(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு காலத்ல, ஒரு காக்காவும் – குருவியும் சினேகிதமா இருந்திச்சாம். சினேகிகதமா இருக்கயில, சாமிக்குப் பொங்க வைக்க நெனச்சு, பொங்கலுக்கு வேணும்ண்ற பான, அரிசி தேடிக்கிட்டு வரணும்ண்டு, ரெண்டும் வெளில பெறப்பட்டு போச்சாம்.
மொதல்ல, பொங்க வைக்கப் பான (பானை) வாங்கப் போச்சாம். குருவி நல்ல பானயயும், காக்கா ஓட்டப் பானயயும் வாங்கிட்டு வந்துச்சாம்.
மறுநா, நெல் பெறக்கப் போச்சாம். குருவி நல்ல நெல்லயும், காக்கா பொக்கு நெல்லயும் பெறக்கிக்கிட்டு வந்துச்சாம்.
அதுக்குப் பெறகு, ரெண்டும் வெறகுக பெறக்கப் போச்சாம். குருவி காஞ்ச வெறகயும், காக்கா பச்ச வெறகயும் பெறக்கிக்கிட்டு வந்துச்சாம்.
காக்காயும், குருவியும் பொங்க வைக்க, பொங்கப் பானயத் தூக்கிக்கிட்டு போச்சாம். போயி -, பொங்க வைக்கிதுக. காக்கா வச்ச பொங்க நல்லாப் பொங்குது. பொங்கயில பெலமான மழ (மழை) புடுச்சு அடிக்குது.
காக்கா அவசரப்பட்டு, பானயில இருந்தத வாரி வழுச்சு வாயில போட்டுக்கிட்டு, பறந்து போயிருச்சு. குருவி, நிதானமா, நனஞ்சுகிட்டே பொங்க வச்சுக் கொண்டு வந்து, புருச புள்ளைகளுக்கெல்லாம் குடுக்குது.
பொங்கல வயிறாரச் சாப்பிட்ட குஞ்சுக, அம்மா! நாளக்கி, எங்களுக்குப் பணியாரஞ் சுட்டுக் குடும்மாண்டு கேட்டுச்சுக கேக்கவும், குருவி பணியாரஞ் சுட்டுச்சாம்.
பணியாரஞ் கடயில், மழ புடிச்சுப் பெய்யிது. மழயில், காக்காக் கூடு நனஞ்சு விழுக ஆரம்பிச்சிருச்சு. பிஞ்சு – பிஞ்சு கெடக்கு, ஓட்ட தெரியுது. அந்த ஒட்ட வழியா, காக்கா, குருவி வீட்டப் பாக்குது. அங்க குருவி பணியாரஞ் சுட்டுக்கிட்டு ஒக்காந்திருக்கு. பணியாரத்தப் பாத்ததுங் காக்காய்க்கு நாக்குல எச்சு ஊருது. எப்படியாவது குருவி சுடுற பணியாரத்தத் திண்டுபிடணும்ண்டு நெனச்சு,
“காத்தும் மழயுங் கலந்தடிக்குது
கள்ளி மரமெல்லாம் நெறு நெறுங்குது
அக்கக்கா கொஞ்சம் கதவத் தொற – ண்டு”
குருவி வீட்டுக் கதவ தட்டிச்சு. தட்டயில, இப்பத்தர் பிள்ளைக குளிக்குதுக, அப்புறமா, வாண்டு குருவி சொல்லுது.
“காத்தும் மழயுங் கலந்தடிக்குது
கள்ளி மரமெல்லாம் நெறு நெறுங்குது
அக்கக்கா கொஞ்சங் கதவத் தொற – ண்டு”
பெறகுஞ் சொல்லுது.
இப்பத்தா – எம்புருசனுக்கு தல முழுக்காட்றே, கொஞ்சம் பொறுண்டு சொல்லிக்கிட்டே….. குருவி, பணியாரத்தச் சுட்டுச் சுட்டு அடுக்குப் பானைக்குள்ள வச்சிட்டு வந்து, குருவி, கதவத் தொறந்துச்சு.
காக்கா குளிர்ல நடுங்குறத போல பாசாங்கு செய்யுது. நெசமாத்தா, காக்காயிக்கு குளிருதுண்டு நெனச்சு, சரிக்கா! எங்க படுத்துக்கிறண்டு குருவி கேட்டுச்சு.
அடுக்குப் பானக்குள்ள படுத்துக்கிறேண்டு காக்கா சொல்லுச்சு. அடுக்குப் பானக்குள்ள பணியாரம் வச்சிருக்கிறத மறந்து போன குருவி, சரிண்டு சொல்லிருச்சு.
அடுக்குப் பானக்குள்ள படுக்கப் போன காக்கா, குருவி வச்சிருந்த பணியாரத்தப் பூராவும் திண்டுபிட்டு, பறந்து போயிருச்சு.
காலயில எந்திருச்சு, அடுக்குப் பானயப் பாத்த குருவிக்கு, ஒரே வகுத்தெரிச்சலாப் போச்சு. காக்காய, எப்டினாலும் பழி வாங்கணும்ண்டு நெனச்சு, குருவி காக்காயத் தேடிக்கிட்டுப் போச்சு.
தேடிப் போகயில, அங்கிட்டு ஒருத்த நெலத்ல உழுதுகிட்டு இருக்கா. அவங்கிட்டப் போயி, இந்த வழியா – ஒரு காக்கா போச்சாண்டு குருவி கேக்குது.
அதுக்கு, அந்த உழுகுறவ, அந்தா பாரு அங்க ஒரு அண்ரண்டாப் பச்சி (பட்சி) இருக்கு. அதுகிட்டப் போயி கேளுண்டு சொல்லிட்டர்.
அண்டரண்டாப் பச்சிகிட்டப் போயி, இந்தப் பக்கமா ஒரு காக்கா போச்சாண்டு, குருவி கேட்டுச்சு.
அதுக்கு, அண்டரண்டாப் பச்சி, ஒரு மொட்ட மரத்தக் காமிக்குது. காமிக்கவும்! அந்த மரத்துக்குப் பறந்து போன குருவி, காக்காயப் பாத்து, காக்கக்கா! காக்கக்கா! ஒனக்கு தல முழுகத் தண்ணி காய வச்சுட்டு, ஒன்னய எங்ல்ெலாம் தேடுறதுண்டு குருவி சொல்லுச்சு.
காக்காய்க்கு ஒரே சந்தோசம், சந்தோசம்ண்டா பொறுக்க முடியல. காக்காய கூப்பிட்டுக்கிட்டு, குருவி. வீட்டுக்கு வருது. வந்து, காக்காய ஒக்காரச் சொல்லி, நல்….லா காஞ்ச தண்ணிய தூக்கி, காக்கா தலயில ஊத்திருச்சு, ஊத்தவும், சோம்பேறிக் காக்கா, வெந்து செத்துப் போச்சு. பெறகு என்னா? புருச புள்ளைகளோட குருவி நல்லா வாந்துச்சாம்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், பண்பு விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.