சொர்க்கமல்ல நரகம்

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 7,934 
 

மூர்த்தி வந்திருப்பதாய் பியூன் வேலு வந்து சொன்ன போது, நான் எம்.டி.,க்கு தர வேண்டிய ரிப்போர்ட்டை அவசர, அவசரமாக தயாரித்துக் கொண்டிருந்தேன்.
சொர்க்கமல்ல நரகம்சொல்லிவிட்டு நகர்ந்தவனை கேள்வியால் நிறுத்தினேன்…
“”எந்த மூர்த்தி?”
“”என்ன சார்… அதுக்குள்ள மறந்துட்டீங்க… உங்க சிஷ்யப் புள்ளே… நாலு வருஷத்துக்கு முன், நம்ம கம்பெனியில வேலை பார்த்தானே… அந்த மூர்த்தி தான்.”
உள்ளுக்குள் மகிழ்ந்த நான், “”இருக்கச் சொல்லு… வர்றேன்!” என்றேன்.
ரிப்போர்ட்டை கண்கள் சரி பார்க்க, விரல்கள் கம்ப்யூட்டரில் விளையாட, மனம் மட்டும் மூர்த்தி, என்னுடன் இருந்த நாட்களை புரட்டலாயிற்று…
முதன் முதலாக அவனை பார்த்த அந்த நாளில் காலை, 9:00 மணிக்கு நான் கம்பெனியின் இரண்டாவது மாடிக்கு வந்து, என் இருக்கையில் அமர்ந்த சில நிமிடங்களில், ரிசப்ஷனில் இருந்து யாரோ தேடி வந்திருப்பதாக, இன்டர்காமில் செய்தி வந்தது.
“மேலே அனுப்புங்க…’ என்று சொன்ன சிறிது நேரத்தில், என் அறைக்குள் நுழைந்தான் மூர்த்தி.
இன் செய்யாத கசங்கிய சட்டை. முன்புறம் வெளுத்த பேன்ட். ஹவாய் செருப்புடன் என் அறைக்குள் வந்தவனை பார்க்கும் போது, ஞாயிறுகளில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி, வீடு திரும்புகிற ஸ்கூல் பையன் தான் நினைவுக்கு வந்தான்.
“உட்காருப்பா… சொல்லு!’
“சார்… இங்க வேலை காலி இருக்குன்னு மருதாசலம் அனுப்பினாரு…’ கண்களில் மருட்சியுடன் வாய் திறந்தான் மூர்த்தி.
“மருதாசலமா… அது யாரு?’ புரியாமல் கேட்டேன் நான்.
“இந்த பில்டிங் ஓனராம்… மோகன்னு ஒருத்தரை பார்க்கச் சொன்னாரு…’
“மோகனா… அது யாருன்னு தெரியுமா?’ என்றவுடன் சட்டென்று பதறி எழுந்த மூர்த்தி, “நீங்களா சார்?’ என்று கேட்டதும், எனக்கு சிரிப்பு வந்தது.
“இல்ல… அவர் நம்ம எம்.டி., உன் பேரு?’
சொன்னான்.
“இங்கே, இப்போதைக்கு வேலை ஒண்ணும் காலியில்லையே…’ என்றவுடன் முகம் வாடிய மூர்த்தி, என்னை யோசிக்க வைத்தான்.
“ம்… உனக்கு டூ வீலர் ஓட்டத் தெரியுமா?’
“தெரியாது சார்!’
“இப்போதைக்கு ஒரு வேகன்சி இருக்கு. அது எங்க சப்ளையர்கிட்ட இருந்து மெட்டீரியல் கலெக்ட் பண்ணிட்டு வர்றது. உனக்குத்தான் வண்டி ஓட்டத் தெரியாதுங்கறீயே… என்ன செய்யறது?’
“சீக்கிரம் கத்துக்கறேன் சார்!’
“என்ன படிச்சிருக்கே?’
“எம்.ஏ., ஹிஸ்டரி கரஸ்ல சார்… நான் வீட்டுல மூத்தவன். அப்பா, அம்மா, தங்கச்சி, தம்பின்னு எல்லாரையும் காப்பாத்தணும் சார். இந்த வேலை கிடைச்சா எங்க குடும்பம் கஷ்டப்படாம இருக்கும். நீங்க அனுதாபப் படணும்ன்னு சொல்லல. எந்த வேலையா இருந்தாலும், குடுக்கற வேலையை கரெக்டா செய்வேன் சார்…’
ஒரு வளர்ந்த குழந்தை கெஞ்சுவதாய் எனக்கு பட்டது.
“மூர்த்தி… நான் குமார். இந்த கம்பெனி புரொடக்ஷன் இன்சார்ஜ். நம்ம எம்.டி., நான் சொன்னா கேட்பாரு. இதப்பாரு… ஸ்டோர் இன்சார்ஜா இருக்கிற பொண்ணு, இன்னும் ஒரு வாரத்துல ரிலீவ் ஆகுது. நீ வேணும்ன்னா அந்த போஸ்ட்ல ஜாயின் பண்ணுறீயா?’ மூர்த்தி வெளிச்சமானான். தலையாட்டிக் கொண்டே, “தேங்க் யூ சார்…’ என்றான்.
பின் மூர்த்தியை வேலைக்கு சேர்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்தேன்.
கோத்தகிரி பக்கத்தில குந்தா என்ற ஊரில் உள்ள எஸ்டேட் ஒன்றில் மூர்த்தியின் அப்பா, அம்மா கூலி வேலை பார்க்க, ஒரே தங்கை அமுதா திருப்பூரில், எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்க, தம்பி, பிளஸ் 1ல் படித்துக் கொண்டிருக்க, ஒற்றை சூட்கேசுடன் கோயமுத்தூர் வந்தவனை, எங்கள் கம்பெனியில் வேலை பார்த்து வந்த பையன்களுக்காக ஏற்பாடு செய்திருந்த அறை ஒன்றில், தங்கிக் கொள்ள சிபாரிசு செய்தேன்.
பார்க்கத்தான் மீசையுள்ள பூனைக்குட்டி போல இருந்தானே தவிர, வேலை விஷயங்களைப் புரிந்து கொள்வதில் கற்பூரமாக ஜொலித்தான் மூர்த்தி. வெட்கமேபடாமல், வயது வித்தியாசம் பாராமல், எல்லாரிடமும் கேட்டு சந்தேகங்களை தீர்த்துக் கொண்டான். நல்லதாக எதைப் போட்டாலும், முளைக்கிறாற்போல பச்சை மண்ணாய் கிடந்தான். ஏதேனும் புரியவில்லை என்றால், உடனே ஓடி வருவான். நான் என்ன திட்டினாலும், வாங்கிக் கொள்வான்.
“ஏண்டா… இந்த திட்டு திட்டறேன்… உனக்கு கோபமே வரலையா?’ என்று ஒரு நாள் நான் கேட்ட போது, “என் நல்லதுக்கு தானே திட்டறீங்க… எங்க அண்ணன் திட்டினா எனக்கு எதுக்குண்ணே கோபம் வரணும்?’ என்று சொல்லி, என்னை நெகிழ வைத்தான்.
முதல் மாத சம்பளம் வாங்கியதும் கொண்டு வந்து கொடுத்து, காலில் விழுந்தான். பதறி நகர்ந்து, “ஏய்… என்ன என் காலில் விழறே?’ என்றதற்கு, “அப்பா, அம்மா பக்கத்துல இல்ல அண்ணே… இப்ப நீங்கதான் எனக்கு எல்லாம்…’ என்று சிரித்துக் கொண்டே அழுதவனை எழுப்பி, கட்டி அணைத்து, “என்னது… சின்னப் பையன் மாதிரி அழறே…’ என்ற என் மனசுக்குள் உடன் பிறவாத தம்பியாய் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டான்.
வேலைக்கு வந்து சேர்ந்த ஆறே மாதத்தில் மூர்த்தி, கம்பெனியில் உள்ள அனைவருக்கும் பிரியமானான். ஒரு வருடத்தில் இரண்டு முறை சம்பள உயர்வு பெற்றான். தனக்கு சம்பந்தமே இல்லாத டிபார்ட்மென்ட்களில் கூட, என்ன நடக்கிறது என்று போய் பார்த்து, கேட்டு தெரிந்து கொண்டான். கேட்காமலே சக அலுவலர்களுக்கு உதவி செய்தான்.
தனியே வீடு பார்த்து அப்பா, அம்மாவை அழைத்து வந்து, தன்னுடன் வைத்துக் கொண்டான். ஓடி, ஓடி வேலை பார்த்தான். பெற்றவர்களை உட்கார வைத்து தாங்கினான். மாதச் செலவு போக, மீதமாகிற சொற்ப பணத்தை சேமித்தான்.
மூர்த்தியின் தங்கை அமுதா, வேலை பார்க்கும் இடத்தில் சம்பத் என்ற ஒருவனை காதலிக்க, மூர்த்தியின் வீடு ஜாதி, குலம், இனம், மதம் என்று கண்ணுக்குத் தெரியாத காரணங்களைச் சொல்லியும் தடுக்க முடியாத பட்சத்தில், அவர்கள் இருவரும் ரகசியமாய் காதலித்தது போலவே, ரகசியமாய் கல்யாணத்துக்கும் தயாராக…
வேறு வழியின்றி, அவசரமாய் அமுதாவை கரையேற்ற, முதுகில் ஏறிய கடன் சுமையில், ஓட்டைப் படகானான் மூர்த்தி. பெண்ணை அனுப்பி விட்டால் அடுத்ததாய் வேறு வேலை என்ன… பையனுக்கு கால் கட்டு போட, கயிறு தேட வேண்டியது தானே… மூர்த்திக்கு பெண் பார்க்க ஆரம்பித்தனர் அவன் பெற்றோர்.
“எனக்கு எதுக்குண்ணா இப்ப கல்யாணம்… அமுதா கல்யாணத்துக்கு வாங்கின கடனே என் தொண்டை வரைக்கும் நிக்குது. ஆபீஸ்ல லோன், தெரிஞ்சவங்க கிட்டயெல்லாம் கடன். வர்ற வருமானத்துல மாசா, மாசம் அதையே எப்படி அடைக்க போறேன்னு தெரியல. இதுல நானும் பண்ணிக்கிட்டா… அவ்வளவுதான்!’ என்றான்.
“வேலைக்கு போற பொண்ணா பார்த்து கட்டிக்க. ரெண்டு பேர் வருமானத்துல மிச்சம் செய்து, கடனை அடை. கடன் கட்டி முடிஞ்சாத்தான் கல்யாணம்ன்னு நீ பார்த்திட்டிருந்தால், முக்கால் கிழவன் ஆனப்புறந்தான் உனக்கு நடக்கும்…’ என்ற என் வார்த்தை பலித்தது.
அடுத்த ஆறே மாதத்தில் அவனுக்கும் திருமணம் முடிந்தது. கல்யாணத்துக்கு முன் வரை, வேலைக்கு போன அவன் மனைவி ஷைலஜா, தாலியேறியதும், “அது சரி… வேலைக்கும் போயிட்டு வந்து, வீட்டிலேயும் வேலை செய்ய நான் என்ன மாட்டு ஜென்மமா… மனுஷி!’ என்று முதல் வேலையாக, வேலையை விட்டாள். அவனையும் வேறு வேலை தேடச் சொல்லி வற்புறுத்தினாள்.
“இதெல்லாம் என்ன வேலை… இந்த சம்பளம் எல்லாம், 10 நாள் குடும்பம் நடத்த வருமா… ரெண்டு பேருக்கே பத்தாது. இந்த லட்சணத்துல ஐந்து பேரு இந்த வீட்டுல. என்ன சம்பாதிச்சுட்டு வந்து கொட்டினாலும், கடலில் போட்ட பெருங்காயமா காணாம போயிடும். ஓரளவுக்கு இருக்கணும்ன்னா கூட, இப்ப வாங்கறதை விட, நாலு மடங்கு சம்பாதிக்கணும். நாளைக்கே நமக்கு குழந்தை குட்டின்னு ஆனா என்ன பண்றது? அதனால…’
ஷைலுவின் தலையணை மந்திரம், மூர்த்தியை சம்பாதிக்க தூண்ட, வெளிநாட்டு பணம் விளையாடுகிற அவளின் தோழிகளை உதாரணம் காட்ட, இதற்கிடையில் வெளிநாட்டிலிருக்கும் தூரத்து சொந்தம் ஒருவரின் மூலமாக மாமனார், மூர்த்தியின் வேலைக்கு முனைப்பு காட்ட, கடைசியில் ஒரு வழியாக சிங்கப்பூர் போயே விட்டான் மூர்த்தி.
இங்கு வேலையை விட்ட நாளில், கண் கலங்கி உதடு துடிக்கத் தான் விடைபெற்றான். அன்றுதான் நான் மூர்த்தியைப் பார்த்த கடைசி நாள். போன புதிதில் சில முறை அங்கிருந்து பேசினான். ஏதோ இயந்திர உதிரி பாகங்கள் செய்கிற கம்பெனியில் பணி கிட்டியதாக சொன்னான். இந்திய ரூபாயில் நல்ல சம்பளம் என்றான். நாளாக, நாளாக அதுவுமில்லை. நானும், அவனை மறந்தே போனேன். நாலு வருஷ இடைவெளிக்குப்பின், திடுதிப்பென்று வந்து நிற்பான் என்று நான் நினைக்கவே இல்லை.
“”குமார் அண்ணே…”
என்னைக் கண்டதும் ஓடி வந்து கட்டிக் கொண்டான் மூர்த்தி. ஆளே மாறிப் போயிருந்தான். முன்னை விட சிவந்திருந்தான். கன்னச் செழுமை, அவன் வசதியைக் காட்டியது. உடம்பில் சதை போட்டு லேசாய் தொப்பை, இன் செய்திருந்த ஆரோ சட்டையை மீறி இறங்கியிருந்தது. அன்றைய ஹவாய் செருப்பு இன்று, கறுப்பு ஷூவாக மாறியிருந்தது.
“”மூர்த்தி… எப்படா ஊரிலே இருந்து வந்தே?”
“”மூணு நாளாச்சுண்ணே. வந்தவுடனே உங்களை வந்து பாக்கணும்ன்னு நினைச்சேன். நான் வர்றது தெரிஞ்சு தங்கச்சி வீட்டுக்கு வந்திருந்தாள்; கொஞ்சம் வேலையும் இருந்தது; அதான் வரலை. இல்லன்னா நேத்தே வந்திருப்பேன்.”
“”எப்படிடா இருக்கே?”
“”பார்த்தா தெரியலே?” சிரிக்கும் போது, கன்னம் மேடு ஏறி அழகாய் இருந்தது.
இவனுக்கு ஒரு பையனாம்; அமுதாவுக்கு ரெண்டாம். அவன் தம்பி, பி.இ., கடைசி வருஷமாம்.
பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்குப்பின், கேட்டான்…
“”அண்ணே… இன்னைக்கு லீவு போடறீங்களா… எங்கையாவது வெளியில போகலாம். இன்னைக்கு முழுவதும் உங்க கூட இருக்கணும்ன்னு தோணுது.”
“”என்னடா… வெளிநாட்டுல இருந்து வந்து, மூணு நாளுதான் ஆச்சுங்கறே. உன் மனைவி, குழந்தை கூட ஜாலியா இருக்கறதை விட்டுட்டு, என் கூட ஊர் சுத்தணும்கறே?”
“”மனைவி, குழந்தை கூட அவங்க ஊருக்கு போயிருக்கா… நீங்க வாங்க. நாம முதல்ல உங்க வீட்டுக்கு போகலாம். அண்ணியையும், குழந்தைகளையும் பார்த்து ரொம்ப நாளாச்சு!”
“”உங்க அண்ணி வேலைக்கு போயிருக்கா; குழந்தைக ஸ்கூலுக்கு போயிருக்காங்க. எல்லாரும் வர சாயந்திரம் ஆகும். வா… முதல்ல உங்க வீட்டுக்கு போகலாம்.”
நான் என் மனைவி சுமித்ராவை அழைத்து விவரம் சொல்லிவிட்டு, கம்பெனியில் லீவு எழுதி தந்துவிட்டு, மூர்த்தியோடு கிளம்பினேன்.
முதலில் அவர்கள் இருந்த ஒண்டுக் குடித்தனத்தில் இப்போது இல்லை. சிவானந்த புரத்தில், நாலு சென்ட் நிலம் வாங்கி வீடு கட்டிருந்தான். சுற்றிலும் மரம், செடி என்று அழகாக இருந்தது வீடு.
“”வீடு நல்லா இருக்கு மூர்த்தி…”
“”சும்மா இல்ல… காசுண்ணே… சிங்கப்பூர் காசு,” சிரித்தான் மூர்த்தி.
கேட்டை திறந்து உள்ளே நுழைந்த போது, காவலுக்கு இருந்த நாய் நிதானமாக, என்னை பார்த்து குரைத்தது; அவனிடம் குழைந்தது.
கதவை திறந்த மூர்த்தியின் அம்மாவுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அன்று வற்றிப் போயிருந்த உடம்பு, இப்போ ஊதி போயிருந்தது.
ஏதேதோ சொல்லி ஞாபகப்படுத்த முயன்றான் மூர்த்தி.
“”ஓ…” என்ற அம்மாவுக்கு இன்னும் ஞாபகம் வரவில்லை என்று எனக்கு புரிந்தது.
“”குமார் அண்ணனா… வாங்க, வாங்க!” என்றபடி உள்ளிருந்து வந்த அமுதாவை ரொம்ப நாட்களுக்குப் பின் பார்த்தேன். மூக்குத்தியில் வைரம் மின்னியது. புருஷனை அறிமுகப் படுத்தினாள். குழந்தைகளை இழுத்து வந்து, அறிமுகப்படுத்தினாள்.
“”அப்பா எங்கம்மா?”
கேட்ட மூர்த்திக்கு சுவரோடு சுவராக பதிந்திருந்த எல்.சி.டி., “டிவி’யிலிருந்து பார்வையை எடுக்காமல், பதில் சொன்னாள் அம்மா…
“”அந்த மனுஷனுக்கு நிக்க ஏது நேரம்… இந்த காலனி செகரட்ரி போஸ்ட்டுக்கு நிக்கறாரில்லே… ஏதோ மீட்டிங்காம். போயிருக்காரு!”
அதற்கு மேல பேச எதுவுமில்லாமல் போக, நான் மூர்த்தியை கிளப்பினேன்.
“”அம்மா… நான் வெளியில போயிட்டு வர்றேன்.”
“”அப்ப வெளியிலயே சாப்பிட்டுக்கோடா… நானும், அமுதாவும் நகை எடுக்க காந்திபுரம் போறோம்; வர நேரமாகும்!”
“”ம்…” என்று மட்டும் பதிலளித்து, என்னுடன் படியிறங்கிய மூர்த்தியை உள்ளிருந்து ஓடிவந்த அமுதா நிறுத்தினாள்…
“”அண்ணா… வெளியில் போறீயா… அவருக்கு புது வண்டி எடுக்கப் போகலாம்ன்னு நேத்து சொன்னியே… எப்ப போகலாம்ன்னு கேட்கச் சொன்னாரு.”
“”நாளைக்கு போகலாம்ன்னு சொல்லும்மா.”
வாசலைக் கடந்ததும் மூர்த்தி சொன்னான்…
“”அண்ணே… உங்க வண்டியில நாம ரெண்டு பேரும் போகலாம்; ரொம்ப நாளாச்சு சேர்ந்து போயி.”
தொற்றிக் கொண்டான்.
முதலில் மருதமலை முருகன் தரிசனம். பின் கூட்டமில்லாத தியேட்டரில் பிடித்த படம். நிறைய பேசினான் மூர்த்தி. சிங்கப்பூரை பற்றி ரொம்ப சொன்னான். வேலை கொஞ்சம் கஷ்டம்தான்; ஆனால், உழைப்புக்கேற்ற ஊதியம். ஓய்வு ஒழிச்சலின்றி நிறைய உழைப்பதால் நிறைய காசு. அந்த காசில்தான் அமுதா கல்யாண கடனை எல்லாம் அடைத்திருக்கிறான். சொன்னதற்கும் மேலாக தங்கைக்கு சீர் செய்திருக்கிறான். தம்பிக்கு காலேஜில் பணம் செலவு செய்து, சீட் வாங்கி சேர்த்து, போய் வர ஹோண்டா ஷைன் பைக் வாங்கித் தந்திருக்கிறான். அன்னூர் அருகே மாமனார் ஊரில் நிலம் வாங்க ஏற்பாடு செய்திருக்கிறான். அந்த நிலக் கிரையத்திற்காகத்தான் அவன் மனைவி போயிருக்கிறாளாம்.
டிரஸ், பர்ப்யூம், ரிஸ்ட் வாட்ச், சாக்லேட் என வீட்டுக்கும், நண்பர்களுக்கும் நிறைய பொருட்கள் வாங்கி வந்திருக்கிறான். நேற்று முழுக்க வீட்டில் அவனை பார்க்க வந்த கூட்டம்தானாம். எனக்கும் கூட நல்லதாய் சட்டைத்துணியும், என் மனைவி சுமித்ராவுக்கு சேலையும் வாங்கி வந்திருந்தான்.
மூர்த்தி சொன்னதைக் கேட்க, கேட்க எனக்கே சபலம் தட்டியது.
நாமும் வெளிநாடு போனால் என்ன என்று தோன்றியது. அப்படி போனால் ஊரிலுள்ள பரம்பரை வீட்டை கடனிலிருந்து மீட்டு, விதவை அம்மாவை குடியமர்த்தலாம். குத்தகை பார்க்கிற நிலத்தைக் கூட விலை பேசலாம். போக்கியத்துக்கு இப்போது இருக்கும் வீட்டை விட்டு, சொந்தமாய் வீடு கட்டலாம். கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்திருந்த சுமித்ராவின் நகையை மீட்கலாம். 10 வயது மகள் தீபா, 7 வயது மகன் நிர்மலின் எதிர்காலத்துக்கு சேர்க்கலாம். இன்னும், இன்னும் எனக்குள் கற்பனைகள் விரிந்தன. மூர்த்தியையே அங்கொரு வேலை தேடச் சொன்னால் என்ன… கேட்டால் ஏற்பாடு செய்து தர மாட்டானா?
“மூர்த்தி போவதற்குள் இது விஷயமாய் பேசி விட வேண்டும்…’ என்று முடிவெடுத்தேன்.
மூர்த்தியோடு நான் என் வீட்டினுள் நுழையும் போது மணி, 6:00ஐ நெருங்கியிருந்தது. தீபாவும், நிர்மலும் ஸ்கூலில் இருந்து திரும்பி இருந்தனர். எங்களைக் கண்டதும், நிர்மல் ஓடிவந்து என் காலைக் கட்டிக் கொண்டான். மூர்த்தி வாஞ்சையோடு அவன் தலையை கலைத்தான். யாரென்று மறந்திருந்தாலும் தீபா, விருந்தாளியாய் மூர்த்தியைக் கண்டதும், மலர்ந்த முகத்துடன், “”வாங்க அங்கிள்…” என்றாள்.
கையிலிருந்த சாக்லெட் டின்னை நீட்டியபடியே, “”வளர்ந்துட்டாங்கண்ணே!” என்றான் மூர்த்தி.
“”ரொம்ப பொறுப்பு மூர்த்தி. நாங்க ரெண்டு பேரும் வேலைக்கு போறதுனால வீட்டை கவனிச்சுக்கறது, நிர்மலை பார்த்துக்கறது எல்லாம் தீபாதான். எனக்கு இன்னொரு அம்மா!”
தீபா இரண்டு டம்ளர்களில் அவளே தயாரித்த டீயைக் கொண்டு வந்து தந்தாள்.
ஏழு மணிக்கு சுமித்ரா வீடு திரும்புகையில், இரண்டு கைகளிலும் பை நிறைய காய்கறிகளுடன் சுமக்க முடியாமல் சுமந்து வந்தாள். நான் ஓடிப் போய் வாங்கிக் கொண்டேன்.
குரல் கேட்டு, வெளியே வந்த மூர்த்தி மலர்ந்தபடி கேட்டான்…
“”எப்படி இருக்கீங்க அண்ணி?”
பதில் சொன்ன சுமி, அவனையும் விசாரித்தாள்…
“”போயிடாதே மூர்த்தி… இன்னைக்கு என் சமையலை சாப்பிட்டுட்டுதான் போறே!”
அவளின் அன்புக் கட்டளையை ஏற்றுக் கொண்டான். சுமி, தான் ப்ரெஷ் ஆகி, குக்கரில் அரிசி போட்டு விட்டு, முறத்தில் காய்கறிகளோடு கூடத்தில் வந்து எங்கள் முன் அமர்ந்தாள். “”சாரி அண்ணி… ஏற்கனவே வேலையில இருந்து டயர்டா வந்திருக்கீங்க. இதுல நான் வேற வந்து வேலை வைக்கிறேன்!”
“”சும்மா இரு… அதெல்லாம் ஒண்ணுமில்லை.”
“”வீட்டையும் பார்த்துட்டு, வேலைக்கு போறதுக்கு கஷ்டமா இல்லையா?”
“”கஷ்டம்ன்னு நினைச்சாத்தானே கஷ்டம். எங்களுக்காக உழைக்கிற உங்க அண்ணனுக்கு என்னால முடிஞ்ச ஒத்தாசை. அவ்வளவு தான்,” என்ற சுமித்ரா, நான் மூர்த்தியிடம் கேட்க நினைத்ததையே சட்டென்று கேட்டு விட்டாள்…
“”மூர்த்தி… நீதான் வெளிநாட்டுக்கு போய் கை நிறைய சம்பாதிக்கறியே. அங்கேயே இவருக்கும் ஒரு வேலைய பார்க்கலாமில்ல?” என்ற சுமியை அவசரமாய் தடுத்தான் மூர்த்தி…
“”வேண்டாம் அண்ணி… அந்த தப்பை மட்டும் செய்யச் சொல்லாதீங்க. அண்ணனும், என்னை மாதிரி ஆக வேண்டாம்.”
நாங்கள் இருவரும் குழம்பிப் போனோம்.
“”என்ன சொல்றே மூர்த்தி… நானும், உன்னை மாதிரி சம்பாதிக்கறது உனக்கு பிடிக்கலையா?” சற்று காட்டமாகவே கேட்டேன்.
“”அய்யோ அண்ணே… என்ன பேசறீங்க நீங்க… என்ன விட நல்லா இருக்கணும்; ஆனா, என்னை மாதிரி வெளிநாட்டுக்கு போயிடாதீங்கண்ணே… அந்த மாதிரி ஒரு தடவை போயிட்டீங்கன்னா, என்னை மாதிரி உறவுகள் இருந்தும், அனாதை ஆயிடுவீங்க!”
“”என்னடா உளர்றே… இங்க இருக்கும் போது கஷ்டப்பட்டே… சிங்கப்பூர் போனப்புறம் எவ்வளவு நல்லாயிட்டே… காலையில இருந்து வாய் நிறைய சொல்லிட்டு வந்தே… என்னால் என் வீட்டுல எல்லாரும் சந்தோஷமா இருக்காங்கன்னு பெருமையா சொன்னே… இப்போ அனாதைன்னு பேசறே…”
“”என்னால என் வீட்டுல எல்லாரும் சந்தோஷமா இருக்காங்கதான்; ஆனா, அவங்களால நான் சந்தோஷமா இருக்கேனான்னு உங்களுக்குத் தெரியுமா?”
“”அப்போ நீ சந்தோஷமா இல்லையா… சொர்க்கம் மாதிரி இடத்துல இருக்கடா நீ!”
“”என்னைப் பொறுத்தவரை வெளிநாட்டு வாழ்க்கை சொர்க்கம் இல்லண்ணே… நரகம்; அழகான நரகம். சொந்த ஊரில வாழ முடியாம பணம் சம்பாதிக்கணும்ன்னு போகிற என்ன மாதிரியான ஆளுகளுக்கு அது விஷம். எங்க இளமை, சந்தோஷம் எல்லாத்தையும் உயிரோட சாகடிக்கிற இனிப்பான விஷம்!”
மூர்த்தி இப்படியெல்லாம் பேசி நான் பார்த்ததில்லை. மூர்த்தி தொடர்ந்தான்…
“”இங்க இருந்த வரைக்கும், எங்கம்மா நான் எவ்வளவு நேரம் கழிச்சு வீட்டுக்கு வந்தாலும், சாப்பிடாம எனக்காக காத்திட்டிருப்பாங்க. அப்பா கொஞ்சம், “லேட்’ ஆயிட்டாக் கூட சைக்கிள் எடுத்துட்டு வந்திடுவாரு. அமுதா, நான் எங்க வெளியில போனாலும், “சீக்கிரம் வந்துடுங்க அண்ணே…’ம்பா. தம்பிக்கு நான் இல்லன்னா பொழுதே போகாது. ஆனா, இப்போ நான் வந்திறங்கின உடனே அவங்க விசாரணை எல்லாம் நான் எப்ப திரும்பிப் போறேங்கறதுதான்!
“”இங்க நான் உட்கார்ந்திட்டிருந்தா அங்க சம்பாதிக்க முடியாதே… அதனாலதான். “ரொம்ப நாள் லீவு போட்டா சம்பளம் கம்மியாடுமுல்ல…’ன்னு எங்கம்மா சொன்னதுமே, நொந்து போயிட்டேண்ணே… நாலு ஆண்டு கழிச்சு அம்மா கையால ஒரு வாய் சாப்பிடணும்ன்னு வந்தவனுக்கு, ஏண்டா வந்தோம்ன்னு ஆயிடுச்சு…
“”என்னதான் சம்பாதிச்சாலும், அங்க நான் அனாதைதானே! எனக்கு அங்க யாரும் இல்லேயே… எந்த சின்ன, சின்ன சந்தோஷத்தையும் நான் அனுபவிக்க முடியாது. அங்க வாழ்க்கை அப்படித்தான். ஏக்கத்துலயே எங்க வாழ்க்கை முடிஞ்சுடும். இது யாருக்கு தெரியுது?
“”எல்லாருமே நான் என்ன கொண்டு வந்தேங்கறதுலதான் குறியா இருக்காங்க. என் சூட்கேஸ்ல என்ன இருக்குன்னு குடையறவங்க, என் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க மாட்டேங்கறாங்களே… என்னால் தங்களோட தேவையை தீர்த்துக்கற என் மனுஷங்களுக்கு, என்னோட தேவை என்ன என்றே புரியல… என் மனைவிக்கு அந்தஸ்தா வாழ ஆசை; ஆனா, என் கூட அன்பா இருக்கணும்ன்னு ஆசையில்ல. இல்லன்னா என்னை விட, நிலத்து கிரையம்தான் முக்கியம்ன்னு போயிருப்பாளா?
“”இவ்வளவு ஏன்… என்னைப் பார்த்ததும் என் மகன் ஓடி வந்து கட்டிக்கல. ஏண்ணா அவனுக்கு நான் யார்னே தெரியல. அப்பான்னு கூப்பிட மாட்டேங்கறான். என்ன செய்றது? என்னோட பணத்தால அவனை அப்பான்னு கூப்பிட வைக்க முடியலையே…
“”என்னோட பிரண்ட்ஸ் எல்லாரும், “ட்ரீட்’ கேக்கறாங்க. ஆனா, அன்னியோன்யமாக மாட்டேங்கறாங்க. “உனக்கென்னப்பா, பாரின் ரிட்டர்ன்…’ன்னு சொல்லி, சொல்லியே விலகறாங்க…
“”பால் குடிக்கிற பூனையை ரத்த வாடைக்கு பழக்கிட்டா, அப்புறம் அது பாலை தொடாம, ரத்தத்துக்காக அலையுமாம். என் குடும்பத்துக்கு பணத்தோட ருசி தெரிஞ்சிடுச்சு. என்னை அது இனி இந்தியாவுல இருக்க விடாது. பந்தயம் கட்டின குதிரை மாதிரி ஆயிட்டேண்ணே. சம்பாதிக்கச் சொல்லி, ஓட, ஓட விரட்டிட்டேத்தான் இருப்பாங்க… நானும் ஓடிட்டேதான் இருக்கணும். விட்டுட்டு உட்கார முடியாதுண்ணே!”
மூர்த்தி குரல் தழுதழுக்க, சொல்லிக் கொண்டே போக, கண்ணில் நீர் திரையிட்டு விசும்பலானாள் சுமித்ரா.
“”அண்ணே… இன்னும், பத்து வருஷத்துல இன்னும் நிறைய சம்பாதிப்பேன். ஆனா, கண்டிப்பா நிறைய இழந்திருப்பேன். இழந்ததை, அப்ப நான், எந்த விலை குடுத்தும் திரும்ப வாங்க முடியாது. இருக்கறது வேற; வாழறது வேறண்ணே. அங்கே நான் இருக்கேன். ஆனா வாழலை…”
முகம் பொத்தி குலுங்கிய மூர்த்தியை தேற்ற தோன்றாது, பரிதாபமாக பார்த்தேன்.

– கே.ரவிசந்திரன் (நவம்பர் 2011)

வயது : 42
படிப்பு : பி.காம்.,
சேரன் மெஷின்ஸ் இந்தியா பி. லிட்., என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
தனி மனித உணர்வுகளை எழுத்தில் வடிப்பதே இவரது விருப்பம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *