நான் விழித்தெழுந்து உடைமாற்றிக் கொண்டு கிளம்பும் வேளையில் உம்மாவும் வாப்பாவும் வந்து “உப்பாவைப் பற்றி இப்படியொரு காரியம் நீ செய்வாய் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்றும், உப்பாவைப் பற்றி பேசப் போகாதே” என்றும் கண்டிப்புடன் சொன்னதினால் எனக்கு ரொம்பவும் சங்கடமாக போனது. எனது பெரும் மனக்கோட்டை இடிந்து நொறுங்குவதின் சப்தத்தை நான் உணரத் தொடங்கினேன். எனினும் பெற்றோர் சொல்லுவதை மீற முடியாமல் என் மனதுக்குள்ளே அழுதுகொண்டு, படுக்கையில் புரண்டு விம்மினேன்.
அன்றிரவு உம்மா சாப்பிட அழைத்த போது ‘பசிக்கவில்லை’ என்று கூறிவிட்டு படுக்கையிலே கிடந்தேன். என்மீதும், பெற்றேhர் மீதும், என் பேச்சு மீதும் வெறுப்பு தான் வந்தது. இப்படியாகிவிட்டதே என்று என்னால் ஜீரணிக்க திராணியற்று மனதுக்குள் அழுதுகொண்டே கிடந்தேன்.
அடுத்தநாள் காலையில் என்னை சந்திக்க வந்த நண்பர்கள் கிராமத்து விழா சிறப்பாக நடைபெற்றதாகவும் எனினும் உங்களது சொற்பொழிவு நடக்காததுதான் விழாவுக்கே பெரிய குறைபாடு என்றும் சொற்பொழிவுக்கு கலந்து கொள்ளாததின் காரணங்களை கேள்விகளாக முன்வைத்த போது தவிர்க்க இயலாத காரணத்தினால் வர முடியவில்லை என்று மாத்திரம் கூறிவிட்டு அமைதி காத்தேன். நீங்கள் வராதது ஒரு சாரித்திர தவறு என்று அபிப்பிராயப்பட்டுக்கொண்டார்கள். நீண்ட நெடு நேரம் பேசிக்கொண்டு திரும்பிப் போய்விட்டனர்.
இவ்வளவு காலத்தினும் எனது நண்பர்களிடம் உப்பாவைப் பற்றி சொல்லாமல் விட்டது இம்முறைதான் அதற்கு காரணமாக நானே அமைந்துவிட்டேன் என்று சமாதானப்பட்டுக்கொண்டு ஐந்தாறு நாள்களாக யாரையும் பார்க்க மனசில்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்தேன். எனினும் உப்பாவைப்பற்றி ஏதாவது சொல்லியே ஆகவேண்டும் என்ற முடிவில் மாற்றமில்லாததால் முடங்கி கிடந்த நாள்களிலும் தவிர்க்க இயலாமல் கண்ணாடி முன்பு நின்று பேசவும் செய்தேன். இதனால் ஓரளவுக்கு மனபாரம் குறைந்தது என்பதை வெளியில் சொல்ல வேண்டியது இல்லை.
ஐந்தாறு நாட்களுக்கு பின்னர் தர்ஹாவுக்கு சென்று வருவோமே என்று நினைத்துக் கொண்டு தர்ஹாவுக்கு போய்க் கொண்டிருந்தபோது எனது நண்பர் ஒருவருடன் வேறெருவர் வந்துகொண்டிருப்பதை தற்செயலாக பார்க்க எதைப்பற்றியும் பேசப் போவதில்லை என்ற முடிவுடன் குனிந்து நடந்துக்கொண்டிருந்தேன்.
நண்பர் எனது தோளைத் தொட்டு “என்ன ஐந்தாறு நாட்களாக ஆளையே பார்க்க முடியவில்லை” என்று சொல்லி விட்டு அருகிலிருந்தவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அவர் இலக்கிய உலகில் தனக்கென்று ஒரு முத்திரையை பதித்தவர் என்றும் இரண்டு நாவல்கள் மாத்திரமே வெளியிட்டிருக்கிறார் என்றும் இரண்டுமே மக்களால் பரபரப்புடன் கவனிக்கப்பட்டது என்றும் சொன்னபோது நாங்கள் பரஸ்பரம் கை கூப்பி வணக்கம் சொன்னோம். பின்னர் நாங்கள் மூவருமாக தர்ஹாவுக்கு சென்றோம். தர்ஹா வளாகத்தில் அமர்ந்து நீண்ட நேரம் இலக்கியத்தையும் கதைகளையும் இலக்கிய நண்பர் பேசிக்கொண்டிருக்கும் போது எப்படியாவது உப்பாவைப் பற்றி கொஞ்சமாவது சொல்லிவிட வேண்டும் என்ற முனைப்பு என்னுள் தோன்றியதும் அவர் பேச்சை விட்ட அடுத்த கணமே எதிர்பாராத விதத்தில், தாமதம் காட்டாமல் உப்பாவைப் பற்றி சொல்ல ஆரம்பித்தேன்.
ஆரம்பத்தில் வேண்டா வெறுப்புடன் என் பேச்சைக் கேட்ட இலக்கிய நண்பர் பேச்சின் சுவாரஸ்யத்தில் மூழ்கிக்கொண்டிருந்தார் என்பதை நான் கவனித்தவாறு சொல்வதை நிறுத்தவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் உப்பாவைப் பற்றி சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறேன்.
இலக்கிய நண்பர் அவராகவே “நேரம் தாமதித்து விட்டது போல் தோன்றுகிறது நாளை மறுபடியும் இங்கேயே சந்திப்போம்” என்று நண்பர்கள் பிரிந்து சென்றனர். பின்னர் நான் ரொம்பவும் பெருமிதத்துடன் ஒருவித கர்வத்துடன் வீட்டுக்கு திரும்பினேன். ‘எப்படி புகழ்பெற்ற ஒரு நாவலாசிரியரை கூட என்னால் வீழ்த்த முடிந்தது’ என்று உள்ளுக்குள் ஆனந்தப்பட்டுக் கொண்டேயிருந்தேன்.
இந்த சந்திப்பு தற்செயலாக நடந்தது என்றபோதிலும் தினமும் நாங்கள் ஒரு மணிநேரமோ, இரண்டு மணி நேரமோ பேசிக்கொண்டிருப்போம். இப்போதெல்லாம் இலக்கிய நண்பர் ‘உம்’ என்று ஒரு வார்த்தையை தவிர வேறொன்றும் சொல்ல நான் அனுமதிப்பதில்லை. ஆனாலும் என் பேச்சு அவருக்கு பிடித்திருந்தது என்று மாத்திரம் நிச்சயம் சொல்ல முடியும். மேலும் விசேஷமாக ஞாயிற்றுக் கிழமையில் இலக்கிய நண்பரை அழைத்துக்கொண்டு போய் தனி அறையில் என் நண்பர் வட்டத்தில் அறிமுகம் செய்து வைத்து பின்னர் உப்பாவைப் பற்றி சொல்லி முடித்ததும் இதுநாள்வரை என் பேச்சுகளை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த இலக்கிய நண்பர் கூட்டத்தில் ஒரு வேண்டுகோளை முன் வைத்தார். அதாவது விசேச கூட்டங்களில் உப்பாவைப் பற்றி நண்பர் சொல்லி முடித்ததும் அனைவரும் அவரவர்க்கான விமர்சனத்தை முன் வைக்க வேண்டும் என்றும் இதனால் அவரின் பேச்சு பண்பட்ட பேச்சாக மாற வாய்ப்புள்ளதாகவும் ஒரு விமர்சனமாகவே முன் வைத்த போது நான் உட்பட அனைவரும் ஆமோதித்தோம்.
கூட்டம் முடிந்து நான் வீட்டுக்கு வந்தபோது இலக்கிய நண்பர் சொன்ன ‘பண்பட்ட பேச்சு’ என்ற வார்த்தை பிரயோகம் என் மனதை நெருடிக்கொண்டிருந்தது. அப்படியானால் நான் பேசுவது பண்பட்ட பேச்சாக இதுவரை இல்லாமலா இருந்தது என்று பல கேள்விகள் என்னில் தோன்றியது.
உம்மாவிடம் நேரடியாகச் சென்று “எனது பேச்சு பண்பட்ட பேச்சாக இருக்கிறதா” என்ற கேள்வியை கேட்ட போது, உம்மா, “யார் சொன்னார்கள் இல்லையென்று ?” என்று பதில் சொன்னபோதும் இவன் ஏன் இப்படி ஒரு கேள்வியை கேட்டான் என்று யோசிப்பதை அவரது கண்கள் காட்டிக் கொடுத்ததை நான் கண்டுகொள்ளாதது மாதிரி திரும்பிப் போய்விட்டேன். அன்றிலிருந்து எனது உப்பாவைப் பற்றிச் சொல்லும் முறையை சற்று மாற்றி அமைப்பது குறித்து யோசனை செய்துகொண்டிருந்தேன். எனக்கு சமயம் கிடைக்கும் போதெல்லாம் பக்கத்து விட்டு நண்பர்களிடம் உப்பாவைப் பற்றி கொஞ்சம் விசித்திரமாக சொன்னதை அவர்கள் புரிந்து இருக்க கூடும் என்று நம்பினேன். நண்பர்களும் உன் பேச்சில் இப்போதெல்லாம் பொரிய மாற்றத்தை கொண்டிருப்பதாக நாங்கள் நினைக்கிறோம் என்றும் சொல்லாமல் இல்லை. இதையே பெரும் வெற்றியாக கருதிக்கொண்டு ஒரு செய்தியை எந்த விதத்தில் சொன்னால் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் உப்பாவைப் பற்றி சொல்லும் போது மற்றவர்களின் முகத்தை சுளிக்க வைக்கும் செய்தி ஏதாயிருக்கும் என்று உப்பாவை சொல்லும் முறையில் இனி என்னென்ன சத்தியங்களை ஏற்படுத்த இயலும் என்றும் சதா சர்வ காலமும் யோசனையில் மூழ்கிக் கிடந்தேன். உம்மாவும், வாப்பாவும் கூட இப்படி நான் யோசித்துக் கொண்டிருப்பதை அவதானித்துக் கொண்டிருந்தார்கள் என்று தான் தோன்றுகிறது.
ஒருமுறை உம்மா வெளிப்படையாகவே “ஏன் நீ இப்படி சதா யோசனையாயிருக்கிறாய் ?” என்று கேட்டபோது நான் நினைத்தது சரியாகத்தான் இருந்தது என்று நினைத்துக்கொண்டு “ஒன்றுமில்லை” என்று மறுமொழி பகர்ந்து கொண்டு ரூமுக்குள் போனதை வாப்பாவும் கவனித்திருக்க வேண்டும். இலக்கிய நண்பர் மற்ற நண்பர்களை போல் அல்லாமல் எனது பேச்சை வகை வகையாக மாற்றும் தந்திரோபாய நோக்குடன் ‘இப்படி வைத்துக்கொள்ளலாமா’ என்று நாசூக்காக கேட்கும் முறை எனக்கு பிடித்திருந்தது.
எனினும் உப்பாவைப் பற்றி முழுமையாக சொல்ல முடியாமல் பேச்சின் கவனம் திசைதிருப்பி மீண்டும் வேறொரு இடத்துக்கு நகரும் விதத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. பேசுகின்ற போது நிதானமாக பேச வேண்டும் என்று நினைத்தாலும் உப்பாவைப் பற்றி சொல்லுகின்ற போது நிதானம் தவறி ஒரு உத்வேகத்தால் பேசிக்கொள்வதினால் உப்பாவைப் பற்றி தகவல்களை சரியாக சொல்ல முடிவதில்லை என்றே படுகிறது. அடுத்த ஞாயிற்று கிழமையில் நண்பர்கள் வட்டத்தில் பேச்சுகளும், உரையாடல்களும் சமகால அரசியலைப் பற்றி விவாதமையமாக மாறியிருப்பதை கண்ட எனக்கு, ஒரு வித வெறுப்பு தோன்ற ஆரம்பித்தது. எனினும் இலக்கிய நண்பர் சரியான சமயத்தில் உப்பாவைப் பற்றி பேசுமாறு வேண்டுகோள் வைக்கவே, ரொம்பவும் பூரித்த மனதுடன் எனது வித்யாசமான சொல்லல் முறையை அவர்களுக்கு உணர்த்தும் பாவத்துடன் பேச ஆரம்பித்தேன்.
எனது பேச்சு முடிவடையும் முன்னரே என் பேச்சில் வித்யாசம் குறித்த விமர்சனம் எழத்தொடங்கியது. ஒவ்வொரு பேராக சொல்லும் முறையின் விசேஷங்களை சொல்ல ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட உப்பாவைப் பற்றிய விவாதம் இல்லாமலே பேச்சு குறித்த விவாதமாகவே கருத்துகள் இருந்தன. இதனால் என் மனசு கொஞ்சம் பாதிக்கப்பட்டாலும் எனது சொல்லும் கலையின் பாரிணாமங்கள் எந்த அளவுக்கு வித்யாசப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் சொல்லுகின்ற போது மனசு ஆசுவாசப் பட்டுக்கொண்டிருந்தது என்னமோ உண்மைதான்.
முத்தாய்ப்பமாக இலக்கிய நண்பர் பேசும் போது சொன் விஷயங்கள் என்னை ரொம்பவும் பாதித்தன. உரையாடல்கள் குறித்த கவனமும், இலக்கணமும் தான் இன்றைய நாள்வரை விவாதிக்கப்பட்டதாகவும் இது தான் நினைவு தெரிந்த நாளிலிருந்து பேசுவதற்கான வியாக்கியானங்களை ஒழுங்குபடுத்தி தந்தது என்றும் சொல்லும் கலையில் தொடர்ச்சியறாத பயணம் தான் அதிக முக்கியத்துவத்தை சொல்லும் கலைக்கு அளித்துக் கொண்டிப்பதாகவும் சுட்டிக் காட்டி பேசிய விதம் நன்றாக என்னை கவர்ந்தது. கொஞ்ச நாள்களுக்கு பிறகு இலக்கிய நண்பர் ‘உலகை மாற்றிய பேச்சுக்கள்’ என்ற நூலை எனக்கு தந்து படித்துப் பாருங்கள் இன்னும் தெளிவு கிடைக்கும் என்று சொன்ன போது நிச்சயமாகவே இலக்கிய நண்பர் எனது பேச்சின் மகத்துவத்தை நன்றhக புரிந்து வைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். அந்த நூலை வாசிக்க வாசிக்க என்னுள் பெரும் வியப்பு தோன்றிக் கொண்டேயிருந்தது.
நானும் உலக அளவில் சிறந்த பேச்சுக்களை போலவே பேசியிருக்கிறேன் என்ற எண்ணமும் வலுப்பட்டுக் கொண்டே போனது. என்னையறியாமலே இவ்வளவு மகா அற்புதமான திறமை என்னுள்ளே ஒளிந்திருக்கிறதே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டேன். இதனிடையில் தர்ஹா வளாகத்தில் தினமும் பேசுகின்ற உப்பாவைப் பற்றிய பேச்சுக்களை குறித்த ஒரு குற்றச் சாட்டை ஜமாத் தலைவருக்கும், செயலாளருக்கும் யாரோ சிலர் சொல்லியிருக்கிறார்கள். வாப்பாவிடம் போனில் தகவலைச் சொன்ன செயலர், இனி உங்கள் மகனை தர்ஹாவளாகத்தில் வரக் கூடாது என்று எடுத்துச் சொல்லுமாறு வைத்த கட்டளையை கேட்டதிலிருந்து வாப்பா கண்டபடியாக என்னை திட்டினார்.
“தர்ஹா வளாகத்தில் போயிருந்து கொண்டு உப்பாவைப் பற்றி என்ன பேச்சு வேண்டியிருக்கு” என்றும் கடுமையாக கோபப்பட்டார். விஷயம் என்னவோ தவறாக உருமாற்றப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்ட நான் சமயம் கிடைதால் செயலாளாரிடமே இதுபற்றி பேசிவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். இதன் காரணமாக எனக்கு நண்பர்களிடம் இதுபற்றி சொல்ல மனசு சங்கடப்பட்டதன் காரணமாக இதை மறந்து விடுவது தான் நல்லது என்றும் தர்ஹாவுக்கு போய்ப் பேசுவதை தவிர்க்கவும், மாற்று வழிகளை குறித்தும் சிந்தனைச் செய்துகொண்டிருந்தேன்.
இது இப்படியிருக்கும் போது இலக்கிய நண்பர் வீட்டுக்கு வந்து தன்னார்வ அமைப்பு ஒன்று வாய்மொழி கதை பயிலரங்கம் ஒன்றை நடத்துவதாகவும் அகில தேசிய அளவில் பதினைந்துக்கும் மேற்பட்ட கதை சொல்லுவோர் வருவதாகவும் உங்களைப் பற்றி அந்த அமைப்புக்கு சொல்லியிருக்கிறேன் என்றும் அனேகமாக முறைப்படியிலான தகவலும், அழைப்பும் வரும் என்றும் எனவே வாய்மொழி கதையை நன்றாக சொல்ல வேண்டும் என்றும் சொன்னபோது உண்மையிலேயே ரொம்பவும் அகமகிழ்ந்து போனேன்.
ஏற்கனவே ஒருமுறை உப்பாவைப் பற்றி சொல்ல முடியாமல் போன வருத்தம் இந்த பயிலரங்கத்தின் மூலம் தீர்ந்து விடும் என்று உள்ளுர நம்ப ஆரம்பித்தேன். பயிலரங்கம் பற்றி இலக்கிய நண்பர் விலாவாரியாக விளக்கிக் கொண்டிருக்கும் போது உப்பாவைப் பற்றி சொல்ல ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்குமா என்று காத்திருந்தேன். நண்பர் பேச்சை முடித்தவுடன் “உப்பாவைப்பற்றி புதிய முறையில் பேசப்போகிறேன் கேளுங்கள்” என்று முற்றிலும் புதிய முறையில் பேச ஆரம்பித்தேன். நண்பர் என்ன செய்வது என்று திகைத்து மெளனமாக இருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்த போதிலும் வேகத்துடன் கதையை முடிக்கும் படியிலான நிர்பந்தத்தோடு பேசி விட்டு அவரது பதில் நோக்கி காத்திருந்தேன்.
ஆனால் நண்பரோ “மீண்டும் சந்திப்போம்” என்று கூறிவிட்டு நகர்ந்து போனார். இப்படி ஏதும் சொல்லாமல் போய்விட்டாரே என்று குறைபட்டுக்கொண்ட போதும் வாய்மொழி கதை பயிரலங்கத்தை குறித்து சிந்திக்க ஆரம்பித்தேன். தேசிய அளவிலான பயிலரங்கமாக இருப்பதினால் சரியான முறைப்படிதான் பேச வேண்டும் என்றும் பயிலரங்கத்தில் வித்தியாசமான கதை அனுபவங்கள் நிச்சயமாக வெளியே வரும். ஆனால் எனது கதைச் சொல்லல் எந்த விதத்திலாவது எல்லோரை காட்டிலும் திறம்பட இருக்க வேண்டியதன் நிர்பந்தம் குறித்து யோசிக்க தலைப்பட்டேன். பின்னர் எனது நண்பர்களை சந்திக்கும்போதெல்லாம் வாய்மொழிக் கதை பயிலரங்கம் பற்றியும், வாய்மொழி கதையின் முக்கியத்துவம் பற்றியும் பேச ஆரம்பித்தேன். நண்பர்களும் பல்வேறு விதமான தகவல்களையும், மிகச்சிறந்த வாய்மொழி கதைச் சொல்லிகளின் கதைகளையும், அனுபவங்களையும் தெளிவாக சொல்லியபோது எனக்கு இந்த விஷயத்தில் சரியான விஷய ஞானம் இல்லாமல் போனதே என்று ஆதங்கம் பட்டுக் கொண்டாலும் உப்பாவைப் பற்றி தேசிய அளவிலான பயிலரங்கத்தில் செல்லுவது தான் எல்லாவற்றையும் விட சிறப்பு என்று சமாதானப்பட்டுக் கொண்டேன்.
இப்போது நான் ஒரு புல்வெளி பிரதேசத்தில் நின்றுக் கொண்டிருந்தேன். உலகில் எங்குமே இது போல கண்ணுற்றதாக தெரியவில்லை. சுற்று முற்றும் பார்த்து விட்டு நடக்க ஆரம்பித்த நான், நடையில் சிறிது வேகத்தை கூட்டினேன். மீண்டும் வேகத்தை அதிகாரித்துக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக ஓட ஆரம்பித்தேன். ஓடி விறுவிறுத்து களைத்து நின்ற போது நிறைய பேர் குழுமியிருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் சர்ச்சிலும், லெனினும், நேருவும், நெருதாவும், நாஸரும் இருக்கையில் அமர்ந்து இருந்தார்கள். என்னைக் கண்டதும் சர்ச்சில் “உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம், உடனே நிகழ்ச்சியை ஆரம்பிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்து விட்டு கையை காட்டி செயரில் அமருமாக சைகை காட்டவே ரொம்பவும் தயக்கத்துடன் உட்கார்ந்து கொண்டேன். நாஸர் தான் முதன் முதலாக பேச ஆரம்பித்தார். எல்லோரும் வெகுவாக ரசித்துக் கொண்டே கை தட்டினோம். இப்படி ஒவ்வொரு பேராக பேச்சை முடித்துக் கொண்டிருப்பதும், கைதட்டல் ஓசை அந்த பகுதியை அதிர வைத்துக் கொண்டிருப்பதும் நடந்தேறி இறுதியில் எல்லோரும் சேர்ந்து கொண்டு ‘உப்பாவைப் பற்றி பேசுங்கள்’ ‘பேசுங்கள்’ என்று ஆர்பரித்தார்கள். குரலோசைகள் கோரஸாக ஒலித்துக் கொண்டே இருந்த போது நான் எழும்பி போய் “நண்பர்களே” என விளித்ததும் கூட்டம் அமைதி காத்தது. நெருதா ரொம்பவும் உன்னிப்பாக என்னை பார்த்துக் கொண்டிருந்தார். நேரு லேசாக கனைத்துக் கொண்டு கண்களை விரித்து என்னை பார்த்தார். நான் பேசத் தொடங்கினேன்.
அன்று மாலையிலேயே எனது பேச்சுப் பற்றிபழைய நண்பர் ஒருவரிடம் சொன்ன போது அவரும் வியப்புடன் நெற்றி சுருங்க கண்களை விரித்து, இமையை உயர்த்திக் கொண்டு உன்னிப்பாக ‘அப்படியா?’ என்று கேட்டார். குறிப்பிட்ட தினத்தில் பயிலரங்கம் நடக்க தொடங்கியது. அழைப்பிதழில் எனது பெயர் அச்சாகவில்லை என்பதை இலக்கிய நண்பாரிடம் முன்னமே தொரிவித்த போது ஏதோ தவறுதலாக உங்களுக்கு பதிலாக எனது பெயரை அச்சடித்து விட்டார்கள் போலுள்ளது என்றாலும் பயிலரங்கிலும் நீங்கள் தான் உரையாற்ற வேண்டும். நான் பேசி எல்லாம் சரி செய்து வைத்திருக்கிறேன் என்று அவர் சொல்லி இருப்பதால் தயக்கத்துடனேயே நான் பயிலரங்கத்திற்கு வந்தேன். சுமார் இருநூறு பேர் வரை கலந்து கொண்டிருந்தனர். பயிலரங்கு ஆரம்பமாகி ஒவ்வொரு பேராக பேசிக் கொண்டிருந்தனர். மக்கள் உற்சாகத்துடன் கரவொலி எழுப்பி ஆர்ப்பாரித்துக் கொண்டிருந்தனர்.
விழா மேடையில் இலக்கிய நண்பரின் பேரை விளித்து உரையாற்ற வருமாறு வேண்டுகோள் விடவும் நான் எழும்பும் முன்னரே இலக்கிய நண்பர் எழுந்து சென்றதை பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சில நிமிடங்களுக்குள்ளே இலக்கிய நண்பர் “எனக்கொரு தாத்தா இருந்தார்” என்று பேச்சை தொடங்கினார். என் தலை சுற்ற தொடங்கியது. கண்கள் இருண்டு விட்டது. நா எழ மறுத்தது. அப்படியே இருக்கையிலே சாய்ந்து கிடந்ததாக மட்டும் தான் ஞாபகம் எனது முகத்தில் தண்ணீர் ஊற்றிய இலக்கிய நண்பர் என்னாச்சு ? என்று கேட்டுக் கொண்டே கைத்தூக்காக பிடித்து மெதுவாக அரங்கிற்கு வெளியே கொண்டு வந்து ஒரு ஆட்டோவை பிடித்து டிரைவரிடம் “பத்திரமாக இவரைக் கொண்டு போய் இறக்கி விடப்பா” என்று சொல்லி விட்டு விடுக்கென்று சென்று விட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது இனிமேல் யாரிடமும் ஒருபோதும் உப்பாவைப் பற்றி சொல்லப் போவதில்லை என்று தீர்மானித்துக் கொண்டு ஆட்டோவில் ஏறினேன்.
நான் வீட்டை வந்தடைந்து ஆட்டோவை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்த போது, “வாங்க, வாங்க” என்று கோரஸாக குரலொலித்தது. நேருவும், நெருதாவும், சர்ச்சிலும் இருந்தார்கள். கூடவே மகாத்மா காந்தியும். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. “உங்களது உப்பாவை சொல்லும் கலை பற்றி காந்தியிடம் பேசிய போது ரொம்பவும் ஆர்வப்பட்டு உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதினால் வந்திருக்கிறோம். தயவு செய்து மறுக்காமல் உப்பாவைப் பற்றி பேச வேண்டும்” என்று நேரு கேட்டபோது எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.