ஒரு மனிதன் ஓடுகிறான்…
அவனைத் துரத்திக்கொண்டு ஒரு பத்துப் பதினைந்து பேர் ஓடுகிறார்கள் – ‘விடாதே! பிடி!’ என்று கத்தியபடி.
ஓட்டப் பந்தயத்தில் ஒட்டுமொத்தமாக வெற்றிபெற்ற அந்தப் பத்துப் பதினைந்து பேர், ஓடத்தெரியாத அந்த ஒற்றை மனிதனை ஓடிவிடாமல் கால்கள் பின்னிக்கொண்ட நிலையில் பிடித்துப் பந்தாடி முடித்ததும் –
மூச்சுத் திணறும் வாய் குழறலோடு அவன் ஒப்புக் கொள்கிறான், தான் திருடியது உண்மை என்று.
அந்த உண்மையை விடப் பெரிய உண்மை –
அவனுக்குப் பசி எடுத்ததுதான்! பட்டினி கிடந்ததால் பசி எடுத்தது. வேலை போய்விட்டதால் பட்டினி கிடக்க வேண்டிருந்தது. நோய்வாய்ப் பட்டதால் வேலை பொய் விட்டது. அந்த வேலை ஆபீஸ் வேலை அல்ல. அன்றாடகக் கூலி வேலை.
அந்த ஒற்றை மனிதன் ஒண்டிக் கட்டையாக இல்லாததால் – அவனை விட அதிகமாக அவன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பசி எடுத்ததால் – அவர்களுக்குப் பிச்சை எடுக்கும் கலை கைகூடி வராததால்,
ஒரு உணவு விடுதியின் புறக்கடைப் பக்கம் நுழைந்து –
குப்பைத் தொட்டிக்கு வரும் முன்பே சோற்றைத் திருடியபோது.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையில்,
கையும் களவுமாகப் பிடிபட்டான்!
காவல் நிலையத்தாரின் கைவரிசைகளுக்குப் பின் –
கையில் காப்பநிந்தவனாய் சிறைக்கைதியாகி, மூன்று மாதங்கள் கழித்துக் கையில் ஏதுமில்லாமல் வீடு நோக்கி விரைந்து வந்து –
அந்தப் புளியமரத்தடி நிழாளில் காஹ்ட்டிப்பாநிகளையும் மூட்டை முடிச்சுகளையும் சுவர்கலாக்கிக் ‘கட்டி’இருந்த வகிடு அங்கு இல்லாததால் –
காவல் நிலையத்திற்கு ஓடி வருகிறான். அந்த பத்துப் பதினைந்து பேர் இப்போது துரத்திக் கொண்டு வரவில்லை! காரணம் அவன் கையில் ஏதுமில்லை!
காவல் நிலையத்தை அடைந்ததும் கத்துகிறான்:
‘யா, என் வீட்டிலே திருடு போய்விட்டது!’
‘என்ன திருடு போச்சு?’ காவல் அதிகாரி கிண்டலாகக் கேட்கிறார்.
‘என் பெண்ஜாதியும் குழந்தையும்!… நீங்க திருடனைப் பிடிக்கலியா?’
‘ஒரு பிடி சோறு அந்தப் பயங்கரத் திருடனை விரட்டிப் பிடித்திடுந்தால், அந்த இரண்டு உயிர்கள் களவு போயிருக்க முடியாது என்பது தெரியாத நிலையில்,
அந்த ஒற்றை மனிதன்,
திருடனைப் பிடித்து மனைவி மக்களை மீட்கும் நம்பிக்கையோடு,
ஓடுகிறான்…
அந்தப் பத்துப் பதினைந்துபேர் த்ரிஉடனைப் பிடிக்க இப்போது ஓடி வரவில்லை!
அவர்கள் –
இன்னொரு திசையில் ஓடிக் கொண்டிருந்தார்கள் சோற்றுக்காக!
– 1982
இச் சிறுகதை என் தாய்மாமன் தி. தயானந்தன் பிரான்சிஸ் அவர்கள் எழுதியது. தவறுதலாக என் பெயரில் பதிவாகியுள்ளது. கிறிஸ்டஸ் செல்வகுமார்