‘அபிலாஷ் பிளாட்ஸ்’ அன்று காலை அல்லோகல்லோலப்பட்டது. பிறந்த நாள் பரிசாக பள்ளி மாணவன் விஜய்க்கு பரிசளிக்கப்பட்ட பத்தாயிரம் ரூபாய் சைக்கிளைக் காணவில்லை.
விஜய்யின் பெற்றோர்க்கு துபாயில் வேலை. ஒரே மகன் விஜய் இந்தியாவில். இந்திய மாணவர்களோடு போட்டி போட்டு படித்துக்கொண்டு, போட்டித் தேர்வுக்கு பெற்றோரின் கட்டளைப்படி தயாராகிக் கொண்டிருந்த, இட ஒதுக்கீடு இல்லாத சமூகத்தில் பிறந்த, எதிர்கால ஐ.டி.மாணவன்.
ஒவ்வொரு நாளும் விஜய்யின் தாத்தா சுந்தரம் ஸ்கூட்டரில் விஜய்யை டியூஷனில் விட்டுவிட்டு, அது முடிந்தவுடன் மீண்டும் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வரும் அந்தக் கால போஸ்டல் டிபார்ட்மென்ட் ரிட்டையர்ட் முதியவர்.
சில நாட்கள் செல்லப் பேரன் செல்ல சைக்கிளில் டியூஷன் சென்று வருவதைப் பார்த்து பெருமிதம் கொள்வார் தாத்தா.
முதல் தளத்தில் இரு வீடுகள், இரண்டாவது தளத்தில் இரு வீடுகள், தரைத்தளத்தில் கார் பார்க்கிங் என்று சென்னையில் ஆள் அரவமற்ற ஆழ்வார் திருநகரில் அமைந்த அமர்க்களமான கான்க்ரீட் மைசூர்பாக் அபிலாஷ் பில்டிங்.
பேங்க் லோனில் வாங்கிக் கட்டப்பட்ட வீடுகளை நான்கு ஓனர்களும் சென்னையை விட்டு பல இடங்களில் வாழ்ந்து கொண்டு, மாதாமாதம் தவறாமல் தவணை செலுத்தி வந்தனர்.
இப்போதெல்லாம் சென்னையில் இருக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ஒரு கோடி வேண்டும். ஒரு நெருப்பு பெட்டி வீட்டிற்கு அறுபது லட்சம்.
ஒரே ஒரு குழந்தையின் படிப்பு மற்றும் திருமணத்திற்கு நாற்பது லட்சம் இருந்தால்தான் சென்னையில் இருக்கலாம். இருக்கலாம் என்பதற்கும் வாழலாம் என்பதற்கும் இன்னும் சில பல லட்சங்கள் வித்தியாசம்.
பென்ஷன் இல்லையென்றால் இன்னும் சில லட்சங்கள் வேண்டும். பணி ஒய்வு பெற்று வாழ்க்கையின் வசந்தம் முடிந்த காலங்களில், சில சமயம் நம் எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும் என்றால் நம் பிள்ளைகளை எதிர்பார்த்து இருக்க வேண்டும்.
குண்டூசி முதல் கார் வரை ஒரு பொருளை முழுதாக தயாரித்த பின்பே விற்பனை செய்ய இயலும்.
நம் ஊரில் வெறும் கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ் போட்டோக்களை பிரபல செய்தித்தாள்களில் பிரசுரித்து,’பல்லவன் ஸ்டோர்ஸ்’ போன்ற தொலைக்காட்சித் தொடரின் நட்சத்திரங்கள் மூலமாக எண்ணிலடங்கா கோடிகளை வாரி கொட்டும் ஒரே தொழில் ரியல் எஸ்டேட்ஸ்.
அவர்களைக் கேட்டால் அந்தத் துறையில் ஆயிரத்தெட்டு கஷ்ட நஷ்டங்களை சொல்வார்கள்!
அந்தக் காலத்தில் விஜய்யின் தாத்தா சுந்தரம், ஒரு அரதப்பழசான அட்லாஸ் சைக்கிளில் திருச்சி குஜிலி தெருவிலிருந்து கல்லூரிக்கு மிதியோ மிதி என்று மிதித்து சென்று பிராணனை விட்டு ஒருடிகிரி வாங்கி, அதன் பயனாக ஒரு உத்தியோகம், மாதம் முன்னூறு ரூபாய் சம்பளத்தில் கிடைத்து, மூச்சிரைக்க, மூட்டு வலிக்க ஓடியாடி வேலை செய்து விஜய்யின் தந்தை மகாதேவனை படிக்க வைத்து துபாயில் பெரிய நிறுவனத்தில் வேலை செய்யும் அளவுக்கு ஆளாக்கினார்.
அதனால் பேரனின் சைக்கிள் காணாமல் போனதை அறிந்து பேரனைவிட அதிகம் வருத்தப்பட்டார் தாத்தா.
நல்ல வேளை, தரை தளத்தில் கார் பார்க்கிங் ஏரியாவில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
காமிரா ஓட்டங்களை பார்த்தபோது யாரோ ஒருவன் சர்வ சாதாரணமாக வாசல் கதவை திறந்து, அங்கிருந்த சைக்கிளை, அலட்டிக் கொள்ளாமல் ஓட்டிக் கொண்டு தப்பியது தெரிந்தது.
விஜய்யை கேட்டால், “ஆமாம்! சைக்கிளை பூட்ட மறந்து விட்டேன்!” என்று சமாளித்தான் இழப்பின் வலி தெரியாமல்.
தாத்தாவிற்கு தன் பழைய அட்லாஸ் சைக்கிள் ஞாபகம் வர, ‘மளமள’வென்று போலீஸ் ஸ்டேஷன் விரைந்து ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்து விட்டு, தரை தளத்தில் உள்ள காமிராக்கள் பதிவுகளையும் ஆதாரமாக அளித்து விட்டு வீடு திரும்பினார்.
ஈஸி சேரில் சாய்ந்து கொண்டு காமிராவின் வீடியோக்களை மீண்டும் மீண்டும் மனதில் ஓட்டிப்பார்த்த தாத்தாவிற்கு ஒரு உறுத்தல்.
மூட்டு வலியாலும் லிப்ட் ரிப்பேராலும் அவர் ஞாயிற்று கிழமையிலிருந்து செவ்வாய்க்கிழமை வரை கீழே இறங்கி வரவில்லை.
ஞாயிறு மாலை திருடன் சைக்கிளை திருடிக்கொண்டு போகிறான். ஆனால் விஜய் சைக்கிளைக் காணோம் என்று செவ்வாய் காலைதான் பதறினான்.
இடைப்பட்ட காலத்தில் விஜய் எதையோ பறி கொடுத்தவனைப்போல இருந்தது தாத்தாவிற்கு புதிராக இருந்தது.
பாட்டி வேறு “பேரன் சரியா சாப்பிட மாட்டேங்கிறான்” என்று முணுமுணுத்துக் கொண்டே இருந்தது அவர் உறுத்தலை இன்னும் உறுதிப்படுத்தியது.
திங்கள் பள்ளி விடுமுறை என்றாலும், அன்று அவன் கடைக்கு சென்று ப்ராஜெக்ட் ஒர்க் விஷயமாக ஜெராக்ஸ் எடுத்து வந்துள்ளான். சாயங்காலம் டேபிள் டென்னிஸ் விளையாடி விட்டு வந்துள்ளான்.
அப்போதெல்லாம் அவன் சைக்கிள் மிஸ்ஸிங் என்பதை ஏன் கவனிக்கவில்லை என்ற சந்தேகம் அரித்தது, அந்தக்காலத்தில் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், ஷெர்லாக் ஹோம்ஸ் போன்ற துப்பறியும் நாவல்களை அதிகம் வாசித்த தாத்தாவிற்கு.
நாட்கள் சென்றன.
துபாயிலிருந்து பெற்றோர் “போனால் போகிறது” “இன்னொரு சைக்கிள் வாங்கிக்கோ” என்று விஜய்க்கு பச்சைக்கொடி காட்டி விட்டனர்.
திடீரென்று போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தாத்தாவிற்கு போன்.”சைக்கிள் கிடைத்து விட்டது. உங்கள் பேரனையும் கூட்டிக் கொண்டு வாருங்கள்” என்று.
சைக்கிள் கிடைத்த மகிழ்ச்சியில் தாத்தாவும், விஜய்யும் போலீஸ் ஸ்டேஷன் செல்ல, அங்கே காவல் அதிகாரி அருகில் கைகளை கட்டியபடி திருடன் சைக்கிளுடன்.
அதிகாரி, விஜய்யை நோக்கி “தம்பி! இவனைத் தெரியுமா உனக்கு?” என்று திருடனை சுட்டிக் காட்டிக் கேட்டார்.
விஜய் அதுவரை அடக்கி வைத்திருந்த அணைக்கட்டு அழுத்தத்தை உடைத்துக் கொண்டு “தெரியும் சார்! இவன் என் ஸ்கூல் சீனியர் ஸ்டூடெண்ட்!” என்று மென்று விழுங்கினான்.
தாத்தாவிற்கு அதிர்ச்சி,”பள்ளிப் பருவத்திலேயே திருட ஆரம்பித்துவிட்டானே!” என்று.
அதிகாரி தாத்தாவைப்பார்த்து,
“சார்! உங்க பையனுக்கும் இந்த சீனியருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் பந்தயம்;
அந்த பந்தயத்தில் உங்க பேரன் தோத்துட்டான்;
பந்தயத்தில் தோற்றதால் சீனியர், பந்தயத்தில் பெட் கட்டிய சைக்கிளைக் கேட்டு, உங்க பேரனை நச்சரித்திருக்கிறான்;
பல முறை கிண்டல் செய்திருக்கிறான்; மிரட்டியிருக்கிறான்;
ஏண்டா! நீயெல்லாம் ஆம்பிளையாடா? என்று இன்னும் சொல்லத் தகாத வார்த்தைகளை சொல்லி கேவலமாக ஏசியிருக்கிறான்!
உங்க பேரன் மன உளைச்சல் தாங்காமல் உங்க வீட்டு விலாசத்தைக் கொடுத்து ‘கார் பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருக்கப்பட்டிருக்கும் பூட்டப்படாத சைக்கிளை எடுத்துக் கொண்டு போய் விடு!’ என்று சீனியரிடம் சொல்லியிருக்கிறான்; இதோ பாருங்க! உங்க வீட்டு காமிரா பதிவுகளை! என்று வீடியோ ரெக்கார்டிங்கை ஓட விட்டார் அதிகாரி.
வீடியோவில் அந்த சீனியர், சைக்கிள் பூட்டப்படாமல் திறந்தே இருக்கும் என்ற தைரியத்தில் ஞாயிறு மதியம் எல்லோரும் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், யாரும் இல்லாத சமயத்தில், சைக்கிளை ஓட்டிக் கொண்டு சென்றது பிளாக் அண்ட் ஒயிட் பதிவுகளில் தெரிந்தது.
அதிகாரி தொடர்ந்தார்.
“வீடியோவைப் பாருங்க!
வேற ஒரு திருடன் என்றால் சுற்றிலும் அங்கும் இங்கும் பார்ப்பான்!
முதலில் வீட்டில் காமிராக்கள் இருக்கின்றதா என்றுதான் பார்ப்பான்!
நடையில் தயக்கம், தடுமாற்றம், பயம் இருக்கும்!
சைக்கிள் பூட்டி இருக்கிறதா என்பதை முதலில் கணிப்பான்!
யாரேனும் மாடியிலிருந்து இறங்கி வருகிறார்களோ என்று கவனிப்பான்!
ஒரு வேளை யாரேனும் எக்குத்தப்பா வந்து விட்டால், ‘சார்! இது பாஸ்கர் வீடு தானே?’ என்று ஏதேனும் ஒரு பெயரை சொல்லி சமாளித்து விட்டு போய்விடுவான்!
ஆனால் வீடியோவில் இந்த பையன் தயக்கமே இல்லாமல், தைரியமாக உள்ளே வந்து சைக்கிள் திறந்தே இருக்கும் என்ற மிதப்பில் அலட்சியமாக அனாயசமாக ஓட்டிச் செல்கிறான்!
காமிராக்கள் இருப்பதை எல்லாம் பற்றி கவலைப்படவேயில்லை பாருங்க!
அது மாத்திரமில்லை. திருடிய அன்று போட்டிருந்த அதே சட்டையை இன்று கூட போட்டிருக்கிறான் பாருங்க!
ஒரு திருடன் அது போன்ற தவறை ஒருபோதும் செய்யமாட்டான்.
ஞாயிறன்று காணாமல் போன சைக்கிளை செவ்வாயன்றுதான் உங்க பேரன் உங்க கிட்ட சொல்லியிருக்கான். அது வரை அவன் குற்ற உணர்வால் வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கிறான்” என்று சொல்லி முடித்தார் அதிகாரி.
போலீஸின் தொழில்முறை அவதானிப்பை நினைத்து தாத்தாவிற்கு அதிகாரியின் மீது மரியாதை அதிகரித்தது.
“சின்ன பசங்களின் விளையாட்டு வினையாகி விட்டது! சைக்கிளை எடுத்துக் கொண்டு இந்த புகாரை வாபஸ் வாங்கிக்கங்க! இது வழக்கானால் உங்க பேரனுக்கும் பிரச்சனைதான்” என்று முற்றுப்புள்ளி வைத்தார் அதிகாரி.