ஜாதிக்கவுண்டன்பட்டியில் லக்னோகாரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 4, 2012
பார்வையிட்டோர்: 7,162 
 
 

சென்னையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தேன். திண்டுக்கல் வந்திறங்கி என் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம். மணி 12 நெருங்கிக்கொண்டிருந்தது. இந்தநேரத்தில் வாடிப்பட்டியில் ஒன்றும் வேலையில்லை. திண்டுக்கல்லில் என் தங்கை வீட்டில் தூங்கியது கொஞ்சம் சுறுசுறுப்பை வழங்கியிருந்தது. மெதுவாக ஓட்டிக்கொண்டிருந்த நான் ஜாதி கவுண்டன் பட்டி என்ற கைகாட்டியைப் பார்த்துவிட்டு வண்டியைத் திருப்பினேன். இந்த ஊருக்குப் போக வேண்டும் என்பது என் நீண்ட நாள் எண்ணம்.

அது என்ன ஜாதி கவுண்டன் பட்டி..? நல்ல சுத்தமான கவுண்ட சாதியினர் வாழ்ந்த ஊரோ? ஒரு வேளை வாழ்கின்ற ஊரோ? தெரியவில்லை. எனக்குப் பொழுது போக வேண்டும். அல்லது ஜாதிக் கவுண்டன் என்பது அங்கே முதலில் குடியேறிய ஒருவரின் பெயராக இருந்திருக்குமோ?
ஊருக்குள் நுழைவதற்கு முன்னரே ஓர் புளியந்தோப்பு இருந்தது. அடர்த்தியான தோப்பு.. இன்னமும் அந்த மரங்களை விட்டு வைத்திருப்பதற்கு ஏதோ விசேஷமான காரணம் இருக்க வேண்டும்.

எப்போதும் இடுப்பில் ஒரு கேமிரா வைத்திருப்பேன். கொடாக் பேசிக் மாடல் ஆறாயிரம் ரூபாய்க்கும் குறைவு என்று நம்பி 5995 ரூபாய்க்கு வாங்கியது. ஒளியைக் கட்டுப்படுத்தும் நான்கு படிநிலைகள் இருந்தது கூடுதல் வாய்ப்பு. நல்ல கேமிரா வாங்க வேண்டும் என்ற என் கனவு பல ஆண்டுகளாகக் கனவாகவே இருந்துகொண்டிருக்கிறது.

புளியந்தோப்பில் வண்டியை நிறுத்திவிட்டு சூழலை ஆராய்ந்தேன். முள் புதர் ஒன்றில் அதன் நிறத்தோடு ஒன்றியதாக ஓர் ஓணான் இருந்தது. நான் அடியடுத்து வைத்து நெருங்குவதற்குள் அது உஷார் ஆகிவிட்டது. அப்புறம் 10-15 நிமிடம் அதுவும் நானுமாக ஒளிந்துபிடித்து விளையாடினோம்.. கடைசியில் அதுதான் ஜெயித்தது. என் காமிராவில் சிக்கவில்லை. எடுத்த ஒர் படமும் என் கேமிராவின் ஜுமிங் வசதியின்மையால் மொக்கையாக இருந்தது.

இந்த கேமிராவை வைத்துக்கொண்டு ஓவராக ஆசைப்படுகிறேன் என்று பத்தாயிரம் முறைக்கும் அப்பாலான ஓர் முறையாக மனதில் தோன்றியபோது அவன் சைக்கிளுடன் தோப்பில் நுழைந்தான். அவன் கண்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தன. அந்தக் கண்ணில் இருந்த கேள்வி என்ன என்பதை அவன் சைக்கிள் கேரியரில் இருந்த குல்பி பானைக் காட்டியது. பேண்ட் சர்ட் பைக் சகிதம் இருக்கும் இவன் குல்பி வாங்குவானா என்பதுதான் அந்தக் கேள்வியாக இருக்க வேண்டும்.

எனக்கு அவன் சட்டையின் மேல் கவனம் சென்றது. கோடுகள் போட்ட சட்டை. சிவப்பு, நீலம், பச்சை என்று பெருங்கோடுகள். இந்த புளியமரத்தின் வழியாகக் கசியும் சூரிய ஒளியில் இவன் சட்டையும் இவனும் என் காமிரா வழியாக எப்படியிருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். அவனுக்குக் களையான முகம். 20 வயதுக்குள் இருப்பான் என்று தோன்றியது. வடநாட்டுக்காரன் என்பதை அவனின் முகமும் நிறமும் சொல்லின.

அவனை நெருங்கி குல்பி பானையுடன் படமெடுக்கலாம் என்று தோன்றியது. சைகையால் சம்மதம் கேட்டேன். மகிழ்ச்சியுடன் தயாராகி நின்றான்.

அது ஒரு பழைய அட்லஸ் சைக்கிள். பின் பக்க சக்கர மட்கார்டு பாதியைக் காணோம். அனேக இடங்களில் துரு பிடித்திருந்தது. ஹேண்ட்பாரில் மாட்டியிருந்த பையில் ஐஸ் குச்சிகள் இருந்தன. பின்பக்க கேரியரில் சிவப்புத் துணியால் போர்த்தப்பட்ட பிளாஸ்டிக் கேன் இருந்தது. முன்பெல்லாம் பானைதான் பயன்படுத்துவார்கள்.

அவனிடம் கொஞ்சம் பேசலாம் என்று தோன்றியது. எனக்கு சில இந்தி வார்த்தைகள் தெரியும். இருந்தாலும், ஒரு வேளை அவனுக்குத் தமிழ் தெரிந்திருக்கலாம் என்ற எண்ணத்தில், ‘ஓம் பேரு என்ன?’, என்றேன்.

விழித்தான். அதுவும் என்னுடைய தமிழ் அவனுக்குச் சிக்கலாக இருக்கலாம். நான் பல மாவட்டங்களில் வாழ்ந்து கலப்படமான உச்சரிப்புப் பிரயோகம் செய்பவன்.

சரி. பார்க்கலாம் என்று முடிவு செய்து, ‘ஆப்கா நாம்?’ என்றேன். அவன் முகத்தில் சிரிப்பு வந்தது. நான் கேட்டதை அவன் புரிந்து கொண்டதில் உள்ள மகிழ்ச்சி.

’மனோஜ்’ என்று சொன்னான்.

அப்புறம் எனக்கு இந்தி வரவில்லை. ‘ஹவ் ஓல்டு ஆர் யூ?’ அடுத்த கேள்வியை வீசினேன். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை என்பதை அவனுடைய பார்வை காட்டியது.

‘ஏஜ்?’ என்று அடுத்த கேள்வியைப் போட்டேன். பிரயோஜனமில்லை.

நான் விடுவதாகயில்லை. எனக்குத் தெரிந்த ஹிந்தி வார்த்தைகள், தமிழில் உள்ள வட மொழி வார்த்தைகள் எல்லாவற்றையும் தேடி எடுத்து ஒரு வார்த்தையைக் கண்டுபிடித்தேன்.

‘ஆயுள்?’ என்றேன். கொஞ்சம் புரிந்தது போலத் தோன்றியது. எனது முயற்சியைத் தொடர்ந்து ‘பான்ஞ்… தஸ்..’ என்று இழுத்தேன். எனக்கு ஹிந்தி எண்களில் ஏக், தோ, தீன், சார், பான்ஞ் வரைக்கும் தெரியும் அப்புறம் தஸ்.. அதற்கு அப்பால் குழப்பம். சிக்கல் என்ன வென்றால் நமக்குப் பத்து விரல்கள்தான் இருக்கின்றன..

அவன் கொஞ்சம் யோசித்து ஏதோ சொன்னான். எனக்குப் புரியவில்லை.. அனேகமாக அவன் சொன்னதையும் அவனுடைய தோற்றத்தையும் வைத்துப் பார்த்தால் 20 கிட்ட இருக்கலாம்.

‘டுவண்டி?’ என்று ஆங்கிலத்திற்குத் தாவினேன். புரியவில்லை. ஒரு கையில் இரண்டு விரலையும் மற்றொரு கையால் பூச்சியத்தையும் உருவாக்கிக் காட்டினேன். அவன் ‘ஹாங்’ என்று அமோதித்தான்.

இப்படியாக எங்கள் பேச்சு நீடித்தது. 12 மணி வெயிலில் சைக்கிள் மிதித்துக்கொண்டு வந்தவனுக்கு அந்த சுகமான காற்றுத் தேவையாக இருந்திருக்கலாம். அல்லது என்னை எப்படியாவது ஒரு குல்பி வாங்க வைத்துவிட வேண்டும் என்ற வியாபார தந்திரமாக இருக்கலாம்.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என்று சிற்சில வார்த்தைகளில் நாங்கள் பேசிக்கொண்டோம். அதன் சாரமான விஷயத்தை இப்படிச் சொல்லலாம்.

அவன் ஊர் உத்திரப்பிரதேசம் லக்னோ மாவட்டத்தில் உள்ள ஓர் கிராமம். அப்பா விவசாயி. இரண்டு பையன்கள். இளையவன் படிக்கிறான். இவன் மூத்தவன். தங்கை ஒருத்தி. கிணறு இருக்கிறது. தண்ணீர் இல்லை. அப்பா பிழைப்பு பார்க்க லக்னோ போய்விட்டார். கொஞ்சம் சம்பாதித்துவிட்டுப் போகலாம் என்று நண்பனுடன் இங்கே வந்திருக்கிறான். திண்டுக்கல்லில் ஓர் வீட்டின் அறையில் தங்கியிருக்கிறார்கள்.

முப்பது நிமிடத்திற்கு மேல் போயிருக்கும். எனக்கு ஆயாசமமாக இருந்தது. அவன் விடவில்லை. ‘குல்பி?’ என்று கொக்கியைப் போட்டான்.

நான் பொதுவாக மலிவான ஐஸ் பொருட்களைச் சாப்பிடுவதில்லை. இன்றைய நிலையில் நிலத்தடி நீர் வரை மாசுபட்டுப்போய்விட்டது. ஐஸ் உறையும்போது கிருமிகளும் உறைந்து போய் உறக்க நிலைக்குச் சென்றுவிடும். வெம்மையான உங்கள் தொண்டையை அடைந்தவுடன் வாழ்க்கைச் சூழல் வந்துவிட்டதைப் புரிந்துகொண்டு வேகமாக விழித்தெழுந்து இனப்பெருக்கம் செய்யும். நீங்கள் தொண்டை வலி என்று உணர்வீர்கள்.

நான் யோசித்தேன்.. அவனைப் பற்றி புரிந்துகொள்ள இன்னமும் கொஞ்சம் பேசவேண்டும் என்று தோன்றியது. சரியென்று ஓர் குல்பி வாங்கினேன். குல்பி பாத்திரத்தை சில முறை சுற்றிவிட்டு, கையைவிட்டு பிளாஸ்டிக் குப்பி ஒன்றை எடுத்து குச்சி ஒன்றை அதன் பின்புரத்தில் செலுத்தி, கத்தியால் வாகாக வெளியேற்றி எனக்களித்தான்.

குல்பியைச் சப்பிக்கொண்டே எங்கள் உரையாடல் தொடர்ந்தது.

நான் சிறார்கள் மாநிலங்கள் கடந்து உழைக்கச் செல்வது ஓர் போக்காக மாறிவிட்டதைக் கண்டுவருகிறேன். ஆந்திராவுக்கு, அல்லது குஜராத்திற்கு என்று முருக்குக் கம்பெனி வேலைக்கு சிறார்கள் செல்கிறார்கள். வயதுக்கு ஏற்ப பெற்றோரின் வறுமைக்கு ஏற்ப ஆண்டுக்கு இருபதாயிரம் முதல் முப்பதாயிரம் வரை பேசி செல்கிறார்கள். அங்கே தூங்க நேரமின்றி வேலை செய்கிறார்கள். கொதிக்கும் எண்ணெயைக் கொட்டி கொடுமை செய்யப்படுவதற்கு ஆளாகிறார்கள்.

ஒரு நாள் காவல் நிலையத்தில் நான் வேறு வேலையாக அமர்ந்திருந்தபோது சிறுவன் ஒருவனை விசாரணைக்கு அழைத்து வந்தார்கள். அவனுடன் ஒரிசாவில வேலை பார்த்த சிறுவனைக் காணவில்லை. அவனை அடித்துகொன்றிருக்கிறார்கள். இந்த சிறுவன்தான் சாட்சி.. சிறார் நீதி சட்டத்தின்படி சிறுவனை காவல்துறையினர் நடத்துகிறார்களா என்று கண்கொத்திப் பாம்பாக பார்த்துகொண்டிருந்தேன்.

இப்படி நிறைய அனுபவங்கள் என்பதால் இவனிடம் பேசுவது பிரயோஜனமாக இருக்கும் என்று கருதி பேச ஆரம்பித்தேன்.

நான் என்னைப் பற்றிச் சொன்னேன். கம்யூனிஸ்ட் கட்சி என்ற உடன் அவன் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. விசாரித்தபோது அவன் அப்பா ஓர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பது தெரிந்தது. ஏதோ ஒர் ‘சங்’ அல்லது சங்கட்டன் என்று சொன்னான். சங்கட்டன் என்பது சங்கடம் இல்லை. சங்கம், போராட்டம் போல ஒன்று என்று எனக்கிருக்கும் ‘சோட்டா சோட்டா’ இந்தி அறிவில் புரிந்தது.

நான் மகிழ்ச்சியோடு அவன் தலையைக் கோதிவிட்டேன். ஐ லவ் யூ என்றேன். அப்புறம் அவனிடமிருந்து விடைபெற்றேன்.

சில நாட்கள் கழித்து மாலை நேரத்தில் திண்டுக்கல் நோக்கிச் சென்றபோது அவனை சின்னாளபட்டியில் சந்தித்தேன். அந்த முக்குக் கடை டீ யும் பகோடாவும் நன்றாக இருக்கும். டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அவனைக் கண்டேன். ‘சாப்..’ என்று கை கொடுத்தான்.

அவன் விற்பனையை முடித்துகொண்டு வந்திருக்கிறான். சைக்கிளை அதற்கான கட்டண நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு பஸ்சில் திண்டுக்கல் போவானாம். சரியென்று அவனைப் பின்னுக்கு ஏற்றிக்கொண்டேன்,

திண்டுக்கல்லுக்கு வெளியே ஒரு காலத்தில் இருந்து, இப்போது நகரத்தால் விழுங்கப்பட்ட எரமநாயக்கன்பட்டியில் அவர்கள் அறை இருந்தது. சீமை ஓடு வேயப்பட்ட இரண்டு அறைகள் கொண்ட வீடு அது. அங்கு அவன் நண்பன் இருந்தான். அவனுக்குத் தமிழ் கொஞ்சம் தெரிந்தது. கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்புறம் நான் புறப்பட்டுவிட்டேன்.

சில மாதங்கள் கழித்து என் செல்போனில் அழைப்பு வந்தது. மனோஜ்தான் பேசினான். அவனுக்கு இன்னமும் தமிழ் வரவில்லை.

‘பேஸனும்’ என்பதுதான் புரிந்தது. சரியென்று யோசித்தேன். அப்புறம், ‘ஆப்கா வாடிப்பட்டி ஜாவுங்கா.. கால் மி’ என்று சொன்னேன்.

‘ஜி ஹாங் என்று பதில் வந்தது. புரிந்துவிட்டது என்று புரிந்துகொண்டேன்,

சில மணி நேரத்தில் வாடிப்பட்டியிலிருந்து அழைத்தான். சென்று அவனை எங்கள் அலுவலகத்திற்கு அழைத்து வந்தேன்.

வீடு ஒன்றின் மொட்டை மாடி மீது போடப்பட்ட கூறையில்தான் எங்கள் அலுவலகம் இருந்தது.

நுழைந்தவுடன், அலுவலகத்தில் இருந்த படங்களையெல்லாம் பார்த்தான். ஒரு குழந்தையின் ஆர்வம் தெரிந்தது.

அப்புறம் அவனிடம் பேசியதிலிருந்து நண்பனிடம் பிரச்சனை என்றும் தனியாக தொழில் துவங்க இடம் பார்ப்பதாகவும் வாடிப்பட்டியில் ஓர் இடம் வேண்டும் என்றும் கேட்டான்.

முழு உரையாடலையும் நான் எழுதினேன் என்றால், அறைகுறை இந்தி, தமிழ், இங்கிலீஷ் என்று பத்து பக்கத்திற்கு எழுத வேண்டியிருக்கும்.

நான் சற்று தயங்கினேன். பணமிருக்கிறதா என்று கேட்டேன். இப்போதெல்லாம் வாடிப்பட்டியில் ஓட்டு வீட்டுக்கே ஆயிரம் ரூபாய் வாடகை பத்து மடங்கு முன்பணம் கேட்கிறார்கள்.

பணமிருக்கிறது என்று அவன் சொன்னான். அதுசரி ‘தமிழ் சோட்டா சோட்டா மாலும்.. சிங்கிள் மேன்.. பிசினஸ் இதர் ஹை?’ என்றேன். அவனுக்குப் புரிந்தது. உங்களுக்குப் புரிகிறதா?

தமிழ் கொஞ்சம் கொஞ்சம் பேசிக்கொண்டு தனி ஆளாக எப்படி இங்கே வணிகம் செய்வாய் என்பதாகக் கேட்டேன்,.

அவன் கட்டை விரலை உயர்த்தி ஏதோ சொன்னான். செய்ய முடியும் என்று சொல்கிறான் என்று எடுத்துக்கொண்டேன்.

அவன் போன பிறகு என்னைத் தோழர்கள் பிடிபிடியென்று பிடித்துவிட்டார்கள்.

‘மதுரையில எந்தக் கடைக்கிப்போனாலும் அது மார்வாடிக் கடையாத்தான் இருக்கு.. நாலு மாட வீதியும் இந்திதான் பேசுது.. நீங்க இந்திக்காரன வாப்பட்டிக்குக் கொண்டுவரப்போறீங்களா?’ என்றார் தோழர் கலா.

அவர் அப்போதுதான் பெண்கள் அமைப்பின் மாநில மாநாட்டை முடித்திருந்தார். அதற்காக பொருள் வாங்கச் சென்றபோது கிடைத்த அனுபவம் அது.

’ஆமாந் தோழரே.. மதுரையில மொத்த வியாரம் எல்லாம் இந்திக்காரனுங்க கைக்கு வந்திடுச்சில்ல’ என்றார் தோழர் சண்முகம்.

இப்படி தலைக்குத் தலை கேள்வி கேட்டார்கள். எனக்கு டெல்லியில் நான் சந்தித்த தெருக்கூட்டுபவர்கள் நினைவுக்கு வந்தார்கள். எனக்கு அவர்கள்தான் பேரணி நடக்கும் இடத்திற்கு வழிகாட்டினார்கள், சில வருடங்களுக்கு முன்பு..

அவர்கள் தர்மபுரியாம். டெல்லியில் அதிகாலை எழுந்து நடந்தீர்கள் என்றால் குப்பைக் கூட்டும் தமிழ்நாட்டவரைப் பார்க்க முடியும்.

அதுமட்டுமா.. மாறன் சகோதரர்கள் டெல்லிக்குள் நுழைந்து மலேசியாவை மடக்கிவிட்டார்கள் என்பதும் என் நினைவுக்கு வந்தது. சிரித்தேன்.

‘ஏஞ் சிரிக்கிறீங்க?’ என்றார் தோழர் கலா கோபமாக.. ‘எதைக்கேட்டாலும் சிரிச்சே மழுப்புறது ஒங்க வேலையாப் போச்சி’, என்று முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

‘சிரிச்சேன்.. ஆனா எங்க மழுப்பினேன்..? தெளிவாச் சொல்றேன். பணம் படைச்சவங்க ஊர் ஊராப் போயி தொழிலை நிறுவுறாங்க…. அந்தந்த மாநில மொதலாளிங்க.. அரசாங்க ஆதரவோட.. அதுபோல உழைக்கிறவங்களும் பொழப்புக்குன்னு வெரட்டப்பட்டு வாராங்க… அவுங்களுக்கு யாரு ஆதரவு..? அரசாங்கமா?’

‘அரசாங்கம் எங்க இதெல்லாம் கண்டுக்குது?’, என்றார் தோழர் முருகேசன்.

‘ஆமா.. மொதலாளிங்க ஓடுராங்க கொள்ளையடிக்க.. தொழிலாளிங்க ஓடி வாராங்க பொழக்க.. குட்டியோண்டு கிராமத்ல இருந்த ஒருத்தோனட ஒலகம் விரிஞ்சு கிட்டே போவுது… மனித சமூகமா..’, என்ற என்னைத் தோழர் முருகேசன் குரல் தடுத்தது.

‘ஆனா கொள்ளதானே நடக்குது?’

‘ஆமா கொள்ளைதான் நடக்குது.. கொள்ளைக்காகத்தான் நடத்தறாங்க. அதே சமயம், ஒழைப்பாளிங்க மதம் கடந்தது சாதி கடந்து மொழிகடந்து எணயறதும் நடக்குது..’ என்றேன்.

அனைவரும் மௌமாகிவிட்டார்கள். ஆனால் ஒப்புக்கொண்டார்கள் என்று தோன்றவில்லை.

‘அவுங்க நோக்கம் கொள்ளையடிக்கிறதுக்காக எணையறது. நம்ம வேளை கொள்ளையடிக்கப்படறவங்கள.. கொள்ளையால பாதிக்கப்பட்டு ஊர விட்டு ஓடுற நெலமைக்கு ஆளானவங்கள எணைக்கிறது… மொதலாளிங்க கொள்ளைக்கு எணக்கிறாங்க நாம கொள்ளைய முடிவு கட்ட எணைக்கிறோம்.. அவுங்கள மூலதனம் எணைக்கிது.. நம்மள உழைப்பு எணைக்கிது…’

‘அப்புடின்னா, இனம் மொழி, தமிழ்நாடு.. அதெல்லாம்?’, என்று கேள்வி எழுப்பினார் தோழர் கலா

‘இன்னிக்கு தமிழ்நாடு இருக்குது.. அதுக்கு முன்னடி குட்டி குட்டி இராஜாக்கள். சமஸ்தானங்கள் இருந்தார்கள். அதுக்கு முன்னாடி, சேர சோழ பாண்டியர்கள் இருந்தார்கள். அதுக்கு முன்னடி சிற்றரசர்களின் நாடுகள் இருந்தன…அதுக்கும் முன்னாடி மனிதக் கூட்டமாக இருந்தார்கள்.. முன்னாடி போறது விரிஞ்சு போறது முற்போக்கு.. மனிதத்தை நோக்கிய பயணம்.. அப்புடியே இருக்க முடியாது.. அப்படியே இருக்க நினைக்கிறதும் பின்னுக்குப் போறதும் பண்டைய காலம் நோக்கிய சரிவு..’

தோழர்கள் மௌனமானர்கள். புரிந்ததா என்று தெரியவில்லை. ’புரிய இன்னும் கொஞ்சம் படிக்கனும் நாளாகும்’, என்று முனகிக்கொண்டேன்.

அப்புறம் மனோஜ் வுந்து சேர்ந்தான். வாடிப்பட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் குல்பிக்காரனாக அறிமுகமானான்.

அவ்வப்போது கட்சிக் கூட்டங்களுக்கு வருவான். முக்கியமான நிகழ்ச்சிகளில் பணம் கொடுத்து உதவுவான். அப்புறம்தான் கவனித்தேன். ஊழியர் கூட்டங்கள் என்று வரும்போது தவறாமல் வந்து கலந்துகொள்கிறான்.

அவன் கட்சி உறுப்பினர் ஆகியிருந்தான். ஆனால், கிளைக் கூட்டம் வரமாட்டான். ஆனால் ஊழியர் கூட்டம் மட்டும் வருகிறானே என்று யோசித்தேன்.

ஓர் கூட்டத்தில் இரகசியத்தைக் கண்டுகொண்டேன். அவன் பார்வை பிரியாவின் மேலிருந்தது..

பிரியா கட்சி உறுப்பினர். அதைக் காட்டிலும் எனக்கு முக்கியம் அவளின் வாழ்க்கை. அவளின் வாழ்க்கைச் சிக்கலால்தான் அவள் கட்சிக்கு வந்தாள்.

16 வயதில் காதல். அவளின் சொந்த சாதிப் பையன்தான். ஊரைவிட்டு ஓடினார்கள். திரும்பிவந்தபோது கர்ப்பமாக இருந்தாள். அப்புறம் அவன் வெறொரு பெண்ணோடு ஓடிப்போய்விட்டான்..

இவள் பெண் குழந்தையோடு அப்பா வீட்டின் தொங்கு சதையாகிவிட்டாள். குழந்தை இப்போது பள்ளி போகிறது. படித்திருந்தும் கீற்று முடைந்துகொண்டு வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு கம்யூனிஸ்ட் கட்சிங்கிறது பெண்களின் கட்சி என்று புரிதல்.

சிக்கலில் மாட்டிக்கொண்டோம் என்றுதான் நான் முதலில் நினைத்தேன். அவள் அப்பாவுக்கு என்ன பதில்சொல்வது. ‘குல்பிக்காரனைக் கொண்டு வந்து என் பெண்ணை வட நாட்டுக்கு அனுப்பினியா என்று சட்டையைப் பிடித்துகொண்டால்..?’

இவன் பிரியாவைக் காப்பாற்றுவானா..? இடையில் கை கழுவி விட்டால் பிரியாவுக்கு என்ன ஆகும்?

இதையெல்லாம் கூட்டம் நடக்கும்போதே நான் யோசித்துக்கொண்டிருந்தேன். அப்புறம்… அப்புறம் பார்க்கலாம் என்று விட்டுவிட்டேன்.

பிரச்சனை நேரடியாக என்னிடம் வந்தது. பிரியாதான் பேசினாள். மனோஜோடு வாழப்போவதாகச் சொன்னாள்.

‘அவன் வட நாட்டுக்காரன்.. ஓடிப்போயிட்டான்னா?’ என்று கேட்டேன்.

‘மாட்டான் தோழரே’ என்றாள் அவள்.

‘எப்புடி சொல்றே.. இதே மாதிரிதான் ஓடிப்போன அந்தப் பையனையும் நெனச்சிருப்ப..?’

அவள் சிறிது நேரம் இருக்கமாக, மௌனமாக இருந்தாள்.. கடந்த காலம், அதன் வடுக்கள் வலி தந்திருக்க வேண்டும்.

அப்புறம் அவள் முகத்தில் வெட்கம் பரவியது. ‘எனக்குப் புள்ள இருக்கிறது அவனுக்குத் தெரியும்… ஆனா.. கவலைப்படல.. யெல்லாரும் என்ன ஒடம்பா பார்த்தாங்க.. அவந்தான் என்ன மனுஷியாப் பார்த்தான்..’ என்றவள் சற்று நேரம் தயங்கினாள். தலையைக் குனிந்துகொண்டாள்..

‘இன்னிக்கு வரைக்கும் என்ன தொடல..’ என்று முடித்தாள்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘எங்கிட்ட இப்புடி பேசுறிய தாயி’, என்றேன்.

’தோழரே.. நீங்கதான் எனக்கு அப்பா.. அப்பாயில்ல தோழரே.. அம்மா என்றாள்.

மனிதர்கள், மனிதர்களை நேசிக்கும் மனிதர்களை நேசிக்கிறார்கள். இரத்த உறவு, பணவுறவுதான் குடும்பம் என்றானபோது, மனிதர்களை நேசிக்கும் மனிதர்கள் உன்னதமானவர்களாக அவர்களுக்குத் தென்படுகிறார்கள். ஆனாலும், கேடுகெட்ட குடும்ப உறவு பொருளியே புரிந்துகொள்கிறார்கள்.

அப்புறம் விறுவிறுவென்று வேலைகள் நடந்தன. மனோஜின் அப்பா அம்மாவை வரவழைக்கச் சொன்னேன். அப்பாதான் வந்தார். ஆபீசில்தான் தங்கினார். கொஞ்சம் பேச்சுவார்த்தை நடந்தது. அப்புறம், ஆபீசிலேயே எளிமையாகக் கல்யாணம் நடந்தது.

மனோஜின் அப்பா போகும் போது என்னிடமிருந்து உபி ஆபீஸ் கட்சி அலுவலக முகவரி வாங்கிக்கொண்டு போனார். அவர் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி இதுபோல இல்லையாம்.

இப்போது என்னுடைய செல்லங்களில் ஒன்றாக, மனோஜின் நிறத்தையும் பிரியாவின் முகத்தையும் கொண்ட பெண் மகவொன்று இருக்கிறது..

பிரியா துடிப்போடு அமைப்பு வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். பெண்கள் பிரச்சனைகளோடு வரும்போது அவள்தான் அவற்றைக் கையாள்கிறாள்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *