இயற்கை எழில் மிகுந்த கிராமம், போச்சம்பட்டி. மாலை நேரம். ‘ஜமீலா கிளினிக்’கில் கிராமவாசிகள் குவிந்திருந்தனர். டாக்டர் முனவ்வர் ஒரு நோயாளிைய பரிசோதித்துக் கொண்டிருந்தார்.
‘‘எல்லோரும் டாக்டருக்கு கொஞ்ச நேரம் கொடுங்க. அவருக்கு இப்ப இப்தார் டைம்…’’ குரல் கொடுத்தபடி வந்தான் முருகன்.இப்தாருக்கு அவர் உண்ண நோன்பு கஞ்சி, உளுந்து வடை, பழங்கள் ஆகியவற்றை தன் வீட்டிலிருந்தே கொண்டு வந்திருந்தான்.
தினமும் அப்படித்தான். ஒவ்வொரு இந்து வீட்டிலிருந்தும் டாக்டருக்கு அதிகாலையில் ஸஹர் சாப்பாடும், மாலையில் இப்தார் விருந்தும் வந்துவிடும். அந்த கிராமத்தில் முஸ்லிம் வீடுகளே கிடையாது. அதனால் மசூதியும் இல்லை.
மாலை மணி ஆறரை. டாக்டர் முனவ்வர், தன்னிடமிருந்த பேரீச்சம் பழத்தை சாப்பிட்டு நோன்பு திறந்தார். பிறகு, முருகனுடைய வீட்டிலிருந்து வந்ததை சாப்பிட்டார். அங்கேயே ஓரத்தில் மக்ரிப் தொழுகையை ஓதி முடித்தார். மறுபடியும் நோயாளிகளை கவனிக்க ஆரம்பித்தார்.
அங்கு பணிபுரியும் நர்ஸ் மஞ்சுளாவிற்கு களைப்பாக இருந்தது. எப்படித்தான் டாக்டர் கொஞ்சமும் சோர்வின்றி சிரித்தபடி ஒவ்வொரு நோயாளியையும் நிதானமாக பார்த்து குணப்படுத்துகிறார் என்று மஞ்சுளாவிற்கு வியப்பாக இருந்தது. இத்தனைக்கும் அவர் வாங்கும் ஃபீஸ் பத்து ரூபாய்தான். சிலரிடம் அதுகூட வாங்கமாட்டார். இன்னும் சிலருக்கோ ஏதாவது கஷ்டம் என்று தெிந்தால் அவரே யாருக்கும் தெரியாதபடி பணம் கொடுத்து உதவுவார்.
அந்த கிராமத்திற்கு அவர் வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. நாளுக்கு நாள் கிராமவாசிகளின் மனதில் அவருடைய மதிப்பு கூடிச் செல்கிறது. சிலர் அவரை சாமி என்று அழைத்து அவருடைய காலில் விழச் செல்வார்கள். டாக்டர் முனவ்வர் அவர்களைத் தடுத்துவிடுவார்.‘‘படைத்தவனை மட்டுமே வணங்க வேண்டும். அவனால் உருவானதை வணங்கக் கூடாது…’’ என்பார்.அன்று கிளினிக் மூட இரவு பத்து மணி ஆகிவிட்டது.
டாக்டர் அந்த சிறிய கிளினிக்கிலேயே தங்கிவிட்டார். மஞ்சுளா தன் வீட்டை நோக்கிச் சென்றாள்.மஞ்சுளா +2விற்குப் பிறகு நர்ஸிங் கோர்ஸ் முடித்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து கொண்டிருந்தாள். அங்கே கம்பவுண்டராக இருந்த சுரேஷைக் காதலித்து திருமணம் செய்து கொண்டாள். இரண்டு குழந்தைகள். மூன்றாவது படிக்கும் கிருஷ்ணா, முதல் வகுப்பில் படிக்கும் உமா.
சுரேஷ் திடீரென ஒருநாள் பைக் விபத்தில் இறந்து போனான். மஞ்சுளாவின் உலகம் இருண்டது. பிள்ளைகளுக்காக வாழவேண்டும், சம்பாதிக்கவேண்டும் என்கிற உறுதியில் நர்ஸ் வேலையைத்தொடர்ந்தாள். அவளுடைய அழகும், இளமையும் சபல புத்தி படைத்த ஆண்களை உறுத்தியது. அதனால் அரசு மருத்துவமனை வேலையை விட்டுவிட்டாள்.
அவள் தன் பிள்ளைகளுடன் மட்டும் திரும்பவில்லை. சுரேஷின் அம்மாவையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு போச்சம்பட்டிக்கு வந்தாள்.
மகனை இழந்த ஜானகி அம்மாள் மனசு ஊனமாகிப் போனது. தன் மகன் சாகவில்லை… அவன் திரும்ப வருவான் என்று நம்பிக் கொண்டிருந்தார். வீட்டை விட்டு வெளியே வராத ஜானகி அம்மா, எப்பொழுதும் சுரேஷின் புகைப்படத்தையே கையில் வைத்து பார்த்துக் கொண்டிருப்பார்.
இரவு நேரம். தென்றலின் ஊஞ்சலில் கிராமம் அமைதியாக ஆடிக் கொண்டிருந்தது.
அதே சமயம், சென்னையில் ஒரு பங்களா. அங்கே தூங்கிக் கொண்டிருந்த டாக்டர் ஸையத் நஸீருத்தீனின் மொபைலில் வாட்ஸ் – அப் மின்னல்.
கண்களைக் கசக்கியபடி படித்தார். ‘‘சொன்னா… நம்ப மாட்டீங்க…’’ என்ற தலைப்பில் அவருடைய நண்பர் அனுப்பியிருந்தார். அந்த குறுந்தகவலில் டாக்டர் முனவ்வரைப் பற்றி முழு விபரம் இருந்தது.டாக்டர் நஸீருத்தீனுடைய தூக்கம் கலைந்தது.
‘‘இப்படிப்பட்ட திறமைசாலி, அங்கே கிராமத்துலே பத்து ரூபாய் வாங்கி என்ன பயன்? அவன் இங்கே வரணும். அவனை எப்படியும் வரவழைப்பேன்…’’அவருக்கு சொந்தமாக சென்னையில் மிகப் பெரிய தனியார் மருத்துவமனை இருந்தது. கோடீஸ்வர நோயாளிகள் கார்களில் வந்துகொண்டே இருப்பார்கள்.அதிகாலை வேளை. டாக்டர் நஸீருத்தீன் குளித்து தயாரானார்.
அவர் மனைவி ஷாஹிதாவிற்கு வியப்பு.‘‘நான் ஆஸ்பத்திரிக்கு போகலே… ஒரு கிராமத்துக்குப் போறேன். அங்க ஒரு திறமைசாலி டாக்டர் பத்து ரூபாய் ஃபீஸ் வாங்கி, ஏழைகளை குணப்படுத்துறானாம். அவனை இங்க கூட்டிட்டு வரப் போறேன். நம்ம ஆஸ்பிடலுக்கு அவன் தேவை. அவன் சம்பளமா லட்ச ரூபாய் கேட்டாலும் தருவேன்!’’‘‘வேண்டாங்க. பாவம் அந்த ஏழை ஜனங்க… என்ன செய்வாங்க?’’‘‘செத்துத் தொலையட்டும். அவங்களுக்கு சிறந்த கல்வி இல்லை. குடிக்க நல்ல தண்ணீர் இல்லை. மின்சாரம் இல்லை, சாலை வசதி கிடையாது. நல்ல டாக்டர் மட்டும் கேட்குதா?’’ டிரைவரை அழைத்து, காரில் ஏறிப் புறப்பட்டார்.
ஜமீலா கிளினிக்கில் கூட்டம் குறைவாகவே இருந்தது. மாலை நேரத்தில்தான் நிறைய பேர் வருவார்கள். டாக்டர் முனவ்வர் சொன்ன பேஷன்டிற்கு ஊசி போட்டாள் மஞ்சுளா. அந்த நோயாளி ஊசியின் வலி தாங்காமல் கத்தவும், வெளியே கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
கார் சத்தம் கேட்டு முனவ்வர் குழம்பினார். இந்த கிராமத்தில் யார் காரில் வந்திருக்கிறார்கள்?
‘‘அஸ்ஸலாமு அலைக்கும்…’’ என்றபடி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட நஸீருத்தின், தான் வந்த நோக்கத்தை முனவ்வரிடம் கூறினார்.
‘‘வாலை…ம் ஸலாம்’’ என்ற முனவ்வர் சற்றுநேரம் கண்களை மூடி யோசித்தார். அவருடைய அம்மா ஜமீலுன்னிஸாவின் முகம் தெரிந்தது.
‘‘போகாதே…’’ என்றாள் அம்மா.‘‘ஸாரி டாக்டர்… எனக்கு சென்னைக்கு வர விருப்பம் இல்லை…’’‘‘அவசரப்பட்டு மறுக்காதே… நீ எவ்வளவு பணம் கேட்டாலும் தரேன். யோசிச்சு முடிவு எடு…’’சற்று தள்ளி நின்று, இதையே பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சுளா.
அந்த நேரம் பார்த்து இருமியபடி ஒரு வயசான நோயாளி வந்தார், நஸீருத்தீனை பொருட்படுத்தாமல் அந்த நோயாளியை பார்த்தார் முனவ்வர்.
இது நஸீருத்தீனுக்கு அவமானமாக இருந்தது. முனவ்வர் ஒரு சீட்டில் மருந்துகளின் பெயரை எழுதினார்.
அதையே உற்று கவனித்தார் ஸையத் நஸீருத்தீன். அவருக்கு பொறி தட்டியது.‘‘இந்த மருந்தை நர்ஸ் கிட்டே வாங்கிக்குங்க…’’
முனவ்வரின் கையெழுத்து இவ்வளவு தெளிவாக இருக்கிறதே… ஒரு டாக்டர் இப்படி எழுதமாட்டாரே..?யோசித்தவர் சட்டென ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். முனவ்வருக்கு ஒன்றும் புரியவில்லை. பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார்.
‘‘டாக்டர் முனவ்வர், நீங்க எந்த மருத்துவக் கல்லூரில படிச்சீங்க?’’முனவ்வர் நிலை குலைந்தார்.
‘‘பரவாயில்லை. MYOCARDIAL INFARCTION என்றால் என்ன?’’
முனவ்வருக்கு வேர்த்தது. மஞ்சுளா தலை குனிந்தாள்.
‘‘நான் சொன்னதற்கு அர்த்தம் மாரடைப்பு. இதுவே தெரியலேன்னா மாரடைப்பு ஏற்பட்டவரை எப்படி காப்பாத்துவீங்க..? நீங்க டாக்டர் கிடையாது. போலி! சென்னைக்கு வர நீங்க மறுத்ததற்கு இதுதான் காரணம். லட்சியம் புண்ணாக்கு எதுவும் கிடையாது. நீங்க இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. கூடிய சீக்கிரம் போலீசார் வருவாங்க. தயாரா இருங்க…’’ காரில் ஏறி புறப்பட்டார் ஸையத் நஸீருத்தீன்.
முனவ்வரையே பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சுளா.‘‘அவர் உண்மைதான் சொன்னார் மஞ்சு. நான் போலி டாக்டர்தான்… இதை உன்னிடமோ இந்த ஊர் மக்களிடமோ என்னைக்காவது சொல்லணும்னு நெனச்சேன். எங்கே உங்க அன்பை இழந்து மறுபடியும் அனாதை ஆயிடுவோமோன்னு பயந்து சொல்லலே…’’‘‘அப்ப நீங்க யார்? இங்கே எதுக்காக வந்தீங்க?’’
காரில் போகும்போதே அலைபேசியில் பிஸியாகிவிட்டார் டாக்டர் ஸையத் நஸீருத்தீன். முதலில் சென்னை அரும்பாக்கத்தில் இருக்கும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு பேசினார். டாக்டர் முனவ்வரைப் பற்றி விசாரித்தார்.‘‘அப்படி எந்த டாக்டரும் இங்கு பதிவு செய்யவில்லை…’’
அவர்கள் மூலம் போலீசாருக்கு புகார் தரப்பட்டது.‘‘மஞ்சு, எனக்கு அப்பா கிடையாது. அம்மா ஜமீலுன்னிஸாதான் பல வீடுகளில் வேலை செய்து என்னை படிக்க வைத்தாள். நான் பத்தாவது படிக்கிறப்ப அம்மாவுக்கு காசநோய் வந்தது. நல்ல மருத்துவரிடம் காட்ட வசதியில்லை. அரசு மருத்துவமனைல அலைக்கழிச்சு அம்மாவை சாக விட்டாங்க.
பத்தாவதில் நல்ல மதிப்பெண் எடுத்து +2 வில் சேர்ந்தேன். எப்படியாவது டாக்டராகணும்னு ஆசை. பணக்காரனுக்கு மட்டுமே கிடைக்கும் சிகிச்சை ஏழைக்கும் கிடைக்கணும்னு ஆசைப்பட்டேன். +2 வில் நல்ல மதிப்பெண் எடுத்தும், எந்த மருத்துவக் கல்லூரியிலும் எனக்கு சீட் கிடைக்கலே. குறைஞ்ச மார்க் எடுத்த பணக்காரப் பசங்க மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துட்டாங்க. அரசியல் செல்வாக்குள்ளவர்கள் டாக்டராக மார்க் தேவைப்படலே. ஆனால், எனக்கு சீட் கொடுக்க லட்சக் கணக்கில் பணம் கேட்டார்கள்.
டாக்டருக்கு படிக்கும் ஆசையை மூட்டை கட்டிட்டு வேலைக்கு சேர்ந்தேன். வயிற்றுக்கு சோறு கிடைத்தது.கொஞ்சநாள் இரத்தப் பரிசோதனை நிலையத்தில் வேலை பார்த்தேன். டாக்டர் ஒருவரிடம் கம்பவுண்டராக இருந்தேன். மருந்துக் கடையில் பணிபுரிந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நான் டாக்டராக மாறிக் கொண்டிருந்தேன். நோய்க்கு சிகிச்சையளிக்க பணமின்றி என் தாய் இறந்த மாதிரி எந்த ஏழையும் சாகக் கூடாது என்றுதான் உங்க ஊருக்கு வந்தேன்…’’முனவ்வர் சொன்னதைக் கேட்டு, மஞ்சு தவித்தாள்.
‘‘எனக்கு அம்மா ஞாபகம் வருது. அவங்களும் ரம்ஸான் மாதம்தான் இறந்தாங்க. உங்க வீட்டுக்கு போகலாமா? உங்க அம்மாவைப் பார்த்தா எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்…’’அவள் சம்மதித்தாள். பழங்கள், பிள்ளைகளுக்கு சாக்லேட், பிஸ்கெட் என்று வாங்கிக் கொண்டார் முனவ்வர்.
அவரைப் பார்த்ததும் கிருஷ்ணா, உமா ஓடி வந்து ‘‘அங்கிள்… அங்கிள்…’’ என்று ஒட்டிக் கொண்டனர்.ஜானகி அம்மாவிடம் தயங்கியபடி, ‘‘டாக்டர் வந்திருக்கார்…’’ என்றாள் மஞ்சு.
மெல்ல நடந்து வந்து முனவ்வரை பார்த்தார் ஜானகி அம்மாள். ‘‘மஞ்சு, பொய்தானே சொன்னே..? இவன் டாக்டர் கிடையாது..!’’
அவர்களுக்கு அதிர்ச்சி.அம்மாவின் கண்கள் கலங்கின. தன் கைகளால் முனவ்வரின் முகத்தை ஏந்தி நெற்றியில் முத்தமிட்டாள். ‘‘இவன் என் பையன்! நான் சொல்லலை,அவன் சாகலே… என்னைத் தேடி வருவான்னு! சாப்பிட்டியாப்பா?’’ ஜானகி அம்மா கேட்டதற்கு அழுகையை மறைத்தார்
முனவ்வர்.வெளியில் அரவம். ஒரு போலீஸ் ஜீப்பும், இன்னொரு வேனில் ஏராளமான போலீஸ்காரர்களும் வந்து இறங்கினர்.
மஞ்சு வீட்டிற்குள் நுழைந்த ஒரு போலீஸ்காரர் முனவ்வரின் சட்டையைப் பிடித்தார்.
அந்த போலீஸ்காரர் முகத்தில் ஓங்கி அறைந்தாள் ஜானகி அம்மா. ‘‘யாரு மேலடா கையை வைக்கிறே… உன் கையை வெட்டிருவேன்! என் மகன்டா இவன்…’’
‘‘மஞ்சு… அம்மாவை பார்த்துக்க… ஸாரி ஸார், வாங்க போகலாம்…’’
வெளியே விஷயம் பரவி, கிராமவாசிகள் கூடிவிட்டனர். முனவ்வரைச் சுற்றி அரணாக நின்றனர்.
‘‘தயவுசெய்து என்னை போகவிடுங்க. என் மீது நீங்க வச்ச அன்பு உண்மையானது என்றால், நான் மீண்டும் வருவேன். ஏதோ ஒரு ரூபத்தில்…’’
பதினைந்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட முனவ்வர், பிறகு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.
டாக்டர் ஸையத் நஸீருத்தீன் சார்பில் பிரபல வக்கீல் சேஷாத்ரிவாதாடினார். முனவ்வருக்காக ஹரி என்கிற இளைஞன்,போச்சம்பட்டியைச் சேர்ந்தவன்.‘‘டாக்டர் நஸீருத்தீன், ஒரு வாதத்திற்காக முனவ்வர் போலி டாக்டர் என்றே வைத்துக் கொள்வோம். அவர் சிகிச்சையளித்து யாராவது இறந்திருக்கிறார்களா? வெறும் பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு ஏழைகளை குணப்படுத்தித்தானே இருக்கிறார்? அவரைப் பற்றி கிராமவாசிகள் யாராவது புகார் செய்தார்களா? உங்களைப் போன்ற டாக்டர்கள் நகரங்களில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறீர்கள்.
கிராமங்களுக்கு வந்து ஏழைகளுக்கு சேவை செய்கிறீர்களா? லட்சக்கணக்கில் பிடுங்கியும், உங்களால் சிகிச்சையளிக்கப்படும் நோயாளிகள் சாகிறார்களே? அது மரணமா? கொலையா?’’ டாக்டர் நஸீருத்தீன் திணறிப்போனார். எல்லார் முன்பும் அவமானப்பட்டு… ரத்த அழுத்தம் கூடியது. மூச்சுவிட சிரமப்பட்டார். வியர்த்துக் கொட்டியது. அப்படியே மயங்கி விழுந்தார். கோர்ட் வளாகமே பரபரப்பானது. ஆஸ்பத்திரிகளுக்கு அலைபேசியில் அழைப்புகள் பறந்தன.
‘‘போக்குவரத்து நெரிசல்… ஆம்புலன்ஸ் வர ஒரு மணி நேரம் ஆகும்…’’கோர்ட்டுக்கு அருகேயும் எந்த ஆஸ்பத்திரியும் கிடையாது.
‘‘ஐயா… எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். இவரை காப்பாத்தறேன்…’’ நீதிபதியிடம் சொன்னார் முனவ்வர்.
‘‘நோ யுவர் ஆனர். இதற்கு சம்மதிக்காதீர்கள். இவரே ஒரு போலி டாக்டர். இவரை கைது செய்ய வைத்ததற்கு பழிவாங்க முயற்சிக்கலாம்…’’ என்றார் சேஷாத்ரி.ஆனால், நஸீருத்தீனின் மனைவி ஷாஹிதா, சேஷாத்ரியிடம் கெஞ்சினாள். ‘‘இப்ப சண்டை வேணாம். எப்படியாவது அவரைக் காப்பாத்துங்க…’’சேஷாத்ரி, முனவ்வரை நெருங்கி கேட்டார்.
‘‘எப்படி காப்பாத்துவீங்க டாக்டர் ?’’
‘‘CPR மூலமாக முயற்சி பண்ணலாம்.’’
‘‘அப்படின்னா?’’
‘‘CARDIO PULMONARY RESUSCITATION…’’
சேஷாத்ரிக்கு அதிர்ச்சி. நீதிபதிக்கு வியப்பாக இருந்தது. ‘‘ஓகே டாக்டர். உங்களுக்கு ஒரு வாய்ப்பு தரேன். ஆனால், நீங்கள் ஒரு போலி டாக்டர் என்று உங்கள் கையால் எழுதிக் கொடுங்கள்…’’ என்றார் சேஷாத்ரி.முனவ்வர் தடுமாறினார். கிராமவாசிகளைப் பார்த்தார். தன் அம்மா ஜமீலுன்னிஸாவின் நினைவு வந்தது. பணமில்லாமல் செத்துப்போன அவளுக்கு, பணமிருந்தும் சாகப் போகிற இவரைக் காப்பாற்றுவதுதான் பிராயச்சித்தம்…
முனவ்வர், சேஷாத்ரியிடம் சொன்னார். ‘‘பேப்பரும், பேனாவும் கொடுங்க…’’அவர் சொன்னமாதிரி எழுதிக் கொடுத்தார். சேஷாத்ரி முகத்தில் மகிழ்ச்சி.
டாக்டர் ஸையத் நஸீருத்தீனை நெருங்கி அவரை தன் மடியில் கிடத்திக் கொண்டார் முனவ்வர்.பின்னர் அவர் நெஞ்சில் ஓங்கிக் குத்தி, வாயுடன் வாய் வைத்து மூச்சை விட்டார். சிறிது நேரத்தில் டாக்டர் ஸையத் நஸீருத்தீன் கண் விழித்தார். கண்ணீருடன் நன்றி கூறினாள் ஷாஹிதா.
‘‘மேடம், இப்போதைக்கு எந்த மருந்தும் கொடுக்காதீங்க. இதை கோல்டன் அவர் என்று சொல்வார்கள். உடனே அவரை ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுங்கள்…’’
முனவ்வர் எழுதிக்கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிபதியிடம் தந்தார் சேஷாத்ரி.தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.பத்து நாட்கள் கழிந்திருக்கும். அன்று கடைசி நோன்பு. சிறையிலும் நோன்பை விடவில்லை முனவ்வர்.மறுநாள், பெருநாள். யாரோ பார்க்க வந்திருப்பதாக அவரிடம் சொன்னார்கள்.
டாக்டர் ஸையத் நஸீருத்தீன்!
‘‘முனவ்வர்… உனக்கு ஏதாவது உதவி செய்யணும்னு நினைக்கிறேன். என்ன வேணும்னு கேளு…’’
‘‘எனக்கு எதுவும் வேண்டாம் டாக்டர் ஸாப்… முடிஞ்சா போச்சம்பட்டிக்கு உதவி செய்யுங்க…’’
‘‘ஒவ்வொரு முறையும் நான் உன்னை ஜெயிக்க நினைக்கிறேன். ஆனா, நீ என்னை தோற்கடிச்சுடறே!’’
சிரித்த ஸையத் நஸீருத்தீன் அவரை ஆரத் தழுவி, ‘‘ஈத் முபாரக்!’’ என்றார்.
– ஜூலை 2019