கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2024
பார்வையிட்டோர்: 542 
 
 

(1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என்னுடைய மாமா கதை எழுதுவதில் கைகாரர். அவருடைய கதை இயற்கையைச் சித்திரிப்பது; உள்ளத்திலே பொங்கியெழும் உணர்ச்சியைச் சொற்கோவைகளிலே அடக்கிக் காட்டுவது. அவர் கதைகள் காவிய கதியை உடையவை.

போன வருஷம் அவர் ‘கமலஜோதி’ என்னும் பத்திரிகையின் வருஷ மலருக்கு ஒரு கதை எழுதி யிருந்தார். அடடா! அதற்குத்தான் எத்தனை புகழ் மாலைகள் ! “ஏன் சார். அந்தக் ‘குருட்டுத் தேவி’யை எப்படிச் சிருஷ்டித்தீர்கள்? உங்களுக்கென்று தனியாக ஒரு கற்பனை தோன்றுகிறதே” என்று ஒரு நண்பர் புகழ்கிறார். “என்ன கதை வேண்டியிருக்கிறது சார்? உங்கள் ‘குருட்டுத் தேவி’க்கு அப்புறம் தமிழில் கதையே இல்லை சார் என்பது ஒரு நண்பரின் மதிப்புரை. 

‘குருட்டுத் தேவி’ வந்தாலும் வந்தது; எங்கள் மாமாவுக்கு ராத்திரியும் பகலும் கதை எழுதுவதே வேலை யாகி விட்டது. வருஷ மலர், ஆண்டு மடல், அந்த பூர்த்தி பத்ரம், தீபாவளி இகழ், பொங்கற்பூ, சங்கராந்தி மஞ்சரி, கார்த்திகைச் சுடர், மங்கள வெளியீடு -இப்படி ஊர்ப்பட்ட அநுபந்தங்களுக்கும் விசேஷ மலர்களுக்கும் எழுதும் நிர்ப்பந்தத்தில் அவர் சிக்கிக்கொண்டார். 

‘அவரே கதை எழுத வேண்டும் என்பதென்ன? நாமும் ஏன் எழுதக் கூடாது?’ என்று எனக்கு அடிக்கடித் தோன்றும். எங்கள் மாமா கதை ஒரு பத்திரிகையிலே வெளி வந்தால், அதை வாசித்த மறுகணமே நானும் கதை எழுத உட்காருவேன். அவர், ‘ரோஜாப் பூவின் மணம்’ என்று கதை எழுதி இருப்பார்; நான் அதே மாதிரி எருக்கம் பூவின் நாற்றம்’ என்று எழுத ஆரம்பிப்பேன். எழுதுவதற்கு முன் இரண்டு மணி நேரம் தீர்க்காலோசனை செய்வேன். கதை எழுதிவிட்ட மாதிரியும், அது பத்திரிகை யில் வந்த மாதிரியும், எனக்கும் கதையுலகில் ஒரு தனி ஸ்தானம் கிடைத்து விட்ட மாதிரியும் கனவு காண்பேன். சாப்பிடும் போதும் அந்தக் கற்பனைதான்; கத்தரிக்காய் கறி வீட்டில் பண்ணியிருப்பார்கள்; சாப்பிடும் போது கற்பனையில் என் உள்ளம் ஊறியிருப்பதனால், “அந்த எருக்கம்பூக் கறி போடு” என்று சொல்லி விடுவேன். எங்கள் அம்மாமி இடி இடியென்று சிரிப்பாள். காலேஜுக்குப் போகும் போதும் படிக்கும் போதும் எல்லாம் இதுவே ஞாபகம். ராத்திரி சரியாக ஏழு மணிக்கே சாப்பிட்டுவிட்டு எழுதுவேன்; இரண்டு வரிகள்: மூன்று வரிகள்கூட எழுதி விடுவேன். அப்புறம் தூக்கம் வந்துவிடும். அன்றோடு ‘எருக்கம் பூவின் நாற்றம்’ மறைந்து விடும். 

எங்கள் மாமா எழுதிய ‘காமுவின் கல்யாணம்’ என்ற கதை பத்திரிகையில் வந்த அன்று என்னுடைய கற்பனா சக்தி மறுபடியும் பொத்துக் கொண்டு கிளம்பியது; கோமுவின் கல்யாணம்’ என்று எழுத எண்ணினேன். ‘சீ சீ மாமா ஒரு பெண்ணின் கல்யாணத்தைப் பற்றி எழுதினால் நாமும் அதையே காப்பி அடிக்கக் கூடாது. நாம் ‘சீனுவின் கல்யாணம்’ என்று எழுத வேண்டும். சீனுவைப் புருஷனாக வைக்க வேண்டும். (பின்னே சீனு பெண்ணா?) கல்யாணம் எதற்கு? கார்த்திகை, தீபாவளி, ஆறு மாத க்ஷவரக் கல்யாணம் ஏதாவது வைக்கலாம், இப்படியே என்னுடைய சிந்தனா ரதம் பரந்த வான வெளியிலே ஒரு லட்சியம் இல்லாமல் பறந்தது. கடைசியிலே ‘பாட்டியின் அழுகை’ என்று ஒரு கதை எழுதுவதாகத் தீர்மானித்தேன். எதிர் வீட்டிலே உள்ள குப்பிச்சிப் பாட்டியின் அழுகையைக் கேட்டு அனுபவித்தவன் நான். ஆதலால் அதைத் தத்ரூபமாக வர்ணித்து கதைக்கு ‘ஜீவகளை’ உண்டாக்கிவிட எண்ணினேன். பாட்டி அழுதது என்னவோ அவள் பேரனுடைய ‘பிணக் களை’யைப் பார்த்துத்தான்! 

அப்பாடா! ஒரு நாள் ‘பெருங்காய விளம்பரம் அல்லது குமாரசாமியின் கோலாகலம்’ என்று ஒரு கதையை ஒரு விதமாக எழுதி முடித்தேன். அன்றைக்கு எனக்கு இருந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. ‘ஏன், நாமும் பத்திரிகைக்கு எழுதிப் பணம் சம்பாதித்து வீடு கட்டிக் கொண்டு கார் வாங்கி உல்லாசமாக இருக்கும் நிலையை அடையக் கூடாது? நாமும் ஒரு கதாசிரியன்தானே?” என்ற வீறாப்பு என் உச்சந் தலைக்கு ஏறியது. என் மார்பை ஒரு முறைப் பார்த்துக் கொண்டேன். என் கதையைப் படிக்கப் படிக்க அதில் அபூர்வரசனைகள் இருப்பதாகக் கண்டேன். 

எங்கள் மாமாவுக்குத் தெரிந்த பத்திரிகைக்காரர்கள் யாவரும் எனக்கும் தெரிந்தவர்கள். எங்கள் வீட்டில் வாரந்தோறும், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் யாராவது வருவதுண்டு. மாமாவின் கதையைப் பற்றிய விமர்சனப் பேச்சிலே அவருடைய பொழுது போய் விடும். சில சமயங்களில் நாலைந்து பேர்கள் கூடிவிடுவார்கள். அப்புறம் அவர்களுடைய கொம்மாளத்திற்குக் கேட்க வேண்டுமா? 

என்னுடைய பெருங்காய விளம்பர’க் கதையை அபூர்வ விகடன்’ ஆசிரியரிடம் கொண்டு போய்க் காட்டி னேன். அவர், நான் கதையை எழுதினேனென்பதைக் கேட்டவுடன், “அப்படியா ! சபாஷ்! அப்படித்தான் எழுதிப் பழக வேண்டும்” என்று அதை வாங்கிப் படித்துப் பார்த்தார். ”அடுத்த பத்திரிகையிலேயே வெளியிட்டு விடுகிறேன். இனிமேல் ஒவ்வொரு பத்திரிகைக்கும் தவறாமல் கதை எழுதி வரவேண்டும் என்று சொல்லப் போகிறாரென்றே எதிர்பார்த்தேன். “சரி; இருக்கட்டும். இன்னும் வேறு பல கதைகள் எழுது. இது அவ்வளவு நன்றாக இல்லை” என்று அவர் சொன்னார். 

நான் எவ்வளவு உயரமாக மனக்கோட்டை கட்டினேனோ அவ்வளவும் இடிந்து விட்டது. அஸ்திவாரங்கூட வானத்திலே தூள் தூளாய்ப் பறந்து விட்டது. ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்டு விடலாம் போல ஆத்திரம் வந்தது; ‘சீ! இவரும் மனிதரா? மரியாதை தெரியவில்லை! அவ்வளவு நன்றாக இல்லையாம்! எவ்வளவு? மரக்காலில் கதையின் ரசத்தை அளந்து பார்த்தாரோ’ என்று திட்டிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன். அப்புறம் ஒரு வாரம் பேசாமல் இருந்து விட்டேன். 

அடுத்த வாரம் ‘முருங்கைக்காய் சாம்பார்’ என்ற கதையொன்றை எழுதி முடித்தேன். அது என்னுடைய ரண்டாவது கதையாக இருந்தாலும் முதல் தரமாக இருந்தது. முன்பு எழுதின கதை மட்டமென்று இந்தக் கதையை எழுதின பிறகுதான் எனக்குப் பட்டது. ஆனால் இந்தக் கதையோ? ‘உலகத்தில் சிறந்த கதைகளில் ஒன்றாக எண்ணப்பட வேண்டும் ! ஒவ்வொரு பத்திரிகை யிலும் மதிப்புரையைப் பெறக் கூடியது. வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவது!” இந்த மாதிரி என் எண்ணங்கள் வளர்ந்தன. 

அதை எடுத்துக்கொண்டு, ‘கோமாளி’ ஆசிரியரிடம் போனேன். அவர் படித்துப் பார்த்தார் “அப்பனே ! இது எங்கள் பத்திரிகைக்கு லாயக்கில்லை. இதிலே என்ன ரசம் இருக்கிறது?” என்று அவர் சொன்னார். 

எனக்குக் கோபம் வந்தது; அடக்கிக் கொண்டேன். வெறுமனே அந்தக் கர்வம் பிடித்த ஆசிரியருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு போக என் மனம் சம்மதிக்கவில்லை. “இதிலே என்ன இல்லை?’ என்று ஒரு கேள்வி போட்டேன். 

“இதிலேயா? கதைக்குப் ‘ப்ளாட்’ இல்லை. பாவம் இல்லை. முடிவு நன்றாக இல்லை. ஏதோ முருங்கை மரம் வைத்ததும், காய் பறித்ததும், சாம்பார் சாப்பிட்டதும் இருக்கின்றனவே ஒழிய, கதைப் போக்காக ஒன்றும் இல்லை” என்றார். 

“நீ நாசமாய்ப் போக!” என்று மனத்துக்குள் திட்டி விட்டு நான் வீட்டுக்குப் போனேன். எனக்கு இருந்த உற்சாகமெல்லாம் போய் விட்டது. அன்று ராத்திரி சாப்பிடக் கூட மனம் பிடிக்கவில்லை. “இந்த உலகம் பொய்யுலகம். நல்ல வஸ்துவுக்கு மதிப்பில்லை” என்று எண்ணினேன். 

மாமா வந்தார்; “ஏன் சாப்பிடவில்லை ?” என்று கேட்டார். நான் மழுப்பினேன். அவர் மிகவும் அடுத்தடுத்து வற்புறுத்திக் கேட்டார். நான் உள்ளதைச் சொன்னேன். 

”இதுதானா? அசடே! பேசாமல் சாப்பிடு. அந்தக் கதையைக் கொண்டு வா. நான் ஒரு வேடிக்கை செய்கிறேன். பார்’ என்று சொல்லி அவர் என் கதையை வாங்கி வைத்துக் கொண்டார். 

மறுநாள் காலையில் பழையபடி என்னுடைய மனம் ஆறுதல் அடைந்து விட்டது; ‘நாம் கதை எழுதத் தொடங்குவது முட்டாள்தனம். அதற்கு எவ்வளவோ அநுபவமும் ரசிகத்தன்மையும் எழுத்து லாவகமும் வேண்டும்’ என்று எண்ணிக் கதை எழுதும் முயற்சியை நிறுத்திக் கொண்டேன். 


ஒரு மாதம் ஆயிற்று. ஆறு மாத காலம் பிரமாதமாக. விளம்பரப்படுத்தியிருந்த ‘கதாவளி’ப் பத்திரிகையின் வருஷ மலர் வந்தது. வாஸ்தவத்தில் நிரம்பப் பணம் செலவழித்து அதை வெளியிட்டிருந்தார்கள். அதன் மேலட்டைப் படத்திலேயே யாரும் சொக்கிப் போவார்கள்; அவ்வளவு அழகாக இருந்தது. 

எந்தப் பத்திரிகை வந்தாலும் நான் தான் முதலில் பார்ப்பேன். அப்புறந்தான் எங்கள் மாமா பார்ப்பார். எனக்கு அவ்வளவு சுதந்தரம் உண்டு. 

‘கதாவளி’ மலரைத் திறந்தேன். முகப்புப் படம் என் கண்ணைப் பறித்தது அப்பால் முதல் கதையைப் பார்த்தேன். ”முருங்கைக்காய் சாம்பார்” என்றிருந்தது! எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அதை மாமா எழுதி இருந்தார்! 

அவசர அவசரமாகப் படித்தேன்; உண்மையில் எனக்கு நம்பிக்கையே இல்லை; மறுபடியும் படித்தேன்; மூன்றாவது முறையும் படித்தேன். அது, நான் எழுதின அதே ‘முருங்கைக்காய் சாம்பார்” தான்; சாட்சாத் அதுவே. எங்கள் மாமா செய்த ‘வேடிக்கை’ இன்னதென்று அன்றைக்குத் தான் புரிந்தது. அந்தக் கதையில் எத்தனை படங்கள்! எத்தனை ஜோடனைகள்! பிரசித்த எழுத்தாளராகிய கோபாலமணி அதை எழுதியிருக்கும் போது அலங்காரங்கள் இல்லாமலா போகும்? 

முன்னுரையிலே பத்திரிகாசிரியர், இந்த மலரை எவ்வளவோ பிரயாசைப்பட்டுத் தயாரித்தோம். எங்கள் முயற்சி நல்ல பயனை அடைந்ததென்பதில் சந்தேகமே இல்லை தமிழ்நாட்டுக் கதாசிரியர்கள் யாவரும் இதில் எழுதியிருக்கிறார்கள். கதாசிரிய மணியாகிய நம் கோபால மணி சாதாரண முருங்கை மரத்தைக் கற்பனா உலகத்தில் நட்டு வைத்து அதன் காய்களைப் பறித்து நமக்குத் தருகிறார். அந்தக் காயினால் சாம்பார் செய்கிறார். முருங்கைக்காய் சாம்பாரின் மணம் எத்தனை யுகமானாலும் மாறாது. கனவி லு ம் மணக்கும்…. என்று எழுதி இருந்தார். 

இதைப் படிக்கும் போதே எனக்கு மயிர்க் கூச்சல் உண்டாயிற்று. 

“என்ன மாமா! பெரிய வேடிக்கை பண்ணி விட்டீர்கள்!” என்று குதித்தோடிப் போய் அதை மாமாவிடம் காட்டினேன். 

“இன்னும் பொறுத்துப் பார்” என்று சாவதானமாக அவர் சொன்னார். 

மறுநாள் வந்த தினசரிப் பத்திரிகையாகிய உதயசூரியனில் ‘கதாவளி’, மலரைப் பற்றிப் பின்வரும் மதிப்புரை இருந்தது: 

“…கதாவளி மலரில் நம் உள்ளத்தை முதலிலேயே பறி கொடுத்து விடுகிறோம். கோபால மணியவர்கள் எழுதிய முருங்கைக்காய் சாம்பார் நம்மைப் பிடித்து அழுத்தி மயக்கி விடுகிறது. அதில் ஸ்வபாவோக்தி ததும்புகிறது. அது கதையல்ல; கவிதா சித்திரம்…..” 

மறுநாள் வந்த ‘தேச நண்பன்’ பத்திரிகை எழுதியது பின் வருமாறு: 

“… தமிழ்க் கதை உலகில் ஜீவகளை ததும்பும் கதைகளில் இதற்கு நிகர் ஒன்றும் இல்லை…” 

வேறு சில மதிப்புரைகளைக் கீழே காட்டுகிறேன்:- 

“…இது குடும்ப வாழ்க்கையில் சமையலறையில் நிகழும் நிகழ்ச்சியைப் படம் பிடித்துக் காட்டுகிறது…” 

“…வெறும் முருங்கைக் காய் சாம்பாரிலே வேதாந் தக் கருத்தை வஸ்திரகாயம் செய்து கதாசிரியர் சேர்த்து நமக்குப் பரிமாறுகிறார்……’ 

“…நல்ல கதை; நிரம்ப நல்ல கதை: மிகவும் உயர்ந்த கதை!” 

“….கதையின் சரித்திரத்தில் இது ஓர் உன்னத சிகரம்…” 

அந்தக் கதையை வேண்டாமென்று திருப்பித் தந்த அதே கோமாளிப் பத்திரிகை என்ன எழுதியது தெரியுமா?

”…ஆஹா! என்ன ரசம்! என்ன கதையமைப்பு! கதையை முடித்திருக்கும் தோரணை ஒன்றே போதும்! இதிலே அமைந்த பாவச்சித்திரம் ஆயிரத்தில் ஒன்றுக்குத் தான் அமையும்.” 

அந்த மதிப்புரையைப் பார்த்த பிறகுதான் பின் வரும் சித்தாந்தத்துக்கு வந்தேன்: 

“உலகம் முழு மோசமானது! ஜகத் மித்யை!!”

– 1932-42, கலைமகள்.

– கதை சொல்லுகிறார் கி.வா.ஜ., முதற் பதிப்பு: டிசம்பர் 1992, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் (1906-1988). இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *