சொல்ல முடியாத பிரச்சனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 7,767 
 
 

காளிக்கு வயிற்றைக் கலக்கியது. வேறு ஒன்றும் பிரச்சனையில்லை. இயற்கை உபாதைதான். இருட்டு சூழும் நேரத்தில் வயிற்றைக் கலக்கும். ஒரு நாள் அடைத்து வைத்ததெல்லாம் வெளியேறும் நேரம் அது.

அவளது வீட்டில் கீற்றால் அடைத்த மறைப்பு உண்டு. அங்குதான் குளிப்பாள். அது மாலை ஆறு மணிக்கு. அப்போதுதான் கீற்று முடையும் வேலை முடியும். கருவை மரத்தின் கீழே அவளும் இன்னும் சில பெண்களும் கீற்று முடைவார்கள். எரிக்கும் வெயிலுக்கு கருவை உதவாது. வேர்த்துக் கொட்டும். ஆனால், அதுதான் வீட்டின் அருகே வளர்ந்திருந்தது. அதன் நிழலில் இருப்பது பெண்ணுக்கு பெரும் உதவி. ஒன்றுக்கு இருக்க வேண்டிய தேவை அடிக்கடி வராது. அப்படியே வந்தால் கீற்றுத் தடுப்பில் ஒதுங்கிக் கொள்ளலாம். வேர்வையில் நனைந்த உடம்பை மாலையில் அங்குதான் குளிப்பாட்டுவாள். அப்புறம்தான் வயிற்றைக் கலக்கும். கலக்கினால் போய் விட முடியுமா? அதற்கு இருட்டு வர வேண்டும்.

அவள் வாழ்ந்த கிழக்குத் தெருதான் ஊரின் கடைசித் தெரு. இரண்டு பக்கம் ஊர். ஒரு பக்கம் ஓடை. மற்றொரு பக்கம் சுடுகாட்டுக்குச் செல்லும் சாலை. சாலைக்கும் இவள் வீட்டின் பின்புறத்திற்கும் இடையில் இருக்கும் தோட்டமும் புறம்போக்கும்தான் இவர்களின், அதாவது இவள் சாதிப் பெண்களின் கழிப்பிடம். தென்னந்தோப்பு, கருவை முள் என்று கலப்படமான இடம். ஆண்கள் சுடுகாட்டுச் சாலையில் நடந்து ஓடைக்குப் போவது கண்ணுக்குத் தெரியும் இடம். இவள் சாதி ஆண்கள் ஒற்றையடிப் பாதையில் நடந்து இவர்களைக் கடப்பார்கள். ஓடைக்கோ ஒடையைத் தாண்டியோ வெளிக்கியிருக்கப் போவார்கள்.

குளித்து முடித்தவள் வேகமாக அந்த இடத்தை நோக்கி நடந்தாள். இன்று நேரமாகிவிட்டது. 7 மணிக்குக் கூட்டம். தோழர் வருவார். அந்த கூட்டம் துவங்கும் முன்பு வயிற்றுப் பிரச்சனையைச் சரி செய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் கூட்டத்தில் உட்கார முடியாது.

அவள் வீட்டின் பின்புறம்தான் அந்த இடம். அங்கு இருந்து, காது கொடுத்துக் கேட்டால், கீற்று முடையும் இடத்தில் நடக்கும் கூட்டத்தில் பேசுவதெல்லாம் கேட்கும். தோழர் வந்துவிட்டார் என்று தெரிந்தது.

‘சீக்கிரம் உட்காருங்கம்மா.. இன்னிக்கு ரெண்டு கூட்டம், நொச்சிப்பட்டிக்கும் போவனும்’, என்ற தோழரின் குரல் கேட்டது.

அய்யோ என்றிருந்தது இவளுக்கு. இவளைத் தவிர எல்லோரும் வந்து விட்டார்கள் என்பதை அங்கேயிருந்து வந்த பேச்சு சப்தத்தில் உணர்ந்தாள். போகவேண்டும். ஆனால், அது… அந்த பாழாய் போன வயிற்றுக்குத் தெரியவில்லை. பொறுமிக்கொண்டேயிருந்தது.

‘எல்லாம் வந்துட்டாங்களா?’, என்ற தோழரின் குரல் கேட்டது.

‘வந்துட்டாங்க’, என்று வெள்ளையம்மாள் பதில் சொன்னதும் கேட்டது.

‘..ம்.. காளியைக் காணோம்..?’ என்றார் தோழர். காளிதான் கிளையின் முக்கியமான நபர் என்று தோழர் நினைப்பது காளிக்குத் தெரியும்.

‘காளி.. தோப்புக்குப் போயிருக்கா’, என்ற சடச்சியின் குரல் கேட்டது.

‘தோப்புக்கா..? இந்த நேரத்திலா? மட்டைத் தூக்கவா?’ என்றார் தோழர்.

அவரின் பரிவு இவளுக்கு இதமாக இருந்தாலும், எரிச்சலாக வந்தது. வெட்கக் கேடாக இருந்தது. அவசரமாக எழுந்தாள்.

‘சரி.. ஆரம்பிக்கலாம்.. தோழர் காளி வந்து சேந்துகிட்டும்’, என்று தோழர் கூட்டத்தை ஆரம்பித்தார்.

இவள், தெருவிளக்கு வெளிச்சம் படாமல் மறைந்து கீற்றுத் தடுப்புக்குள் சென்று சுத்தம் செய்துகொண்டு, சத்தம் எழுப்பாமல் போய் கூட்டத்தின் கடைசி நபராக உட்கார்ந்துகொண்டாள்.

வயிறு இன்னும் அடங்கவில்லை. என்ன சாப்பிட்டோம் என்று யோசித்தாள். அப்புறம் கவனத்தை மாற்றிக்கொண்டு தோழர் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தாள். வாய்ப்பில்லை என்றால் வயிறு அடங்கிக்கொள்ளும் என்பது காளிக்குத் தெரியும். பெண்ணாகிய இவள் வேறென்னதான் செய்ய முடியும்? இவளுக்குப் பழகிவிட்டது.

தோழர் என்பது அவர்களின் கிளைப் பொறுப்பாளர். ஏரியா கமிட்டியிலிருந்து வருகிறார். ஆள் வாட்டசாட்டமாக இருப்பார். ஆனால், குழந்தை போல பேசுவார். சின்னப் பிள்ளைகள் எப்போதும் அவரைச் சுற்றிக்கொள்ளும்.

‘சரி.. கிராமத்துல வேறென்ன பிரச்சன?’, என்றார் தோழர்.

சொல்லியே ஆக வேண்டும் என்று காளிக்குத் தோன்றியது. ஆனால், எப்படி சொல்வது? அதுவும் ஓர் ஆணிடம்?

காளியெல்லாம் தீண்டத்தகாத சாதிக்காரர்கள். அது என்னவோ தெரியவில்லை. தோழர் இவர்கள் இடத்தில் தவமா தவமிருந்து கட்சிக் கிளையை உருவாக்கியிருந்தார். அவர் பி.சி. தெருவுக்கெல்லாம் போவதில்லை. ஏனென்று இவள் யோசித்திருக்கிறாள். ஆனால் புரிந்ததில்லை.

காளி 12 வரை படித்தவள் தீண்டாமை என்பது குற்றம் என்று துவங்கி பாடப்புத்தகத்தில் எழுதியிருந்ததைப் பார்க்கும் போதெல்லாம் இவளுக்கும் கோபம் வரும்.. ‘அப்புறம் ஏண்டா உட்டு வச்சிருக்கிங்க?’ என்று மனதுக்குள் கத்துவாள்.

இவள் பள்ளர் சாதி. பள்ளியில் படிக்கும் போது கள்ளர் சாதிப் பையன்கள் இவளைப் பற்றி, இவள் சாதியைச் சேர்ந்த மற்ற பெண்களப் பற்றிப் பேசுவதெல்லாம் இவளுக்குக் கேட்கும். ஆனால், வெளியே சொல்ல முடியாது. அப்படிப் பேசுவார்கள் பாவிகள்.

அதெல்லாம் பரவாயில்லை என்று இப்போது தோன்றியது. அந்த நிலத்தை காவேரியம்மா விற்றுவிட்டாள். அவரும் கள்ளர் சாதிதான். அந்த அம்மா அடாவாடிப் பேர்வழி, வீட்டுக்காரர் எப்போதோ செத்துப்போய்விட்டார். ஆனால், மூன்று ஆண் பிள்ளைகள். பிள்ளைகளை காவிரியம்மாதான் வளர்த்தாள். வீட்டுக்காரரைப் போலவே அடவாடி செய்து விவசாயம் செய்து பிள்ளைகளை வளர்த்தாள். எல்லா சாதிக்காரர்களின் பாத்திரம் பண்டம் முதல் அனைத்தையும் அடகு பிடிப்பாள். அடகு பிடித்த பாத்திரங்களைப் போட்டுவைக்கவென்றே அவளுக்குத் தனியே ஒரு வீடு இருக்கிறது. வீட்டுக்காரர் பிடித்து வைத்திருந்த புறம்போக்கில் தென்னையை நட்டுவைத்தாள். அது இவளின் சாதிக்காரப் பெண்களுக்குப் பிரச்சனையில்லை. இருட்டின பின்தானே ஒதுங்கப் போக வேண்டும். கருவையைக் காட்டிலும் தென்னை நல்லது என்று நினைத்தார்கள். இருட்டும் இருக்கும். முள்ளும் இருக்காது என்று நினைத்தார்கள்.

பத்துப் பதினைந்து வருஷம் போனபின்பு அதுதான் பிரச்சனை ஆயிற்று.

யாரோ முகம் தெரியாத ஆட்கள் வந்து தென்னையை வெட்டினார்கள். புறம்போக்கில் இருந்த தென்னையையும் காவிரியம்மாவின் பட்டா நிலத்தில் இருந்த தென்னையையும் வெட்டினார்கள். இவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

அப்புறம் புறம்போக்கை மறித்து மண் கொட்டினார்கள். இவர்களுக்குப் பதைபதைத்தது. என்ன நடக்கிறது?

காளிதான் விசாரித்தாள். புறம்போக்கையும் சேர்த்து எல்லா நிலத்தையும் திண்டுக்கல்காரருக்கு, காவிரியம்மா விற்றுவிட்டாளாம்.

பிளாட் போட்டு விற்பது வாங்கியவரின் நோக்கமாம். சாலையை ஒட்டி கிழக்குப் பக்கத்தில் விற்கப்பட்ட நிலத்தில் நுழையலாம். ஆனாலும், இடத்தை வாங்கிய திண்டுக்கல்காரர் மேற்குப் பக்கத்தில் உள்ள புறம்போக்கில் பாதை போடுகிறார். பட்டா இடத்தில் பாதை போட்டால் மனை எண்ணிக்கை குறையும் என்று திண்டுக்கல்காரருக்குக் கவலையாம்.

அந்த சாலையில்தான் ஆண்கள் நடந்து போய் ஓடையில் வெளிக்கி இருப்பார்கள். ஆண்கள் கடக்கும்போதெல்லாம் பெண்கள் எழுந்து நின்று கொள்வார்கள். சாலை, கள்ள சாதிப் பெண்கள் உட்காரும் இடம். ‘இது நானில்லை’ என்பது போல முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். இருட்டாக இருந்தாலும் வெட்கம் இருக்கிறதல்லவா? அவர்களின் நிலை இவள் சாதிப் பெண்களை விட மோசம். பல சாதி ஆண்களும் அந்த சாலையின் வழிதான் ஓடைக்கு ஒதுங்கப் போவார்கள்.

காளியின் சாதிப் பெண்கள் தென்னந்தோப்பைப் பயன்படுத்துவார்கள். அல்லது அவர்கள் சாதி சாமி அம்புக்குத்தும் புறம்போக்கைப் பயன்படுத்துவார்கள். அந்த சாலையில் இருந்து பாதை போட்டு மனை போட்டுவிட்டால் அப்புறம் எல்லாம் வீடாகிவிடும். அப்புறம் பெண்கள் எங்கே ஒதுங்கப்போவது? ஆண்களுடன் போட்டிப் போட்டுக்கொண்டு ஓடையில் போயா உட்காரமுடியும்? இதுதான் இரண்டு நாட்களாகப் பெண்களின் பிரச்சனை.

இந்தப் பிரச்சனையை தோழரிடம் சொல்லலாமா என்று காளி யோசித்தாள்.

அதற்குள் தோழர் மற்ற விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். மன்மோகன்சிங், நூறுநாள் வேலைக்குக் குறைவாகப் பணம் ஒதுக்கியது, ஜெயலலிதா பால் விலையேற்றியது என்று ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார். வழக்கமாக தோழர் பேசுவது காளிக்குப் பிடிக்கும்.. ஆனால், இன்று ரசிக்கவில்லை.

கூலி குறையுது, சாப்பாடு குறையுது என்பதுதான் அவர் சொல்லும் செய்தி. வெளிக்குப் போக வாய்ப்பில்லாவிட்டால் சாப்பாடு குறைவது நல்லதுதானே என்று காளி யோசித்தாள். அவஸ்தை குறையுமல்லவா?

ஏதோ ஒரு போரட்டம் பற்றி தோழர் பேசிக்கொண்டிருந்தார். காளிக்கு அதிலெல்லாம் மனசு போகவில்லை. வயிறு பொறுமிக்கொண்டேயிருந்தது.

இரவில் ஒதுங்குவது பெண்களுக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. அது பழகிவிட்டது. ஆனால், வயிறு பொறுமினாலோ அல்லது பேதியாகிவிட்டாலோ பிரச்சனைதான். அது பகல் என்றால், செத்துப்போய்விடலாம் என்று தோன்றும் அளவுக்கு அவஸ்தையாக இருக்கும். பாவாடையிலேயே போய்க்கொண்டு பாவாடையிலேயே துடைத்துக்கொள்ள வேண்டும். என்ன மனுஷப்பிறவி என்று தோன்றும். மாட்டுக்கு உள்ள சுதந்திரம் கூட பெண்ணுக்கு இல்லையென்பது தெரியும்.

கூட்டம் முடியும் நேரம். இதுவரை காளி ஒன்றும் பேசவில்லை.

‘காளி.. என்னம்மா பிரச்சன? நீ பேசவேயில்ல?’ என்று தோழர் கேட்டார்.

காளிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால், பொறுமும் வயிறு அவளிடம் சொன்னது… ‘வாயைத் தொறடி நாய’, என்று.

என்ன வெட்கம் இருக்கிறது? ஓடைக்கு ஒதுங்கப் போகும் ஆண்கள் தென்னந்தோப்பு நடைபதையைக் கடக்கும் போதெல்லாம் பி.ட்டி வாத்தியார் ஒன் டூ திரி சொன்னது போல எழுந்து அமர்ந்திருக்கிறாள். என்ன வெட்கம் வேண்டிக்கிடக்கிறது?

‘சாப்பிடறது கூட எங்களுக்குப் பிரச்சனையில்ல.. ஆனா..’

‘சும்மா இருடி‘, என்று வெள்ளையம்மா அதட்டினாள்.

‘அப்ப நீ சொல்லு’, என்று காளி முடித்துக்கொண்டாள்.

சற்று நேரம் அமைதி. அந்தக் கிளையில் எல்லோரும் பெண்கள்தான். தோழர் மட்டும்தான் ஆண். ஆனால், அவர் ஆண்தானா என்று காளிக்குச் சந்தேகம் வரும். பெண்ணைப் பார்ப்பது போல அவர் என்றும் அவளைப் பார்த்ததில்லை. அவளை மட்டும் அல்ல, எவளையும் பார்த்ததில்லை. அவருடைய கண்கள் நேராகக் கண்களைப் பார்க்கும். மாராக்கு விலகி அமர்ந்திருக்கும் பெண்ணைக் கூட அவருக்குத் தெரியாது. ‘சரியான பொட்ட’, என்று இவள் சில நேரம் யோசித்திருக்கிறாள்.

இவரிடம் சொல்லிவிடலாம் என்று தோன்றியது. சொல்லிவிட்டாள்.

சடச்சி இடையில் புகுந்து ’ச்சூ..’ என்றாள்.

‘அப்ப நீ சொல்லு’, என்று காளி வாயை மூடிக்கொண்டாள். அப்புறம் மௌனம். தோழர் குறுக்கிட்டு ‘மேல சொல்லுங்க தோழர் காளி’, என்றவுடன் பேச ஆரம்பித்தாள்.

தோழர் தலையைக் கவிழ்ந்துகொண்டு உட்கார்ந்திருந்தார். அவரின் முகத்தைக் கைகள் தாங்கிக்கொண்டிருந்தன. அந்த நேரம் பார்த்து கரண்ட்டும் போய்விட்டது.

தோழர் நிமிரவேயில்லை. நேரம் போய்க்கொண்டிருந்தது.

வெள்ளையம்மா போய் மண்ணெண்ணெய் விளக்கு கொண்டு வந்தாள். தோழர் நிமிர்ந்தார். செல்லை அழுத்தி மணியைப் பார்த்துக்கொண்டார்.

‘நீங்க நொச்சிப்பட்டிப் போக நேரமாயிடுச்சா?’, என்று சடச்சி கேட்டாள். எப்படியாவது இந்த வெட்கக் கேட்டிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று அவள் யோசித்தாளோ..?

தோழர் நிமிர்ந்து அனைவரையும் பார்த்தார். ‘மன்னிக்கனும்.. எங்க கிராம ஆய்வுல இது வல்ல.. இந்தப் பிரச்சனை வல்ல.. நாங்கெல்லாம் ஆம்பிளைதானே’, என்று ஏதேதோ பேசினார். அவர் தடுமாறுவது அவருக்கே புரிந்தது போல, ஒரு சிகெரெட்டை எடுத்து பற்றவைத்துக்கொண்டு, ஆழ்ந்து புகையை இழுத்தார்.

‘இதுல யோசிக்க எதுவும் இல்ல.. தலித்துகளோடு வாழ்வாதரத்தைப் புடுங்கிறதும் வன்கொடுமைதான்.. ஒங்க பயன்பாட்டுல இருந்த பொறம்போக்கு ஒங்க வாழ்வாதாரம்தான். சாதியச் சொல்லித் திட்டுறது மட்டுமில்ல, வாழ்வாதாரத்தைப் புடுங்கறதும் வன்கொடுமைதான்’, என்றார், அவர் யோசிக்கிறாரா பேசுகிறாரா என்று காளிக்குப் புரியவில்லை. தோழர் மறுபடியும் புகையை உள்ளே இழுத்துக்கொண்டார்.

அப்புறம் அவர் பேசியதை அந்தப் பெண்கள் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். காலையில் குட்டி யானை- அதாவது டாட்டாவின் சின்ன லாரி-பிடிக்க வேண்டும். கலெக்டர் ஆபீஸ் போக வேண்டும். இரண்டு இரண்டு பேராகப் போய் கலெக்டர் அறைக்குள் நுழைந்துகொண்டு பிரச்சனை செய்ய வேண்டும். இதுதான், தோழர் சொல்ல, அவர்கள் ஒப்புக்கொண்ட திட்டம். பெண்கள் மத்தியில் நிறைய பயம் தெரிந்தது. வெட்கம் தெரிந்தது.

’ஏண்டி.. என்னடி வெட்கம்? ஆம்புள போவும்போது மொகத்தை திருப்பிக்கிறம்ல? பாவாடையில போயிட்டு காலு ஒட்ட தெருவுல நடக்கிறம்ல.. அப்புறம் என்ன வெக்கம் கேக்குது?’, என்று காளி இரைந்தாள்.

தோழர் நொச்சிப்பட்டி போகவில்லை. நிறைய பேசினார்கள். அன்று இரவு அங்கேயே தங்கினார்.

மறுநாள் காலையில், நான்கு குட்டி யானைகள் நிறைய பெண்கள் கலெக்டர் ஆபீசுக்கு புறப்பட்டுப் போனார்கள்..

அவர்களோடு காளி செல்ல முடியவில்லை. பொறுமிய வயிறு பொங்கித் தீர்த்துவிட்டது. கடுமையான பேதி. அந்த பகலை அவள் கடத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

மாலையில் ஊர் கூட்டம் நடந்தது. தோழர் வந்திருந்தார். ஆனால், வெள்ளையம்மாள்தான் நடந்ததைச் சொன்னாள். கலெக்டரைப் பார்க்க நான்கு பேரைத்தான் அனுமதித்தார்களாம். தோழர் நான்கு பேரை அழைத்துக்கொண்டு, கண்ணைக் காட்டிவிட்டுச் சென்றாராம். அதனைப் புரிந்துகொண்ட பெண்கள், அந்த வழி, இந்த வழி என்று புகுந்து கலெக்டர் அறையை நிரப்பிவிட்டார்களாம். சடச்சிதான் போட்டு உடைத்திருக்கிறாள். கலெக்டர் முகம் செத்துவிட்டதாம். நாளையே தாசில்தார் வருவார். ஆக்கிரமிப்பை அகற்றுவார் என்று சொன்னாராம்.

அதற்கிடையே பத்திரிகையாளர்கள் வெளியே திரண்டிருந்த பெண்களைப் பார்த்து கேள்வி கேட்க மறுநாள், எல்லாப் பத்திரிகையிலும் பிரச்சனை நாறியது. இவர்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் இடத்தைப் போல.

சொன்னபடி தாசில்தார் வந்தார். சர்வேயர் படையே வந்திருந்தது. ஒரு லாரி நிறைய போலீஸ் வந்திருந்தது. காவிரியம்மா வீடு பூட்டிக்கிடந்தது. அவரையோ அவரது மகன்களையோ பார்க்க முடியவில்லை.

சாமி அம்பு குத்தும் புறம்போக்கு இடத்தின் அளவு இரண்டு மடங்கு அதிகமானது. முயல் கட்டும் இடம் மூன்று மடங்காகியது. பாதைக்காக கொட்டப்பட்டிருந்த மண்ணை ஜேசிபி அள்ளி அகற்றியது. கல்லை ஊன்றிய சர்வேயர்கள், இளநீர் சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டனர். கூடமாட உதவிக்கு நின்றது இவள் தெரு ஆட்கள்தான். கள்ள சாதி ஆட்கள் வேடிக்கைப் பார்த்ததோடு சரி.

இவள் யோசித்தாள். ‘ஒதுங்குறது எல்லாருக்கும் பொது.. ஆனா.. பள்ளச் சாதி ஆளுங்களத்தவிர ஏன் வேற யாரும் அளக்கும்போது வரல?’.

அப்புறம் ஒரு வாரம் எந்தப் பிரச்சனையும் இல்லை. எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போதுதான் பிரச்சனை வந்தது.

காவிரியம்மா வீடு திறந்திருந்தது. அப்போதே காளி யோசித்தாள். ‘இந்த அம்மா எங்க போயிருந்தது? இன்னிக்கு ஏன் வந்துச்சி?’

பத்து மணி வாக்கில் பதில் கிடைத்தது. இரண்டு லாரிகளில் மண் வர, ஒரு ஜேசிபி அவற்றை நிரவி பாதை சமைத்தது. காவிரியம்மா வீட்டு வாசலில் அண்ணா கைகாட்டும் கொடி பறந்த கார் நின்று கொண்டிருந்தது.

இவளுக்குப் புரிந்துவிட்டது. தோழரை அழைத்தாள்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட தோழர் ஒரு கேள்வி கேட்டார். ‘பெண்கள் என்னா செய்யிறாங்க?’.

‘எல்லாரும் கூட்டமா இருக்காங்க தோழர்.. நீங்க வரணும்’

‘வரேன்.. அதுக்கு முன்னாடி ஸ்டேஷனுக்கு போன் போட்டுட்டு, என்னா சொல்றாங்கன்னு சொல்லு’, என்றார் தோழர்.

அவர் சொன்னபடியே செய்தாள். தோழரின் மூளையைப் புரிந்து கொள்ளமுடியாது என்று காளிக்குத் தெரியும். போன் போட்டு முடித்து விட்டு தோழரை அழைத்தாள்.

அவர் போனை எடுத்தபோது நிறைய வண்டி சப்தம் கேட்டது. தோழர் வந்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்தது.

தோழர் நேரடியாக கேள்வி எழுப்பினார். ‘ஸ்டேஷன்ல என்ன சொன்னாங்க?’ இவள் சொன்னாள். ‘ஸ்டேஷன்ல ஆளேயில்லையாம்’.

எல்லாரும் சாணாம்பட்டி திருவிழா பந்தோபஸ்த்து போயிருக்கிறார்கள் என்று சொன்னதைச் சொன்னாள்.

அவர் சிரித்தார். ‘நானும் தாசில்தாரைக் கூப்பிட்டேன்.. அந்த அம்மா லீவுல இருக்காங்களாம். ஏதாவது புரியுதா?’.

‘அப்ப என்ன செய்யிறது?’, என்று கேட்டாள் காளி பதட்டத்துடன்.

பதிலுக்கு தோழர் கேட்டார், ‘என்ன ஆயுதம் கையில இருக்கு?’

’வூட்ல அருவா இருக்கு தோழர், தென்ன மட்ட வெட்டுற அருவா’

‘அதெல்லாம் இவனுங்களுக்குத் தேவையில்லை, வௌக்குமாறு இருக்கா..? எடுத்துட்டு போ, நம்ம தோழர்கள கூப்பிட்டுக்க.. எல்லாப் பெண்களையும் கூப்பிட்டுகிட்டு.. அவுங்க வந்தாலும் வராட்டாலும் முன்னாடி போயி ஜெசிபி முன்னாடி நில்லு.. நா அதுக்குள்ள அங்க வந்துடுவேன்”.

காளிக்குப் புரியவில்லை. ஆனால், தோழர் சொன்னது நினைவுக்கு வந்தது. போராட்ட களத்தில் கட்டளையை அமுல்படுத்த வேண்டும். அதுதான் கம்யூனிஸ்ட்டின் அடையாளம்.

புறப்பட்டாள். வெள்ளையம்மாவுக்குக் குரல் கொடுத்தாள். சடச்சியைக் கூப்பிட்டுக்கொண்டாள். தெருமுனையைக் கடந்து இடது பக்கம் திரும்பியபோது கவனித்தாள். அவர்களுக்குப் பின்னே பத்து நூறு பெண்கள் வந்து கொண்டிருந்தனர். அனைவர் கையிலும் துடைப்பம் இருந்தது. சிலர் கையில் அருவாளே இருந்தது.

காளி வலது பக்கத் திருப்பத்தைத் தாண்டி நடந்து, ஜேசிபியை பார்த்தபோது அதிர்ந்துபோனாள். ஜேசிபியை கள்ள சாதிப் பெண்கள், இவர்களுக்கு முன்னதாக, சூழ்ந்துகொண்டிருந்தனர்.

‘அதானே.. நம்ம பாடு பரவாயில்ல.. அவளுக சுடுகாட்டுப் சாலையிலல்ல உட்காரனும்’. என்று சடச்சியிடம் காளி சொன்னாள்.

அண்ணா படம்போட்ட கொடி பறந்த அந்த காரைக் காணவில்லை. காவிரியம்மா வீடும் பூட்டிக்கிடந்தது. ஏன் பயந்து ஓடிவிட்டார்கள்?

கள்ளசாதிப் பெண்களுடன், பள்ள சாதிப்பெண்களும் ஜேசிபியை மறித்து நின்றனர். சடச்சி ஜேசிபியில் ஏறி டிரைவரை விளக்குமாற்றால் விளாசினாள். அவளோடு கள்ள சாதிப்பெண் கண்மணியும் சேர்ந்துகொண்டாள். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இடம் களேபரம் ஆகிவிட்டது. ஆண்கள் பலரும் இவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார்கள். மற்ற பல ஆண்கள் குழுமி நின்று வேடிக்கைப் பார்த்தார்கள்.

அப்புறம் போலீஸ் வந்து டிரைவரையும் ஜேசிபியையும் மீட்டுச் சென்றது. தோழர், அருகாமை மந்தையில் அமர்ந்து எல்லாவற்றையும் பார்த்து, உதடு பிரியாமல் சிரித்துக்கொண்டிருந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *