சொல்லாத சொல்லுக்கு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 26, 2015
பார்வையிட்டோர்: 12,759 
 
 

சங்கர் அதை எதிர்பார்க்கவில்லை. முகம் குப்பென்று வியர்த்தது. பாக்கெட்டிலிருந்து கர்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னிடம், “”என்னதிது குமார்?” என்றான். எனக்கும் ஒன்றும் புரியவில்லை.

“”என்ன பண்ண அவரை?” என்றேன்.

சொல்லாத சொல்லுக்கு

அந்த நபர், நாங்கள் உட்கார்ந்திருந்த இருக்கையில் இருந்து இரண்டு வரிசை முன்னால் இருந்த இருக்கையின் கம்பியில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான். வலது கையால் மேலிருந்த கம்பியைப் பிடித்திருந்தான். இடது கையில் ஏதோ ஓர் வாரப் பத்திரிக்கையைச் சுருட்டி வைத்திருந்தான். வலது தோளில் ஒரு கறுப்புப் பையை மாட்டியிருந்தான். எங்களைப் போலவே, அவனும் ஏதாவது ஒரு வேலைக்குப் போகிறவனாகத் தான் இருக்க வேண்டும். இதற்கு முன்னால் பார்த்த மாதிரி தெரியவில்லை.

பேருந்து சென்ட்ரல் ரயில் நிலைய மேம்பால வளைவில் திரும்பிப் போய்க் கொண்டிருந்தது.

நான் கையிலிருந்த பத்திரிகையைப் புரட்டத் தொடங்கினேன்.

“”அந்தாளு இங்கியேதான் பார்த்துக்கிட்டு இருக்கான் குமார்” என்றான் சங்கர் சன்னமான குரலில், அவனுக்குக் கேட்காத மாதிரி. நான் நிமிர்ந்து பார்த்தேன். ஆமாம். அவன் மட்டுமல்ல. சற்றுமுன் நடந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, சுவாரசியமாக இன்னும் ஏதாவது நடக்குமென்ற எதிர்பார்ப்பில் நின்றிருந்த இன்னும் சிலரும் எங்கள் இருவர் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தனர்.

பிரச்னைகள் தாம் எப்படியெல்லாம் வருகின்றன?

சங்கருக்கும் எனக்கும் தேனாம்பேட்டையில் ஒரு கன்சல்டன்சி அலுவலகத்தில் வேலை. இளம் பொறியாளர்கள். நான் இரண்டு வருடங்கள் சீனியர். தினமும் பெரம்பூரில் இருந்து ரயிலில் சென்ட்ரல் வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து தேனாம்பேட்டை பயணம். அலுவலகம் போய்ச் சேர ஒன்றரை மணி நேரம் ஆகும். அந்த ஒன்றரை மணி நேரமும் பேசிக் கொண்டே வருவோம். பெரம்பூரில் ரயிலில் ஆரம்பிக்கும் பேச்சு, தேனாம்பேட்டை சிக்னலை பேருந்து நெருங்கும் வரை தொடரும். அலுவலகத்தில் இருக்கும் அத்தனை பேரையும் அலசுவோம்.

குறிப்பாக எங்கள் டீம் லீடர் சங்கரனைக் குறித்துதான் நிறைய. அவரது அமைதியான அணுகுமுறை, எந்த வேலையையும் நிதானமாக புரியும்படி எடுத்துச் சொல்லும் விதம், தாராளமான அவரின் இளகிய மனம், அத்தனை சீனியர் என்றாலும், எல்லோருக்கும் முன்னால் காலை எட்டு மணிக்கே அலுவலகம் வந்து விடுவது, இப்படி நிறையப் பேசுவோம். அவரைப் போல ஆக வேண்டும், குறைந்த பட்சம் அலுவலகம் வரும் நேரத்திலாவது என்று பேசிக் கொள்வோம். இதுநாள் வரை 9.30 மணிக்கு முன்னால் அலுவலகத்திற்குள் நுழைந்தது கிடையாது.

அன்றைக்காவது சீக்கிரம் போகலாம் என்ற முனைப்பில், காலியாக வந்த பேருந்தில் அடித்துப் பிடித்து ஏறினோம். சங்கர் தான் முதலில் ஏறும் வகையில் பேருந்து நின்றிருந்தது. அதே சமயத்தில், ஏற வந்த ஓர் ஆளோடு, சங்கர் லேசாக இடித்துக் கொள்ள நேர்ந்தது. அந்த ஆள் வழி விட்டு, “”நீங்க ஏறுங்க” என்றான். சங்கர் அவரைப் பார்த்து, “”பரவால்ல நீங்க ஏறுங்க” என்றான். பேருந்து நகர ஆரம்பித்தது.

பின்னால் இருந்து, “”யாராவது சீக்கிரம் ஏறுங்கப்பா” என்று குரல்கள் கேட்டன. இருவருமே லேசாக இடித்தபடி ஏறினார்கள். நான் பின் தொடர்ந்தேன்.

சங்கர் ஓடிப் போய், காலியாக இருந்த ஓர் இருக்கையில் ஜன்னலோரம் உட்கார்ந்து, எனக்கும் இடம் பிடித்தான்.

சங்கரோடு இடித்தபடி ஏறியவருக்கு, இருக்கை ஏதும் கிடைக்கவில்லை. எங்களுக்கு இரண்டு இருக்கைகளுக்கு முன்னால் சாய்ந்தபடி நின்று கொண்டான். நடத்துநர், முன்புறம் இருந்து டிக்கட் கொடுத்தபடி வந்து கொண்டிருந்தார். அந்த கறுப்புப் பைக்காரன், நடத்துநர் பக்கமும் எங்கள் பக்கமும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று, சங்கரைப் பார்த்து, “”என்ன சார் பார்க்கிறீங்க? நீங்க பார்த்தீங்கன்னுதான் நான் பார்த்தேன். நீங்க முறைச்சீங்கன்னா நானும் முறைப்பேன்” என்றான்.

சங்கர் அதை எதிர்பார்க்கவில்லை. முகம் குப்பென்று வியர்த்தது. பாக்கெட்டிலிருந்து கர்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டான். என்ன செய்வதென்று தெரியாமல், என்னைப் பார்த்தான்.

நான் அவன் கையை சற்று அழுத்தி, “”அமைதியாக இரு” என்றேன்.

பத்திரிகையை அவன் கைகளில் திணித்து, “”நிமிர்ந்து பார்க்காம படிச்சிக்கினே வா” என்று சொல்லிவிட்டு, நானும் ஜன்னல் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

எல்லோரும் எதிர்பார்த்தபடி, அதற்குப் பிறகு, சுவாரசியமாக எதுவும் நடக்கவில்லை. அடுத்த நிறுத்தத்திலேயே, அந்தக் கறுப்புப் பைக்காரன், உட்கார இடம், கிடைத்தது. நான் சங்கரைப் பார்த்தேன். கண்கள் பத்திரிகையைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், இன்னமும் சற்று படபடப்போடு தான் இருந்தது முகம். சைகையிலேயே அந்த ஆள் உட்கார்ந்து விட்டதைச் சொன்னேன்.

நாங்கள் அலுவலகத்துக்குள் நுழையும் போது மணி 9.40.

சங்கர் ஒன்பதாவது மாடியில் தன் இருப்பிடம் நோக்கிப் போனான். என் இருக்கை எட்டாவது மாடியில்.

என் இருக்கையை நெருங்கும்போது, “”என்னம்மா…எவ்ளோ பைன் கட்டினே?” என்றார் சங்கரன்.

ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தேன்.

“”பைனா…என்ன சார் சொல்றீங்க?” என்றேன்.

“”ஸ்டேஷன்ல ராங்கா கிராஸ் பண்ணினீங்களாமே நீயும் சங்கரும், அவன் எங்கே வந்துட்டானா?” என்றார் மறுபடி.

“”சார்..குழப்பாம, கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்க சார், என்ன பைன், யார் சொன்னாங்க?”

“”ஒரு மணி நேரம் முன்னால, ஒரு ஆள் இங்க வந்தாருப்பா. ஆபீஸ்ல நான் மட்டும்தான் இருந்தேன். நேரா எங்கிட்ட வந்து, நீயும் சங்கரும் சென்ட்ரல் ஸ்டேஷன்ல, ஏதோ ராங்கா கிராஸ் பண்ணி, உங்களை போலீஸ் பிடிச்சு வச்சிருக்கு, பைன் கட்ட பணம் வேணும்னு இருநூறு ரூபா வாங்கிட்டு போனாருப்பா. பேரு கூட கிரியோ என்னவோ சொன்னாரு”

எவனோ தெளிவாக திட்டமிட்டு விளையாடி இருக்கிறான். யாராக இருக்கும்? நிச்சயம் எங்களோடு தினமும் ரயிலில் வருபவனாகத்தான் இருக்கும். நாங்கள் பேசியதை வைத்து, திட்டமிட்டு அழகாக அரங்கேற்றப்பட்ட மோசடி நாடகம்.

அப்படியே சென்ட்ரல் வரை ரயிலில் வருபவனாக இருந்தாலும் அலுவலகத்தை எப்படிக் கண்டு பிடித்தான்? இந்த அளவுக்குத் திட்டமிட்டு செயல்பட்டவனுக்கு பின்தொடர்ந்து வந்து அலுவலகத்தைக் கண்டுபிடிப்பதா பெரிய விஷயம்?

சே, எந்த அளவுக்கு ஓட்டை வாயாக உளறிக் கொண்டு வந்திருக்கிறோம். மிகச் சரியாக அத்தனையையும் உள்வாங்கிக் கொண்டு, நாங்கள் வருவதற்குள் வந்து, வேலையை முடித்துப் போயிருக்கிறான்.

“”கிரியா? அப்படி யாரையுமே தெரியாதே சார்” என்றேன். அதற்குள் பக்கத்து மேஜை ஆட்கள் வந்து சுற்றி நின்று கொண்டனர்.

“”தெரியாதா அவ்ளோ தெளிவா, உங்க ரெண்டு பேர் பேரு, தினம் ரயில்ல பெரம்பூர்ல இருந்து சென்ட்ரல் வர்றது எல்லாத்தையும் தெளிவாச் சொன்னானே” என்றார் சங்கரன்.

“”எவனோ தெரியல சார், நாங்க பேசுனத வச்சு, பிளான் போட்டு பண்ணியிருக்கான். பார்க்க எப்படி இருந்தான் சார்?”

“”பாக்க டீசண்டா, கொஞ்சம் நாகேஷ் ஜாடையில இருந்தான்பா”

அவர் சொன்ன ஜாடையில், யாராவது நினைவுக்கு வருகிறார்களா? என்று யோசித்தேன். ஒரு முகமும் நினைவுக்கு வரவில்லை.

“”சரி, விடுங்க சார்” பர்சில் இருந்து இருநூறு ரூபாய் எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு, இருக்கைக்குப் போய் வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன்.

மனம் வேலையில் ஒட்டாமல், ஏதாவது ஒரு முகம், சங்கரன் சொன்ன ஜாடையில் தோன்றுகிறதா? என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஒரு காபி சாப்பிட்டால் தேவலாம் போல் இருந்தது. எழுந்து காரிடாருக்குப் போனேன். வழக்கமாக பத்து மணிக்கு மேல் காபி கொண்டு வருபவன், அன்று சீக்கிரம் வந்திருந்தான்.

ஒரு காபி என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஒன்பதாவது மாடியில் இருந்து படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தான் சங்கர்.

அதற்குள் செய்தி அடுத்த மாடிக்குப் போய்விட்டது போல.

“”என்னாச்சு குமார்?” என்றான்.

அதுவரை, கேட்டவர்களுக்கு எல்லாம், திருப்பித் திருப்பிச் சொன்ன அலுப்பில், மெலிதாய் புன்னகைத்தேன்.

“”எதாச்சும் பேசினாத்தானே புரியும். இப்படி சிரிச்சா?”

என்றான் மறுபடி.

“”விலாவாரியா நம்ம பேசினது தான், எல்லாத்துக்கும் காரணம்” என்றேன்.

– ஏப்ரல் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *