்!” என்றான் மனிதன்.

இப்போது அவன் குரங்கின் விலாவில் குத்தவே அது ஓடிவந்து தன் தலையில் இருந்த குல்லாவை எடுத்து நீட்டியது.

மறுபடியும் தோல்விதான். சட்டைப் பையில் கை விட்டுக் காலணாக்களைத் தேடிக்கொண்டிருந்தேன். இதற்குள் குரங்கின் கவனம் பக்கத்திலிருந்த வாழைப்பழத்தின் மேல் போய்விட்டது. அப்பொழுது எனக்கு அருமையான ஒரு யோசனை தோன்றிற்று. கிழவனிடம் பெற்ற ஜீவரசத்தை இந்தக் குரங்குக்குக் கொடுத்து ஏன் பரிசோதிக்கக் கூடாது என்பதுதான் அந்த யோசனை.

சட்டென்று ஒரு வாழைப்பழத்தை உரித்து, குரங்காட்டிப் பாராமல் புட்டியிலிருந்து அதில் கொஞ்சம் மருந்து ஊற்றி குரங்கனிடம் கொடுத்தேன். குல்லாவில் அரையணாவும் போட்டேன். அடுத்த கணத்தில் குரங்கு என் எஜமான் தோளுக்குப் போயிற்று; வாழைப்பழம் குரங்கின் வயிற்றுக்குப் போயிற்று; குரங்காட்டி என்னை வாழ்த்திக்கொண்டே போனான். “இவ்வளவுதானா? ஒன்றும் இல்லையா!” என்று நினைத்துக் கொண்டு மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.

ஆனால் குரங்காட்டி கொஞ்ச தூரம் போய் நின்று குரங்கனிடம் ஏதோ வாதமிடுவதைக் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தேன். ஆகா? இதென்ன விந்தை? பழைய குரங்கு எங்கே? இந்த பெரிய குரங்கு எங்கிருந்து வந்தது? குரங்காட்டி எதோ தந்திரத்தினால் தான் இந்தப் புதிய குரங்கைக் கொண்டு வந்து விட்டானா? அப்படியிருக்க முடியாது. ஏனெனில் குரங்காட்டியிடம் என்னைப் போலவே அதிசயமடைந்தவனாய்க் காணப்பட்டான். அவன் குரங்கைக் கீழே இறக்கிவிட்டு அதைப் பார்த்து ஏதேதோ ஹிந்துஸ்தானி பாஷையில் பேசினான்.

நன்றாகக் கண்ணை துடைத்துக் கொண்டு பார்த்தேன். முன்பு பார்த்த குரங்கை விட இது மூன்று மடங்கு பெரியதாயிருந்தது. நிமிஷத்துக்கு நிமிஷம் அது வளர்ந்து வந்ததுடன் உருவமும் மாறி வந்தது. இப்போது குரங்காட்டியின் மார்பு அளவுக்கு அது உயர்ந்து விட்டது. அதன் முதுகு வளைவு மறைந்து போயிற்று. கால்கள் நிமிர்ந்து வந்தன. ஆனால் குல்லா பழைய குல்லாதான். சட்டையும் பழைய சட்டைதான். ஆனால் உடம்பு பருத்த போது சட்டை தாறுமாறாய்க் கிழிந்து விட்டது. எனவே பழைய குரங்குதான் இப்படி வளர்ந்து வருகிறதென்பதில் சந்தேகமில்லை… வாயைப் பிளந்த வண்ணம் இந்த அற்புதக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தேன்.

குரங்க அல்லது மாஜி குரங்கு இன்னும் சில நிமிஷத்தில் தன் எஜமானின் தோளளவுக்கு வந்து, அவன் முகத்தை வினோதமாக உற்றுப் பார்க்கத் தொடங்கிய போது அதற்கு மேல் அந்த மனிதனால் தாங்க முடியாமல் போய்விட்டது. அவன் ஹார்மோனியப் பெட்டியைத் தொப்பென்று கீழேப்போட்டு விட்டு, “ஆண்டவனே! அல்லாவே!” என்று கூச்சலிட்டுக் கொண்டு ஓட்டம் பிடித்தான். ரயில் வேலி, தண்டவாளம், அதனருகிலிருந்த வாய்க்கால் முதலியவற்றை அவன் சிறிதும் பொருட்படுத்தாமல் ஒரே தாண்டாக தாண்டி குதித்து ஓடினான். ஆனால் நானோ இந்த மகத்தான அற்புதக் காட்சியைப் பார்த்த வண்ணம் மந்திரத்தினால் கட்டுண்டவன் போல் உட்கார்ந்திருந்தேன். குரங்காட்டி ஓடிப்போனதும் ‘மாஜி குரங்கு திரும்பி பார்த்தது. மெதுவாக என்னை நோக்கி வந்தது. இப்போது காட்டுமிராண்டி மனிதனைப் போல் காணப்பட்டது. இதற்குள்ளாக சட்டை சுக்கு சுக்காகக் கிழிந்து கீழே விழுந்து விட்டபடியால் தலையில் குல்லாவைத் தவிர வேறொன்றும் இல்லை.

அந்த வினோதப் பிராணி என்னெதிரே வந்து உற்றுப் பார்த்தது. எப்படியேனும் அதை திருப்தி செய்யவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. பக்கத்தில் இருந்த வாழைப்பழத்தை சீப்புடன் எடுத்து அதனிடம் கொடுத்தேன். அந்தக் குரங்கு “அப் அப் அப்” என்றது.

“அப்படியா! சந்தோஷம்!” என்றேன் நான். உள்ளுக்குள் எனக்கிருந்த திகிலைச் சொல்லி முடியாது.

குரங்கு மனிதன் எனக்கெதிரில் புல்லில் உட்கார்ந்து கொண்டான். “கிக்-கிக்-கிக்” என்றான். “எக்-எக்-எக்” என்றான். பின்னர் என்னை நோக்கி எதோ கேட்பவன் போல் ‘வக்-வக்-வக்!” என்றான்.

என் மூளை இப்போது வேலை செய்ய ஆரம்பித்தது. இதென்ன விந்தை! இதென்ன அற்புதம்! எப்படி நிகழ்ந்திருக்கும்? கிழவனுடைய ஜீவரசம் செய்யும் வேலையா? ஜீவரசம் ஆயுளைத்தானே வளர்க்க முடியும். ஒரு லட்சம் உயிர்களின் வடிகட்டிய சத்து. ஒரு கோடி வருஷ ஆயுள், டார்வின் கொள்கை. பரிணாம வாதம் ஓஹோஹோ! விளங்கிவிட்டது! கிழவன் பைத்தியக்காரனல்ல மகாசித்த புருஷன். வெறுமே உயிரைச் சாகாமல் வைத்திருக்கு ஜீவரசம் அன்று; உயிர் வளர்ச்சிக்கு தரும் ஜீவரசம். கால் மணி நேரத்தில் ஒருலட்சம் வருஷத்தின் வளர்ச்சி! ஆஹா! என்ன அற்புதம்!

ஆனால் இந்த அற்புதத்தில் உண்மையைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியை நான் அதிக நேரம் அனுபவிப்பதிற்கில்லை. ஏனெனில் நிமிஷத்துக்கு நிமிஷம் நிலைமை மாறி மேலும் மேலும் பிரமிப்பு உண்டாக்கி வந்தது. இப்போது அந்தக் குரங்கு மனிதன் பேசுவதற்கு முயல்கிறாதென்பதை அறிந்து கொண்டேன்.

“இன் இன் இன்” என்று சொல்லிக் கொண்டே அவன் ஜீவரசம் இருந்த புட்டியைச் சுட்டிக் காட்டினான்.

பிறகு சிறிது சிரமப்பட்டு “இன் இன் இன்னும் கொஞ்சம்!” என்றான்.

ஆதிகாலத்தில் முதன் முதலில் தோன்றி மனிதசாதி தமிழ்மொழி தன் பேசிற்றென்று ஒரு தமிழ்ப் பிரமுகர் கூறுவது எனக்கு நினைவு வந்தது. அது 2…ண்மையாகவே இருக்க வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் அது குறித்து அதிக நேரம் சிந்திப்பதற்கு தருணம் அதுவன்று. இன்னும் கொஞ்சம் ஜீவரசம் குடித்துவிட்டால் என்ன விளையுமோவென்ற பீதி எனக்கு உண்டாகி விட்டது. ஆகையால் புட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு எழுந்திருக்க முயன்றேன்.

ஆனால் முயற்சி பலிக்கவில்லை. வலிமை பொருந்திய ஒரு கை என்னைப் பிடித்து இறுத்திற்று. மற்றொரு கையால் அவன் புட்டியைப் பிடுங்கி அதிலிருந்த ஜீவரசம் முழுவதையும் குடித்துவிட்டான். பின்னர் அவர் என் கைப்பெட்டியைத் திறந்தான். அதிலிருந்த என்னுடைய மாற்று உடைகளை எடுத்து அணிந்து கொண்டு, மறுபடியும் கீழே உட்கார்ந்தான். என் மூளைத் திருவிழாக் காலங்களில் திருக்குளம் குழம்புவது போல் குழம்பிற்று. அது அடியோடு சிதறப் போகாமலிருக்கும் பொருட்டு நகரம், கலாசாலை, என்னுடைய ஆசிரியன் முதலியவர்களைப் பற்றி எண்ணினேன். எனக்கு நேர்ந்திருக்கும் இந்த நிலையை என் விஞ்ஞான ஆரியரால் கூடச் சமாளிக்க முடியாது என்று கருதினேன்.

“ரொம்ப நல்லது!” என்று அக்குரங்கு மனிதன் தூயத் தமிழில் பேசினான். பிறகு ஏதோ அபூர்வ ஐந்துவைப் பார்ப்பது போல் என்னைப் பார்த்துவிட்டு “நீ என்ன, பழைய கர்நாடகமாய் இருக்கிறாயே!” என்றான்.

ஒரு கூத்தாடிக் குரங்கு என்னைப் பார்த்து பழைய கர்நாடகம்” என்று சொல்லுமென்று கனவிலும் கருதியதில்லை . எனவே அக் கேள்வி என்னைத் தூக்கி வாரிப் போட்டது. அப்போது என் மடியிலிருந்து டார்வின் புத்தகம் கீழே விழுந்தது.

“ஓஹோ! மாண்டுபோன ஆங்கில மொழியா? என்றான் அம்மனிதன். நிமிஷத்துக்கு நிமிஷம் என் வியப்பு அதிகமானது போல் அவன் உருவமும் மாறி வந்தது. பழைய காட்டுமிராண்டி வடிவம் போய் விட்டது. அவன் தேகம் மெலிந்து மேன்மையாகியிருந்தது. மண்டை அசாத்தியமாகப் பெருத்துவிட்டது. கண்களும் அப்படியே வாய் மிகவும் சிறுத்திருந்தது. விரல்கள் மெலிந்து நீண்டிருந்தன. தலையில் இருந்த சிறுகுல்லா ஒன்றுதான் அவன் சற்று நேரத்திற்கு முன் குரங்காயிருந்தான் என்பதை எனக்கு நினைவூட்டிற்று.

இந்த நினைவு வந்ததும் மறுபடியும் ஒரு நிமிஷம் சிந்தனை செய்தேன். வளர்ச்சி அதிவேகமாக நிகழ்ந்து வருகிறதென்று அறிந்தேன். குரங்கு காட்டு மனிதனாகி காட்டு மனிதன் இக்கால மனிதனாகி இக்கால மனிதன் வருங்கால மனிதன் ஆகிவிட்டான். இப்போது அவனைக் கண்டதும் என்னையறியாமலே பயபக்தி உண்டாயிற்று.

”மன்னிக்க வேண்டும்” என்னும் சொற்கள் என் வாயினின்றும் தாமே வெளிவந்தன. எதற்காக மன்னிக்க வேண்டுமென்பது எனக்கே விளங்கவில்லை:

வருங்கால மனிதன் கிழே விழுந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்துவிட்டுச் சொன்னான்; ஓ! டார்வின் இயந்திர யுகத்தைச் சேர்ந்தவன். நமது வளர்ச்சியை ஒருவாறு அப்போதே சொன்னான். ஆயினும் அக்காலத்து மக்கள் எல்லோரும் பொதுவாக மூடர்கள். எனவே ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டே செத்தார்கள்!”

“உண்மை வாஸ்தவம்” என்றேன். இவ்வளவு மூளைக் குழப்பத்தினிடையே ஒரு சந்தோஷம் ஏற்பட்டது. வருங்கால மனிதர் தமிழ்மொழி பேசுவார்கள் என்பதில் தான் அந்த சந்தோஷம் ஏற்பட்டது.

மீண்டும் சட்டென்று எனக்கு ஓர் அரிய யோசனை தோன்றிற்று. வருங்காலத்தைப் பற்றி இந்த வருங்கால மனிதன் கூறுவதையெல்லாம் எழுதி வைத்துக் கொண்டால் நல்லதல்லவா? அப்படி செய்து கெண்டால் கலாசாலை ஆசிரியர்களைக் கூட ஓட ஓட விரட்டலாம். உடனே நோட்டுப் புத்தகமும், பென்சிலும் சட்டைப் பையிலிருந்து எடுத்துக் கொண்டேன்.

“ஓகோ எழுதும் கலை. இது மறந்து போய் இரண்டு லட்சம் ஆண்டு கழிந்து விட்டதல்லவா?” என்று கூறி வருங்கால மனிதன் வியப்புடன் நோக்கினான்.

பிறகு சட்டென்று ஓர் எண்ணம் உதயமானவனைப் போல் என்னை உற்றுப்பார்த்து, “நீ யார்? என்று கேட்டான்.

விஞ்ஞானப் புலவர்கள் ஒரு வண்டு அல்லது தேனீயை நோக்குவது போல் அவன் என்னை ஆராய்ச்சிக் கண்ணுடன் பார்க்கத் தொடங்கினான். உடனே எனக்கு அளவில்லாத பீதி உண்டாயிற்று. நல்ல வேளை! அவன் முன் போல் காட்டு மிராண்டி மனிதனாயில்லை. தப்பித்து ஓடிப் போகலாம்!

எழுந்து ஓடினேன். ஆனால் சில அடி தூரம் போவதற்குள் என் கால்கள் தாமாகவே நின்றன. விரும்பமில்லாமல் திரும்பிப் பார்த்தேன். வருங்கால மனிதன் இருந்த இடத்திலேயே இருந்தான். ஏதோ கண்ணுக்குப் புலனாகாத சக்தி என்னைப் பிடரி பிடித்துத் தளிக் கொண்டு போய் அவன் எதிரில் உட்கார வைத்து தேகபலத்தை அவன் இகழ்ந்து கூறியதன் கருத்து எனக்கு இப்போது நன்கு விளங்கியது.

இதற்குள்ளாக அவன் மண்டையும் கண்களும் இன்னும் அதிகம் பெருத்திருந்தன. கண்களில் காந்த ஒளி வீசிற்று. இதன் பின்னர் அவன் வாய் திறந்து பேசவில்லை . ஆயினும் அவனுடைய கட்டளைகள் என் மூளையில் சற்று நன்றாகப் பதிந்தன.

“உன் குல்லாவை எடுத்து என்னிடம் கொடு” என்று மானஸரூபக் கட்டளை பிறந்தது.

‘முடியாது’ என்று நான் வாயால் சொன்னேன். ஆனால், கையினால் குல்லாவை எடுத்துக் கொடுத்தேன். மௌன மனிதன் அக்குல்லாவை மண்டபம் போலிருந்த தன் தலையின் உச்சியில் வைத்துக் கொண்டான். பின்னர் குரங்கு குல்லாவை என்னிடம் கொடுத்தான்.

”இதை உன் தலையில் வைத்துக்கொள்” என்ற இன்னொரு கட்டளை பிறந்தது.

”மாட்டேன்” சொல்லிக்கெண்டே அதை வாங்கி என்னுடையத் தலையில் வைத்துக் கொண்டேன்.

“இடது கையில் குல்லாவைத் தூக்கி வலது கையினால் சலாம் போடு!” என்று அடுத்த உத்தரவு வந்தது.

ஐயையோ! இதென்ன அநியாயம்? மனிதர்கள் குரங்குகளையும், நாய்களையும் பழக்குவது போல் அல்லவா அவன் நம்மைப் பழக்குகிறான்?

”முடியாது” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னேன். ஆயினும் என் இடதுகை குல்லாவைத் தூக்கிற்று. வலது கை ஸலாம் போட்டது.

“மீண்டும் சலாம் போடு!”

எனக்கு கண்ணில் நீர் ததும்பிற்று. ஆயினும் ஸலாம் போட்டேன்.

“எழுந்து நின்று கூத்தாடு”

அவமானம்! அவமானம்! ஆனாலும் எழுந்து நின்று கூத்தாடினேன். .

“போதும் உட்கார்”

உட்கார்ந்தேன். அடுத்தார்போல் “செத்துப்போ’ என்ற கட்டளை பிறக்கக்கூடாதா என்று நினைத்தேன். என்ன அதிசயம் அடுத்த கணத்தில் “செத்துப்போ” என்று பயங்கரமான கட்டளை வந்தது.

“மாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே மல்லாந்து விழுந்தேன் வருங்கால மனிதனுடைய பயங்கரமான பெரிய மண்டை என் முகத்தினருகே வந்தது. அவனுடைய மெலிந்த நீண்ட விரல்கள் என் முகத்தைத் தீண்டின. அளவில்லாத பீதி கொண்டவனாகக் கண்களை மூடிக் கொண்டேன்.

ஒரு பெரிய பிரயத்தனம் செய்து கண்களைத் திறந்தேன். என் மார்பின் மீது குரங்கு உட்கார்ந்து பல்லை இளித்துக் கொண்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்தேன். குரங்காட்டி ஹார்மோனியத்தைத் திறந்து ஸ்வரம் போட்டுக் கொண்டிருந்தான். எருமைக் கன்று சத்தமிடவது போல இருந்தது. பக்கத்தில் வாழைப்பங்கள் எல்லாம் உரிக்கப்பட்டு தோல்கள் கிடந்தன. கடவுளே! இவ்வளவும் கனவுதானா? சட்டென்று எழுந்து உட்கார்ந்தேன். என் மார்பிலிருந்து கீழே விழுந்த குரங்கு என்னை நோக்கி ‘கிக் கிக் கிக்” என்றது. “ஐயா! அனுமாருக்கு காலணா கொடுப்பாரு; நான் வாத்தியம் வாசிப்பேன்” என்றான் குரங்காட்டி.

“இங்கு எத்தனை நேரமாய் நின்று கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டேன்.

“கால் நாழியாக நிற்கிறேன் சாமி! இன்று முழிச்ச முகமில்லை. பொழுது விடிந்து தம்பிடி கூடக் கிடைக்கவில்லை. அதோ அந்தப் பித்துக்குளி வீட்டில் ஒரு நாழி வீணாய் போய்ச்சு. நீங்களா பட்டப்பகலில் தூங்கிப் போயிட்டீங்க” என்றான்.

பித்துக்குளி என்றதும் நான் பக்கத்தில் திரும்பிப் பார்த்தேன். குரங்கு அப்போது தான் “ஜீவரசம்” இருந்த புட்டியைத் திறந்து கொண்டிருந்தது. “ஐயையோ’ என்று ஒரு சத்தம் போட்டு அதைப் பிடுங்கி வீசியெறிந்தேன். கிராமவாசம் போதும் போதுமென்று ஆகி ஸ்டேஷனை நோக்கி வேகமாய் நடக்க ஆரம்பித்தேன். அப்போது குரங்கு என்னை உற்றுப்பார்த்து ‘வக் வக் வக்’ என்றது.

“மாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே அதற்கு நான் ஸலாம் போட்டேன்.

– தஞ்சைச் சிறுகதைகள், தொகுப்புரிமை: சோலை சுந்தரபெருமாள், முதற் பதிப்பு: டிசம்பர் 1999, காவ்யா வெளியீடு, பெங்களூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *