ஜனனம், மரணம், மீண்டும் ஜனனம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 24, 2020
பார்வையிட்டோர்: 5,698 
 
 

முத்து முடிவு செய்து விட்டார். தன்னை முடித்துக் கொள்வதென்று. இனி இந்த ஒவ்வாத உலகத்தின் உபாதைகள் தனக்கு வேண்டாம். தற்கொலை தான் தீர்வு.

தனக்கு, தனது தாளாத துயரங்களுக்கு என்று ஒரு தன்னிலைப் பாட்டிற்கு வந்து விட்டார்.வீட்டில் நிதி நிலை சரியில்லை. தனக்கு உடல் நிலை சரியில்லை.

நாட்டில் பொருளாதாரம் சரியில்லை.. மகன் சரியில்லை. மனைவியும் சரியில்லை.. இந்த கொரோனாவால் , நாட்டில், முழு அடைப்பு . கோவில் , குளம் , டாக்டர் , ஆஸ்பத்திரி என்று கூட வெளியில் போகமுடியாமல், அவதி.

ஏற்கெனெவே எழுவது வயது பிரச்னைகள், கூடவே ரத்த கொதிப்பும், சர்க்கரை வியாதியும் !! போனசாக இப்போது சளி, இருமல், ஆஸ்த்மா.

“ஐயோ, இப்போது கொரோனாவும் வந்து விட்டால், நம் கதி அதோ கதி தான்.

அதை விட, பேசாமல், மண்டையை போட்டு விடலாம். நிம்மதியாக.

மற்றவருக்கும் நிம்மதி”

முத்து முடிவுக்கு வந்து விட்டார். மனைவியும் , கல்யாணமாகாத மகனும் , அவர் அவர் அறையில் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஏ.சி அறையில்.

முத்துவிற்கு ஏசி ஒத்துக் கொள்ளாது. அதனால், ரொம்ப நாளாகவே அவருக்கு தனி அறை.வீட்டில், தனக்காக வாங்கி இருக்கும் இரண்டு மாத ஸ்டாக் , ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, தூக்க மாத்திரை அத்தனை மருந்துகளையும், ஒன்றாக பொடி செய்து, தண்ணீரில்கரைத்து குடித்து விட வேண்டியது தான். பின்னர், ஒரு கத்தி எடுத்து, கை நரம்பை வெட்டி , ரத்தம் சொட்ட சொட்ட,ஒரு பக்கெட் தண்ணீரில் கையை விட்டு விட வேண்டும். ரத்தம் உறையாது, தூக்க மாத்திரையால், நரம்பு வெட்டப் பட்ட வலியே தெரியாது. கட்டாயம் மீளாத தூக்கம் தான். மரணம் தான்..! விடுதலை, விட்டது தளை. முடிந்தது இத்துடன் கதை.!

முத்து , தன் மாத்திரை டப்பாவை எடுத்து, அத்தனை மருந்துகளையும் மாத்திரைகளையும் ஒன்றாக பொடி செய்தார். கூடவேஅறுபது தூக்க மாத்திரைகள். தன் சாவுக்கு தாராளமாக போதும். அதையும் சேர்த்தார். வாயில் போட்டார், தண்ணீர் குடித்தார். மீதி மாத்திரைகளையும் விழுங்கி, தண்ணீரை மடக் மடக் என விழுங்கினார். பின்னர் ஒரு கத்தி கொண்டு, தனது இடது கை நரம்பை துண்டித்தார்.

ரத்தம் சொட்டியது! இல்லை இல்லை, கொட்டியது. நேரே தண்ணீர் பக்கெட்டில் கையை விட்டு , சாய்ந்து கொண்டார். அது தான் அவருக்கு தெரியும்.

மெதுவாக கண்களை இருட்டியது. அப்பா ! நிம்மதி ! இனி நோய் இல்லை,

நொடி இல்லை, நிரந்தர தூக்கம் ! மரணம் …

***

யாரோ தன்னை தட்டி எழுப்பியது போல இருந்தது.முத்துவின் மனைவி தான்,

“ எழுந்திருங்க ! நேரமாச்சு ! பல் தேச்சுட்டு, கீழே போய், பால், பேப்பர் எடுத்து கிட்டு வாங்க! நான் அதுக்குள்ளே காபி போட்டு வைக்கிறேன் “

முத்து சிரித்துக் கொண்டார். அட இது வெறும் கனவா ? இது ஜனனம்

(கனவு உலகிலிருந்து .விழிப்பு நிலைக்கு வந்ததும் ஒரு வகை ஜனனம் தானே!!)

***

முத்துவின் கதையை எழுதி முடித்தார் ஆசிரியர் கதிரவன்..

தனது மன வலியை, உள்ளக் குமுறலை, அடிக்கடி இப்படித்தான் கதை எழுதி குறைத்துக் கொள்ள முயல்வார். “அப்பாடா, இப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது.”

மன வேதனையை மறக்க, குறைக்க , சிலர் ஆன்மிகத்தில் இறங்குவார்கள். . குடி, தூக்க மாத்திரை என்று சிலர். சிலர் ஜாதக கட்டுடன் ஜோசியரை பார்க்க செல்வார்கள்..அவர் சொல்லும் பரிகாரங்களை செய்ய அலைவார்கள்.பலர் . “இறைவனே சரண் “ என்று அறை குறை நம்பிக்கையோடு , கோவில் குளம் என்று செல்வார்கள்.சிலர் குடிக்கு, போதைக்கு அடிமையாவார்கள். , தாங்க முடியாமல் தற்கொலையும் செய்து கொள்ளமுயல்வார்கள்.சிலர்.

தன் மனச் சுமையை குறைக்க , ஆசிரியர் கதிரவன் மேற்கொண்ட கொண்ட வழி இது, கதை எழுதுவது. ! இது ஒரு வடிகால் தான் . . தற்கால நிவாரணம்!

கதைக்கு “ மரணம் “ என்று பெயரிட்டார். தனது நண்பர், ஈ மைலுக்கு தனது குட்டிக் கதையை அனுப்பி விட்டார், பதிவிடக் கோரி! நாகராஜன் ஒரு ஆன்லைன் பத்திரிகை ஆசிரியர்.

கதிரவனுக்கு இன்னும் கதையில் முழு திருப்தி ஏற்படவில்லை. கொஞ்சம் யோசனை பண்ணி, கதையை மாற்ற வேண்டும் . இருக்கட்டும், கொஞ்சம்

காற்றாட மாடியில் நடந்து விட்டு, மாற்றி எழுதலாம்..

அங்கே இங்கே, வலையில் சுட்டு, கதையில் இன்னும் நிறைய சேர்க்கலாம்.

சஸ்பென்சை, கொஞ்சம் நகைச்சுவையை கோக்கலாம். யாரும் எதிர்பார்க்காத முடிவை கதையில் இணைக்க பார்க்கலாம் . பின்னர் திரும்ப நண்பருக்கு பதிவிட அனுப்பலாம். கதை அருமையான கரு. நிச்சயம் பதிவாகும் .தன்னைத்தானே, தனது கைக்கு எட்டாத தன் நடு முதுகில் தட்டிக் கொண்டார். !

யோசனையோடு, தனது கணினியை அணைத்து விட்டு. தனது வீட்டு மொட்டை மாடிக்கு வந்தார். மொட்டை மாடி தரை , ஈரமாக இருந்தது.

“அடேடே, மழை பெய்து இருக்கிறது போலிருக்கிறதே.! ரோடு எப்படி இருக்கிறது பார்க்கலாம் ? “

கைப்பிடி சுவரை பிடித்துக் கொண்டு வீதியை எட்டிபார்த்தார். அவரோடு கூடவே , அவரது விதியும் தரையை எட்டிப் பார்த்தது.

நாற்பது வருட வீடு. மொட்டை மாடி, ஒற்றை கல் கைப்பிடி. இவரது தொண்ணூறு கிலோ எடையை தாங்க முடியாமல், ஈரமான கைச்சுவர் உடைந்தது. கதிரவன் வழுக்கி விழுந்தார் எந்த தடையுமின்றி. இரண்டாம் மாடியிலிருந்து தலை குப்புற தரையில் வந்து விழுந்தார் .அவர் மண்டை உடைந்து உடனே கதிரவன் உயிர் பிரிந்தது. இது ஒரு மரணம்!

***

கதிரவன் நண்பரின் (நாகராஜன்) ஈமெயில். அதில் கதிரவனின் குட்டிக் கதை “மரணம்” பார்வைக்காக காத்துக் கொண்டிருந்தது. அதை அசிரத்தையாக படித்தார் , கதிரவனின் நண்பர், நாகராஜன், இணைய தள எடிட்டர் .

“குப்பை ! , என்ன எழுதறாங்க இவங்க ! எவன் படிப்பான் இந்த மாதிரி கதையை, கொஞ்சம் கூட, காதல், ஊடல், ஓடல், கொலை இப்படி எதுவும் இல்லாமல் ?” என்று கோபமாக கதையை தன் கணினியிலிருந்து அழித்தார்.

சம்பவித்தது , மீண்டும்அந்த கதையின் ” மரணம்”

***

ஒரு மாதம் கழித்து.:

“ அம்மா,! அப்பாவுடைய கணினியை என்ன பண்ணட்டும்? அரத பழசு கணினிமா. இதிலே , அவர் பாஸ் வோர்டு வேற போட்டு இருக்கார்.” .

இறந்து போன கதாசிரியர் கதிரவனின் மகன் கேட்டான் .

கதிரவனின் மனைவி,“ அது ஒன்னுத்துக்கும் பிரயோசனம் இல்லேடா.

பேசாம பீரோ மேலே போட்டு வை.பின்னாடி பாத்துக்கலாம். இப்போ கிளம்பு.

அப்பாவோட பேங்க் அக்கௌன்ட்டை க்ளோஸ்” பண்ணி, பணத்தை எடுக்கணும், பாங்க்லே கூப்பிட்டுருக்காங்க ! “

இது கணினியின் ‘மரணம்’ . கூடவே, போனசாக கதையின் மரணமும் கூட.

***

ஓரு ஆறு மாதம் கழித்து எனது அத்தை வீட்டில், எதேர்ச்சையாக , பழைய கணினி ஒன்றை பரண் மேல் பார்த்தேன். “அத்தை இந்த லேப்டாப் யாருது?

அத்தை சொன்னாள் “ வேறே யாருது , உங்க மாமாவுதுதான். ஒன்னுத்துக்கும் உபயோகம் இல்லன்னு தூக்கி பரண் மேலே போட்டிருக்கோம். நீ தான் எஞ்சினீர் ஆயிற்றே. அது வேலை செய்யுதான் , கொஞ்சம் பாரேன் ? “

நான் அந்த லாப்டாப்பை தூசி தட்டி திறந்தேன். பாஸ்வோர்ட் கேட்டது அந்த கணினி . எனக்கு தெரியாத ட்ரிக்கா? மாமாவின் மேஜை டிராயரில், ஒரு நோட்புக்கில், முதல் பக்கத்திலேயே அவரது கணினி பாஸ்வோர்ட், ஏடிஎம் பின், ஈமெயில் பாஸ்வோர்ட் முதற்கொண்டு எல்லாம் அழகாக எழுதியிருந்தது.

பாஸ்வோர்ட் கொண்டு லேப்டாப்பை திறந்தேன். கண்ணில் பட்டது ‘மரணம்” கதை. உடனே படிக்க ஆரம்பித்து விட்டேன் .இது மரணத்தின் மீண்டும் ஒரு ஜனனம்.

கதையை படித்து முடித்து விட்டு, சோம்பல் முறித்தேன்./ கேவலமான கதை . அப்போது அறையில் ஏதோ அரவம் கேட்டு தலையை நிமிர்த்தினேன்.யாரோ தொண்டையை செருமுவது போல தோன்றியது. புகை போல ஒருஉருவம் எதிரே நின்று கொண்டிருந்தது.

ஒரு நிமிஷம் ஷாக் ஆயிட்டேன். பின்னர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அந்த அருவத்திடம் கேட்டேன்.

“யார் நீங்க? இந்த அறைக்கு எப்படி வந்தீங்க ?”

“நானா ? உன் மாமா கதிரவன் நீ இப்போ படிச்சியே , அந்த கதை ஆசிரியர். ‘பிரேத ஜென்மமாக ‘ அலைந்துகொண்டிருக்கிறேன்! .மீண்டும் இந்த உலகத்தில் பிறக்க வேண்டும் ! கதைகள் எழுத வேண்டும். அதற்காக வைட்டிங்! . என் கதையை நீ படிப்பதை பார்த்து, அட என் கதையை யார் படிக்கிறார்கள்என்று தெரிந்து கொள்ள உள்ளே வந்தேன்” -அந்த அருவம், ஆசிரியர் கதிரவன் சொன்னது (சொன்னார்)!

எனக்கு ஆச்சரியம்! ‘என்ன இது, எல்லோரும், இந்த உலக வாழக்கை வேண்டாமெனத் தானே சொல்வார்கள். இவர் ஏன் மீண்டும் பிறக்க வேண்டும் என்கிறார் ?’

நான் கதிரவனிடம் கெட்டேன் “ மேலுலகம் போக உங்களுக்கு தடை என்ன ? ஏன் இப்படி இந்த உலகத்தையே சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?”

கதிரவன் சொன்னார் : “ அதை ஏன் கேட்கிராய் ரங்கா !! இறந்த பிறகு தேவ லோகம் போனேனா ? அங்கே என்னை திருப்பி விட்டார்கள் ! முதலில், நரக லோகம் போய், உன் பாவங்களை கழுவிக்கொண்டு, அப்புறம் இங்கு வா என்று தள்ளி விட்டார்கள்!”

எனக்கு வியப்பு ! இது என்ன புதுக் கதை ? எனக்கு தெரிந்து கொள்ள ஆவல்! “ நான் கெட்டேன் ! “அப்புறம் என்ன ஆச்சு ?”

கதிரவன் ஆவி தொடர்ந்தது

“ நரக லோகம் போனேன் ! அங்கேயும் என்னை அனுமதிக்க வில்லை. இறந்த பிறகு, இங்கு வந்தும் உனக்கு கதை சொல்ல ஆசை , பற்று விட வில்லை.

அதனால், மீண்டும் பூலோகத்தில்பிறந்து, உன் ஆசைகளை அனுபவித்து விட்டு, அப்புறம் வா ! என்று அனுப்பி விட்டார்கள்.

இப்போது ஒரு உடலுக்காக அலைகிறேன். மீண்டும் பிறந்து, ஒரு கதாசிரியனாக என் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அப்போது, அந்த ஜன்மத்தில், புதிய ஆசைகள் ஏற்பட்டால், அவை நிறைவேறாவிட்டால், மீண்டும் மீண்டும் ஜனனம் எடுக்க வேண்டும் . ஜனனம் பின் மரணம். பின் மீண்டும் ஜனனம்! முடிவே இல்லை இதற்கு !”

ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் பாடலில் சொன்னது போல்,“ புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜடரே சயனம் இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே”

“மீண்டும் ஜனிப்பது, மீண்டும் மரணமடைவது, திரும்ப திரும்ப மாதாவின் கர்ப்ப பாத்திரத்தில் கிடப்பது என மாறி மாறி வரும். இந்த நிலையை(ஸம்ஸார சாகரத்தை கடப்பது என்பது (என்னால்) இயலாத காரியம்.” என்று அவர் சொன்னார்.

நீயே சொல்லு ரங்கா ! , ஆதி சங்கருருக்கே முடியாத காரியம், இந்த கதிரவனால் மட்டும் எப்படி முடியும் !! இந்த மனித ஆசைகளுக்கு பஞ்சமேது? இனி வரும் ஜன்மங்களில், எனக்கு என்ன என்னஆசைகள் வரப் போகிறதோ, தெரியவில்லை .

எனக்கு நிறைய நிறைவேறாதஆசைகள்.நடிகனாக ஆசை, அரசியல் வாதியாக ஆசை, புகழுக்கு ஆசை, பணக்காரனாக ஆசை, இதெல்லாம் வரலாம் ! இச்சைகளுக்கு ஏது முடிவு ? நான் மீண்டும் மீண்டும் ஜனிக்க தான் வேண்டும். மீண்டும் மீண்டும், இந்த சம்சார கடலில் அலையத்தான் வேண்டும். “

கதிரவன் கதை போல் சொல்லி முடித்தார். எனக்கு புரியவில்லை, நான் கேட்டேன் :

“அப்படி என்றால்,இதற்கு என்ன தான் வழி ? விடிவேகிடையாதா? இந்த பிறவியிலிருந்து விடுபடுவது எப்படி ?”

கதிரவன் கொஞ்சம் யோசனை பண்ணினார் . “ அது தான் தம்பி எனக்கும் தெரியவில்லை . நீ கேட்டதால் ,எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் !!

இந்த ஜன்மத்தில், ஆசை, பற்றை விட்டு விட வேண்டும் !. ஆதி சங்கரர் சொன்னது போல, , இறைவனை பற்றிக் கொள்ள வேண்டும் சங்கரர் சொன்னது போல “க்ருபயா பாரே பாஹி முராரே” என்று ஆசைகளை, இச்சைகளை விட்டு துறந்து, பற்றற்ற நிலையில், இறைவனை இடைவிடாது நினைக்க வேண்டும் . முனைய வேண்டும் . அப்போது தான் இந்த சம்சார சுழலிலிருந்து , மாயையிலிருந்து விடுபட முடியும் ! “

எனக்கு தோன்றியது : “ சரி மாமா , நான் முனைகிறேன் என்றே வைத்துக் கொள்வோம். அதில் நான் வெற்றி பெற வில்லையென்றால் என்ன ஆகும் ? நான் மீண்டும், அடுத்த பிறவியில் இந்த சம்சார சுழலில் மாட்டிக் கொள்ள வேண்டியது தானா?”

கதிரவன் ஆவி சிரித்தது . : “உன் கேள்வி நியாயம் தான் ரங்கா!!. இதே கேள்வியைத்தான் அர்ஜுனனும் கீதையில் கேட்டான். அதற்கு கண்ணன் என்ன சொன்னான் தெரியுமா ?”

“என்ன சொன்னான் ?”

“கதிரவன் ஆவி சொன்னது “ நீ யோக நிலையில், இச்சைகளை துறந்து பற்றற்று ,இருக்க முயற்சி செய்தும், இந்த ஜன்மத்தில் , அந்த முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் , உனது மரணத்திற்கு பிறகு, நீ ஒரு நல்ல குடும்பத்தில் மீண்டும் பிறப்பாய். உனது பெற்றோர் நல்லவர்களாகவும், செல்வந்தராகவும் இருப்பர். அந்த பிறவியில் நீ உன் யோக முயற்சியை தொடர்வாய். இப்படியாக பல நல்ல பிறவிகளை எடுத்து பின் இறுதியில் என்னை வந்து அடைவாய்.” ( கீதா பாகம் 6- சுலோகம் 40 – 45) .

நான் கேட்டேன் “ சரி நான் இந்த ஜன்மத்தில் பாவங்களை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், என்ன ஆகும் ?”

கதிரவன் ஆவி சிரித்தது “ என்ன ஆகும் ? பூர்வ ஜன்ம பலன்களால்,நல்ல குடும்பத்தில் பிறந்த நீ, , தவறுகளை மீண்டும் மீண்டும் இழைப்பாய். உனது பிறவிகள் உன்னை உயர்த்தாது. இச்சைகள் அதிகமாகும். மேலும் பாவங்கள் செய்வாய். அதனால், . மீண்டும் மீண்டும், பிறப்பாய், மீண்டும் மீண்டும் துயரம், மேலும் துயரம் ! ஆதி சங்கரர் சொன்னது போல் மாயச்சுழலில் மாட்டிக் கொள்வாய்!

ஐயோ ! அப்படியென்றால் என் கதி ? நான் நல்லவனா? கெட்டவனா?

பிரேத ஜன்ம கதிரவன், என் உள்ள எண்ணங்களை புரிந்து கொண்டு சொன்னார் :“ நீ நினைப்பது சரி தம்பி !இன்றைய தேதியில் , நீ நல்லவனும் இல்லை , கெட்டவனும் இல்லை . ஆனால் உன் ஆசைகள் உன் வாழ்க்கையை மாற்றி விடும். எனவே இப்போதே ,உன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள். அதுதான் ஒரே வழி . ”

கதிரவன் தொடர்ந்தார். “யோக முனிவர் பதஞ்சலி , அவரது யோக சூத்திரத்தில் கடைத்தேற வழி “பிரத்யாஹாரா” என்று சொல்கிறார். . இறைவனை அறிதல், தன்னை அறிதல், என்று 180 டிகிரி உள்நோக்கி திரும்பி, வெளி உலக இன்பங்கங்களை புறக்கணிப்பது. சம்சார சாகரத்தை கடக்க, ஒரு படி அல்லவா ?

இதையே தான் கீதையும் சொல்கிறது : “வேற சிந்தனை இல்லாமல் என்னையே சிந்திக்கும் அன்பருக்கு அவர்களுடைய நித்ய கர்மங்களை எல்லாம் நானே கவனித்துக் கொள்கிறேன்” . என்கிறார் கண்ணன் கீதையில்.

“அனன்யாஸ் சிந்த யந்தோமாம் யே ஜனா பர்யுபாசதே தேஷாம் நித்யாபி யுக்தானாம் யோக ஷேமம் வஹாம்யஹம்! – பகவத் கீதாஸ்லோகம்: (கீதா 9- 22)

“எதற்கும் நீ கொஞ்சம் புரிந்து செயல் படு ! அது மட்டும் தான் எனக்கு தோன்றுகிறது. .நான் வரட்டுமா ? இந்த உலகில், மீண்டும் ஜன்மம் எடுக்கும் நேரம் வந்து விட்டது ! ஒரு நல்ல குடும்பத்தில் எனக்கு ஜன்மம் கிடைக்கும் போலிருக்கிறது பை !! ! பை !! ஸீ யு !”என்று விடை பெற்றார் கதிரவன் .

***

நானும் எழுந்தேன் ! சினிமாவுக்கு நேரம் ஆகி விட்டது ! மாலில் மூவி பார்த்து விட்டு, பின்னர் கடற்கரைக்கு போய், ஹேமாவுடன் ஜாலியாக பொழுதைக் கழிக்க வேண்டும் . வரும்போது புஹாரியில் சாப்பிட்டு வரவேண்டும். நாளை பல்சர் வண்டி ஒன்று வாங்க லோன் போட வேண்டும் . முப்பது வயதில், எனக்கு ஆயிரம் வேலை இருக்கு !

“அனன்யாஸ் சிந்த யந்தோமாம்” – கீதா சொல்கிறதாம் .. ! என் மாமாவிற்கு வேறே வேலையில்லை ? இதெல்லாம் பெருசுங்களுக்கு ! எனக்கு இல்லை ! இந்த வாழ்க்கை வாழ்வதற்கே ! பின்னால், அறுபது வயதில் பார்த்துக் கொள்ளலாம். !

என்னை அழகு பண்ணிக் கொண்டு, ஸ்டைலாக ஹேமாவை பார்க்க, கிளம்பினேன்.!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *